Advertisement

அதிகாலையில் விழித்து விட்டான் விக்ரம். மனைவியின் உடல் சூடை பரிசோதிக்க, காய்ச்சல் குறைந்து சில்லென்று இருந்தது அவள் உடல். அவளுக்கு போர்வையை சரியாக போர்த்தி விட்டவனின் கரங்களை பற்றி தன் கன்னத்தில் பதித்து சுஹாசினி தன் உறக்கத்தைத் தொடர, “ராக்சஷின்” என்று ரசனையாக முணுமுணுத்தான் அவன். 

மறுகரத்தால் அவள் முகத்தில் இருந்த முடிக் கற்றைகளை ஒதுக்கி விட்டு, “அழகி” என்றான். மெல்ல கண் விழித்து, தெற்றுப் பல் தெரிய சிரித்து, மீண்டும் கண் மூடினாள். மனைவியை இழுத்து அணைக்க போன கரங்களை அவன் வலுக்கட்டாயமாக பின்னிழுக்க வேண்டியிருந்தது. 

முன் தினம் அவள் செய்த கலாட்டாவை நினைக்கும் போது, இப்போது கோபத்திற்கு பதில் அவனால் புன்னகைக்க முடிந்தது. அந்த பெரிய எதிர்பார்ப்பும், அதனால் வந்த மிகப் பெரிய ஏமாற்றமும் அவர்களுக்கு ஒரு பாடமென எடுத்துக் கொண்டான் அவன். 

ஷ்ரவன், அவர்கள் வாழ்வில் முக்கியம் அங்கம். அவனால் தான் இருவரும் இணைந்தது. அவர்கள் வாழ்வின் தொடக்கமே அவன் தான். அவனால் தான், அவர்கள் திருமண பந்தத்திற்குள் நுழையும் போதே பெற்றோர்களாக நுழைந்தது. அந்தப் பொறுப்பை இன்னும் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும் என்று இந்த நொடி உறுதி பூண்டான் அவன். 

நாளை தங்களின் சொந்தக் குழந்தை வரும் முன், ஷ்ரவனை எல்லா விதத்திலும் தங்களின் முதல் குழந்தையாக மாற்றியிருக்க வேண்டும் என்று திரும்ப ஒரு முறை அழுத்தமாக தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். 

அந்நேரம் குழந்தையின் அழுகுரல் கேட்க, எழுந்து வெளியில் போனான். 

அவனைப் பார்த்ததும், “ப்பா” என்று தாவிக் கொண்டு வந்தான் ஷ்ரவன். அந்த அதிகாலையில் அவனைக் கையில் வைத்துக் கொண்டு நடைப் பயின்று கொண்டிருந்த சாந்தாம்மா அவனிடம் குழந்தையை கொடுத்து விட்டு நகர்ந்தார். 

“ராஜாக்கு என்னவாம்? ஏன் அழுறாங்க?” விக்ரம் மெலிதான குரலில் விசாரிக்க, குழந்தை அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். விக்ரமின் இதயம் விரிந்து, ஷ்ரவனை மீண்டுமொரு முறை தன் மகனாக வரித்து கொண்டது. 

அவன் குழந்தையோடு அறைக்குள் வர, படுக்கையை பார்த்து விக்ரமின் கையில் இருந்து தாவ முயன்றான் குழந்தை. 

“ம்மா” என்றான் பொக்கை வாய் மலர்ந்து சிரித்து, அவனிடமிருந்து சின்னதாக சிணுங்கல் வெளிப்பட, “உங்கம்மா சொல்ற மாதிரி, நடிகன் டா நீ.” சொல்லிக் கொண்டே குழந்தையை மனைவியின் பக்கத்தில் படுக்க வைத்தான் விக்ரம். சடக்கென்று நகர்ந்து சுஹாசினியின் முகத்தில் முட்டி, அவள் மேல் விழுந்து, சரிந்து, கட்டிக் கொண்டான் குழந்தை. அவன் காட்டிய வித்தையை பார்த்து சத்தமாக சிரித்தான் விக்ரம். 

“என்ன சிரிப்பு உங்களுக்கு?” தூக்க கலக்கத்துடன் கேட்டு, குழந்தையை வாகாக அணைத்தபடி கண் மூடினாள் சுஹாசினி. 

“நான் சிரிக்கக் கூடாதா ஷோனா?” கண் சிமிட்டி கேட்டான். 

“நல்லா சிரிங்க” உதடு சுளித்து காட்டினாள்.

அடுத்த மூன்றாம் நிமிடம் அம்மாவும், மகனும் நன்றாக உறங்கி விட, விக்ரம் குளிக்கப் போனான். 

காலை எட்டு மணிக்கு தான் அம்மா, மகன் இருவரும் நித்திரை கலைந்து எழுந்தார்கள். சுஹாசினி முதலில் சென்று குளித்து வர, விக்ரம் மகனை கவனித்தான். ஒன்பது மணிக்கு மூவரும் தயாராகி வெளியில் வர, அவர்களுக்காக அங்கே காத்திருந்தான் ராகவன்.

“ராகவ், எப்போ வந்த? என்னை கூப்பிட்டு இருக்கலாம் இல்லை? காஃபி தரவா?” சுஹாசினி கேட்க, ராகவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த வெங்கடேஷ், “காஃபி ஆச்சு மா. நீ இங்க வா. இப்போ உனக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க, ராகவனின் பார்வை சுஹாசினியின் மேல் நிலைத்திருந்தது. 

மெல்ல அவளின் கைப் பற்றி தனக்கு பக்கத்தில் அமர்த்தி கொண்டான். 

“யூ ஓகே சுஹா?” ராகவன் கேட்க, புன்னகைத்தாள் சுஹாசினி. 

“எதுவும் மெடிக்கல் ஹெல்ப், இல்ல அட்வைஸ் வேணுமா? விக்ரம் கிட்ட பேசவா?” அவன் கேட்க, “நீ எனக்கு எப்பவும் அண்ணனா மட்டும் இரு ராகவ். அது போதும். என்னதான் நீ டாக்டரா இருந்தாலும் சில விஷயங்கள் என்னால உன்கிட்ட பேசவே முடியாது” அவன் முகம் பார்க்காமல் அவள் சொல்ல, புரிதலுடன் தலையசைத்தான் ராகவன். 

அவளின் உடல்நிலையை பரிசோதித்து காய்ச்சல் இல்லை எனவும் ஆசுவாசமானான். சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் மருத்துவமனை கிளம்ப, அந்நேரம் உள்ளே வந்தார்கள், மலர் – வீரா மற்றும் உதய் – ராகவி. 

அவ்வளவு தான். வீடே கலகலக்க தொடங்கியிருந்தது. 

சுஹாசினி தன்னிடம் தனியாக விசாரிக்க வந்த தோழிகளை முறைப்புடன் பிடித்துக் கொண்டாள். 

“கல்யாணமானதும் கிழவி ஆகிட்டீங்க ரெண்டு பேரும். நேத்து உங்களால நான் என்ன பண்ணேன் தெரியுமா? இனிமே உங்க கூட நான் பேசுறதாவே இல்ல” என்று சுஹாசினி கோபித்துக் கொள்ள, மலர், ராகவி இருவருக்கும் அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் என்றாகி போனது. 

“சரி விடு சுஹா. அதான் இவ்வளவு சாரி சொல்லிட்டோம் இல்ல?” என்ற ராகவி, “மலருக்கு ஹனிமூன் பேக்கேஜ் கிஃப்ட் பண்ண பிளான் பண்றேன். உனக்கும் மங்களூர் ரிசார்ட்டில் ஹனிமூன் சூட் புக் பண்ணவா?” அவள் புறமாக சாய்ந்து சிறு குரலில் கிசுகிசுப்பாக ராகவி கேட்க, வெட்க சிரிப்பு சிரித்தாள் சுஹாசினி. 

“ஒரு முறை எங்க வீட்டுக்கு வா ரா. அதுவே ஹனிமூன் டெஸ்டினேஷன் போல தான் இருக்கும். பெட்ரூம் ஜன்னலைத் திறந்தா எதிர்க்கவே கடல். பச்சையும், நீலமும் கலந்த நீளமான, எங்களுக்கு மட்டுமே சொந்தமான கடற்கரை. கண் முன்னே இருக்க கடலையும், வானத்தையும் சொந்தம் கொண்டாடுறது எப்படி இருக்கும் தெரியுமா? எங்க வீட்டில் எல்லா நாளும்..” 

“போதும், நிறுத்து சுஹா” என்ற ராகவி, “நேத்து கல்யாணமான மலரே அமைதியா இருக்கா. ஆனா, நீ இப்ப தான் கல்யாணமான மாதிரி, எவ்ளோ பேசுற…” என்று அவள் புலம்ப, புதுப்பெண் மலருக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

ஒரு வழியாக சமாதானமாகி, ராசியாகி, சிரித்து, அழுது, பிரியா விடை பெற்றுக் கொண்டனர் தோழிகள். 

சுஹாசினி, விக்ரம் இம்முறை வெங்கடேஷ் மற்றும் சாந்தாம்மாவை தங்களோடு அழைத்துச் சென்றனர். விக்ரமிற்கு சுயதொழில் என்பதால் அவர்களுக்கான விசா எடுப்பது அவனுக்கு எளிதாக இருந்தது. 

வெங்கடேஷிற்கு ரெசிடென்ட் விசா (Resident visa) எடுத்திருந்தார்கள். 

“நீங்க ஆறு மாசத்துக்கு ஒரு முறை, இங்க வந்துட்டு போங்க ப்பா. அப்புறம் ரிட்டயர்டானதும் மொத்தமா இங்கேயே வந்துடுங்க” மகள் சொல்ல, “சரிம்மா” என்றார் வெங்கடேஷ். அவருக்கு பேரனுடன் நேரம் செலவிட மிகவும் பிடித்திருந்தது. பதினைந்து நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு அவர்களோடு ராஸ் அல் கைமா சென்றார் அவர். 

அக்கா ரோஹிணி தனக்காக விட்டுச் சென்றிருந்த பரிசு பொருட்களை, சுஹாசினி மிக கவனமாக தேடி, இந்த முறை கூடவே எடுத்துச் சென்றாள். 

அதில் வாசிக்கப்படாத கடிதம் ஒன்று கனமாக அமர்ந்திருந்தது. 

வீடு திரும்பியதும் அவர்களின் நாட்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தது. 

முதல் பத்து நாட்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் விக்ரம். ஐந்து நாட்கள் சென்னை சென்று விட்டு வந்தது, அவன் வேலைப் பளுவை அதிகரித்திருந்தது. சுஹாசினி அவனோடு அலுவலகம் செல்ல, குழந்தையை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள். 

பதினோராம் நாள் இரவு, ஷ்ரவன் தாத்தாவின் அறையில் கதைக் கேட்டபடி உறங்கிவிட, சுஹாசினி, விக்ரம் இருவரும் தங்களின் அறையை ஒட்டியிருந்த பகுதியில் கனமான விரிப்பு விரித்துப் படுத்திருந்தனர். 

அவர்களுக்கு எதிரே கடல் அலையோசை எழுப்பிக் கொண்டிருக்க, மல்லாக்க படுத்திருந்தவர்களைப் பார்த்து கண் சிமிட்டியது வானில் மின்னிய நட்சத்திரங்கள். 

“அங்கப் பாருங்களேன் விக்ரம். மூணு ஸ்டார் வரிசையா இல்ல? நான், ராகவி, மலர் நாங்க மூனு பேரும் சின்ன வயசுல அது நாங்க தான்னு சொல்லிப்போம். அப்போ நான் எங்கன்னு சண்டைக்கு வருவான் ராகவ். தெரியுமா?” அவள் சொல்ல, சிரித்தான் விக்ரம். 

அவன் கண்களுக்கு மட்டும் எப்போதும் குழந்தையும், குமரியும் கலந்த கலவை அவள். குறும்பும், வெட்கமும் கலந்தவள். அவன் உயிரோடு கலந்தவள். அவன் வாழ்வின் இருளை நீக்கிய நட்சத்திரம் அவள். மெல்ல திரும்பிப் படுத்து, கண்களில் ரசனை மின்ன மனைவியைப் பார்த்தான் விக்ரம். 

“என்ன பார்வை?” அவள் புருவம் உயர்த்தி கேட்க, “யூ கம்ப்ளீட் மீ ஷோனா” என்றான் மென்மையாய். 

“நான் எப்பவும் நினைச்சுருக்கேன் கல்யாண வாழ்க்கைக்கு, ரெண்டு பேருக்கு நடுவுல நிறைய ஒற்றுமைகள் இருக்கணும்னு. ஒரே மொழி, ஒரே ஊர், ஒரே மாதிரியான ரசனை, விருப்பங்கள், இப்படி நிறைய ஒத்துப் போனா தான் வாழ்க்கை ஸ்மூத்தா போகும்னு நினைச்சுருக்கேன். நம்ம ஆபீசில் வேலை பார்க்கிற மலையாளி ஒருத்தர் பிலிப்பினோ பொண்ணை கல்யாணம் பண்ணும் போது எனக்கு ஷாக்கிங்கா இருந்தது. தாதா, வெய்னி மேரேஜ் கூட அப்படித் தான் ஃபீல் பண்ணேன். இது எப்படி சாத்தியம்னு நினைச்சேன். ஆனா..”

“ஆனா…” 

“ஆனா, இப்போ என்ன தோணுது தெரியுமா?”

“ம்ம். சொல்லுங்க. கேட்போம்.”

“அவங்க வாழ்க்கையை ரசிச்சு வாழ ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா, நம்ம வாழ்க்கையை பொறுத்த வரை.. ஐ லவ் அவர் டிஃபரென்ஸஸ். நம்மளோட வித்தியாசங்கள், வேற்றுமைகள் தான் நம்ம இணைக்குது. நம்ம வாழ்க்கையை அதுதான் ரொம்ப சுவாரசியமாக்குது. இல்லையா?”

“இருக்கலாம்..” என்று அவள் ராகம் இழுக்க, “பாரு. இதைத் தான் சொன்னேன். நான் சொல்ற எதையும் நீ ஏற்றுக்க மாட்டா. உனக்கு எல்லா விஷயத்திலும் என் கூட சண்டை போடணும். வாக்குவாதம் பண்ணணும். என் கூட எல்லாத்துக்கும் போட்டி போடணும். தேவையில்லாம முறைச்சு, என்னைக் கோபப்படுத்தி, கத்த வைக்கணும்.. கடைசியில்…”

“கடைசியில் முத்தமிட்டு முடித்து வைக்கணும்” எட்டி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள் மனைவி. அவளை அப்படியே கட்டிக் கொண்டு, வானம் பார்த்தான் விக்ரம். 

“ப்ரோ, எனக்குத் தெரியும். நீ அங்க இருந்து எங்களை பார்த்துட்டே இருக்கன்னு. என்னோடது, உன்னை மாதிரி திரில்லான காதல் கதையா இல்லாம இருக்கலாம். பட், ஐ லவ் ஹெர். என் ஷோனா இவ. நாங்க சந்தோசமா இருக்கோம். வெய்னியை பக்கத்தில் இழுத்து, இதை அவங்ககிட்ட காமி” இருவரையும் கை காட்டி அவன் சொல்ல, அவளுக்கு சிரிப்பு வந்தது.

எப்போதும் அண்ணனிடம் ஷ்ரவனை பற்றியே பேசுவபவன் முதல் முறையாக தங்களைப் பற்றி பேசினான். 

“அக்கா எனக்காக வாங்கி வச்சிருந்த கிஃப்ட்ல, பர்த்டே கிரீட்டிங் கார்ட்ஸ் இருந்தது. அதுல என்னோட 21 வது பர்த்டேக்கு வாங்கின கார்டில் குட்டியா லெட்டர் எழுதியிருக்கா.” 

“இப்போ படிப்போமா?” கண்களில் ஆர்வமெனும் நட்சத்திரம் மின்ன கேட்டான் விக்ரம். 

ஒரு பெருமூச்சுடன், “ம்ம்” என்று தலையசைத்தாள் சுஹாசினி. அதில் பெரிதாக எந்த குண்டும் இருக்காது என்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், ரோஹிணியின் எழுத்தை வாசிக்கும் போது அவளே பேசுவது போல ஒரு பிரம்மை தோன்றுவதை சுஹாசினியால் தவிர்க்க முடியவில்லை. அதன் பின் மனதை அக்காவின் இழப்பு பிசையத் தொடங்கி விடும். 

“ஷோனா, உனக்கு வேணாம்னா விடு” கணவன் சொல்ல, “இல்ல, இதுவே ரொம்ப லேட். இன்னைக்கே படிக்கலாம்” அவள் சொல்ல, அந்த கடிதம் எங்கே இருக்கிறது என்று கேட்டு, அறைக்குள் போய் எடுத்து வந்தான் விக்ரம்.

“ஹேப்பி பர்த்டே டு தெ பெஸ்ட் சிஸ்டர் இன் த வேர்ல்ட்” என்ற வாசகத்துடன் இருந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையை பிரித்தாள் சுஹாசினி. அதன் உள்ளே இளம் ரோஜா நிறத்தில் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்தது கடிதம் ஒன்று. அதை எடுக்கும் போதே அவள் விரல்கள் நடுங்க, விக்ரம் அதை வாங்கிப் பிரித்தான். கடிதம் தமிழில் இருக்க, மனைவியிடம் நீட்டினான்.

சுஹாசினி கணவனுக்கும் கேட்கும் விதமாக சத்தமாக கடிதத்தை வாசித்தாள். 

“டியர் சுஹா, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இப்ப தான் உன்னை குட்டி குழந்தையா பார்த்தது போல இருக்கு. அதுக்குள்ள உனக்கே 21 வயசாகப் போகுது. வருஷங்கள் எவ்வளவு வேகமா நகருது இல்ல?

ம்ம். எனக்கு இப்போல்லாம் நாட்கள் ரொம்ப ஸ்லோவா நகருற போல தெரியுது. சீக்கிரம் படிப்பை முடி சுஹா. அப்பா உனக்கு கல்யாணம் பேசினா தான்.. என்னால உன்னை பார்க்க வர முடியும். ச்சே..எப்பவும் இதையே பேசுறேன் நான். இல்ல?

உன் கூட இருக்கும் போது, உன் மேல வராத பாசமும், அன்பும் இப்போ வருது சுஹா. உன் மேல காட்ட முடியாத அன்பை இவரோட குட்டித் தம்பி விக்ரம் மேல காட்டுறேன்.” சுஹாசினி திரும்பி கணவனைப் பார்க்க, புன்னகைத்தான் விக்ரம்.

“படிப்பு, வேலைன்னு வெளிநாட்டில் இருக்கற அவருக்கு, அவங்க அண்ணா எதையாவது வாங்கி அனுப்பிட்டே இருக்காங்க. அப்போல்லாம் விக்ரமுக்கு மட்டுமில்ல, உனக்கும் சேர்த்தே ஏதாவது வாங்குறேன் நான். ஆல்ரெடி உனக்காக நிறைய வாங்கிட்டேன். ஆனா, எப்போ இதையெல்லாம் உன்கிட்ட கொடுக்கப் போறேன் எனக்குத் தெரியல. உங்க மாமா கூட இதைச் சொல்லி கிண்டல் பண்ணிட்டே இருக்கார். அவருக்கும் உன்னைப் பார்க்க ரொம்ப ஆசை. உன்னைப் பத்தி அவர்கிட்ட அவ்ளோ பேசி இருக்கேன். உன்னைப் பார்க்க ரொம்ப ஆவலா காத்திட்டிருக்கார் உங்க மாமா. சீக்கிரமே அந்த நாள் வரணும் சுஹா.

நான் இதை சொன்னா நீ சிரிப்ப, கேலி பண்ணுவ. ஆனா, எனக்கு விக்ரமை பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வருது. நீங்க ரெண்டு பேரும் ரெண்டு துருவங்கள். 

ஆனா, விக்ரமை பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வர்றதை என்னால தவிர்க்க முடியல. சில நேரம் ரொம்ப ஆச்சரியமா கூட இருக்கு. உன்னைப் போல கிடையாது விக்ரம். இந்த சின்ன வயசில் ரொம்ப முதிர்ச்சி..” கணவனிடம் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் சொன்னவள், இப்போது சிரிப்புடன் அர்த்தம் சொல்ல, ஏனோ கண்கள் கலங்க புன்னகைத்தான் விக்ரம். 

ஒருவித உணர்வு ததும்பலில் பேசவேயில்லை அவன்.

“உங்க ரெண்டு பேரையும் ஒரு நாள் மீட் பண்ண வைக்கிறேன். உனக்கு அவரைப் பிடிக்கும். கண்டிப்பா பிடிக்கும்” அதை வாசித்ததும், சத்தமாக சிரித்தாள் சுஹாசினி. 

“பிடிக்குமா? ஜஸ்ட் லைக்? நோ.” என்று கத்தியவள், “ஐ லவ் ஹிம் ரோஹி கா. இவ்ளோ பிடிக்கும்” இரு கரங்களையும் விரித்துச் சொன்னாள். சிரிப்புடன் அவளின் கரம் பிடித்து, “மேல படி” என்றான் விக்ரம். 

“என் பயம் எல்லாம் அப்பா மேல தான் சுஹா. இல்லனா, உன்னைப் பார்க்க இப்பவே ஓடி வந்துடுவேன். சின்னதில் இருந்தே நீ எல்லாத்துலயும் பெஸ்ட் அண்ட் ஃபர்ஸ்ட். தப்பே பண்ண மாட்ட..” 

சட்டென நிறுத்தி, “வீட்ல மாட்டிக்காத மாதிரி தான் தப்பு பண்ணுவேன் கா. அதுவும் இல்லாம, என் தப்பை சரி பண்ண எப்பவும் என் கூடவே என் பிரெண்ட்ஸ் இருந்தாங்களே” பிரியமும், பாசமும் கண்களை நீரால் நிறைக்க சொன்னாள். 

“ரீட் ஷோனா.” 

“ம்ம்” என்றவள், தொடர்ந்து வாசித்தாள். 

“அப்பாவின் பரிபூரணி நீ.” இபொழுது கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது. 

“பரிபூரணி? என்ன அர்த்தம்?” மனைவியின் கன்னம் துடைத்து, சந்தேகம் கேட்டான் விக்ரம்.

“நான் உங்களுக்கு யாரு?”

“வைஃப்”

“இல்ல, அடிக்கடி வேற மாதிரி சொல்வீங்களே. விளக்கமா? இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட சொன்னீங்களே?”

“ம்ம்” என்று யோசித்து, “யூ கம்ப்ளீட் மீ ஷோனா. மை பெஸ்ட் ஹால்ப்” கணவன் சொல்ல புன்னகைத்தாள் மனைவி. 

“அதே அர்த்தம் தான். முழுமையானவள். கம்ப்ளீட்னஸ். ஹோல்சம், இப்படியும் சொல்லலாம். நான் அதுக்கெல்லாம் தகுதியான…”

அவளின் உதட்டில் விரல் வைத்து பேச்சை பாதியில் நிறுத்தி, “சரியா தான் சொல்லியிருக்காங்க வெய்னி” கணவன் சொல்ல, சிரிப்புடன் அவன் இடுப்பில் இடித்தாள்.

“அப்பாவுக்கு இப்போ எல்லாமும் நீ தான். அவரோட உலகமே நீ தான். அவர் உன் மேல வச்சிருக்க அன்பை நான் குறைக்க விரும்பல சுஹா. எந்தத் தப்பும் பண்ணாத நல்ல பொண்ணாவே நீ எப்பவும் இரு.” அதற்கு மேல் கடிதத்தை படிக்காமல் மூடி வைத்தாள் சுஹாசினி. ஏனோ சத்தமாக சிரிக்க தோன்றவும் சிரித்தாள். 

“என்ன ஷோனா?”

“இல்ல. அக்கா நான் எந்த தப்பும் பண்ணல சொல்லி இருக்காங்க. ஆனா, அதுக்கு அப்புறம் தான் நான் எல்லா தப்பும் பண்ணேன். கல்யாணத்தை நிறுத்தினேன். அப்பா கூட சண்டை போட்டு உங்களைப் பார்க்க வந்தேன். அப்பா பேச்சை மீறி, உங்க கிட்ட ஷ்ரவனை கேட்டேன். அப்பா கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத உங்களையே கல்யாணம் பண்ணேன். அதுவும் அவரோட சம்மதத்தோடு..”

“அதுக்காக? நீ எந்த விதத்திலும் குறைஞ்சு போகல ஷோனா. நீ எப்பவும் நீ தான். வளர்ந்தாலும், தேய்ந்தாலும் நிலா, நிலா தான். நீ என் பரிபூரணி தான்” அந்த கடைசி வாக்கியத்தை தமிழில், சரியான வார்த்தையை யோசித்து, திக்கியபடி விக்ரம் சொல்ல, சிரிப்புடன் அவனைக் கட்டிக் கொண்டாள் சுஹாசினி. 

“நீங்க சொல்றது ரொம்ப ஓவரா தான் இருக்கு. ஆனாலும், கேட்க நல்லா இருக்கு” குறும்பு சிரிப்புடன் கண் சிமிட்டி அவள் சொல்ல, அந்தச் சிரிப்பு மறையும் முன் எடுத்துக் கொண்டான் விக்ரம். 

Advertisement