Advertisement

சில மாதங்களுக்குப் பின்பு,

மங்களூரின் கடற்கரை ரிசார்ட்டில் கடலை நோக்கி கால் நீட்டி அமர்ந்திருந்தாள் சுஹாசினி. மனம் முழுதும் குற்ற உணர்வில் குறுகிக் கொண்டிருந்தது. கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தது. அதை வெளியில் வழிய விடாமல் சாமர்த்தியமாக மறைத்தாள் அவள்.

நான்கு நாட்களுக்கு முன் அவளின் அப்பாவை, நெருங்கிய உறவுகளை முக்கியமாக அவளின் உயிர் நட்புகளை தலை குனிய செய்திருந்தாள் அவள். 

ஒரு அப்பாவி ஆணை மணமேடையில் வைத்து மறுத்து விட்டு எழுந்து வந்திருந்தாள். அத்தோடு நிற்கவில்லை அவளின் சதிகார விதி. அவள் கல்யாணத்தை நிறுத்தி, மண முடிக்க மறுத்தது தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி செய்தியானது தான் இப்போதைய அவளின் நிலைக்கு காரணம். காலக்கொடுமை என்று சொல்லிட முடியாது. மனிதன் செய்யும் குற்றங்களுக்கு காலம் ஏன் பழி ஏற்க வேண்டும்? 

அவள் கையில் இருந்த அலைபேசியில் அந்த தொலைக்காட்சி வீடியோவை ஓட விட்டாள் சுஹாசினி.

“நான் அவன்கிட்ட போகணும் ராகவி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை” திரையில் தெரிந்த அவளையே வெறுப்புடன் பார்த்தாள் சுஹாசினி. ஆனாலும், மனம் வினோத அமைதியில் ஆழ, அவளையே அவளால் வெறுக்கத் தான் முடியவில்லை. 

தன்னைத் தானே மன்னிக்க வழிகள் தேடிக் கொண்டிருந்தாள் அவள். 

அவனுக்காக தான் அவளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினாள். அந்த “அவன்” மூன்றே மாதமான அவளின் அக்காவின் மகன், ஷ்ரவன். 

இரண்டு மாதங்களுக்கு முன் அவள் கண்ட கொடூர கனவு, நிஜத்தின் நிழல் என்று அவளின் கல்யாணத்திற்கு சில வாரங்களே இருக்கும் போதே தான் தெரிந்துக் கொண்டாள் அவள். 

ஒரு மழை நாளில், கோவாவில் சாலை விபத்தில் நிகழ்விடத்திலேயே மரணித்திருந்தாள் அவளின் அக்கா ரோஹிணி. கூடவே அவளின் கணவரும். 

ஒரு பின் மதியவேளை அவளுக்கு புதிய லாண்ட்லைன் எண்ணில் இருந்து வந்த அழைப்பை புருவ சுளிப்புடன் தான் ஏற்றாள் சுஹாசினி.

கோவாவில் இருந்து பேசுகிறோம் என்றதும் சொடக்கிட்டது போல நிமிர்ந்து அமர்ந்தாள் அவள். 

“எஸ். சுஹாசினி தான் பேசுறேன் சொல்லுங்க” என்றாள். 

“உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கோம் மா. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்” மலையாளம் கலந்த தமிழில் பேசினார். 

“என்ன பார்சல்? முதல்ல யார் நீங்க, அதைச் சொல்லுங்க? என்னை எப்படி தெரியும் உங்களுக்கு?” அவள் படபடக்க,

“ரோஹிணி மா, உங்க பேர் போட்டு வச்சிருந்தாங்க. விக்ரம் தம்பி அதை உங்களுக்கு அனுப்ப சொன்னார்”

அவர் சொல்ல, அந்த பெயரில் அதிர்ந்தாள் சுஹாசினி.

“என்ன பேர் சொன்னீங்க? ரோஹிணியா? அக்கா… ரோஹிணிகிட்ட போனை கொடுங்க” கிட்டத்தட்ட கத்தினாள். 

“ரோஹிணி மா.. ரோஹிணி தவறிட்டாங்களே, இல்லையே.” 

“என்னது?” அதிர்ச்சியில் கத்தியிருந்தாள். 

“எப்படி? என்னாச்சு?”

“கார் ஆக்ஸிடென்ட் மா. புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் பச்ச பிள்ளையை அனாதையா விட்டுட்டு போய்ட்டாங்களே. ரெண்டு மாசம் ஆச்சு. இன்னமும் எங்களால நம்பவே முடியல” அந்தக் கதறல் அவளை கலங்கடித்தது. மனம் அனிச்சையாய் ஒருவித அதிர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருந்தது. உடலின் வியர்வை உள்ளங்கைகளிலும் பரவ, நழுவிய அலைபேசியை இறுக்கமாக பற்றினாள் அவள்.  

“ரோஹிணி… குழந்தை?” அழுகுரலில் அவள் தொடங்க, மறுபக்கம், “குழந்தை விக்ரம் தம்பி பார்த்துக்கிறார் மா” என்று தேறுதல் சொல்ல, “விக்ரம், யாரு?” என்றாள், வேகமாக, விசாரணையாக. 

“குழந்தையோட சித்தப்பா மா.” என்றவர், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க மறக்காம பார்சலை வாங்கிக்கோங்க மா” என்றதுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

சுஹாசினி அப்படியே சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்து விட்டாள். அதிர்ச்சி குறைந்து பின்னர் அழுகை வந்தது. துக்கம் தாங்க இயலாததாக இருந்தது. 

அக்காவை பார்க்க வேண்டும், கட்டி அணைத்து கதற வேண்டும் போலிருந்தது. ஆனால், அதற்கு வழி தெரியாமல் முழித்தாள் அவள். 

இரண்டு மாதங்கள், முழுதாக இரண்டு மாதங்கள் அவளின் அக்கா ரோஹிணி, இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்கிறது. ஆனால், அவளுக்கு அது பற்றி எதுவும் தெரியாது. அந்த துக்கத்தின், கவலையின் சுவடே இல்லாமல் நாட்களை களிப்புடன் கழித்திருக்கிறாள் அவள். அதை நினைக்கையில் அத்தனை குற்ற உணர்ச்சியாக அவளுக்கிருந்தது. 

தோழி ராகவியின் மடியில் படுத்து அழுதே கரைந்தாள் அவள். அக்காவின் இழப்பில் இருந்து மீள முடியா விட்டாலும், அழுகையில் இருந்து மீண்டாள். 

மெல்ல சுயத்திற்கு திரும்பினாள். அவளுக்கு அழைப்பு வந்த அதே எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் எண்ணமே தாமதமாக தான் வந்தது. அவளை அழைத்த பெண்மணியின் பெயர் கூட கேட்காத தன் முட்டாள்தனம் மிக தாமதமாக தான் புத்தியில் உறைத்தது.

அவதி அவதியாக அந்த எண்ணை திரும்ப அழைத்தாள் அவள். ஒரு முறை அல்ல அன்று முழுவதும் பல முறை அழைத்து விட்டாள். “லைன் பிஸி” என்ற இயந்திர குரல் தான் தொடர்ந்து ஒலித்தது. 

ரோஹிணி பாசக்காரி இல்லை என்றாலும் கூட அக்கா, அக்கா தானே? அக்காவின் இழப்பு அவளுக்கு நம்ப இயலாததாக இருந்தது. 

இம்முறை அழுகையுடன் அவளின் நண்பன் ராகவனை தஞ்சமடைந்தாள் அவள். முதலில் அவனும் கூட நம்பத் தானில்லை. 

ஓரிரவு கனவு கண்டு பதறி எழுந்ததை அவள் சொல்ல, கேள்வி கேட்காமல் அவளை நம்பினான் நண்பன். 

அவளின் அப்பா வெங்கடேஷிடம் கூட செய்தியை அவன் தான் சொன்னான். அதிர்ந்தார், நம்ப மறுத்தார். முரணாக அழுதார். ஆனாலும், நம்பவில்லை அவர்களை. அவர்கள் சொன்ன செய்தியை நம்பவில்லை. மூத்த மகள் எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்று நம்பியவர், அவள் தங்களை விட்டு நிரந்தரமாக சென்றிருப்பாள் என்பதை நம்ப மறுத்தார். 

அப்பாவை சமாதானப்படுத்திய சுஹாசினி, இப்போது நண்பனுடன் கோவா புறப்பட தயாரானாள். ஆனால், முகம் மட்டுமே தெரிந்த ஒருவரின், முகவரி இல்லாது அவரை கண்டுபிடிக்க முடியாது என்பதை உணர்ந்து வீட்டுக்குள் முடங்கினாள். 

அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் இப்போது அனாவசியமாக பட்டது. அவள் மனம் துக்கத்தில் நிறைந்து, தளும்பி நின்று எதிலும் ஒன்ற மறுத்தது. 

மாண்டவர் திரும்ப போவதில்லை என்பது அவளுக்கும் புரியத் தான் செய்தது. ஆனால், உயிரோடு பார்க்க முடியாத அக்கா, மாமாவை இப்போதாவது பார்த்தே ஆக வேண்டும் என்ற அவளின் மனதின் விருப்பத்தை யாரும் புரிந்துக் கொள்ள தானில்லை. அப்படியே புரிந்தாலும், அவளின் ஆசையை நிறைவேற்றும் வழி தான் அவர்களுக்கும் தெரியவில்லை. 

சில நாள் சோகத்திற்கு பின்பு, இல்லாத மகளை நினைத்து வருந்தினாலும், இருக்கும் மகளை கரை சேர்த்திட விரும்பினார் அவளின் தந்தை. அவரையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. 

இரவெல்லாம் ரோஹிணியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கண்ணீருடன் அமர்ந்திருப்பவரை அவள் எப்படி குற்றம் சாட்டுவாள்?

“கோவா போய்ட்டு வர்றேன் பா. அக்கா ஞாபகமாவே இருக்கு. குழந்தையை பார்க்கணும் போல இருக்கு ப்பா. அவங்க வீட்ல இருந்து எனக்கு அனுப்பின பார்சலில் இருக்க பின்கோடு வச்சு அட்ரஸ் கண்டுபிடிக்கலாம் பா. ஈஸி தான்” அவள் கண்ணீருடன் தந்தையிடம் கெஞ்ச,

“முதல்ல உன் கல்யாணம் நல்லபடியா முடியட்டும் மா” என்றவரை உதடு துடிக்க, கண்ணீருடன் பார்த்து, வேறு வழியின்றி சம்மதமாக தலையசைத்தாள் அவள்.

ஆனால், அக்காவை தேடுவதை விடவில்லை அவள். அவளிடம் இருந்த தொடர்பு எண்ணை வைத்து பல முறை தொடர்பு கொள்ள முயன்றாள். 

இயந்திர குரல் கொடுத்த உடனடி பதிலான, “தொடர்பு எண் உபயோகத்தில் இல்லை” என்ற பதிலில் மேலும் மனமுடைந்து போனாள் அவள். 

அவளின் நிலையை பார்த்து, அவளுக்காக வருந்தினார்கள் அவளின் நண்பர்கள்.

அத்தோடு நிற்காமல் அவளுக்கு உதவியது அவளின் தோழி ராகவியும், அவளின் கணவன் உதய் பிரகாஷிம் தான். 

உதய் காவல் துறையில் இருப்பவன். அதிலும் சைபர் செல்லில் வேலை பார்ப்பவனுக்கு, அவள் கொடுத்த புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணையும், பின்கோடையும் வைத்து, ரோஹிணி குடும்பத்தை பற்றிய முழுமையான தகவல் திரட்டி அவள் முன் வைக்க முழுதாக இரண்டு நாட்களே தேவைப்பட்டிருந்தது.

அவன் நீட்டிய கனமான கோப்பை கைகள் நடுங்க வாங்கி மெல்ல பிரித்தாள் சுஹாசினி. 

முதலில் குழந்தையின் புகைப்படம் தானிருந்தது. “ஷ்ரவன்” குழந்தையின் பேரை வலிக்காமல் உச்சரித்து அவனின் புகைப்படத்தை வருடியது அவள் விரல்கள். அடுத்து அவளின் அக்கா, மாமா, அக்காவின் மடியில் இருந்த குழந்தை என்று மூவரும் ஒன்றாக இருந்த படத்தையும், அதில் தெரிந்த அவர்களின் மகிழ்ச்சியையும் பார்க்கையில் துக்கத்தில் விம்மியது அவள் கண்கள். 

கோப்பின் அடுத்த பக்கத்தை அவள் புரட்ட, அக்கா கணவர் நீலேஷ் தேசாயின் விவரங்களும், தொழிலும், அதற்கடுத்து அவரின் தம்பியின் விவரமும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. 

விக்ரம் தேசாய். 26 வயது. அரபு நாட்டில் வேலை. 

அவனின் அண்ணன், அண்ணி மட்டுமல்ல பெற்றோரும் உயிரோடு இல்லை என்பதை அதிர்ச்சியுடன் வாசித்தாள் அவள். சிறு வயதிலேயே தாயை இழந்து, வளரும் பருவத்தில் தந்தையையும் இழந்திருந்தான் அவன் என்று குறிப்பிடப்பட்டிருக்க சட்டென அவனுக்காக இளகியது அவள் மனம். விதி, அவனுக்கு தந்தையாக நின்று அவனை வளர்த்த அண்ணனையும் பறித்துக் கொண்டு போனதை நினைக்கையில் அவளுக்கு அனைத்தின் மீதும் கோபமாக வந்தது. 

அவள் கைகள் கோப்பை இறுகப் பற்ற மேலே தொடர்ந்து வாசித்தாள்.

தற்போது குழந்தை விக்ரமின் பொறுப்பில், பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தையை அவன் சட்டப்படி தத்தெடுக்கும் நடவடிக்கையில் இருக்கிறான் என்ற அடுத்த தகவலையும் வாசித்ததும், அதிர்ந்து போனாள் அவள். 

இதுவரை ஒரு முறை கூட பார்த்தே இராத அக்காவின் குழந்தையை பார்க்கும் ஏக்கமும், கைகளில் ஏந்தும் ஆசையும், “உனக்காக நான் இருக்கிறேன் தங்கம்” என்று உத்திரவாதம் சொல்லத் துடித்த மனதும் அவளை அலைக்களித்தது.  

கண்கள் மளுக்கென்று உடைய, மனம் அந்த பிஞ்சுக் குழந்தையை சுற்றி வர, சிந்தனையில் மூழ்கினாள் அவள். 

“விக்ரம், ராஸ் கைமால (Ras al khaima – UAE) வேலை பார்க்கிறார் போல. லீவ் எடுத்துட்டு அண்ணன் குழந்தையை பார்க்க கோவா வந்திருக்கார். ஆனா, எதிர்பாராத அந்த விபத்தினால நிரந்தரமா குழந்தையே அவர் பொறுப்பில் வந்துடுச்சு. ஒரு மாச லீவில் வந்திருக்கார். லீவ் முடிஞ்சது. ஆனா, குழந்தைக்கு பாஸ்போர்ட், விசா பார்மாலிட்டி எல்லாம் இடிக்குது.”

“என்ன இருந்தாலும் அண்ணன் குழந்தை இல்லையா? சட்டுனு தூக்கிட்டு கிளம்ப முடியாது இல்ல? அதான் வேலைக்கு திரும்ப போகும் போது கல்யாணம் பண்ணிட்டு குழந்தையை லீகலா தத்தெடுத்து, அவர் கூடவே கூட்டிட்டு போக பிளான் போல. அதுக்காக ரொம்ப அவசரமா பொண்ணு தேடுறதா கேள்விப்பட்டேன்” உதய் சொல்ல சொல்ல, அந்த செய்தியை ஜீரணிக்க சற்றே நேரம் எடுத்துக் கொண்டாள் சுஹாசினி.

அந்த விக்ரம் தன்னை ஏன் தொடர்பு கொள்ளவில்லை. அக்காவின் இழப்பை பற்றிய தகவலை தனக்கு ஏன் அவன் சொல்லவில்லை? அதுவும் முழுதாக இரண்டு மாதங்கள் எப்படி தவிர்க்க முடிந்தது அவனால்? தன்னைப் பற்றி அவனுக்குத் தெரியாதா? தன் குடும்பத்தை பற்றி அக்கா அவர்களிடம் பேசியதே இல்லையா? விக்ரம், குழந்தையை தங்களிடம் ஏன் தரவில்லை? அவள் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டேயிருந்தது. 

ஒருவேளை அவனுக்கு திருமணமானால் குழந்தையின் நிலை என்னவாகும்? சட்டப்படி அவன் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டால், அவளையும், அப்பாவையும், குழந்தையை பார்க்க அனுமதிப்பானா? 

இரு உயிர்கள் இல்லாமல் போனதை, அவளின் இழப்பை கூட முறையாக தெரிவிக்காதவன், எதை சரியாக செய்து விடப் போகிறான்?

இதுவரை அறிமுகமே இல்லாத அவன் மேல் அவ்வளவு ஆத்திரமாக வந்தது. அதற்கு அவளிடம் சரியான காரணமும் இருந்தது.

அவனின் முகம் பார்க்காமலேயே அவன் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டாள் அவள். 

தனக்காக ரோஹிணி வாங்கி வைத்திருந்த பரிசை பொருட்களை அனுப்ப தெரிந்தவனுக்கு, தன்னிடம் தகவல் தெரிவிக்க ஏன் தெரியவில்லை? 

அத்தனை வெறுப்பா என் மேல்? இல்ல, எங்கள் மேல்? 

அக்காவின் காதலை, கல்யாணத்தை அப்பா எதிர்த்தார் தான்? ஆனால், பெற்றவர் என்றால் அப்படித் தானே இருப்பார்கள்? பிள்ளைகள் இறங்கி வர வேண்டாமா? 

மூன்று வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு அவள் போகும் போது சுஹாசினிக்கு இருபது வயது. அன்று கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தவள், அக்காவிற்காக என்ன செய்திருக்க முடியும்? அவளுக்கு சத்தியமாய் தெரியவில்லை. 

ரோஹிணி தன் கோபத்தை ஒதுக்கி, அவளிடம் பேசியிருக்கலாம் என்று இப்போது நினைத்தாள் சுஹாசினி. ஆனால், என்ன பயன்?

“சுஹா, ஃபைலை பாரு” உதய் சொல்ல, சிந்தனை கலைந்து, அவளிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்த விக்ரமை பற்றிய தகவல்களை வரி விடாமல் படித்தாள். மனனம் செய்து கொண்டாள். 

அவனது தொடர்பு எண்ணை மனதில் குறித்துக் கொண்டு, விரல்கள் கொண்டு வந்து, அவளே அவனை அலைபேசியில் அழைத்தாள். 

அத்தனை அலட்சியமாக பேசினான் அவன். 

“என்னை என்ன பண்ண சொல்றீங்க? இங்க எல்லாம் முடிஞ்சது. அதுக்கு அப்புறம் உங்களுக்கு சொல்லி?” என்றவனின் குரலில் வருத்தமும், சலிப்பும் இருந்தது.

“அப்போ, எனக்கு இருந்த அதிர்ச்சியில் உங்களுக்கு தகவல் சொல்லத் தோணல. மறந்துட்டேன்னு சொல்றதை விட உங்க ஞாபகமே அப்போ எனக்கில்ல. உங்களை நான் பார்த்ததும் இல்ல. பேசினதும் இல்ல. வெய்னியும் உங்களைப் பத்தி எங்ககிட்ட எதுவும் சொன்னதுமில்ல. உங்களை தேடி, விஷயத்தை சொல்லணும்னு.. ஐ ஆம் சாரி. உங்கப்பா.. மாமா ஞாபகம் எனக்கு வந்திருக்கணும். தப்பு தான்” என்றான் விளக்கமாக. அவன் பேச்சு அவளுக்கு அத்தனை வலித்தது. ரோஹிணியின் மேல் தான் கோபமாக வந்தது. அதனால், அவள் மௌனமாக அவன் பேச்சை கேட்க, “சாரி” என்றான் விக்ரம். 

அவனது மன்னிப்பை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் மட்டும் அவளுக்கு தக்க சமயத்தில் தகவல் சொல்லியிருந்தால், அவளால் அக்காவை இறுதியாக ஒரு முறை பார்த்திருக்க முடியுமே என்ற இழப்பின் ஆதங்கம் அவளின் பக்கமிருக்க, விக்ரமை கேள்விக் கேட்கத் துடித்தாள் அவள். 

இழப்பு இருவருக்கும் பொதுவில் நின்று அவர்களை பேச விடாமல் செய்தது. 

“எனக்கு உங்க கிட்ட பேசணும்” என்றாள். 

“நாட் டுடே” என்றான் அவன். 

அவனுக்கு போதிய அவகாசம் கொடுக்க எண்ணி, “ஓகே. இன்னொரு நாள் பேசலாம்” என்று அழைப்பை துண்டித்தாள் அவள்.

அவளுக்கு, அவன் மேலிருந்த கோபம் கொஞ்சமும் குறையவில்லை. அவன் கையில் இருந்த அக்காவின் குழந்தையை மறக்க முடியவில்லை. அக்கா, மாமாவின் மறைவை தாங்கிக் கொள்ள இயலவில்லை. உயிரோடு இருக்கையில் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத தன்னையே நொந்து கொண்டாள் அவள். 

அக்காவை அப்போதே தேடியிருக்க வேண்டும், கண்டுபிடித்து உறவாடி இருக்க வேண்டும் என்ற குற்ற உணர்வு அவளை நெரிக்க, அழுகையில் கரைந்தாள். 

அவள் சதா சிந்தனையில் உழன்றாலும், அப்பாவுக்காக மனதளவில் திருமணத்துக்கு குறித்த நாளில் தயாராகி நின்றாள். ஆனால், அவளின் சஞ்சலத்தை அதிகரித்து, சட்டென முடிவெடுக்க செய்தது திருமணத்துக்கு முந்தைய தினம் இரவில், மொட்டை மாடியில் உதயும் அவனது உதவி காவல்துறை அதிகாரியுமான அஜெய்யும் பேசிக் கொண்டிருந்தது தான். 

“அதை ஜஸ்ட் ஆக்சிடென்ட்டுன்னு சொல்லி கேசை மூடிட்டாங்க கோவா போலீஸ். ஆனா பிளான்டு ஆக்சிடென்ட் போல தெரியுது சர். எனக்கு சந்தேகமா இருக்கு” 

“அக்கா, மாமா கொலை செய்யப்பட்டார்களா?” அதிர்ச்சியில் உயர்ந்த அவளின் இதயத் துடிப்பை அவளாலேயே துல்லியமாக கேட்க முடிந்தது. 

“இது விக்ரமிற்கு தெரியுமா?” அவள் யோசிக்க,

“அவரோட தம்பி கல்யாணமாகி, குழந்தையை லீகலா தத்தெடுத்து துபாய் போற வரை, அவருக்கும், அந்த குழந்தைக்கும் பாதுகாப்பு…” அஜய் மேலே பேசிய எதுவும் அவள் மனதில் பதியவேயில்லை. அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்காமல், படியில் அழுத்தமாய் கால் பதித்து சுவரோடு சாய்ந்து நின்றாள். 

அவளுக்கு விடிந்தால் திருமணம். 

பொழுது விடிந்தது. ஆனால், திருமணம் தான் நடக்கவில்லை. நிறுத்தியிருந்தாள் சுஹாசினி. 

 

Advertisement