Advertisement

நட்பும், உறவும் சூழ பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. 

இரவு உணவு முடித்து உறவுகள், பெரியவர்கள் விடை பெற்று அவரவர் இல்லம் சென்றிருக்க, மொட்டை மாடியில் குயின்ஸ் வெரத் மலர்களால் இயற்கையாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் இருந்தார்கள் நண்பர்கள் கூட்டம். 

வீராவின் மகள் சம்யுக்தா, செல்வாவின் மகள் சாஹித்யா, ராகவனின் இரட்டை குழந்தைகள் மற்றும் சுஹாசினியின் நான்கு மாத மகன் சைலேஷ் உறங்கி விட, அவர்களை தரையில் கம்பளி விரித்து, கனமான போர்வை போர்த்தி, படுக்க வைத்திருந்தனர்.

மற்ற குழந்தைகள் பெரியவர்களோடு அமர்ந்திருந்தனர். 

“உனக்கு தூக்கம் வரலையா பிரின்சஸ்?” செல்வா, ஷான்வியிடம் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் அவள். 

அவர்கள் பகல் முழுவதும் தூங்கிருக்க, இப்போது உறக்கம் வரவில்லை அவளுக்கு. 

விக்ரம் தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியின் கைப் பிடித்து சுண்டு விரல் கோர்த்துக் கொண்டான். 

“தூக்கம் வருதா?” மென்மையாய் விசாரித்தான்.

“இல்ல, ஹீரோ” என்றாள் சுஹாசினி. 

அதே நேரம் அவர்களுக்கு எதிரே கால் நீட்டி தரையில் அமர்ந்திருந்த சக்தியின் கண்களில் தூக்கம் வழிய, பக்கத்தில் இருந்த மலரின் மடியில் தலை சாய்த்து படுத்து விட்டாள் அவள். உடனேயே ஓடி வந்த சர்வபூரணன், சர்வானந்த் இருவரும் அவளுக்கு ஆளுக்கொரு பக்கத்தில் படுத்துக் கொள்ள, மகனை தன் பக்கமாக இழுத்தான் செல்வா. 

“அம்மா தூங்கட்டும். நீ இங்க இரு” மகனின் தலையை தன் மடியில் வைக்க, “அம்மா தான் சாப்ட். அவங்க கூட தான் படுப்பேன்” என்று அடமாக சொன்னவன், எழுந்து அம்மாவிடம் செல்லாமல் வீராவிடம் சென்றான். மாமன் மடியில் தலை வைத்து அவன் படுக்க, அவனைப் பார்த்து பழிப்பு காட்டி சிரித்து, எழுந்து வந்து செல்வாவின் மடியில் படுத்தான் வீராவின் மகன் சர்வபூரணன். 

அவர்களின் சேட்டைகளை பார்த்து சிரித்தபடி, “இங்க என்ன நடக்குது ஷோனா?” என்று மனைவியிடம் கேட்டான் விக்ரம். 

“செல்வா, வீரா ண்ணா கூட இப்படித் தான். ஒரு மாதிரி முரட்டு அன்பு அவங்களோடது. அதையே அவங்க பசங்களும் ஃபாலோ பண்றாங்க” என்று அவள் சொல்ல, “ம்ம், நம்ம பிள்ளைங்க இதையெல்லாம் மிஸ் பண்றாங்க இல்ல?” என்று ஏக்கத்துடன் கேட்டான் விக்ரம்.

மனதின் ஏமாற்றத்தை பெருமூச்சாக வெளியிட்டு, “அப்படி சொல்ல முடியாது ஹீரோ. அங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க இல்ல? நாமளும் அடிக்கடி வெளில போறோம் தானே? அங்க நம்ம பிள்ளைங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க தானே? அப்புறம் என்ன உங்களுக்கு கவலை?” அவள் கேட்க, “என்ன இருந்தாலும் இந்த பாண்டிங் வராது இல்ல ஷோனா?” என்றான் விக்ரம்.

“சில நேரத்துல இருக்கத வச்சு சந்தோஷப்பட்டுக்கணும் ஹீரோ” தத்துவம் பேசினாள் சுஹாசினி. விக்ரம் சிரிக்க, அவளையும் தொற்றியது அந்தச் சிரிப்பு.

அப்படியே சிரிப்பு முகமாக அவள் திரும்ப மகளுடன் தனித்து நின்றுக் கொண்டிருந்த ராகவி அவள் கண்ணில் பட்டாள். 

இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, உதய் இன்னும் வந்திருக்கவில்லை. 

ராகவியை விட அப்பாவுக்காக அந்நேரமும் வழி மேல் விழி வைத்து நின்றிருந்த சிறுமி உதயதாராவை பார்க்கையில் அவளுக்கு மனதை பிசைந்தது. 

“விக்ரம்” கணவனின் கையை சுரண்டினாள். இருவரும் எழுந்து ராகவியிடம் சென்றார்கள். 

பொதுவான விஷயங்கள் அவர்கள் பேச, உதயதாரா சுருண்டு சுஹாசினியின் மடியில் உறங்கிய பத்து நிமிடத்தில் அங்கு வந்தான் உதய்.

ராகவி மௌனமாய் கணவனின் கைப் பிடித்து அவன் மணிக்கட்டில் இருந்த வாட்சில் நேரம் பார்த்தாள். 

பத்து முப்பது என்றது. 

“சா.. சாரி மா.. நான் ராகவன் கிட்ட பேசினேன். மது புரிஞ்சுப்பா” உதய் குற்ற உணர்வு தந்த தடுமாற்றத்துடன் சொல்ல, “சாப்பிட வாங்க” என்று முன்னே நடந்தாள் ராகவி.

ஆண்கள் அனைவரும் உதயிடம் ஐந்து நிமிடம் பேசி விட்டு அவரவர் பிள்ளைகளுடன் அருகருகே இருந்த அவர்களின் வீடு சென்றனர். செல்வாவின் வீடு சற்றுத் தொலைவில் இருக்க, சுஹாசினியின் வற்புறுத்தல் காரணமாக அவள் வீட்டில் அன்றிரவு தங்கியது அவன் குடும்பம்.

மலரின் வீட்டில் இரண்டு அண்ணன்கள். அவர்கள் ஏற்கனவே பெரிய குடும்பம் என்பதால் சுஹாசினியின் வீட்டில் தூங்கினார்கள். 

விக்ரம் குழந்தைகளை படுக்க வைத்து மனைவியின் பக்கத்தில் வந்து தலைக்கு பின்னே கைக் கொடுத்து படுத்தான்.

“ஷோனா..”

“ம்ம்..” மகனை அணைத்து படுத்திருந்தவள், கணவனைத் திரும்பிப் பார்க்க, “ராகவி, ரொம்ப கோபமா இருக்காங்களா? நாளைக்கு மங்களூர் போகணுமே? அதுக்குள்ள சமாதானம் ஆகிடுவாங்க தானே?” விக்ரம் கேட்க, சிரித்தாள் சுஹாசினி. 

“நாம சண்டை போட்டா.. சமாதானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும்?” அவள் கேட்க, “அது சண்டையை பொறுத்து.. பிரச்சனை எவ்ளோ பெருசுன்றதை பொறுத்து..” என்று அவன் சொல்ல, முறைத்தாள் சுஹாசினி.

“என்ன ஷோனா முறைப்பு?” மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“இப்படி கிஸ் பண்ணி சமாதானம் ஆகிடுவோம்.” கண் சிமிட்டி சொன்னான் விக்ரம். அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள் அவள். 

“வருஷங்கள் கூட கூட நமக்குள்ள புரிதலும் கூடுது தானே? நமக்கு ஒருத்தரையொருத்தர் பற்றிய புரிதல் கூடியிருக்கு. சண்டை போட்ட வேகத்தில் சமாதானம் ஆக முடியுது. உண்மையை சொல்லணும்னா.. இப்போ எல்லாம் சண்டையை தவிர்க்கவும் தெரிஞ்சுருக்கு” விக்ரம் சொல்ல, மெல்ல நகர்ந்து கணவனை ஒண்டினாள். 

“ராகவி ரொம்ப கோபத்தில் இருக்கா. அவளுக்கு ராகவ்னா உயிர். அவங்க ட்வின்ஸ் இல்லையா? சோ, அவங்களுக்குள்ள ஒரு மாதிரி ஸ்பெஷல் பாண்டிங் இருக்கும். அவனுக்கு ஏதாவது ஒன்னுன்னா அவளால தாங்க முடியாது. அவனுக்கும் அப்படித் தான்”

“ம்ம்”

“ராகவ், மது ரெண்டு பேரும் டைவர்ஸாகி, ஆளுக்கொரு பக்கமா பிரிந்து போய்.. இப்ப தான் திரும்ப சேர்ந்துருக்காங்க.”

“நீ முன்னாடியே சொன்ன ஷோனா”

“ம்ம். அவனை இப்போ சந்தோஷமா பார்க்க எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?. அவன் குழந்தைங்க பர்த்டேக்கு உதய் வராதது கண்டிப்பா ராகவியை அப்செட் பண்ணியிருக்கும். பட், மங்களூர் ரிசார்ட் பத்தி உங்களுக்குத் தெரியாது இல்ல? அவங்க ரெண்டு பேரையும் அந்த இடம் திரும்பவும் சண்டையை மறந்து சமாதானம் ஆக வைக்கும். நீங்க வேணா பாருங்க” சுஹாசினி கடந்த கால நினைவுகளில் மூழ்கி சிரித்துக் கொண்டே சொல்ல, “ம்ம். நமக்கு நாளைக்கு நைட் ஃப்ளைட். அகைன் டிராவல் பண்ணனும். இப்பவே அசதியா இருக்கு. தூங்கு ஷோனா” அவன் சொல்ல, கணவனின் கை வளைவில் வாகாக படுத்து கண் மூடினாள் சுஹாசினி. 

மறுநாள் மாலை ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டமும், அவர்களின் குடும்ப சகிதம் பெங்களூர் சென்று இறங்கினார்கள். சிறிது நேர காத்திருப்பிற்கு பின் அங்கிருந்து மீண்டும் மங்களூர் விமானத்தில் ஏறினார்கள் அவர்கள். 

ராகவி, உதய் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பெற்றோரின் சண்டையை பொருட்படுத்தாமல் அவர்களின் பிள்ளைகள் மூவரும் இயல்பாக இருந்தனர். மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். 

ஆண்கள் குழந்தைகளுடன் ஒரு பக்கமாக அமர்ந்து விட, பெண்கள் மறுபக்கம் இருந்தனர். சுஹாசினியின் கைக் குழந்தை விமானம் மேலேறியதும் அடைபட்ட உணர்வில், சிணுங்கி அழுது அந்த சிறிய விமானத்தை தன் சத்தத்தால் நிறைத்தான்.

விக்ரம் அவனை கையில் ஏந்திக் கொண்டு விமானத்தில் முன்னும் பின்னுமாக நடந்துக் கொண்டிருந்தான். 

அந்த சிறிய விமானத்தில் அவர்களைத் தவிர மிக சொற்ப பயணிகளே இருந்தார்கள். 

இங்கே மதுமிதா மெல்ல தொண்டையை செருமினாள். 

ராகவி, மலர், சுஹாசினியை பார்த்து, “உங்க மேங்ளூர் கதையை சொல்லுங்களேன். செம்ம இன்ட்ரெஸ்ட்ரா இருக்கும்” என்று அவள் சொல்ல, சிரித்தாள் ராகவி. 

“மங்களூர் ஏர்போர்ட்டோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட டேபிள் டாப் ரன்வே தான். மலை மேல இருக்கு ஏர்போர்ட். ஒரு பக்கம் கடல் மறுபக்கம் பள்ளத்தாக்கு. ஒரு டேபிள் மேல் லாண்ட்டாகுற மாதிரி தான் லாண்டாகும் ப்ளைட்.” பத்து வருடங்களுக்கு முன்பு இதை சொன்ன போது மலரின் நிலையை யோசித்தாள் சுஹாசினி. அவள் பயந்து, பதறி, மூச்சுக்கு திணறியது நினைவு வந்தது. இப்போது பின்னே திரும்பி வீராவிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

இந்த பேச்சு மலரை கொஞ்சமும் பாதிக்காதது பார்த்து அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

“இந்தியாவில் மொத்தம் மூனு டேபிள் டாப் ரன்வே தான் இருக்கு. ஒன்னு கேரளா, இன்னொன்னு மிசோரம். அப்புறம் நம்ம மங்களூர்.” ராகவி சொல்ல, மதுமிதா சுவாரசியமாக அந்த தகவலைக் கேட்டு கொண்டிருந்தாள். 

“மற்ற ரன்வே விட டேபிள் டாப் கொஞ்சம் ரிஸ்க்கி. ஆக்சிடென்ட்டாக அதிகம் வாய்ப்பிருக்கு” 

“அச்சோ. வேற பேசுங்க. ஃப்ளைட்ல உட்கார்ந்துட்டு பேச்சை பாரு” சுஹாசினி மிரட்ட, சட்டென பேச்சு மங்களூர் கோவில், சுற்றுலா தளங்கள், அவர்களுக்கு மிகப் பிடித்தமான கடற்கரை ரிசார்ட் என்று திரும்பியிருந்தது.

45 நிமிடங்களில் அவர்கள் தரையிறங்க, அவர்களுக்காக காத்திருந்தது மூன்று வாடகை கார்கள். இரண்டிரண்டு குடும்பங்களாக பிரிந்து காரில் ஏற, விமான நிலையத்துக்கு பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்கு சென்றது கார்.

“நாம ரிசார்ட் போகலையா? என்ன இங்க வந்திருக்கோம்?” அதிர்ச்சியுடன் கேட்டாள் சுஹாசினி.

“மணி என்னன்னு பாரு ஷோனா? பத்து மணியாகுது. ரிசார்ட் நாளைக்கு காலைல போகலாம்” விக்ரம் சொல்ல, “என்ன பேசுறீங்க ஹீரோ. ரிசார்ட் இங்கருந்து ஒரு மணி நேர ட்ரைவ் தான்” அவள் முறைக்க, “குட்டீஸ் எல்லாம் தூங்கி விழுறாங்க ஷோனா. வாயாடாம வா” மனைவியை இழுத்துக் கொண்டு போனான் அவன். 

அவர்களுக்கான அறைகள் முன்னரே பதிவு செய்யப்பட்டிருக்க, அறைகளின் சாவியை வாங்கி பிரித்துக் கொடுத்தான் உதய். 

“நேரா ரிசார்ட் போய் இருக்கலாம். இப்போ நாளைக்கு வேற டிராவல் பண்ணனும். வீண் அலைச்சல்” புலம்பிக் கொண்டே நடந்த மனைவியை, பேசியே சமாளித்து குழந்தைகளோடு சேர்த்து உறங்க வைத்திருந்தான் விக்ரம். 

மறுநாள் அதிகாலையில் முதல் ஆளாக சுஹாசினி கிளம்பி நிற்க, காலை ஏழு மணிக்கு எல்லாம் அவர்களுக்கு மிகப் பிடித்த இடமான அந்த கடற்கரையோர ரிசார்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

சுஹாசினி, ராகவி, மலர் மூவரும் ஒரு காரில் அமர்ந்திருக்க, விக்ரம் அதை செலுத்தினான். உதய், வீரா ஓட்டிய கார்களில் குழந்தைகள் அனைவரும் இருக்க, அது முன்னே சென்றது. 

பெண்கள் போய் இறங்கும் போது ஏற்கனவே அங்கு நின்றிருந்தது மற்ற இரு கார்கள். 

சுஹாசினி கணவனின் கைக் கோர்த்து நடக்க, அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான் அவன். 

முதலில் ராகவி உள்ளே செல்ல, “ஹாய்” என்று அவளை தடுத்து நிறுத்தியது ஒரு குரல். 

மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவள். 

“யார் நீங்க? எதுக்கு ஹாய் சொல்றீங்க?” ராகவி கோபமாக கேட்க,

“ஹாய் மிஸ். ஐ அம் ‍ராஜா” என்று கை நீட்டினான் அவன். 

ராகவி அசையாமல் அப்படியே இறுக்கமாக நிற்க, மலர் முன்னே வந்தாள்.

“ஹாய் சார்” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள், 

“இவ, ரோஜா..” என்று ராகவியை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். 

“நான் மல்லி.. அப்புறம்” என்று அப்படியே மெல்லத் திரும்பி தனக்கு நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்த சுஹாசினியை கைக் காட்டி, “இவ தாமரை. கூட இருக்கறது அவளோட ஹீரோ அண்ட் அவங்களோட குட்டி ஹீரோ” என்று மலர் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டான் விக்ரம். 

“ஹாய் ரோஜா” என்றான், ராஜா கையை முன்னே நீட்டி, ரோஜா அவனைக் கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்ல, ஆழ மூச்சிழுத்து ரோஜாவின் வாசம் பிடித்து நின்றான் ராஜா. 

Advertisement