Advertisement

“சுஹா.. சுஹா.. சுஹா… என் அம்மா தான் பெஸ்ட்..” குதித்து கத்திக் கொண்டிருந்தான் ஒன்பது வயது ஷ்ரவன். அவனுக்குப் பக்க வாத்தியமாக, பக்கத்தில் நின்றுக் கொண்டு, “எஸ். தாதா.” என்று அண்ணன் சொன்னதை ஒத்து ஊதினாள் ஐந்தரை வயது ஷான்வி. 

“ஷ்ரவன், வாட்ச் இட்” சுஹாசினி கத்த, தன் கவனத்தை விளையாட்டிற்கு திருப்பினான் ஷ்ரவன். 

“எனக்கு ஆப்போசிட் டீமில் இருக்க நீ. எனக்கு சப்போர்ட் பண்ணாத.” மகனிடம் சொன்னவள், “இந்தாடி, என் ஹீரோவோட அரைக்காப் படி. என்ன, எஸ் தாதா சொல்ற? அண்ணா போல நீயும், அம்மா தான் பெஸ்ட் சொல்லு. பார்ப்போம்” ஆட்டத்தில் கவனம் பதித்துக் கொண்டே சுஹாசினி மகளைப் பார்த்து கத்த, “ம்ஹூம். அப்பா தான் பெஸ்ட்” முகத்தை நிமிர்த்தி அழுத்தமாக சொன்னாள் குழந்தை. கையில் இருந்த பேட்மிட்டன் மட்டையை ஓரமாக வீசி எறிந்து விட்டு மகளை நோக்கி ஓடினாள் சுஹாசினி. 

அதற்குள் ஷான்வியும் ஓட்டமெடுக்க, அவளைத் துரத்திக் கொண்டு பின்னாலேயே ஓடினாள். 

“சுஹா, ம்மா. இங்க வா. கேமை பாதியில் விட்டுப் போகாத” ஷ்ரவன் கத்த, “இருடா வர்றேன். இன்னைக்கு இவளை, அடி வெளுத்துட்டு தான் மறுவேலை.” புள்ளி மானாய் துள்ளி ஓடிக் கொண்டிருந்த மகளின் பின்னேயே ஓடினாள் அவள். 

தேவதையின் வேகத்தில் ஓடி, எதிரே வந்த அப்பாவின் கைகளில் தஞ்சம் புகுந்திருந்தாள் ஷான்வி. 

“ஷோனா, அடிக்க வர்றா ப்பா” குறும்பு சிரிப்புடன் சொன்ன மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, மூச்சு வாங்க அவனுக்கு பக்கத்தில் வந்து நின்ற மனைவியின் தோளில் கைப் போட்டு அவளை பிடித்து நிறுத்தினான் விக்ரம். 

“என் பொண்ணு கிட்ட வம்பிழுக்காம இருக்க முடியாதே உன்னால?” அவன் சிரிப்புடன் கேட்க, “முடியாது” என்றாள் சுஹாசினி.

“அவளை என்கிட்ட கொடுங்க” மூச்சு வாங்க சுஹாசினி கேட்க, அம்மாவுக்கு நாக்கை துருத்தி, மூக்கை சுருக்கி ஒழுங்கு காட்டினாள் மகள். 

“உன்ன…” எட்டி மகளை பிடித்து இழுத்து, அதே வேகத்தில் அவளின் கண்களில் முத்தமிட்டாள். கன்னத்தில் லேசாக செல்லமாக கடித்தும் வைக்க, “ப்பா. பாருங்க ப்பா” சிணுங்கினாள் மகள். 

“உங்கப்பா என்னைக்கும் எனக்குத் தான். என் பக்கம் தான் அரைக்கா படி. என்ன பாருங்க ப்பா?” மகளைப் போலவே சொல்லிக் காண்பித்து, அவளின் கன்னம் கொஞ்சி சொன்னவள், மீண்டும் அவளின் கோலி குண்டு கண்களில் மென்மையாய் முத்தமிட்டாள். 

“இதுக்கு நீ எனக்கே நேரடியா முத்தம் கொடுத்திருக்கலாம்” விக்ரம் மனைவியின் காதில் கிசுகிசுக்க, “என்னமோ, கொடுக்காத மாதிரி தான் பேசுறார்” வெட்கமும், குறும்புமாக சொன்னவளின் கண்கள் மகளில் பதிந்தது. சுஹாசினியின் மினியேச்சர் என்று சொல்லி விடும் அளவுக்கு அவளின் அதீத சாயலில் பிறந்திருந்த மகளுக்கு கண்கள் மட்டும் அப்பாவினது. பளபளத்து ஈர்க்கும் பழுப்பு விழிகள். 

அவளின் இஞ்சி நிற சருமமும், பொலிவும், அந்த பழுப்பு கண்களும், குழந்தைக்கு தேவதையின் சாயலை தந்திருந்தது. 

தமிழும், கோவாவும் கலந்த அழகிய கலவையாக இருந்தாள் ஷான்வி. சுஹாசினிக்கு, கணவனின் கண்களை கொண்டிருந்த மகளின் மேல் அலாதி பிரியம். ஆனாலும், அடிக்கடி அவளுடன் வம்பு செய்யாவிட்டால் அவளுக்கு நேரம் செல்லாது. 

“ஷோனா, கேம் பாதியில் வந்துட்ட பாரு. ஷ்ரவன் கூப்பிடுறான். போ” விக்ரம் சொல்ல, “எல்லாம் இவளால..” மகளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டு, மகனை நோக்கி ஓடினாள் சுஹாசினி. 

அவர்கள் ராஸ் அல் கைமாவில் இருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் இருந்த, ஹோர்ஃபக்கானில் (Khor Fakkan) இருந்தார்கள். கடலையும், மலையையும், பாலைவனத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த அழகிய ஊர் அது. 

அங்கு சமீபமாக தான் பீச் ரிசார்ட் ஒன்றை புதிதாக கட்டியிருந்தான் ஹம்தான். விக்ரமின் கம்பனி தான் இந்த ரிசார்ட் கட்டுமானத்தையும் பொறுப்பேற்று, குறிப்பிட்ட நாளுக்குள் சிறப்பாக கட்டி முடித்து ஒப்படைத்திருந்தது. 

இப்போது அங்கு தான் இருந்தார்கள். 

அவர்கள் மட்டுமல்ல, விக்ரம் மற்றும் ஹம்தானுடன் லண்டனில் படித்த, துபாய், அபுதாபி, ஷார்ஜா, அல்அய்ன் என்று சுற்றி முற்றி அங்கேயே விண்ணைத் தொடும் கட்டிடங்களை எழுப்பிக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தோடு மிகப் பெரிய குடும்பமாக அங்கே ஒன்று கூடியிருந்தார்கள்.

அவர்களில் ஆறு பேர் அந்த நாட்டை சேர்ந்த அரேபியர்கள். மூன்று இந்தியர்கள் மற்றும் ஒருவர் மலேசியாவை பூர்வீகமாக கொண்டவர். இந்தியர்களில் விக்ரம் கோவா, மற்ற இருவர் மும்பை மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். 

ஒரு பக்கம் ஆண்கள் செஸ் விளையாடிக் கொண்டிருக்க, குழந்தைகள் டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் ஆடிக் கொண்டிருந்தார்கள். சுஹாசினி, ஷ்ரவன் இருவரும் பேட்மிட்டனில் எதிரெதிர் அணியில் இருந்தார்கள். 

இங்கு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, பெண்களில் பலர் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசைக்கு ஏற்ப உடலின் ஒவ்வொரு பாகங்களாக அசைத்து அரேபியாவில் புகழ் பெற்ற நடனமான பெல்லி டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள். 

“ஷோனா, ஃபோகஸ்” விக்ரம் கத்த, திரும்பிப் பார்த்து, “எஸ்” என்று ஓங்கி அடித்தாள் சுஹாசினி. 

“ஹேய்.. நாங்க தான் வின் பண்ணோம். போங்க.. போங்க.. எல்லாம் போங்க..” குழந்தைகளோடு குழந்தையாக சேர்ந்து மட்டையை சுழற்றி, சுஹாசினி கத்த, எதிரணியில் இருந்த ஷ்ரவன் முறைத்தபடி அப்பாவிடம் வந்தான். 

“சுஹாவை ஜெயிக்க வச்சுட்டீங்க ப்பா” கோபமாக சொன்னான். 

“ஷி இஸ் அவர் குயின். அவ எப்பவும் வின் பண்ணனும் ராஜா” மகனின் தலையை செல்லமாக கலைத்து சொன்னான் விக்ரம். 

“எஸ் ப்பா” இப்போது மெல்லிய சிரிப்புடன் அம்மாவை பார்த்தபடி அப்பாவிடம் சொன்னான் ஷ்ரவன். உடனே அப்பாவின் தோளில் இருந்து குனிந்து அண்ணனிற்கு ஹை ஃபைவ் கொடுத்தாள் தங்கை. 

அவர்கள் மூவரும் சுஹாசினியை தேடி நடக்க, அங்கே செஸ் ஆடிக் கொண்டிருந்த ஹம்தானுக்கு எதிரே நின்றிருந்தாள் அவள். 

“செக்” என்றாள் சத்தமாக. 

ராணியை நகர்த்தி ஹம்தானின் ராஜாவுக்கு அவள் செக் வைத்திருக்க, “ஓ.. வாவ்” என்று எதிரணி ஆண்கள் கத்த, “விக், யுவர் கேர்ள்.. என்ன பண்ணியிருக்கா பாரு மேன்” இரண்டு கைகளையும் உயர்த்தி, சிரித்துக் கொண்டே விக்ரமிடம் புகார் சொன்னான் ஹம்தான். 

“ஹம்தான், யுவர் ஹைனஸ். உங்க ராஜாவை காப்பாத்துங்க முதல்ல” புன்னகையுடன் அவனிடம் சொன்னாள் சுஹாசினி. 

“யா அல்லாஹ்” புலம்பிக் கொண்டே ஆட்டத்திற்கு திரும்பினான் ஹம்தான்.

“என்ன ஷோனா இது?” விக்ரம் கண்டிப்புடன் கேட்க, “ஆடத் தெரியாதவன் தெரு கோணல்னு சொன்னானாம்” கண் சிமிட்டி சொன்னவள், கணவனின் கையில் மாட்டி விடாமல் இருக்க, பெண்கள் இருந்த பக்கம் ஓடினாள். 

“அப்படினா என்னப்பா மீனிங்?” ஷ்ரவன் கேட்க பதில் சொல்ல முடியாமல் சிரித்தான் விக்ரம். 

இப்போது பெண்களுடன் சேர்ந்து இடையை மட்டும் அசைத்து ஆட முயன்று கொண்டிருந்தவளை பார்க்கையில் அவன் உதடுகள் முழுமையாய் பிரிந்து புன்னகைத்தது.  

“அர்ரே.. பாட்டை மாத்துங்க” என்று ஹிந்தியில் சொன்ன அமர், அங்கே பாலிவுட் பாடலை ஒலிக்க விட்டான்.

“பட்தமீஸ் தில்” சூழலை ஒற்றை நொடியில் மாற்றியிருந்தது. அட்டகாச சிரிப்புடன் பெண்களும் சுழன்று ஆட, ஷ்ரவன் ஓடி வந்து சுஹாசினியுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

“ஓய், தீபிகா. கால் யுவர் ஹீரோ” சுஹாசினியைப் பார்த்து அமர் கத்த, அவள் கண்கள் விக்ரமின் மேல் படிந்தது. 

மகளை கீழே இறக்கி விட்டு விக்ரமும் அவர்களோடு இணைந்து கொண்டான். சிரிப்பும், விசில் சத்தமும் பறக்க, மனைவியின் கைப் பற்றி, சுழற்றி தனக்கு நெருக்கமாக இழுத்து, அவளின் இடை வளைத்து குனிந்தான் விக்ரம். 

“ஓ.. ஓஹோ..” என்ற ஆர்ப்பரிப்பில் கூச்சம் கொண்டு, கணவனின் தோளை பிடித்து ஆட்டத்தை நிறுத்தினாள் சுஹாசினி. அவர்களை சுற்றி ஜோடிகள் இன்னமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“அவுச்…” கணவனின் தோளை அவள் இறுகப் பற்ற, “என்னாச்சு ஷோனா?” பதறினான் விக்ரம். 

“என் கால்.. டுவிஸ்ட்டாகிடுச்சு” வலியில் முகம் சுருங்க சொன்னாள். 

சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருக்க, அவளின் முகத்தில் ஒளிக் கற்றைகள் பட்டு, அவளை இன்னும் மென்மையாக காட்ட, பட்டென குனிந்து மனைவியின் காலைப் பிடித்தான் விக்ரம். 

“ஆஆஆ…” என்றாள் வலி பொறுக்க முடியாமல். 

அவர்களிடம் ஓடி வந்தாள் ஆறு மாத கர்ப்பிணியான ஷனாஸ். 

“என்ன சுஹா?” என்று கேட்டு அவளும் உதவ, சுஹாசினியின் கால் வீங்கத் தொடங்கியிருந்தது.

எமர்ஜென்ஸி கிட்டில் இருந்ததை கொண்டு அவசரத்திற்கு கட்டுப் போட்டு நண்பர்களிடம் விடை பெற்று வீடு திரும்பினார்கள் அவர்கள். 

“ம்மா வலிக்குதா?” குனிந்து அவளின் காலை தொட்ட மகளின் கையைப் பிடித்து தடுத்து, “இல்ல செல்லக் குட்டி. அம்மாவுக்கு ஒன்னுமில்ல” என்றாள் சுஹாசினி. 

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரவன், “அப்பா ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றான். 

“டன் ராஜா” என்ற விக்ரம், கார் ராஸ் அல் கைமாக்குள் நுழைந்ததும் நேராக மருத்துவமனைக்கு முன் சென்று தான் நிறுத்தினான். 

அங்கு மருத்துவரை சந்திக்க, முதலில் தன்னிடம் இருந்த உபகரணங்களால் பரிசோதித்து, “எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திடலாம்” என்று அவர் சொல்ல, அதை எடுக்க சென்றனர். 

“மேம், நீங்க ப்ரக்னன்ட்டா இல்ல தானே?” என்று அங்கிருந்த பெண் விசாரிக்க, “நானா? இல்லையே” அதிவேகமாக பதில் சொன்னாள் சுஹாசினி. 

“ஆமா. எதுக்கு கேட்டீங்க? ஓ, எக்ஸ்ரே எடுக்கவா?.. புரிஞ்சுது..” என்று அவளே கேள்வியும், பதிலுமாக சொல்ல, “எஸ் மேம்” என்றவர், “உங்களுக்கு எப்போ லாஸ்ட் பீரியட்ஸ்?” என்று சந்தேகமாக கேட்க, “அது.. வந்து…” என்று இழுத்தவளுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக அப்படியொன்று நிகழவேயில்லை என்பது அப்போது தான் உறைத்தது. 

“எனக்கு, என் ஹஸ்பன்ட்டை பார்க்கணும்” என்று எழுந்தவள், நொண்டியபடி நடந்து நேராக விக்ரமின் முன் சென்று நின்றாள். 

காலுக்கு வைத்தியம் பார்க்க வந்து, அங்கே கர்ப்பத்தை உறுதி செய்திருந்தார்கள் அவர்கள். 

சுஹாசினி ஒருவித அதிர்வுடன், நம்ப முடியாத பாவனையுடன் அமர்ந்திருந்தாள். வெட்கம், கூச்சம், சங்கடம் என எல்லாம் கலந்த கலவையாக அமர்ந்திருந்த மனைவியை மகிழ்வுடன் பார்த்த விக்ரம், “தேங்க்ஸ், ஷோனா” என்றான். 

“எல்லாம் உங்களால தான். நான் அப்பவே ஃபேமிலி பிளானிங் பண்ணிடலாம்னு சொன்னேன். நீங்க கேட்கவேயில்ல. கவனமா இருப்பேன் சொன்னீங்க. இப்போ பாருங்க” தர்ம சங்கடத்துடன் முகத்தில் அறைந்து கொண்டாள். 

“ஹேய். ஷோனா. என்ன பண்ற நீ?” கோபத்துடன் கேட்டான் விக்ரம். 

“ப்ச். பிளீஸ் ஹீரோ. எனக்கு ரொம்ப ஷையா ஃபீல் ஆகுது. என்ன பண்ண தெரியல” அவள் பயத்துடன் சொல்ல, “என்ன பண்றதா? நம்ம குழந்தை ஷோனா, சந்தோஷமாக வரவேற்போம்” அவன் கோபமாக சொன்னான். 

சுஹாசினி முகத்தில் கலவரம் நிறைந்திருக்க, “ஷ்ரவன், ஷான்வி ரெண்டு பேரும் வளர்ந்துட்டாங்க. இப்போ போய்.. கடவுளே” என்று புலம்பினாள் அவள். எதிர்பாராத ஒன்று நிகழும் போது, அதுவும் குழந்தை போன்ற பெரிய விஷயம், அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்திருந்தது.

“இங்க பாரு ஷோனா. நம்ம குழந்தைங்க ரெண்டு பேரும் நல்லா வளர்ந்துட்டாங்க. அதுனால, நமக்கு இந்த குழந்தையை வளர்ப்பது இனி ரொம்ப ஈஸி”

“என்ன பேசுறீங்க.. இது, மூனாவது குழந்தை ஹீரோ. எப்படி வளர்க்கப் போறோம்?”

“மூனாவதா இருந்தா? அதுக்கு என்ன? உங்க அண்ணா உதய், அவருக்கு மூனு குழந்தைங்க தானே? அப்புறம் நம்ம ஹம்தான், அவனுக்கும் மூனு குழந்தைங்க. அவனை எல்லாம் விட்டா, அஞ்சு பிள்ளை பெத்துப்பான்” 

“அதுக்காக.. அவங்களை மாதிரியே நாமளும்..” என்று அவள் மறுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே சாந்தாம்மாவிடம் இருந்த குழந்தைகள் அவர்களைத் தேடி ஓடி வந்தனர்.

“சுஹா, இப்போ ஓகேவா? இன்னமும் கால் வலிக்குதா?” அக்கறையுடன் ஷ்ரவன் அவளைத் தொட்டு கேட்க, அவனிடம் பட்டென விஷயத்தை போட்டு உடைத்தான் விக்ரம். 

“ஹே சூப்பர். ஜாலி. எனக்குத் தம்பி வரப் போறான். ஷான்வி நம்ம வீட்டுக்கு தம்பி பாப்பா வரப் போறான். நீயும் இப்படித் தான் வந்த, தெரியுமா?..” தங்கையை கைகளில் தூக்கிக் கொண்டு மகிழ்வுடன் கத்தினான் அவன். 

பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 

அடுத்து வந்த ஒரு வாரமும் சுஹாசினி, இரண்டு மனதாக தவித்துக் கொண்டிருக்க, விக்ரம் குழந்தைகளை வைத்தே அவளின் முடிவை மொத்தமாக மாற்றியிருந்தான். 

“ஓகே. தம்பியோ இல்லனா தங்கச்சியோ.. நீங்க மூனு பேரும் தான் வளர்க்கப் போறீங்க. சரியா?” சிரிப்புடன் அவள் கேட்க, மற்ற மூவரும் அவளைக் கட்டிக் கொண்டு சம்மதம் சொல்லி முத்தமிட்டனர். 

அடுத்த ஏழாம் மாதம் ஷ்ரவன், ஷான்விக்கு தம்பி பிறந்தான். 

இப்போது, “சைலேஷ்” என்று குழந்தைகள் அவர்களின் தம்பிக்கு பெயர் தேர்வு செய்ய, “செந்தமிழ் செல்வன் நல்லா இருக்கும்.” என்றாள் சுஹாசினி அப்பாவியாக. 

“உன் பொண்ணு கிட்ட சொல்லு அதை” விக்ரம் புன்னகையுடன் சொல்ல, “அந்த அரைக்காப் படி, என்னைக்கு என் பேச்சை கேட்டு இருக்கா. நீங்க சொன்னா தான் கேட்பா” என்று முகத்தை சுருக்கினாள் அவள். 

“சரி, அவகிட்ட நான் பேசுறேன்” விக்ரம் சொல்ல, “இல்ல ஹீரோ, வேண்டாம்” கணவனின் கைப் பிடித்து தடுத்தாள்.

“சைலேஷ்” என்ற பெயர் விக்ரமின் அண்ணன், நீலேஷின் நினைவாக இருக்கட்டும் என்று அவளுக்கும் தோன்ற அந்தப் பெயரையே குழந்தைக்கும் வைத்தார்கள்.  

விக்ரமின் தொழில் இப்போது ஐந்து மடங்காக பெருகி இருந்தது. அந்த நாட்டின் பெயர், புகழ் சொல்லும் கட்டிடங்கள் பலவற்றை அவனது நிறுவனம் தான் எழுப்பியிருந்தது.

வேலை அவனது கழுத்தை நெரித்தாலும், அவனுக்கு வாழத் தெரிந்திருந்தது. குடும்பத்தை எப்போதும் முன்னே வைத்தான் அவன். 

இங்கு ஒவ்வொருவருக்கும் சொந்தம், பந்தம் என்று ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், அவனுக்கு எல்லாமே அவனது மனைவி மற்றும் குழந்தைகள் தான் எனும் போது, அவர்களை முன்னிறுத்தி தான் அவன் வாழ்க்கையே இருந்தது. 

Advertisement