Advertisement

அன்று முழுவதும் அவளே ஷ்ரவனை சுமந்து கொண்டு சுற்ற, அவர்களுக்கு நடுவில் செல்லவில்லை அவன். 

இரவு உணவு முடித்து, அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான். 

“நான் தூங்க வைக்கிறேன். நீ போய் மலர் கூட இரு” அவன் சொல்ல, “இல்ல. அவங்க எல்லாம் மண்டபத்துக்கு போய்ட்டாங்க. நாம காலையில நேரா வந்திடுறோம்னு சொல்லிட்டேன். அங்க கூட்டத்தில், சத்தத்தில ஷ்ரவன் தூங்க மாட்டான்.” என்றாள். 

“ஓகே” என்றவன், தனது மடிக்கணினியை இயக்கி, எதையோ ஓட விட்டு, மனைவியின் பக்கமாக நகர்த்தி வைத்து விட்டு குழந்தையுடன் படுக்கைக்கு போனான். 

“அந்த ராஜா, தன் ராணியை முதல் முறையா பார்க்கும் போது கோபத்தில் அப்படி முறைச்சாராம்” மகனிடம் கதை சொல்லும் கணவனின் குரலைக் கேட்டபடியே கண்களை கணினிக்கு திருப்பினாள் அவள். 

அங்கும் அவளே இருக்க, அதிர்ச்சியில் விரிந்தது அவளது விழிகள். 

ஷ்ரவன் காரின் பின்னிருகையில் அமர்ந்தபடி அவளைப் பார்த்து, “ம்மா” என்றழைத்துக் கொண்டிருந்தான். புன்னகைத்தாள்.

காணொளி தொடர, இப்போது வீட்டின் படுக்கையில் நின்றவாறு, “ம்மா” என்றான். அவளுக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வர, உதடு கடித்தாள். மகனது ஓவ்வொரு அசைவையும் புகைப்படம், காணொளி என எடுத்து வைத்திருக்கிறாள் அவள். ஆனால், அவளை அம்மா என்று அழைத்த கணம் ஓடிப் போய் அவனை தூக்கி முத்தமிட்டது மட்டுமே அவளுக்கு நினைவில் இருக்கிறது. இப்பொழுது எதிர்பாராமல் இப்படி காணொளியாக பார்க்க உள்ளம் கனிந்தது. கணவனின் மேல் காதல் பரிபூரணமாக வந்தது.

மகனுக்கு கதை சொல்லியபடி மனைவியை திரும்பிப் பார்த்தான் விக்ரம். “தேங்க்யூ” உதடசைத்தாள். 

“இங்க வா” விக்ரம் அழைக்க, கணினியை மூடி விட்டு கணவனிடம் சென்றாள் அவள். இப்போது மனைவிக்கும் சேர்த்தே கதைச் சொன்னான் அவன். 

“அந்த ராணி, உண்மையில் ராணி இல்லையாம். தேவதையாம். உன்னோட, என்னோட லைஃபை பரிபூரணமாக்க வந்த தேவதை அவ. அந்த ராஜா கூடவே சண்டை போட்டு அவரை மீட்ட ராணி அவங்க. உனக்கு அவங்களை நல்லா தெரியும்.‌ நீ அவங்களை அம்மா சொல்லிக் கூப்பிடுவ…” மேலே கதை சொல்ல விடாமல், கணவனின் தோளில் தலையால் இடித்து, வெட்கச் சிரிப்பு சிரித்து, “இதுக்கு பேர் தான் கதைச் சொல்றதா?” என்றாள் நக்கல் சிரிப்புடன். 

“எஸ். ஆனா, இது பெட் டைம் ஸ்டோரி மட்டுமில்ல. ரியல் ஸ்டோரியும் கூட” மனைவியின் உச்சியில் இதழ் பதித்து சொன்னான் விக்ரம். 

ஏனோ அந்த நிமிடம் அவனுடன் வாயாட தோன்றாமல், அவனது அண்மை தந்த அமைதியோடு கண்களை மூடி உறங்கிப் போனாள் சுஹாசினி. 

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, கிளம்பி நேரடியாக திருமண மண்டபத்துக்கு சென்றார்கள் அவர்கள். 

வெங்கடேஷ் முந்தின இரவே சென்றிருக்க, அவர்களுக்கு துணையாக சாந்தாம்மா உடன் வந்தார். குழந்தையை கணவனிடம் கொடுத்து விட்டு, மணமகள் அறைக்கு அவசரமாக ஓடினாள் சுஹாசினி. 

“வாவ். யாரிந்த அழகி?” அங்கிருந்த வீராவின் தங்கை அவளைப் பார்த்து கேட்க, “ஆமா. முதல்ல இவங்க யாரு சொல்லு, மலரே?” என்று அந்தப் பெண்ணை பற்றி தோழியிடம் விசாரித்தாள் சுஹாசினி. 

“இது, காயத்ரி. வீரா தங்கச்சி. சிங்கப்பூரில் இருக்காங்க” மலர் அறிமுகப்படுத்த, அடுத்த நிமிடமே நெருங்கிய தோழிகள் போல கலகலக்கத் தொடங்கினார்கள் இருவரும். 

முகூர்த்த நேரம் நெருங்க, மணமகளாக, பேரழகியாக அமர்ந்திருந்த பனிமலரை மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். 

மணமக்கள் மணமேடையில் மந்திரங்களை உச்சரிக்க, இங்கு சுஹாசினி, ராகவன் இருவரும் மலரின் குடும்பத்துடன் இணைந்து ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். 

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் சோர்ந்து போய் கணவனை கண்களால் தேடினாள். தன் இரட்டை குழந்தைகளில் ஒன்றை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த ராகவியின் பக்கத்தில், விக்ரம், மதுமிதா என அனைவரும் இருக்க, அவர்களை நோக்கி நடந்தாள். 

ராகவியை நெருங்கி அமர்ந்தாள் சுஹாசினி. ராகவனின் வருங்கால மனைவி மதுமிதாவின் கையில் இருந்தது ராகவியின் மற்றொரு குழந்தை. 

“மாம்ஸ் சீக்கிரம் வந்துடுவார் பாப்பா. நீ டென்ஷன் ஆகாம இரு. உனக்கு பசிச்சா, என்கிட்ட சொல்றதுக்கு என்ன? இப்படி பசியோட முழிச்சுட்டு உட்கார்ந்து இருப்பியா?” அந்நேரம் அங்கு வந்து ராகவியை அதட்டினான் ராகவன். உணவு பரிமாறும் இடத்தில் இருந்து பெரிய கப்பில் கேசரி எடுத்து வந்திருந்தான் அவன். 

சிறிய கரண்டியில் அதை எடுத்து தனது இரட்டை சகோதரிக்கும், சுஹாசினிக்கும் ஊட்டி விடத் தொடங்கினான். அப்படியே அவள் கையில் இருந்த ஷ்ரவனுக்கும் அவன் கொடுக்கப் போக, “குழந்தைக்கு இனிப்பு வேணாம் ராகவ்” என்று மறுத்தாள் சுஹாசினி. 

“ம்ம்” என்றபடி அவளுக்கு ஊட்டினான். மூன்று இருக்கை தள்ளி அமர்ந்திருந்த மதுமிதா அவர்களை பார்வையால் சுட்டெரித்து கொண்டிருந்தாள். 

அவள் மட்டுமா? அருகில் இருந்த விக்ரம் கூட அவர்களை முறைக்கவே செய்தான். 

அந்நேரம் அங்கு வந்த காயத்ரி, “வாவ், யாரிந்த ஹீரோ? ஹிரித்திக் ரோஷன் போல இருக்கார்” என்று சொல்லியபடி, விக்ரமை நெருங்கி, “ஹாய்” என்று சொல்ல, வேகமாக அவளைப் பார்த்து, “ஓய்” என்றாள் சுஹாசினி. 

“அந்த ஹீரோ, என் ஹீரோ. மீட் மிஸ்டர். சுஹாசினி விக்ரம் தேசாய்” என்று அவள் அறிமுகப்படுத்த, சத்தமாக சிரித்தான் விக்ரம். 

“அச்சோ, எனக்கு ஷாக் கொடுத்துட்டீங்க. என் மனசை உடைச்சுட்டீங்க” என்று புலம்பிக் கொண்டே திரும்பி மணமேடையை நோக்கி நடந்தாள் அவள். அங்குச் சென்று செல்வாவிடம் அவள் பேசுவது பார்த்து சிரித்தாள் சுஹாசினி. 

“நீ சாப்பிடு சுஹா” ராகவன் சொல்ல, உணவை வாங்கினாள். விக்ரமின் விழிகள் சுருங்க, “என்ன?” புருவம் உயர்த்தி விசாரித்தாள் சுஹாசினி. 

“பசிக்குது” என்றான் அவன். 

“ஐயோ.. கல்யாணம் முடிய நேரம் இருக்கே. அதுக்கு அப்புறம் தான் நாம சாப்பிட போக முடியும்” அவள் சொல்ல, “ம்ம். அவ்ளோ நேரம் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. கொஞ்சம் என் பக்கமா வா, நான் எடுத்துக்கறேன்” என்று கிசுகிசுத்தவனின் பார்வை மனைவியின் உதட்டின் மேல் நிலைத்திருக்க, கண்ணை உருட்டி அவனை மிரட்டினாள் மனைவி. 

“ஃப்ராடு ஹீரோ” அவள் சொல்ல, பாராட்டியதை போல சத்தமாக சிரித்தான் அவன்.

“நான் போய் மலர் பக்கத்தில இருக்கேன்” சுஹாசினி தப்பிக்க வேண்டி, எழுந்து மணமேடைக்கு ஓடினாள். 

அங்கே மணமேடையில் நிமிர்ந்து நேராக பார்த்து அமர்ந்திருந்த வீரா, அடிக்கடி அருகில் திரும்பி மலரிடம், தனது மணமகளிடம் பேச, “மிஸ்டர் வீரசிவம். இன்னைக்கு உங்களுக்கு தான் கல்யாணம். இப்படி மணமேடையில் உட்கார்ந்து கதைப் பேச கூடாது” என்று போலி கண்டிப்புடன் அவள் சொல்ல, வெட்கப்பட்டு சிரித்தான் வீரா. 

“அட, மலரே, என்ன நடக்குது இங்க?” என்று அவள் ஆச்சரியப்பட, “வீரா, உங்க வீட்டு ஆளா முழுசா மாறி உட்கார்ந்து இருக்கான் மா. அவ்ளோதான்” சிரிக்காமல் நக்கல் பேசினான் செல்வா. மணமகனின் பக்கத்தில் நின்றிருந்த அவனை முறைத்தாள் சுஹாசினி. 

“சுஹா..” மலர் சொல்ல, மூவரும் சட்டென அமைதியாகினார்கள். 

அடுத்து வந்த பொன்னான நிமிடம் ஒன்றில், மலரின் கழுத்தில் திருமாங்கல்யம் சேர்த்து, மூன்று முடிச்சிட்டு வீரசிவம், பனிமலரின் வீராவாகி இருந்தான். இருவரும் மனதார, திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர். 

அதன் பின் சடங்கு, சம்பிரதாயங்கள் தொடர, சுஹாசினியின் கையை பற்றி சுரண்டினாள் மலர்.

“ஏதாவது வேணுமா மலரே?” சுஹாசினி அக்கறையாக கேட்க, “ரொம்ப அழகா இருக்க. முகம் எல்லாம் மின்னுது” என்று கண் சிமிட்டி சொன்னாள் மலர். 

“அது மேக் அப், மக்கு” என்றாள் சுஹாசினி கிண்டலாக. 

“ம்ம். நான் வேற நினைச்சேன்” என்று மலர் உதடு சுழிக்க, “நினைப்ப…” என்ற சுஹாசினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. 

“அடி வெளுக்க போறேன் உன்னை. தங்கை நீ இருக்கும் போது.. உன்னை கரை சேர்க்காம, அக்கா நான் கல்யாணம் பண்ணதே பெருசு. இதுல குழந்தை, குட்டி எல்லாம்.. வாய்ப்பேயில்ல. நீ குழந்தை பெத்ததுக்கு அப்புறம் தான் நான் குழந்தை பெத்துப்பேன்னு வேண்டுதல் வச்சுருக்கேன். தெரியுமா?” படபடவென அவள் சொல்ல, “ஆனாலும், சாமி பாவம் சுஹா” நமுட்டு சிரிப்புடன் சொன்னாள் மலர். 

“வீரா கூட சேர்ந்து ரொம்ப கெட்டுப் போய்ட்ட நீ” ஒற்றை விரல் நீட்டி சொல்லி விட்டு, மேடையில் இருந்து இறங்கி கணவனை நோக்கி நடந்தாள் சுஹாசினி. 

செந்தாமரை நிற பட்டுச் சேலையில், மிதமான அலங்காரத்தில், புன்னகை பூசி, பொன் நகைகள் அணிந்து, அழகே உருவாக அசைந்தாடி வந்த மனைவியின் மேல் அழுத்தமாய் பதிந்தது விக்ரமின் பார்வை. 

அவள் கூந்தலில் இருந்த மல்லிகையை போல மலர்ந்தது அவன் உதடும், உள்ளமும். 

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக, கவர்ச்சியாக இருந்த கணவனை பார்த்து கண்ணடித்தாள் மனைவி. காலையில் வேட்டியை கட்ட, அவன் செய்த அழும்புகளின் நினைவில், அவளுக்கு கன்னம் சிவக்க, சிரிப்பு வந்தது. 

கணவனுக்கு மறுபக்கம் சென்று ராகவிக்கு நெருக்கமாக அமர்ந்தாள் அவள். 

“சுஹா” மெல்ல அழைத்தாள் ராகவி.

“என்ன ரா?”

“எதுவும் மறைக்கறியா என்கிட்ட?”

“இல்லையே. உன்கிட்ட என்ன மறைக்கப் போறேன்? என்ன கேட்கிற நீ, எனக்குப் புரியல” சுஹாசினி புருவங்களை சுருக்க, “உன் முகமே ஜொலிக்குது சுஹா. பளபளப்பு கூடி, அவ்ளோ அழகா இருக்க. அதான் சந்தேகமா கேட்டேன்” ராகவி, தோழியின் கண் பார்த்துச் சொல்ல, அசட்டையாய், “அது மேக் அப்..” என்று தொடங்கிய சுஹாசினி,

“உன் சந்தேகம் என்ன ரா?” என்று நேரடியாக கேட்டாள். 

“எதுவும் நல்ல செய்தியா சுஹா?” ராகவி கேட்க, நிஜமான அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைத்தாள் சுஹாசினி. 

“என்ன இப்படி ஒரே நேரத்தில் எல்லோரும் பாட்டி ஆகிட்டீங்க. ஒரே கேள்வியை கேட்கறீங்க? அப்படியெல்லாம் எதுவும் இல்ல. அப்படியே இருந்தாலும், உங்க கிட்ட தானே முதல்ல சொல்லுவேன்” என்று சடைத்துக் கொண்டாள். 

“சுஹா, நான் ஒரு ஆர்வத்துல கேட்டேன். வேற ஒன்னுமில்ல. நீ கோவிச்சுக்காத” ராகவி சமாதானம் செய்ய, “இந்த ஹீரோ என்னை ஓவரா தாங்குறார். நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதான் என் முகத்தில பளிச்சுன்னு தெரியுது போல.” என்று சொன்ன சுஹாசினி, அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தாள். 

அவனோ தோளில் உறங்கிக் கொண்டிருந்த மகனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறுகரத்திற்கு அலைபேசியை கொடுத்திருந்தான்.

அவளுக்கு சட்டென சந்தேகம் வந்தது. மனதிற்குள் நாள் கணக்கை சரிப் பார்க்க அதிகமாய் இடறியது. சடாரென்று அவளின் இதயமும் பதட்டத்தில் இடம்மாறி தொண்டைக்கு வந்திருந்தது. 

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் நாள் தள்ளிப் போய் இருந்தது. சென்னை வரும் ஆவலில் எதையும் கவனித்திருக்கவில்லை அவள்.

பயம், பதட்டம், கவலை என கலவையான உணர்வு போராட்டத்தில் அவளுக்கு கண்ணை இருட்டியது. 

கணவனுக்கு நெருக்கமாக இருக்கையை இழுத்துப் போட்டு, “விக்ரம்” மென்மையாய் அழைத்தாள். 

“என்ன ஷோனா?”

“இப்படி வாங்க” அவனை அழைத்துக் கொண்டு ஓரமாக சென்றாள். 

“ஷோனா, என்னாச்சு? வீட்டுக்கு போகணுமா? வாட்ஸ் ராங்?” அவன் பதற, “ஐ.. ஐ.. ஐயோ..” என்றவள், “நான்.. பிரக்னன்ட். இல்ல, ஐ மிஸ்டு மை லாஸ்ட் பீரியட்ஸ். இல்லயில்ல. டென் டேஸ் டிலே..” அவளின் சுபாவமாக உளறினாள். 

“ஷோனா..” பார்வையாளர் கூட்டம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் மனைவியை நெருக்கமாக இழுத்து, அவளின் கண் பார்த்தான் விக்ரம். 

அவன் கண்களில் அப்படியொரு மகிழ்ச்சி. அவளோ, பதட்டத்தில் உள்ளங்கைகள் வியர்க்க, “எல்லாம் உங்களால தான்” என்று குற்றம் சாட்டினாள். சட்டென சிறு குரலில் அவர்களுக்குள் வாக்குவாதமும், சண்டையும் மூழ, “ஷோனா” என்று மனைவியை அதட்டினான் விக்ரம். 

“அப்போ, உனக்கு நம்ம குழந்தை வேணாம். அப்படித் தானே?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க, “ஆமா” என்றவள், கண்ணை மூடித் திறந்து, “இல்ல..” எனும் முன் விக்ரமின் கண்களில் வலி மிகுந்திருந்தது. 

அதுவரை இறுக்கமாக பற்றியிருந்த மனைவியின் கரத்தை பட்டென விட்டான் அவன். அவன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த ஷ்ரவனை அவளிடம் கொடுத்தான். 

“உனக்கு எப்பவும் இவன் மட்டும் தான் முக்கியம் இல்ல?” விக்ரம் கேட்க, சுஹாசினி அதிர்ச்சியில் உறைந்து போய் பேச்சு மறந்திருந்தாள். 

Advertisement