Advertisement

பந்தம் – 4 

“எந்த பேட்ச்.’’ தான் அமர்ந்திருந்த நீண்ட இருக்கையின் அருகே நின்று கேள்வி கேட்டு கொண்டிருந்தான் நெடியவன் ஒருவன். “2009.” என்றாள் மல்லி சற்று பதட்டத்துடன் பதில் சொல்லிக்  கொண்டிருந்தாள்.

என்னதான் தகுதி சான்றிதழை தன் மற்ற தோழிகளுக்கு பின்னால் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு முன்னால் கல்லூரியில் இணைந்திருந்தாள் மல்லி. மற்றவர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை தாமதப்பட, மல்லி முதல் ஆளாக கல்லூரியில் இணைந்திருந்தாள். 

இவள் தங்களுக்கு உண்டான வகுப்பறையில் நுழையும் போது, அவளுக்கு முன்பே அங்கு ஓரிரு மாணவிகள் வந்து காத்திருந்தனர். இவள் தயக்கத்துடன் கடைசி இருக்கையை தேடிப் போய் அமர்ந்தாள். 

மல்லி சுற்றி சுற்றி வகுப்பறையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளுக்கு பட்டயப்படிப்பில் வகுப்பெடுத்த சித்ரா மேடம் வகுப்பறைக்குள் நுழைய மல்லிக்கு மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. 

இவளை முதல் பார்வையிலேயே அவர் அடையாளம் கண்டு கொண்டார். “ஏ… மல்லி. உள்ள வந்து பாக்கவே இல்ல.’’ என்று அவர் இவளை வரவேற்க, சுற்றி இருந்த மாணவிகள் மல்லியை ஆர்வமாய் பார்த்தனர். 

மல்லி எழுந்து அவர் அருகில் செல்ல, “இவ என்னோட டிப்ளோமா ஸ்டூடன்ட்.’’ என அருகில் நின்று கொண்டிருந்த சீனியர் மாணவிகளிடம் அறிமுகம் செய்து வைத்தவர், அவளையே புதிதாய் இணையும் மாணவ, மாணவிகளிடம் கல்லூரியில் இணையும் சேர்க்கைக்கான கடிதத்தை சேகரிக்க சொன்னார். 

அப்படி மல்லி தன் இடத்தில் அமர்ந்து சேகரித்துக் கொண்டிருக்கும் போது தான், அவள் அருகே வந்து நின்ற பனைமரம் அவளிடம் அவள் பட்டயப்படிப்பை முடித்த ஆண்டு குறித்து கேட்டு நின்றான். 

இவள் பதில் சொன்னதும், “எனக்கு சப் ஜூனியர். ஏன் எழுந்து வந்து முன்னாடி நின்னு லெட்டரை கலக்ட் செய்ய மாட்டியா…?’’ என்று நக்கலாய் கேட்டான். மல்லி பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாய் இருக்க, “பாத்துகிறேன் உன்ன…’’ என்று ஒரு விதமாய் தலை அசைத்தவன் முன்னிருக்கையில் சென்று அமர்ந்தான். 

மல்லிக்கு தன் தோழிகள் யாரும் இல்லாது தான் மட்டும் தனிமையில் வகுப்பறையில் அமர்ந்திருப்பது என்னவோ போல இருந்தது. சிறிது நேரம் கழித்து, அவள் பெண்கள் ஓய்வறைக்கு சென்று திரும்ப அப்போதும் அந்த பனைமரம், “ஓய்… ஜுனியர்…’’ என்று இவளை நோக்கி வேகமாய் வந்து அதே இடத்தில் நிற்க, மோதிவிடுவானோ என்ற பயத்தில் மல்லி கண்களை மூடியிருந்தாள். 

அவன் அங்கேயே நின்று அவளைப் பார்த்து சிரிக்க, தற்சமயம் அவளைப் பார்த்து முறைத்தவள் வேக வேகமாய் வகுப்பறை நோக்கி நடந்தாள். அதன் பிறகு மல்லி தான் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்து கொண்டாள். 

அன்று மாலை வீட்டிற்கு திரும்பியதும், மகிழுக்கும், மதிக்கும் இணைப்பு தொடர்பில் அலைபேசியில் அழைத்தவள், அன்றைக்கு கல்லூரியில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டாள். “நீங்க இல்லாம எனக்கு காலேஜ் போகவே பிடிக்கலைடி.’’ என புலம்பி தீர்த்தாள். 

மல்லி வீட்டின் முற்றத்தில் இருந்த கொய்யா மரத்தில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தாள். அதற்கு சற்று தள்ளியிருந்த தொழுவத்தில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த சுந்தரின் காதுகளில் மல்லியின் வார்த்தைகள் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது. 

ஆனாலும் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல், தன் வேலையை செய்து கொண்டிருந்தான். அலைபேசியில் மகிழ், “இப்போ எதுக்கு நீ டென்சன் ஆயிட்டு இருக்க. அதான் நாளைக்கு நாங்க காலேஜுக்கு வந்துடுவோம் இல்ல. பேசிக்கிலாம். யார் அந்த பனங்கா மண்டையன்னு மட்டும் எனக்கு காட்டு. அவனுக்கு எப்போ எப்படி சூனியம் வைக்கிறதுன்னு நான் முடிவு பண்றேன்.’’ என்றாள். 

அதே போல மதியும், “அதானே என் மல்லிக் குட்டியை முதல் நாளே கலாய்ச்சவனை காலேஜ் கடைசி நான் வரை கதற விடுறோம். நீ பீல் பண்ணாத பேபிமா.’’ என்றாள். 

இருவரின் ஆறுதல் வார்த்தைகளும், மல்லிக்கு கொஞ்சம் தெம்பை தர, “நாளைக்கு காலேஜுக்கு சீக்கிரம் வந்துடுங்கடி.’’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள். 

அன்றைக்கும் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மல்லி உறக்கத்தில் ஆழ, அவள் காதருகில், “காலேஜ்னா சின்ன சின்ன கேலி, கிண்டல், சீண்டல் இதெல்லாம் இருக்க தான் செய்யும். அதுக்கு எல்லாம் பயப்படாம தைரியமா நிமிர்ந்து நின்னா மத்தவங்க தானா ஒதுங்கிப் போயிடுவாங்க. நாம அவங்களை பார்த்து பயந்தா அது தான் நாம அவங்களுக்கு கொடுக்குற மோடிவேசன். அதானால சும்மா சும்மா பயந்து நடுங்காமா தைரியமா இரு அச்சும்மா.’’ என்று கனிவுடன் அவள் மாமன் சொல்வதை போல கனவு கண்டாள். 

ஆம் அவள் மாமனின் குரல் காதலில் இத்தனை குழைந்திருக்கும் என்பதை மல்லி இதுவரை விழித்திருந்து கேட்டதில்லை. ஆக சுந்தர் அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டு தலை கோதியபடி சொல்லிக் கொண்டிருந்த தேறுதல் வார்த்தைகளை கனவென்று எண்ணிக் கொண்டவள், தூங்கிக் கொண்டே அழகாய் புன்னகைத்தாள். 

செம்பவள இதழ்களை ஒற்றிக் கொள்ள உள்ளே ஆர்வம் கிளர்ந்தெழுந்த போதும், இப்போது தான் எதையாவது தொடங்கினால், உறங்கிக் கொண்டிருப்பவள் எழுந்து கொள்வாள். அதோடு இந்த புன்னகையும் முறிந்து விடும் என்பதை உணர்ந்தவன் அவள் உணரா வண்ணம் லேசாக அவன் உச்சியில் இதழ் பதித்தான். 

மல்லி புன்னகை முகமாகவே உறங்கிப் போனாள். அடுத்த நாள் காலை அழகாகவே விடிந்தது. மல்லி அன்றைக்கு கல்லூரிக்கு கிளம்ப வகுப்பில் சேர்க்கைக்கான விதிமுறைகள் முடிந்து பெரும்பாலான மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்திருந்தனர். 

வலது பக்க முன் இரு வரிசை இருக்கைகளை இவர்களை விட வயதில்  இளையவர்களான நான் சர்வீஸ் கேண்டிடேட் என்று சொல்லப்படுகின்ற அந்த ஆண்டே செவிலிய பட்டப்படிப்பு முடித்த பத்து மாணவிகள் ஆக்கிரமித்து இருந்தனர். 

இடது பக்க முன் வரிசையில் ஒதுக்கீட்டின்படி ஐந்து இடங்களை மட்டுமே பெற முடிந்த ஆண் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அதற்கு பின்பான இருக்கைகளில் ஒவ்வொரு நீண்ட இரும்பு பென்சிலும், இரண்டு மூன்று என்று சர்வீஸ் கேண்டிடேட் என்று சொல்லப்படுகின்ற அரசில் செவிலியர்களாய் பணிபுரியும் மாணவிகள் அமர்ந்திருந்தனர். 

மல்லி வழக்கம் போல வலப்பக்கம் இருந்த வரிசையில் கடைசி வரிசையில் சென்று அமர்ந்தாள். அவள் தோழிகள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. பனைமரம் முதல் வரிசையில் இருந்து திரும்பி அவளைப் பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி, ‘வந்தாச்சா’ என்பதை போல பார்த்தான். 

மல்லி முகத்தில் எவ்வித பாவங்களையும் வெளிப்படுத்தாமல் அவளுக்கு நேராய் இருந்த வெண்திரையை வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் எவ்வித முகபாவங்களையும் காட்டதிருக்க, ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகு இவள் பக்கம் திரும்பவே இல்லை. 

அப்போது தான் மல்லி அதை கவனித்தாள். அவன் தன்னை மட்டும் அல்ல சுற்றி இருக்கும் அனைத்து மாணவிகளையும் வஞ்சனையின்றி வம்பிழுத்து கொண்டிருப்பதை. ‘ஓ… இவன் சூனா பானாவா…. நாம தான் சீரியல் கில்லர் ரேஞ்சுக்கு கற்பனை செஞ்சி… இவளுககிட்ட வேற புலம்பி தள்ளிட்டோம். வந்தா அவளுக பங்குக்கு வேற அலப்பறையை கூட்டுவாளுகளே. ஞான பண்டிதா…காலேஜ் கலவர பூமியா மாறாம காப்பாத்துப்பா…” என்று அவசரமாய் வேண்டுதல் வைத்தாள்.  

‘வாய்ப்பில்லை ராசாத்தி… வாய்ப்பில்லை… ஐஞ்சி பேரு ஒண்ணா எப்ப காலடி எடுத்து வச்சீங்களோ இனி இங்க கலவரம் மட்டும் தானே நடக்கும்.’ என்று சொல்வதை போல, வகுப்பறையின் நாட்காட்டியில் உருவப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த விநாயகப் பெருமான் வீசிய காற்றில் தன் முகத்தை சுவற்றில் மறைத்து கொண்டார். 

பெரிய ஹாரன் சத்தம் காதைப் பிளக்க, அதை தொடர்ந்து, உரத்த குரலில் அளவளாவிய படி, மதி, மகிழ், ரேணு மற்றும் சங்கரி நால்வரும் வகுப்பறைக்குள் நுழைந்தனர். மகிழ் அணிந்திருந்த சேலையும், அதை அவள் உடுத்தியிருந்த விதமும் பலரின் கவனத்தை அவள் பால் திருப்பியது. 

அந்த காலத்து கதாநாயகி போல, குட்டை கையோடு ‘பப்’ டிசைன் வைத்து தைத்திருந்த ரவிக்கை அவள் அணிந்திருந்த சேலைக்கு அத்தனை பாந்தமாக இருந்தது. அதோடு, முடியை சுருட்டி அதிலும் இரண்டு, ‘பப்’ வைத்திருந்தாள். 

வந்த வேகத்தில் அவள் தன் தோள்பையை தொப்பென்று மேஜையில் வைத்த வேகம் உண்டாக்கிய அதிர்வோசையில் மொத்த வகுப்பறையும் அவளை நோக்கி திரும்பியிருந்தது. 

அவள் கம்பீரமும், கண்களில் இருந்த தீட்சண்யமும் மற்றவர்களுக்கு பயத்தையும், மரியாதையையும் ஒருங்கே தோற்றுவித்து கொண்டிருந்தது. மதி தான் அணிந்திருந்த பர்தாவை கழட்டியதும், வந்திருப்பது மாணவியா, அல்லது கல்லூரி பேராசிரியையா என்று அவளின் கன பரிமாணத்தில் குழம்பி போனோர்  இப்போது முழுக்க முழுக்க ஆச்சர்யத்தோடு இவர்களின் இருக்கையில் தங்கள் பார்வையை பதித்திருந்தனர். 

அவர்கள் இருக்கையிலேயே ஒல்லி பெல்லியாக இருந்த சங்கரியை நோக்கி புருவத்தை ஏற்றி இறக்குவோம் என்ற நினைப்பில் திரும்பிய பனை மரம், மதி, மற்றும் மகிழ் இருவரையும் கண்டதும் அலறி அடித்து நேராய் அமர்ந்து கொண்டான். 

ரேணு ஓரத்தில் அமர்ந்து கொள்ள, அவளுக்கு அருகே சங்கரி, நடுவில் மகிழ், அவள் அருகில் மல்லி, மல்லி அருகில் மதி என்று ஐவரும் ஒரு வரிசையில் அமர்ந்து கொண்டார்கள். சொல்லப் போனால் அந்த நீண்ட இருக்கையில் முப்பதை தொட்டுக் கொண்டிருக்கும் நால்வர் மட்டுமே அமர முடியும். 

அதிலும் மதியின் எக்ஸ்ட்ரா லார்ஜ் இடுப்பிற்கு அவளுக்கே பாதியிடம் தேவைப்படும். ஆனால் அவர்கள் இதயங்கள் நெருங்கி இருந்ததால், இருக்கையின் நெரிசல் குறித்து ஐவருமே கவலைப்படவில்லை.

மதி முன்னால் அமர்ந்திருக்கும் ஐந்து மாணவர்களில் மல்லியை கேலி செய்தது யார் என தெரியாமல், மூவரின் மேலும் ஒரு உக்கிர பார்வையை பதித்தபடி, “யார்டி அந்த கல்பிரிட்…?’’ என மல்லியிடம் கேட்டாள். 

மகிழும், சற்றே முன்னோக்கி நகர்ந்து அமர்ந்து, “எல்லாமே சப்பை பீசா இருக்கு. இதுல உன்னை கலாய்ச்சது எதுடி…?’’ என்றாள். 

சொல்வதா வேண்டாமா என்று மல்லி குழம்பிக் கொண்டிருக்கும் போதே, ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைத்துவிட்டார். ‘அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சோம்.’ என்று எண்ணிக் கொண்டவள் நல்ல பிள்ளையாக நிமிர்ந்து அமர்ந்தாள். 

தனக்கான இருக்கையில் அமர்ந்த பேராசிரியர், “குட் மார்னிங் டியர் ஸ்டூடன்ஸ். வெல்கம் டூ அவர் காலேஜ். இங்க இருக்குறதுல எய்ட்டி பர்சன்டேஜ் ஸ்டூடன்ஸ் சர்வீஸ் கேன்டிடேட் இல்லையா…! எல்லாரும் குடும்பம் குழந்தைகள்னு நிறைய பொறுப்புகளோட இருப்பீங்க. ஆனா இனி வரப் போற ரெண்டு வருசமும், குடும்பத்தையும் படிப்பையும் பேலன்ஸ் செய்ய கத்துக்கோங்க. ஏன்னா ரெண்டுமே நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். அதுவும் பர்ஸ்ட் இயர் ரொம்ப டப்பா இருக்கும். பதினோரு சப்ஜக்ட். ஒன்பது தியரி எக்ஸாம், அண்ட் த்ரி ப்ராக்டிகல் எக்ஸாம் அட்டன் செய்யணும். சோ, ஆரம்பத்துல இருந்தே ஒழுங்கா படிச்சா தான் நல்ல மார்க் கெயின் செய்ய முடியும். ஹையர் ஸ்டடிஸ் போக முடியும்.’’ என்று முதல் நாளே வார்த்தைகளால் வேப்பிலை அடித்தார். 

Advertisement