Advertisement

மறுநாள் காலையிலேயே விரைவாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான் விக்ரம். அவனுக்கு ரிசார்ட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டியிருந்தது. 

ஷ்ரவனை கவனித்துக் கொண்டிருந்த மனைவியிடம் வந்து, “சைன் திஸ் பேப்பர்ஸ் ஷோனா” என்றான் அவன். 

“ஐ அம் பிஸி ஹீரோ. இவன் வாமிட் பண்ணிட்டான். பாருங்க. இவனுக்கு உடம்பு துடைக்கணும்” குழந்தையின் உடலைத் துடைத்துக் கொண்டே அவள் பதில் கொடுக்க, “ஜஸ்ட் சைன் அண்ட் டூ யுவர் வொர்க்” என்றவனை முறைத்தாள் அவள். 

“எதுக்கு சைன்? என்ன பேப்பர் அது? படிக்காம எப்படி சைன் பண்ண முடியும்?” 

“நான் தானே சைன் கேட்கறேன். குறுக்கு கேள்வி கேட்காம, என்னை நம்பி சைன் பண்ணு. இதோட காப்பி ஒன்னு உனக்கு நாளைக்குத் தர்றேன்” அவன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொல்ல, அவன் கண்களைப் பார்த்தபடி, அவன் காட்டிய இடங்களில் கையெழுத்திட்டு நீட்டினாள் சுஹாசினி.  

காலை உணவை அவசரமாக முடித்துக் கொண்டு வெளியேறினான் அவன். அன்றைய பொழுது மட்டுமல்லாது அடுத்து வந்த நாட்களும் அவன் ரிசார்ட் வேலையில் மூழ்கிப் போக, அவள் வீட்டை தனக்கு ஏற்றார் போல மாற்றி அமைத்தாள். 

மற்ற நேரங்களில் குழந்தையோடு நேரம் செலவிட்டாள். முழுதாக நான்கு நாட்கள் கழித்து அவளை ரிசார்ட் வேலை நடக்கும் இடத்திற்கு அழைத்து போனான் விக்ரம். 

“ஹாய் சுஹாசினி. வெல்கம் டு அவர் ரிசார்ட்” முன்னே வந்து வரவேற்றான் ஹம்தான். 

பல மில்லியன் திராம்கள் (Dirham – UAE Currency) செலவில் மிக பிரம்மாண்டமாக கடலை ஒட்டியபடி, விருந்தினர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய, ஆடம்பர மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் நிரம்பியதாக இருந்தது அந்த பீச் ரிசார்ட். கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள். உணவு விடுதி, நீச்சல் குளம், குழந்தைகளுக்கான பூங்கா, பலவகை பூக்களை கொண்ட கண்ணை கவரும் தோட்டம் என அங்கில்லாத கேளிக்கை வசதியே இல்லை என்று அறுதியிட்டு சொல்லி விடலாம். 

சுஹாசினி மெல்ல திரும்பி, கணவனை அவன் நண்பனை பிரம்மிப்புடன் பார்த்தாள். 

“இட்ஸ் பியூட்டிஃபுல். கங்கிராட்ஸ்” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தையே வரவில்லை. 

இருவரும் புன்னகைத்து அவளுக்கு நன்றி உரைத்தனர். அவள் சொன்ன சின்ன சின்ன ஆலோசனையையும் கேட்டுக் கொண்டனர். நீச்சல் குளத்தின் பக்கத்தில் உணவகம் ஒன்றை அவளின் ஆலோசனையின் பேரில் திறக்க முடிவு செய்தனர். 

பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த தொழுகை அறையோடு கூடவே, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் சேர்த்து கட்ட முடிவு செய்தனர். 

சுஹாசினி ஒட்டகங்கள் நிறைந்திருந்த பாலைவன தேசத்தில் கங்காரு போல ஷ்ரவனை மார்பில் சுமந்து கொண்டே கணவனுடன் வேலைப் பார்த்தாள். அதில் அவனது வேலைப் பளுவும் சிறிதளவு குறைந்தது.

சரியாக பத்து நாள்கள் முடிவில், ரிசார்ட் தொண்ணூறு சதவீதம் முழுமை பெற்றிருக்க, அதை திறக்க இன்னும் ஐந்து நாட்களே இருந்தது. 

ஹம்தானின் திருமணத்திற்கு பதினைந்து நாட்களே இருந்தது. அவர்கள் இரண்டிற்கும் தயாராகத் தொடங்கினார்கள். 

இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்கனவே பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டிருந்தது. 

உறவுகள், நண்பர்களோடு, பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 

அவர்கள் குடும்பத்திற்கு துபாயில் இருந்து ஆடை வடிவமைக்கப்பட்டு இப்போதே வந்திருந்தது. 

அன்றிரவு சிறியதாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள் நண்பர்கள். ரிசார்ட்டை ஒட்டிய கடற்கரை பகுதியில், அந்த ரிசார்ட்டை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது. 

அவர்களுக்கு பாராட்டோடு, பரிசு பொருட்களையும் சேர்ந்தே அளித்தனர் நண்பர்கள். 

அவர்கள் சார்பில் சுஹாசினி மற்றும் ஹம்தானின் வருங்கால மனைவியான ஷனாஸ் முகம்மது உடன் இணைந்து நன்றியுரைத்து பரிசுகளை அனைவருக்கும் வழங்கினார்கள். 

ஆட்டம், பாட்டம், அதீத சுவையிலான உணவு என்று களைக்கட்டிக் கொண்டிருந்தது விருந்து. 

அங்கிருந்த அனைவரிடமும் பேசி, சிரித்து, கலகலத்து, ஓய்ந்து, கணவனுடன் ஒரு ஓரமாக வந்து விட்டாள் சுஹாசினி. 

“ப்பா.. ம்மா” என்று விக்ரமின் கையில் இருந்தபடி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான் ஷ்ரவன்.

மனைவியின் சுண்டு விரலை பிடித்தபடி காலை குறுகுறுத்த வெள்ளை மணலில் நடந்துக் கொண்டிருந்தான் விக்ரம். 

கடல் காற்று இருவர் மேலும் அலை பாய்ந்து அலைகளோடு திரும்பிக் கொண்டிருந்தது. பச்சையும், நீலமும் கலந்த அந்த அமைதியான கடலை சுஹாசினிக்கு அத்தனைப் பிடித்தது. கிட்டத்தட்ட கோவாவில் அவள் கண்ட கடலை நினைவுப்படுத்தியது.

அலைகள் அற்று மிக அமைதியாய் இருந்தது கடல். அவள் மனதும் கூட அந்தக் கடலின் அமைதியை கொண்டிருக்க, கணவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள். 

ஷ்ரவன் சிறிது நேரத்தில் விக்ரமின் தோளில் சரிந்து உறங்கி விட, “வீட்டுக்குப் போகலாமா ஷோனா?” மனைவியிடம் கேட்டான் அவன். 

“எஸ் ஹீரோ. ரொம்ப நேரம் இங்க இருந்துட்டோம். ஒரு மாதிரி டையர்டா இருக்கு” அவள் சொல்ல, ஹம்தானிடம் விவரம் தெரிவித்து விட்டு, அங்கு கூடியிருந்த மற்றவர்களிடம் விடை பெற்று இரண்டே நிமிட பயணத்தில் இருந்த அவர்களது வீட்டிற்குத் திரும்பினார்கள். 

அரைத் தூக்கத்தில் இருந்த குழந்தையை மிக கவனமாக அவனது படுக்கையில் விட்டான் விக்ரம். அவன் ஆழ்ந்து உறங்கும் வரை அவனோடு அமர்ந்திருந்தான்.

சுஹாசினி குளித்து, உடை மாற்றி, வந்துப் பார்க்கும் போதும் கணவன் குழந்தையை கவனித்துக் கொண்டிருக்க, அமைதியாய் நழுவி, வீட்டின் பின்புறமிருந்த கடற்கரையை நோக்கி நடந்தாள். ஆள் அரவமற்ற அமைதியான கடல் அவள் முன் பரந்து விரிந்திருந்தது. 

வீட்டில் இருந்து மெலிதான இசை கசிந்து வர, அவள் மனமும் அதனுடன் சேர்ந்து கசிந்துருகியது.  

இசையின் ராஜா உருகிக் கொண்டிருந்தார். கடலுக்கு கால்களை கொடுத்து விட்டு, இசைக்கு காதுகளை கொடுத்தாள் சுஹாசினி. இரவும், இருளும், நிலவும் அவளுக்குத் துணையாக நின்றிருந்த அந்த ஏகாந்த பொழுதில் கடலலையோடு இசையும் சேர்ந்து அவளைத் தாலாட்டியது. 

“கும் சும் கும்.. கும் சும் ஹோ ஹியூன் தும்” என்று ஹிந்தியில் தொடங்கிய பாடல், சில நிமிடங்களில் அதன் மலையாள பாடலுக்கு தாவியது. “தும்பி வா தும்பக்குடத்தின்..” என்று நீண்டு பின்னர் தமிழுக்கு வந்தது. 

“சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது” பாடல் மெலிதாய் ஒலிக்க, அவள் கண்கள் தானாக பனித்தது. கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, இசையில் மூழ்கினாள். 

இப்போது பாடல் மாறி, “கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி.. உன் பிள்ளைத் தமிழ்..” ஒலிக்க, அப்போதுதான், தான் கேட்டுக் கொண்டிருப்பது தமிழ் பாடல் என்பதே அவளுக்கு உறைத்தது. 

“தமிழ் பாட்டு, இங்கு யார் கேட்கறது? விக்ரமா?” என்ற கேள்வியுடன் அவள் திரும்ப, பாடல் ஒலித்த அலைபேசியுடன் அவளை நோக்கி நடந்து வந்தான் அவளின் ஹீரோ. 

“உன்னைக் காண வேண்டும்.. கூட வேண்டும்.. வாராயோ.. வாராயோ.. கண்ணம்மா…” பாடல் வரிகளில் அவள் முகம் சிவந்து போனது. கண்ணம்மா கணவனுக்கு காதல் கவிதை சொல்லத் தயாரானாள். 

“என்ன பீச்சுக்கு தனியா வந்துட்ட ஷோனா?” மெல்ல அவளை தன்னோடு சேர்த்தணைத்த படி கேட்டான் விக்ரம். 

“ஜஸ்ட்.. ஜஸ்ட்.. ” அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. அவளை தன்னை நோக்கித் திருப்பி, “என்னாச்சு?” அவன் கேட்க, இரவின் பின்னணியில் கவர்ச்சியுடன் பளபளத்த பழுப்பு விழிகளில் பதிந்தது அவள் பார்வை. 

“எனக்கு எப்படி உங்களை பிடிச்சது?” புன்னகைத்தவனின் கன்னக் குழியில் விரல் வைத்து அவள் கேட்க, “அப்போ, பிடிக்கும். அப்படித்தானே?” அவள் பதில் சொல்ல இதழ் பிரிக்கும் போது, இருவரின் இதழ்களையும் சேர்த்திருந்தான் அவன். 

மென்மையாய் மனைவியின் இதழ்களில் முத்தமிட்டு, அவளை கைகளில் அள்ளப் போக, “நான்.. நானே நடக்கறேன் ஹீரோ” பதறி விலகப் போனாள். 

“ஹீரோ, ஹீரோ மாதிரி நடந்துக்கணும் இல்ல?” அவளின் மறுப்பை பொருட்படுத்தாமல் கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் வந்தான். 

“விக்ரம்..” மென்மையாய் அழைத்த மனைவியை அன்பின் மொழியான முத்தங்களால் நிறைத்தான். 

“சுஹாசினி” அவள் கழுத்தில் புதைந்து காதில் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்தான். மெல்ல மெல்ல காதல் மொழி பேசத் தொடங்கினான். முத்தங்கள் அத்துமீற, மொத்தமாக அவன் வசமாகி இருந்தாள் சுஹாசினி. 

இரண்டே நிமிடத்தில் சிரித்து, சிணுங்கி, நெளிந்து, முழித்து, முறைத்து, இறுதியில் அவனிடம் இருந்து பலமாக விடுபட அவள் போராட, மோகத்தில் மூழ்கியவன் அப்போதுதான் மனைவியின் முகம் பார்த்து, அவளின் அவஸ்தை புரிந்து பட்டென்று விலகினான்.  

“என்னாச்சு ஷோனா?” பதறி குரல் நடுங்க அவன் கேட்க, “ஹாவ், து.. எனக்கு..” (Haanv – I, tun – you) என்று கொங்கனி, ஆங்கிலத்தில் மாறி மாறி உளறினாள் அவன் மனைவி. 

“எஸ் ஷோனா. உனக்கு என்னாச்சு?” அவள் முகம் பற்றி கரிசனத்துடன் கேட்க, “சாரி” என்றாள். அவன் கண்களை சந்திக்க முடியாமல், அவன் மார்பில் கண்களைப் பதித்து அவள் பேச, “ஷோனா, ஏன் சாரி சொல்ற?” அக்கறையும், பயமும் கலந்து ஒலித்தது அவன் குரலில். 

“இல்ல. எனக்கு.. சாரி.. ஒரு மாதிரி கூச்சமா இருந்தது. சட்டுனு என் உடம்பில் வந்த மாற்றத்தை.. இந்த கன்பியூஸ்டு ஃபீலிங்ஸை ஹேண்டில் பண்ணத் தெரியல. உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா? சாரி” இம்முறை மன்னிப்பை அவன் கண் பார்த்து கேட்க, அவளை இழுத்து அணைத்து சத்தமாக சிரித்தான் விக்ரம். 

“பயந்துட்டேன்” என்றவன், “கிஸ் பண்ணலாம் தானே?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க, வெட்கத்துடன் அவன் மார்பில் முட்டினாள். 

மெல்ல அவள் முகம் நிமிர்த்தி, ஆழமாய் முத்தமிட்டு, “ஹாவ் துசோ மோ கோர்தா” (Hanv tuzo mog korta – I love you” என்றான் விக்ரம். 

“என்.. எனக்கு.. உன்னை.. ரொம்ப பிடிக்கும்…” அவள் முகம் பற்றி அவன் நிதானமாக யோசித்து தடுமாறி தமிழில் சொல்ல, வியப்பில் விரிந்தது சுஹாசினியின் கண்கள். 

“என்ன சொன்னீங்க ஹீரோ?” அவள் நம்பவியலா அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, வெட்கச் சிரிப்புடன், “ஐ லவ் யூ சுஹா ஷோனா” அழுத்தமாய் சொன்னான். அந்தப் பழுப்பு விழிகளில் முழுவதுமாய் தொலைந்து போனாள் சுஹாசினி. 

விக்ரமின் அன்பின் வெளிப்பாடு அவளை உருக செய்தது. அங்கே உடல்கள் இணையாமல் உள்ளங்கள் இரண்டும் இணைந்திருந்தது. 

“விக்ரம்..” என்றவளுக்கு உள்ளத்தின் நிறைவில் உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளே வரவில்லை.

அவளின் மனநிலை புரிந்து, அவளுக்கான அவகாசத்தை கொடுக்க விரும்பியவன், “தூங்கு ஷோனா..” என்று மென்மையாய் முத்தமிட்டு சொல்ல, கணவனின் கையணைப்பில் அப்படியே உறங்கி விட்டாள் சுஹாசினி. 

நள்ளிரவில் ஷ்ரவனின் அழுகையில் அவள் கண் விழிக்க, கணவனை படுக்கையில் காணவில்லை. 

அவள் குழந்தையை கவனித்து, அவனை மீண்டும் உறங்க வைத்து விட்டு கணவனைத் தேடிப் போனாள். அவனது அறையில் மடிக் கணினி முன் அமர்ந்திருந்தான் விக்ரம். 

“நீங்க தூங்கலையா? இந்நேரம் லேப்டாப்பில் என்ன பண்றீங்க?” கேட்டபடியே அவனை நெருங்கினாள்.

“நீயே பாரேன்” அவளை இழுத்து பக்கத்தில் அமர்த்தி, கணினியை அவளை நோக்கி நகர்த்தினான். 

அவர்கள் சந்தித்த நாள் முதல் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் அங்கிருந்தது. தங்களின் திருமண புகைப்படங்களை மலர்ந்த சிரிப்புடன் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

விக்ரமின் சிரிப்பில் விரிந்த கன்னக் குழியில் அழுத்தமாய் முத்தமிட்டாள் சுஹாசினி. 

மெல்ல திரும்பி அவளுக்கு தன் இதழ்களை கொடுத்தான் அவன். முத்தத்தில் தொடங்கிய அன்பின் மொழி மொத்தமாய் மோகம் பேசியது. கடலலையின் பின்னணி இசையோடு மனைவியை மென்மையாய் தன் வசப்படுத்தினான் விக்ரம். அவளின் கண் பார்த்து காதல் பேசினான். முத்தத்தால் மோகம் வளர்த்து அவளை மொத்தமாய் மாற்றினான். 

அவளின் பயத்தை, கூச்சத்தை, பதற்றத்தை மென்மையாய், நிதானமாய் களைந்து கூடினான்.

அறைக்கு வெளியே கடலலையும், அறைக்குள்ளே காதல் அலையும் அலையலையாய், பேரலையாய் அடித்துக் கொண்டிருந்தது. 

அங்கு தமிழும், கொங்கனியும் தங்களின் மொழி மறந்து காதலின் மொழி பேசி ஒன்றாகியிருந்தது.

Advertisement