Advertisement

சுஹாசினி, தன்னை முறைத்த கணவனைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு, எதிரே நின்றிருந்த செல்வாவைப் பார்த்தாள்.

“என் பையன் வீராண்ணாவை பெரியப்பான்னு கூப்பிடும் போது, அவர் ப்ரெண்ட் நீங்களும் பெரியப்பா தானே?” என்று அவள் கேட்க, வேறு வழியின்றி ஒப்புதலாக தலையசைத்து முன்னே நடந்தான் செல்வா.

சுஹாசினி, விக்ரம் இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர். 

“நாங்க என்னதான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும், எங்க குடும்ப ஆளுங்களை உறவு முறை சொல்லி தான் கூப்பிடுவோம். அதே போல, நாளைக்கு எங்க பிள்ளைங்களுக்கு நீங்க எல்லாம் உறவா தான் தெரியணும்னு நினைக்கிறோம். அதான், உதய் மாமா, ராகவ் சித்தப்பா, வீரா பெரியப்பா. அதுனால, நீங்களும் பெரியப்பா. ரொம்ப யோசிச்சு லாஜிக் பார்த்து மண்டையை குழப்பிக்க நாங்க விரும்பல. எங்க குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் எங்க நட்பை, உறவா மாற்ற விரும்பறோம். அவ்ளோதான்” நடந்துக் கொண்டே சுஹாசினி, செல்வாவிற்கு விளக்கம் கொடுக்க, புருவங்களை லேசாக ஏற்றி, இறக்கி, “ம்ம்” என்றான் அவன். 

“பெரியப்பா சொன்னதும் உங்க முகமே மாறிப் போச்சே” அவள் மேலும் பேச்சை வளர்க்க, “ஷோனா” என்று மனைவியை எச்சரித்தான் விக்ரம். 

“மலரை தவிர வேற எந்தப் பொண்ணுங்க கிட்டயேயும் பேச மாட்டார் சார். தெரியுமா? இவருக்கு பொண்ணுங்களை கண்டாலே கடுப்பு. அதுனால, இவரை வம்பிழுக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்” குறும்பு சிரிப்புடன் அவள் சொல்ல, அவளின் முதுகில் பாதுகாப்பாக கைக் கொடுத்து நடந்தபடி சிரித்தான் விக்ரம். 

அதைப் பார்த்து சற்றே கடுப்பாகி காரை நோக்கி வேக நடைப் போட்டான் செல்வா. 

“ஹலோ, அண்ணா. என் ஹீரோவை விட நீங்க எல்லோரும் ரொம்ப பெரியவங்க. என்னதான் நீங்க எல்லோரும் ஹீரோவா இருந்தாலும், என் நிஜ ஹீரோ தான் உங்களை எல்லாம் விட சின்னவர். சோ, பெரியவங்க நீங்க, பெரியப்பா தான்” அவள் நமுட்டு சிரிப்புடன் சத்தமாக சொல்ல, சிரித்தபடி முன்னே நடந்தான் செல்வா. 

“உங்க அம்மாவை எப்படிடா சமாளிக்கிறா செல்லம்?” ஷ்ரவனிடம் கேள்விக் கேட்டான் அவன். 

என்னதான் அவன் மெதுவாக பேசியிருந்தாலும் அது சுஹாசினியின் காதில் விழுந்து விட, “நாளைக்கு இதே கேள்வியை நானும் கேட்க வேண்டி வரும். ஞாபகம் இருக்கட்டும் ண்ணா” பின்னிருந்து நமுட்டு சிரிப்புடன் சொன்னாள். 

“முதல்ல நான் கல்யாணம் பண்ணா தானே…” அவன் சொல்லி முடிக்கும் முன்பே இடையிட்டு, “நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்” என்றாள் சுஹாசினி. 

“வில்லன் வீராவை மாற்ற ஒரு மலர் வந்த மாதிரி, இந்த செல்வாவை மாற்ற ஒரு சக்தி வராமயா போய்டுவா? அன்னைக்கு இருக்கு” அவள் சொல்ல, மழைத்துளி ஒன்று அவர்களின் மேல் பட்டு தெறித்து, “ததாஸ்து” என்றது. 

மழை தூறலாக பொழியத் தொடங்கவும், சுஹாசினியின் பேச்சை பொருட்படுத்தாமல், குழந்தையை பாதுகாப்பாக பிடித்துக் கொண்டு, வேகமாக காரை நோக்கி ஓடினான் செல்வா. அவனைத் தொடர்ந்து சுஹாசினியும், விக்ரமும் காரில் ஏறிக் கொண்டார்கள். 

விக்ரம் குழந்தையை வாங்கிக் கொள்ள, பெட்டிகளை பின்னால் அடுக்கி, முன்னே வந்தமர்ந்து காரை இயக்கினான் செல்வா. 

ஒரு கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு, மறுகையால் மனைவி முகத்தில் இருந்த ஈரத்தை துடைத்த விக்ரமை வெறித்துப் பார்த்தான் அவன். 

இது போன்ற காட்சிகள் அவன் மனதை அவ்வப்போது மென்மையாக்க, அதை விரும்பாதவன் ஒரு வேகத்துடன் காரை நகர்த்தினான்‌.

இந்த நட்பு கூட்டத்தில் இருந்து அவன் விலகியே நிற்பதின் காரணம் இதுதான். இந்த ஆண்கள் அனைவரும் மனைவியை மகாராணியை போலவே நடத்துவது. மனைவி இவர்களின் முன்னால் நின்றால் உலகையே மறக்க வைக்கும் அளவிலான இவர்களின் அன்பை அவனால் புரிந்துக் கொள்ளவே முடிந்ததில்லை. 

அப்படிப் பார்க்கையில் நண்பன் வீராவின் மாற்றம் கூட அவனை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒன்று தான். மேலும், தங்களிடம் நெருங்கும் அனைவரையும் அன்பால் இணைத்துக் கொள்ளும் இவர்களை எத்தனை முயன்றும் புறக்கணிக்க முடியவில்லை அவனால். 

“அப்புறம் தனிக் குடித்தனம் எப்படி இருக்குது ண்ணா? வீரா ண்ணா, உங்களை வீட்டை விட்டு துரத்திட்டதா கேள்விப்பட்டேன்” சுஹாசினி மீண்டும் ஆரம்பிக்க, செல்வா அவளை முன்னால் இருந்த கண்ணாடி வழியே பார்த்து,

“வீரா அண்ணா, ஹ்ம்ம்?” என்றான் கேள்வியாக, கேலியாக. 

“பாருங்களேன். உங்களுக்கு கேலி பேச எல்லாம் வருமா?” என்றவள், “எங்க வீட்டு மாப்பிள்ளையாகற வரைக்கும் வீரா அண்ணாதான். எங்க மலர் கழுத்தில் தாலி கட்டின மறுநொடியே மாம்ஸ் ஆகிடுவார்” புன்னகையுடன் கண் சிமிட்டி அவள் சொல்ல, செல்வா பதிலே பேசவில்லை. 

“ரொம்பத்தான்.” சலித்துக் கொண்டு கணவனிடம் திரும்பி வம்பிழுக்கத் தொடங்கினாள் அவள்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்திருந்தனர். 

மழை நின்றிருக்க, குளிர்க் காற்றை முகத்தில் வாங்கியபடி கீழிறங்கி, “தாங்க்ஸ் ண்ணா” என்றாள் சுஹாசினி.

அவளின் உடைமைகளை வீட்டினுள் கொண்டு வந்து வைத்து, அவள் கொடுத்த காஃபியை அருந்தி விட்டே விடை பெற்றான் செல்வா. 

மகள், மருமகன், பேரன் மூவரையும் ஒன்றாகப் பார்த்ததும் வெங்கடேஷிற்கு கண்கள் கலங்கி விட்டது. 

அவரின் வயதை மீறிய வேகத்தோடு வெளியில் வந்து அவர்களை வரவேற்றார். 

“வாங்க, மாப்பிள்ளை. வாம்மா சுஹா” என்றவர், “இந்த ராஜா யாரு? நீங்க யாரைப் பார்க்க வந்தீங்க?” என்று விக்ரமின் கையில் இருந்த ஷ்ரவனை நோக்கி அவர் கை நீட்ட, “தாத்தா, தாத்தா” என்றான் குழந்தை மழலையில். 

சட்டென கண்கள் பனித்து விட்டது அவருக்கு. அவர் ஆசைப்பட்டு பேச நினைத்த நேரமெல்லாம் பேரனை காணொளி அழைப்பில் பார்க்கிறார் தான். அவன் பேசும் ஓரிரு வார்த்தைகளை கேட்டும், அவனின் சுட்டித்தனங்களை ரசித்தும் இருக்கிறார். ஆனால், தற்போது நேரடியாக அவர் முகம் பார்த்து பேரன் முதல் முறையாக, “தாத்தா” என்றழைத்த போது நெகிழ்ந்து போனார் அவர். 

எதுவுமே நேரில் நிகழ்வது போல வராது இல்லையா? அதில் ஒரு நெகிழ்வும், நெருக்கமும் தன்னால் வரும் தானே?

“தாத்தா சொல்றான் பாரு சுஹாம்மா. என் அறிவாளி குட்டி.” மகளிடமே பேரனின் பெருமை பேசி, அவனைக் கொஞ்சினார் வெங்கடேஷ். அன்று முழுவதும் பேரனை அவரின் கையில் இருந்து கீழே விடவில்லை அவர். 

அவனுக்காக இத்தனை நாட்கள் வாங்கி சேர்த்து வைத்திருந்த விளையாட்டு பொருட்களை அவன் முன் கடைப் பரப்பினார். அதை ஒவ்வொன்றாக எடுத்து அவன் தூக்கி எறிவதைப் பார்த்து, மனம் விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார் அந்த தாத்தா. 

சுஹாசினி தன் நட்பு கூட்டத்துடன் ஒன்றி விட்டாள். பல மாத கதைகள் பேசி கலகலத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ராகவன் மட்டும் அங்கில்லை. மருத்துவமனை சென்றிருந்தான் அவன். 

விக்ரம் முன்தின இரவே சாந்தாம்மாவை சென்னை வர வைத்திருந்தான். இங்கே அவர்களுக்கு உதவியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் அவர். இப்போது அவரது உடல்நிலையில் பெரிதான முன்னேற்றம் வந்திருந்தது. இயல்பான உடல் நிலைக்கு திரும்பியிருந்தார் அவர்.

அன்று இரவு உணவை நேரமே முடித்து, பயணக் களைப்பினால் விரைவாகவே உறங்கி விட்டார்கள் அவர்கள். மறுநாள் காலையில் மூன்று வீட்டுப் பெரியவர்களையும் சென்று சந்தித்து வந்தார்கள். 

அதற்கடுத்து வந்த இரண்டு நாட்களும் விக்ரம் வேலையில் மூழ்கியிருக்க, சுஹாசினி தோழிகளுடன் சுற்றினாள். வீட்டுப் பெரியவர்கள் சொன்ன வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள். 

ராகவிக்கு தன் இரட்டை குழந்தைகளை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்க, அவளுக்கும் சேர்த்து எல்லா வேலைகளையும் சுஹாசினி தான் செய்ய வேண்டியிருந்தது. 

அன்றும் மலரின் வீட்டில் தான் இருந்தாள். அனுப்பிரியா, மற்றும் மலரின் மூத்த அண்ணன் பழனியின் குழந்தைகளுடன் ஷ்ரவன் விளையாடிக் கொண்டிருக்க, சுஹாசினி, மலருக்கு தேவையான பொருட்களை திருமணத்துக்கு பின் பெங்களூர் எடுத்துச் செல்ல வேண்டி, பெட்டி பெட்டியாக பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்து கொண்டிருந்தாள். 

அனுப்பிரியா சொல்ல சொல்ல ஒவ்வொன்றாக தேடி எடுத்து வைத்ததில் அவளது இடுப்பு ஒடிந்துப் போனது. அந்த வேலை முடியவே மதியமாகி இருந்தது.

அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்ப, “லஞ்ச் சாப்பிட்டு போ, வாலு” என்றார் அனு. 

“எனக்கு வேணாம் அண்ணி” என்றவள், “காலையில இட்லி, இடியாப்பம், வடைகறின்னு போட்ட மாதிரி, இப்போ சாம்பார், உருளைக்கிழங்கு கறி போட போறீங்க. அப்படித்தானே? எங்க கோவனுக்கு நீந்துறது இருந்தா தான் சாப்பாடு நல்லா இறங்கும். தேங்காய் பால் மீன் குழம்பு காலையிலேயே செஞ்சு வச்சுட்டு வந்தேன். இப்போ போய் ஃப்ரிட்ஜ்ல மசாலா போட்டு வச்சிருக்க ப்ரானை ஃப்ரை பண்ணிக் கொடுக்கணும். ஆளை விடுங்க. எனக்கு லஞ்ச் வேணாம்” சொல்லிக் கொண்டே அவள் வாயிலை நோக்கி நடக்க, 

“கல்யாணம் முடியற வரை கவுச்சி புழங்க கூடாது வாலு” என்றார் அனு கோபமாக. 

“அது உங்களுக்கு. ஆனா, நாங்க சாப்பிடுவோம்” நாக்கை துருத்தி காட்டி விட்டு நடந்தாள். அந்நேரம் வீட்டுக்குள் வந்து அனுவின் கணவன் சரவணனிடம் ஏதோ கவரை கொடுத்து விட்டு வெளியேறிய செல்வாவைப் பார்த்து, “அண்ணா சாப்பிட்டாச்சா? வீட்டுக்கு வாங்க. சாப்பிடலாம்” என்றழைத்தாள் சுஹாசினி. 

அவளின் அருகில் வந்து குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு, முன்னே நடந்தான் செல்வா. 

“வீரா அண்ணா எங்க? எப்படி அவரை விட்டு தனியா இருக்கீங்க நீங்க?” சுஹாசினி கிண்டலாக கேட்க, “ம்ம். அவன் வீட்ல சாப்பிட்டுட்டு இருந்தான் மா. ஒரு டாகுமெண்ட் மலரோட அண்ணாகிட்ட கொடுக்க சொன்னான். அதுக்காக வந்தேன் நான்” என்றவன், அவள் கேளாமலேயே தான் சாப்பிடாததின் காரணமும் சொன்னான். 

“அவன் விருந்து சாப்பிட்டுட்டு இருந்தான் மா. நான் வேற சுத்த அசைவம். விரதம் இருந்து சைவ விருந்து சாப்பிடுறது எல்லாம் நம்மால முடியாது ப்பா. அதான்…” அவன் புலம்பிக் கொண்டே நடக்க, “ம்ம். நாளைக்கே எங்க அக்கா ஒருத்தி வந்து உங்களுக்கு காய்கறி போட்ட உப்புமா செஞ்சு கொடுப்பா. எப்படிமா இம்புட்டு ருசின்னு கேட்டு சாப்பிடத் தானே போறீங்க?” சிரிக்காமல் அவள் கேட்க, “வாய்ப்பில்லை மா” என்றான் செல்வா. 

“அதையும் தான் பார்ப்போம்” நக்கலாக சொன்னாள் சுஹாசினி. சிரித்துக் கொண்டே அவள் வீட்டினுள் நுழைந்தான் செல்வா. 

விக்ரம், செல்வா இருவரும் பேசிக் கொண்டே மதிய உணவை உண்டனர். 

சுஹாசினி இருவரின் இலையிலும் இறால் வறுவலை பரிமாறினாள்.

சாப்பிட்டு கொண்டே, “கொள்ளாம்” என்று சிலாகித்து விக்ரம் பாராட்ட, “என்னது கொள்ளாமா? இப்படி தமிழை கொல்றதுக்கு உங்களை கொல்லனும்” என்று சுஹாசினி முறைக்க, கையில் அள்ளிய உணவோடு மனைவியையும், சிரித்துக் கொண்டிருந்த செல்வாவையும் குழப்பத்துடன் மாறி மாறிப் பார்த்தான் அவன். 

“உங்களுக்கு மலையாளம் வருது. ஆனா, தமிழ் தகராறு. இல்ல ஹீரோ?” அவள் முறைக்க, “ஐயோ..” என்று எப்போதும் அவள் சொல்வதைப் போலவே புலம்பியவன், சிறிது யோசித்து, “ரொம்ப நாளா இருக்கு” எனச் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டாள் சுஹாசினி. செல்வா சிரிப்பினால் உணவை துப்பி விடாமல் இருக்க, வாயை கையால் மூடினான். 

“ஐயோ.. சாரி. நல்லா இருக்கு” திருத்தினான் விக்ரம். 

“பேசாம, சாப்பிடுங்க ஹீரோ” அதற்கு மேல் மனைவியின் சொல்லை எங்கே மீற போகிறான் அவன்? அதன் பின்னர் அதிக பேச்சின்றி அமைதியாய் உண்டு எழுந்தனர்.  

சுஹாசினி சாப்பிட அமரும் போது, தனக்கு அவசர வேலை இருக்கிறது என்று கிளம்பி விட்டான் செல்வா.

மறுநாள் அதிகாலையில் இருந்தே அவர்களின் தெருவே பரபரப்பாகி இருந்தது. மறுநாள் மலர் – வீரா திருமணம் என்பது தான் காரணம். 

அங்கு அனைவரும் சுற்றி சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, இங்கே வீட்டில் அமர்ந்து விக்ரமும் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

கடந்த இரு நாட்களை போல சுஹாசினியால் இப்போது பொறுமையாக போக முடியவில்லை. 

அவர்களின் படுக்கை அறையில் இருந்த சிறிய சோஃபாவில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த கணவனின் முன் சென்று நின்றாள் அவள். 

“நாளைக்கு கல்யாணத்துக்காவது ஃப்ரீ ஆவீங்களா? இல்ல, நாளைக்கும் உங்களுக்கு வேலை இருக்குமா?” திடீரென்று கேட்ட மனைவியின் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் விக்ரம்.

“என்ன ஷோனா?”

“ஷோனா சொன்னா, கடிச்சு வைக்கப் போறேன் உங்களை..” அவள் சொல்ல, பழுப்பு கண்களில் பளபளப்பு கூடியது. 

“நான் சண்டை போடுறேன். சிரிக்கக் கூடாது. கிளுகிளுப்பா பார்க்கக் கூடாது இப்போ ஹீரோ” அவள் கத்த, அவன் கண்களில் சிரிப்பு மட்டுமே இருந்தது. 

“உங்களுக்கு வேலை இருக்குன்னா, எங்களை மட்டும் அனுப்பியிருக்கலாம் இல்ல? இப்படி ஊருக்கு வந்துட்டு வீட்டுக்குள்ள அடைஞ்சு வேலைப் பார்த்திட்டே இருந்தா, நல்லாவா இருக்கு? நாங்க எங்கப் போனாலும், எல்லாரும் உங்களை தான் கேட்கிறாங்க வேற.. தெரியுமா?” இடுப்பில் கை வைத்து அவள் முறைக்க, “என்ன பண்றது ஷோனா? சொந்த தொழில் வச்சுருக்கவன் லீவ் எல்லாம் எடுக்க முடியாதே?” என்று அங்கலாய்த்து, 

“கோவா, கேஷ்யூ ஃபேக்டரி ஃபைல்ஸ் பார்க்கறேன் ஷோனா. நாம ரெண்டு பேரும் சைன் பண்ணறதுக்கு முன்னாடி, மொத்த கணக்கையும் சரி பார்க்குறது பெட்டர் தானே?” விக்ரம் கேட்க,

“கோவா ஃபைல் போன வாரம் கூட பார்த்தோம் தானே?” எதிர்கேள்வி கேட்டாள்.

“அது சாப்ட் காப்பி. இது ஒரிஜினல் ஷோனா” அவன் விளக்க, “ஆனாலும்.. மலர் கல்யாணத்துக்கு வந்துட்டு நாம எங்கேயும் வெளில போகல‌. ராகவி குழந்தைகளுக்கு அங்க இருந்து ட்ரெஸ், நகை மட்டும் தான் வாங்கிட்டு வந்தோம். இங்க ஏதாவது வாங்கி கொடுக்கணும் நினைச்சேன். ஆனா, நீங்க…” அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே, “அம்மா..” என்று அழைத்தான் ஷ்ரவன். 

“இவன் ஒருத்தன். எப்பப் பாரு என் கோபத்துல தண்ணி தெளிக்கிறான்.” செல்லக் கோபத்துடன் புலம்பியவள், “எப்பவும் அப்பாவை திட்டினா சிரிக்க தானே டா செய்வ? இன்னைக்கு என்னடா செல்லக் குட்டி..” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மீண்டும், “ம்மா…” என்று அழுத்தமாய் அழைத்தான் ஷ்ரவன். 

“ஷோனா..” விக்ரம் எழுந்து மனைவியை இழுக்க, இருவரின் பார்வையும் ஒன்றாக மகனின் மேல் விழுந்தது. 

உறக்கம் கலைந்து எழுந்து படுக்கையில் நின்றிருந்தான் ஷ்ரவன். அங்கே சுவரில் பெரிதாக புன்னகைத்துக் கொண்டிருந்த ரோஹினி, நீலேஷின் புகைப்படத்தில், குறிப்பாக ரோஹிணியின் முகத்தில் கை வைத்து ஷ்ரவன், “அம்மா” என்றது, இருவரையும் உணர்ச்சி வசப்பட செய்தது. 

“செல்லக் குட்டி..” சுஹாசினி அழுகையை அடக்கிய குரலில் அழைக்க, “ம்மா” முன்னிரு பற்களை காட்டி சிரித்தான் குழந்தை. அவளுக்கு சிரிப்பும், அழுகையும் சேர்ந்தே வந்தது. 

மெல்லத் திரும்பி கணவனைப் பார்த்தாள். நொடி நேரமே என்றாலும், மனைவியின் கண்களில் தெரிந்த பயத்தை கண்டுக் கொண்டான் விக்ரம். அவளை அணைத்தபடி நடந்து மகனை நெருங்கினான். 

ராஸ் அல் கைமாவில் அவர்கள் வீட்டில் நிறைய புகைப்படங்கள் இருந்தால் கூட, குழந்தையின் கைக்கு எட்டும் தூரத்தில் எதுவுமே இல்லை. அவன் கண்ணுக்கு எட்டும் தொலைவிலும் இல்லை அது. இங்கே நெருக்கமாக பார்க்கவும் குஷியாகி இருந்தான் குழந்தை. அவனுக்கு அடையாளம் காணவும் எளிதாகி இருந்தது.

“ராஜா..” விக்ரம் மெல்ல அழைத்து கை நீட்ட, இப்போது சுஹாசினியை நெருக்கமாக பார்த்த குழந்தை திரும்பி அதே சாயலில் இருந்த ரோஹிணியின் புகைப்படத்தை பார்த்து விட்டு, “ம்மா” என்றான் கள்ளம் கபடமற்ற சிரிப்புடன். 

அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனாலும், ஒரு அதீத உரிமை உணர்வு இருவருக்கும் வந்திருந்தது மறுக்க முடியாத உண்மை. அது தானே மனித இயல்பு. 

“ஆமா, செல்லக் குட்டி. அது.. அவங்க உன் அம்மா. அவங்கதான் உன் அம்மா..” அழுகையும், சிரிப்புமாக சுஹாசினி சொல்ல, அந்த நொடி அவளிடம் தாவி வந்தான் குழந்தை. 

“ம்மா” என்று அவளை அணைத்து, முகத்தில் எச்சில் சிதற முத்தமிட்டு, மூக்கைக் கடித்து வைத்தான் குழந்தை. கண்ணீருடன் மகனைப் பார்த்து புன்னகைத்தாள் சுஹாசினி.

“ம்மா” என்று அவளோடு ஒட்டிக் கொண்டவனை, மனைவியோடு சேர்த்து அணைத்தான் விக்ரம்.

இந்த நொடிக்காக அவன் பயப்படாத நாளே கிடையாது. சுஹாசினியை நன்கு அறிந்தவனாக அவன் பயம் கொள்ள, அவள் சமாளித்தது கண்டு அவனுக்கு பெரும் நிம்மதி மனதில் பரவியது. 

Advertisement