Advertisement

அவள் கடிவாளம் கட்டிய குதிரையை போல கண்களை எந்தப் பக்கமும் திருப்பாமல் நேராக நடக்க, “சுஹா” என்று அவளை அழைத்தான் ராகவன். 

“பேசாம வா, ராகவ்” எரிச்சலுடன் அவள் சொல்ல, அவளை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டால், அவன் நல்ல நண்பன் இல்லையே. 

“ரொம்ப பண்ற” லேசாக அவளை தோளோடு இடித்து அவன் சொல்ல, அவள் கைகளில் வைத்திருந்த ஆவணங்கள் பிடிமானம் போதாமல் நழுவி தரையில் சிதறியது. 

“என்னடா பண்ற ராகவ்?” திட்டிக் கொண்டே, கைப் பையை ஒருகையில் பிடித்துக் கொண்டு குனிந்து, கீழே விழுந்ததிருந்த அவளின் ஐடி கார்டுடன் அவள் நிமிரப் போன நொடி அந்தக் காட்சி அவள் கண்களில் விழுந்தது. 

அந்தப் பக்கம் கையில் குழந்தையுடன், கண்ணாடித் தடுப்பின் வழியே அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விக்ரம். அந்த பழுப்பு விழிகள் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே இருந்த தூரம், அவன் கண்களில் இருந்த உணர்வுகளை முழுவதுமாக மறைத்திருந்தது. 

ஓரெட்டு அவனை நோக்கி எடுத்து வைக்கப் போனவளை, பெற்றவரின் குரல் தடுத்து நிறுத்தியது. 

“என்னப்பா?” என்றவளின் பார்வை இன்னமும் வெளியில் தான் பதிந்திருந்தது. 

“டைமாச்சு மா, க்யூ நகருது பாரு. முன்னாடி வா” வெங்கடேஷ் சொல்ல, “வர்றேன் ப்பா” என்றாள். 

அலைபேசியை எடுத்து விக்ரமை அழைத்து விடலாமா என்று அவள் நினைத்த நொடி, அவனே கையசைத்து அவளுக்கு விடைக்கொடுத்தான். 

அவளுக்காக முயன்று வருவிக்கப்பட்ட புன்னகையுடன், ஒற்றைக் கையில் பிள்ளையை மார்போடு அணைத்துப் பிடித்தபடி மறுகையை அவன் அசைக்க, பதிலுக்கு கையை கூட அசைக்க முடியா இறுக்கம் அவளுள். 

அவனிடம் சரியாக பேசாமல், முகம் திருப்பிக் கொண்டு வந்தது, இப்போது மிகவும் உறுத்தியது. 

செடியைப் பிரியும் மலர் காற்றுக்கு அசைந்தாடுவதை போல, அவள் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. 

“சுஹா” 

“இதோ ப்பா..” பதற்றமாக சொன்னவளின் கரங்கள் அவனுக்கு விடைக் கொடுக்கவேயில்லை.

அப்படியே பட்டென்று திரும்பி முன்னே நடந்து விட்டாள் அவள்.

விக்ரமின் அணைப்பில் இருந்த ஷ்ரவன் மெல்லச் சிணுங்கத் தொடங்க, ஒரு பெருமூச்சுடன் காரை நோக்கி நடந்தான் அவன். 

அரை மணி நேரம் கழித்து வீடு வந்த பின்னரும் தன் சிணுங்கலை நிறுத்தவில்லை குழந்தை. எப்போதும், “அப்பா இருக்கேன்” எனும் அவனின் பழக்கப்பட்ட குரலுக்கு சமாதானமாகும் குழந்தை, இன்று அழுகையை கூட்டினானே தவிர குறைக்கவில்லை. 

“இட்ஸ் ஓகே ஷ்ரவன். சுஹா சீக்கிரம் வருவா” அவன் சொல்ல, வீரிட்டது குழந்தை. 

“என்ன குட்டி? என்ன செல்லம்?” என்று அவனைத் தூக்கி, சாந்தாம்மா தமிழில் கொஞ்சி சமாதானம் செய்ய, ரோஹிணி, சுஹாசினி என அன்னையர் மொழி கேட்டதில் சட்டென அமைதியாகி குழந்தையின் கண்கள் சுழல, விக்ரம் அவனை விதிர்த்து போய் பார்த்தான்.

சுஹாசினி விமானத்தில் இருந்தாள். ஜன்னலின் வழியே வெளியே பார்க்க, முன்னிரவு வெளிச்சத்தில் ஒரு கால் பந்தாட்ட மைதானம் போல விளக்குகளால் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது கோவா நகரம். 

“இன்னும் ஒரு வாரம் கோவாவில் இருப்பேன் சொன்ன? இப்போ எங்க கூடவே கிளம்பி வந்துட்ட? என்னாச்சு சுஹா?” ராகவன் கேட்க, அவள் பார்வை இருளில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. 

“சுஹா, பதில் சொல்லு”

“அமைதியா இரேன் ராகவ். நொச்சு நொச்சுன்னு கேள்விக் கேட்டு தொல்லை பண்ணாம இரேன்” அடிகுரலில் சீறினாள். 

“அப்போ காரணம் சொல்ல மாட்டா? அப்படித் தானே? அந்த விக்ரம் தான் உன்னை ஏதோ சொல்லியிருக்கணும். கண்டுபிடிக்கிறேன்” என்றவன் வயிற்றில் முழங்கையால் குத்தினாள் அவள். 

“ஆ.. அம்மா” விமானத்தில் அவனால் கத்தக் கூட முடியவில்லை. 

முன்னிருந்த இருக்கையில் தலையை சாய்த்து, “ஷ்ரவனை விக்ரம் தர மாட்டார்னு தெளிவா தெரிந்து போச்சு. எனக்கு அங்க இன்னும் ஒரு வாரம் இருக்க ஆசை தான். ஆனா, அதுக்கு அப்புறம்? குழந்தை என்னைத் தேடினா? அதான் விலகி வந்துட்டேன்” என்றவள், “நான் குழந்தைக்காக தான் கல்யாணத்தை நிறுத்தினேன்னு அவருக்கு தெரிஞ்சுருக்கு. சாந்தாம்மா நேத்து என்கிட்ட சொன்னாங்க. அதைக் கேட்டதுக்கு அப்புறம் என்ன சொல்ல? நான் கேஸ், கோர்ட்னு போனா கூட, இதைச் சொல்லியே விக்ரம் என்னை கார்னர் பண்ண வாய்ப்பிருக்கு இல்ல?” காரணத்தை இப்போது அவள் விளக்க, “ஓ..” என்றான் ராகவன். 

“உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் குழந்தையை பார்த்துக்க மாட்டான். நீயே அதுக்கு பயந்து தான் உனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்க சொல்லுவாங்க. இனியும் அதே தொடர வாய்ப்பிருக்குன்னு…” அவன் முடிக்கும் முன்பே, “எஸ்” என்றவள், தலையை ஓங்கி முன்னிருந்த இருக்கையில் முட்டிக் கொண்டாள். 

அவளுக்கு எல்லா வழிகளும் அடைபட்ட உணர்வு. அதனால் விக்ரமிற்கு வழி விட்டு தன் வழியில் வந்து விட்டாள் அவள். ஆனால், இப்போது குழந்தையின் முகமும், ஸ்பரிசமும், வாசமும், நினைவும் அவள் மனதில் கனமாய் வந்து அமர்ந்து கொண்டது. 

வாழ்க்கையில் முடிவுகளை எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் எடுக்க வேண்டும். பல கட்ட யோசனைக்கு பிறகு எடுக்கும் பல முடிவுகளே தவறாகி போகையில், அவளின் அவரச முடிவு அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. 

அவளின் கல்யாணம் நின்று, குழந்தையையும் தன் வசமாக்க முடியாமல், முற்றிலுமாக தோற்றுப் போனதை போல கலங்கிப் போனாள் அவள். 

எப்போதும் வாழ்வை புரட்டிப் போடும் சம்பவங்களும் அந்த நிமிடங்களும் எவ்வளவு சாதாரணமாக எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி இயல்பாக நடந்து விடுகிறது என்பதை நினைக்கையில் அவளால் வருந்த மட்டுமே முடிந்தது.

சென்னையை அடைந்து உறக்கமில்லா இரவை கடத்தி விட்டு, மறுநாள் காலையிலேயே ராகவியின் வீட்டுக்கு வந்து விட்டாள் சுஹாசினி. 

ஹாலையொட்டி இருந்த ஊஞ்சலில் ராகவி அமர்ந்திருக்க அவளின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள் சுஹாசினி. கடந்த சில மாதங்களில் அவள் வாழ்க்கையே சீட்டு கட்டைப் போல கலைத்துப் போடப்பட்டிருக்க, எதன் மேலும் பற்றில்லாமல், வெறுமையாக உணர்ந்தாள் அவள். 

அவளுக்கு கண்களை திறந்திருந்தாலும், மூடினாலும் குழந்தை ஷ்ரவன் முகமே கண்ணில் வந்து நின்றது. அவனுக்காக இப்போது எதையும் செய்யும் நிலையில் தான் இருந்தாள் அவள். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. 

ராகவி அவளின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே ஊஞ்சலை காலால் மெதுவாகத் தட்டி ஆடிக் கொண்டிருக்க, “ரா…” என்று அழைத்தாள் சுஹாசினி. 

“ம்ம், சொல்லு” 

“குழந்தைங்க எப்போ வருவாங்க?” நன்றாக மேடிட்டிருந்த ராகவியின் ஐந்து மாத வயிறை வருடி, அவளின் இரட்டை குழந்தைகளைப் பற்றி சுஹாசினி விசாரிக்க, “டெலிவரிக்கு இன்னும் நாலஞ்சு மாசம் இருக்கு சுஹா” என்றாள் ராகவி. 

“ட்வின்ஸ் தானே?” 

“ஆமா..”

“அப்போ.. அப்போ.. எனக்கு ஒரு குழந்தையை தர்றியா?” சுஹாசினி கேட்க,

“என்ன சுஹா, எனக்கு ஒரு லட்டு தர்றியான்ற மாதிரி கேட்கிற?” சிரிப்பும், துளி கோபமுமாகக் கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் ராகவன். 

ராகவி அதிர்ச்சியில் உறைந்து, காலை அழுத்தமாக தரையில் ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி விட்டாள். இப்போது ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது அவர்கள் மனம். 

“என்ன, என்ன கேட்ட சுஹா?” ராகவி திக்க, “குழந்தை, எனக்குத் தர மாட்டியா ரா? நான் நல்லா பார்த்துப்பேன். ஐ ப்ராமிஸ் யூ” மடியில் இருந்தபடி முகம் உயர்த்தி பாவமாக சுஹாசினி கெஞ்ச, கோபத்தை அடக்க, பார்வையை அருகில் இருந்த மல்லிப் பந்தலில் பதித்தாள் ராகவி. 

“ஏதோ நாய்க் குட்டியை கேட்கிற மாதிரி கேட்காத சுஹா. கோபமா வருது. நீ என்ன பேசுறன்னு கொஞ்சமாவது யோசிச்சு தான் பேசுறியா? லூசு மாதிரி பேசிட்டு இருக்க?” அவனின் இரட்டை சகோதரியின் மேலுள்ள பாசத்தில் ராகவன் கத்த, உதடைக் கடித்தாள் சுஹாசினி. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தன் மனநிலையை நினைத்து பயந்து, அவமானமாக உணர்ந்து தலைக் குனிந்தாள் அவள். 

அவளின் அத்தனைக் கோபமும் சேர்ந்து அந்தப் பழுப்பு விழிகளின் மேல் திரும்பியது. 

“ராகவ்..” ராகவி அதட்ட, ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அவர்களின் முன்னே அமர்ந்தான் அவன். ராகவி மீண்டும் சுஹாசினியின் தலைக் கோதிக் கொடுக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள் சுஹாசினி. 

கோவாவில் நடந்த அத்தனையும் ராகவிக்கு அவன் சொல்லத் தொடங்க, அந்நேரம் அங்கு மலரும், அவளின் இரண்டாவது அண்ணி அனுப்பிரியாவும் வந்தார்கள்.

“புதுப் பொண்ணே..” என்று அழைத்து, முகத்தை சுருக்கி, நாக்கைக் கடித்த அனுப்பிரியா, “சாரி” என்று விட்டு, “கோவா, எப்படி இருந்தது? ரோஹிணி பையன் எப்படி இருக்கான்? ஏன் அவனை உங்க கூடவே கூட்டிட்டு வரல?” என்று வரிசையாக கேள்விகளை கேட்டார். 

சுஹாசினி மேடிட்ட ராகவியின் வயிற்றுக்கு அடியில் தலையை நன்றாக புதைத்து, ராகவனின் கையை இழுத்து, அவளின் முகத்தின் மேல் வைத்து மூடிக் கொண்டு, “நான் தூங்கிட்டேன்” என்றாள். 

அதற்கு சத்தமாக சிரித்த அனுப்பிரியா, “சரி, எப்போ எழுந்துப்ப?” என்று சிரிப்புடன் கேலியாக கேட்க, “நீங்க வீட்டுக்கு போனதும்” என்ற பதில், ராகவனின் கைக்கு அடியில் இருந்து வந்தது. சட்டென ஒரு சிறிய சிரிப்பலை அங்கே எழுந்து அடங்கியது.

ஊஞ்சலின் மறுபக்கம் அமர்ந்த மலர், சுஹாசினியின் கால்களை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள். மெல்ல அவள் சுஹாசினியின் கணுக்காலில் ஒற்றை விரலால் கோடிழுக்க, ‍ காலை வேகமாக உள்ளே இழுத்து, “வீரா கூட சேர்ந்து கெட்டு போய்ட்ட நீ மலரே. என் காலை விடு, கூசுது” என்று சுஹாசினி கத்த, “டிராமா குயின்” சிரித்துக் கொண்டே சொன்னாள் பனிமலர். 

“ஒழுங்கா எழுந்திருச்சு உட்கார்ந்து பதில் சொல்லு” மலர் சொல்ல, “ம்ஹூம், மாட்டேன். எல்லாம் உங்க வேலையைப் பார்த்திட்டு போங்க” கோபமாக சொல்ல முயன்று தோற்றாள் அவள். 

“சரி, இந்தா. இந்த இட்லியையும், நேத்து வச்ச மீன் குழம்பையும் சாப்பிட்டுட்டு அப்புறமா தூங்கு” உணவை சுஹாசினியின் முகத்துக்கு அருகே அவர் கொண்டு செல்ல, ராகவனின் கையை அழுத்தமாக தன் மூக்கின் மேல் வைத்தாள் சுஹாசினி. 

“எனக்கு சன்னாஸ் (sannas) தான் வேணும். இட்லி வேணாம்” அவள் சொல்ல,

“அப்படின்னா?” என்று எதிர்கேள்வி கேட்டார் அனுப்பிரியா.

“கோவன் இட்லி அண்ணி. கொஞ்சம் இனிப்பா, தேங்கா டேஸ்ட்டோட நல்லா இருக்கும். அங்க விக்ரம் வீட்ல சாந்தாம்மா செய்து கொடுத்தாங்க” சொன்னான் ராகவன். 

“ஓஹோ. சோ, இப்போ ஒன்லி கோவன் புட் தானா சுஹா?” கேலியாக அவர் கேட்க, “எனக்கு ஒன்னும் வேணாம். பசிக்கல. சாப்பாடே வேணாம். நான் உண்ணாவிரதம்” என்று வெறுப்புடன் சொன்னாள் சுஹாசினி. 

அதற்கு, “என்னது?” என்று ஒட்டுமொத்தமாக அங்கிருந்த அனைவரும் ஒன்று போல அதிர்ந்தனர். சுஹாசினிக்கு உணவென்றால் உயிர். மிகத் தீவிரமான, “ஃபுட்டி (foodie)” அவள். இப்போது அவள் உணவையே வேண்டாம் என்றும் சொல்லவும் தான் அதிர்ந்து போய் பார்த்தனர். 

அனுபிரியா மூத்தவராக தன் விளையாட்டை எல்லாம் கை விட்டு விட்டு சுஹாசினியின் கைப் பிடித்து எழுப்பி, அவளை ஊஞ்சலில் நேராக அமரச் செய்தார். 

அவர் கையில் இருந்த உணவு பாத்திரங்களை கீழே வைத்து விட்டு, சுஹாசினியின் கன்னத்தை பிடித்து, “என்னாச்சு சொல்லு?” என்றார். 

சுஹாசினி அவரைப் பார்ப்பதை தவிர்க்க, “ரோஹிணி.. ரோஹி.. குழந்தை எப்படி இருக்கான்? ஃபோட்டோ காட்டு, பிளீஸ்” அவர் அழுகையை அடக்கி கொண்டுக் கேட்க, சுஹாசினிக்கு கண்ணைக் கரித்தது.

ரோஹிணி, அனுப்பிரியா இருவரும் நல்ல நெருக்கம். தன் காதலைப் பற்றி முதலில் அவரிடம் தான் சொல்லியிருந்தாள் ரோஹிணி. ஆனால், கல்யாணம் முடிந்து சில காலம் தொடர்பில் இருந்தவள், பின்னர் அப்பாவுக்காக என்று அனைவரையும் தவிர்த்திருந்தாள் ரோஹிணி. 

“உன்கிட்ட அவன் ஃபோட்டோ இருக்கா ராகவ்? அந்த பையன்.. அவங்க சித்தப்பா என்ன சொல்றார்? குழந்தையை தர மாட்டேன் சொல்லிட்டாரா? குழந்தையை வாங்க தான் போய் இருக்கீங்கன்னு மலர் சொன்னா, அதான் கேட்டேன்” அனுப்பிரியா கேட்க, கோவாவில் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லத் தொடங்கினான் ராகவன். 

விக்ரம் குழந்தையை தர மறுத்தது. அவர்களின் வீடு, தொழில், விக்ரமின் வேலை, வசதி என ஒன்றையும் விடவில்லை அவன். இறுதியாக சுஹாசினி சட்டத்தின் மூலமாக கூட குழந்தையை வாங்க முடியாது என்பதையும் அவன் விளக்கி முடிக்க, அனைவரின் முகத்திலும் கவலையின் ரேகைகள். 

அந்நேரம் ராகவியின் கணவன் உதயும் வேலை முடித்து வீடு வந்திருந்தான். அவனும் ஹால் சுவரில் சாய்ந்து நின்று யோசனையுடன் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 

“ஃபோட்டோ ஏதாவது இருந்தா காட்டு ராகவ்” என்ற அனுப்பிரியா, “ஆக, விக்ரம் கல்யாணம் பண்ணி குழந்தையை வெளிநாடு கொண்டு போகப் போறார். இல்லனா, நம்ம சுஹா கல்யாணம் பண்ணி, அவளுக்கு புருஷனா வர்ற அந்த நல்லவன் மனசு வச்சு கேட்டா, விக்ரம் குழந்தையை கொடுக்க வாய்ப்பு இரு..” அவர் முடிக்கும் முன்பே, “கொடுக்க மாட்டார்” என்றாள் சுஹாசினி அழுத்தமாக. 

இரண்டே நாட்களில் விக்ரமை முழுமையாக படித்திருந்தாள் அவள். எக்காரணம் கொண்டும், எதற்காகவும் குழந்தையை அவன் விட்டுத் தர மாட்டான் என்பது அவளுக்குத் திண்ணம். அவனின் வாழ்வின் பிடிப்பே இனி குழந்தை தான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்திருந்தது. 

Advertisement