Advertisement

சுஹாசினி கணவனின் பேச்சில் கன்னங்கள் சிவந்திட, அதை மறைக்கப் பார்வையை வெளியில் பதித்தாள். 

ஐக்கிய அரபு நாட்டின் ஏழு எமிரேட்டில் (United Arab Emirates) ஒன்றான ராஸ் அல்-கைமாவின் (Ras al- khaimah) நகரத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது அவர்களது கார். 

ஐக்கிய அரபு நாட்டின் மிக பிரபலமான எமிரேட்டான துபாய் போல அல்லாமல் அழகாய், அமைதியாய் நின்றது சுற்றுலாவிற்கு பெயர் போன ராஸ் அல் – கைமா. துபாய் போல விண்ணைத் தொடும் கட்டிடங்கள் இங்கில்லை. ஆனாலும், மிக உயர்ந்த கட்டிடங்களை அவ்வப்போது காண முடிந்தது. பயணத்தின் நடுநடுவே பாலைவனமும் காணக் கிடைத்தது. அடிக்கடி கண்ணில் பட்ட கடலையும், கட்டிடங்களையும் மட்டும் பார்த்திருந்தால், அது பாலைவன தேசம் என்றே சொல்லிட முடியாத அளவுக்கு அழகாக இருந்தது அந்த ஊர். 

உலகின் மிக பாதுகாப்பான இடம் மற்றும் குற்ற பின்னணி அளவில் பூஜியத்தை (zero crime rate) பெற்றிருந்த நகரம் அது. 

புதிய நாடும், புது ஊரும், புதிதாக தொடங்கியிருந்த மணவாழ்வும், மலர் போல மென்மையாய் மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகனும் என அனைத்தையும் நினைக்கையில் மெலிதாய் புயல் அடித்தது அவள் மனத்தில். கலவர மேகம் கண்டபடி அவளைச் சூழ்ந்து நின்றது. 

இந்நேரம் பார்த்து அவர்களோடு சாந்தாம்மா வர முடியாமல் போனது அவளுக்கு மிகப் பெரிய இழப்பாக தெரிந்தது. 

அவரின் வயதின் காரணமாக முதலில் அவரை தங்களோடு அழைத்து வர பலமாக யோசிக்கவே செய்தான் விக்ரம். 

அவன் பயந்தது போலவே அவர்கள் கிளம்பும் நேரம் பார்த்து அதிக உதிரப்போக்கினால் அவதிப்பட தொடங்கினார் சாந்தாம்மா. சுஹாசினியிடம் மிகுந்த தயக்கத்துடன்தான் தன் உடல்நிலை குறித்த கவலையை பகிர்ந்துக் கொண்டார் அவர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவ ஆலோசனையும், தேவையான மருந்துகளும் பெற்றுத் தந்து, ஓய்வாக கோவாவிலேயே இருக்கும் படி அவரைப் பணித்து விட்டு, அவருக்கு துணையாக ஒருவரை அங்கு நியமித்து விட்டு அவர்கள் மட்டுமே இங்கு வந்திருந்தனர். 

இப்போது அவரில்லாமல் எப்படி ஷ்ரவனை தனியாக சமாளிக்க போகிறேன் நான்? என்று யோசித்து மிரண்டாள் அவள். ஆனாலும், இதையுமே தைரியமாக சந்திக்கும் மனோதிடம் இப்போது அவளுக்கு வந்திருந்தது.  

அவளின் எண்ணவோட்டம் புரிந்தது போல, அவளின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்து, சுண்டு விரல் கோர்த்துக் கொண்டான் விக்ரம். அவள் மனம் விசித்திரமாக தானாக அமைதியாகியது.

இருபது நிமிட பயண முடிவில் கடலை ஒட்டிய மிகப் பெரிய வில்லா ஒன்றின் முன் கார் சென்று நிற்க, “பிளீஸ், கம்” என்றபடி இறங்கி அவர்களுக்காக காரின் கதவை திறந்து விட்டான் ஹம்தான். 

அவர்களை வரவேற்க வந்து நின்றவர்களைப் பார்த்ததும், அவர்கள் வந்திருந்தது ஹம்தானின் வீடு என்பது புரிய, அவளுக்கு மிகப் பெரும் ஆச்சர்யம்தான். அரேபிய கட்டிடக் கலையின் புகழ் பாடியது அந்த சிறிய மாளிகை. 

“ஹீரோ.. நாம, ஏன் இவங்க வீட்டுக்கு வந்திருக்கோம்? இங்க தான் இருக்கப் போறோமா? எப்படி?” அவளால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியவில்லை.  

“நாங்க லண்டனில் படிக்கும் போதிருந்தே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஷோனா. ஹம்தான் வீடு எனக்கும் வீடுதான். ஃபீல் ஃப்ரீ ஓகே? நாளைக்கு காலைல நம்ம வீட்டுக்குப் போகலாம். சரியா? இன்னைக்கு ஒரு நைட் மட்டும்தான் இங்க இருக்கப் போறோம். ஓகே? பயப்படாம வா, உள்ள போகலாம்” அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துப் போனான் விக்ரம். 

ஹம்தானின் குடும்பம் அவர்களை அன்புடன் ஆவலாக வரவேற்றது. மிக இயல்பாக, உறவை போல நடத்தியது. அன்றைய இரவு உணவில் கூட இந்திய உணவுகள் இருக்க கணவனுக்கும், அந்த குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் புரிந்தது. சுஹாசினி மெல்ல இயல்பானாள். 

அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு செல்லும் போதே பின்னிரவாகி இருந்தது. மறுநாள் விடியலில் மனைவியை உலுக்கி எழுப்பினான் விக்ரம். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் குளித்து, கிளம்பி காரில் ஏறியிருந்தார்கள். 

இம்முறை ஹம்தான் மட்டுமல்லாது, அவனது மொத்த குடும்பமும் அவர்களோடு வந்தது. 

ஐந்தே நிமிடத்தில் மீண்டும் கடலுடன் நட்பு பாராட்டி கொண்டிருந்த ஒரு வில்லாவின் முன் சென்று காரை நிறுத்தினார் ஓட்டுநர். 

இம்முறையும் ஹம்தானே முதல் ஆளாக கீழிறங்கி, அவளுக்காக காரின் கதவை திறந்து விட்டான். 

ஒரு நன்றியுடன் கீழே இறங்கிய சுஹாசினி, எதிரில் தெரிந்த பழமையும், புதுமையும், நவீனமும் கலந்துக் கட்டப்பட்டிருந்த அந்த நீளமான கட்டிடத்தை பிரமிப்புடன் பார்த்தாள். 

விக்ரம் நண்பனிடம் பேசிக் கொண்டே பின்னால் நடந்து வர, முதல் ஆளாக குழந்தையுடன் வாயிலை நோக்கி நடந்தாள் சுஹாசினி. 

அவள் அழைப்பு மணியை தேட, விக்ரம் முன்னே வந்து சாவியை போட்டு கதவை திறந்தான். அதைப் பார்த்ததும் அவள் கண்களில் வியப்பு மட்டுமே. வரவேற்பு அறைக்குள் காலெடுத்து வைத்ததும், வீட்டின் பிரம்மாண்டம் இன்னும் அதிகமாக கண்களுக்கு புலப்பட, திரும்பி கணவனைப் பார்த்தாள். 

“ஹீரோ, இது என்ன ரிசார்ட்டா? இவ்வளவு பெருசா இருக்கு? இல்ல, உங்க ப்ரெண்ட்டோட கெஸ்ட் ஹவுஸா? நம்ம வீட்டுக்கு எப்போதான் போவோம்?” அவள் அலுப்புடன் கேட்க, சிரித்தான் விக்ரம்.

“இதான் நம்ம வீடு ஷோனா. நம்ம சொந்த வீடு. நமக்காக நான் வாங்கின வீடு. என் சொந்த சம்பாத்தியத்தில்..” பெருமையுடன் சொன்னான். அவள் கண்களில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்து வழிந்தது.  

“இவ்வளவு பெரிய வீடு நமக்கு எதுக்கு?” அவள் விழி விரித்து கேட்டாள். “இங்க எல்லாமே ரொம்ப காஸ்ட்லின்னு கேள்விப்பட்டேன். நீங்க என்னன்னா..” அவள் முடிக்கும் முன்பே, இடையிட்டு பதில் சொன்னான் விக்ரம்.

“இது துபாய் இல்ல. புறா கூண்டு போல அபார்ட்மெண்ட்க்கு மாசம் ஐம்பதினாயிரம் ரூபா வாடகை கொடுக்க. இங்க இப்படிதான். துபாய் கூட ஒப்பிடும் போது எல்லாமே சீப் அண்ட் பெஸ்ட்.” விளக்கினான். அவளுக்குத்தான் விளங்க இயலா ஆச்சரியம். 

அவர்கள் கொண்டு வந்திருந்த உடைமைகளை ஓரமாக வைத்து விட்டு, குழந்தையுடன் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வந்தாள் சுஹாசினி. விக்ரம் அவளுடன் இணைந்து நடந்தான். 

“இது நம்ம மூனு பேருக்கு ரொம்ப பெரிய வீடு” அவள் சொல்ல, “இங்க, நம்ம மூனு பேர் மட்டும் தான் இருக்கப் போறோமா என்ன?” கண் சிமிட்டி இரட்டை அர்த்தத்தில் அவன் கேட்க, அவளுக்கு எங்கே புரிந்தது.  

“வேற யார் வரப் போறாங்க?” அப்பாவியாக பதில் கேள்வி கேட்டாள் சுஹாசினி. 

அதைக் கேட்டதும் உடல் குலுங்க சிரித்தான் விக்ரம். அந்தக் கண்களும், கன்னக் குழியும், சிரிப்பும் அவனுக்கு கவர்ச்சியை கூட்ட, இமைக்காமல் அவனைப் பார்த்தாள். 

“எதுக்கு சிரிக்கறீங்க?” போலி கோபத்துடன் அவள் கேட்க, “உன் கூட நான் எப்படி வாழ போறேன் தெரியல” கோபமாக தோள் குலுக்கி, காற்றில் இரு கைகளையும் வீசி அவன் சொல்ல, “எனக்கும் அதே கவலைதான். நீங்க கொங்கனி, நான் தமிழ். உங்களை மனசார என் தாய் மொழியில் திட்டக் கூட என்னால முடியல. நாம எப்படி சண்டை போட்டு, எப்போ சமாதானமாகி.. நினைச்சாலே பெருமூச்சு வருது” ஆங்கிலத்தில் புலம்பிக் கொண்டே, அவனைக் கடந்து படுக்கை அறைக்குள் நுழைந்தாள். 

அவள் அறையை கண்களால் வலம் வர, அவர்களுக்கு தேவையான அத்தனையும் அங்கிருந்தது. அவர்கள் குடும்பம் நடத்த தேவையான மொத்த பொருட்களையும் முன்னரே வாங்கி வைத்திருந்தான் விக்ரம். அதைப் பார்த்து, புன்னகையுடன் கணவனை மெச்சிக் கொண்டாள் அவள். 

“மொழி எதுக்கு தெரியுமா ஷோனா? Language is the light of the mind. மனத்தில் இருப்பதை வெளிச்சமிட்டு காண்பிக்கவே மொழி உதவுகிறது” அவனே கேள்வியும் கேட்டு, பதிலும் சொன்னான். அவள் கண்கள் மெச்சுதலாக விரிய, “மொழி ஒரு விஷயத்தை தெளிவா அடுத்தவங்க கிட்ட பகிர்ந்துக்க தான் உதவுது ஷோனா. நாம பகிர்ந்துக்க தான் அன்பிருக்குதே. அப்புறம் என்ன? அதுவே நமக்கு போதும்.” அவளின் கைப் பிடித்து கண் பார்த்து சொன்னவன், அவளை அப்படியே வெளியே அழைத்துப் போனான். 

“நம்ம ரெண்டு பேருக்கும் ஹிந்தி, இங்கிலீஷ் ரெண்டுமே தெரியும். நாம கம்யூனிகேட் பண்ண அதுப் போதும். பின்னாடி சண்டைப் போட நான் தமிழ் கத்துக்கிறேன். நீ, இன்னும் நல்லா கொங்கனி கத்துக்கோ. ஓகே?” அவன் கேட்க, சிரிப்புடன் வேகமாக தலையசைத்து திரும்பிய சுஹாசினி, அப்படியே உறைந்து நின்றாள். 

பதினைந்து நிமிடங்களில் அடையாளமே தெரியாமல் மாறியிருந்த வீட்டின் மையப் பகுதியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அவள். 

அங்கே கணபதி ஹோமத்திற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்துக் கொண்டிருந்தது. 

“விக்ரம்.. எப்படி? அதுவும் இங்க எப்படி முடியும்?” அவள் நம்ப முடியாமல் கேட்க,

“புது வீடு ஷோனா. அதுக்கு தேவையானதை செய்யணும் இல்ல? பூஜைக்காக பர்துபாய் கோவில்ல இருந்து வந்திருக்காங்க. நாம இதுக்காக ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கோம்” புன்னகையுடன் அவளுக்கு விளக்கினான் விக்ரம். 

அடுத்த சில மணி நேரங்கள் பூஜையில் கழிந்தது. அவள் அதை கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கு கண்டிப்பாக இன்ப அதிர்ச்சிதான். 

அத்தனையும் நிறைவாக நடந்ததில் மகிழ்வாக உணர்ந்தாள். 

ஹம்தானின் குடும்பம் பக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த அவர்களின் ரிசார்ட்டுக்கு சென்று விட்டு, சரியாக காலை உணவு நேரம் திரும்பி வந்தனர். 

அதற்குள் இங்கே பூஜை முடிந்து, சுஹாசினி கையால் பாலும் காய்ச்சி முடித்திருந்தனர். 

அடுத்த ஒரு மணி நேரம் உணவு, பேச்சு என்று பொழுது கழிந்திருந்தது. ஹம்தானின் குடும்பம் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைப் பெற்று கொண்டனர். 

விக்ரம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வீட்டு வேலைக்கான இரண்டு மத்திம வயது பெண்கள் வந்து சேர்ந்திட வீட்டை ஒதுக்க, சமையலில், ஷ்ரவனை பராமரிக்க என்று அவளுக்கு உதவினார்கள்.

அன்று மாலை நெருங்கும் போதே சோர்ந்து போனாள் சுஹாசினி. அவளுக்கு மேலே துவண்டு போய் இருந்தான் ஷ்ரவன். இருவருக்கும் புது நாடும், பயண அலைச்சலும், அதன் நேர வித்தியாசமும், காலநிலையும் இன்னும் பழகவில்லை. அதனால், உடல் சுணங்கி ஓய்விற்கு கெஞ்சியது. 

முன்னிரவிலேயே குழந்தைக்கு தரையின் கார்ப்பெட்டின் மேல் படுக்கை விரித்து அவனோடு விளையாடிக் கொண்டிருந்தாள் சுஹாசினி. ஆட்டத்தின் பாதியில் உறங்கி விட்டான் குழந்தை. அவனுக்கு பக்கத்திலேயே அமைதியாக தானும் படுத்து விட்டாள் அவள். ஆனால், தூங்காமல் யோசனையுடன் படுத்திருந்தாள். அலைபேசியில் அலுவல் ரீதியான அழைப்பில் இருந்த விக்ரம், அதைப் பேசி முடித்து விட்டு அறைக்குள் வந்தான். 

“ஷோனா, இங்கே ஏன் படுத்திருக்கீங்க? பெட்ல படுக்கலாம் இல்ல? உனக்கு தூக்கம் வரலையா? சூடா ஏதாவது குடிக்கிறியா?” கணவன் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க, அவசரமாக எழுந்து அமர்ந்தாள் சுஹாசினி. 

“எதுவும் வேணாம்.” என்றவள், கையை உயர்த்தி சோம்பல் முறிக்க, அவளையே கூர்ந்துப் பார்த்தான் விக்ரம். 

“இருபத்தி ஒன்னு” அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். 

“என்னது? 21?” குழப்பத்துடன் கேட்டான் அவன். 

“சண்டைதான். வேறென்ன? நீங்க என்கிட்ட சாரி சொல்லாத சண்டை. என்னை சமாதானம் பண்ணாத சண்டை..” என்று அவள் ராகமிழுக்க, 

“ஓ மை ஷோனா. நான் கூட நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு பல நாளுக்கு சண்டையை இழுக்காத நல்ல மனைவி நினைச்சேன். கணவனை உடனே மன்னிச்சு, மறந்து, சமாதானம் ஆகுற மனைவி நினைச்சேன். இல்லையா?” அவளை பக்கத்தில் இழுத்து அவன் கேட்க, அவன் மார்பில் மோதி நின்று, 

“என்னைப் பத்தி ரொம்ப உயர்வா உங்களை யாரு நினைக்க சொன்னது? நான் சாதாரண மனைவிதான். எனக்கு சண்டை போடணும். அப்புறம் நீங்க சமாதானம் பண்ணனும். உங்க முகம் பார்க்காமல் சண்டை போடுறதில் என்ன சுவாரசியம் இருக்கு சொல்லுங்க. நீங்க வேற ஒவ்வொரு சண்டைக்கு அப்புறமும் கோவிச்சுட்டு, என்கிட்ட முகத்தையே காட்ட மாட்டேங்கறீங்க. அதான், எல்லா சண்டையையும் சேர்த்து வச்சுருக்கேன். உங்க முகம் பார்த்து சண்டைப் போட…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே, “ராக்சஷின்” என்று குறுஞ்சிரிப்புடன் முணுமுணுத்தான் விக்ரம். 

“உனக்கு தெரியுமா? என்னதான் சாந்தாம்மா என் கூட இருந்தாலும், ஷ்ரவனை பார்த்துக்க அவ்ளோ சிரமப்பட்டேன் நான். சரியான தூக்கம் இல்லாம, நேரத்துக்கு சாப்பிட முடியாம.. பைத்தியம் பிடிக்கும் போல பல நாள் இருந்திருக்கு. காரணமே இல்லாம, எரிச்சல், கோபம் வந்திருக்கு. அதான் முதல்முறையா உன்னை பார்க்கும் போது கூட அவ்வளவு கோபப்பட்டேன். அதுனால, என்ன சொல்ல வர்றேன்னா, ஒரு குழந்தையை தனியா வளர்க்கிறது எவ்வளவு சிரமம்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். யூ டிட் இட் சோ வெல் ஷோனா. தேங்க்யூ” அவளின் நெற்றியில் முட்டி அவன் சொல்ல,

“என்ன சட்டுனு சாரி சொல்லிட்டீங்க? நான் வேற சண்டை போடுற மூடில் இருக்கேன்.” என்று ஆங்கிலத்தில் சொன்னவள், “சட்டை கிழியாம அதென்ன பெரிய சண்டை?” என்று முகம் சுருக்கி அவள் தமிழில் சொல்ல, பழுப்பு கண்கள் பளபளக்க, மனைவியை தனக்கு நெருக்கமாக இழுத்தான் விக்ரம். 

“யா, ஷோனா. லெட்ஸ் ஃபைட்” (Yeah. let’s fight) என்று அவள் காதில் கிசுகிசுத்து, கன்னங்களை மீசையால் உரசினான். சுஹாசினியின் கரம் அனிச்சையாய் விக்ரமின் தோளில் பதிந்தது. 

“சாரி, எப்படி சொல்ல ஷோனா? நாம சமாதான உடன்படிக்கையை முத்தத்தில செய்துக்கலாமா?” அவள் கண்களை நேராக பார்த்து சரசமாக அவன் கேட்க, இமைக்க மறந்தாள் அவள். 

“விக்ரம்.. ” 

“எஸ். ஷோனா..” நெற்றியில் இதழ் பதித்து, அதன் தடம் பற்றி கண்களுக்கு வந்தான். 

“ப்பா..” என்ற அழைப்பில் மனைவியை இறுக அணைத்தபடி அவள் முகம் பார்த்தான் விக்ரம்.

“ஷ்ரவன்..” சுஹாசினி மெதுவாக சொல்ல, சட்டென்று இருவரும் ஒன்றாக கீழே குனிந்து பார்க்க, வயிறால் தவழ்ந்து வந்து விக்ரமின் காலை பிடித்து எழ முயன்றபடி மீண்டும், “ப்பா” என்றான் குழந்தை. மின்னல் வேகத்தில் குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டான் விக்ரம். 

“அப்பா சொல்றீங்களா ராஜா? ஷ்ரவன் ராஜா, என்னை அப்பா சொல்லி கூப்பிடுறீங்களா?” அப்படியொரு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அவன் குரலில் இருந்தது. 

“உங்களுக்கு அப்பாவா நானு? உங்களுக்குத் தெரியுமா ராஜா? ஷ்ரவனுக்கு அப்பாவை தெரியுமா? அப்பா சொல்லுங்க?” விக்ரம் உணர்ச்சி மிகுதியில் மீண்டும் மீண்டும் கேட்க, “ப்பா” என்றான் குழந்தை, விக்ரமின் முகத்தில் முட்டி. 

சுஹாசினிக்கு கண்கள் கலங்கியது. பல நாட்களாக அப்பா சொல்கிறான் குழந்தை. விக்ரமின் வீடியோ, புகைப்படம் என பலதும் காண்பித்து, “அப்பா, டாடா, பய் (Pai – Father)” என்று எல்லா மொழிகளும் குழந்தைக்கு சொல்லியிருந்தாள் அவள். ஆனால், அவளின் தாய் மொழி என்பதால், அவளுக்கே அடிக்கடி அப்பா என்றே வர, குழந்தை அதை கெட்டியாக பிடித்துக் கொண்டான். 

இன்று விக்ரமை நேரடியாக அவன் அழைக்க, இனிமையான தருணமாக மாறியிருந்தது அது. 

“அப்பா சொல்றான் ஷோனா. நீ சொல்லும் போது கூட நான் நம்பல. பட், தேங்க்யூ.” இருவரையும் இறுக்கமாக அணைத்து மாறி மாறி முத்தமிட்டான். 

இருவருமாக குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடி களித்து, களைத்து அப்படியே உறங்கியிருந்தனர். 

பல நாட்கள் கழித்து, கணவன் பக்கத்தில் இருக்கும் தெம்பில் தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கினாள் சுஹாசினி. அன்றிரவு குழந்தை இரு முறை எழுந்து கொள்ள, அவனை விக்ரம்தான் கவனித்துக் கொண்டான். 

Advertisement