Advertisement

பந்தம் – 5 

“ஏய்…! கேன்டீன் முன்னாடி நிக்குறேன். எப்ப வருவ…? இன்னும் அஞ்சி நிமிஷம் தான் வெயிட் பண்ணுவேன். நீ சீக்கிரம் வரல. விட்டுட்டு போயிருவேன்.’’ மல்லி சங்கரியிடம் அலைபேசியில் காய்ந்து கொண்டிருந்தாள். 

ஆனால் அந்தப் பக்கம் பெரிதாக எதிர்வினை ஏதும் இல்லை. “பொறுடி. சர்ஜிகல் பிளாக் தாண்டி வந்துட்டு இருக்கேன். போகும் போது ஜில்லுன்னு கம்மங் கூழ் குடிச்சிட்டு போகலாம்.’’ என்றுவிட்டு வைத்துவிட, மல்லி தன் ஊதா நிற ஹோண்டா ஆக்டிவா வண்டியை சற்றே தள்ளியிருந்த மர நிழலில் நிறுத்திவிட்டு சங்கரிக்காய் காத்திருந்தாள். 

அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் ஓடியிருந்தது. இந்த முப்பது நாட்களுக்குள் எத்தனை நெருக்கம் அவர்கள் நட்பிற்குள் ஏற்பட்டு இருந்ததோ அதோ அளவிற்கு உட்கட்சி பூசல்களும் அவ்வப்போது முளைத்து வந்தன. 

அந்த பஞ்சாயத்துகளை எல்லாம் எப்போதும் வழமையாய் மகிழ் தான் தீர்த்து வைப்பாள். அதானால் அவள் பெயரையே பஞ்சாயத்து என்று வைத்திருந்தார்கள். மதியும், மகிழும் ஏற்கனவே இருசக்கர ஓட்டிகள். 

மல்லி தன் கிராமத்திலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி தினம் கல்லூரி சென்று திரும்புவதை கண்ட அவளின் இரண்டாம் தம்பி அகில், தன் முதல் மாத ஊதியத்தில் மாத தவணைக்கு தன் தமக்கைக்கு புது வண்டியை வாங்கி தந்திருந்தான். 

ரேணு எப்போதும், மகிழ் அல்லது மதியோடு பின்னால் ஒட்டிக் கொண்டு பறந்துவிடுவாள். ஆம் அவர்கள் வண்டி எப்போதும் பறக்கும். ஆனாலும் மல்லி தன் வண்டியை நாற்பதில் தான் உருட்டுவாள். எப்போதும் கொள்கை கோட்பாடுகள் பேசித் திரியும் சங்கரிக்கும் அந்த வேகமே ஒத்து வர இருவரும் நிரந்தர இருசக்கர பிரயாணிகள் ஆகிப் போயினர். 

அதிலும் மல்லி வேண்டுமென்றே அவளை விட்டு சென்று விடுவேன் என்று போலியாக மிரட்டுவதும், பதிலுக்கு, ‘இளநீர், கம்மங் கூழ்’ என்று எதையாவது சொல்லி அவளை நிறுத்தி வைப்பதும் வாடிக்கை தான். 

மல்லி விட்டேத்தியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் முதுகில் தட்டிய சங்கரி, “போலாமாடி…’’ என கேட்டுக் கொண்டே தன் பையை அவளின் வண்டியின் பக்க கம்பியில் மாட்டினாள். 

“ஹும்…’’ என்று மல்லி வண்டியை இயக்க, வழக்கம் போல வண்டி மெதுவாக உருள துவங்கியது. மல்லி மெளனமாக வர, “என்னாச்சுடி…! உன் மூஞ்சே சரி இல்ல.’’ என கேட்டாள். 

‘ப்ச்…’ என சலித்து கொண்டவள், “மைக்ரோபயாலாஜி டெஸ்ட்டுக்கு படிக்கவே இல்லடி. நேத்து என் ரெண்டாவது தம்பிக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க பொண்ணு வீட்டுக்காரங்க வந்திருந்தாங்க. அதான்.’’ என்றாள். 

‘இல்லனா மட்டும் லீவ் விட்டா படிச்சிட்டு வந்துடப் போற.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், “ஆமா…! அப்படியே எல்லா எக்ஸாமும் படிச்சிட்டு வந்து தான் எழுதுறோம் பாரு. நீ எப்படியும் எதையாச்சும் எழுதி ஸ்கோர் செஞ்சிடுற. அப்புறம் எதுக்கு வீணா சீன் போட்டுட்டு இருக்க.’’ என்றாள் மல்லியை தேற்றும் விதமாய். 

“ஏய்…! இது என்ன நம்ம சப்ஜக்ட்டா. மைக்ரோ பயலாஜி. நம்ம இஷ்டத்துக்கு கதை எல்லாம் எழுத முடியாது. எந்த ஆர்கானிசம் பேரும் மண்டையில நிக்கல. சத்தியமா ஐஞ்சி மார்க் கூட தேற போறது இல்ல. நேத்து எம் பொண்ணு என் பேக்ல இருந்த பயோகெமிஸ்ட்ரி எக்ஸாம் பேப்பரை எடுத்து அவ பார்த்ததும் இல்லாமா என் வீட்டுக்காரர் கண்ல வேற காட்டிட்டா. இருபத்தஞ்சிக்கு பதிமூணு மார்க் தானான்னு அவர் நக்கலா பார்த்தது வேற கடுப்பாவே இருக்கு. இப்போ இந்த எக்ஸாம் வேற.’’ என்றாள் மன உளைச்சலோடு. 

“சரி விடு. ரொம்ப எல்லாம் டென்சன் ஆகாத. மகிழ் வீடு போறதுக்கு எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் நான் மொபைல் ரெபர் செஞ்சி படிச்ச கிராம்ஸ் ஸ்டைன்ஸ் பத்தி சொல்லிட்டே வறேன்.’’ என்றவள், அதுவரை தான் படித்து முடித்திருந்த பகுதிகளை மல்லிக்கு விளக்கி கொண்டு வந்தாள். 

மகிழின் வீடு கல்லூரிக்கு அருகில் இருக்க, அதுவும் அவள் தனியே வேறு வீடு பார்த்து தங்கியிருக்க, காலை மருத்துவமனையில் செயல் முறை கற்றல் முடிந்ததும், உணவு இடைவேளைக்கு ஐவரும் அங்கு தான் இணைவார்கள். 

பேசியபடி உண்டு முடித்து, மதிய கல்லூரிக்கு அணிய வேண்டிய மாற்று சீருடையை அணிந்து, அதன் பிறகே ஐவரும் அங்கிருந்து கல்லூரிக்கு கிளம்புவார்கள். 

ஏற்கனவே மல்லி வண்டியை உருட்டுவாள். இவள் பாதையில் பாடம் வேறு நடத்த, நடந்து போகின்றவர்கள் எல்லாம் இவர்களை மேலும், கீழும் பார்த்து சென்றனர். அவர்கள் எங்கே அது குறித்து கவலைப்பட்டார்கள். 

சங்கரியின் பார்வை அவள் அலைபேசியில் இருக்க, மற்றவளின் கண்களோ பாதையில் இருந்தாலும், காதுகளோ சங்கரியின் வார்த்தைகளை உட்கிரதித்து மூளையில் சேகரித்து கொண்டிருந்தன. 

வழியில் இவர்கள் வழமையாய் கூழ் குடிக்கும் தாத்தா கடை வரவும், இருவரும் ஆளுக்கு ஒரு கோப்பை கூழை குடித்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கினர்.

இப்படியே இவர்கள் மகிழ் வீட்டு வாயிலை அடையும் போது, எப்போதும் இவர்களை கண்டதும் தன் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி நின்று குரைக்கும் கறுப்பி, அப்போது தான் இவர்களை புதிதாய் பார்ப்பதை போல தன் வீட்டு சுவரில் கால்களை ஊன்றி நின்று குரைத்தது. 

பக்கத்து வீட்டு நாய் குரைக்கும் ஒலியில் மகிழ் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றாள். தற்சமயம் மதிய வகுப்புக்கு அணிய வேண்டிய மாற்று சீருடையில் முகம் கழுவி பளிச்சென இருந்தாள். 

சங்கரி வண்டியில் இருந்து இறங்கி, தங்கள் மதிய உணவு பைகளை எடுத்துக் கொண்டு, “இந்த நாய் எப்ப தான் குரைக்காம இருக்குமோ தெரியல.’’ என்று சலித்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

            

“இந்த ரெண்டு நாய்களும் எப்ப சீக்கிரமா வருமோ அப்ப தான் இந்த நாய் குரைக்காம இருக்கும்.’’ என்று இருவரையும் ஜாடையில் போட்டு தாக்கியவள் தோசைக் கல்லில் வெந்து கொண்டிருந்த ஆம்லெட்டை திருப்ப சென்றாள். 

மகிழை போலவே, ரேணு மற்றும் மதி இருவரும் சீருடையை மாற்றியிருந்தனர். “ஊர்ந்துட்டே வருவீங்களாடி. உங்களுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.’’ என்றபடி தன் முகத்தில் பௌடரை அப்பிக் கொண்டிருந்தாள் ரேணு. 

“நாங்க சாப்பிட்டு ட்ரெஸ் மாத்துறோம். மல்லி நீ போய் கையை மட்டும் கழுவு,’’ என்ற சங்கரி தானும் முகம் மட்டும் கழுவி வந்து அமர்ந்தாள். ஐவரும் வட்டமாக அமர்ந்ததும், அவரவர் வீட்டில் இருந்து சமைத்ததை எல்லாம் பங்கு வைத்து பள்ளிக் குழந்தைகள் கூட்டாஞ் சோறு சாப்பிடுவதை போல கலந்து உண்டனர். 

அதிலும் மதி, “எனக்கு ஆம்லேட் பசிச்சிருச்சு,’’ என சொல்லி கணிசமான ஆம்லேட்டிற்கு ஆதரவு கொடுக்க, சங்கரி மல்லியின் கேரட் பொரியலை வேட்டையாட, மல்லியோ மகிழின் புளிக்குழம்பை பிசைந்தடிக்க இப்படி அவரவர் கலந்து கட்டி உண்டு கொண்டிருந்தனர். 

சில சமயம் யார் தட்டிலிருந்து யார் எடுத்து உண்கிறார்கள் என்ற கணக்கு வழக்கு இல்லாமல், தட்டு மாறியும் உணவு வாய்க்குள் சென்று கொண்டிருந்தது. ஒருவழியாய் ஐவரும் உண்டு முடித்ததும், “முடிலடா சாமி…! என்னா வெயிலு….!’’ என்று தன் புத்தகப்பையை தலைக்கு அண்டக் கொடுத்து மதி அப்படியே மல்லாந்து விட, நேரம் ஆவதை உணர்ந்து சங்கரியும், மல்லியும் மதியம் கல்லூரியில் அணிய வேண்டிய சீருடைக்கு மாறினார்கள். 

சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் தேய்ப்பதற்கு எடுத்துப் போட்ட மகிழ், நடக்கும் போதே லேசாக மதியின் தொடையில் ஒரு எத்து விட்டு, “மதியம் மூணு மணிக்கு மைக்ரோ எக்ஸாம். கொஞ்சமாச்சும் பயம் இருக்கா எரும.’’ என்று கேட்டு சென்றாள். 

ஏற்கனவே அந்தப் பக்கம் ரேணு புத்தகத்தை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். இவர்கள் ஐவரில் அவளுக்கு மட்டுமே  படித்ததை ஒரு வரி மாறாமல், அப்படியே எழுதும் திறமையுண்டு. 

சீருடையை மாற்றிக் கொண்டு வந்த மல்லி, “நானும் படிக்கவே இல்ல மதி. ஒரே பயமா இருக்கு.’’ என்று புலம்பியபடி மதியின் அருகில் வந்து அமர்ந்தாள். 

உடனே எழுந்து அமர்ந்த மதி, “நீ ஏன்டா செல்லம் இவ்ளோ டென்சன் ஆகுற. படிக்கவே இல்லைனாலும் நாம எல்லாம் பக்கம் பக்கமா எழுதுவோம். கூல்…! கூல்…!’’ என அவள் முதுகில் தட்டினாள். 

உடனே முகத்தை சுழித்த மகிழ், “ஆமா இது நர்சிங் தியரி. படிக்காம பக்கம் பக்கமா எழுத. வாயில எனக்கு நல்லா வந்துறப் போகுது. எங்க நாலு ஆர்கானிசம் பேரை லைனா சொல்லு பார்ப்போம். விளக்கெண்ண. படிபடின்னு சொன்னா ரங்கநாதர் பள்ளி கொண்ட மாதிரி பப்பரப்பேன்னு படுத்துட்டு, நக்கலு. ஒழுங்கு மரியாதையா எழுந்து உக்காந்து படி. இந்த மார்க்கதான் இன்டர்னல் போடுவாங்கன்னு சித்ரா மேம் தெளிவா நேத்து என்கிட்ட சொன்னாங்க. அவ அவ உயிரை கொடுத்து முக்கிட்டு இருக்காளுக. இவ என்னமோ வியாக்கானம் பேசிட்டு இருக்கா… எரும.’’ என்ற மகிழ் தன்னுடைய புத்தகத்தை எடுத்து கொண்டவள், ஓரம் சென்று அமர்ந்தாள். 

“இப்ப எதுக்கு நீ இவ்ளோ டென்சன் ஆகுற. படின்னு சொன்னா படிக்கப் போறேன். ஆமா நல்லி எலும்பு இன்னைக்கு எந்த சேப்டர் டெஸ்ட்.’’ என சங்கரியை பார்த்து வினவ, நால்வருமே, “அடிப்பாவி…’’ என்பதை போல அவளை பார்த்தனர். 

மதியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “ஏண்டி நல்லி நீயும் பஞ்சாயத்தும் தான லீடர். இந்த மன்டே டெஸ்ட் எல்லாம் இனி கேன்சல் செஞ்சிடுங்க. சண்டே மதியானம் பிரியாணி கிளறி தின்னுட்டு புக்கை திறந்தா படிக்கவா முடியும். அதுவும் நேத்து நாத்தனாருங்க வேற வந்துட்டாளுங்க. ரெண்டு கிலோ சிக்கன். நாலு கிலோ மட்டன். நான் ஆதரவு கொடுக்கலைனா அதெல்லாம் வீணாயிடாது. சமச்சி, சாப்பிட்டு தூங்கவே நேரம் இல்ல… இதுல எந்த ஆர்கானிசத்தை நான் கண்டேன்.’’ என்றவள் குத்து மதிப்பாக பக்கங்களை பிரித்தாள். 

Advertisement