Advertisement

உதயின் கார் வெளியேறியதும் வீட்டிற்குள் வந்தார்கள். 

விக்ரம் குழந்தைக்கான விரிப்பை தரையில் விரித்து, அதில் அவனது விளையாட்டு பொருட்களை போட்டு குழந்தையை கீழே விட்டான். ஷ்ரவன் விளையாடத் தொடங்க, மனைவியிடம் வந்தான் அவன். 

கணவனை மின்னல் வேகத்தில் இழுத்து அணைத்து கொண்டாள் சுஹாசினி. 

அவள் அமைதியாக இருந்திருந்தால் இத்தனையும் தவிர்த்திருக்கலாம். இந்த ஏமாற்றம், அது வரும் வலி. அதனால் அவர்களுக்கு இடையே வந்த வாக்குவாதமும், வார்த்தைகளும்.. அத்தனையும் அவள் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவள் பொறுமையாக இருந்திருந்தால், இருவரும் சேர்ந்து இந்த சூழலை சரியாக கையாண்டிருப்பார்கள்.

தன்னைத் தானே நொந்து, குற்ற உணர்ச்சி கொண்டு, “சாரி ஹீரோ. ரொம்ப பேசிட்டேன் இல்ல? உங்களுக்கும் ஆசையை கொடுத்து..” அவளை முடிக்க விடாமல், அவள் இதழ்களில் ஒற்றை விரல் பதித்து, அவளின் பேச்சை நிறுத்தினான் விக்ரம். 

“நான் தான் உன்னை ஹர்ட் பண்ற மாதிரி.. இல்ல, என் பேச்சால் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். எப்பவும் பண்ணிட்டே இருக்கேன். ஐ அம் டேக்கிங் யூ ஃபார் கிராண்டட் ஆல்வேஸ்.‌ இல்ல?” 

“இல்ல..” என்றாள் வேகமாக. 

“நீங்க அந்த நிமிஷ கோபத்தில் பேசினது விக்ரம். அதுக்கு நான் அர்த்தம் கொடுக்க விரும்பல. அதை மனசுல வச்சுட்டு உங்க மேல கசப்பை வளர்த்துக்க விரும்பல.” 

“ஆனாலும், நான் பேசினது அதிகம் தான். இல்ல, ஷோனா?”

“ம்ம்” மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள். அவனுக்கு மெலிதாக புன்னகை துளிர்த்தது. 

“சாரி” அவள் முகம் பற்றி சொன்னான். “ஷ்ரவன் எனக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம் ஷோனா. ஆனா, இதை சொல்ல எனக்கே கஷ்டமா தான் இருக்கு. எனக்கு நீயும் ரொம்ப முக்கியம். நம்ம குழந்தையை நான் ரொம்பவே எதிர்பார்க்கறேன். தப்பில்லையே?”

“இல்ல விக்ரம். கண்டிப்பா இல்ல. நீங்க மஹான் கிடையாது. சாதாரண ஆசைகள் கொண்ட மனுஷன். ஆனாலும், இப்படி நாள் தள்ளிப் போய்.. ஏமாந்து.. என்னால தாங்கிக்க முடியல” சொல்லும் போதே அவள் குரல் உடைந்திருந்தது. 

அவளை இறுக்கமாக அணைத்து தேற்றினான். “இட்ஸ் டூ சூன் ஷோனா. நம்ம பிளான் படியே நம்ம குழந்தை பொறுமையா வரட்டும். அதுக்குள்ள ஷ்ரவனும் வளர்ந்திடுவான். நமக்கும் இன்னொரு குழந்தையை வளர்க்கும் பக்குவம் வந்திருக்கும்” ஏமாற்றத்தை மறைத்து, மனதை தேற்றிப் பேசினான் அவன். அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லையே. 

அவன் எத்தனை பேசியும், ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும், சுஹாசினியின் கண்ணீர் நிற்கவேயில்லை.

அவள் மேலேயே காரணமற்ற கோபம் கொண்டாள் அவள். 

அங்கே கல்யாண மண்டபத்தில் அவர்களைத் தேடினார்கள். நண்பர்களுக்கு லேசாக விஷயம் கசிந்தாலும் கூட அவர்களை தொல்லை தரும் கேள்விகள் கேட்டு தொந்திரவு செய்யக் கூடாதென்ற இங்கிதம் அவர்களுக்கு தெரிந்திருந்தது. 

வெங்கடேஷ், சாந்தாம்மா இருவரும் வீடு வர, சுஹாசினி உடை மாற்றும் சாக்கு சொல்லி அறைக்குள் நுழைந்து கொண்டாள். விக்ரம் அவர்களிடம் பேசி விட்டு, ஷ்ரவனை அவர்கள் பொறுப்பில் விட்டு விட்டு, சாந்தாம்மா அவசர அவசரமாக ஊற்றிக் கொடுத்த தோசையுடன், 

மனைவியை பின் தொடர்ந்து அறைக்குள் வந்தான்.

சுஹாசினியின் பட்டுச்சேலையும், பூவும் அவள் மனத்தை போலவே கசங்கி, கலைந்திருக்க, அவளுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தான் விக்ரம். 

“சாப்பிடு ஷோனா” தோசையை எண்ணெய் கலந்த பொடி தொட்டு அவளுக்கு நீட்டினான். 

மனதின் கனம் தொண்டையை அடைத்திருக்க, தலையை மறுப்பாக அசைத்தாள் அவள். 

“சுஹாசினி…” அதட்டலாக அழைத்தான்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.” அவன் மார்பில் சாய்ந்து கதறினாள். 

மனித மனம் தான் எத்தனை விநோதமானது. முதலில் விஷயம் அறிந்து அதிர்ந்ததும் அவள் தான். பின்னர் ஆவலாக எதிர்பார்த்ததும் அவள் தான். இப்போது இல்லை என்றான பின் அழுவதும் அவள் தான். 

அவளைப் போலவே, ஏன் அவளை விட மோசமாக, “இல்லை” என்ற செய்தி அவனைத் தாக்கியிருந்தது. ஆனாலும், திடமாக நின்றான் விக்ரம். இல்லை, அப்படிக் காட்டிக் கொண்டான். இழப்புகள் அவனுக்கு புதிதல்ல. இங்கு தவறுதலான எதிர்பார்ப்பு வைத்த தவறு அவனது தானே? 

குழந்தை தற்போதைக்கு வேண்டாம் என முடிவெடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்து, பிள்ளையை எதிர்பார்த்தது அவர்களின் தவறு தானே? மருத்துவமோ, இயற்கையோ, இல்லை அவனின் மனைவியோ, எப்படி அதற்கு பொறுப்பாக முடியும்? 

அந்த யோசனையின் முடிவில் முழுதாக தெளிவாகி இருந்தான் விக்ரம்.

“ஷோனா.. இங்க பாரு. என் கண்ணைப் பாரு” மனைவியின் முகத்தை கையில் ஏந்தினான். 

“நாம குழந்தைக்கு பிளான் பண்ணல ஸ்வீட்ஹார்ட். ரொம்ப கவனமா ப்ரிக்காஷன்ஸ் எடுத்துட்டு, குழந்தை வரலன்னு அழுறது, தப்பு ஷோனா. கடவுள் கோவிச்சுக்க போறார்” குறும்பும், சிரிப்புமாக அவன் சொன்னாலும், அவள் முகம் மாறவேயில்லை. அவளை அப்படியே விட்டு விட்டான் விக்ரம். 

அவனை அணைத்தபடி அப்படியே உறங்கி போனாள் சுஹாசினி. 

ஏனோ அவளுக்கு உறக்கத்திலும் கணவனின் நினைவே வந்தது.

“நான் உனக்கு முக்கியமே இல்லையா ஷோனா?” என்று கண்களில் உயிரை தேக்கி வைத்து கேள்வி கேட்டான் விக்ரம்.

“நீ எப்போ தான் என்னை தெரிஞ்சுக்க போற ஷோனா? எப்போ தான் என்னை முழுசா புரிஞ்சுக்க போற? ஷ்ரவன் இல்லாம, என்னை எனக்காக, விக்ரமா எப்போ தான் நேசிக்கப் போற?” பழுப்பு கண்களில் வலியும், வேதனையும் நிறைந்திருக்க கேள்வி கேட்டான். 

அவளுக்கு அந்த கண்களை அப்படிப் பார்க்க முடியாமல் மனதை என்னவோ செய்தது. 

அந்தக் கண்கள் அவளிடம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. கோபம், குறும்பு, ரசனை, காதல், காமம் என அனைத்தையும் காட்டியிருக்கிறது. அவ்வளவு ஏன் இழப்பிற்காக அழுதும் கூட பார்த்திருக்கிறாள். ஆனால், அவளிடம் மட்டுமே பிரத்தியேகமாக அவன் பகிரும் பல உணர்வுகளில் இப்போது இந்த வலியும் சேர்ந்திருக்க, அவளுக்கும் வலித்தது. 

ஆழ்ந்த உறக்கத்தில் அவஸ்தையுடன் புரண்டு படுத்தாள். 

கணவனின் கேள்விக்கான காரணத்தை தேடினாள். பதில் பளிச்சென்று அவள் கண் முன் நின்று மிரட்டியது. 

அவளுக்கு எப்போதும் ஷ்ரவன் தான் முதலிடம். ஆம், விக்ரமிடம் குழந்தையை தான் எப்போதும் முன்னிறுத்தி இருக்கிறாள் அவள். 

ஷ்ரவனுக்காக தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினாள். அதை அவனும் அறிவான். 

அதன் பின்னரே அவனிடம் முதல் முறையாக பேசினாள். அதுவும் ஷ்ரவனுக்காக. அந்த ஷ்ரவனை தேடி கோவா சென்றாள். 

குழந்தைக்காக விக்ரமிடம் எண்ணிலடங்கா தடவைகள் எதிர்த்து நின்றிருக்கிறாள். அவர்களின் கல்யாணம் குறித்து அவள் முதல் முறை பேசும் போது கூட, “இவனை நாம சேர்ந்து வளர்க்கலாமா?” என்று தானே கேட்டாள்.

அதன் பிறகும் கூட, குழந்தையை முன்னிறுத்தியே தங்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள். 

அவளுக்கு கற்பனையா, கனவா, இல்லை தூக்கமா என்று புரியாத நிலை. கண்ணை மூடுவதும், திறப்பதுமாக இருந்தாள். படுக்கையின் எல்லாம் புறமும் புரண்டு கொண்டே இருந்தாள். 

அவளுக்கு கணவன் அவளிடம் தங்களின் திருமண நாளில் பேசியது நினைவுக்கு வந்தது.

“உன்னைப் பிடிச்சு தான் கல்யாணம் பண்றேன் ஷோனா” என்றானே. அதன் பின்னரும், “ஐ லவ் யூ. உன்னை எனக்குப் பிடிக்கும்” என்று அவன் அறிந்த அனைத்து மொழிகளும் அவளுக்கான அன்பை, காதலை வெளிப்படுத்தியிருந்தானே.

ஆனால், அவள்? காதலை சொன்னதில்லை தான். 

அன்பை செயலில், சொல்லியிருக்கிறாள் தான். ஆனால், வார்த்தைகளின் வீரியமும், அது தரும் உறுதியும் அதிகம் தானே? அதுவும் விக்ரம் போன்ற ஒருவனுக்கு? அவளை மட்டும் உலகமாக, உறவாக கொண்டிருப்பவனிடம், காதலை அவன் கண் பார்த்து சொல்லி இருக்க வேண்டுமோ? 

“விக்ரம்.. ஹீரோ” மென்மையாக அழைத்தாள். 

“ஷோனா..” மறுநொடியே பதில் வந்தது. மெல்ல விழிகளை பிரித்து கணவனைப் பார்த்தாள். 

“மனசை போட்டு வருத்தாத ஷோனா. நீ இவ்வளவு வீக்கா இருப்பன்னு நான் நினைக்கவேயில்ல” கணவனின் கண்களில் ஏன் இத்தனை கலக்கம் என்று அவள் சிந்திக்கும் போதே, குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் பார்வையும், முத்தமும் குளிர்ச்சியாக அவளுள் இறங்கியது. 

“ஈவ்னிங் ஆகிடுச்சு ஷோனா. உனக்கு ஃபீவர் வேற அடிக்கிது. இன்னைக்கு நாள் முழுக்க தூங்கியிருக்க நீ. ராகவன் வந்து பார்த்திட்டு டேப்லெட் கொடுத்துட்டு போனார். நீ எழுந்து முகம் கழுவிட்டு, இந்த சேலையை மாத்து. இட்லி, கஞ்சி ரெண்டும் இருக்கு. சாப்பிட்டு மாத்திரை போடலாம்” காதலும், கனிவும், அக்கறையும், அன்பும் கலந்திருந்த அவன் குரலை கண்கள் கலங்க உள்வாங்கினாள். 

“உங்களுக்கு.. எப்படி.. என்னை.. இவ்வளவு பிடிச்சது?” கேள்விக் கேட்டாள். 

அவன் புருவம் சுருக்கி குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். 

“இந்த கண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும் விக்ரம். பூனை கண்ணுக்குன்னு ஒரு தனிக் கவர்ச்சி இருக்கத் தான் செய்யுது இல்ல?.” அவளின் கேள்வியில் அவன் புன்னகைக்க, இப்போது அந்தக் கன்னக் குழியில் பதிந்தது அவள் பார்வை. ஒற்றை விரலை அந்த குழியில் வைத்து அழுத்தி, “இந்த கன்னக் குழியில் எப்படி தடுக்கி விழுந்தேன்னு சத்தியமா எனக்குத் தெரியல” என்றாள் கண் சிமிட்டி. 

“இதெல்லாம் உங்க புறத்தோற்றம் மட்டும் தான். ஆனா, உங்களை நான் நேசிக்க முதற்காரணம் வேணும்னா ஷ்ரவனா இருக்கலாம். ஆனா, முழு காரணம் நீங்க மட்டும் தான். மெல்ல மெல்ல உங்க அன்பால என்னை மாற்றினீங்க விக்ரம். இப்போ உங்களை உங்களுக்காக மட்டுமே நேசிக்கிறேன். தினம் தினம் உங்க மேலே காதலில் விழுறேன். உங்களோட இருக்க ஒவ்வொரு நொடியும் உங்க மேலே நேசம் வளர்ந்துட்டே இருக்கு. இந்த பழுப்பு கண்கள் என்னை எப்பவும் மயக்கிட்டே இருக்கு. நான் எனக்கு தெரிஞ்சே..மயங்கிட்டே இருக்கேன் ஹீரோ. ஹீரோ மேல மயக்கம் வர்றது நார்மல் தானே?” 

உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் வடிவம் கொடுத்திருந்தாள் சுஹாசினி. விக்ரம் வார்த்தைகளை விட்டு, அன்பின் மொழி பேசினான். மனைவியை படுக்கையில் இருந்து அள்ளி, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். 

“லவ் யூ ஷோனா. என்.. இல்ல, நம்ம வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி. ஐ லவ் யூ. அது மட்டும் மாறவே மாறாது. இன்னைக்கும்.. என்னைக்கும்.. எப்பவும்..” மனம் நெகிழ அன்பை வெளிப்படுத்தினான். 

“ஐ லவ் யூ விக்ரம்.” அவனிடம் இருந்து விலகி, பழுப்பு விழிகளில் தன் விழிகளை பதித்து சொன்னாள் அவள். மனைவியின் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்தான் விக்ரம்.

“இன்னும் காலையில் கட்டின பட்டுச் சேலையிலயே இருக்க. எழுந்துக்கோ. முதல்ல சேலையை மாத்து ஷோனா. கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாகு. யூ வில் ஃபீல் பெட்டர்.” அனுசரணையாக அவன் சொல்ல, அவனது கைப் பிடித்து எழுந்துக் கொண்டாள் சுஹாசினி. 

“குளிக்க வேண்டாம். ஜஸ்ட் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு, முகம் கழுவிட்டு வா” மனைவியின் தோள் பற்றி குளியல் அறையை நோக்கி நகர்த்தினான். கால்களை நிலத்தில் அழுந்த பதித்து, அப்படியே அசையாமல் நின்றாள் மனைவி. 

“என்ன வேணும்?” என்றான் தமிழில். கணவனின் தமிழுக்கு அலாதி கவர்ச்சியிருக்க, கண்களால் அவனைக் கட்டிக் கொண்டாள்.

“போ” என்றான் இப்போது. 

“போ, சொன்னா.. எங்க தமிழில் வான்னு அர்த்தம்” என்று குறும்பாக கண் சிமிட்டி சொன்னவள், கணவனை கட்டிக் கொண்டு, பொத்தென்று படுக்கையில் விழுந்தாள். 

“ஐயோ.. உனக்கு ஃபீவர் இருக்கு. இந்நேரம் எதுவும் கூடாது” பதறி விலகியவனை பார்த்து உதடு சுளித்தாள். அந்த சுளித்த உதட்டில் மென்மையாய் முத்தமிட்டு, அவளின் கைப் பிடித்து எழுப்பி விட்டான். அப்படியும் அவள் உதடு கடித்து அசையாமல் நிற்க, சேலையை பிரித்து உடை மாற்ற உதவப் போனான். அதன் பின்னரே கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலகி குளியல் அறை நோக்கி நகர்ந்தாள் சுஹாசினி. 

பத்து நிமிடங்கள் கழித்து அவள் தெளிவாக வெளியில் வர, அவளைப் பார்த்ததும், “ம்மா” என்று ஆர்ப்பரித்தான் ஷ்ரவன். நாள் முழுக்க அவளை தேடியவன், இப்போது அவளிடம் தாவிக் குதித்து வர, தடுத்து பிடித்தான் விக்ரம்.

“அம்மாக்கு ஃபீவர் ராஜா. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அப்பா கூட இருங்க” சமாதானப்படுத்தினான் விக்ரம். ம்ஹூம், உதடு பிதுக்கி அழத் தொடங்கினான் குழந்தை. 

சுஹாசினி நின்று, “செல்லக் குட்டி, அப்பா கிட்ட சமத்தா இருங்க” என்றாள். இப்போது வேண்டுமென்றே அழுகையின் சத்தத்தை கூட்டினான் ஷ்ரவன். 

“நடிப்பை பாரு ராஸ்கல். எனக்கு மேல வருவான் போல” சிரிப்புடன் சொல்லியபடி, சாப்பிட போனாள் அவள். இட்லி, சாம்பாரை கஷ்டப்பட்டு விழுங்கி, காய்ச்சலுக்கு மாத்திரையை போட்டு, மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். 

அன்றிரவு குழந்தை பொறுப்பை முழுமையாக தன் வசம் எடுத்துக் கொண்டார் சாந்தாம்மா.  

இரவு மெல்ல கவிழ்ந்து கொண்டிருக்க, விக்ரம் மடிக் கணினியை இயக்கி, அன்றைக்கான வேலைகளை முடித்தான். உறங்க செல்லும் முன் குழந்தையை போய் பார்த்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தான். மனமும், உடலும் களைத்திருந்தாலும் மனைவியின் வார்த்தைகள் அவனை களிப்புற செய்திருந்தது. மெல்ல அவள் பக்கமாக புரண்டு படுத்து, அவளது உடல் சூட்டை தொட்டு பார்த்தான். 

குளிர்ச்சியாய் நெற்றி தொட்ட கரத்தை இறுக பற்றிக் கொண்டாள் சுஹாசினி. கணவனை நெருங்கி அவன் மார்பில் முகம் புதைத்து, ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள்.

அந்தக் கணம் வாழ்க்கை குறித்த எந்த குறையும் அவனுக்கு இருக்கவில்லை. மனைவி அவனை மொத்தமாய் நிறைத்தாள். அவளின் அணைப்பு தந்த ஆறுதலும், அன்பும், அவனுக்கு ஆழ்ந்த அமைதியை தர, உறக்கம் தானாக வந்தது. 

Advertisement