Advertisement

வீட்டில் மற்றவர்கள் அனைவரும் ‘ஓ’ பாசிடிவ் என்றிருக்க, இவளின் அரிய வகை ‘ஓ’ நெகடிவ் பிரிவை தானும் கொண்ட சுந்தர் சென்னையில் தன் ஆய்வு வேலையை பாதியில் போட்டுவிட்டு வந்து, குருதி தானம் அளித்து சென்றான்.

தாய் மற்றும் மகன் இருவரும் தங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை அந்த நொடி சீதைக்குள் பூக்க, குலசாமி கோவிலில் பூ போட்டு பார்த்து, அதிலும் சாதகமான பூ வர, அதன் பிறகே திருமணத்திற்கு பாரியிடம் சென்று பேசினர்.

இந்த திருமண வேண்டுகோளை பாரி மகிழ்வாக வரவேற்பார் என்று இவர்கள் எண்ணியிருக்க, “சொத்து பத்து ஏதுமில்லாத இடத்துல எம் மருமக எதுக்கு கஷ்டப்படனும். வேற நல்ல இடமா பாருங்க. வயசு வித்யாசமும் அதிகம்.’’ என்று அவர் இவர்களுக்கே புத்தி சொன்னார்.

இறுதியில் மல்லி தான், அவரை தனிமையில் சந்தித்து, “எங்க அம்மா, அப்பா தம்பி இவங்களை எல்லாம் விட்டுட்டு என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது அத்தை. ப்ளீஸ் அத்தை. நான் உன் வீட்டுக்கே மருமகளா வந்துட்டா நம்ம வீட்டு ஜன்னல் வழியாவே தினம் என் வீட்டை பார்த்துக்கலாம். எங்க அம்மா வைக்குற களி உருண்டையையும், கருவாட்டு குழம்பையும் ஓசி வாங்கி சாப்பிடலாம். ஒத்துக்கோ அத்தை.’’ என்று கெஞ்சி அவரை ஒருவழியாய் ஒப்பு கொள்ள வைத்தாள்.

திருமணதிற்கு பூ வைக்க ஊரையே இவர்கள் அழைத்துவிட்ட ஒரு நாளுக்கு முன்பு தான் சுந்தருக்கு அவனின் திருமண விடயம் தெரிவிக்கப்பட்டது. அவன் அரக்க பறக்க வந்து, ‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’ என்று சொல்வதற்குள் எல்லாம் கை மீறிப் போயிருந்தது.

தன்னை வளர்ந்துவிட்ட மாமன் ஊரார் முன்னிலையில் அவமானப்படக் கூடாது என்று முடிவெடுத்த சுந்தர் திருமணதிற்கு ஒப்புக் கொண்டான். கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம், ‘உனக்கு இது கூட தெரியாதா…?’ என கேட்டு ஏளனமாக பார்த்த முகபாவத்தை தாங்கி சுந்தர் மணமேடையில் அமர்ந்திருக்க, மல்லி மனதிற்குள் சற்று அரண்டு தான் போனாள்.

அன்று மட்டுமல்ல, அதை தொடர்ந்து வந்த நாட்களிலும் அது தான் தொடர் கதை ஆனது. அவளின் விரல்களை பிடித்து கொண்டு, கண் பார்த்து அவன் கொஞ்சி பேசியது கிடையாது. புதிதாய் திருமணமானவர்கள் பகிர்ந்து கொள்ளும் எந்த அந்தரங்க சீண்டலும் கிடையாது.

சொல்லப் போனால் மல்லி விழித்திருக்கும் நேரத்தில் சுந்தர் அவளை நெருங்கியதே கிடையாது. அவன் நன்றாக அசந்து உறங்கும் நேரத்தில் தான் சுந்தர் அவளை நெருங்குவான். இருவரின் சங்கமத்தில் ஒருநாளும் மல்லி கணவனின் முகத்தை ஒளியில் கண்டது கிடையாது.

என்னதான் ஆழ்ந்த உறக்கம் என்றாலும் விடிய விடிய அவன் அணைத்து படுத்திருந்தான் என்பதை அவள் மீது வீசும் அவன் வாசம் அவளுக்கு காட்டிக் கொடுத்துவிடும். ஏன் இப்படி என்று உள்ளுக்குள் கழிவிரக்கம் தோன்றினாலும், ‘ஒரு வேளை இந்திய கணவன் மனைவியின் தாம்பத்யம் இப்படித்தான் இருக்கும் போல’ என்று தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.

என்னதான் முகம் பார்த்து பேசமாட்டான் என்றாலும், மல்லியின் தேவைகளை அவள் கேட்காமலேயே தீர்ந்து வைப்பான். மனைவியின் அணையாடை முதல் சரியாக வாங்கி வந்து வைத்து விடுவான்.

மாதத்தின் அந்த மூன்று நாட்கள் அவள் வயிற்று வலியோடு சுருண்டு படுத்திருக்கும் போதெல்லாம், அவள் அருந்த வெது வெதுப்பான வெந்தய நீர் எப்போதும் அருகிருக்கும்படி பார்த்துக் கொள்வான்.

மிதிவண்டியை கூட ஒழுங்காக செலுத்த தெரியாமல் இருந்தவளை, அவள் தம்பியின் துணையுடன் இருசக்கர வாகனம் இயக்கும் அளவிற்கு பழக்கினான். இரவு நேரப் பணி முடித்து வந்தால், வீட்டில் அரவமின்றி பார்த்து கொள்வான்.

மல்லி முதல் பிரசவத்தில் இரு குழந்தைகளை பெற்றெடுக்கும் போது, பிரசவ அறையின் வாயிலில் அவன் அழுது கொண்டிருந்தான் என அவளின் இளைய தம்பி சீனிவாசன், ஒருமுறை அவளிடம் தெரிவித்து இருந்தான்.

அவன் என்னதான் முகம் முறித்து போனாலும், பெரிதான சண்டைகள் ஏதுமன்றி சராசரி இந்திய தம்பதிகளாய் அவர்கள் வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் என்றைக்கு மல்லி அவனிடம் கலந்து பேசாமல், அவன் மகவை கரு தாங்கினாளோ அன்றையிலிருந்து அவள் மண வாழ்வு மேலும் சிக்கலானது.

அதுவரை குடும்ப தேவைகளுக்காகவும், மற்றவர்கள் முன்னிலையிலும் அவளிடம் சாதாரணமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் அந்த பேச்சு வார்த்தையையும் முற்றிலும் நிறுத்தினான். அன்றைக்கு அவளை விட்டு வெளியே கூடத்தில் உறங்கியவன், அதற்கு அடுத்த நாள் தான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்து நின்றான்.

மல்லி அவனை வலியோடு பார்க்க, “இந்த குழந்தையும் பொண்ணாவே பொறக்கட்டும்.’’ என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். மல்லி ஊரிலிருந்த அத்தனை கோவில்களிலும் வேண்டுதல் வைத்தாள். தனக்கு துணையாக பாரியையும் சேர்த்து கொண்டாள்.

இந்த முறை ஆண்குழந்தை பிறந்தால் நல்லது தானே என்று வெள்ளந்தியாக யோசித்த பாரியும் மருமகளுடன் இணைந்து கொண்டார். வழக்கமான தன் ஏளனப் பார்வையை சுமந்து சுந்தர் அவர்களை பார்த்திருந்தான்.

ஒரு வாரத்திற்கு மேல் அவளை தவிர்க்க முடியாது, மீண்டும் இருளில் இல்லறம் நடத்த மனையாளை தேடினான். அவன் மீது வருத்தமிருந்த போதும், மல்லி அவனுக்கு இசைத்து கொடுத்தாள்.

எப்போதும் அவளிடம் தான் தோற்றுப் போவதாக உணர்ந்தவன், வெளிச்சத்தில் இன்னும் இன்னும் அவளிடம் ஒதுங்கிப் போனான். இவன் ஒதுக்க ஒதுக்க மல்லி, பாரி மற்றும் தன் குழந்தைகளுடன் ஒன்றிப் போனாள்.

“அம்மா சூ சூ….’’ தன் காலின் அருகே ஒலித்த மகனின் குரலில் மல்லி நடப்பிற்கு திரும்பினாள். மதியம் நன்றாக உறங்கி எழுந்திருந்ததால், தற்சமயம் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். பாரிக்கு வயதாகும் காரணத்தினால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அதனால் தற்சமயம் மேல் வேலைகளை மல்லி தான் பார்த்து வந்தாள். பூரணனின் பின்னாலேயே வந்த பாரி, “நீ வர வரைக்கும் ஆச்சி ஆச்சின்னு காலை சுத்தி வர வேண்டியது. உன்னை கண்டா மொத்தமா என்னை மறந்துற வேண்டியது.’’ என்று செல்லமாக அலுத்துக் கொண்டார்.

கடைசி பாத்திரத்தை கழுவி முடித்தவள், அதை மேடையில் கவிழ்த்து விட்டு, “அவன் அம்மா பையன். அப்படித் தான் இருப்பான்.’’ என்று சொல்லியபடி நீ வாடா ஜுகுனு நாம சூச்சூ போலாம்.’’ என்று மகனை கொல்லைப்புறமிருந்த கழிவறைக்கு அழைத்து சென்று வந்தாள்.

மகள்கள் இவளிடம் வாய் பேசியபடியே இரவு உணவினை முடிக்க, மகனுக்கும் ஊட்டி முடித்தவள், மீண்டும் சமையல் அறையை ஒதுங்க வைத்தாள். சுந்தர் தனக்கான உணவை தானே  எடுத்து வைத்துக் கொண்டு உண்டான்.

மல்லி தங்கள் படுக்கை அறைக்குள் நுழையும் போது மகள்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கால் போட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். மகனை மடியில் போட்டு பால் கொடுக்க அவனும் உறக்கத்தை தழுவினான். அவனையும் படுக்கையில் விட்டு, அவர்களுக்கு அணைவாக தலையணையை கொடுத்தவள், பாய் விரித்து கீழே படுத்தாள்.

அப்போது தான் உள்ளே வந்த சுந்தர் தன் மடிக்கணினியை பிரித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தான். நாள் முழுக்க ஓய்வற்ற வேலை அவளை அலுப்பில் தள்ள, மல்லி படுத்த சில மணித் துளிகளில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவினாள்.

அவள் நன்றாக உறங்கிவிட்டாள் என்பதை அவள் உடல் மொழியில் அறிந்து கொண்ட சுந்தர், சத்தமின்றி தன் மடிக் கணினியை அணைத்து விட்டு அவள் அருகில் வந்து படுத்தான். அவன் கண்கள் தற்சமயம் எல்லையற்ற காதலுடன் மனையாளை ரசித்தது.

அவள் மேலிருந்து வீசிய பால் மணத்தை நன்றாக மூச்சுவிட்டு நாசியில் ஏற்றியவன், காற்றில் ஆடிய கார் குழலை வாஞ்சையாய் காதோரம் ஒதுக்கிவிட்டான். அவன் அப்படியே தன் கரத்தை அவள் கன்னத்திற்கு இடம் பெயர்க்க, மல்லி லேசாக சிணுங்கி மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தாள்.

“கும்பகர்ணி’’ என்று செல்லமாக அவளை வைதவன் லேசாக எக்கி கூர்மையாயிருந்த அவள் மூக்கில் தன் முதல் முத்தத்தை பதித்தான். இதற்கு மேல் முடியாது என்று உணர்ந்தவன், எழுந்து மின்விளக்கை அணைத்து விட்டு, விடி விளக்கை ஒளிர விட்டான்.

ஒரு வெப்ப பெருமூச்சோடு அவள் அருகில் சரிந்தவன் மனையாளை பின் பக்கமிருந்து முற்றாக தன்னுடன் சேர்த்தணைத்தான். இப்போது அவள் இன்னும் நெருங்கியிருக்க, அவள் கழுத்தோரம் வாசம் பிடித்தான்.

“உன்னோட இந்த வாசம் இல்லாம நேத்து முழுக்க நான் தூங்கவே இல்லடி அச்சுமா…!’’ என்று தாபத்துடன் அவள் காதோரம் கதை பேசினான். ஆழ்நிலை உறக்கத்திலிருந்தவளோ, “ம்…” என்று தூக்க கலக்கத்தில் முணகினாள்.

அடுத்த சில நிமிடங்களில் சுந்தர், அவளை கலைத்து கலந்தான். அச்சமயம் லேசாக விழித்த மல்லி, அவன் தன் மீதிருந்த ஆதிக்கத்தை தளர்த்திய அடுத்த நொடி மீண்டும் உறக்கத்தை தழுவியிருந்தாள்.

அவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டவன், அவள் முன் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “லவ் யூ அச்சுமா…’’ என்றான் உணர்ச்சிகள் நிரம்பிய கரகரத்த குரலில்.

ரேணு, சங்கரி, மதி மூவரும் கூட தன் துணையுடன் துயின்று கொண்டிருக்க, நள்ளிரவு நேரத்தில் கெட்ட கனவு கண்டு அலறி விழித்தாள் மகிழ். “சாய் அப்பா…’’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள், அருகிருந்த நீரை எடுத்து அருந்திவிட்டு மீண்டும் உறங்க முயன்றாள்.

அவள் விழிகள் ஏதுமற்ற வெளியை வெறித்து கொண்டிருந்தது. அந்த வெளியும் அப்போது அவள் வாழ்வை போல இருண்டு கிடந்தது.

பந்தமாகும்.

Advertisement