நினைவுப் பரிசை பெற்றுக் கொண்ட முதல்வர் விடை பெற்று சென்றிருக்க, தற்சமயம் மேடை நடனத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது. முதலில் வரவேற்பு நடனமாய் நாட்டியாஞ்சலி இருக்க, நீண்ட நாட்களுக்கு பின் நேரடியான நடன நிகழ்வை இரசித்துக் கொண்டிருந்தனர் மாணவிகள்.

அப்போது மல்லி மகிழிடம், “ஏன்டி…! பங்கசன் ஜாலியா தானே போயிட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு கிளாஸ்ல மத்தவங்க எல்லாம் கூடி கூடி நெர்வஸா பேசிட்டு இருந்தாங்க.’’ என்று நெடு நேரமாய் தன்னை அரித்துக் கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டாள்.

“யாருக்கு தெரியும். எது வந்தாலும் பாத்துக்கலாம் விடு.’’ என்றவள், நடனத்தை ரசிக்க துவங்கியிருந்தாள்.  பொதுவாய், இந்த ஐந்து நட்சத்திர அணியினர் வகுப்பில் மற்ற மாணவிகளோடு அதிகம் நெருங்கிப் பழகுவது கிடையாது. உள்நாட்டு கலவரமே ஏகம் என்பதால், இவர்கள் பக்கத்து பென்ச் வாசிகளிடம் கூட, ‘என்ன…?ஏன்..?’ என்பதற்கு மேல் பேச்சை வளர்ப்பதில்லை.

ஆக  அன்றைக்கு, ‘லீகல் ராகிங்’ என்ற பெயரில் சீட்டு குலுக்கி அனைத்து மாணவிகளும் மேடையில் வைத்து சம்பவம் செய்யப்பட இருந்தனர் என்பதை ஐவர் குழு அறியவில்லை. அதோடு இது போன்ற விழாக்களை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ‘கிளப்’ என்று அழைக்கப்படப் போகின்ற முதல் வருட மாணவிகள் தான் செய்யப் போகின்றனர் என்பதையும் அறியாமல் இருந்தனர்.

நடன நிகழ்வு முடிந்ததும், அடுத்து ஒரு துள்ளல் பாட்டுக்கு சில மாணவிகள் மேடையேறி நடனம் ஆட  அவர்களுக்கு கீழ் மொத்த கல்லூரியும் ஆடிக் கொண்டிருந்தது. கூச்சத்தின் காரணமாக முதல் வருட மாணவிகள் கைகளை மட்டும் தட்டிக் கொண்டிருந்தனர்.

ஆனால் ரேணுவும், மகிழும் அமர்ந்த இடத்திலேயே உடலை அசைத்து ஆடிக் கொண்டிருந்தனர். அடுத்து, திடீரென ஒலிப்பெருக்கியில், இவர்கள் வகுப்பு மாணவி சைந்தவியின் பெயர் அழைக்கப்பட்டது.

இவர்கள் புரியாமல் பார்த்திருக்க, தயக்கத்துடன் மேடையேறியவரின் முன் வெள்ளை தாள்கள் நிறைந்த கண்ணாடி குடுவை நீட்டப்பட்டது. அவர் நடுக்கத்துடன் ஒன்றை எடுக்க, அவரிடம் ஒலிப்பெருக்கி நீட்டப்பட்டது.

“என்ன வந்திருக்கு சொல்லுங்க…?’’ என மற்றொரு ஒலிப் பெருக்கியில் சீனியர் மாணவி ஒருவர் வினவ, “கோழிப் பிடிக்கணும்.’’ என்று மெதுவாய் பதில் கொடுத்தார் சைந்தவி. இவர்கள் அணியில் கிட்ட தட்ட நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் மாணவி அவர்.

வாயில் அப்போது தான் சமோசாவை பிய்த்து போட்ட மதி, “என்னது கோழி பிடிக்கணுமா…?’’ என்று அதிர சமோசா நழுவி அவள் மடியில் விழுந்தது. மற்ற தோழிகளுக்கும் அதிர்ச்சி தான். மேடையில் சைந்தவி என்ன செய்யப் போகிறாரோ  என்று மற்றவர்கள்  அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேர தயக்கத்திற்கு பின் ஒரு முடிவிற்கு வந்தவராய், தன் புடவையை எடுத்து சொருகிக் கொண்டார்.

அவரின் இந்த அதிரடி மாற்றத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் இப்போது சுவாரசியத்துடன் மேடையை பார்க்க, “என்ன பிரண்ட்ஸ் கோழி பிடிக்கலாமா…?’’ என மற்றவர்களை நோக்கி கட்டை விரலை உயர்த்தி காட்டியவர், “பக்… பக் … பக் பக்….’’ என குரல் கொடுத்து கொண்டே அரங்கின் அந்த மூலைக்கும், இந்த மூலைக்கும் ஓடினார்.

அவரின் அசத்தலான நடிப்பில் மொத்த அரங்கமும் வெடி சிரிப்பில் குலுங்கியது. இதுவரை வகுப்பில் அதிர்ந்து பேசாத மூத்த மாணவியாய் மட்டுமே அறியப்பட்ட சைந்தவியின் மற்றொரு பரிணாமத்தை அவர்கள் மொத்த வகுப்பும் ஆச்சர்யமாய் நோக்கி கொண்டிருந்தது.

இப்படி தரையில் ‘நீச்சல் அடியுங்கள், கமலின் வசனம் ஒன்றை பேசவும், பாம்பு நடனம் ஆடவும், ஆந்தை போல அலறவும்’ என்று நான்கு மாணவிகளை மேடையில் வைத்து கலங்கடித்து விட்டு, மீண்டும் ஒரு துள்ளல் பாடலுக்கு மாணவிகள் மேடையேறினர்.

இம்முறை சிரித்து சிரித்து இலகுவாகியிருந்த மல்லியும், சங்கரியும் கூட அமர்ந்து கொண்டே, மகிழ் ரேணுவை போல பாடலுக்கு உடலை அசைத்தனர். ஆனால் மதி அப்போதும் கைகளை மட்டும் தட்டிக் கொண்டிருந்தாள்.

இப்படி ஐந்து ஐந்து பேராக அவர்கள் மேடைக்கு அழைப்பதும், அவர்களை திணறடித்து விட்டு அடுத்த கலை நிகழ்வை கொடுப்பது என விழா அமோகமாக நடைபெற்று கொண்டிருந்தது. ரேணுவிற்கு பூனை நடை நடக்க வேண்டும் எனவும், சங்கரிக்கு ஓவியாவின் ஸ்ப்ரே அடிச்சி விட்ரும் வசனமும், மதினாவிற்கு பூ விற்க சொல்லியும் சீட்டுகள் வந்தன.

அவர்கள் முறை வரும் போது நடுங்கிக் கொண்டே செல்வதும், முடித்து விட்டு கீழே இறங்கும் போது, சிரித்துக் கொண்டே இறங்குவதும் அங்கே வாடிக்கையாய் இருந்தது.

அடுத்து மல்லியோடு மகிழும் வேறு மூவரும் மேடையேறி இருக்க, மல்லி நடுங்குவது அப்பட்டமாக தெரிந்தது. ‘பயப்படாத’ என்று மகிழ் கைகளை பற்றிக் கொள்ள, கீழே நின்று கொண்டிருந்த மூவரும் கூட, ‘சியர் அப்’ என்று கை காட்டிக் கொண்டிருந்தனர்.

மல்லி உதரும் கைகளோடு கண்ணாடி குடுவைக்குள் கை விட்டாள். அவள் முன் ஒலிப்பெருக்கி நீட்டப்பட, “உங்க பக்கத்துல இருக்க பர்சனை ப்ரோபோஸ் செய்வதை போல நடிக்கவும்.’’ என்று அதிரும் குரலில் சொல்லி முடித்தாள்.

உடனே அரங்கில், “ஹை… ஓ…’’ என்று வித விதமாக உற்சாக குரல்கள் ஒலிக்க, மல்லியின் இதயம் மத்தளம் போல அதிர்ந்தது. சில நொடி தயக்கத்திற்கு பின் அருகிருந்த இதய வடிவ ஊதற் பையை எடுத்தவள், தன் அருகிருந்த மகிழின் அருகில் முட்டிக் கால் போட்டு அமர்ந்தாள்.

அதற்கே அரங்கு உற்சாகத்தில் அதிர, “அடியே மகிழ்… உன்னை பார்த்தாலே என் மனசு அடிக்குது பிகில்… உன் குரலோ குயில்… உன் இதயமோ எனக்கான ஜெயில்… வாழ்நாள் முழுக்க எனக்கு வேணாம்டி பெயில்…. மேரி மீ பேபி…’’ என்று உருக்கமாக வசனம் பேச மொத்த அரங்கமும் சிரிப்பில் குலுங்கிக் கொண்டிருந்தது.

மேடையில் நின்றுக் கொண்டிருந்த மகிழே அடக்க முடியாமல் சிரித்து விட, அதன் பிறகே மல்லி எழுந்து நின்றாள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த மாணவி, “மல்லி சிஸ் உங்க நடிப்பு திறமைக்கு இப்ப நாங்க கொடுக்கப் போறோம் விசில்…’’ என்று உற்சாகமாய் குரல் கொடுக்க, அரங்கின் நாலா மூலைகளிலிருந்தும் விசில் சத்தம் காதை பிளந்தது.

ஒருவாறு அரங்கம் அமைதி கொள்ள, அடுத்து மகிழின் முன் கண்ணாடி குடுவை நீட்டப்பட்டது. அவளுக்கு ‘பிக்பாஸ் போல பேசவும்’ என்று வந்திருக்க, மேடையில் அங்கும் இங்கும் கூர்மையாய் பார்த்தபடி நடந்தவள், குரலை லேசாக கரகரப்பாக்கி, “136 வார்ட். பதினோரு சப்ஜக்ட். அதுல நாலு எக்ஸ்டர்னல் கிளாஸ். பதினெட்டு டியூட்டர்ஸ். ஐஞ்சி எச்.ஓடிஸ், ஒரு பிரின்சிபல் கண்ணா இந்த காலேஜ்ல இனி நாம ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. தே ஆர் வாட்சிங்.’’ என்று ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் கண்களுக்கு நேரே நீட்டிப் பேச மீண்டும் ஒரு முறை அரங்கம் கைதட்டில் அதிர்ந்தது.

“பிக் பாஸ் டயலாக்கை பர்பக்ட்டா நம்ம காலேஜ் மோடுக்கு மாத்தின மகிழ் சிஸ்டருக்கு ஒரு ஓ போடுங்கப்பா…’’ என்று தொகுப்பாளினி பெண் அறிவிக்க, இப்போது ‘ஓ’ என்று வார்த்தையில் கட்டிடம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இப்படி கேலியும், கிண்டலுமாய் அனைத்து மாணவிகளின் வரிசையும் முடிந்து விட, அனைவரும் களைத்தே போய்விட்டனர். ஆனாலும் அவர்களின் உற்சாகம் மட்டும் வடியவில்லை. குடும்ப பொறுப்பு, குழந்தை, கணவன் என்ற சிறிய வட்டத்தில் இருந்தவர்களின் வாழ்வு, ஒரே நாளில் பால் வெளிக்கு குடியேறியதை போல அத்தனை மகிழ்சிகரமாக இருந்தது அன்றைய மாலைப் பொழுது.

விழாவின் இறுதியில், “இந்த வருசம் க்ளப் இன்சார்ஜ் யாருன்னு பார்க்கப் போற நேரம் இது. நம்ம நியூ கிளப் லீடர்சை பாட்டு போட்டு வரவேற்கலாமா…?’’ என அறிவிப்பு மாணவி கேட்க, “எஸ்…’’ என்ற விடை காற்றில் எதிரொலித்தது.

“ஓகே பிரண்ட்ஸ்… எப்பவும் பெண்களுக்கே முன்னுரிமைன்னு சொல்லி சொல்லியே நம்மளை பின்னாடி உக்கார வச்சிருப்பாங்க. ஆனா இது நம்ம ஏரியாவாச்சே. அதானால முதல்ல கிளப் இன்சார்ஜ் ஆகப் போற சிஸ்டரை ஒரு சாங் போட்டு வெல்கம் செஞ்சிடலாம். ஆடியோ டீம்… சாங் ப்ளீஸ்…!’’ என்று குரல் கொடுத்தார்.

அடுத்த நொடி காற்றில், “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு…’’ என்று பாடல் கரைய, “வாவ்… ஊ… ஓ…’’ என்ற உற்சாக குரல்கள் ஒலிக்க, யாருக்கு வந்த விருந்தோ என்று மல்லி மிக்சரை வாயில் போட்டு அரைத்து கொண்டிருந்தாள்.

பீதியில் முகம் வெளிறிய மதி, “ஏய்… இது உன் பேரை மீன் பண்ணுதுடி…!’’ என்று அலற, மற்ற தோழிகளும் மிரண்டு போயினர். அதற்குள் அவள் பெயரே ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட, மல்லி மிக்சரை வேக வேகமாக விழுங்கிக் கொண்டே மேடையை நோக்கி நடந்தாள்.

தொகுப்பாளினி, “சரி நம்ம ஹீரோயின் இப்ப வந்தாச்சு. அடுத்து இந்த வருசம் முழுக்க கிளப் இன்சார்ஜா இருக்கப் போற மாஸ்டரை வெல்கம் செஞ்சிடலாம். ஆடியோ டீம்… சாங் ப்ளீஸ்…!’’ என்று குரல் கொடுத்தார்.

இம்முறை, “சிங்கார வேலனே தேவா…’’ என்ற பாடல் காற்றில் மிதக்க, “ஓ நோ…’’ என்று நால்வரும் கீழிருந்து அலறினர். முகத்தை அழுத்தமாய் துடைத்து கொண்டு மேடையேறிக் கொண்டிருந்தான் பனைமரம் என்று இவர்களால் எப்போதும் விமர்சிக்கப்படும் சிங்கார வேலன்.

பந்தமாகும்.