Advertisement

அடுத்த நான்காம் நாள், வெங்கடேஷ் சென்னை சென்று விட்டார். ஒரு மாதம் கழித்து பேரனின் முதல் பிறந்த நாளை கொண்டாட மீண்டும் ராஸ் அல் கைமா வந்தார் அவர். 

அவர்களின் உறவுகள் அனைத்தும் இந்தியாவில் இருக்க, ஹம்தான் குடும்பத்தையும், விக்ரமின் மற்ற நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தையும் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தார்கள். மேலும், அவர்களின் அலுவகத்தில் பணிபுரியும் அனைவரையும் அழைத்திருந்தார்கள்.

அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே தேவையான ஏற்பாடுகள் செய்து மிகச் சிறப்பாக ஷ்ரவனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

அதற்கடுத்து வந்த நான்காம் மாதம், அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை சுஹாசினியின் அப்பா நேரில் வந்து வாழ்த்த, நண்பர்கள் அலைபேசியில் வாழ்த்த, வீட்டிலேயே எளிமையான உணவுடன் கொண்டாடினார்கள். 

“ஷோனா, இது உனக்கான கிஃப்ட் தான். ஆனா, எனக்காக போட்டுப்பியா, பிளீஸ்?” உள்ளங்கையில் இருந்த நகைப் பெட்டியை மனைவியின் முன் நீட்டினான் விக்ரம். கணவன் ஏற்கனவே பல பரிசுகள் கொடுத்திருக்க, இப்போது அவள் முன் நீட்டப்பட்டதை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் அவள். 

“நான் உங்களுக்கு பிரேஸ்லெட் கொடுத்தேன். அது போல நீங்களும் ஏதாவது வாங்கினீங்களா?” அவள் கேட்க, “வி.எஸ்” என்ற ஆங்கில எழுத்துகள் இரண்டும் பின்னிக் கொண்டிருந்த கைச் சங்கிலியை, மனைவியின் பரிசை புன்னகையுடன் வருடினான் விக்ரம். 

“ஷோனா, இதை எடுத்து பிரிச்சு, பாரு” அவன் மென்மையாக சொல்ல, அதை வாங்கி ஆவலாக பிரித்தாள். 

அதனுள்ளே விக்ரமின் குடும்பத்தினர் அணியும் மங்கல சங்கிலி, அவர்கள் வழக்கத்திலான திருமாங்கல்யம் இருக்க, மெல்ல அதை வருடியபடி கணவனைப் பார்த்தாள். 

சிறிய கருக மணிகள் கோர்த்த சின்ன சங்கலியின் நடுவில், பொடி வைரங்கள் அழகாக பதிக்கப்பட்டு, பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது. கணவனின் கையில் சங்கலியை கொடுத்து, திரும்பி அமர்ந்து, குனிந்து கழுத்தை காண்பித்தாள் சுஹாசினி. 

“தேங்க்ஸ் ஷோனா” அழுத்தமாய் முத்தமிட்டு, மனைவியின் கழுத்தில் அதை அணிவித்து, நன்றி சொன்னான் விக்ரம்.

ஒரு வருடம் ஒரு நொடியைப் போல ஓடி மறைந்திருந்தது. 

ஷ்ரவனுக்கு இரண்டரை வயதாகி இருந்தது. 

இப்போது எந்தவித தயக்கமும், அழுத்தமும் இன்றி அவனை தங்களின் முழு மனதோடு, தங்களின் முதல் குழந்தையாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்‌ அவர்கள். அது மிக இயல்பாக நடந்திருந்தது. ஷ்ரவனை பொறுத்தவரை அவன் பெற்றோர் அவர்கள் தான். நாளையே அவனுக்கு உண்மை தெரிந்து அது மாறலாம். ஆனால், அதற்காக அவர்களை அவன் நேசிக்காமல் இருக்கப் போவதில்லை. அவனது பிரியம் கூடுமே தவிர குறையும் என்று அவர்களுக்கும் தோன்றவில்லை. 

நாளை அவர்களுக்கு என்ன வைத்திருந்தாலும், சரி தான். இன்றைய நாளை அப்படியே வாழக் கற்றிருந்தனர் அவர்கள் இருவரும். 

இரண்டரை வயதான ஷ்ரவன், சுஹாசினியை ஓட வைத்துக் கொண்டிருந்தான். அவள் அளவு இல்லையென்றாலும், பேசத் தொடங்கியிருந்தான். ஆனால், அவனுக்கும் மொழித் தகராறு இடையில் வந்து தடைப் போட்டது. தமிழ், கொங்கனி, ஆங்கிலம் என்று கலந்துப் பேசினான் அவன். 

சுஹாசினி அது குறித்து கவலை கொள்ள, “விடு ஷோனா. நிறைய மொழி தெரிஞ்சவனா வரட்டும் நம்ம பிள்ளை” என்று சமாதானம் கூறி, மனைவியை சமாளித்தான் விக்ரம்.

அன்று அவரச அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.

“ஷோனா, என் ஃபோன் எங்க பார்த்தியா?” அவன் தமிழில் கேட்க,

“என்னைக் கேட்டா?” என்றவள்,

“மக்கா கபர் நா (I don’t know)” என்று கொங்கனியில் பதில் சொல்ல, 

“அப்பா, எங்க? அம்மா தெதியாது?” என்று தமிழில், மழலையில் சொன்னான் ஷ்ரவன். 

“என் செல்லமே” என்று ஓடிப் போய் அவனைத் தூக்கி முத்தமிட்டாள் சுஹாசினி. 

“என்ன தெரியாதுன்னு சொல்ற?” என்று மனைவியை முறைத்து, “பருப்பு.. ச்சே.. பொறுப்பு இருக்கா உனக்கு. கொஞ்சம் இல்ல?” விக்ரம் சொல்ல,

“ஆமா. பொறுப்பு கொஞ்சமும் இல்ல. நீங்க என்னை கொஞ்சவும் இல்ல, பூனைக் கண்ணா.” குழந்தையோடு நெருங்கி கணவனை பூனையாய் உரசினாள். 

“ஆபீஸிக்கு டைமாகுது ஷோனா. நீ இன்னைக்கு ஆபீஸ் வரலன்னதும், எனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வைக்கல. பாரு” வார்த்தைகளில் இருந்த கோபம், அவன் குரலில் இல்லை. மனைவியின் இடுப்பில் கரம் கோர்த்து, அணைத்தான். 

“இது என்ன?” அவனுடன் இழைந்தபடி டிரெஸ்ஸிங் டேபிளின் மூலையில் இருந்த அவனது அலைபேசியை எடுத்து நீட்டினாள் அவள். 

“தேங்க்யூ” மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான். பட்டென அவன் முகத்தில் அடித்தான் ஷ்ரவன். 

சுஹாசினி உதடு கடித்து குறும்பாக சிரிக்க, “என் ராஜா குட்டிக்கு கோபத்தை பாரேன்” என்று மகனின் கன்னம் பற்றி, மீசை உரசி அவனுக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்து, மகனை முத்தமிட்டு சமாதானம் செய்து, அலுவலகம் கிளம்பினான் விக்ரம். 

“ஷோனா, வெளில போறேன் சொன்னல்ல? கவனமா ட்ரைவ் பண்ணு. ராஜாவை வீட்லயே விட்டுட்டு போ. அவனை கூட்டிட்டு போனா, உன்னை ஷாப்பிங் பண்ண விட மாட்டான்” விக்ரம் எச்சரிக்க, “ஓகே. டன் ஹீரோ” என்றாள் சுஹாசினி. அவனிடம் வாக்குவாதம் செய்யாமல் உடனேயே சரி என்ற மனைவியை சந்தேகமாக பார்த்தான் விக்ரம்.

“எனக்கு கால் பண்ணு. என் கூட பேசிக்கிட்டே ஷாப்பிங் பண்ணு. ஓகே?” அவன் கேட்க, அவனை முறைத்து மண்டையை ஒரு மார்க்கமாக அசைத்து வைத்தாள் சுஹாசினி. 

கணவன் கிளம்பிய அரை மணி நேரத்தில் அவளும் வெளியே கிளம்பி விட்டாள். 

வீட்டு உபயோகத்திற்கு என்று இருந்த காரை எடுத்துக் கொண்டு சென்றாள். 

நகரின் மையத்தில் இருந்த ஷாப்பிங் மாலில் நுழைந்தவளுக்கு, அங்கு கூட்டமே இல்லை என்றாலும், மூச்சு முட்டும் உணர்வு வர திணறிப் போனாள். சில நாட்களாகவே அவளுக்கு சரியான தூக்கமில்லை, உடலில் ஏதோ சிறிய மாற்றம் உணர முடிந்தது அவளால். அவளுக்கு

மிகப் பிடித்த உணவை கூட உண்ண முடியாமல் குமட்டலும் இருக்க, வேலைகளுக்கு நடுவில் அதைப் பெரிதுப்படுத்தவில்லை அவள். 

மறுநாள் கணவனுக்கு பிறந்தநாள் என்பதால், அவனுக்கு தெரியாமல் பரிசு வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினாள் அவள். அதனாலேயே அவன் துணையின்றி தற்போது வெளியில் வந்திருந்தாள். 

“என்ன வாங்கலாம்?” என்று அவள் கண்கள் கடைகளை ஆராய, உடலோ சோர்ந்து அவளைச் சோதித்தது. 

அவளுக்கு கண்களை இருட்டி கொண்டு வரும் உணர்வு, காலையில் கணவனுடன் அமர்ந்து குடித்த ஆரஞ்சு பழச்சாறு இப்போது வெளியில் வந்து விடுவேன் என்று மிரட்ட, பெண்களுக்கான அறையை கண்களால் தேடினாள். 

பத்து நிமிடங்கள் கழித்து கணவனுக்கு எதுவும் வாங்காமலயே காரை நோக்கி நடந்தாள் அவள். 

அவள் மனது அலைக்கழிந்துக் கொண்டிருந்தது. கடந்த முறை போல கணவனை ஏமாற்ற விரும்பவில்லை அவள். 

அவள் மனத்தில் இருக்கும் சந்தேகம் சரியென்றால், இதையே கணவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து விடலாம் என்று நினைத்தவள், நேராக மருத்துவமனைக்கு காரை செலுத்தினாள். 

இரண்டு மணி நேரங்கள் கழித்து வெளியே வருகையில், உலகமே தன் உள்ளங்கையில் இருப்பதைப் போல மகிழ்வுடன் ஏறி காரில் அமர்ந்தாள். 

அன்றைய இரவு, “எதுக்கு வெளில போன ஷோனா? என்ன வாங்கின?” என்று விக்ரம் கேட்க, “ஜஸ்ட் வீட்டு மளிகை, ஷ்ரவனுக்கு, உங்களுக்கு தேவையான திங்ஸ்..” அவள் சொல்ல, “வீட்டு மளிகை? அதை வாங்க நீ போனியா?” விக்ரம் புருவம் சுளித்து கேட்க, “ஆமா. நான் வாங்கினா, என்ன தப்பு?” என்று சமாளித்து, அவள் திரும்பிப் படுக்க, “ராட்சசி” என்று மனைவியை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான் விக்ரம். 

நள்ளிரவில், “விக்ரம்” என்று சுஹாசினி மென்மையாக அழைக்க, “என்ன ஷோனா?” அனிச்சையாய் அவன் கரம் நீண்டு மனைவியை தேட, “ஹேப்பி பர்த்டே மை ஹீரோ” என்று சிரிப்புடன் வாழ்த்தினாள் சுஹாசினி. 

மெல்ல கண்களை திறந்து, “தேங்க்யூ ஷோனா” என்றான். மனைவியை பக்கத்தில் இழுத்தான். அவன் கன்னக் குழியில் அழுத்தமாக முத்தமிட்டு, “சர்ப்ரைஸ்” என்று சொல்லி, அவன் கையில் பொன் காகிதம் சுற்றப்பட்ட பரிசு பொருளை கொடுத்தாள் சுஹாசினி.

“ஹேய் ஷோனா.. என்னது இது? வாவ்..” என்று சொல்லிக் கொண்டே பிரித்தவனின் பழுப்பு விழிகள் அப்படியே விரிந்துக் கொண்டது. 

ஒரு கணம் பேச்சு மறந்துப் போனான் விக்ரம். 

“விக்ரம்.. ஹீரோ..” சுஹாசினி மெல்ல அவன் தோள் தொட, மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். 

“தேங்க்யூ. பெஸ்ட் கிஃப்ட் எவர்” என்றான் உணர்ச்சி மிகுதியில். மனைவியின் முகத்தை முத்தத்தால் நிறைத்தான்.

மீண்டும் தன் கைகளில் இருந்ததை பிரித்துப் பார்த்தான். பட்டு ரோஜா நிறத்தில் குட்டியாய் கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவி இரட்டை கோடுகளுடன் அவன் கையில் இருந்தது. மகிழ்வில் விரிந்தது அவன் நெஞ்சம்.

அதனுடன் மருத்துவ அறிக்கையும் இருக்க, இம்முறை, “பாசிட்டிவ்” என்றது முடிவு.

“ஹீரோ, இன்னொரு முறை அப்பாவாக போறார்” சுஹாசினி சொல்ல, “என்னால நம்பவே முடியல ஷோனா. எவ்வளவு தூரம் வந்துட்டோம் இல்ல? அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ஐ லவ் யூ சுஹாசினி.” கரகரத்த குரலில் சொன்னவன் இறுக்கமாக மனைவியை கட்டிக் கொண்டான்.

மறுநாள் மனைவியை அவனே மருத்துவமனை அழைத்து சென்றான். மருத்துவரை சந்தித்து, ஸ்கேன் செய்து கர்ப்பத்தை மீண்டும் உறுதி செய்து, மருத்துவ ஆலோசனை பெற்று, வீடு திரும்பினார்கள்.

உடனேயே உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துக் கொண்டான் விக்ரம். 

வெங்கடேஷ் அதற்கு மேல் சென்னையில் இருக்க விரும்பாமல், விருப்ப ஓய்வு பெற்று நிரந்தரமாக மகளிடம், மகளைப் பார்க்க என்று இங்கு வந்து விட்டார். 

ஹம்தானின் குடும்பமே அன்றிரவு அங்கு வந்து விட்டார்கள். வாழ்த்து மட்டும் சொல்லாமல், உணவு, பரிசு பொருட்கள் என்று அவர்களை நிறைத்தனர். அவர்களின் அன்பில் திக்கு முக்காடிப் போனாள் சுஹாசினி. 

அவர்கள் ஷ்ரவனிடம் தயங்கியபடி செய்தி சொல்ல, “பேபி வதா ப்பா? குத்தி பாப்பா? எப்தி வரும்?” என்று சந்தேகம் கேட்டான் குழந்தை. 

“பாப்பா இப்போ அம்மா வயித்துல இருக்கா. பத்து மாசம் கழிச்சு வருவா” விக்ரம் சொல்ல, “சுஹா வயித்துலயா ப்பா?” என்று கோலி குண்டு கண்களை உருட்டியபடி ஷ்ரவன் அடுத்த கேள்வியை கேட்க தயாராக, விக்ரமும் பதில் சொல்லத் தயாராகினான். 

அரை மணி நேர கேள்வி பதில் அமர்வு முடிந்து, “சுஹா. குத்தி பாப்பா வர போதா?” என்றவன், எம்பி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்டாள் சுஹாசினி. அவனின் ஒப்புதல் கூட அவளுக்கு மிகவும் முக்கியமாகி இருந்தது. 

வெங்கடேஷ் மற்றும் அவளின் நண்பர்கள் அழைப்பது பார்த்து குழந்தையும் அவளை, “சுஹா” என்றே அழைத்தான். அடிக்கடி அம்மாவும் எட்டிப் பார்க்கும். 

விக்ரம் மனைவியை, மகனோடு சேர்த்து அணைத்து கொண்டான். 

சுஹாசினியை விக்ரம் ஒரு பக்கம் தாங்கினான் என்றால், ஹம்தானின் வீடு அவளை கண்ணில் வைத்து பார்த்துக் கொண்டனர். இத்தனைக்கும் ஹம்தானின் மனைவி ஷனாஸிற்கு குழந்தை பிறந்து, ஐந்து மாதங்கள் தான் ஆகியிருந்தது. இருவரையும் ஒன்றுப் போல கவனித்தார்கள் அவர்கள். 

விக்ரம் மாதம் தவறாமல் மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்றான். 

ஏழாம் மாதம் அவர்கள் வீட்டில் வைத்தே நண்பர்களின் குடும்பங்களை அழைத்து தமிழ் பாரம்பரிய முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு கூட செய்தான். 

சுஹாசினி கர்ப்ப காலத்தை அதன் அத்தனை அசௌகரியங்களையும் அனுபவித்து, ரசித்து நகர்த்தினாள். அதற்கு பெரும் துணையாக நின்றது அவள் குடும்பம். 

Advertisement