Advertisement

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சுஹாசினி கலகலவென்று சிரிக்க ஆரம்பிக்க, விக்ரமின் கையில் இருந்த அவர்களின் குழந்தை அம்மாவின் சத்தத்தில் சிணுங்கினான். அப்போதும் நிற்கவில்லை அவளின் சிரிப்பு. 

எதிரில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தவனைப் பார்த்து, “ஹாய் ராஜா சார்” என்றாள். 

“உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சே? எப்படி இருக்கீங்க?” கிண்டலாக அவள் கேட்க, 

சிரிப்புடன், “உன்னை மாதிரி வாயாடி தங்கச்சி இருக்கும் போது, எனக்கு என்னம்மா குறை? நல்லா இருக்கேன்” என்றான் உதய் எனும் ராஜா. 

“ஆஹா.. புரிஞ்சு போச்சு உங்க பிளான். நான் சிக்க மாட்டேன் ண்ணா” என்றவள் கணவனை இழுத்துக் கொண்டு வேகமாக முன்னே நடக்க, அவள் தப்பித்துச் செல்லும் வேகம் பார்த்து சிரித்தான் உதய். 

உதய், ராகவி திருமணமான முதல் வருடத்தில் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் பிரிவு வரை சென்றிருந்தனர். அப்போது ராகவி தன் தோழிகளுடன் இதே ரிசார்ட்டுக்கு தான் வந்திருந்தாள். திருமண வாழ்க்கையை குறித்து யோசிக்க, சரியான முடிவுகள் எடுக்க அவள் இங்கே வந்திருந்தாள். ஆனால், அவளுக்கு இந்த ரிசார்ட்டில் அறை பதிவு செய்துக் கொடுத்தது ராகவன். அதைச் செய்ய சொன்னது ராகவியின் கணவன் உதய்பிரகாஷ். 

அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அவர்கள் திருமணம் முடிந்து, தேனிலவிற்கு இங்கு தான் வந்திருந்தார்கள். தங்கள் வாழ்வை தொடங்கிய இடத்தில் வைத்தே, இனி வாழப் போகும் வாழ்க்கையை பற்றியும் பேசி தெளிவு பெற்றிருந்தார்கள். 

மனைவி கோபமாக இருந்தது புரிந்த உதய், அவளுக்கு முன்பாக ரிசார்ட் வந்து காத்திருந்ததோடு மட்டுமல்லாது, அவளிடம் பேசவும் முனைந்தான். ராகவி கோபத்தில் முகம் திருப்ப தன்னை, ராஜா என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன். 

ராகவி அவனை முறைக்க, சுஹாசினி அந்நேரம் அவனுக்கு உதவ, அந்த விளையாட்டை தொடர்ந்தார்கள். தங்களின் பெயரையும் ரோஜா, மல்லி, தாமரை என்று மாற்றி சொன்னாள் சுஹாசினி. 

அன்று ராஜா, ரோஜாவாக இருந்த உதய், ராகவி பேசி, பிரச்சனையை தீர்க்கவும் உதவியாக நின்றார்கள் தோழிகள். அதையே இன்றும் உதய் எதிர்ப்பார்க்க, ராகவியின் கோபம் புரிந்து, உதய்க்கு உதவ மறுத்து கணவனுடன் ஓடியிருந்தாள் சுஹாசினி. 

இந்த முறையும் ராகவி, உதய், தங்களுக்குள் பேசி பிரச்சனையை சரி செய்துக் கொள்வார்கள் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். 

சுஹாசினி சிரிப்புடன் ரிசார்ட்டின் முக்கியப் பகுதியை நோக்கி நடந்தபடி இத்தனையும் விக்ரமிடம் சொல்லிக் கொண்டு வந்தாள். அவனும் இத்தோடு பத்தாவது முறையாக அந்தக் கதையை சுவாரசியமாக கேட்டபடி மனைவியை பின் தொடர்ந்தான். 

இருவரும் பேசிக் கொண்டே நடந்தாலும் அவர்களின் பார்வை அந்த ரிசார்ட்டை சுற்றியே வந்தது. 

மிகத் தனித்துவம் வாய்ந்த கடற்கரையோர ரிசார்ட் அது. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து பார்க்க, நீலக் கடல் நீளமாய் விரிந்திருந்தது. அதற்கு குடைப் பிடித்திருந்தது நீல வானம். 

ஆங்காங்கே பெயர் தெரியா பல மரங்களும், அதன் ஊடே வரிசையாய் தென்னை மரங்களும் அங்கு நிறைந்திருக்க, அதில் குடியிருந்த பல்வேறு பறவைகளின் கீச்சொலி இனிய கானமாய் அவர்களின் செவியில் மோதியது. 

கடலையும் காற்றையும் பிரிக்க முடியுமா? கடல் அலை எழுப்ப, மரங்கள் அசைந்தாட, தென்றல் அங்கிருந்த பூக்களின் வாசம் சுமந்து வந்து அவர்களைத் தழுவியது. 

நீலவானமும், நீலக் கடலும் பின்னணியில் இருக்க, எதிரே விரிந்திருந்த இயற்கை மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. 

கணவனின் கைப் பிடித்து கண்களை சுழற்றினாள் சுஹாசினி. ஆங்காங்கே ஆட்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ரிசார்ட் மெருகேறி புது பொலிவுடன் நிற்பதும் தவறாமல் அவள் கண்ணில் பட, “ரிசார்ட்டில் நிறைய மாற்றங்கள். பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு.” என்று மகிழ்வுடன் பாராட்டியவள்,

“நான் கேள்விப்பட்டது உண்மையா? ரிசார்ட் கை மாறிடுச்சாம் தெரியுமா ஹீரோ?” என்று கவலையுடன் கேட்டாள். 

“செல்வாண்ணா சொல்லும் போது நான் நம்பல. ஆனா, உதய்ண்ணாவும் அதையே சொல்றாங்க. அப்போ உண்மையா தான் இருக்கும். இல்ல?”

“ஷோனா, முன்னாடி ரிசார்ட் மூடப் போறாங்கன்னு வருத்தப்பட்ட, இப்போ?”

“இப்போ.. வேற ஆள் கைக்கு போய்டுச்சுன்னு வருத்தப்படுறேன். பழைய ஓனர் ரொம்ப நல்லவர் தெரியுமா?”

“ம்ம். புது ஓனர் கூட நல்லவங்க தான் ஷோனா” அவன் சொல்ல, “அவங்களை உங்களுக்குத் தெரியுமா?” அவள் விழி விரித்து கேட்க, “நான் ஜஸ்ட் சொன்னேன்” என்றான் அவன். 

“சொல்வீங்க” என்று உதடு சுளித்தாள் அவள்.

அவர்கள் பேசிக் கொண்டே மெதுவாக நடக்க, மழை பூந்துறலாய் பொழிய ஆரம்பித்தது.

“வாவ், மழை தூறுது ஹீரோ. நம்மை ஆசீர்வதிக்குது” அவள் உற்சாகமாக சொல்ல, “ம்ம். இருக்கும்” என்று சிரித்தான் விக்ரம். கையில் இருந்த மகனோடு கட்டிடத்தை நோக்கி ஓடினான் அவன். சில நொடிகள் கண்ணை மூடி நின்று மழையை முகத்தில் வாங்கி சிலிர்த்து, சிரித்துப் பின் கணவனிடம் ஓடினாள் சுஹாசினி. 

பெருமழையாக பொழியாமல் பூந்துறலாய் மழைத் துளிகள் சிதறிக் கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்தவர்கள் தங்களின் பணியை சிரத்தையுடன் செய்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் இருவரும் அதைப் பார்த்துக் கொண்டே மேலே நடக்க, அங்கிருந்த உணவகத்தில் அவர்களின் மொத்த கூட்டமும் அமர்ந்திருந்தது. 

காலை உணவை ஒன்றாக அமர்ந்து, கலகலத்து, ஒரு மணி நேரத்தில் உண்டு முடித்தனர்.  

அப்போது அலுவலகத்தில் இருந்து வாங்கி வந்திருந்த அவரவர் அறையின் சாவி அவர்களிடம் கொடுக்கப்பட, தங்களின் பிள்ளைகளை கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் அறைகளை தேடி நடந்தனர். 

முதல் நாள் இரவு பிறந்தநாள் விழா. மறுநாள் பெங்களூர், மங்களூர் என்று பயணம், இன்றும் அதிகாலையில் எழுந்து ரிசார்ட் வந்தது என்று தொடர்ச்சியான பயணத்தில் சோர்ந்து போய் இருந்தார்கள் குழந்தைகள். அதிலும், சுஹாசினி குடும்பம் வெளிநாட்டு பயணமும் சேர்த்து செய்திருக்க, அசதி அவர்களை மிகவும் அழுத்தியது. 

அவர்களுக்கான அறை ரிசார்ட்டின் இறுதிப் பகுதியில் தனிக் குடிலாக ஓரமாக இருந்தது. அறைக்குள் சென்றதும் ஷ்ரவன், ஷான்வி இருவரும் பொத்தென்று படுக்கையில் விழுந்தார்கள். விக்ரமும் அவர்களை போலவே செய்ய, இருவரும் அப்பாவை கட்டிக் கொண்டு கதை பேசத் தொடங்கினர். சுஹாசினி கைக் குழந்தையை கவனித்து, அவனை உறங்க வைத்து விட்டு நிமிர, பிள்ளைகள் இருவரும் உறங்கி இருந்தனர். 

விக்ரம் உறங்காமல் தலைக்கு பின்னே கையை கட்டிக் கொண்டு, விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 

“என்ன ஹீரோ? யோசனை பலமா இருக்கு?” அவள் கேட்க, மனைவியின் கைப் பிடித்து இழுத்து, “ரொம்ப டையர்டா இருக்கு ஷோனா. கொஞ்ச நேரம் தூங்கலாம். நீயும் படு” என்று அவன் சொல்ல, அவனை இடித்துக் கொண்டு படுத்தவள், பத்து நிமிடங்களில் தூங்கியிருந்தாள்.

கடலுக்கு எதிரே நீச்சல் குளம் இருக்க அங்கே தனியாக அமர்ந்திருந்தாள் ராகவி. அவளின் பார்வை அங்கே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளின் மேல் இருந்தது. 

வீரா, செல்வா இருவர் வீட்டிலும் பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்காக பணியமர்த்தியிருந்த பெண்கள் பெங்களூரில் இருந்து காலையில் நேராக ரிசார்ட் வந்திருந்தனர். அவர்களை வரவழைத்திருந்தான் செல்வா. 

வீரா, செல்வா, உதய் மூவரின் பிள்ளைகளும் அங்கு விளையாடிக் கொண்டிருக்க, இங்கும் அவர்கள் குழந்தைகளை பொறுப்பாக பார்த்துக் கொண்டார்கள். 

ராகவியும் அங்கிருக்க, செல்வா, சக்தி இருவரும் கடலில் கால் நனைத்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, நீச்சல்குள இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த மனைவியை இடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான் உதய். 

“ஹலோ ரோஜா” என்று அவன் ஆரம்பிக்க, திரும்பி அவனை முறைத்தாள் ராகவி. 

“மங்களூர் வர்றது, இதான் முதல் முறையா?” அவன் கேட்க, எட்டி கணவனின் கழுத்தைப் பிடித்திருந்தாள் ராகவி. 

“உங்களை எல்லாம்.. பிராடு போலீஸ். கோபமா இருக்கேன்னு தெரியுது இல்ல? அப்புறம் என்ன பேச்சு?” அவள் எகிற, “பட்டே, நான் என்ன பண்ணா சரியாவ?” கண்ணடித்து கேட்டான் உதய். 

“ஒன்னும் பண்ண வேணாம்.” அவள் சொல்ல, “சரி” என்று பவ்யமாக சொன்னான் அவன். 

அதற்கும் கோபப்பட்டு அடித்தாள் ராகவி. உதய் கழுத்தை தேய்த்து விட்டு, “சாரி” என்று இருமிக் கொண்டே சொன்னான். 

அவள் நன்றாக திரும்பி அமர்ந்து கணவனின் முகத்தை நேராக பார்த்தாள். ஏனோ இப்போது கோபத்தின் தடம் காணாமல் போவது போலிருக்க, விழிகளை திருப்பி கடலைப் பார்த்தாள். 

“சாரி ராகவி. இனிமே..” மனைவியின் முறைப்பில் சொல்ல வந்ததை முடிக்காமல் வாய் மூடினான் உதய். 

“பிளீஸ்” அவன் கெஞ்ச, மிஞ்ச விரும்பினாள் மனைவி. ஆனால், முடியவில்லை. 

இருவரும் அமைதியாக அமர்ந்து குழந்தைகளின் மணல் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.

வயதில் பெரிய பிள்ளைகளான தாரா, நந்தா, மித்ரன் மூவரும் இரண்டு சர்வா மற்றும் சம்யுக்தா, சாஹித்யாவிற்கு பொறுப்பாக விளையாட சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க, புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தார்கள். 

அவர்களை போலவே பிள்ளைகளும், அன்பும், நட்பும், பாசமுமாக இருக்க, அவர்களைப் பார்க்கவே பெற்றோருக்கு பெருமையாக இருந்தது. 

“பாட்டு கேட்போமா பட்டே?” உதய் கேட்க, பட்டென திரும்பி அவனை முறைத்தாள் ராகவி. 

“மனோ பாட்டு..” குறும்பாக சொன்னவன், அவள் மறுக்கும் முன் பாடலை ஒலிக்க விட்டான். 

மனோ கம்பீர குரலில் காதல் பாட்டு படித்தார். 

“தில்லுபரு ஜானே” பாடல் ஒலிக்க, ராகவியின் முகம் சிவந்து போனது. இந்தப் பாடல் அவர்களின் திருமண இரவில் கேட்டது நினைவில் வர, வெட்கச் சிரிப்புடன் கணவனின் மேல் பாய்ந்தாள் அவள். 

“அடிக்காத பட்டே. அடுத்த மாசம் எனக்கு டிஐஜி ப்ரோமோஷன் வரப் போகுது. இன்னும் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கிட்டு இருக்கேன் நான்” அவன் கத்தி புலம்ப, “என்ன சொன்னீங்க?” அவனுக்கு மேல் கத்தினாள் ராகவி. 

“வா.. வாட்? பதவி உயர்வா? செம்ம உதய். கங்கிராஜுலேசன்” சண்டை மறந்து சந்தோஷமாக வாழ்த்தினாள். 

பெற்றோரின் சத்தம் கேட்டு பிள்ளைகளும் ஓடி வந்து காரணம் தெரியாமலேயே அப்பா, அம்மாவை ‍கட்டிக் கொண்டனர். 

சர்வா, சம்யுக்தா, ஆனந்த், சாஹித்யாவும் அவர்களின் அணைப்பு வட்டத்தில் வர, “அழகு குட்டீஸ்” என்று அனைவரையும் சேர்த்து செல்லம் கொஞ்சினான் உதய். 

அந்நேரம் மனைவியின் கைப் பிடித்து காலாற நடந்து வந்து கொண்டிருந்த வீரா, அந்தக் காட்சியை தவற விட விரும்பாமல் அலைபேசி எடுத்து புகைப்படமாக பொக்கிஷமாக எடுத்து வைத்தான். 

“இந்த வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது. இல்ல, மலரே?” அவன் கேட்க, அவனது மலரின் கண்களில் ரோஜாக்கள் பூத்தது. 

“ம்ம்” என்றாள் புன்னகையுடன். 

“குட்டீஸ், நாங்க எல்லோரும் சாப்பிட போறோம் வீரா. நீங்களும் வர்றீங்களா?” குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக பிடித்து தொங்க நடந்து வந்த உதய் கேட்க, “நீங்க போங்க போலீஸ். நாங்க பின்னாடி வர்றோம்” என்றான் அவன். 

“ப்பா, சாப்பித வா ப்பா” வீராவின் மகள் அழைக்க, “நீங்க போய் அத்தை கூட சாப்பிடுங்க பூக்குட்டி. அப்பா இப்போ வர்றேன்” மகளை தூக்கி முத்தமிட்டு சொன்னான் அவன். 

உதய் அவளை கைகளில் வாங்கிக் கொள்ள, தன்னை கண்டுக் கொள்ளாமல் அப்பாவை மட்டும் அழைத்த மகளை முறைத்து விட்டு முன்னே நடந்தாள் மலர்.

“மலரே.. அவ குழந்தை.. அவகிட்ட போய் கோப..” மலரின் முறைப்பில் வீராவின் வாய் தானாக மூடியது. 

மனைவியை பக்கத்தில் இழுத்து, அவளின் தோளில் கைப் போட்டு நடந்தான் அவன். 

அவனுக்கு பசுமையான பழைய நினைவுகள் மெல்ல மேலெழுந்து வந்தது. 

மலரிடம் அவன் காதலை சொன்ன போது, மணக்க கேட்ட போது, அவனுக்கு பிடித்த பதிலை சொல்லியிருக்கவில்லை அவள்.  

அவனுக்கு மறுப்பை பதிலாக தந்து அவன் மனதை உடைக்கவும் செய்திருந்தாள். ஆனால், உதய் உதவியோடு அவன் இங்கு வர, இதே இடத்தில் வைத்து தான் அவனை மணக்க சம்மதித்திருந்தாள் மலர். 

அந்த நாளை, அந்த நொடியை, அந்த பதிலை, மலரின் முகத்தில் இருந்த கண்ணீரை, புன்னகையை அவனால் என்றுமே மறக்க முடியாது. 

இந்த ஊரும், கடலும், இந்த ரிசார்ட்டும் அவனுக்கு மிகவும் பிடித்த இடம். அவன் மனதுக்கு நெருக்கமான இடம். ஒரு இடத்தின் முக்கியத்துவம் அங்கு நமக்கு இருக்கும் அழகான, உணர்ச்சி பூர்வமான நினைவுகளை கொண்டு தானே அளவிடப்படுகிறது. 

அவர்கள் சந்தித்து பத்து வருடங்களாகி விட்டது என்பதையே அவனால் நம்ப முடியவில்லை. அவன் மனைவி மலர் இன்னமும் மென்மையாய், அவளுக்கு அடுத்து அவன் அதிகம் நேசிக்கும் மலர்களைப் போலவே இருக்கிறாள் என்பதை பார்த்தவன், அவளை தோளோடு சேர்த்தணைத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். 

“தேங்க்யூ மலரே. இந்த முரட்டு முட்டாள் வீரா வாழ்கையில் வந்து.. என் வாழ்கையை இவ்வளவு அழகானதா மாத்துனதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உன்னைப் போலவே அழகான பிள்ளைகளை எனக்கு கொடுத்ததுக்கு தேங்க்ஸ். அதெல்லாம் விட என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்தினதுக்கு உனக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும்..” அவன் உணர்ச்சிகரமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே எக்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் மலர். வீராவின் உதடுகள் மட்டுமல்ல, கண்களும் தானாக மூடிக் கொண்டது. 

“தேங்க்யூ மிஸ்டர் வீரசிவம். இந்த மலருக்கு நீங்க எப்பவும் மென்மையானவர் தான். உங்களை கரடுமுரடுன்னு நீங்க சொல்லலாம். ஆனா, அது பொய். அன்புக்கு ஏங்கும், அன்பை மட்டுமே கொடுக்கும் வீரன் நீங்க. நீங்க விக்கற மலர்களை விட மென்மையானது உங்க மனசு. என் வாழ்கையை மலர வச்சு..”

“ப்ச், என்ன பேசுற மலரே” சட்டென மலரை இழுத்து அணைத்து கொண்டான் வீரா. வீரசிவத்தின் மார்பில் மலர்ந்து புன்னகைத்தாள் அவனின் பனிமலர். 

இருவரும் விலகி கடற்கரையை நோக்கி நடந்தனர். அவர்களைத் தவிர அந்த விடுதியில் யாருமே இல்லை. 

அவர்களின் தனிப்பட்ட விடுமுறை விடுதி போல பாவித்து சுற்றிக் கொண்டிருந்தார்கள் அனைவரும். 

“செல்வா.. நோ..‌ அச்சோ.. அம்மா…” என்ற சக்தியின் குரல் கேட்க, அந்த திசையை நோக்கி நடந்தார்கள். 

செல்வா, சக்தி இருவரும் கடலில் குளித்து தொப்பலாக நனைந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேர ஆட்டம், சக்திக்கு குளிரினால் உடல் நடுங்கத் தொடங்கியது. அவளை வெளியே விடாமல் வம்பு செய்துக் கொண்டிருந்தான் செல்வா. 

வீரா, மலரை பார்த்ததும் சக்தி, கணவனின் கையை உதறி தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்திருந்தாள். 

கரையில் இருந்த துவாலையை எடுத்து போர்த்தியபடி அறைகளை நோக்கி அவள் ஓட, “என்ன சார் கடலோர காற்று வாங்க வந்தீங்களா?” வீராவை கேலியாக கேட்டான் செல்வா. 

அவனுக்குப் பக்கத்தில் நடந்து வந்த மலரை பார்த்ததும், “பொறுமையா நடந்துட்டு, அப்புறமா சாப்பிட வாங்க” என்று பணிவாக சொல்லி விட்டு அவன் செல்ல, வெடித்து சிரித்தான் வீரா. 

செல்வா ஓட்டமாய் ஓடி சக்தியை தொட்டிருந்தான். 

“அடி வாங்க போறீங்க செல்வா. என்னை விடுங்க” அவள் திமிற, “அடியா? நீ கடி இல்ல கொடுப்ப?” அவன் நமுட்டு சிரிப்புடன் கேட்க, அவனை கண்களால் எரித்தாள் சக்தி. 

இருவரும் அறைக்குள் நுழைய, சட்டென திரும்பி கணவன் முன் கைக் கட்டி நின்றாள் அவள். 

செல்வாவின் கை அனிச்சையாக அவன் கழுத்தை மூடியது. 

“இவ்வளவு பயம் இருக்கு இல்ல?” அவள் கேலிச் சிரிப்புடன் கேட்க, “யாருக்கு? எனக்கா?” என்றவன், அவளை இழுக்க கை நீட்ட, தப்பித்து அறைக்குள் ஓடினாள் சக்தி. 

நாலே எட்டில் அவளை பிடித்து, இறுக்கமாக அணைத்திருந்தான் செல்வா.

“எங்க, இப்ப பேசு பார்ப்போம்” அவன் சொல்ல, வாயை இறுக்கமாக மூடி, அவன் கண்களை பார்த்தாள் சக்தி. 

அவர்கள் இருவரின் கடந்த காலமும் மிக கசப்பானது. அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது முழுக்க உடைந்திருந்தார்கள். காலம் அவர்களை இணைத்தது. மனதாலும், உடலாலும் காயம்பட்டிருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாக, மருந்தாக மாறி இணைந்திருந்தனர். 

நிகழ் காலம் அவர்களுக்கு இனிமையை தந்தது. அவன் மனிதர்களை மதிக்க தெரிந்தவன். அவனுக்கு நேசத்தை தந்து, அவனுக்கு சர்வமும் சக்தி மயமாக்கினாள் அவன் மனைவி சக்திஶ்ரீ. 

திருமணம் முடிந்து இதே ரிசார்ட்டிற்கு தான் தேனிலவுக்கு என வந்தார்கள் அவர்கள். 

அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை அழகாக்கிய இடம் இது. இந்த இடத்தின் பேரை சொன்னாலே சக்தியின் முகத்தில் வெட்க பூக்கள் பூத்து விடும். செல்வாவின் கண்கள் அதைப் பார்த்து அனிச்சையாய் மயங்கும். 

அவர்கள் எப்போதும் வீரா குடும்பத்துடன் இணைந்து அடிக்கடி வரும் இடம் இது. 

அழகிய, அர்த்தமுள்ள நினைவுகளை சுமக்கும் இடங்கள் அனைத்தும் மிக அழகானது தானே? அவர்களுக்கு உலகத்தின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று. 

“சக்தி…” மென்மையாய் அழைத்தான் செல்வா. 

“ம்ம்”

“பேசு சொன்னேன்”

“என்ன பேச?” என்றவள், அவன் பின்னங்கழுத்தில் கரம் கோர்த்து அவனை நெருக்கமாக இழுத்து குரல் வளையில் மென்மையாய் பற்தடம் பதிக்க, “சக்தி” தடுமாறிய அவன் குரலில் தாபமிருந்தது. 

அவர்கள் இருவரும் இன்னமும் ஈரத்துடன் நிற்க, தென்றல் அவர்களை தழுவி, நடுங்க செய்தது. 

“சக்தி” மனைவியின் முகம் பற்றினான் செல்வா. பத்து நிமிடங்களில் குளிர் காணாமல் போக, இருவரும் இயல்பாகி இருந்தனர். 

அரை மணி நேரம் கழித்து அவர்கள் உணவு அருந்த செல்ல, குழந்தைகள் இன்னமும் அங்கே கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள். 

Advertisement