Advertisement

முத்தம்! அது புதுமண தம்பதிகளுக்கு புரிந்த அன்பு மொழி பேசியது. விக்ரமின் உதடுகள் மனைவியின் கன்னம் தொட்டு, கண்களுக்கு இடம் மாறி, அழுத்தமாய் நெற்றியில் முத்தம் வைத்தது. அவள் வகிட்டின் குங்குமத்தை ஒற்றை விரலால் தொட்டு புன்னகைத்தான். 

“ஷோனா” 

“ம்ம்” என்று விரிந்த விழிகளில் வெட்கத்தின் சாயல். கண்களில் குறும்பு மின்ன அவளுக்கு தன் முகத்தை திருப்பிக் கன்னத்தை காண்பித்தான். உதடு கடித்து, தயக்கம் உதறி, கணவனின் கன்னத்தில் இதழ்களை ஒற்றியெடுத்தாள் சுஹாசினி. அந்நேரம் குழந்தையின் அழுகை சத்தம் கேட்க, இருவரும் பதறி பிரிந்து அமர்ந்தனர். 

தவறு செய்த குழந்தையின் பாவனை இருவர் முகத்திலும் அப்பட்டமாய் இருந்தது. பதட்டம் தந்த படபடப்பில் பக்கென்று சிரித்திருந்தனர். 

சுஹாசினி வேகமாக எழுந்து கொள்ள, அவளின் கைப் பிடித்து தடுத்தான் விக்ரம். 

“வேணாம். சாந்தாம்மா பார்த்துப்பாங்க.” என்றவனை கேள்வியாக பார்த்தாள். 

“நமக்கு மட்டுமில்ல. உங்கப்பா.. அவருக்கு நம்ம லைஃப் நினைச்சு பயமிருக்கும். நம்ம முன்னாடி ஒரு வாழ்க்கையே இருக்கு தான். ஆனாலும்..” என்று நிறுத்தி அவன் தோள் குலுக்க, அவன் வார்த்தையை மீறி வெளியில் செல்ல விரும்பாமல் அவனைப் பார்த்தபடியே படுக்கையில் அமர்ந்தாள் சுஹாசினி.

அவனுக்கு சற்று ஆச்சரியம் தான். அவனிடம் எல்லாவற்றிலும் முரண்படும் சுஹாசினி, அவன் மனைவியான பின்பு அவன் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பது ஒருவித சுவாரசியத்தையும், நம்பிக்கையையும் அவனுக்குக் கொடுத்தது. 

மனைவியின் கைப் பற்றி, அவளின் சுண்டு விரலோடு தன் சுண்டு விரலைக் கோர்த்துக் கொண்டான் விக்ரம். தன் பாதம் கொண்டு அவளின் பாதத்தை ஒரு லயத்துடன் தட்டிக் கொண்டேயிருந்தான். அந்த அறையின் நிசப்தத்தை நீக்கி நிறைத்தது மெல்லிய கொலுசொலி. கூச்சத்துடன் பாதங்களை உள்ளிழுக்க முயன்றாள். ஒரு காலால் அவளின் பாதத்தை தாங்கிப் பிடித்தான் அவன். 

இப்போது ஷ்ரவனின் அழுகை நின்றிருக்க, “ஷோனா..” என்றான். 

“சொல்லுங்க.”

“தூக்கம் வருதா? கொஞ்சம் பேசலாமா?” அவன் கேட்க,

“ம்ம். பேசலாம். எனக்கு நிறைய கேள்வி கேட்கணும்.” பேச்சு என்று வந்து விட்டால், சுஹாசினியின் தயக்கம் எல்லாம் காணாமல் போய் விடுமே. அடுக்கடுக்காய் அவனிடம் கேள்விகள் கேட்கத் தயாரானாள் அவள். 

“லீகல் வேலை எல்லாம்..”

“போய்ட்டு இருக்கு ஷோனா.” அவளுக்கு மேலாக இருந்தான் அவன். 

மெலிதாக சிரித்து, “நாம ஷ்ரவனை அடாப்ட் பண்ணதும், அவனோட அம்மா, அப்பா ஆகிடுவோம். இல்ல?” அவள் கேட்க, “இப்பவே அவனோட பேரன்ட்ஸ் நாம தான் ஷோனா” என்றான் விக்ரம் புன்னகையுடன். 

“ஆனா.. பின்னாடி.. அவன்கிட்ட கண்டிப்பா அக்கா, மாமா பத்தி சொல்லிடணும். அவங்க தான் அவனோட ரியல் பேரன்ட்ஸ். அதை நாம மறைக்க வேண்டா..” அவள் முடிக்கும் முன்பே அவளை இழுத்து அணைத்திருந்தான் விக்ரம். 

அவன் மனதில் இருந்ததை அவள் சொல்ல, அவனுக்கு அப்படியொரு நிம்மதி. குழந்தை விஷயத்தில் இருவரும் ஒன்று போல யோசித்தால் மட்டுமே அவனை தங்களின் முதல் குழந்தையாக, அன்பு குறையாமல் நன்றாக வளர்க்க முடியும் என்பது அவனது எண்ணமாக இருக்க, அதையே பிரதிபலித்த மனைவி அவனைப் பெரிதும் ஈர்த்தாள். 

இருவரும் திருமணத்துக்கு முன்பு குழந்தையின் தத்தெடுப்பு பற்றி மட்டுமே பேசியிருந்தார்கள். அவர்களின் திருமண அவசரத்தில் மற்ற விவரங்கள் பேச சிறிய தயக்கமிருந்தது. இப்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பிறகு மனம் விட்டுப் பேசி கொள்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. 

“ஷோனா.. ஷ்ரவனை லீகலா அடாப்ட் பண்ணி, அவனுக்கு பாஸ்போர்ட் எடுத்து, உங்க ரெண்டு பேருக்கும் விசா எடுத்து.. எல்லாத்துக்கும் ரொம்ப டைம் எடுக்கும்..” அவளை விலக்கி விழி பார்த்துச் சொன்னான். 

“எஸ். எனக்குத் தெரியும். அதுவரை நாங்க இங்க இருக்கணும் இல்லையா? ஐ வில் வெயிட் விக்ரம்” அவன் சொல்லி முடிக்கும் முன்பே புரிந்துக் கொண்டு பேசுபவளை எதிர்பார்த்திருக்கவில்லை விக்ரம்.

எப்போதும் அவனிடம் எகிறி கொண்டு எதிர்த் திசையில் நிற்கும், சண்டைக்கோழி சுஹாசினியை அவன் எதிர்ப்பார்த்திருக்க, மனைவி சுஹாசினி இன்ப அதிர்ச்சியை அவனுக்குத் தந்தாள். 

“தேங்க்ஸ் ஷோனா” அறையின் மெல்லிய வெளிச்சத்தில் மின்னிய அவள் முகத்தை கையில் ஏந்தி மீண்டும் அழுத்தமாய் முத்தம் வைத்தான்.

முத்தம் இப்போது மொத்தமாய் அன்பு மொழி கேட்டது. இதழ்கள் கன்னத்து இடைவெளியை குறைத்து இதழை தொட முனைந்தது. 

அந்தக் கணம் ஷ்ரவனின் சப்தமான அழுகை மீண்டும் இருவரையும் சட்டென சொடுக்கி பிரித்தது. 

“நான் போய் என்னனு பார்க்கறேன்” சுஹாசினி சொல்ல, இம்முறை அவளைத் தடுக்கவில்லை விக்ரம். இரண்டு நிமிடங்களில் குழந்தையுடன் அறைக்குள் வந்தாள் அவள். 

அவளிடம் வந்தப் பின்பும் அவனது அழுகை குறையவில்லை. விக்ரம் எழுந்து வந்து குழந்தையின் உடலைத் தொட்டு பார்த்தான். காய்ச்சல் விட்டு இயல்பான உடல் சூடு தானிருந்தது. ஏன் அழுகிறான் என்ற காரணம் புரியாமல், அவனை மாறி மாறி கவனித்தனர். 

விக்ரம், ஷ்ரவனை வாங்கிக் கொண்டு அறையை ஒட்டிய பால்கனிக்கு சென்றான். உடலில் ஈரக் காற்று படவும், அழுகையை மெல்ல நிறுத்தினான் குழந்தை. அவனுடன் கொங்கனியில் பேசிக் கொண்டே விக்ரம் நடக்க குழந்தை மெல்ல கண்ணயறத் தொடங்கினான். 

இருபது நிமிடங்கள் கழித்து அரைத் தூக்கத்தில் இருந்த குழந்தையை படுக்கையில் விட, படக்கென்று கண் விழித்து மெலிதாய் சிணுங்கினான். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக அவனிடம் அமர, கடந்த சில நாட்களின் முயற்சியை, தூக்கத்தை மறந்து இப்போதும் செய்தான் ஷ்ரவன். அவனாக உடலைத் திருப்பி, புரண்டு படுக்க முயற்சித்தான்.

“குப்புற விழ டிரை பண்றான்” இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, அதற்கும் சிரித்தபடி குழந்தையிடம் பார்வையை திருப்பினார்கள். 

ஷ்ரவன் மெல்ல ஒரு பக்கமாக புரண்டு, பின் மெதுவாக தலையை தூக்க முயன்றான். அந்த முயற்சியில் உடலுக்கு அடியில் கை சிக்கிக் கொள்ள யாரோ அடித்தது போல சத்தமாக அறை அதிர அழுதான். சுஹாசினி அவனைத் தூக்க போக, கைப் பிடித்து அவளைத் தடுத்தான் விக்ரம். தனது அலைபேசியை தேடி எடுத்து வந்தான். 

மனைவியை இழுத்து தனக்கு பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, ஷ்ரவனின் வளர்ச்சியை படம் பிடிக்கத் தொடங்கினான். 

ஷ்ரவன் இப்போது உதடு பிதுக்கி அழுது, அவனாக மின்னல் வேகத்தில் முகம் காட்டி திரும்பிப் படுத்தான். அடுத்த நொடியே மீண்டும் புரண்டு, திரும்பி, கை சிக்கவும் கரைந்து, தலையை தூக்க முயன்று, படுக்கையில் முகம் மோத, முட்டிக் கொண்டு அழுது என ஒரு சுழற்றியில் சென்று அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

“நாலு மாசமாக போகுது இல்ல? ஒரு வாரமா இதையே தான் பண்றான். இப்போ ரெண்டு நாளா காய்ச்சல் இருந்ததால கொஞ்சம் சேட்டை இல்லாம இருந்தான். மறுபடியும் தொடங்கிட்டான், பாருங்க” சுஹாசினி சொல்ல, “பார்க்கவே அழகா இருக்கு. இல்ல?” புன்னகையுடன் சொன்னான் விக்ரம். 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கண் மூடித் திறக்கும் நேரத்தில் புரண்டு, குப்புற விழுந்து, வெற்றிகரமாக தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்து பொக்கை வாய் மலர்ந்து சிரித்தான் ஷ்ரவன். 

“செல்லக் குட்டி. வெல் டன். க்யூட் டா நீ” குனிந்து குழந்தையின் முகத்தில் அவள் முத்தமிட, அதை வேகமாக புகைப்படமாக்கினான் விக்ரம். 

“நீங்களும் வாங்க” என்று அவள் கை நீட்ட, அவர்களோடு இணைந்து கொண்டான் விக்ரம். 

அலைபேசியை திருப்பிப் பிடித்து, கோணம் பார்த்து மூவரையும் படம் பிடித்தான். மனைவியின் தோளில் கைப் போட்டு மகனின் கன்னத்தில் முத்தம் வைத்தான். 

அவனுக்கு மனது நிறைந்து போனது. சுஹாசினி எட்டி அவன் கன்னக் குழியில் முத்தமிட்டு, “தேங்க்ஸ்” என்றாள். 

“எதுக்கு?” 

“ஷ்ரவனை எனக்குத் தந்ததுக்கு..” அவன் புருவம் சுருக்க, “அக்காவின் பரிசை… அவளோட பிரதியை… எனக்கு.. நமக்கு.. சாரி, எனக்குச் சரியா சொல்லத் தெரியல. ஆனா, தேங்க்ஸ். நீங்க என் வாழ்கையில் வந்ததுக்கும் சேர்த்து தான் சொல்றேன்” அவள் சொல்ல, மேலும் அவளை தனக்கு நெருக்கமாக இழுத்தான் விக்ரம். 

“நான்.. உங்களுக்கு பொருத்தமா.. உங்களோடு பொருந்திப் போவேனா.. சத்தியமா எனக்கு தெரியல. உங்க அளவுக்கு எனக்கு உலகம் தெரியாது, முதிர்ச்சியும் கிடையாது. ஆனா, உங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ மாட்டேன். என்னால முடிஞ்ச வரை உங்களை புரிஞ்சு நடந்துக்க டிரை பண்றேன். லவ்.. அது கண்ணை மூடிட்டு குதிக்க பார்க்கறேன்” அந்த கடைசி வரியில் சத்தமாக சிரித்து விட்டான் விக்ரம். 

“ஏன் கண்ணை திறந்து குதிக்க வேண்டியது தானே?” அவன் கேலியாக கேட்க, “கண்ணை திறந்து உங்களைப் பார்த்தா, ஏடாகூடமா ஏதாவது பேசி, சண்டைப் போட தான் தோணுது.” சிறு குரலில் அவள் சொல்ல, அவன் சிரிப்பு நிற்கவேயில்லை.

“அவர்கள் அதன் பின் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இந்த ஸ்டேட்மெண்ட்டில் எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கை இருக்கு விக்ரம். ஒரு மனைவியா, அம்மாவா நான் எப்படி இருப்பேன்னு…”

“இவ்வளவு யோசிக்காத ஷோனா. அதுவும் இன்னைக்கே. நான் சொன்ன மாதிரி.. லெட்ஸ் கோ வித் த ப்ளோ. ஓகே? எனக்கும் எல்லாமே புதுசு தான். ரெண்டு பேரும் சேர்ந்தே எல்லாத்தையும் கத்துப்போம். என்ன அவசரம்?” அவன் புருவம் உயர்த்திக் கேட்க, புன்னகைத்தாள். 

“என்கிட்ட எப்பவும் எதிர்த்து நின்ன உன்னோட திமிர், தைரியம், பேச்சு இதெல்லாம் தான் என்னை அவ்வளவு ஈர்த்தது. எப்பவும் நீ, நீயா இரு, அது போதும்” சொன்னவன், அவளின் சுண்டு விரலில் தன் சுண்டு விரலை கோர்த்துக் கொண்டான். 

ஷ்ரவன் மீண்டும் சிணுங்கி அவர்கள் கவனத்தை தன் மேல் திருப்பினான்.

சுஹாசினி சென்று அவனுக்கு பால் கலந்து எடுத்து வர, கொஞ்சம் குடித்ததும் கண்கள் சொருகினான் குழந்தை. அவனைத் தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான் விக்ரம். கட்டிலின் ஓரத்தில் படுத்து, தன் மார்பில் ஷ்ரவனை போட்டுக் கொண்டான். குழந்தை இரண்டே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான். 

“ஷோனா.. தூக்கம் வரல?” கிசுகிசுத்தான் விக்ரம். அவன் கை நீட்ட, தயக்கத்துடன் அவன் கைப் பிடித்தாள் சுஹாசினி. சிறிது இடைவெளி விட்டே அவள் படுக்க, கை நீட்டி இருவரின் சுண்டு விரலையும் சேர்த்தான் விக்ரம். 

அந்த முக்கியமான நாளின் மொத்த அசதியும் அவளை அழுத்த, கண்களை மூடியவள், சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள். 

அவனுக்கு பக்கத்தில் மனைவி, மார்பில் மகன், இருவரையும் பார்க்க பார்க்க விநோத உணர்வு விக்ரமை சூழ்ந்தது. அதீத மகிழ்வில் அவன் வாழ்வில் அதுவரை இருந்த தனிமையும், இருளும் இல்லாது போயிருந்தது. மனைவியை கண்களில் நிறைத்து, இமைகளை மூடினான் அவன். 

மறுநாள் அதிகாலையில் எழுந்து கொண்டான் ஷ்ரவன். பெற்றோரையும் பொறுப்பாக எழுப்பி விட்டான் குழந்தை. விக்ரம் அவனை கவனிக்க, சுஹாசினி குளித்து வந்தாள். அன்றைய நாள் அதிவேகமாக நகரத் தொடங்கியது. 

பின் காலை பொழுதில் உணவு முடித்து, நண்பர்கள் குடும்பத்துடன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தார்கள். மதிய விருந்து மலரின் வீட்டில் உண்டார்கள். அங்கே சைவம், அசைவம் என்று விருந்து தடபுடல் பட்டது. நட்புகளின் மூன்று குடும்பமும் அங்கு தானிருந்தது. அந்த பெரிய கூடத்தில் வரிசையாக அமர்ந்து பேசிக் கொண்டே உண்டனர்.

கோவாவிலும் பிரதான உணவு அரிசி என்பதால் விக்ரமிற்கு எதுவும் வித்தியாசமாக படவில்லை. சோறும், மீன் கறியும், கடல் உணவும் உண்டு வளர்ந்தவன் அவன். இங்கு வித்தியாச சுவையில் காரசாரமாக பரிமாறப்பட்ட உணவுகளை ரசித்து உண்டான். அதைப் பார்த்த பின்னே சுஹாசினிக்கு உணவு சரியாக இறங்கியது.

“நீ சாப்பிடல?” மனைவியின் இலையில் உணவு அப்படியே இருக்க கேட்டான் விக்ரம். 

“சாப்பிட்டேன். இல்ல, சாப்பிடுறேன்” என்றவளை புன்னகையுடன் பார்த்து, தன் இலையில் இருந்து நண்டை எடுத்து ஓடு உடைத்து அவளுக்கு வைத்தான். அவள் இலையில் அப்படியே இருந்த இறைச்சியை தன் இலைக்கு மாற்றினான்.

“சாப்பிடு. நண்டு பிடிக்காதா?” அவனுக்கு பதில் சொல்லாமல் வேகமாய் உணவை அள்ளி, நண்டோடு சேர்த்து வாயில் திணித்தாள் சுஹாசினி.

“ம்க்கும்..” என்று நண்பர்கள் தொண்டையை செரும, அவள் தலை நிமிரவேயில்லை.

“விருந்துல எதுக்கு நண்டு வைக்கிறீங்கன்னு கேட்ட இல்ல, மக்கே. இதுக்கு தான்” என்று அவர்களை கண் காட்டி ராகவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனுப்பிரியா. 

“நீங்க ஸ்கோர் பண்றீங்க அண்ணி” ராகவி கிண்டலாக பாராட்ட, “அனுபவம் வாலு. உனக்கும் விருந்து வச்சேன் மறந்திட்டியா.. உன் போலீஸ்..” அனுப்பிரியாவின் வாயை பட்டென கையால் மூடினாள் ராகவி.

அங்கே அனைவரும் மாப்பிள்ளையை கவனித்து உணவு பரிமாற, அவனோ மனைவியை கவனித்தான். இப்போது உணவு அவர்களை இணைத்தது.

அன்று ஷ்ரவன் இயல்புக்கு வந்திருந்தான். புதிதாக கற்றிருந்த வித்தையை குப்புற விழுந்து அடிக்கடிக் காட்டினான். மீண்டும் பழைய நிலைக்கு வர முடியாமல் கத்தி ஊரை கூட்டினான். சுஹாசினி, விக்ரம் குரல் கேட்டால் மட்டும் உதவிக்கு ஆள் வருகிறது என்று புரிந்து அழுகையை நிறுத்தி பொக்கை வாயில் எச்சில் ஒழுக சிரித்து மயக்கினான்.

அவர்களுக்கு அடுத்து வந்த நாட்கள் கோவில், நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு செல்வது, வெளியில் செல்வது என விரைந்து ஓடத் தொடங்கியது.

விக்ரமிடம் போதிய பணமும், எடுத்து செய்ய ஆட்களும் இருந்ததால், சென்னையில் இருந்தபடியே கோவாவில் ஷ்ரவனை தத்தெடுக்கும் வேலைகளை தொடங்கியிருந்தான். 

அங்கிருந்த படியே பாஸ்போர்ட் வேலைகளையும் கவனித்தான். அவர்கள் இருவரின் பாஸ்போர்டிலும் மற்றவரின் பெயரை இணையாக சேர்க்க வேண்டியிருந்தது. திருமண சான்றிதழ் கிடைக்கும் நாளை தோராயமாக கணித்து, கோவா பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து வைத்தான். சுஹாசினி பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றத்திற்கும் சேர்த்து விண்ணப்பித்து இருந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே சட்ட வேலைகள் சட்டென முடியாமல் இழுத்தடித்தது. ஒவ்வொரு அலுவலுக்கும் தனித்தனி ஆவணங்கள் சமர்ப்பிக்க சொன்னார்கள். அந்த ஆவணங்களை நிரூபிக்க துணை ஆவணங்கள் கேட்டார்கள். விக்ரம் அனைத்திற்கும் தயாராக இருந்தான். முன் கூட்டியே தேவையான ஆவணங்களை வாங்கியும் வைத்திருந்தான் அவன். 

சுஹாசினிக்கு கணவனை பார்க்க பார்க்க பிரமிப்பு கூடியது. 

அவனிடம் மல்லுக் கட்டிக் கொண்டு, எதையும் யோசிக்காமல், குழந்தையை கேட்டது, இப்போது அபத்தமாகப்பட்டது. 

சரியாக ஒரு வார முடிவில் அவர்களின் திருமண சான்றிதழ் வந்து விட, அவ்வளவு தான் மனைவி, மகனுடன் கோவா கிளம்பினான் விக்ரம். 

சுஹாசினியை சட்டென சூழ்ந்தது கலவர மேகம். வெங்கடேஷ் என்னதான் அரசு பணியில் இருந்தாலும், அவரால் அதிக விடுமுறை எடுக்க முடியவில்லை. ஏற்கனவே பேரனை பார்க்க கோவா சென்றது, மகளின் திருமணத்திற்கு என அதிக நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார் அவர். 

இப்போது மகளையும், பேரனையும் கோவாவில் விட்டுவிட்டு உடனேயே சென்னை திரும்பி விட்டார் அவர். 

சென்னையை, பிறந்த வீட்டை, அப்பாவை, நண்பர்களை பிரிவது மிகவும் கடினமாக இருந்தாலும், விக்ரம் அவளின் நாட்களுக்கு சுவாரசியம் கூட்டினான். ஷ்ரவனின் தாயாகும் முழு முனைப்பில் இருந்தவளுக்கு எதைக் குறித்தும் பெரிதாக வருத்தப்பட நேரம் இருக்கவில்லை. 

Advertisement