Advertisement

வகுப்பறையே அமைதியில் ஆழ்ந்து அவர் முகத்தையே பய பக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மதி மட்டும் தான் மேசைக்கடியில் வைத்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மல்லியின் கைகளை சுரண்டினாள். 

மல்லி என்ன என்பதை போல பார்க்க, தன் கண்களால் மேசைக்கடியில் பார்க்குமாறு சைகை செய்தாள். மல்லி லேசாக விழி தாழ்த்தி பார்க்க, மதியின் கரங்களில் சதுர வடிவிலான நான்கு கடலை மிட்டாய்கள் ஒய்யாரமாக அமர்ந்திருந்தன. 

அத்தனை நேரம், ‘அச்சோ…! இத்தனை சப்ஜெக்டா? இதெல்லாம் எப்படி படிக்கப் போறோமோ…!’ என்ற கவலையில் ஆழ்ந்திருந்தவள், கடலை மிட்டாயை கண்டதும், சோலை மலரை கண்ட பட்டாம் பூச்சியாய் மகிழ்ந்து போனாள்.

“ஐ…!’’ என்று தனக்கான பங்கை எடுத்துக் கொண்டவள், மீதம் மூன்றை மகிழின் கையை கிள்ளி அவள் உள்ளங்கைக்கு இடம் மாற்றினாள். முகத்தில் அதிர்ச்சியை காட்டினாலும், மகிழும் தனக்கான பங்கை எடுத்துக் கொண்டு மீதம் இரண்டை ரேணுவின் கரங்களுக்கு இடம் மாற்றினாள். 

பேராசிரியர் அனைவரயும் சுய அறிமுகம் செய்ய சொல்லியிருக்க, முதல் வரிசை மாணவிகள், தாங்கள் பட்டயப்படிப்பினை முடித்த கல்லூரியின் பெயர், முடித்த ஆண்டு, மற்றும் தங்களின் சொந்த ஊரோடு செவிலி துறையில் மொத்த ஆண்டு அனுபவம் என்று தங்களை குறித்த விவரங்களை ஒவ்வொருவராய் எழுந்து நின்று பகிர்ந்து கொண்டிருந்தனர். 

கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஐவரும், முகத்தில் இருந்த வியர்வையை துடைப்பத்தை போல கடலை மிட்டாயை தங்கள்  வாய்க்குள் கடதியிருந்தனர். தங்கள் வரிசை எங்கு விரைவாக வந்து விடுமோ என்று பயந்த மல்லி கடவாய் பல்லின் உதவியோடு கடலை மிட்டாயை வேகமாய் கடித்தாள். 

அப்போது வெளிப்பட்ட, ‘கடக்’ என்ற ஓசையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவி வேகமாய் திரும்பி பார்க்க, உண்மையில் மல்லி பயந்தே போனாள். ஆனால் மகிழ் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தானும் கடலை மிட்டாயை ஓசையுடன் கடித்தபடி, ‘என்ன…?’ என்பதை போல் புருவத்தை தூக்கி கேட்க, அவள் புருவத்தை உயர்த்திய விதத்தில் அந்தப் பெண் படக்கென திரும்பிக் கொண்டாள். 

‘அது’ என்று ஒரு பாவனையை காட்டியவள் மல்லியை பார்த்து, ‘பாத்துக்கலாம்’ என்பதை போல நாக்கை ஒரு பக்கம் துருத்தி காட்டி தைரியம் வழங்கினாள். ஒருவழியாக, இவர்கள் வரிசையின் அறிமுகப்படலம் வந்துவிட, தான் சப்பிக் கொண்டிருந்த கடலை மிட்டாயை கடவாயில் பதுக்கியவள், கம்பீரமாய் எழுந்து நின்று, “ஐயம் மதினாபேகம். கம்ப்ளீட் மை டிப்ளோமா இன் சேலம் ஸ்கூல் ஆப் நர்சிங் இன் த இயர் ஆப் 2009. மை டோடல் நர்சிங் எக்ஸ்பீரியன்ஸ் நைன் இயர்ஸ். நேடிவ் சேலம்.’’ என்று விட்டு அமர்ந்தாள். 

அவள் அமர்ந்ததும் தயங்கிக் கொண்டே மல்லி எழுந்து நின்றாள். “ஐயம் மல்லி… சாரி மல்லிகேஸ்வரி…’’ என்று தயங்கி தயங்கி பேச மொத்த வகுப்பும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தது. 

மதி ஒரு பக்கமும், மகிழ் ஒரு பக்கமும் அவள் உள்ளங்கைகளை பற்றி அழுத்த, மல்லி கொஞ்சம் தயங்கினாலும் தான் சொல்ல வந்ததை வெற்றிகரமாக சொல்லி முடித்தாள். அவள் அமரும் முன் பேராசிரியர், “பயப்பட வேண்டாம் மல்லி. இனி இங்க இருக்க எல்லாரும் உங்க பிரண்ட்ஸ். டீச்சர் ஆக முக்கியமான குவாலிபிகேசனே போல்ட்னஸ் தான். வளர்த்துக்கோங்க.’’ என்றவர், “நெக்ஸ்ட்” என்றதும் மகிழ் எழுந்து தன் சுய அறிமுகத்தை துவங்கினாள். 

இப்படி அனைவரும் தங்கள் சுய அறிமுகத்தை முடிக்கவும், பேராசிரியர், “ஓகே ஸ்டூடண்ட்ஸ். உங்க எல்லாரோட ப்ரைமரி நாலேஜ் எப்படியிருக்குன்னு ஒரு சின்ன டெஸ்ட் வச்சி பார்த்துடலாம். ஒவ்வொரு பென்ச்லயும் ரெண்டு ரெண்டு பேரா உக்காருங்க.’’ என்றார். 

‘என்னது வந்த முதல் நாளே டெஸ்ட்டா…!’ என மாணவ, மாணவியர் மத்தியில் சின்ன சலசலப்பு எழ, “காமான் குவிக்.’’ என்ற ஆசிரியரின் கட்டளை குரல் அவர்களை அடி பணிய வைத்தது. 

தேர்வெழுத தேவைப்படும் வெள்ளை தாள், மற்றும் எழுது பொருட்களோடு அனைவரும் இரண்டு இரண்டு பேராக வரிசையில் அமர்ந்தனர். மதியும், மகிழும் ஒரு வரிசையிலும், ரேணுவும், சங்கரியும் ஒரு வரிசையில் அமர, அதற்கடுத்த வரிசையில் மல்லி அமர்ந்தாள். 

அவளின் அருகில் பனைமரம் வேகமாய் வந்து அமர, லேசாக நிமிர்ந்தவள், அதன் பிறகு குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. மல்லி பள்ளிக் கூட காலத்திலிருந்தே தேர்வு என்றாள் குனிந்த தலை சுந்தரி தான். 

யாரையும் பார்த்து எழுத நினைக்க மாட்டாள். அதே நேரம், தானும் யாருக்கும் எதுவும் சொல்லிக் கொடுக்கமாட்டாள். அப்படி ஒரு உத்தம புத்திர கொள்கை கொண்டவள். 

“ஆல் ஆர் ரெடி ஸ்டூடன்ஸ்…?’’ என்று கேட்ட பேராசிரியர், தன் கணீர் குரலில் முதல் கேள்வியை தொடுத்தார். “டிபனிசன் ஆப் நர்சிங்…?” அந்த முதல் கேள்விகே பலரின் தலைகள் போச்சுடா என்பதை போல உயர்ந்து தாழ்ந்தது. 

அடுத்தடுத்து செவிலிய தொடர்புடைய பல கேள்விகள் வரிசை கட்டி நின்றன. பத்து நிமிடத்தில் இருபத்தைந்து மதிப்பெண்களுக்கு கேள்வியை முன் வைத்தவர் “உங்களுக்கு எல்லாம் ஆப் ஆன் அவர் டைம். எழுத ஆரம்பிங்க.” என்றவர் வகுப்பறையை சுற்றி வர துவங்கினார். 

‘நர்சிங் ஈஸ் த யுனிக் ப்ரோபசன்… தோஸ் வு ஆர் ஆல் கேர்….’ மனதிற்குள் வரிகளை ஓட்டிப் பார்க்க, அதற்கு மேல் எட்டு வருடங்களுக்கு முன்னால் படித்த செவிலியம் என்பதின் வரையறை நினைவில் இருந்து வெளிப்படமால் ஆட்டம் காட்ட தொடங்கியது. 

கைக் கடிகாரத்தில் நிமிட முட்கள் வேகமாய் நகர, நினைவிற்கு வந்த வரை சரியாக எழுதியவள், மறந்து போன வார்த்தைகள் வந்த இடத்தில், கோணல் மாணலாய் புரியாமல் எழுதி, மீண்டும் நினைவில் நின்ற கடைசி வரிகளை சரியாக எழுதி அந்த கேள்வியை முடித்தாள். 

அவள் இப்படி தனக்கு தானே பேசுவதும், பின்பு எழுதுவதுமாக இருக்க, ஒரு சிறிய ரப்பர் அவள் கைகளில் மோதியது. மல்லி லேசாக தலை உயர்த்தி பார்க்க, “வூபிங் காப் காசிடிவ் ஏஜன்ட் என்ன?’’ என மென் குரலில் கேட்டுக் கொண்டிருந்தான் பனை மரம். ( கக்குவான் இருமலை தோற்றுவிக்கும் கிருமியின் பெயர் என்ன…?) 

‘போர்டிடெல்லா பெர்டுசிஸ்’ என்ற அந்த கேள்விக்கான பதிலை அறிந்திருந்த மல்லி, ‘இந்த கேள்விக்கு கூட பதில் தெரியாத…?’ என்பதை போல அவனை நோக்கி கேவலமான ஒரு பார்வையை செலுத்திவிட்டு மீண்டும் தனக்குள் பேசியபடி தேர்வெழுத தொடங்கினாள். 

அவளை பார்த்து முறைந்தவன், வேண்டுமென்றே தன் எழுது பொருளை கீழே போட்டுவிட்டு, எழுந்து நின்றவன், “மேம் பென் எடுத்துக்கிறேன்.’’ என்றான். அப்போது அவன் அருகே வந்து நின்ற ஆசிரியர், “எடுத்துக்கோப்பா…” என வாஞ்சையாய் சொல்ல, தன் குரலை மிகவும் தாழ்த்தி, “மேம் எனக்கு பக்கத்துல எக்ஸாம் எழுதுற சிஸ்டர் தனக்கு தானே பேசிக்கிட்டே எக்ஸாம் எழுதுறாங்க. எனக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு மேம்.’’ என்றான் முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு. 

இவன் அப்படி சொன்னதும், “மல்லிகேஸ்வரி…” என்று கடுமையாக அழைத்தவர், அவள் நிமிர்ந்து பார்க்கவும், “எக்ஸாம் ஹால்ல சைலன்ஸ் கீப் அப் பண்ணனும்னு தெரியாதா…?’’ என்றார் கடுமையாய். 

அவரின் குரலில் விதிர்த்து போனவள், “எக்ஸ்கியூஸ் மேம்…!’’ என்றாள் மன்னிப்பை வேண்டும் குரலில். “சரி… சரி… அமைதியா உக்காந்து எழுது.’’ என்றவர் மீண்டும் நடக்க ஆரம்பிக்க, அதுவரை தேர்வு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இவளின் தோழிகள் நால்வரும் படக்கென நிமிர்ந்து மல்லியை நோக்கினர். 

என்ன நடந்தது என அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் மல்லி கடுப்புடன் பனை மரத்தை முறைத்துவிட்டு மீண்டும் தேர்வினை எழுத துவங்க, நால்வரும் ஒன்றே போல அவனை முறைத்தனர். 

“டென் மினிட்ஸ் மோர்…” என்ற ஆசிரியரின் குரல் அறிவிக்க, நால்வரும் மீண்டும் தங்கள் கவனத்தை வினாத்தாளுக்கு திருப்பினர். பாகுபலி சிப்பாய்களாய் தங்கள் பேனா எனும் ஆயுதத்தால், மேஜை அதிர அதிர விடை போரை முற்று பெற வைக்க போராடிக் கொண்டிருந்தனர்.

சரியாக அரைமணி நேரம் முடியவும் மாணவிகள் அலற அலற, ஆசிரியர் விடை தாளை பறித்து கொண்டு போனார். மாணவர் ஐவரும் அவர் கேட்கும் முன்பே விடைத்தாளை நீட்டியிருந்தனர். 

விடாமல் இறுதி நிமிடம் வரை எழுதி கொண்டிருந்த மாணவிகளை நோக்கி பனைமரம், “போதுங்கிற மனசே பொண்ணுங்களுக்கு வராதுப்பா…!’’ என்று நக்கலடித்துவிட்டு தன் இருப்பிடம் நோக்கி இரண்டடி கூட நடந்திருக்க மாட்டான், “ஸ்… ஆ…’’ என்று அலறிக் கொண்டு தன் காலை மேலே தூக்கியிருந்தான். 

தான் அணிந்திருந்த கழுத்தணியில் கோர்த்து வைத்திருந்த ஊக்கு பின்னை திறந்து அதன் கூர் முனை மேலே நிற்கும் படி, தன்னுடைய அழிப்பானின் மூலம் நிலை நிறுத்தியவள் பனை மரம் நடந்து வந்த வழியில் வைத்திருந்தாள் மகிழ். 

அது சற்றே பெரிய ஊக்கு. ஆகையால் அவன் அணிந்திருந்த காலணியை மீறிக் கொண்டு அவன் பாதங்களை முத்தமிட்டிருந்தது அதன் கூர் முனை. அவன் உதறியதில் அழிப்பான் தூரமாய் சென்று விழுந்திருக்க, ஊக்கு மட்டும் காலணியோடு ஒட்டிக் கொண்டிருந்தது. 

ஊக்கை தவறுதலாக மிதித்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டவன், அதை எடுத்து வகுப்பறையின் மூலையில் இருந்த குப்பை தொட்டியில் சென்று வீசி வந்தான். தேர்வு எழுதிய களைப்பில் தற்சமயம் எள்ளு உருண்டையை ஐவரும் வாயில் அதக்கியிருந்தனர்.  

ஐவரும் ஒன்றே போல அவனை முறைத்து பார்த்து கொண்டிருக்க, இனி நடக்கப் போகும் களேபரத்தை அறிந்திருந்த அரசமட ஆண்டி, “டேய்.. ஏன்டா அந்த அஞ்சி பேரை பகைச்ச. மகனே இனி நீ நீ பொகஞ்ச.’’ என மெளனமாக அலறியது பாவம் பனைமரத்தின் காதுகளுக்கு எட்டவே இல்லை.

‘இவனுக்கு இனி எப்படியெல்லாம் சூனியம் வைக்கலாம்.’ என்ற சிந்தையில் ஐவர் குழு அவனை பார்த்திருக்க, எதையோ அருகிருந்த நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த, விநாயகரின் சோதரன் பெயர் கொண்டவன் அறியவில்லை இனி தனக்கான மட்டைப்பந்தாட்டம் தொடங்கப் போகிறது என்பதை. 

பந்தமாகும்.      

 

Advertisement