Advertisement

அங்கு ராகவியின் வளைக்காப்பு விழாவில் இருவரும் கலந்துக் கொண்டனர். 

“உங்களுக்கு எப்படித் தெரியும் ஹீரோ?” சுஹாசினி கேட்க, “ஷோனா, இனி உன் உறவுகள் என் உறவுகளும் தானே? உதய், ராகவி என்னையும் இன்வைட் பண்ணாங்க” விளக்கினான் விக்ரம். 

“ஓ, எஸ். நான் அப்படி யோசிக்கவேயில்ல. சாரி” என்ற சுஹாசினி, “அப்போ இதுக்காக தான் வந்தீங்க? எனக்காக வரல?” என்று சிலிர்த்துக் கொண்டு சண்டைக்குப் போனாள். 

“இந்த ஃபங்ஷன் உன்னால தான் எனக்கு முக்கியமாச்சு சுஹாசினி” அழுத்தமாக சொன்னவன், “உனக்காக இல்லனா, நான் ஏன் இங்க வரப் போறேன்?” கோபத்துடன் கேட்டான். அவன் கோபம் பார்த்து அவள் விழிக்க, அப்பாவின் தாடையை கை நீட்டி கிள்ளிக் கொண்டிருந்தான் ஷ்ரவன். 

“இங்க பாரு. என் தோள்ல உட்கார்ந்துட்டு என்னையே அடிக்கிறான் இவன். அப்படியே உன்னைப் போல” விக்ரம் சொல்ல, “நான் எப்போ உங்களை அடிச்சேன்?” கணவனின் கைப் பிடித்து இழுத்து அவள் கேட்க, சிரிப்புடன் அவர்களின் இணைந்த கையை பார்த்தான் விக்ரம். 

“உங்களை, என் கழுத்தில் தாலி கட்ட விட்டிருக்கேன். எனக்கு இதுக்கெல்லாம் முழு உரிமை இருக்கு தெரியுமா?” அவள் போலியாக முறைத்துக் கொண்டே கேட்க, “அப்புறம் நானும் உரிமை எடுத்துப்பேன். ஓகேவா?” பழுப்பு கண்கள், கண்ணடித்து கேட்க, வெட்கத்தில் விழிகளும், இதழ்களும் மலர்ந்து பிரிய மகனை, கணவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து போனாள் சுஹாசினி. 

“அழகி” அவன் தமிழில் சொன்னது, அவள் காதில் விழவேயில்லை.

அன்றிரவு சென்னையில் தங்கி, மாமனாருடன் நேரம் செலவிட்டான் விக்ரம். மறுநாள் அதிகாலையில் மீண்டும் கோவா திரும்பியிருந்தார்கள்.

விமானபயணமே என்றாலும், குழந்தை சோர்ந்து போக, சுஹாசினி அவனை விட்டு நகரவில்லை. 

“ஷோனா, அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். படுக்கையில் விடு” என்று விக்ரம் தான் மனைவியை அதட்ட வேண்டியிருந்தது.

“ம்ம்” என்று படுக்கை விரித்து குழந்தையை தரையில் விட்டாள். ஆனாலும், அங்கிருந்து நகரவில்லை அவள். அவனுக்கு இப்போது தான் அவளின் மனநிலை புரிந்தது. 

“ஷோனா, அவன் நம்ம குழந்தை. நாம சரியா தான் வளர்ப்போம். வளர்த்திட்டும் இருக்கோம். ஃப்ரீயா இரு.” அவளின் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணோடு கண் பார்த்து அவன் சொல்ல, அவளின் கண்களில் இருந்த கலக்கம் சற்றே குறைந்தது. அவனுக்கு கண்ணை சிமிட்டி பதிலைச் சொன்னாள் அவள். 

அவளை இப்படி அமைதியின்றி பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு மனதை பிசைந்தது. 

ஷ்ரவன், அவர்கள் இருவரின் பொறுப்பு. ஆனால், தனியாக சமாளிக்கும் அவள் மேல் அலாதி வாஞ்சை வளர்ந்தது.

மறுநாள் காலையில் அவன் கிளம்பியபடியே மனைவியிடம் வந்தான். 

“என்ன ஹீரோ கோட், சூட் எல்லாம் பலமா இருக்கு?” கிண்டலும், ரசனையுமாக அவள் கேட்க, “ஷ்ரவன் அடாப்சன் பேப்பர் வொர்க் முடிஞ்சது ஷோனா. இன்னைக்கு வாங்கப் போறோம். சீக்கிரம் கிளம்பு, போகலாம்” வார்த்தைகளில் அவசரப்படுத்தினான். 

“நீங்க சொல்லவேயில்ல விக்ரம்” ஆச்சரியம், மகிழ்ச்சி போட்டி போட கேட்டாள். அவன் நெருங்கி வந்ததும் ஆனந்த மிகுதியில் அணைத்துக் கொண்டாள். 

“லாயர் போன வாரம் சொன்னார் ஷோனா. ஆனா..” அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனை விட்டு விலகி அவனை முறைத்து பார்த்தாள். 

“அப்போ, அந்த வேலைக்காக தான் வந்தீங்களா?” அவள் கோபமாக கேட்க, அவளின் கோபத்திற்கான காரணம் புரியாமல் கண்களை சுருக்கி, “என்னதான் உன் பிரச்சனை?” எரிச்சல் மெல்ல எட்டிப் பார்க்க கேட்டான் விக்ரம்.

“உனக்கெல்லாம் மெச்சூரிட்டியே வராதா?” அந்த கேள்வியில் இரண்டடி பின்னே நடந்தாள் சுஹாசினி. 

“என் வயசுக்கு இவ்வளவு முதிர்ச்சிதான் இருக்கும். எனக்கு இது போதும். உங்களுக்கு பத்தலைன்னா.. உங்க பொண்டாட்டிக்கு அடுத்த முறை வரும் போது துபாயில் இருந்து, அதையும் சேர்த்து வாங்கிட்டு வாங்க. கூடவே வச்சுக்கறேன். சரியா? அந்த மெச்சூரிட்டியை..” அவன் முகத்தில் வார்த்தைகளை வீசி விட்டு நடந்தாள். 

“சாரி, ஷோனா. சாரி. வெரி சாரி. யோசிக்காம சொல்லிட்டேன்” எட்டி அவளின் கைப் பிடித்து கெஞ்சினான். அவனை முறைத்து கையை உதறி விட்டு நடந்தாள் சுஹாசினி.

ஆனால், ஒரு மணி நேரம் கழித்து இருவரும் ஒன்றாக தான் நீதிமன்றம் சென்றார்கள். வக்கீலை சந்தித்தார்கள். 

தங்களின் மன சுணக்கம் மறந்து மகிழ்வுடன் ஷ்ரவனின் முழுமையான பெற்றோர்களாக உணர்வு பூர்வமாகவும், சட்டப்படியும் மாறி வந்தார்கள். 

சட்ட அலுவலகத்தில் இருந்து காருக்கு வந்ததும், மனைவியை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் விக்ரம். அவள் மடியில் இருந்த மகனையும் சேர்த்தே இறுக்கினான். உணர்ச்சி மிகுதியில் இருவரையும் மாறி மாறி முத்தமிட்டான். 

காரில் இருந்த அண்ணா, அண்ணியின் புகைப்படத்தை பார்த்து, “ஷ்ரவன். எப்பவும் எங்களோட மூத்த மகனாக இருப்பான். உங்க ரெண்டு பேருக்கும் கொடுத்த வாக்கை நான் காப்பாத்துவேன். என் மனைவி, உங்க தங்கை சுஹாசினி பத்தி நான் சொல்லவே தேவையில்லை. அன்புன்னு‌ வந்துட்டா அவளுக்கு அளவு கிடையாது. அதுவும் அவளுக்கு சொந்தமானவங்கன்னா கேட்கவே வேணாம். நாங்க இருக்கோம். உங்க செல்லத்தை, இல்ல. எங்க செல்லத்தை பார்த்துக்க. நீங்க எங்களோட இருந்து அதை பார்க்கத் தானே போறீங்க? பார்ப்பீங்க” அவன் கணீரென்று கண்ணீர் குரலில் சொல்லி முடிக்க, மனம் நெகிழ கணவனை கட்டிக் கொண்டாள் சுஹாசினி.

விக்ரம் அடுத்தடுத்த வேலைகளை விரைந்து முடித்தான். 

ஷ்ரவனுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்றான். கடந்த முறை போல கண்ணீர் விடவில்லை சுஹாசினி. பிரிவிற்கு பழகி இருந்தாள் அவள். 

ஒரே வாரத்தில் குழந்தையின் பாஸ்போர்ட் வந்து விட, அடுத்து அவர்கள் இருவருக்கும் விசாவிற்கு விண்ணப்பித்தான். 

அவனது அவசரத்திற்கு அலுவலகங்கள் வேலை செய்யவில்லை. எல்லாம் கைக்கு வந்து சேரும் போது ஷ்ரவன் ஆறு மாதத்தை கடந்திருந்தான். இப்போது மெதுவாக தவழ ஆரம்பித்திருந்தான்.

விக்ரம் வேலைகளை பொறுப்பான கைகளில் ஒப்படைத்து விட்டு வீடு வந்து இறங்குகையில் ஷ்ரவன் ஏழாம் மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆறாம் மாத தடுப்பூசி போட்டு, கோவாவில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து, சுஹாசினியின் அப்பா வெங்கடேஷை கோவா வரவழைத்து, விடை பெற்று, மனைவி, மகன் சகிதமாக அரபு நாட்டிற்கு வந்து சேர்ந்தான் விக்ரம். 

விமான நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்தான் விக்ரமின் பார்ட்னர் மற்றும் நெருங்கிய நண்பனான ஹம்தான்.

“வாட் அ சர்ப்ரைஸ் ஹம்தான். தேங்க்ஸ் ஃபார் கமிங்” என்றான் விக்ரம், நண்பனை அணைத்து. 

அவனோ, “மாஷா அல்லாஹ்” என்று நண்பனின் மனைவியை வியந்து பாராட்ட, கண்களை விரித்து கணவனைப் பார்த்தாள் சுஹாசினி. 

“உன்னைப் பார்த்து வாவ் சொல்றான். இது பாராட்டு போல ஷோனா” விக்ரம் புன்னகையுடன் விளக்க, 

“முஜே பத்தா ஹே” (I know) எனக்குத் தெரியும் என்று அவள் ஹிந்தியில் கணவனுக்கு மட்டும் புரியும் வகையில் சொல்ல, அதைக் கேட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கியிருந்தான் ஹம்தான். 

“விக், உன் ஃவைப் அழகு மட்டுமில்ல. செம்ம அறிவாளியும் கூட போல.” விக்ரமின் தோளில் தட்டி ஹம்தான் சொல்ல, “அவருக்கு ஹிந்தி தெரியுமா?” வியப்புடன் ஆங்கிலத்தில் வினவினாள் சுஹாசினி. 

“அரபு நாட்டில் இருந்துட்டு மலையாளம், ஹிந்தி கத்துக்காம இருக்க முடியுமா? பேசிக் தெரியும் சுஹாசினி” இம்முறை அவளுக்கு பதில் சொன்னது என்னவோ ஹம்தான் தான். 

சுஹாசினி தர்மசங்கடத்துடன் புன்னகைத்தாள்.

“வெல்கம் ஹோம் மிசஸ். விக்ரம். வாங்க, வீட்டுக்கு போகலாம்” அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் ஹம்தான். ஷ்ரவனை கையில் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான். 

விக்ரம் மனைவியின் கைப் பிடித்து சுண்டு விரலை கோர்த்துக் கொண்டான். 

நால்வருமாக காரை நெருங்கி இருக்க, சுஹாசினியிடம் குழந்தையை கொடுத்து விட்டு காரில் ஏறினான் ஹம்தான். அவர்கள் நால்வரும் காரில் ஏறியதும் ஓட்டுநர் காரை நகர்த்தினார்.

“நீ வருவன்னு எதிர்ப்பார்க்கலை மேன். நானே வீட்டுக்கு வந்திருப்பேன். உனக்கு ஏன் அலைச்சல்.. கல்யாண மாப்பிள்ளை நீ அலையாம டிரைவரை மட்டும் காரோட அனுப்பி இருக்கலாமே மேன்” விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு, “சுஹாசினி” என்று சத்தமாக அழைத்தான் ஹம்தான். 

முன்னிருக்கையில் இருந்து பின்னே திரும்பி அவளைப் பார்த்து, “இவனை இன்னமும் இவ்வளவு பேச விடுறீங்களே இது நியாயமா? கொஞ்சம் இவனை கவனிங்க. ரொம்ப பேசுறான்” என்று குறுஞ்சிரிப்புடன் கேலியாக அவன் சொல்ல, புன்னகையை உதட்டோடு விழுங்கினாள் சுஹாசினி. 

“உங்களையும் கலாய்க்க ஆள் இருக்கா?” என்று கண்களால் கணவனை விசாரித்தாள். பழுப்பு விழிகள் அவளைப் பார்த்து கண் சிமிட்டியது. 

“இனி நீயும், நானும் மட்டும்தான் ஷோனா” அவள் புறமாக சாய்ந்து கிசுகிசுத்து, மிக இயல்பாக ஷ்ரவனை அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டான். 

சுஹாசினி அவனை மெலிதான அதிர்ச்சியுடன் விழி விரித்து பார்த்தாள். 

Advertisement