Advertisement

அத்தனை பேர் குழுமியிருந்த, மங்கல இசையும், மக்கள் இசையும் மிகுந்திருந்த மண்டபத்தில் சட்டென அமைதியை உணர்ந்தாள் சுஹாசினி. 

கணவனின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். குழந்தையை அவளிடம் கொடுத்து, இன்னமும் இறுக்கமாக அவனைப் பற்றியிருந்த கணவனைப் பார்க்கையில், இரக்கம் சுரந்தது. 

‘ஷ்ரவன், உங்களுக்கு முக்கியமில்லையா விக்ரம்?’ மனத்தில் துளிர்த்த கேள்வியை அப்படியே விழுங்கி, “சாரி, விக்ரம்.” என்று கணவனின் பழுப்பு விழிகளை ஊடுருவி சொன்னாள். 

“நான் பதட்டத்தில் பேச தெரியாம.. எஸ், நோ மாத்தி மாத்தி சொல்லிட்டேன். நீங்க அதை சீரியஸா எடுக்காதீங்க பிளீஸ். என்னை உங்களுக்குத் தெரியாதா?” அவள் இரைஞ்சுதலாக கேட்க, அவன் கண்களில் கனன்ற கோபம் சற்றே குறைய ஆரம்பித்தது. 

“உன்னை, எனக்கு நல்லா தெரியும் ஷோனா. ஆனா, நீ எப்போ தான் என்னை தெரிஞ்சுக்க போற? எப்போ தான் என்னை புரிஞ்சுக்க போற? ஷ்ரவன் இல்லாம, என்னை எனக்காக, விக்ரமா எப்போ தான் நேசிக்கப் போற?” அந்தக் கேள்வியில் அடிப்பட்டு போனாள் சுஹாசினி. 

“நான்.. உங்களை.. நேசிக்கலையா? நீங்க எப்படி இந்த கேள்வி கேட்கலாம்?” மனதை போலவே குரலும் உடையக் கேட்டாள். 

“நமக்கு குழந்தை வருதுனு சந்தோஷமான செய்தியை சொல்லிட்டு.. அதுக்கு, நீ என்னை குற்றம் சாட்டுற ஷோனா. பண்ண தானே?” அவன் ஆணித்தரமாக கேட்க, அவளிடம் பதிலில்லை. 

அவள் பதட்டத்தில் அதிகம் யோசிக்காமல் பேசியதை அவனும் அறிவான். ஆனாலும், காயம் பட்ட அவன் மனது கேள்விக் கேட்டது. அவனின் எல்லாமுமான மனைவி, தங்களின் மகவை மகிழ்வுடன் வரவேற்கவில்லை எனும் வருத்தம் அவனுக்கிருந்தது. அதை வார்த்தையில் காண்பிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். 

“நாம குழந்தைக்கு பிளான் பண்ணல விக்ரம். அப்படியிருக்கும் போது திடீர்னு எதிர்ப்பார்க்காம, நடக்கும் போது.. என்னையும் அறியாம ரியாக்ட் பண்ணிட்டேன். ஐ அம் சாரி. முன்னாடி நீங்களே சொன்னது தான். சட்டுனு உங்களை குத்தம் சொல்லி நான் தப்பிக்கலாம்னு..”

“இதெல்லாம் குத்தம் சொல்ற விஷயமா ஷோனா? உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல” அவன் குரலில் கோபத்தைக் காட்டிலும் வலியே நிறைந்திருந்தது. 

“விக்ரம், நாம குழந்தையை பத்தி ஏற்கனவே தெளிவா பேசியிருக்கோம். ரெண்டு வருஷம் கழிச்சு தானே…”

“இப்போ, இங்க வச்சு இந்த சண்டை தேவையா ஷோனா? உன் கண்ணு கலங்கியிருக்கு? இப்போ உன் வீட்டாளுங்க பார்த்தா என்ன நினைப்பாங்க? நான் என்னமோ உன்னை திட்டுறது போல, சண்டைக்காரன் போல தெரியும். தேவையா?” மனைவியை பேச விடாமல், கடுகடுத்தான் விக்ரம்.

“நாம சிரிச்சு சிரிச்சு பேசிட்டு திரிஞ்சா தான் எங்க கேங் சந்தேகப்படுவாங்க. சண்டைப் போட்டா தான் சந்தோஷமா இருக்கோம்னு நிம்மதியா சிரிப்பாங்க. உங்களுக்கு என் பிரெண்ட்ஸ் பத்தியும் தெரியல. லைஃப் லாஜிக்கும் தெரியல” கோபத்துடன் அவள் சொல்ல, அவள் சொன்ன விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது.

“சரி. எனக்கு அது தெரியாமயே இருக்கட்டும். நீ இப்போ என்ன பண்ண போற இந்த குழந்தையை?” அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு கணவனின் கண்களைப் பார்த்தாள். 

“ஆஷே உள்ளோனக்கா, த்ராஸ் ஜதா” (Don’t talk like this, it hurts -Ashen ulonakaa, thraas jhaataa) என்று அவள் கொங்கனியில், “இப்படி பேசாதீங்க. கஷ்டமா இருக்கு” என்று சொல்ல, 

அவனோ, “என்ன பண்றது ஷோனா?” என்று தமிழில் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களின் அந்த மொழி மாற்றத்தை மென்நகையுடன் கேட்டப்படி அங்கு வந்தான் உதய். 

“சுஹாசினி” என்ற அவன் அழைப்பில், இருவரும் பதறி திரும்பினர். விக்ரமின் கரம் தானாக நீண்டு மனைவியை தன் பக்கம் இழுத்தது. 

“அண்ணா..” என்று அவள் தடுமாற, “என்னாச்சு? குழந்தைக்கு எதுவும் முடியலையா?” என்றபடி செல்வாவும் அந்நேரம் அங்கு வந்து நிற்க, இப்போது தான் நிரம்பவும் பதறினாள் சுஹாசினி. விக்ரம் மனைவியின் தோளில் கைப் பதித்து அழுத்திக் கொடுத்தான். அவளின் மனத்திடம் அதில் மீள, “குழந்தைக்கு ஒன்னும் இல்ல ண்ணா” என்று செல்வாவிடம் சொன்னவளின் பார்வை உதய் மேல் படிய, “நான் பார்த்துக்கறேன் செல்வா. நீங்க போய் வீரா கூட இருங்க” என்றான் உதய். 

செல்வா அங்கிருந்து நகரவும், “இப்போ சொல்லுங்க விக்ரம்” என்றான் உதய். 

“ஹாஸ்பிடல் போகணும் ண்ணா” மெலிதான தயக்கத்துடன் சொன்னாள் சுஹாசினி. 

உதயின் கண்கள் தானாக கூட்டத்தில் ராகவனை தேடியது. 

“இல்ல ண்ணா. எனக்குப் பார்க்கணும். லேடி டாக்டர். ராகவ் வேணாம்” என்றவள், “நீங்க இப்போ தானே வந்தீங்க. இங்க இருங்க. நாங்க தனியா போய்ட்டு வந்திடுறோம்” என்றவளை கண்டனத்துடன் முறைத்தான் உதய். 

“ராகவி புரிஞ்சுப்பா. நீ வா, நாம ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாம்” என்றவனின் குரலை மறுக்க முடியாமல் திரும்பிக் கணவனை பார்த்தாள் அவள். 

“ப்ரோ, ஒன்னும் அவசரமில்ல. வீட்டுக்கு போன பின்னாடி பார்த்துக்கலாம்” என்ற விக்ரமின் பதில் உதயை அசைக்கவில்லை. 

“ஹாஸ்ப்பிட்டல் இப்பவே போகலாம் விக்ரம்” மனதை கண்களில் தேக்கி வைத்து சுஹாசினி கேட்க, மறுக்க முடியவில்லை அவனால். 

உதய் நின்ற இடத்தில் இருந்து மனைவியை திரும்பிப் பார்த்து, அவளிடம் கண்களால் செய்தி சொல்லி, விடை பெற்று இவர்களோடு நடந்தான். 

உதயின் காரில் மருத்துவமனை நோக்கி விரைந்தார்கள். 

சுஹாசினி, விக்ரம் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த போதே எதிர்காலம் குறித்து தெளிவாக பேசியிருந்தார்கள். 

இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இருவரும் அமர்ந்து பேசி ஒருமனதாக முடிவு செய்திருந்தார்கள். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுத்திருந்தார்கள். 

அதனால் தான் நாள் தள்ளிப் போனதை உணர்ந்த நொடி அதிர்ந்து போனாள் சுஹாசினி. 

ஷ்ரவனுக்கு இன்னும் ஒரு வயது கூட முடிந்திருக்கவில்லை. அவன் ஓரளவு வளர்ந்து வரும் வரை தங்களின் முழு கவனமும் அவனுக்குத் தேவைப்படும். மேலும், இன்னொரு குழந்தையை கையாளும் திறமையும், திறனும், மனநிலையும் இப்போது அவளுக்கு இல்லை என்பது நிதர்சனமாக இருக்க, தங்கள் குழந்தையின் வரவை தள்ளிப் போட்டிருந்தார்கள். அந்நேரம் அவர்களின் அந்த முடிவு இருவருக்கும் சரியாகப்பட்டது. ஆனால், தற்போது தங்களை நினைத்தே தடுமாறினார்கள். 

தன் குழந்தை என்று வரும் போது விக்ரமே, தன் சொந்த அண்ணனின் மகனை ஒதுக்கிய நொடியை, அவன் மனம் புரிந்தாலும் அவளால் எளிதாக கடக்க முடியவில்லை. விக்ரமே இப்படியிருக்கையில் தான் வேறொருவனை மணந்திருந்தால் ஷ்ரவனின் நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை இப்போது கற்பனை செய்து பார்க்கக் கூட அவளுக்கு கசந்தது. ஆனாலும், ஏனோ விக்ரமை குற்றம் சாட்ட மனது வரவில்லை அவளுக்கு. 

அவனுக்கென்று ஒரு சிறிய உலகத்தை அவன் உருவாக்க விரும்புவதை, தன் சொந்த குழந்தையை கைகளில் ஏந்த விரும்புவதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. மெல்ல நகர்ந்து கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள். ஷ்ரவனை தோளில் சுமந்திருந்தவன், மனைவியின் தலையில் தன் நாடிப் பதித்து, “சாரி” என்றான் மனப்பூர்வமாக. 

“நானும்” என்றாள் மனைவி. 

பத்தே நிமிடங்களில் மருத்துவமனை வந்திருந்தார்கள். ராகவியின் அப்பா அங்கே மருந்தகம் வைத்திருக்க, மருத்துவரை காத்திருப்பின்றி பார்ப்பது அவர்களுக்கு சுலபமாகி இருந்தது.

பல வருடங்களாக தெரிந்த மருத்துவரை புன்னகையுடன் ஏறிட்டு, தன் சந்தேகத்தை பகிர்ந்தாள் சுஹாசினி. மருத்துவர் சில கேள்விகள் கேட்டு, தேவையான பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். 

பட்டு சேலை, நகை அணிந்து முழு அலங்காரத்துடன் மணப்பெண் போல மருத்துவமனையில் உலவியவளை பல கண்கள் கேள்வியுடன் நோக்கியது. 

இரத்த, சிறுநீர் பரிசோதனைகளுக்கு மாதிரிகள் கொடுத்து விட்டு, காத்திருப்பது பெருங்கொடுமையாய் அவர்களுக்கு இருந்தது. 

அதனால், ஓரிடத்தில் அமர முடியாமல், நிலைக் கொள்ளாமல் நடந்துக் கொண்டேயிருந்தாள் சுஹாசினி. உதய் அவர்களுக்கு வேண்டிய தனிமையை கொடுத்து, காரில் சென்று அமர்ந்திருந்தான். 

இப்போது ஷ்ரவன் விழித்திருக்க, அவனை கவனித்துக் கொண்டிருந்தான் விக்ரம். சுஹாசினிக்கு இருந்த பதட்டத்தில் எதையும் செய்ய முடியவில்லை அவளால். 

அவள் மனம் கடிகார நொடி முள்ளின் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. 

பரிசோதனை முடிவுகள் வர, அவளுக்கு முன் விக்ரம் அதை கை நீட்டி வாங்கியிருந்தான். மனைவியின் மனது அவனுக்கு துல்லியமாக தெரிந்திருந்தது. 

ஆனாலும், எத்தனை முயன்றும் அவனாலும் கை நடுக்கத்தை தவிர்க்க முடியவில்லை. அவனிடம் இருந்து குழந்தையை படக்கென வாங்கிக் கொண்டாள் சுஹாசினி. மனைவியின் புறம் சாய்ந்து, ரிப்போர்ட்டை பிரித்தான். 

“நெகடிவ்” என்றது முடிவு. 

அவளையும் அறியாமல் ஒரு சத்தமான கேவல் சுஹாசினியிடமிருந்து வெளிப்பட்டது. அவனுக்குத் தெரியும். அவளால் இல்லை என்ற செய்தியை தாங்கி கொள்ள முடியாதென. 

“சாரி” கணவனின் தோள் வளைவில் முகம் புதைத்து, பொது இடம் என்றும் பாராமல் அழத் தொடங்கியிருந்தாள் சுஹாசினி. 

கதறி அழ முடியாது சத்தத்தை அடக்கியதில் அவள் உடல் குலுங்க, கண்கள் கண்ணீரை நிறுத்தாமல் சிந்த, விக்ரமின் தோளும், மார்பும் நனையத் தொடங்கியது. 

“ஷோனா.. பிளீஸ். இப்படி அழாத. பிளீஸ்” அவனுக்கு அந்த முடிவை வாசித்ததும், வருத்தமும், ஏமாற்றமும் நெஞ்சை அடைத்தது. அதை பின்னுக்கு ஒதுக்கி விட்டு, மனைவியை சமாதானப்படுத்தும் காரியத்தில் இறங்கினான் அவன். 

“சாரி..” மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள் சுஹாசினி. ஒற்றை நொடி என்றாலும், தான் எதிர்மறையாக நினைத்ததால் தான் இப்படி நடந்து விட்டதோ என்று மறுகினாள் அவள். 

ஆனால், அதற்கு அவசியமில்லை என்றார் மருத்துவர். 

“பிளட்ல ஹீமோகுளோபின் ரொம்ப கம்மியா இருக்கு. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம நார்மலா இருந்தா எல்லாமே நல்லதா தான் நடக்கும். அடுத்த முறை சரியா பிளான் பண்ணுங்க. ஓகே? இப்போ நான் ஐயன் அண்ட் விட்டமின் டேப்லெட்ஸ் எழுதி கொடுக்கறேன். உடம்பை பார்த்துக்கோங்க” மருத்துவர் பேசியது எதுவும் அவளின் மனதில் பதியவில்லை. விக்ரம் தான் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டிருந்தான். 

மருத்துவ ஆலோசனைக்கு பின் அவர்கள் வெளியில் வர, அவர்களின் முகம் பார்த்தே முடிவை தெரிந்த கொண்ட உதய், எந்தக் கேள்வியும் கேட்டு அவர்களை சங்கடப்படுத்தவில்லை.

அவர்கள் கல்யாண மண்டபத்தில் இருந்து கிளம்பி, மருத்துவமனை வந்ததுமே வெங்கடேஷிற்கு, “வெளியில் இருக்கிறோம்” என்று தகவல் சொல்லியிருந்தான் உதய். அவ்வளவே. இப்போது அவர்களை நேராக வீட்டில் கொண்டு போய் விட்டான். சுஹாசினியின் முகம் பார்த்து புன்னகைத்து, விக்ரமின் தோளில் தட்டிக் கொடுத்து, “நான் அட்வைஸ் பண்ண விரும்பல. இதையும் நல்லபடியா கடந்து வாங்க. நாளை, எப்போதும் நல்ல நாளே” என்றான் ஆறுதலாக. 

Advertisement