Advertisement

அதிகாலையில் அலாரமாக அழுது அவர்களை எழுப்பி விட்டான் ஷ்ரவன். அதுவரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சுஹாசினி அடித்து பிடித்து எழ முயன்றாள். 

விக்ரமால் விழிகளை பிரிக்க முடியவில்லை. தன் மார்பில் பதிந்திருந்த மனைவியின் கைப் பற்றி அவளைத் தடுத்து, “நான் பார்க்கறேன். நீ தூங்கு ஷோனா” என்றவன், அமர்ந்திருந்தவளின் தோளை அழுத்தி படுக்க வைத்து விட்டு, எழுந்து அவர்களின் அறையை நோக்கி நடந்தான். கணவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சுஹாசினி அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.  

விக்ரம் சென்று ஷ்ரவனை கவனித்து, அவனுக்கு டையாப்பர் மாற்றி, பால் கலந்து கொடுத்து, தனதறைக்கு கூட்டி வந்தான். 

அங்கு படுக்கையில் கழுத்து வரை மூடி படுத்திருந்த மனைவியை கனிவுடன் பார்த்து புன்னகைத்தான். அதிகாலை என்பதால் அவன் கண்கள் இன்னும் உறக்கத்திற்கு கெஞ்ச, மகனை அவர்களுக்கு நடுவில் கிடத்தி, தானும் படுத்தான் விக்ரம்.

ஷ்ரவன் வேகமாக உருண்டு, தவழ்ந்து சுஹாசினியை முட்டிக் கொண்டு படுக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு சிரிப்பு வந்தது. 

“இவ்வளவு நேரம் உன்னை கவனிச்சது நானு? ஆனா, அவளைப் பார்த்ததும் என்னை மறந்துட்ட பார்த்தியா? அம்மா ஸ்பெஷல் தான் இல்ல?” மகனைப் பார்த்து விக்ரம் புலம்ப, லேசாக முளை விட்டுக் கொண்டிருந்த முன்னிரண்டு எலிப் பல்லை காட்டி எச்சில் ஒழுக சிரித்தான் ஷ்ரவன். 

“சிரிக்காத ராஜா. தூங்கு” மகனின் கன்னம் வருடி அவன் சொல்ல, அவர்களின் பேச்சு சத்தத்தில் கண் விழித்த சுஹாசினி, இருவரையும் பார்த்துப் புன்னகைத்தாள். 

மகனை மென்மையாய் அணைத்தபடி கணவனை நெருங்கிப் படுத்தாள். ஷ்ரவன் தன் உரிமையை நிலைநாட்ட அப்பாவின் மார்பில் தடுமாறி ஏறி படுத்துக் கொள்ள, சுஹாசினி கணவனின் பக்கவாட்டில் ஒன்றினாள். 

“சாரி. தூக்கத்தை கெடுத்துட்டோமா? விடிய நேரம் இருக்கு. தூங்கு, ஷோனா” கிசுகிசுத்தான். 

“ம்ம்” என்றாள். அவளைச் சுற்றியது அவன் கரம். இப்பொழுது அவளின் ஒற்றை விரலை பிடிக்காமல், மொத்தமாய் அவள் கரம் பற்றினான். அவளையெழுதும் அவன் கரங்களை இறுக கட்டிக் கொண்டு கண் மூடினாள் சுஹாசினி. அவளின் செய்கையில் விக்ரமின் உதடுகள் தாமாக பிரிந்துப் புன்னகைத்தன. 

இரண்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்தி்ற்குப் பின் எழுந்த விக்ரம், மகனை தொட்டிலில் (Crib) படுக்க வைத்து, அதை கட்டிலுக்கு நெருக்கமாக நகர்த்தி வைத்து விட்டு போனான். 

அவன் குளித்து, வீட்டில் இருந்தே அலுவலக வேலைகள் சிலதை பார்த்து முடித்து நிமிர, நேரம் காலை எட்டு என்றது கடிகாரம். 

அவன் கால்கள் தானாக அவனது அறை நோக்கி நடந்தது. அதற்கு முன் சமையலறை சென்று காலை உணவுக்கு தேவையானதை செய்யச் சொல்லி விட்டு, மனைவி, மகனிடம் சென்றான் அவன். 

“ஷோனா” மெல்ல மனைவியின் பாதம் வருடி, கொலுசை அசைத்து ஓசையெழப்ப செய்தான். இரவில் இடையறாது சிணுங்கிய கொலுசு இப்போதும் சிணுங்கி இருவரையும் சிலிர்க்க செய்ய, “குட் மார்னிங், ஹீரோ” காலை உள்ளே இழுத்துக் கொண்டு கண்களை திறவாமல், தூக்கம் கலைந்த குரலில் சொன்னாள் அவள். 

விக்ரம் கை நீட்டி அவளின் காலை பிடிக்க, மீண்டும் உள்ளே இழுத்தாள். இப்போது கோபத்தில் வெடுக்கென்று அவளின் போர்வையை உருவினான் அவன். 

“ஐ…யோ..” பதறி, அலறி, வெட்கப்பட்டு போர்வையை இறுக்கமாக பிடித்தாள். அவளின் கூச்சமும், வெட்கமும் அவனுக்கு முந்தின இரவு போலவே இப்போதும் சுவாரசியம் கூட்ட, “ஐயோ? அப்படினா? அர்த்தம் என்ன?” கண்களை சுருக்கி, புன்னகையுடன் ஆங்கிலத்தில் கேட்டான். 

“நல்லா கேட்கிறார் பாரு சந்தேகம்” என்று தமிழில் புலம்பியவள், “ஐ, யூ, தான் ஐயோ..” சிரிப்பை கன்னத்தில் அடக்கியபடி இருவரையும் கைக் காட்டி அவள் சொல்ல, குறும்பில் மின்னிய அவள் கண்களை கூர்ந்து பார்த்தான் விக்ரம். 

“நிஜமா?” கேட்டபடியே அவன் முன்னேற, கீழுதட்டை பற்களால் கடித்து சிரித்தாள் மனைவி. 

விக்ரமின் கரம் நீண்டு, அவளின் தெற்று பல்லை தொடப் போக, வேகமாய் அவன் கையை தட்டி விட்டாள் சுஹாசினி. அந்த தெற்றுப் பல்லை கணவன் பலமுறை முத்தமிட்டது நினைவு வர, சிரிப்பையும், வெட்கத்தையும் மறைக்க நெருங்கி அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். மனைவியை தன்னோடு சேர்த்து அணைத்தபடி சத்தமாக சிரித்தான் விக்ரம். 

“யூ, ஓகே?” அவளை தன்னிடம் இருந்து பிரித்து, அவளின் கண் பார்த்து அவன் கேட்க, “எஸ். ஐ அம் ஓகே. இதையே எத்தனை முறை கேட்பீங்க, ஹீரோ?” அவன் கண் பார்த்து சங்கடத்துடன் கேட்டவள், “ஐ ஃபெல்ட் லவ்டு அண்ட் செர்ரிஸ்ட்” (I felt loved and cherished) மார்பில் கன்னம் பதித்து சொன்னாள். 

அந்த வார்த்தைகளை கேட்டதும் அவன் கண்களில் ஆழ்ந்த அமைதி பரவ, மனைவியின் முகத்தை கையில் ஏந்தி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். 

“தூக்கம் வருதா? நேரமாச்சு, உனக்கு பசிக்கலையா?” விக்ரம் கேட்க, “இல்ல, எழுந்துட்டேன். இனி தூங்க முடியாது. நான் போய் குளிச்சுட்டு வர்றேன்” மெல்ல அவனிடம் இருந்து விலகி, குளியல் அறைக்குள் புகுந்தாள். அவளின் அறைக்கு சென்று, அவளுக்குத் தேவையான மாற்றுடையை எடுத்து வந்து கொடுத்தான் விக்ரம். 

சுஹாசினி குளித்து வெளியில் வர, அவளுக்கான காஃபி அங்கே தயாராக இருந்தது. 

“காஃபி, ஷோனா?” அவளுக்கான கோப்பையை அவளை நோக்கி நகர்த்தி விட்டு, தனக்கானதை எடுத்து அருந்தத் தொடங்கினான் அவன்.

உதட்டுக்கு காஃபி கோப்பையை கொடுத்தபடி, “இதே ட்ரீட்மென்ட் டெய்லி கிடைக்குமா?” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, காஃபியை கண்களால் காண்பித்து குறும்பாக கேட்டாள் அவள். 

பழுப்பு விழிகளில் பளபளப்பு கூட, “ஓ, தாராளமா கிடைக்குமே. ஆனா, நீ தான்…” எட்டி கணவனின் உதட்டில் கை வைத்து அவசரமாக அவன் பேச்சை நிறுத்தினாள். அவளோ காஃபியை குறித்துக் கேட்க, பழுப்பு விழிகளோ வேறு பேசியது. 

“ரொம்ப பேசுறீங்க” அவள் முணுமுணுக்க, “யாரு? நானு? நேத்து உன் பேச்சை நீ கேட்டு இருக்கணும்” அவன் குறுஞ்சிரிப்புடன் குறும்பாக சொல்ல, “ஹீரோ.. பேசாதீங்க” செல்லமாய் அவன் மார்பில் அடித்தாள். 

“ஓகே, ஷோனா. பேசல.. ஆனா.. ஆக்க்ஷன்” என்று அவன் இழுக்க, இருவருக்குமே சிரிப்பு வெடித்துக் கொண்டு வெளிவந்தது. அவர்களின் மனம் நிறைந்த சத்தமான சிரிப்பு சத்தத்தில் தூக்கம் கலைந்து கண் விழித்தான் ஷ்ரவன். 

சுஹாசினி சென்று மகனை கைகளில் தூக்கிக் கொள்ள, அன்றைய அவர்களின் நாள் இனிமையாக தொடங்கியிருந்தது. 

மதியம் வரை வீட்டில் இருந்தே வேலை பார்த்து, மாலைக்கு மேல் தான் அலுவலகம் சென்று வந்தான் விக்ரம். அடுத்தடுத்து வந்த நாட்களும் மனைவியை வீட்டிலேயே இருந்து வேலைப் பார்க்க செய்தான் அவன். 

இதற்குள் ரிசார்ட் திறப்பிற்கான நாளும் வந்து சேர, அதற்கு முன்தினம் மனைவியை தனது அலுவலகம் அழைத்துச் சென்றான் விக்ரம். 

அவனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் ஏற்கனவே ரிசார்ட்டில் கொடுத்த விருந்தில் சந்தித்திருந்தாள் சுஹாசினி. ஆனால், இதுவரை அலுவலகம் சென்றதில்லை அவள். 

அன்றுதான் முதல் முறையாக அழைத்துச் சென்றான் விக்ரம். அவன் அடர்சாம்பல் நிற சூட்டில் (Grey suit) இருக்க, அவளும் அதே நிற கவுன் அணிந்திருந்தாள். ஷ்ரவனும் பெற்றோரை பின் பற்றியிருந்தான்.

காலை பதினோரு மணி போல அலுவலகம் சென்றனர். அலுவலகத்தின் வரவேற்பு பகுதி தொடங்கி, ஒவ்வொரு பகுதியாக அவளுக்கு காண்பித்து, அங்கிருந்தவர்களை மனைவிக்கு மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தி கொண்டே வந்தான் விக்ரம். 

தனக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு பேசி, சிரித்து, நலம் விசாரித்து அவள் உள்ளே செல்ல, அந்த அலுவலகத்தின் முக்கியப் பகுதியான டிசைன் ஸ்டூடியோ வந்தது. 

அங்கிருந்து மெலிதாக இசையும் வெளியில் கசிந்து வர, கண்ணைச் சுருக்கி காதை கூர்மையாக்கினாள் அவள்.

“சன் சனன சூடி போலே..” என்று பாடகி சித்ராவின் மயக்கும் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து வந்த வரிகளில் விரிந்தது அவள் புன்னகை. கொலுசொலியையும், வளையோசையையும் சிலாகித்துக் கொண்டிருந்தது அந்த ஹிந்தி பாடல். 

“பாயலே சுன்முன் சுன்முன்… ” (Payalay chunmun chunmun) என்ற வரிகளைக் கேட்டதும், ‘அட, இது நம்ம இஞ்சி இடுப்பழகி இல்ல?’ என்று அவள் மனதில் நினைக்க, சரியாக அந்நிமிடம் அதே பாடல் தமிழிலும், “இஞ்சி இடுப்பழகி” என்று ஒலித்தது. 

இசையின் ராஜாவை மனதில் மீண்டும் ஒருமுறை மெச்சிக் கொண்டு அந்த அறையின் கதவை திறந்தாள் சுஹாசினி. 

அங்கே பெண்களும், ஆண்களுமாக ஐந்தாறு பேர் இணைந்து மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தனர். சிவில் இன்ஜினியர், ஆர்க்கிடெக்ட், இன்டீரியர் டிசைனர் என பலரும் அங்கிருக்க அவர்களை ஒவ்வொருவராக மனைவிக்கு அறிமுகப்படுத்தினான் விக்ரம். 

அதில் ஆர்க்கிடெக்ட் கவிதாஞ்சலி பெரிதாக புன்னகைத்து, “ஹாய் மேம். வாங்க, வாங்க.” என்று தமிழில் வரவேற்க, பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த தமிழ் பாடல் மாறி இப்போது மலையாள பாடல் ஒலித்தது. அங்கிருந்த அனைவரும் இசையை பொருட்படுத்தாமல் வேலைக் குறித்து விவாதித்து கொண்டிருந்தது அவளுக்கு புலப்பட, அவர்கள் லகுவான மனநிலையோடு வேலையில் ஈடுபடவே இசையை ஒலிக்க விட்டிருந்தது புரிந்தது. 

தமிழ், ஹிந்தி, மலையாளம், அரபிக் என்று அங்கு கூடியிருந்தவர்களைப் போலவே இசையும் கலவையான மொழிகளில் கலந்து வர, கணவனின் இசை ரகசியம் இப்போது தான் அவளுக்கு விளங்கியது. 

“மறக்க மனம் கூடுதில்லையே” நினைத்து, கணவனை ஓரக்கண்ணில் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டாள் சுஹாசினி. 

அங்கிருந்து நேராக அவனது அறைக்கு அழைத்துப் போனான் விக்ரம். சுஹாசினி உள்ளே நுழைந்ததும் அவளின் தோளை பற்றி தள்ளிக் கொண்டு போய், அவனது இருக்கையை கண் காட்டி, “உட்காரு ஷோனா” என்றான்.

“இட்ஸ் ஓகே ஹீரோ. நான்..” அவளை மேலே பேச விடாமல் அழுத்தி வலுக்கட்டாயமாக அமர வைத்தான். 

“என்ன ஹீரோ நீங்க…” என்றவளின் கவனத்தை ஈர்த்தது அங்கிருந்த, “தமிழ் கற்றுக் கொள்ள எளிய வழி” எனும் ஆங்கில புத்தகம். அவளையும் அறியாமல் இதழ்கள் பிரிய, கணவனை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள் அவள். 

அவனின் தமிழ் வார்த்தைகளும், பாடல் வந்த வழியும் இப்போது புரிய, ஏனோ அவனை அந்த கணம் சுஹாசினிக்கு அவ்வளவு பிடித்தது. தான் மட்டுமல்ல கணவனுமே தனக்காக சிரத்தை எடுத்திருக்கிறான் என்பது புரிய, கண்ணை மூடிக் கொண்டு காதலில் குதிக்க அவசியமின்றி, அவளுக்கு கணவனின் மேல் காதல் மெல்ல துளிர் விடத் தொடங்கியது. 

இம்முறை கணவனின் சுண்டு விரலை தானே பற்றிக் கொண்டாள் மனைவி. 

மனைவியை நெருங்கி நின்றான் விக்ரம். பெற்றோரின் நெருக்கம் பார்த்து, விக்ரமின் கையில் இருந்து சிணுங்கினான் ஷ்ரவன். மெலிதான சிரிப்புடன் சிறிது இடைவெளி விட்டு நின்று, “சைன் திஸ் ஷோனா” என்று மேஜையில் அவளுக்கு முன்னிருந்த கோப்பை பிரித்து, பக்கங்களை திருப்பி வைத்தான் விக்ரம்.

“இது என்னது?” குழப்பத்துடன் கேட்டாள் சுஹாசினி. 

அங்கே, “ஓனர் மற்றும் பார்ட்னர்” எனும் இடத்தில் அவள் பெயர் இருந்தது. ஆங்கில கொட்டை எழுத்துக்களில், “சுஹாசினி விக்ரம் தேசாய்” என்று இருக்க, பதற்றத்துடன் எச்சில் கூட்டி விழுங்கி, கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். 

“சைன் இட் ஷோனா” அழுத்தமாக சொன்னான். 

“இது.. இது..” என்றவளால் கேள்வியை முழுதாக கூட கேட்க முடியவில்லை. 

விக்ரமின் கண்ணாடி மேஜையில் பதிந்தது அவள் பார்வை. அதில் பதித்திருந்த டிரேட் லைசென்ஸ் (Trade license) நகலில் உறைந்து நின்றது அவள் விழிகள். 

அந்த நாட்டு சட்ட விதிமுறைகளின் படி ஸ்பான்சர் என்று ஹம்தான் பெயரும், அதற்கு பக்கத்தில் ஓனர் மற்றும் பார்ட்னர் என்று விக்ரம் தேசாய், சுஹாசினி விக்ரம் தேசாய் என்று அடுத்தடுத்து இருக்க, அதிர்ச்சியில் பேச்சே மறந்து போனாள் அவள். 

“இந்தா, ஷோனா..” அவளுக்கான பிரதியின் நகலை பிரித்து அவள் முன் வைத்தான் விக்ரம்.

சில தினங்களுக்கு முன்பு அவளிடம் கணவன் கையெழுத்து வாங்கியதன் காரணம் இப்போது விளங்கியது அவளுக்கு.

“ஏன்? இதெல்லாம், எதுக்கு ஹீரோ?” அமர்ந்த நிலையில் நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கேட்டாள் சுஹாசினி. 

“தெரியல ஷோனா. திடீர்னு செய்யணும்னு தோணுச்சு. செய்துட்டேன்” புன்னகைத்து, தோள் குலுக்கி சொன்னான் அவன். 

“ஹம்தான் அடுத்துக் கட்டப் போற ஷாப்பிங் மால் காண்ட்ராக்ட் நமக்கு தான் கொடுத்து இருக்கான். அந்த ஃபைல் தான் உனக்கு முன்னாடி இருக்கு. சைன் பண்ணு” அவன் பேசுவது எதுவுமே அவள் மனதில் பதியவில்லை. 

“சைன் இட் ஷோனா” அவளின் கரம் பற்றி பேனாவை திணித்து, அழுத்தமாய் சொன்னான் விக்ரம். 

“நீங்களே இன்னும் சைன் பண்ணல” என்றாள் சுஹாசினி. 

“நீ பண்ணு முதல்ல” அவனையே இமைக்காமல் பார்த்தாள். “ம்ம். டூ இட்” என்று அவளின் முகத்தை மெதுவாக பற்றி, கோப்பைக்கு அவன் திருப்ப, நடுங்கும் விரல்களுடன், “சுஹாசினி விக்ரம் தேசாய்” என்றெழுதி, அதற்கு கீழே கையெழுத்திட்டாள் அவள். 

“கங்கிராட்ஸ் ஷோனா” மனைவியை வாழ்த்தியவன், அவளிடம் இருந்து பேனாவை வாங்கி தானும் கையெழுத்திட்டு கோப்பையை மூடி வைத்தான். 

மெல்ல எழுந்து நின்ற சுஹாசினி, அமைதியாக கணவனின் முகம் பார்த்தாள். கோவாவில் இருந்த தொழில், வீடு, சொத்துகள், அவனது வங்கிக் கணக்கு என அனைத்திலும் அவள் பெயரை ஏற்கனவே சேர்த்திருந்தான் விக்ரம். இப்போது இங்கும் அதுவே தொடர, “ஏன்?” என்று கேட்டாள் அவள். 

“ஏன்னா? என்னோடது எல்லாமே உன்னது தான் ஷோனா. நான் எதையும் என்னோடதுன்னு பிரிச்சு பார்க்க கூட விரும்பல” என்றான், அவள் முகத்தை ஒரு கையால் ஏந்தி. 

“ஓ. ஆனா, நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்கல விக்ரம். என்கிட்ட உங்களுக்கு கொடுக்கவும் எதுவுமே இல்ல.. நான்..” அவள் தடுமாற, “நீ இருக்கியே எனக்காக. அது போதும் ஷோனா. என் வாழ்க்கையில்.. இல்ல, எங்க வாழ்க்கையில் வந்துட்டியே.. அதுவும் என் கூடவே போராடி, சண்டை போட்டு, என்னோட சேர்ந்துட்ட.. அதை விட என்ன கேட்கப் போறேன் நான்? எனக்கும், ஷ்ரவனுக்கும் நம்பிக்கையை, அன்பை, எங்க வாழ்க்கையை நீ திருப்பிக் கொடுத்து இருக்க ஷோனா. நீ வரலன்னா நாங்க ரெண்டு பேரும்.. யாரும் இல்லாம..” அவனை முடிக்க விடாமல், “பேசாதீங்க” என்றாள். கண்ணீரை அடக்கியதில் அவள் குரல் கரகரக்க, கணவனை எட்டி அணைத்துக் கொண்டாள் சுஹாசினி. 

“யூ கம்பிளீட் மீ சுஹாசினி” என்ற விக்ரம், “அதை விட எனக்கு என்ன பெரிய பரிசு வேணும் சொல்லு?” என்று கேட்க, அவளுக்கு புன்னகையும், கண்ணீரும் சேர்ந்து வந்தது. 

“தாங்க்ஸ் ஷோனா” கணவன் சொல்ல, “நானும் தாங்க்ஸ்” என்றாள் மனைவி. சட்டென இருவரும் சிரித்திருந்தனர். 

Advertisement