Advertisement

இப்பொழுது ஒன்பதாம் மாத தொடக்கத்தில் இருந்தாள். 

“எப்படி ஃபீல் பண்ற ஷோனா? கால் வலிக்குதா? தூக்கம் வரலையா?” மனைவியின் மேடிட்ட வயிறில் கைப் பதித்து, குழந்தையின் அசைவை உணர்ந்து பழுப்பு விழிகள் மின்ன புன்னகைத்து கேட்டான் விக்ரம். 

“ம்ம். தூக்கம் வரல ஹீரோ” சுஹாசினி மலைப்பாம்பு போல நெளிந்துக் கொண்டே செல்ல, படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து, மனைவியை தன் மேல் சாய்த்து, “தூங்கு ஷோனா. அப்போ தான் என் பொண்ணும் தூங்குவா” என்றுச் சொன்னான் அவன். 

“அப்போ நான் முக்கியமில்ல உங்களுக்கு. அப்படித் தானே?” மூச்சை பிடித்துக் கொண்டு முகம் சுருக்கி கோபமாக கேட்டாள். 

“யூ ஆர் மை எவ்ரிதிங் ஷோனா. நீயில்லாம..” மனைவியின் முகம் போன போக்கில் பேச்சை நிறுத்தினான் விக்ரம்.

“ஷோனா, என்னாச்சு? என்ன பண்ணுது?” அவன் பதற, பேச முடியாமல், வலியில் மூச்சடைக்க, அவன் கரத்தை இறுகப் பற்றினாள் சுஹாசினி. 

மனைவியை கைகளில் ஏந்தப் போனவனுக்கு கைகள் நடுங்க, அவளை தூக்கி நிறுத்தி, கைத் தாங்கலாக காருக்கு அழைத்துப் போனான். அதற்குள் வலியில் துடித்துப் போனாள் சுஹாசினி. 

“பிளீஸ், ஷோனா. பொறுத்துக்கோ. இதோ, இப்போ ஹாஸ்ப்பிட்டல் போய்டலாம்” அவளை காரில் அமர்த்தி விட்டு, வெங்கடேஷ், சாந்தாம்மாவிடம் தகவல் சொல்லி விட்டு, வீட்டின் பக்கத்திலேயே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். 

அந்த மருத்துவமனை விதிகள் அவனுக்கு சாதகமாக இருக்க, அவனையும் பிரசவ அறைக்குள் அனுமதித்தார்கள். 

சுஹாசினி வலியில் துடித்து கதற, இவனுக்கு உயிர் துடித்தது. 

“ஷோனா.. ஷோனா.. நான் இருக்கேன். அழாத, பிளீஸ். அவ்ளோ தான். புஷ்” அவளோடு சேர்ந்து அவனும் கத்திக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. 

விக்ரம் கிளம்பும் போதே ஹம்தானுக்கு தகவல் சொல்லியிருக்க, ஷ்ரவன், வெங்கடேஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்து விட்டான் அவன்.

நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சுஹாசினி அயர்ந்து கண்ணை மூடப் போன கணம், “ஷோனா..” என்று விக்ரம் கத்த, “சுஹாசினி, டிரை பண்ணுங்க.” மகப்பேறு மருத்துவர் மறுபக்கம் சொல்ல, “முடியல விக்ரம்” என்றவள், அவன் கரத்தை இறுக்கமாக பற்றி, கண்ணை மூடி உயிரை வெளியில் தள்ளி கண்ணை மூட, அவர்களின் தேவதை பிறந்தாள்.

“பேபி கேர்ள் ஷோனா” அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், மகளை கையில் வாங்கிய நொடி, பழுப்பு விழிகள் தளும்பி நின்றன. 

சுஹாசினி புன்னகைத்து, கணவனிடம் இதுவரை கண்டிராத மகிழ்வை அதிசயமாக பார்த்தபடி மெல்ல கண் மூடினாள். 

சுக பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீடு திரும்பியிருந்தார்கள். 

“பாப்பா.. பாப்பா…” கண் மூடி உறக்கத்தில் இருந்த குட்டித் தங்கையை, தொட்டு தொட்டு பார்த்துச் சிரித்தான் ஷ்ரவன். 

எப்போதும் தங்கையின் பக்கத்திலேயே இருந்தான் அவன். இப்போது தான் பள்ளிச் செல்ல (Play school) தொடங்கியிருந்தான். தங்கையை பிரிந்து செல்ல அடம் செய்து அழுது, மதியம் அவளைக் காண ஆவலாக ஓடி வருபவனை பார்க்கையில் சுஹாசினிக்கு தாயாக சிறந்த தருணங்கள் அவை.

அனுதினமும் மகளை பொக்கிஷமாக கைகளில் ஏந்திக் கொண்டிருந்த கணவனை பார்க்கையில் அவளுக்கு அப்படியொரு நிறைவு. 

மகளுக்கு பெயர் சூட்டும் நாளும் வர, “ஷான்வி” என்றான் விக்ரம். 

“செந்தமிழ் செல்வி” என்றாள் சுஹாசினி. விக்ரம் அவளை முறைக்க, “உங்களை வம்புக்கு இழுக்கலன்னா.. எனக்கு எப்படி தூக்கம் வரும்? ஆனாலும், செந்தமிழ் செல்வி எவ்வளவு நல்ல பேர் தெரியுமா?” என்று அவள் கண் சிமிட்டி சொல்ல, “சரி. அதையே வைப்போம்” என்றான் விக்ரம். 

“இல்ல. நீங்க தான் இப்போ ஓரளவு நல்லா தமிழ் பேசுறீங்களே. அதுனால மன்னிச்சு விடுறேன். உங்க மகளுக்கு உங்க இஷ்டப்படி பேர் வைங்க” அவள் கெத்தாக சொல்ல, சிரித்தான் விக்ரம். 

மகளுக்கு, “ஷான்வி” என்று ஒருமனதாக, பர்துபாய் கோவிலில் வைத்து பெயர் சூட்டினார்கள். 

ஷான்வியும் இப்போது நான்கு மாதங்களை கடந்திருந்தாள். மூன்றரை வயதான ஷ்ரவன், தங்கையின் பக்கத்தில் அமர்ந்திருந்தான். 

“ஷோனா..” விக்ரம் அதட்ட, “நான் வரல.. நான் வரல.. நான் வரல…” என்று கண்ணையும், காதையும் மூடி கத்திக் கொண்டிருந்தாள் சுஹாசினி. 

அவளின் கையை பிரித்து எடுத்து, “நாலு மாசமா வீட்லயே இருக்க ஷோனா. ஒரு மாறுதலுக்கு வெளில போய்ட்டு வரலாம். பிளீஸ்” விக்ரம் கெஞ்ச, “இன்னும் ஒரு மாசம் போகட்டும் ஹீரோ” பதிலுக்கு கெஞ்சினாள் சுஹாசினி. 

“உனக்கு எப்பவும் என் கூட சண்டை போடணுமா?”

“உங்களுக்கு எப்பவும் என்னை சண்டை போட வைக்கணுமா?”

“ராக்சஷின்”

“பூனைக் கண்ணு” விக்ரமின் வேதாளம் கோபிக்க, கை நீட்டி மனைவியை பக்கத்தில் இழுத்து அணைத்தான். 

“பிளீஸ், ஷோனா”

“முடியாது…”

“சரியான ஜெர்ரி நீ” அவன் கோபத்துடன் சொல்ல, “டாம் அன்பா இருந்தா ஜெர்ரி ஏன் வம்பு பண்ண போகுது?” என்று எதிர்கேள்வி கேட்டாள் சுஹாசினி. 

விக்ரம் முறைக்க, சிரித்தாள் சுஹாசினி.

குறும்பு சிரிப்பில் அவளின் தெற்றுப் பல் எட்டிப் பார்க்க, அதை முத்தமிட்டு விடாமல் இருக்க உதடு கடித்தான் விக்ரம்.

“ப்பா.. பாப்பா விழுந்துட்டா” கத்தினான் ஷ்ரவன். 

அந்த சத்தத்தில் இருவரும் தங்களின் சண்டையை மறந்து அடித்துப் பிடித்து திரும்பிப் பார்க்க, குப்புற விழுந்து தலை தூக்க முயன்று கொண்டிருந்தாள் ஷான்வி. 

சுஹாசினி, விக்ரம் இருவருக்கும் ஷ்ரவன் தங்களின் திருமண இரவில் குப்புற விழுந்தது நினைவு வர சத்தமாக சிரித்தனர். அதைப் பார்த்து ஷ்ரவனும் சிரிக்க, அவர்களின் தேவைதையும் எச்சில் ஒழுக, பொக்கை வாய் மலர்ந்து சிரித்தாள். 

விக்ரம் இரண்டே எட்டில் மகளை நெருங்கி அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான். 

ஷ்ரவன் எழுந்து சுஹாசினியை இடையோடு சேர்த்துக் கட்டிக் கொள்ள, கை நீட்டி மனைவி, மகனை இழுத்து, தன்னோடு சேர்த்தணைத்தான் விக்ரம். 

மனைவியின் உச்சியில் மென்மையாய் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவன் முகம் பார்த்து புன்னகைத்தாள் சுஹாசினி.

அவர்களை வாழ்வு எவ்வளவோ சோதித்திருக்கிறது. அவை அத்தனையும் கடந்து, புன்னகையுடன் நின்றார்கள் அவர்கள். 

அவர்களுக்கு நடுவில் பல வேறுபாடுகள். 

எதிர் எதிரே நின்றாலும் ஒரு நாளும் எதிரியாக நின்றதில்லை அவர்கள். 

அனுதினமும் சண்டையிட்டாலும், அடுத்த கணமே சமாதானமாகும் குணம் அவர்களுக்கு இருந்தது. 

எல்லாவற்றையும் விட அவர்கள் ஒருவரையொருவர் நிபந்தனைகள் இன்றி நேசித்தார்கள். இனியும் நேசிப்பார்கள். அவர்களுக்குள் நேசம் இருக்கும் வரை எத்தனை வேறுபாடுகள் குறுக்கே வந்தாலும், அதை பெரிதுப்படுத்தாமல் கடந்து விடுவார்கள் அவர்கள். 

சுஹாசினி, விக்ரம் இருவரின் நேசமும் அவர்களின் வாழ்வை நித்தமும் பரிபூரணமாக்கும். 

நிறைந்தது!!!

சுபம்!!!

Advertisement