Advertisement

அதுக்கு நான் தேவலை போலையே என்று எண்ணிக் கொண்ட மல்லி, “கிளாசிபிகேசன் ஆப் பாக்டீரியா அண்ட் கல்ச்சர் மீடியம். அதான் முக்கியமான கேள்வி. சீக்கிரம் படி.’’ என்றாள் பதட்டத்துடன். 

அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவள், அவள் சொன்ன பக்கத்தை பிரித்து வைத்து கொண்டு தன் பார்வையை அதில் செலுத்தினாள். அந்தப் பக்கம் ரேணுவோ, ‘ஓ… காட் பியூட்டி புல்…’ என்ற அளவில் கத்திக் கொண்டு இருக்க, சங்கரி தன் அலைபேசியில் எதையோ ஆராய்ந்து படித்துக் கொண்டிருந்தாள். 

மகிழ் ஒரு பக்கம் காதுகளை மூடிக் கொண்டு வாசித்துக் கொண்டிருக்க, என்ன செய்வது எனப் புரியாத மல்லி, அருகில் இருப்பவளை ஒரு பார்வை பார்ப்பதும், பெயருக்கு புத்தகத்தை ஒரு பார்வை பார்ப்பதுமாக இருந்தாள். 

சரியாக பத்தே நிமிடங்களில் தலையை உயர்த்திய மதி, “சரி போலாமா…?’’ என அனைவரிடமும் கேட்க, “என்னது அதுக்குள்ள படிச்சிட்டியா…?’’ என ஆச்சர்யத்துடன் அவளிடம் நால்வரும் கேட்டனர். 

அவர்களின் அதிர்ந்த முகத்தை கொஞ்சமும் சட்டை செய்யாது, “என்ன தேவையோ அதை படிச்சிட்டேன்.’’ என்றாள். மல்லி தலையை நீட்டி, “எங்க ஏதாச்சும் எனக்கு சொல்லு.’’என கேட்க, தான் படித்த விசயத்தை ஒரு நகைச்சுவை கதை போல விளக்க துவங்கினாள் மதி. 

“கல்ச்சர் மீடியம் தான் எப்படியும் பிப்டீன் மார்க்ஸ். அதனால அதை ஒரு பார்வை பார்த்துட்டேன். வேணா அதை மட்டும் சொல்லவா…?’’என அவள் கேட்க, அதுவரை அதை படித்து புரியாமல் மண்டையை பிய்த்து கொண்டிருந்த மற்ற மூவரும் கூட அவளை சுற்றி அமர்ந்துவிட்டனர். 

தன் தொண்டையை செருமிக் கொண்டு, நிமிர்ந்து அமர்ந்தவள், தேர்ந்த கதாசிரியன் கதை சொல்லும் பாவனையில், “பஸ்ட் ஒரு இன்ட்ரோ எழுதணும். வாட் ஈஸ் கல்ச்சர் மீடியம்னு. நாம புசு புசுன்னு வளர எப்படி சோறு தேவையோ அதே போல மைக்ரோ ஆர்கானிசத்தை புசு புசுன்னு வளர வைக்க கல்ச்சர் மீடியம் தேவை. இதுல முக்கியமான வார்த்தை இன் விட்ரோ. அதாவது நம்ம உடம்புக்கு வெளிய வேற மீடியம் கொடுத்து அதை வளர்ந்து எடுக்கிறோம். சம்ஜே.’’ என்று அவள் நிறுத்த நால்வரும் ஒரு மார்கமாய் தலையை உருட்டி வைத்தனர். 

“சரி அடுத்து இது எதுக்கெல்லாம் யூஸ் ஆகுது. உங்களுக்கே தெரியும். எந்த நோய்ன்னு கண்டுபிடிக்க, அது எந்த மருந்துக்கு கட்டுப்படும்னு கண்டுபிடிக்க இப்படி நாலு வரி ஸ்டார் போட்டு மானே தேனேன்னு எழுதி விட்ருங்க. அடுத்தது தான் முக்கியமான தலைப்பு. இந்த கல்ச்சர் மீடியத்தோட வகைப்பாடு. இப்ப நாம சாப்பிட்ட சாப்பாட்டை நியாபகம் வச்சிக்க வேண்டியது தான். நம்ம நல்லி கொண்டு வந்த சாம்பார் மாதிரி லிக்விட் மீடியம், பஞ்சாயத்து வச்ச புளிக்குழம்பு மாதிரி செமி சாலிட் மீடியம், நம்ம மல்லி கேரட் பொரியல் மாதிரி சாலிட் மீடியம்.’’ அவள் இப்படியே கதை சொல்லி அந்த கேள்விக்கான முழு பதிலையும் அவர்கள் மூளையில் ஏற்றி இருந்த போது அவர்கள் கல்லூரிக்கு கிளம்ப வேண்டிய நேரத்தை கடிகாரம் தொட்டிருந்தது. 

அவள் தன் விளக்கத்தை முடித்தவுடன், அவளை பாய்ந்து கட்டிக் கொண்ட மல்லி, “வாவ் செம செம காதர் பாய். எல்லார் மூளைக்குள்ளையும் பதிலை சும்மா காத்தடிச்சு ஏத்தி விட்டதால இன்று முதல் நீ காத்தடிக்கும் காதர் பாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.’’ என்று மதிக்கு புது நாமகரணத்தை சூட்டி மகிழ்ந்தாள். 

மற்றவர்களும்  அதை ஆமோதிக்க, நால்வரும் கிளம்ப வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த மகிழ், “சரி சரி…! நேரம் ஆச்சு. கிளம்புங்க. லேட்டா போனா அதுக்கு வேற வாங்கிக்கட்டணும்.’’ என்றவள் பூட்டை எடுக்க நால்வரும் புத்தகப்பையை தூக்கிக் கொண்டு வெளிக் கிளம்பினர். 

இவர்கள் மூவரும் முன்னே பறக்க, மல்லி மற்றும் சங்கரி வழக்கம் போல பின்னே சென்றனர். சரியாக ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் இவர்கள் வகுப்பறைக்குள் நுழைய, சங்கரி வருகைபதிவேட்டை சரி பார்த்து, அடுத்து வகுப்பை நடத்த வர வேண்டிய பேராசிரியரை அழைத்து விட்டு வந்தாள். 

‘குழந்தைகள் நல செவிலியம்’ போதிக்கும் பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததும், அனைவரும் எழுந்து நின்று அவருக்கு முகமன் கூறினர். அதை ஏற்றுக் கொண்டவர், பதிவேட்டில் கையொப்பம் இட்டதும் தன் உரையாடலை துவக்கினார். 

அவர் நின்று கொண்டே ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதியை விளக்க முற்பட, அவர்கள் வரிசையில் மகிழ் மட்டும் அவ்வப்போது உரத்த குரலில் பதில் சொல்லி கொண்டிருந்தாள். அவர் பேச துவங்கிய, இரண்டாம் நிமிடமே மல்லிக்கு கண்களை சொருகி கொண்டு வந்துவிட்டது. 

அது அவளின் சுபாவம். எந்த சூழல் அமைதியாக இருந்தாலும், அல்லது அவள் மனம் லயிக்காத பாடங்களை கேட்க நேர்ந்தாலும் அடுத்த இரண்டாம் நிமிடம் அவளுக்கு உறக்கம் வந்துவிடும். பாதி மாணவிகள் மேஜைக்கு அடியில் நுண்ணியிர் துறை புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருக்க, அவ்வப்போது, மதி அவள் கைகளில் கிள்ளி அவளை எழுப்ப முயன்றாள். 

ஆசிரியர் அவர்கள் வரிசையை பார்க்கும் போதெல்லாம், மகிழ் தான் ஏதாவது பதில் சொல்லி அவரின் பார்வை மல்லியை தொட்டு விடாமல் பார்த்துக் கொண்டாள். நான்காவது முறையாக அவள் கையை கிள்ளிய சங்கரி, “ஏய்… இவ வீட்ல தூங்குறாளா? இல்ல விடிய விடிய அவ வீட்டுக்காரரோட டூயட் பாடிட்டு வறாளா…? முடியல.’’ என்று அடிக்குரலில் மதியிடம் புலம்பியவள், மதியை நோக்கி, ‘இனி நீ மிதி என்னால முடியல’ என்று சைகை காட்டிவிட்டு நேராக அமர்ந்து வகுப்பை கவனிக்க துவங்கினாள். 

“ஆமா அந்த விருமாண்டி மூஞ்ச முன்ன பின்ன பார்த்த மாதிரியே பேசுறது. அந்த மூஞ்ச பக்கத்துல பாக்குறதே கொடும. இதுல விடிய விடிய டூயட்டு. அதெல்லாம் உன் பக்கத்துல உக்காந்து இருக்கா பாரு. அவளை வேணா சொல்லு. இது பச்சை மண்ணு. டிப்ளோமோல இருந்தே இவ தூங்காதா கிளாஸ் இல்ல. அவளை எழுப்பாத ஆள் இல்ல.’’ என்று அதே மென்குரலில் சங்கரிக்கு பதில் சொல்லியவள், பேராசிரியர் இவர்களை நோக்கி திரும்பும் போதெல்லாம், மல்லியின் காலில் வலுவாக மிதித்து, அவள் கண்களை திறக்க வைத்து கொண்டிருந்தாள். 

இப்படி ஒரு அலைவரிசியில் மதி மிதித்துக் கொண்டிருக்க, “ஆ…’’ என்ற அலறல் இவர்களின் பின்னிருக்கையில் இருந்து கேட்டது. மொத்த வகுப்பு என்னவென்று பார்க்க, மதிக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த சீனியர் மாணவி எழுந்து நின்று, “வாட்டர் கேன் கால்ல விழுந்திருச்சு மேம்.’’ என்றார். 

“பாத்து வையுங்க பா. அடிபட்டா என்ன ஆகுறது.’’ என்றவர் மீண்டும் தான் விட்ட இடத்தில் இருந்து பாடத்தை துவங்க, கொஞ்சம் முன்னால் சரிந்து, கடுப்பான குரலில், “ஏன்டி என் காலை மிதிச்ச…?’’ என்று சன்ன குரலில் கேட்டார் மிருதுளா என்ற அவர். 

“என்னது அது உங்க காலா…? நீ ஏன்மா ஏரியா விட்டு ஏரியா காலை கொண்டு வந்து விடுற. நானே இவளை எழுப்புற கடுப்புல இருக்கேன். நீ வேற.’’ என்று மதியும் பதிலுக்கு அவரை விட கடுப்பான குரலில் பதில் சொன்னாள்.  

“இது கிளாசா இல்ல ஏசி ரூமா. ஆனாலும் உங்க அட்டகாசத்துக்கு ஒரு எல்லை இல்லமா போயிட்டு இருக்குடி…!’’ என புலம்பியவர் தன் கால்களை உள் இழுத்து கொண்டார். இப்படி இவர்கள் பல களேபரங்களை கூட்டியும், வகுப்பு முடியும் தருவாயில் மல்லி ஆசிரியரின் கண்களில் வசமாக சிக்கிக் கொண்டாள். 

“போர்த் பென்ச் தேர்ட் கேர்ள்…!’’ என அவர் காட்டமாக குரல் கொடுக்க, சங்கரி இடக் கையை வேகமாக கிள்ள, மதி வலக்காலை வேகமாக உதைக்க, அது எதையும் முகத்தில் காட்டாமல் மல்லி அமைதியாக எழுந்து நின்றாள். 

அவளை முறைத்து பார்த்தவர், “வாட் ஆர் ஆல் த இம்பார்டன்ட் சைன்ஸ் ஆப் ட்ரக்கியோ ஈசோ பேகியல் பிஸ்டுலா…?’’ என கேட்டார். 

மகிழ் அவளுக்கு எதுவும் தெரியாதே என்ற பதைப்பில் வேக வேகமாக தன் அருகிருந்த புத்தகத்தில் அதற்கான பதிலை எழுதி அவளுக்கு காட்ட முனைந்தாள். ஆனால் அவள் எழுது பொருளை கையில் எடுக்கும் போதே, “த திரி ‘சி’ஸ் ஆர் இம்பார்டன்ட் சைன்ஸ். பர்ஸ்ட் ஒன் சோகிங். நெக்ஸ்ட் காபிங். லாஸ்ட் ஒன் சயனோசிஸ்.” 

( குழந்தைகளுக்கு பிறவியில் ஏற்படும் மூச்சு மற்றும் உணவு குழாய் இணைப்பு நோயை இனம் காண உதவும் நோய் அறிகுறி எவை எவை…? அதற்கான பதில் மூச்சு திணறல், இருமல், உடல் பிராணவாயு குறைபாட்டால் நீல நிறமாக மாறுதல்.)     

        

மல்லி திக்கி திணறாமல் பதில் சொல்லி முடித்ததும், ஆசிரியர் மட்டுமல்ல, மொத்த வகுப்புமே அவளை ஆச்சர்யமாக தான் பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில் வகுப்புகள் ஆரம்பித்த இந்த  சொற்ப நாட்களில் மல்லி வகுப்பில் உறங்குவதை மொத்த மாணவ மாணவிகளும் அறிந்து வைத்திருந்தனர். 

ஆனால் அவள் தோழிகள் எப்போதும் அவளை காப்பாற்றி விடுவார்கள். ஆசிரியர்,  “சிட். கிளாஸ்ல பிராப்பரா நிமிந்து உக்காரு.’’ என்றவர், தான் விட்ட இடத்திலிருந்து பாடத்தை நடத்த துவங்கினார். 

 

உட்கார்ந்த மல்லி அடுத்த இரண்டாம் நிமிடம் உறங்கிவிட, “இவ என்னடி திவ்யா… திவ்யா தனுசா. காதை திறந்து வச்சிட்டு தூங்குறா…?’’ என்று லேசாக மதியின் காதருகில் ரகசியம் பேசினாள் மகிழ். 

“பின்ன எப்படி எக்சாம்ல எல்லாம் நம்ம நாலு பேத்தையும் ஓவர் டேக் பண்ணி போறான்னு நினைக்கிற. வீட்ல எல்லாம் அவ புக் எடுத்து படிக்க சான்சே இல்ல.’’ என்று வாயில் பேனாவை கடித்து கொண்டு மெதுவாக பதில் கொடுத்தாள் மதி. 

சங்கரி மகிழ் காட்டிய அந்த முகத்தில் சற்று அரண்டு தான் போனாள். “இவ என்னடி சோம்னி லோக்கி ( தூக்கத்தில் பேசுவது,) பேசன்ட்டா இருப்பாளோ…? எழுந்தா…! பதில் சொன்னா…! மறுபடி தூங்க போயிட்டா…!’’ என ரேணுவிடம் மென்குரலில் புலம்பினாள். 

“அதாண்டி எனக்கும் புரியல. இதே நான் தூங்கும் போது எழுப்பி இருந்தா இகமோ பரமோ நான் அறியேன் பராபரமே கதையாகிப் போயிருக்கும். மறுபடி தூக்கமாத்திரை இந்த பக்கம் பாக்குது. நீ அவ கையை கிள்ளு.’’ என்று மீண்டும் சங்கரியை கிள்ள பணித்தாள் ரேணு. 

“கிள்ளி கிள்ளியே இளச்சிருவேன் போல. ஏற்கனவே நாலு எலும்பு தான் இருக்கு. நாளைல இருந்து ஐஸ் வாட்டர் பிடிச்சிட்டு வந்து அவ கண்ல ஊத்திர வேண்டியது தான்.’’ என்று சங்கல்பம் செய்து கொண்ட சங்கரி மீண்டும் தன் கிள்ளல் பணியை துவங்கினாள். 

ஒருவழியாய் அந்த வகுப்பு முடிய, தேநீர் இடைவேளை ஆரம்பமானது. இன்னும் சிறிது நேரத்தில் தேர்வென்பதால் யாரும் தேநீர் அருந்த செல்லவில்லை. ஆனால் மதி மற்றும் மகிழ் இருவரும் சென்று அவர்கள் ஐவருக்கான தேநீரையும், பஜ்ஜியையும் எடுத்து வந்து கொடுத்தனர். 

அதிலும் மதி நால்வருக்கும் தானே ஊட்ட, கடைசி இருக்கையில் இருந்த நூலை எடுக்க வந்த பனை மரம், “ஊட்டி விடுற க்ரூப்பு… அவங்க  லூட்டி ஜோரும்மா ” என்று பாடலில் வரிகள் மாற்றி இவர்களை கலாய்து சென்றான். 

அப்போதைக்கு தேர்வு கலவரத்தில் இருந்த மகிழ், “இவனுக்கு அடுத்த சூனியம் வைக்காமா விட்டது தப்பா போச்சு போல இருக்கே.’’ என்று எண்ணிக் கொண்டு, அவனை முறைத்து கொண்டே பஜ்ஜியை மென்றாள். 

நேரம் நெருங்க, தேர்வெழுதும் பரபரப்புடன் ஐவர் குழு, நுண்ணியிரியல் துறையை நோக்கி இடம் பெயர்ந்தனர். அதே நேரம் தன் வாழ்க்கை தேர்வின் வினாத்தாளை கையில் வாங்கி, அதை இதயம் கனக்க பார்த்துக் கொண்டிருந்தான் மாறவர்ம பாண்டியன். 

 

பந்தமாகும். 

  

 

Advertisement