Advertisement

“ஷோனா, ராகவ் பேசுறார்” மகனுக்கு பாலூட்டி கொண்டிருந்த மனைவியிடம் அலைபேசியை நீட்டினான் விக்ரம்.

“வெயிட்.” என்றவள், மகனை கவனித்து, இருபது நிமிடங்கள் கழித்தே அலைபேசியை வாங்கினாள். 

அதுவரை குழந்தைகள் ராகவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

“சொல்லு ராகவ்”

“எப்படி இருக்க சுஹா? குட்டி பையன் எப்படி இருக்கான்?”

“நல்லா இருக்கோம் ராகவ். அங்க குட்டீஸ் எப்படி இருக்காங்க? மது எப்படி இருக்கா?” ராகவனின் இரட்டை குழந்தைகளை பற்றி விசாரித்தாள் அவள்.

“இங்கேயும் எல்லோரும் நலம். அவங்களுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே வருது. அதுக்கு உன்னை கூப்பிட தான் கால் பண்ணேன். நீயும் சென்னை வந்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல? என் பிள்ளைங்க பிறந்த நாள் சாக்கு சொல்லி வரலாம் இல்ல? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு” அந்த அன்பில் நெகிழ்ந்து, “எனக்கு உன்னை விட, உன் பிள்ளைங்கள தான் பார்க்கணும் அவ்ளோ ஆசையா இருக்கு. இவர் கிட்ட சொல்றேன் நான். கண்டிப்பா வரப் பார்க்கறோம்” என்றாள்.

“நான் விக்ரம் கிட்ட பேசிட்டேன் சுஹா. நீங்க பேசி முடிவு பண்ணுங்க. பிளீஸ், சென்னை வர டிரை பண்ணுங்க. சரியா?”

“ம்ம். சரி”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.”

“என்னது? சொல்லு ராகவ்?”

“நம்ம மங்களூர் ரிசார்ட்டை க்ளோஸ் பண்ண போறாங்களாம்”

“என்னடா சொல்ற?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆமா. உதய் மாம்ஸ் ட்ரிப் பிளான் பண்ணார். அப்போ அவர்கிட்ட ஓனர் சொல்லி இருக்கார்”

“எப்படி டா? ஏன் டா?” வருத்தத்துடன் கேட்டாள். அந்த கடற்கரையோர ரிசார்ட்டில் அவர்களுக்கு கடலலளவு நினைவுகள் இருந்ததே.

“ஓனருக்கு வயசாகிடுச்சு. அவர் பசங்க எல்லாம் வெளிநாட்டில் இருக்காங்க. யாருக்கும் இந்தியா வர்ற எண்ணமில்ல. அதான் வேற வழியில்லாம விக்க போறார் போல. யாரும் வாங்கலைன்னா இழுத்து மூடிடுவேன் சொல்லியிருக்கார்”

“அச்சோ.. இனிமே அங்க போக முடியாதா நாம” அவள் கவலையாக கேட்க, “நீ வா. நாம இப்ப ஒரு ட்ரிப் பிளான் பண்ணுவோம். எல்லோரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்” ராகவன் சொல்ல, “நல்ல ஐடியா தான். உன் பசங்க பர்த்டேக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு இல்ல?” என்று அவள் கேட்க, “எஸ்” என்றான் ராகவன். 

சிறிது யோசனையுடன், “ஓகே” என்றாள். பத்து நிமிடங்கள் அவனுடன் மற்ற விஷயங்கள் பேசி அலைபேசியை வைத்தாள்.

“என்ன பிரச்சனை ஷோனா?” விக்ரம் கேட்க, கணவனுக்கும் செய்தியை சொன்னாள். அவர்களும் குடும்பத்துடன் அங்கு ஒரு முறை சென்றிருந்தனர். 

மனைவி மற்றும் அவளின் நண்பர்களுக்கு அந்த ரிசார்ட் மிக முக்கியமான, நிரம்பவும் பிடித்தமான இடம் என்பதை அவன் நன்கு அறிவான்.

“பிசினஸுல் இது சகஜம் ஷோனா. ரிசார்ட்டை நல்லபடியா நடத்த பொறுப்பான ஆளுங்க இருக்கணும். அது இல்லாம முடியாது. அந்த பெரியவர் முடிவு சரி தான்” என்று விக்ரம் சொல்ல, “ம்ம்” என்றாள் வருத்தத்துடன். 

“ராகவ் பசங்க பர்த்டேக்கு ஊருக்கு போவோமா ஹீரோ? அப்படியே ஒரு முறை மேங்ளூர் போய்ட்டு வரலாம்” அவள் சொல்ல, விக்ரமின் தலையாடினாலும் அவன் கண்கள் யோசனையில் மூழ்கி இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து சென்னை சென்று இறங்கினார்கள் அவர்கள்.

சென்னையில்…

“ராகவ்..” 

மதுமஞ்சரி, மதுரன். இரட்டையர்கள் இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் அழ, உதவிக்கு கணவனைத் தேடினாள் மதுமிதா. 

அவனோ அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். 

“அச்சோ, இந்த மயக்க டாக்டரை கல்யாணம் பண்ணிட்டு.. நான் படுற கஷ்டம் இருக்கே.. இப்போ எங்க கிளம்பிட்டீங்க ராகவ்?” கணவனை கண்களால் எரித்து, புலம்பிக் கொண்டே கேள்வி கேட்டாள். 

“ஒரு எமர்ஜென்ஸி ஆபரேஷன் மது. நாலு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.” பதில் சொல்லிக் கொண்டே, தன் பொருட்களை அவன் தேடியெடுக்க, அவனை முறைத்தாள் மனைவி. 

“நாளைக்கு நம்ம பசங்களுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே. உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்பிட்டு இருக்கு. அப்பவும் இப்படி ஏதாவது பண்ணீங்க. அவ்வளவு தான். நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” மதுமிதா சொல்ல, சிரித்தான் ராகவன். அதற்கு மயங்க மறுத்தாள் அவனின் போதை. 

“நான் நாளைக்கு வீட்ல தான் இருப்பேன் மது. எங்கேயும் போக மாட்டேன். ப்ராமிஸ். ஓகே? இப்போ, ஆச்சியை வரச் சொல்றேன். அவங்க உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.” குனிந்து அவனை முறைத்துக் கொண்டிருந்த மனைவியின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு ஓடினான். வீட்டின் கீழ் தளத்தில் இருந்த ஆச்சியை அவன் பார்க்க, அவன் சொல்லாமலேயே மாடி நோக்கி நடந்து கொண்டிருந்தார் அவர்.

மறுநாள் அதிகாலையிலேயே தன் மூன்று குழந்தைகளுடன் ராகவனின் வீட்டுக்கு வந்து விட்டாள் ராகவி. 

மனைவி, மக்களை விட்டு விட்டு உதய் வேலைக்கு கிளம்ப, “அப்பா பை..” என்று காவல்துறை சீருடையில் இருந்த அப்பாவை பார்த்து கத்தினாள் உதயதாரா. 

“ரொம்ப நேரம் கார்ட்டூன் பார்க்க கூடாது. மது அத்தை கூடவே இருக்கணும். ஆனா, குட்டீஸை ரொம்ப தூக்கக் கூடாது. அம்மா சொன்ன பேச்சை கேட்கணும். ஓகே?” உதய் சொல்ல, அவன் பிள்ளைகள் மூவரும் தலையசைத்து வீட்டுக்குள் ஓடினர். 

“என்ன பட்டே” பட்டு மறைக்காத மனைவியின் இடையில் கை கோர்த்து அவனுக்கு அருகில் இழுத்தான் உதய். 

“ப்ச், உதய்” என்று சலித்தபடி, கணவனை நெருங்கினாள் ராகவி. 

“ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவன் கேட்க, “கொஞ்சம் பதட்டமா இருக்கு. வேற ஒன்னுமில்ல. நீங்க ஈவ்னிங் வேலை முடிச்சு சீக்கிரம் வந்துடுங்க. பிளீஸ். சுஹா கூட அவ்வளவு தூரத்தில் இருந்து மூனு குழந்தைங்களோட நேத்தே வந்துட்டா. ஆனா, நீங்களும், ராகவனும் இங்க இருந்துட்டு வேலைன்னு சொல்லி லேட்டா வந்து சொதப்புனீங்க. அவ்ளோ தான். பிச்சுடுவேன், பிச்சு” மிரட்டினாள் ராகவி. 

“போலீஸையே மிரட்டுற பார்த்தியா?” அவன் கிண்டலாக கேட்க, “அந்த போலீஸ் பொண்டாட்டிக்கு தானே பயப்படுறார்?” கணவனை கண்களால் விழுங்கி அவள் கேட்க, சிரித்தான் உதய். அவளுக்கு எப்போதும் அவனது பணியின் மேல், அந்த சீருடையில் மேல் ஒரு காதல் இருக்கத் தான் செய்தது. அதை அவ்வப்போது கோபத்தில் மறைத்தாலும், இப்படி தருணங்களில் வெளிக் காண்பித்து விடுவாள். 

“நான் மதியம் வந்துடுவேன் பட்டே.” என்றவன், “மத்தவங்க எல்லாம் வந்தாச்சா?” என்று விசாரித்தான். 

“ம்ம். எல்லோரும் வந்துட்டாங்க. அவங்கவங்க வீட்ல இருக்காங்க. மதியம் போல இங்க வருவாங்க” என்றாள் ராகவி. 

“ஓகே. நானும் அதுக்குள்ள வரப் பார்க்கறேன்” சொன்ன உதய், அவனுக்கு அரசு கொடுத்திருந்த காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்தான். உடையை சீர் செய்து, தலையை கைகளால் சரி செய்தவனை, ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி. 

“என்ன?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி, கண்ணடித்து சிரித்தான். ராகவியின் கன்னங்கள் அவள் அணிந்திருந்த ரோஜா நிற சேலையின் வண்ணத்திற்கு மாற, அதை பார்த்து விசில் அடித்தபடி உதய் வாகனத்தை நகர்த்த ராகவி வீட்டினுள் சென்றாள்.

சுஹாசினி தன் மொத்த குடும்பத்தையும் அழைத்து கொண்டு சென்னை வந்திருந்தாள். பயண அசதியில் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 

வெங்கடேஷ் காலையில் எழுந்து கிளம்பி அக்கம் பக்கமிருந்த தன் நண்பர்களை நலம் விசாரிக்க சென்று விட்டார்.

அவர்களுக்கு மலர் வீட்டில் இருந்து அனுபிரியா மதிய உணவு கொண்டு வரவும் தான் கண் விழித்து எழுந்தார்கள். 

“தேங்க்ஸ் அண்ணி” சுஹாசினி சொல்ல, “முதல்ல குளிச்சுட்டு சாப்பிடு வாலு. பச்ச பிள்ளை வச்சுருக்க, சாப்பிடாம இருக்கலாமா?” என்று சடைத்தவர், “சாப்பிட்டு கிளம்பி வாங்க” என்று சொல்லிச் சென்றார். 

விக்ரம் எழுந்ததும் குளித்து விட்டு வந்தான். ஷ்ரவன், ஷான்வி இருவரையும் கவனித்து, சாப்பிட வைத்தான். சுஹாசினி அதைப் பார்த்துக் கொண்டே சைலேஷின் மேல் தன் முழு கவனத்தையும் பதித்தாள். 

மதியம் கடந்து முன் மாலை வந்திருந்தது. சூரியன் உக்கிரம் குறைத்து இதமான காலநிலையை சென்னைக்கு தந்தான்.

அப்பொழுது மிதமான வேகத்தில் பயணித்து வந்து கார் ஓன்று ராகவனின் வீட்டின் முன் வந்து ஒலியெழுப்பி ஸ்மூத் லாண்டிங் செய்தது. 

அந்த காரின் முன் பக்க கதவு திறக்க, பட்டு வேட்டி அணிந்த கால்கள் முன்னே குதித்து இறங்கியது. வேக எட்டுகள் வைத்து மறுபக்கம் சென்று காரின் கதவை திறந்து விட்டது. 

பட்டு வேட்டி, மடித்து விடப்பட்ட மாந்தளிர் நிற சட்டையும் அணிந்திருந்த வீரா, கையை உயர்த்தி, மணிக்கட்டில் இருந்த வெள்ளிக் காப்பை சரி செய்தான். 

“டேய்.. இறங்கு டா” அவன் சத்தம் கொடுக்க, பின் பக்க கதவு திறந்தது. 

பட்டு வேட்டி, அதே மாந்தளிர் நிற சட்டை சகிதம் இம்முறை மூவர் இறங்கினார்கள். 

“என் கையை பிடிங்க மாமா” வீராவின் மகன் சர்வபூரணன் குரலை உயர்த்தி சொல்ல, மீசையை ஒற்றை விரலால் நீவி விட்டுக் கொண்டு, இடக் கரத்தால் தலை முடியை சீர் செய்து, வீராவை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி ஓரெட்டு முன்னே எடுத்து வைத்தான் செல்வகுமார். 

“வாங்க, மாமா” சர்வா சொல்ல, செல்வாவின் கரம் மருமகனின் கையை பற்றியது. அவனின் மறுபக்கம் மாமனை முறைத்துக் கொண்டே கெத்தாக இறங்கி வந்து அப்பாவின் கைப் பிடித்தான் செல்வாவின் மகன் சர்வானந்த். 

வாரிசுகள் இருவரும் அப்பாக்களை போலவே பட்டு வேட்டி சட்டையில் இருந்தார்கள். 

சர்வானந்த் கோபத்துடன் வீராவை முறைத்து தலையை திருப்ப, “என் தங்கமே.. நீயுமா டா?” அவனை நோக்கி கை நீட்டினான் வீரா. அவனோ, பட்டென கோபமாக முகம் திருப்பினான். 

வீரா நண்பனை முறைக்க, “போ…டா” என்று வாயசைத்தான் செல்வா.

அப்போது, “அப்பா” என்று சிறு குரல் மழலையி்ல் அழைக்க, “பூக்குட்டி” புன்னகையுடன் சொன்ன வீராவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி மின்னியது. 

அவன் திறந்து பிடித்திருந்த கார் கதவை இறுக பற்றியிருந்தது இளரோஜா வண்ண கரம் ஒன்று. 

“பூக்குட்டி” அவன் கை நீட்ட, அவனின் இளவரசி அப்பாவிற்கு கண்ணாடி எடுத்து அதை எட்டி ஸ்டைலாக அவனுக்கு மாட்டி விட்டு சிரித்தாள். 

“மாமா, நீங்க கொஞ்சம் குனிங்க” வீராவின் மகன் செல்வாவிற்கு கண்ணாடி அணிவித்து விட்டு, திரும்பி அப்பா மற்றும் தங்கையை பார்த்து முறைத்தான்.

செல்வா நண்பனை பார்த்துக் கொண்டே அந்த கண்ணாடியை ஒரு முறை கழற்றி, சுழற்றி மீண்டும் அணிய, “டேய்.. பிள்ளைங்க முன்னாடி ‍உன்னை திட்ட கூட முடியல டா” பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பினான் வீரா. 

“ஆனந்த், நீயும் கண்ணாடி போடு” சர்வபூரணன், சர்வானந்திடம் சொல்ல, இருவரும் ஒன்றாக கண்ணாடியை அணிந்தனர். 

“வேத்தி கைல பிதி ப்பா” மகள் கட்டளையிட, அவளை கைகளில் அள்ளி, முதலில் காரைப் பூட்டிய வீரா, மகள் சொன்னது போலவே செய்தான். ஒரு காலை பின்னால் உயர்த்தி, வேட்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அவன் நடக்க, அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள் அவனின் இளவரசி, பூங்கொத்து, மூன்று வயது சம்யுக்தா. 

“ப்பா” என்று மகள் மலர்ந்து புன்னகைக்க, வீராவின் கண்களில் மின்னலடித்தது.

வீரா முன்னோக்கி நடக்க, அவனுக்கு முன்னே அவனைப் போலவே நடந்துக் கொண்டிருந்தார்கள் மூவர். செல்வா மற்றும் இரண்டு சர்வாவும்.

“செல்வா..” வீரா அழைக்க, சட்டென திரும்பி, “அம்மா வரவும் உங்களுக்கு இருக்கு ப்பா” என்று அமைதியாக அவனை மிரட்டினான் சர்வபூரணன்.

அதற்கு வீரா முழிக்க, “உன்னை எப்படி ஆஃப் பண்றதுன்னு என் மருமகனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு டா வீரா” செல்வா அட்டகாச சிரிப்புடன் சொல்ல, வீராவின் முகத்தில் மனைவியை நினைத்து வெட்கப் புன்னகை வர, மீசையை நீவியபடி சிரிப்பை மறைத்து நண்பனை முறைத்தான் அவன். 

“அண்ணா வாங்க, வாங்க. செல்லம்ஸ் வாங்க” மதுமிதா அவர்களை வாசலில் வந்து வரவேற்றாள்.

Advertisement