Advertisement

வீட்டின் முன்பிருந்த தோட்டப்பகுதி விளக்குகளால் ஒளிர்ந்துக் கொண்டிருக்க, சுஹாசினியின் உறவுகளும், நட்பும் அங்கே குழுமி இருந்தனர்.

சுஹாசினியின் கரங்களுக்கு மலர் மெஹந்தி போட்டுக் கொண்டிருக்க, அவளின் பாதங்களில் அப்போதுதான் மருதாணி வைத்து முடித்திருந்தாள் ராகவி. 

அவளுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த விக்ரமின் பக்கத்தில் ராகவன் இருந்தான். மாப்பிள்ளையை பார்க்கவும், பேசவும் ஆவலாக பலரும் அவனை நெருங்க, மொழித் தகராறில் சிக்கிக் கொண்டிருந்தான் விக்ரம். 

அவன் பேசும் ஆங்கிலம் பலருக்கு புரியாமல் முழிக்க, அவனோ, அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். அவளுக்கு அதைப் பார்க்க ஏனோ சுவாரசியமாக இருந்தது. 

விக்ரமுக்கு கூட்டத்தின் நடுவே தனித்திருப்பது போலிருக்க, எல்லாவற்றிக்கும் பதில் அவளிடம் இருப்பது போல அவளைத் தான் கண்களால் தேடித் தொட்டான். 

ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து எழுந்து, நேராக அவளுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டான் அவன். யார் என்ன சொல்வார்கள், நினைப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு துளியளவும் இல்லவே இல்லை. 

அவள் பாய் விரித்து தரையில் அமர்ந்திருக்க, தானும் காலை மடக்கி அவளோடு அமர்ந்து விட்டான்.

அவளுக்கு அவன் மொழி தெரியாது. அவனுக்கு அவளது தெரியாது. ஆனால், விசித்திரமாக அது தான் அவர்களை இணைத்தது. 

இப்போது மலர், ராகவி இருவரும், ஆளுக்கொரு கரத்தில் மெஹந்தி போட, அமைதியாய் அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் விக்ரம். 

சிறிது நேரத்தில், “ஷ்ரவன் என்ன பண்றான்னு பார்க்கணும். ஃபீவர் வேற இருந்ததே?” மெல்ல குனிந்து சுஹாசினியிடம் அவன் கேட்க, இரு கைகளிலும் மருதாணி இருக்க, அதை அவனிடம் உயர்த்தி காட்டியபடி பதில் சொன்னாள். “சாந்தாம்மாகிட்ட விட்டுட்டு வந்தேன். நல்லா தூங்கிட்டு இருந்தான்.”

“ஓகே. நான் போய் பார்த்திட்டு வரவா?”

“வேணாம். அழுதா அவங்களே தூக்கிட்டு வருவாங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க உட்காருங்க” 

“ஓகே.” என்றவனுக்கு ‍அவளைத் தவிர அனைத்தும் அந்நியமாக பட, இறுக்கமாகவே அமர்ந்திருந்தான். 

அந்நேரம் ராகவன் அவர்களுக்கு குடிக்க பழச்சாறு கொணர்ந்து கொடுக்க, இரண்டையும் கை நீட்டி வாங்கிக் கொண்டான் விக்ரம். தான் ஒரு வாய் குடித்து விட்டு, திரும்பி அவள் கரங்களை பார்த்து விட்டு, கிளாஸை அவள் உதட்டில் வைக்க, கையில் பரவாத மருதாணியின் சிவப்பு, அவள் முகத்திற்கு இடம் மாறியிருந்தது. பழச்சாறின் குளுமை தொண்டையில் இறங்க, அவன் பார்வையின் குளுமை அவள் மனதில் இறங்கியது. 

விக்ரம் மிக இயல்பாகதான் அதைச் செய்தான். அவளுக்கு தான் கூச்சமாக இருந்தது. மலர், ராகவி இருவரும் எதையும் கவனிக்காதது போல, நமுட்டு சிரிப்புடன் தலைக் குனிந்திருந்தனர். 

“வெய்னி மெயிலை ஓபன் பண்ணி பார்க்கணும்னு எப்படித் தோணுச்சு?” திடீரென்று அவன் கேட்க, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் சுஹாசினி. 

“தப்புனு சொல்றீங்களா?”

“நோ. நோ. ஜஸ்ட் கேட்டேன்”

“நீங்க எனக்கு ஒரு பார்சல் அனுப்பினீங்க ஞாபகம் இருக்கா?” அவன் ஆமென்று தலையசைக்க, “அதுல அக்கா நிறைய கிஃப்ட் எனக்காக வாங்கினது வச்சிருந்தா. சேலை, ட்ரெஸ், நகை, டைரி, பெர்ஃப்யூம், வாட்ச், இப்படி நிறைய இருந்தது. அதுல கிஃப்ட் கார்ட், பர்த்டே கார்ட் எல்லாம் கூட இருந்தது. ஏன் ஒரு லெட்டர் கூட இருக்கு. நான் தான் இன்னும் அதை பிரிச்சு படிக்காம இருக்கேன். பயமா இருந்தது வாசிக்க..”

“நாம சேர்ந்து வாசிக்கலாம்.. அப்புறமா.. ஓகே?” அவன் சொல்ல, தலையசைத்தாள். 

“பர்த்டே கார்ட்ல விஷ்ஷஸ் எழுதி இருந்தா. அது கூடவே.. நான் உனக்காக எழுதும் மெயில்கள், இந்த பரிசுகள் உன்னை சேருமா? அப்படினு எழுதி இருந்தாங்க. அதைப் பார்த்து சந்தேகம் வந்து உதய் அண்ணாகிட்ட சொன்னேன். எனக்கு அக்காகிட்ட இருந்து மெயில் வரல. ஆனா, அவங்க அனுப்பி இருக்காங்கன்னு எழுதியிருக்காங்க சொன்னேன். முதல்ல அண்ணா ஹெல்ப் பண்ண யோசிச்சார். ‍திடீர்னு நேத்து…” என்றவள் மேலே தொடர முடியாமல் பேச்சை நிறுத்த, அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவன், ஆறுதலாக புறங்கையை மென்மையாய் பற்றினான். அவளை அனிச்சையாய் நெருங்கி அமர்ந்தான். 

அப்போது, “ம்க்கும்…” என்றாள் பனிமலர். 

“உங்களை எல்லாம் விட ரொம்ப ரொம்ப கம்மியா தான் படம் ஒட்டுறேன் நான். நீங்க எல்லாம் அதிதீவிர காதல் ரெயிலை ஒட்டினவங்க. என்னைப் பார்த்து தொண்டையை செருமினா, கடிச்சு வைப்பேன். பார்த்துக்கோ” சுஹாசினி அதை ஆங்கிலத்தில் சொல்ல, புரிந்த விக்ரம் பட்டென அவளின் கையை விட்டான். 

“மலரே.. இப்படி என் ரொமான்ஸை மொட்டுலயே பட்டுனு வாட வச்சுட்டியே, வீரசிவத்தின் ஆளுக்கு இது அழகா சொல்லு?” என்று அவள் தமிழில் கேட்க, மலர் வெட்கப்பட, ராகவி சத்தமாக சிரித்திருந்தாள். 

“அவ்வளவுதான். வேலை முடிஞ்சது. நாங்க கிளம்பறோம். நீ டிஸ்டர்ன்பென்ஸ் இல்லாம ரொமான்ஸ் பண்ணு, சரியா?” என்று ராகவி எழுந்து கொள்ள, சுஹாசினி குனிந்து தன் கையையும், காலையும் பார்த்தாள். 

“ரா.. பட்டே.. என்னை இப்படி கை விடலாமா நீ? கால்ல மருதாணி இருக்கு. ராகவனை கூப்பிடு. நான் எப்படி வீட்டுக்குள்ள போவேன்?” என்று அவள் அலற, கண் சிமிட்டி சிரித்தாள் ராகவி. மலரும் சிரித்துக் கொண்டே எழுந்து கொள்ள, “ஏய்.. எங்க போறீங்க ரெண்டு பேரும்?” கத்தினாள் சுஹாசினி. 

“உன் ஹீரோகிட்ட வீட்டுக்குள்ள போகணும்னு சொல்லு சுஹா, அவருக்கு என்னப் பண்ணனும்னு தெரிஞ்சுருக்கும்.” என்ற ராகவி, அப்படியே பின்னால் நடக்கத் தொடங்கினாள். 

“என்னது?” என்று கத்தியவள் திரும்பி விக்ரமை பார்த்தாள். ஒற்றை புருவம் உயர்த்தி, “என்ன?” என்றான் அவன். 

“நத்திங்.” என்றாள், அவன் கண்களை பாராமல். 

சிறிது நேரத்தில் இரவு முழுவதுமாக கவிழ, உறவுகள் உறங்கச் சென்றது. 

“நீங்களும் வீட்டுக்குள்ள வாங்க மா. நேரத்துக்கு படுத்து ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்கணும்” வெங்கடேஷ் அவர்கள் இருவரையும் பார்த்துச் சொல்ல, “இதோ ப்பா” என்றாள் சுஹாசினி. 

கண்களை சுழற்றி சுற்றிலும் பார்த்தாள். ஆங்காங்கே சிலர் நின்று பேசிக் கொண்டிருக்க, அவளின் நண்பர்களை காணவில்லை. மலரின் அண்ணா, அண்ணி என்று யாருமே கண்ணில் படவில்லை. அலைபேசி வீட்டினுள் இருக்க அவர்களை அழைக்கவும் முடியாது. 

அவள் வேறு வழியின்றி திரும்பி விக்ரமை தான் பார்க்க வேண்டியிருந்தது. 

“விக்..ரம்..” என்று ராகம் இழுத்தவளை என்னவென்று புரியாமல் பார்த்தான் அவன். 

“ஒன்னுமில்ல” என்றவள், பாதங்களில் இருந்த மருதாணியை பொருட்படுத்தாமல் பாதங்களை தரையில் ஊன்றப் போக, அவளின் கணுக்காலை பிடித்தான் விக்ரம். 

“வெயிட்” என்றான் வேகமாக. அவள் தயக்கமும், மிரட்சியுமாக பார்க்க, வேகமாக எழுந்தவன், அதே வேகத்துடன் அவளை தூக்கி தரையில் பாதம் படாமல் அவன் மேல் சாய்த்து, கைகளில் அள்ளப் போக, “ஆத்தி” என்று அலறி, அவனை உதறி விட்டு படபடப்புடன் பாதம் பதித்து வீட்டினுள் ஓடியிருந்தாள் சுஹாசினி. ஓரளவு நன்றாகவே காய்ந்திருந்தது மருதாணி. அதனால் பாழாகவில்லை. 

மெலிதான சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான் விக்ரம். 

சுஹாசினி கைகளில் இருந்த மெஹந்தி காயும் முன்னே அழத் தொடங்கியிருந்தான் ஷ்ரவன். சாந்தாம்மா, விக்ரம் என யாரிடமும் சமாதானமாகவில்லை அவன்.

ஒருமுறை கை மற்றும் காலில் இருந்த மருதாணியை யோசனையுடன் பார்த்து, அதை கழுவி விட்டு அவனைத் தூக்கிக் கொண்டாள் சுஹாசினி. 

சிறிது நேரம் கழித்து மலரும், அனுப்பிரியா அண்ணியும் அவளின் உதவிக்கு அங்கு வந்தனர். ஆனால், ஷ்ரவன் அவளைத் தவிர யாரிடமும் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான். அவனுக்கு இன்னமும் லேசான காய்ச்சல் இருக்க நசநசவென்று சிணுங்கிக் கொண்டேயிருந்தான் குழந்தை. பழகிய அவளிடம் மட்டுமே ஒட்டினான் குழந்தை.

நள்ளிரவு ஒன்றைக் கடக்கும் போது, அரைத் தூக்கத்தில் இருந்த குழந்தையை அவளிடமிருந்து விக்ரம் வாங்கி, தன் மார்பில் போட்டு தட்டிக் கொடுக்க, அதன் பிறகுதான் நன்றாக தூங்கினான் குழந்தை. 

மறுநாளைய விடியல் அவர்களுக்கு பரபரப்பாக விடிந்தது. 

சாந்தாம்மாவும், அனுப்பிரியாவும் குழந்தையை பார்த்துக் கொள்ள, மலர், ராகவி உதவியுடன் மணப்பெண்ணாக தயாராகி கொண்டிருந்தாள் சுஹாசினி. 

கதவை மெதுவாக தட்டி விட்டு அறைக்குள் வந்தான் ராகவன். முகம் புன்னகையில் விரிய, “சுஹா..” என்று அழைத்தான். 

“நானும் கமிட்டாகிட்டேன் ராகவ்.” சிரிப்புடன் சொன்னவள், “அவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தியா?” என்று கேட்க, “எனக்கே தாலி கட்டத் தெரியாது. இதுல நான் எப்படிச் செல்லிக் கொடுக்க?” என்று அசட்டையாக தோள் குலுக்கினான் ராகவன். 

“அட மக்கு டாக்டரே..” என்றவள், திரும்பி ராகவியை பார்த்து நாக்கை துருத்தி, “சாரி” என்றாள். 

“நீ நடத்து சுஹா” என்று ராகவி தன் உடன்பிறப்பை கலாய்க்க அனுமதி கொடுக்க, “நான் என்ன உன்னை தாலி கட்டவா சொல்லித் தரச் சொன்னேன் டா? என்ன சடங்கு, எப்படிச் செய்யணும்? இதைத் தானே சொல்லிக் கொடுக்க சொன்னேன்? மூணு முடிச்சு போடணும். வகிட்டுல குங்குமம் வைக்கணும். மெட்டி போடணும். இதெல்லாம் சொல்லித் தரலையா நீ?” அவள் கோபத்துடன் கேட்க, 

“சொன்னேன் சுஹா. அவருக்கும் நிறைய தெரிஞ்சு இருக்கு” என்றான் அவன்.

“ஆமா. நேத்து யூடியூப்ல வீடியோ பார்த்திட்டு இருந்தார். இந்த வீரா, உதய் ண்ணா எல்லாம் எங்க போனாங்க? கொஞ்சம் கூட என்மேல பாசமே இல்ல, அவங்களுக்கு” அவள் சடைக்க, “வீரா நேரா கல்யாணத்துக்கு வந்திடுறதா சொன்னார்” என்று மலரும், “உதய் காலைல வேலையில் இருந்து வந்ததும் நேரா கோவிலுக்கு தான் போனார். அங்க ஏற்பாட்டை எல்லாம் கவனிக்கணும் இல்ல? அதுக்காக போய் இருக்கார்” என்று ராகவி கணவனுக்காக பரிந்து பேச, “ஓகே” என்றாள் சுஹாசினி. 

அவள் முக வாட்டத்துடன், “நீ போய் அவருக்கு ஹெல்ப் பண்ணு” என்று ராகவனை விரட்டினாள். 

“உன் முகம் ஏன் டல்லாகிடுச்சு சுஹா? என்னாச்சு?” என்று ராகவி அவள் முகம் பற்றி கேட்க, அழுது முக அலங்காரத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க, கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தாள் சுஹாசினி. 

அவளுக்கு இப்போது அம்மாவை தேடியது. மனம் அக்காவின் அண்மையை நாடியது. அதை வெளியில் சொல்லி அனைவரையும் வருத்த விருப்பமில்லாமல் வருந்தியது. 

அதையெல்லாம் விட, அன்போ, காதலோ, பெரிதான புரிதலோ இல்லாமல், குழந்தையை காரணமாக வைத்து நடக்கப் போகும் தன் திருமணத்தை நினைக்கையில் பயம், பதட்டம், எதிர்காலம் குறித்த கவலை என அனைத்தும் அவளுக்கு வந்தது. 

“சுஹா, என்னாச்சு? கேட்கிறேன், இல்ல?” ராகவி அவளை உலுக்க, “நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு மட்டும் ஏன் காதலே இல்லாத கல்யாணம்?” அவள் கேட்க, மற்ற இருவரும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தனர். 

“என்ன பேசுற நீ?” மலர் கோபமாக கேட்க, “உண்மையை தான்” என்றாள். கலங்கிய அவள் கண்களில் கலக்கமும் தெரிய, தோழிகள் கவலையாய் அவளைப் பார்த்தனர். 

அச்சமயம் அறைக் கதவு தட்டப்பட, இப்போது அறைக்குள் நுழைந்தது உதய்பிரகாஷ்.

சுஹாசினியை பார்த்து பெரிதாக புன்னகைத்து அவளின் தலை வருடி, தோளில் தட்டிக் கொடுத்தான் அவன். 

அதில் சொல்லப்படாத மகிழ்வும், அவளுக்கான ஆசீர்வாதமும் இருந்தது. 

“உதய்” என்று ராகவி அழைக்க, எழுந்து நின்றிருந்த மனைவியின் பக்கத்தில் சென்றான் அவன். ஆறு மாத வயிறு புடவையில் பளிச்சென தெரிய, கை நீட்டி புடவையை சரி செய்தான் அவன். 

சுஹாசினி உதட்டை பிதுக்கி, “பாரு மலரே இவங்க லவ்ஸை” என்று மலரிடம் கிசுகிசுத்தாள். 

“உங்களை கோவிலுக்கு கூட்டிட்டு போக வந்தேன். கார் ரெடியா இருக்கு. நல்ல நேரத்துக்குள்ள கிளம்புவோம்” என்று உதய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் வீரா. 

பூக்காரன் கையில் இரண்டு பூங்கொத்துகள் இருந்தன. அறைக்குள் வந்து சிவப்பு ரோஜாக்களை மலரிடம் கொடுத்து அவளை சிவக்க வைத்து விட்டு, எல்லா வண்ணங்களிலும் இருந்த வண்ணக் கலவையான பூங்கொத்தை சுஹாசினியின் கையில் கொடுத்தான் அவன். 

“இதுக்கு என்ன அர்த்தம் ண்ணா?” பூக்களை கண் காட்டி சுஹாசினி கேட்க, அந்தக் கேள்விக்கு வீராவின் சார்பில் மலர் பதில் சொன்னாள். 

“அன்பு, காதல், சந்தோஷம் நிறைந்த நிலையான வாழ்க்கை, எல்லையில்லா மகிழ்ச்சி, குழந்தைகள் இப்படி பல அர்த்தம் இருக்கு. இது எல்லாமே உனக்கு கிடைக்கணும்னு வாழ்த்துறார் உங்க வீரா அண்ணா” சட்டென கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. மனதின் கலக்கம் சற்றே நீங்கினாலும், “ஆனாலும், அண்ணா முதல்ல உனக்குத்தான் பூ கொடுத்தார். இல்லையா? மலரே, என் நிலைமை.. இந்த விக்ரமுக்கு என்னைப் பிடிக்குமான்னு கூட தெரியாம கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு பயமா…” அவள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

இம்முறை வந்தது மணமகன். சுஹாசினியின் ஹீரோ, விக்ரம். 

“ஹாய்..” அனைவருக்கும் பொதுவாக சொல்லியபடி அவன் உள்ளே வந்து நேராக சுஹாசினியின் முன் நிற்க, அடுத்த கணம் அறை காலியாகி இருந்தது. அவர்கள் இருவர் மட்டுமே தொட்டு விடும் தூரத்தில் நின்றிருந்தனர். 

தாமரை வண்ண காஞ்சிப்பட்டில் முழுமையாக மலர்ந்த தாமரையை போலிருந்தாள் சுஹாசினி. மிதமான அலங்காரமும், அளவான ஆபரணங்களும், அதைவிட சூடியிருந்த பூக்களும், கைகளை சிவக்க வைத்த மருதாணியும் அவளை பேரழகியாகக் காட்ட, பழுப்பு விழிகள் இமைக்க மறந்து அவளைப் பார்த்தன. 

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக, மாப்பிள்ளை கவர்ச்சியுடன் இருந்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஹாசினி. 

“சுஹாசினி.. ஷோனா..” அவன் உரிமையுடன் மென்மையாய் அழைக்க, 

“ஷோனா யாரு? உங்க எக்ஸா?” கல்யாண கலவரமும், மனக்கலக்கமும், அவனது அண்மை தந்த பதட்டமும் அவளை உளற வைத்தது. பக்கென்று சத்தமாக சிரித்து விட்டான் விக்ரம். அந்த நீங்காத சிரிப்புடன் அவளை இன்னும் நெருங்கி நின்றான். இருவருக்கும் இடையே காற்று கூட கடினப்பட்டே கடந்தது. முன்தினம் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தவள், அவன் உரிமையாய் அழைத்ததையே உணர்ந்திருக்கவில்லை. இப்போது அதன் அர்த்தமும் தெரியாமல் குழம்பினாள் அவள்.

கன்னத்தில் குழி விழ சிரித்து, அதற்கு அர்த்தம் சொன்னான் விக்ரம்.

“சுஹா டார்லிங்” அந்த ஹஸ்கி குரலில், அவளுக்கு தொண்டை வறண்டுப் போக, விழிகள் விரிந்து அவனை விழுங்கியது. 

“டார்லிங் சொன்னேன்” 

“ஓ..”

“லுக் சுஹா. இப்போ நம்ம கல்யாணம் ஷ்ரவனுக்காக மட்டும் இல்லைனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நம்ம கல்யாண பேச்சு வார்த்தை வேணும்னா, அவனை வச்சு, அவனுக்காகன்னு ஆரம்பிச்சு இருக்கலாம். ஆனா, நாம ரெண்டு பேருமே ஒருத்தரையொருத்தர் பிடிக்காம நிச்சயமா கல்யாணத்துக்கு ஓகே சொல்லல. இல்லையா?” அவன் கேட்க, அவள் தலை தானாக ஆடியது. 

“ஐ லைக் யூ.” என்றான் அவள் நாடியை சுட்டு விரலால் நிமிர்த்தி, “உன்னை மதிக்கிறேன் ஷோனா. என் மனைவியா உன்னை பத்து நாளைக்கு முன்னமே மனசுல பதிச்சுட்டேன். இனி நமக்குள்ள லவ், அண்டர்ஸ்டாண்டிங் எல்லாம் தானா வரும். நாம் எதையும் ரஷ் பண்ண வேண்டாம். லெட்ஸ் கோ வித் த ப்ளோ, சரியா?” 

“ம்ம்”

“ரெண்டு பேருக்கு நடுவில் எல்லாமே பொருந்தி சரியா இருந்தா வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கப் போகுது ஷோனா? நமக்குள்ள எதுவுமே ஒத்துப் போகல. நம்ம ஊர், உணவு, மொழியில் தொடங்கி.. எல்லாமே வேற வேற தான். ஆனா, அன்பு? அது பொது மொழி இல்லையா? அது எல்லோருக்கும் புரியும் தானே? நமக்குள்ள இருக்கற இந்த வேறுபாடுகளோடு, நாம சேர்ந்து வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு, ரியல் சக்சஸ் ஷோனா. டிரை பண்ணித் தான் பார்ப்போமே. நீ என்ன சொல்ற?” கேட்டபடி அவன் வலக்கரத்தை நீட்ட, பேச்சு மறந்து போய் இருந்தவளின் ‍இடக்கரம் அனிச்சையாய் அவன் கரத்தை சேர்ந்தது. 

விக்ரம் இரு கரம் கொண்டு அவள் கரத்தை பொக்கிஷமாய் பொதிந்துக் கொண்டான். அகத்தின் மலர்ச்சி முகத்தில் நிறைய, மலர்ந்த சிரிப்புடன் குனிந்து அவள் கண்களைப் பார்த்தான். சட்டென அப்படியே அவளை அணைத்து, அதே வேகத்தில் விடுவித்து, “எல்லோரும் நமக்காக வெயிட்டிங். போகலாம் ஷோனா” என்றான். 

அவன் பேச்சில் அதுவரை இருந்த அலைப்புறுதல் காணாமல் போக, அவள் மனம் ஆழ்கடலின் அமைதியை பெற்றிருந்தது, பசுவை கண்ட கன்றாய் அவனைப் பின் தொடர்ந்தாள் சுஹாசினி.

Advertisement