Advertisement

அவர்கள் முதல் வளைவை கடந்து இரண்டாம் வளைவில் அடியெடுத்து வைக்கும் போது, “ஹே…. ஊ….’’ என்ற சத்தங்கள் அந்த அரங்கையே அதிர வைக்க, வரவேற்பாய் முந்திய மாணவிகள் கொடுத்த கைதட்டல் அந்த இடத்தையே கதி கலங்க வைத்தது.

“வந்தாச்சு வந்தாச்சு… ட்ரோசியன்ஸ் வந்தாச்சு…. ஏய்… தந்தாச்சு தந்தாச்சு… கிளப்பை அவங்க கைல தந்தாச்சு.’’ என்ற உற்சாக கூக்குரல்கள் எட்டு திக்கிலும் ஒலிக்க, அரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு மேஜையில் நின்று கொண்டிருந்த மாணவியர், சந்தன, குங்குமம், மற்றும் பன்னீர் தெளித்து ஒவ்வொருவராக அரங்கிற்குள் அனுமதித்தனர்.

அவர்கள் அரங்கிற்குள் நுழையவும், முன்னால் நின்று கொண்டிருந்த மாணவி, ஒற்றை ரோஜாவில் அமைந்திருந்த பூங்கொத்தை கொடுத்து, “வெல்கம் சிஸ்..’’ என்று சிரிக்க, அடுத்த மாணவி இதய வடிவ ஊதற்பையை கொடுத்து, அதே போல வரவேற்பு புன்னகையை கொடுத்தாள்.

அதற்கு அடுத்த வரிசையில் இருந்த மாணவி ஒரு டைரிமில்க் சாக்லேட்டை நீட்ட, அவள் அருகில் இருந்தவள் புன்னகைக்கும் ஒரு சிறிய வட்ட வடிவிலான பேட்சை  அவர்களின் வலது தோளின் அருகே இருந்த இடத்தில் பதித்து விட்டு, வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர்கள் அமர வசதி செய்து கொடுத்தாள்.

நடந்த ஒவ்வொரு நிகழ்வும், புதிய மாணவிகள் மத்தியில் அப்படியொரு ஆனந்தத்தை தோற்றுவித்திருந்தது. ‘இங்கே நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள்’ என்று சொல்வதைப் போல இருந்தது அந்த வரவேற்பு விழா.

இத்தனை நாள் வரை காணும் போதெல்லாம், எந்த முக பாவனைகளையும் வெளிபடுத்தாது  சென்ற சீனியர் மாணவிகளும், எப்போதும் ஒதுங்கியே இருக்கும் இளவயது பேசிக் பி.எஸ்.சி மாணவிகளும் இப்போது இவர்களை பார்த்து புன்னகைக்க அங்கே அவர்களுக்குள் ஒரு அழகான புரிதல் உருவானது.

இந்த ஒரு மாத காலத்தில் கல்லூரி என்றாலே, ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு…’ என்று மனம்  விரைத்திருந்த நிலையில் இந்த விழா அவர்களுக்கு முழுதானதொரு நெகிழ்வை தந்து கொண்டிருந்தது.

புதிய மாணவிகள் அனைவரும் வந்து அமர்ந்ததும், குத்து விளக்கு ஏற்றுதல், மற்றும் தமிழ் தாய் வாழ்த்தோடு விழா துவங்கியது. புதிய மாணவிகளை வரவேற்கும் விதமாய், கல்லூரியின் முதல்வர் முதல் செவிலிய பேராசிரியர் வரை அனைவரும் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.

மல்லிக்கு அவளின் வழக்கம் போல தூக்கம் வரவா என்று கேட்டு கொண்டிருந்தது. தன்னுடைய டைரி மில்கை சுவைத்துக் கொண்டிருந்த மதியின் தொடையை சுரண்டியவள், “ஏய்…! ரெஸ்ட் ரூம் போயிட்டு வரலாமாடி…?’’ என கேட்டாள்.

“லூசா நீ. நாம தான் சென்டர்ல இருக்கோம். எழுந்து போனா எல்லாருக்கும் டிஸ்ட்ரப் ஆகும். கொஞ்ச நேரம் அமைதியா இரு.’’ என்றவள், குனிந்து தன் அலைபேசியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் மீண்டும் மேடையை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தாள்.

“எரும. எனக்கு தூக்கம் வருது. வா கொஞ்சம் வெளிய நடந்துட்டு வரலாம். இவங்க இங்க போடுற மொக்கைல எல்லார் முன்னாடியும் தூங்கி வழிஞ்சா என் மானமே போயிடும்.’’ என்று மதியின் காதோரம் ரகசியம் பேச, ‘உன்ன எல்லாம் வச்சிக்கிட்டு…’ என்ற பார்வை பார்த்தவள் அமைதியாக எழுந்து நின்றாள்.

இவர்கள் எழவும், ‘எங்க’ என்ற பார்வை பார்த்த மற்றவர்களிடம், சுண்டு விரலை உயர்த்தி காட்டிவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வெளியே வீசிய குளுமையான காற்று உடலை தீண்டியதுமே மல்லி புத்துணர்ச்சியாக உணர்ந்தாள்.

“பலூன் அழகா இருக்கு இல்ல…” என்று தன் கையில் இருந்த இதய வடிவ ஊதற்பையை நெஞ்சோடு அணைத்து கொண்டவள், முன்னே நடக்க, திடீரென்று பக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சீனியர் மாணவிகள், “சிஸ்டர் கொஞ்சம் இந்த ரூமை பாத்துக்க முடியுமா…? நாங்க கீழ போய் கப் அண்ட் சாசர் எடுத்துட்டு வரணும்.’’ என்று கேட்டனர்.

மதி மறுப்பாய் தலை அசைக்கும் முன்னே மல்லி, “சரிங்க..’’ என்ற பதிலோடு அந்த அறைக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். அங்கே முதல்வர் முதல் மற்ற பேராசிரியர்களை கௌரவிக்க வாங்கியிருந்த பொன்னாடை முதல் பரிசுப் பொருட்கள் வரை முறையாக அடுக்கப்பட்டிருந்தது.

அதோடு மற்றொரு மூலையில் நீண்ட பெஞ்சில், சூடான சமோசாவும், பெரிய பாய்லரில் தேநீரும் காத்துக் கொண்டிருந்தது. அதன் அருகில் சில சிறிய பிளாஸ்குகள் இருக்க, மதி ஆர்வ கோளாறாய் அதில் என்ன இருக்கிறது என திறந்து பார்த்தாள்.

மூடியை திறந்ததும், காபியின் மணம், மூக்கை துளைக்க, வாயில் கதவை ஒரு பார்வை பார்த்தவள், “ஏய்…! அந்த டிஸ்போசபில் கப் எடுடி…” என்று மல்லிக்கு ஆணையிட்டாள். இவள் எதற்கு கேட்கிறாள் என புரியாத போதும், சரம் சரமாயிருந்த காகித கோப்பைகளில் இரண்டை எடுத்து அவள் வசம் நீட்டினாள் மல்லி.

மீண்டும் வாயிலை அவசர அவசரமாக நோட்டமிட்டவள், இரண்டு கப்புகளிலும் காபியை ஊற்ற, “ஏய்… என்ன செய்ற…’’ என மல்லி பதற பதற, அவளை இழுத்து கொண்டு பால்கனியின் அருகே வந்தாள்.

“தூக்கம் வருது சொன்ன இல்ல. இந்தா இந்த சுட்ட காபியை குடி. எனக்கும் தலை வலிக்குது.’’ என்றவள் காபியை உறிஞ்ச, “இங்க என்னடி பண்றீங்க…?’’ என்ற கேள்வியோடு, மற்ற மூவரும் பிரசன்னமாயினர்.

“ஐ… காபி…’’ என்று ரேணு மதியின் கையில் இருந்த கோப்பையை வாங்கி தான் பாதி அருந்த, மல்லியின் கோப்பை மகிழின் உதட்டருகில் இருந்தது. காபி, டீ அதிகம் விரும்பாத சங்கரி தேமே என்று நிற்க, “ஏய்… நல்லி இந்தா இது உனக்கு.’’ என்று அறையில் இருந்து சுட்டு வந்திருந்த ஆரஞ்சு பழத்தை அவளிடம் நீட்டினாள்.

உடனே முகம் மலர்ந்த சங்கரி, “தாங்க்ஸ்டி…!’’ என்று அதை உரிக்க தொடங்க, பின்னால் கேட்ட அரவத்தில் மதி சட்டென கையில் இருந்த கோப்பைகளை குப்பை தொட்டியில் வீசி விட்டு, மற்றவர்களுக்கு முன்னால், அறையின் வாயிலில் சென்று நின்று கொண்டாள்.

கீழே கண்ணாடி கோப்பைகள் எடுக்க சென்ற மாணவிகள் திரும்பியிருந்தனர். “தாங்க்ஸ் சிஸ்டர்…” என்று அவர்கள் உள்ளே செல்ல, இவர்கள் ஐவரும் மீண்டும் விழா அரங்கிற்குள் நுழைந்து முற்பட்டனர்.

அப்போது அந்த மாணவிகள், “சிஸ்டர்… நாங்க இந்த கிப்ட்ஸ் எல்லாம் ராப் செய்யணும். ப்ளீஸ்… இந்த கப்ல காபி பில் செஞ்சி வைக்குறீங்களா. நாங்க தான் புட் சர்விங் டீம். எங்க மத்த டீம் மெம்பர்ஸ் எல்லாம் ப்ரோகிராம்ல இருக்குறதால இந்த முறை தனியா மாட்டிகிட்டோம்.’’ என்று உதவி கேட்டனர்.

உடனே மகிழ், மற்றும் ரேணுவின் கண்கள், “கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா…?’’ என்று மின்ன, மல்லி உள்ளுக்குள் மிரண்டு போனாள். ‘ஐயோ… யானை கூட்டத்தை கரும்பு தோட்டத்துக்கு காவல் வச்சிட்டு போகப் பாக்குறாங்களே.’ என்று நொந்து போனவள், மறுக்கும் முன், “நீங்க போங்க சிஸ்டர். நாங்க ரெடி செஞ்சி வைக்குறோம்.’ என்று அந்த அறைக்குள் நுழைந்திருன்தனர் நால்வரும்.

பழையபடி அந்த மாணவிகள் கீழே செல்ல, மதி தட்டிலிருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்து கடித்துவிட்டு, சங்கரியிடம் நீட்டினாள். ரேணுவும், மகிழும் தங்களுக்கான அடுத்த கோப்பை காபியில் இருந்தனர்.

உள்ளுக்குள் பயந்து கொண்டே இருந்தாலும், ‘ஒரு கடி ஆப்பிள்… ஒரு வாய் காபி..’ என்று அமோகமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் மல்லி. அவர்கள் அங்கிருந்த ஆறு பீங்கான் கோப்பைகளில் காபியை ஊற்ற அதுவோ நான்கே முக்கால் கப்போடு தீர்ந்து போய் பல்லை காட்டியது.

அதற்குள் விழா அரங்கில் இருந்து புதிதாய் உள்ளே வந்த மற்றொரு சீனியர் மாணவி, “காபி ரெடியா. ஸ்டேஜ்ல இருக்க ஆறு பேருக்கும், கப் அண்ட் சாசர் ரெடி தானே…?’’ என்று பதட்டமாய் கேட்டு கொண்டு வந்து நின்றாள்.

மல்லி திரு திருக்க, மதி, “சிஸ்டர் ஒரு டூ மினிட்ஸ். இதோ அடுக்கி கொண்டு வந்து தரேன். நீங்க போங்க.’’ என்றவள் மளமளவென்று அருகிருந்த அனைத்து கப்புகளிலும் காபியை முக்கால் பாகம் நிறைத்து விட்டு, அருகிருந்த மற்றொரு பிளாஸ்கில் இருந்த சுடுநீரை மீதிக்கு கலந்து முழு கோப்பை காபியாக்கினாள்.

‘அடிப்பாவி’ என்று மற்ற நால்வரும் வாயைப் பிளந்து பார்க்க, “வீட்ல சொல்லாம கொள்ளாம விருந்தாளிக வந்தா குழம்பை இப்படித்தான் டைலூட் செய்வேன்.’’ என்றவள் வெளியில் நின்று கொண்டிருந்த மாணவியை அழைத்து காபி கோப்பைகளை கொடுத்து விட்டாள்.

இனி வரப் போகும் வருடம் முழுமைக்கும், புட் சர்வீஸ் கமிட்டி என்ற துறையில் சிக்கி, தன் தோழிகளின் ஆட்டையப்போடும் ஆட்டத்தில் இப்படி பல தில்லு முல்லு வேலைகளை பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகப் போகிறோம் என்பதை அறியாத மதி, “சரி வாங்கடி. டீன் போனதுக்கு அப்புறம் கல்சுரல்ஸ் இருக்கும்னு பேசிட்டு இருந்தாங்க. போய் பார்க்கலாம்.’’ என்று மற்ற தோழிகளை தள்ளிக் கொண்டு விழா அரங்கிற்குள் நுழைந்தாள்.

Advertisement