Advertisement

மதுமிதாவின் கைப் பிடித்து, அவளையும் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள் இரண்டு சர்வாக்களும்.

அங்கே ராகவியின் இரட்டை பிள்ளைகள் உதயதாரா, உதய்நந்தா மற்றும் உதய்மித்ரன் இருக்க, அவர்களோடு இணைந்து கொண்டார்கள். 

பிள்ளைகள் ஆறு பேரின் கவனமும் ராகவன், மதுமிதாவின் இரட்டையர்களின் மேலேயே இருந்தது. 

மதுமஞ்சரி, மதுரனின் கைப் பிடித்து நடக்க வைத்து, தங்களுக்குள் பேசி, சிரித்து அவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, ராகவி அவர்களை மேற்பார்வை செய்துக் கொண்டே வீட்டை அலங்கரித்து கொண்டிருந்தாள். 

ஒன்பது வயது உதயதாரா பொறுப்பாக எழுந்துப் போய் அம்மாவுக்கு உதவ, மற்ற பிள்ளைகளும் அதையே சொல்லிக் கொடுக்காமலே செய்தனர். 

மற்றொரு பக்கம் செல்வா, வீரா இருவரும் எதிரெதிரே நின்று முறைத்துக் கொண்டிருந்தனர். 

“என்னடா? ரொம்ப ஆடுற?” என்று நண்பனை முறைத்துக் கொண்டு கேட்ட வீராவின் குரலில் நிச்சயம் சிரிப்பிருந்தது. 

“சாரி. உனக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல” உதடு வளைத்து, கைகளை காற்றில் வீசி அசட்டையாக சொன்னான் செல்வா. 

“அடிங்க…” என்று வீரா முன்னேற, “அப்பா…” என்று அழுத்தமாய் அழைத்து முன்னே வந்து தோரணையாக நின்றான் சர்வபூரணன்.

மகனை கண்டு வீரா முழிக்க, செல்வா நக்கல் சிரிப்புடன் கையசைத்து, “வரட்டா, வீ…ரா..” என்று வாசலை நோக்கி நடக்க, நண்பனின் மேல் கடுப்பை காட்ட முடியாமல் விழுங்கி திரும்பினான் வீரா. 

“என் சிங்கத்துக்கு என்ன கோபமாம்?” மகனிடம் வெள்ளைக் கொடி பறக்க விட்டான் அவன்.

“மாமாவை மிரட்டாதீங்க” வெள்ளை வேட்டியை கையில் பிடித்திருந்த ஏழு வயது பூரணன், அப்பாவின் வெள்ளை கொடியை சட்டை செய்யவில்லை. 

“சரி. மாமாவை மிரட்டல. அப்பா சாரி” என்றான் வீரா, மகன் முன்பு குனிந்து. 

“ம்ம்.” என்று அப்பாவின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்து ஒரு நொடி யோசித்து, “அம்மா வரட்டும். அப்புறம் ஓகே சொல்றேன் ப்பா” என்றவன், எக்கி அப்பாவின் தலையை கலைத்து விட்டு ஓடினான். 

“டேய், மவனே. ஒரு காலத்தில் நான் எல்லாம் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா டா உனக்கு? ம்ம்.” வீரா சலித்து கொண்டே திரும்ப, அங்கே மீசையோடு உதடு கடித்து சிரிப்பை மறைத்துக் கொண்டிருந்தான் செல்வா. 

“எல்லாம் உன்னால தான் டா..” என்று நாக்கை மடித்த வீரா, சட்டென சாந்தமாகி, திரும்பி கண்களால் மகனை தேடினான். இப்போது சத்தமாக சிரித்து விட்டான் செல்வா. 

அன்று காலையிலேயே செல்வா குடும்பத்தை அழைத்து வர, அவன் வீடு சென்றிருந்தான் வீரா. அவனோடு தொற்றி கொண்டார்கள் அவன் பிள்ளைகள். 

அவர்கள் அங்கிருந்த நேரம் முழுவதும் வீரா மகளை மட்டுமே கவனிக்க, மற்ற மூவருக்கும் லேசாக பொறாமை உணர்வு எட்டிப் பார்த்தது. 

இரண்டு சர்வாக்களும் வீராவிடம் செல்ல, மகன், மருமகன் இருவரையும் கவனித்தாலும் மகளையே தூக்கி சுற்றிக் கொண்டிருந்தவனிடம் இருந்து கோபத்துடன் விலகி செல்வாவிடம் சென்றார்கள் பிள்ளைகள். 

“டேய், இவனுங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது? உன் பூங்கொத்து மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிவாளா? என் மருமகளை என்கிட்ட கொடுத்துட்டு.. என் மருமகனை கவனி டா” அதட்டினான் செல்வா. ஆனால், வீரா அதை மதித்தால் தானே? 

மகளுக்கு தலையை சீர் செய்து, இரு பக்கமும் வழிந்து தோளை தொட்டக் கூந்தலில் பூ வைத்து விட்டுக் கொண்டிருந்தான் அவன். 

“அம்மா கிட்ட விடுடா அவளை. இந்த வேலை எல்லாம் அவங்க பார்ப்பாங்க” செல்வா சொல்ல, “என் பொண்ணுக்கு நான் செய்யறேன். உனக்கு என்னடா? உன் சக்திக்கு, அப்புறம் உன் செல்லத்துக்கு நீ செய்யுற தானே? நான் ஏதாவது சொன்னேன் உன்னை? வந்துட்டான், பெருசா சொல்ல” வீரா முறைக்க, 

“டேய்..” என்றான் செல்வா. 

“சாரி, உனக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல” என்ற வீரா மகளை தூக்கி கொண்டு காரை நோக்கி நடந்திருந்தான். 

அந்த கோபம் தான் செல்வா மற்றும் இரண்டு சர்வாக்களுக்கும். வீரா அப்போது சொன்ன வசனத்தை தான் செல்வா இப்போது பதிலடியாக அவனுக்குத் திருப்பிக் கொடுத்திருந்தான்.

பிள்ளைகளின் மேல் பார்வையை பதித்தபடியே வாயிலை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த நண்பனின் பக்கத்தில் சென்று நின்றான் வீரா. 

சரியாக அந்நேரம் திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே வந்தார்கள் பெண்கள். 

சக்தி தான் முதலில் வந்தாள், மனைவியைப் பார்த்ததும் செல்வாவின் கால்கள் தானாக படிகளில் தாவி இறங்கி அவளை நோக்கி நடந்தது.

கடல் பச்சை வண்ண மென்பட்டில் பசுமையாக இருந்தாள் சக்தி. அதற்கு பொருத்தமான, அதே நிற நகைகள் அவளை அலங்கரித்திருந்தது. காதில் குடையாய் விரிந்திருந்த ஜிமிக்கியை தொட்டு உரசிக் கொண்டிருந்தது மல்லிகை சரம். 

செல்வாவின் இதயம் தானாக கனிய புன்னகைத்தான். சக்தியின் கைப் பிடித்து நடந்து வந்து கொண்டிருந்த அவர்களின் நான்கு வயது மகளை, குனிந்து கொத்தாக தூக்கினான் அவன். 

“ப்பா…” காற்றெங்கும் சிரிப்பை சிதற விட்டாள் செல்வாவின் செல்ல பெண் சாஹித்யா. 

சக்தி அணிந்திருந்த அதே நிற பட்டு பாவாடை சட்டையில் ஓவியம் போலிருந்தாள் குழந்தை. 

மகளின் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு, மனைவியின் கைப் பிடித்து கரம் கோர்த்து கொண்டான் செல்வா. 

“ஏன் லேட்?” அவன் கேட்க, “உங்க பொண்ணை ரெடி பண்றதுக்குள்ள நான் ஒரு வழியாகிட்டேன்.. என்னை ஓட விட்டுட்டா, தெரியுமா?.. இவளுக்கு நீங்க தான் சரி” சக்தி போலியான கோபத்துடன் சொல்ல, “என் ரோஜா மொட்டை குறை சொல்லாத சக்தி. உனக்கு திறமை இல்ல..” அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “என்னது?” என்றாள் புருவம் உயர்த்தி, “சும்மா, சக்தி” சிரிப்புடன் சமாளித்தான் செல்வா. அவன் கை அனிச்சையாய் அவன் குரல் வளையை நீவியது. 

“எப்பா, பொண்ணு வந்ததும் எப்படி மாறி போய்டுறீங்க எல்லோரும். மகளுக்காக உலகம் உருண்டை இல்ல, தட்டைன்னு சொன்னாலும் சொல்வீங்க போல” சக்தி புலம்பிக் கொண்டே செல்வாவுடன் நடக்க, அவள் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்தாள் பனிமலர். 

அந்நேரம் அவர்களை நெருங்கியிருந்த வீராவின் கண்கள் மனைவியின் சிரிப்பை பூரிப்புடன் பார்த்தது. 

“மலரே…” மென்மையாய் அழைத்து, அவளின் கைப் பிடித்து நடந்தான் அவன். 

அவர்களை வரவேற்க வெளியே வந்த மதுமிதா, அவர்களைப் பார்த்து, “வாழ்க்கையில் சில விஷயங்கள் என்னைக்கும் மாறாது. நிலையற்ற வாழ்க்கையில் நிலையானது உங்க நட்பும், உங்க மனைவி மேல நீங்க வச்சுருக்க இந்த மரியாதையும், காதலும்‌தான்.. ம்ம்..” என்று புன்னகையுடன் சொன்னாள். 

செல்வா, வீரா முகத்தில் மெலிதான வெட்கப் புன்னகை தோன்றியது. அதில் பேரழகன்களாக தெரிந்தார்கள் அவர்கள். 

“உள்ள வாங்க” மதுமிதா அழைக்க, “ராகவ் எங்க?” என்று அவளிடம் விசாரித்தாள் சக்தி. 

“ப்ச்.” என்று மலர், சக்தியின் கரம் பிடிக்க, நாக்கின் நுனியை கடித்து, “சாரி” என்றாள் சக்தி. 

அதை கவனித்த மதுமிதா, “உங்களுக்கு தெரியாதா அவர் எங்க இருப்பார்னு?” என்று கோபத்துடன் தொடங்கி, “எமர்ஜென்சி ஆப்ரேஷன்னு ஹாஸ்ப்பிட்டல் போய் இருக்கார். ஒரு மணி நேரத்தில் வந்திடுவார்” என்று சொல்ல, அங்கிருந்த மற்றவர்களின் முகத்தில் சங்கடத்தின் சாயல். அதை மறைத்து புன்னகைத்த படி வீட்டினுள் சென்றார்கள் அவர்கள். 

பெண்கள் நால்வரும் இணைந்து குழந்தைகளுக்கு குடிக்க பழச்சாறு தயாரிக்க, ஆண்கள் இருவரும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மிக நெருங்கிய உறவுகளை மட்டுமே பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருந்தார்கள், பின் மாலை பொழுதாகியிருக்க ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். 

மலர் மற்றும் செல்வா, சக்தியின் குடும்பத்தினர்கள் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களை வரவேற்று கவனிக்கும் பொறுப்பை ராகவியின் அப்பா மற்றும் ஐயா, ஆயா பார்த்துக் கொண்டார்கள். 

சமையல் அறைக்குள் இருந்த மதுமிதா, ராகவி இருவரும் மிக பதற்றமாக இருந்தார்கள். அவர்கள் என்னதான் தோழிகளுடன் கலகலவென்று பேசி சிரித்தாலும், வேலைகளை தன் போக்கில் செய்து கொண்டிருந்தாலும் கூட கண்களில் கலக்கம் நிறைந்திருந்தது. 

இருவரின் கணவர்களும் அவர்களின் அலைபேசி அழைப்பை ஏற்காதது தான் காரணம். 

நேரம் ஆறை கடந்திருக்க, ஏழு மணிக்கு விழாவை தொடங்குவதாக முன்னரே தீர்மானித்திருந்தார்கள். 

அதற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருக்க, குழந்தைகளின் அப்பா இன்னும் வீடு வந்திருக்கவில்லை. 

உதய் இருந்தால் சமாளித்து விடலாம், அவனை அனுப்பி ராகவனை சரியான நேரத்திற்கு வீட்டிற்கு அழைத்து வந்து விடலாம் என்று ராகவி நினைக்க, உதயோ வேலையில் மூழ்கியிருந்தான். இன்னமும் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி இருக்கவில்லை அவன்.

“அமைச்சர் கூட முக்கியமான மீட்டிங் மா. அதுக்கு அப்புறம் பிரஸ் மீட் வேற இருக்கு. நான் வர நேரமாகும். பிளீஸ் சமாளி” என்ற கணவனின் குரல் இப்போதும் அவள் காதில் ஒலிக்க, அவளுக்கு கோபமாக வந்தது. 

பத்து வருட கல்யாண வாழ்க்கையில் கணவனின் வேலையை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தாள் அவள். அவனது வேலைப் பளு அவளுக்கு புரிந்திருந்தது. அதன் சிரமங்கள் தெரிந்திருந்தது. நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருந்தததை உணர்ந்திருந்தாள். ஆனாலும், அவளின் சாதாரண எதிர்பார்ப்புகளை அவளால் குறைத்துக் கொள்ள முடியவில்லை. 

இது போன்ற பல நேரங்களில் அவன் இல்லா வெறுமையை இட்டு நிரப்புவதற்குள் அவளுக்கு மூச்சு முட்டிப் போகும். அதிலும் அப்பாவை எதிர்ப்பார்க்கும் பிள்ளைகளின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களின் கேள்விகளை தவிர்க்கும் போது, குழந்தைகளின் முகத்தில் ஆவலை காணும் போது அழுகையை அடக்க பெரும் பாடுபடுவாள் அவள்.

குழந்தைகள் அனைவருக்கும் சாத்துக்குடி பழச்சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அவள் முன்னே நடக்க, பால் மற்றும் பெரியவர்களுக்கான தேநீருடன் அவளோடு இணைந்து நடந்தார்கள் மலர் மற்றும் சக்தி. 

அவர்கள் கூடத்திற்கு வர, “வாவ். யார் வர்றாங்க பாருங்க. அரபு தேசத்து இளவரசி” சக்தி சிரிப்புடன் கத்த, எங்கிருந்து தான் வந்தானோ தெரியாது, கடல் நீல நிற பட்டு பாவாடை சட்டையில் நடந்து வந்து கொண்டிருந்த ஷான்வியை, ஓடி வந்து கைகளில் அள்ளி, ஒரு சுற்று சுற்றி நிறுத்தி அவளின் உச்சியில் முத்தமிட்டான் வீரா. 

பழுப்பு விழிகள் பளபளக்க, பால் பற்கள் அத்தனையும் மின்ன, அவனைப் பார்த்து கிளுக்கி சிரித்தாள் ஆறரை வயது ஷான்வி. 

“பிரின்சஸ் வளர்ந்துட்டா சுஹாம்மா.” குழந்தையின் கன்னம் வருடி சொன்னான் அவன். 

“வாங்க விக்ரம்.” என்றவன், நமுட்டு சிரிப்புடன், “உனக்கு வயசே ஆகாதா யா?” என்று விசாரிக்க, விக்ரம் வெட்க சிரிப்புடன் அவனை தோளோடு அணைத்து விடுவித்து, அவர்களிடம் நலம் விசாரித்தான். 

மலர் ஓடி வந்து சுஹாசினியின் கையில் இருந்த நான்கு மாத சைலேஷை வாங்கிக் கொண்டாள். 

அவனைத் தவிர மற்ற நால்வரும் நீல நிற உடையில் இருந்தனர். சுஹாசினி, ஷான்வி நீல பட்டில் இருக்க, விக்ரம், ஷ்ரவன் இருவரும் பட்டு வேட்டி, நீலநிற சட்டையில் கம்பீரமாக இருந்தனர். 

ஷ்ரவன் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்க, “யுவர் ஹைனஸ்” என்று அவனை சீண்டும் விதமாக அழைத்தான் வீரா. அரபு நாட்டு ‍மன்னர் குடும்பங்களை, அவர்களின் வாரிசுகளை, இளவரசர்களை அழைக்கும் முறை அது. 

ஷ்ரவன் சிரிப்புடன் திரும்ப, அவனையும் தூக்கி சுழற்றி, அணைத்து, அவன் மறுப்புடன் கத்தவும் கீழிறக்கி விட்டான் வீரா. 

“இன்னும் ரெண்டு வருசம் போனா, என் தோளில் கைப் போட்டு நடப்ப போல நீ?” வீரா சொல்ல, ஷ்ரவன், “இப்பவே போடுவேன்” என்று சிரித்து கையை உயர்த்தினான். 

“டேய். நீயுமா? இங்க எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. டேமேஜ் பண்ணாத” என்று கேலியாக சொல்லி, ஷ்ரவனின் தோளில் கைப் போட்டு கொண்டு நடந்தான். 

ராகவன், ராகவி, மலர், சுஹாசினி, செல்வா என நண்பர்களின் மொத்த குடும்பமும் அங்கிருந்தது. மதுமிதாவின் தங்கை வெண்பா கூட சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தாள். ராகவனை காணாத கோபத்தில் முறைத்துக் கொண்டு சுற்றினாள் அவள்.

ஷ்ரவன், உதயதாரா, உதய்நந்தா மூவரும் ஓரிரு மாத வித்தியாசத்தில் ஒரே வயதினராக இருக்க, அவர்களை தொடர்ந்து சில வருட இடைவெளியில் இருந்தார்கள் மற்ற குழந்தைகள். மொத்தம் பனிரெண்டு பிள்ளைகள்.

சுஹாசினியின் பத்து வயது மூத்த மகனில் தொடங்கி அவளின் நாலு மாத மகனில் முடிந்திருந்தது பிள்ளைகளின் வயது வித்தியாசம். ஆனால், பிள்ளைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. அடிக்கடி காணொளி அழைப்பில் பேசுவதால் அவர்களுக்கு ஒருவரையொருவர் நன்கு தெரிந்திருந்தது. 

நேரில் சந்தித்து பேசும் கூச்சமும் பத்து நிமிடங்களில் விலகியிருக்க, தங்கள் உலகில் மூழ்கிப் போனார்கள் அவர்கள். 

கடிகார முட்கள் ஒன்றையொன்று துரத்த நேரம் ஏழு பத்தாகி இருந்தது. 

மதுமிதா அலைபேசியை கையில் பிடித்தபடி, அவஸ்தையுடன் நின்றிருந்தாள். பிள்ளைகளின் பிறந்தநாளை இத்தனை பெரிதாக கொண்டாட திட்டமிட்டு இருக்க வேண்டாமோ என்று காலம் கடந்து கவலையுற தொடங்கியது அவள் மனது. 

அவளுக்கு மயக்க மருத்துவனின் முக்கியத்துவம் தெரியும். அவள் அதனால் தான் கணவனை எதற்கும் இறுக்கிப் பிடிப்பது கிடையாது. ஆனாலும், என்று இப்போது அவள் மனம் சுணங்கியது.

“மது, ராகவ் எங்க?” பால்கனியில் நின்று மழை லில்லிப் பூக்களை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்து கேட்டாள் சுஹாசினி.

“பதில் தெரிஞ்சே கேள்வி கேட்கிறது, நம்ம வீட்ல மட்டும் தான் நடக்கும்” அலுப்பாக சொன்னாள் மதுமிதா. 

அவளுக்கு சுஹாசினியின் மேல் அதிக பிரியம் இருந்தது. அவளும், ராகவனும் மீண்டும் இணைவதற்கு சுஹாசினி முக்கிய காரணமாக இருந்திருக்கிறாள். ராகவனை எப்போதும் யோசிக்காமல் கேள்வி கேட்டு, குடும்பத்தையும் பார்க்கச் சொல்லி அவனை அவ்வப்போது அறிவுறுத்துவாள் அவள். 

இன்றும் அதே அக்கறையுடன் அவள் வந்து நிற்க, மதுமிதா பெருமூச்சுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தாள். 

“நீ போய் குழந்தைகளை ரெடி பண்ணு மது. மத்த எல்லா வேலையும் நாங்க பார்த்தாச்சு. கேக் வந்துடுச்சு. ஆர்டர் பண்ண டின்னரும் வந்தாச்சு. ராகவை கூட்டிட்டு வர செல்வாண்ணாவை அனுப்பி இருக்கேன். கூடவே விக்ரமும் போய் இருக்கார். சோ, ராகவ் இப்போ வந்திடுவான். நீ போய் கிளம்பு” மதுமிதாவின் தோளை பற்றி சுஹாசினி சொல்ல, ஏற்கனவே தயாராகி நின்றிருந்த மதுமிதா, எதிரில் நின்றவளை நன்றியுடன் பார்த்தாள். 

“போ, மது” 

“தேங்க்ஸ் சுஹா” என்றாள் மதுமிதா. 

“என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற நீ?” மூக்கை உறிஞ்சி நாடகத்தனமாக வசனம் பேசினாள் அவள். 

அதற்கு மது சிரிக்க, “ஓடு, ஓடு” என்று அவளைத் துரத்தி விட்டாள் சுஹாசினி.

வீட்டை நிறைத்திருந்த உறவினர்களை பார்த்து, சிரித்து, நலம் விசாரித்துக் கொண்டே அவளின் அறையை நோக்கி நடந்தாள். அவளுக்கு எதிரே வந்த ராகவி, “குட்டீஸை நான் ரெடி பண்றேன் மது” என்றாள்.

“பரவாயில்லை அண்ணி. நான் பார்க்கறேன்” 

“மலர், சக்தி ரெண்டு பேரும் என் கூட இருக்காங்க. அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க. குட்டீஸை நான் ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றேன். குட்டீஸ் என் ரூமில் தான் இருக்காங்க. நீ முதல்ல உன்னை கவனி. முகத்தை சரி பண்ணிட்டு சீக்கிரம் வா” என்று ராகவி தந்தி வேகத்தில் சொல்லி விட்டு நகர, “ஓகே” என்று தங்களின் அறைக்குள் நுழைந்தாள் மதுமிதா. 

அவள் அறைக்குள் நுழையவும், ராகவன் குளியல் அறையில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.

“நீங்க எப்போ வந்தீங்க?” அதிர்ச்சியாக கேட்டாள் அவள். சுஹாசினி விஷயம் அறிந்தே அவளை அனுப்பியது இப்போது புரிந்தது.  

அவள் அதிர்ச்சியுடன் நிற்க, இரு விரல் கொண்டு அவளின் உதட்டை மூடி விட்டு, “என் ட்ரெஸ் எங்க?” என்றான் ராகவ். 

“அது..” என்று திரும்பியவள், “நான் உங்க மேல செம்ம கோபத்துல இருக்கேன்” என்று சொல்ல, அவளை இழுத்து தன் வெற்று மார்போடு சேர்த்து அணைத்தான் ராகவன். 

“அச்சோ. பட்டு சேலை நனையுது ராகவ்” அவளின் கவலையை பார்த்து சிரித்தான் அவன். 

“ஆமா. இல்ல? என்ன பண்ணலாம். சேலையை…” என்று அவன் ஆரம்பிக்க, “யோவ், மயக்க டாக்டர். வந்ததே லேட். இதுல பார்க்கற வேலையை பாருங்க. என் மேலருந்து கையை எடுங்க முதல்ல.” கணவனின் தோளில் கைப் பதித்து அவனை தள்ளி நிறுத்த முயன்றாள். அவளின் முயற்சியை சிரத்தை எடுக்காமல் முறியடித்து அழுத்தமாய் நின்றான் ராகவன். 

“மது..” மென்மையாய் அழைத்தான்.

“என்ன..” என்று அவனை நோக்கி பார்வையை உயர்த்தியவளின் விழிகள் அந்த மயக்க மருத்துவனின் விழிகளில் ஒரு கணம் மயங்க, குனிந்து அவள் கன்னத்தில் ஈரமாய் முத்தம் பதித்தான் ராகவன். 

“ராகவ்” என்று அதிர்ந்து விழித்து, “மயக்க டாக்டரே, இந்த மயக்கற வேலை எல்லாம் உங்க பேஷண்ட்ஸ் கிட்ட மட்டும் வச்சுக்கோங்க” என்று மது எச்சரிக்க, “அவங்களை மயக்க, நான் மயக்க மருந்து கொடுக்கணும் போதை. ஆனா, உனக்கு…” என்று அவன் சாவகாசமாக பேச ஆரம்பிக்க, அவனை ஒரே உதறலில் தூர தள்ளி விட்டு ஓடினாள் மதுமிதா. அவனுக்குத் தேவையான உடைகளை எடுத்து அவனை நோக்கி எறிந்தாள். 

அதை கையில் பிடித்து, உடல் குலுங்க சிரித்தான் ராகவன். அவன் உடை மாற்ற எடுத்துக் கொண்ட நேரத்தில் தானும் தயாராகி நின்றாள் அவள்.

பதினைந்து நிமிடங்களில் அவர்கள் வெளியில் வந்தனர். 

இப்போது நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 

ஒட்டு மொத்த உறவுகளும் கூடத்தில் இருக்க, ராகவனின் கண்கள் நேராக ராகவியை தேடித் தொட்டது. 

உதய் இன்னமும் வந்திருக்கவில்லை. மக்கள் பொதுச் சேவையில் இருப்பவர்களின் நிலை இது தான். அவர்களுக்கு என்று எந்தவித தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கும் அவர்களால் நேரம் ஒதுக்க முடியாது. 

அவர்கள் மனதில் மனைவி, பிள்ளைகள் முதலிடத்தில் இருந்தாலும், அதை வெளிக்காட்ட முடியாது. 

“நாம ஸ்டார்ட் பண்ணலாம் ராகவ். எல்லோரும் வெயிட் பன்றங்க, பாரு” அவனை நோக்கி நடந்து வந்த ராகவி, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள். மெல்லத் திரும்பி மதுவை பார்த்து, “சாரி” என்றாள் அவள். 

“என்ன இது சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு.. அண்ணா இப்போ வந்துடுவாங்க. நாம வெயிட் பண்ணலாம்” மதுமிதா சொல்ல, ராகவி அங்கு கூடத்தில் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை கண் காட்டினாள். அதில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, உதய் தமிழக மக்களிடம் புதிய வீடியோ கேம் ஒன்றைப் பற்றிய விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்துக் கொண்டிருந்தான். 

சிறார்கள் மற்றும் இளம் வயதினருக்கும், அவர்களிடம் அலைபேசி மற்றும் மடிக் கணினி ஆகியவற்றை மேற்பார்வை இன்றி கொடுக்க வேண்டாம் என்று பெற்றோருக்கும் செய்தியாளர் சந்திப்பின் வழியே எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தான் அவன். 

“வாங்க. நாம அவருக்காக வெயிட் பண்ணாம ஸ்டார்ட் பண்ணலாம்” ராகவி சொல்ல, வேறு வழியின்றி அவளோடு நடந்தார்கள் ராகவன், மதுமிதா. 

Advertisement