Advertisement

சுந்தரும், மல்லியும் அந்த கட்டிலின் கீழ் பாய் போட்டு படுத்துக் கொள்வர். சிறு வயதிலேயே அவர்கள் புட்டிப்பாலுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட, பாதி நாட்கள் பாரிஜாதத்தோடு கூடத்தில் படுத்துக் கொள்வர்.

சுந்தரி, மல்லியின் மண வாழ்வு பரஸ்பர நேசத்தில் தொடங்கிய ஒன்றல்ல. மல்லிக்கு அவள் தந்தை வரன் தேட தொடங்கிய போது, அரசுப் பணியில் அப்போது தான் இணைந்திருந்தாள். ஆக அவர்கள் சொந்த பந்தம், மற்றும் பக்கத்து கிராமத்திலிருந்து எல்லாம் வசதியான இடத்திலிருந்து பெண் கேட்டு வந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்த சீர்வரிசியை செய்ய முடியாத நிலையில் மல்லியின் தந்தை கோதண்டன் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது சுந்தர் தன் ஆராய்ச்சி கல்வியின் இரண்டாம் வருடத்தில் இருந்தான்.

கோதண்டனின் ஆருயிர் நண்பர் சுப்ரமணி. கட்டிடம் கட்டும் பணியில் மேஸ்திரியாக இருந்தவர். இளம் வயதிலேயே அவரின் அக்கா மகள் பாரிஜாதத்தை அவருக்கு திருமணம் செய்வித்து இருந்தனர்.

கோதண்டன் மற்றும் சுப்பிரமணி இருவரின் இல்லங்களும் அருகருகே இருந்தது. சுப்பிரமணி மற்றும் பாரிஜாதம் இவர்களின் ஒற்றைப் புத்திரன் தான் சுந்தர். சுப்பிரமணி தன் தொழிலில் நன்றாக தான் பொருள் ஈட்டினார். அதோடு எவ்வித கெட்டப் பழக்கங்களும் அண்டாத நல்ல மனிதர்.

தான் சம்பாரித்த செல்வத்தை தனக்கென மட்டும் சேமித்து இருந்தால் நிறைய சொத்து பத்துகளை சேர்ந்து இருந்திருப்பார். ஆனால் அவரின் இளைய சகோதரியின் திருமணம், அதற்கும் கீழ் படித்துக் கொண்டிருந்த இரு தம்பிகளின் கல்வி செலவு என அனைத்தையும் தானே பொறுப்பேற்று நடத்தி முடித்தவர்.

ஆக சேமிப்பு ஏதுமின்றி சொந்த வீட்டை மட்டும் தனக்கென கட்டி முடித்திருந்தார். அப்போதெல்லாம் மல்லியின் குடும்பம் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான சூழலில் இருந்தனர். அவர்களுக்கு சொந்தமாக நிலபுலன் இருந்தும், விவசாயத்தில் பெரிதாக வருமானமின்றி எப்போதும் பற்றாக்குறை இருந்தது அவர்கள் வீட்டில்.

அதோடு அப்போது நான்கு பக்கம் சுவர் எழுப்பிய ஒற்றை  ஓட்டு வீட்டில் தான் குடியிருந்தனர். அந்த நேரத்தில் எல்லாம் சுப்பிரமணி தான் நண்பனுக்கு பொருளாதார ரீதியில் தோள் கொடுத்து நிற்பார்.

தோழனிடம் சொற்ப பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களின் ஒட்டு வீட்டை இரண்டு அடுக்கு கொண்ட காரை வீடாக மாற்றிக் கொடுத்தவர் சுப்பிரமணி. அந்த நன்றி எப்போதும் கோதண்டனுக்கும் அவர் மனைவி சீதைக்கும் உண்டு.

இப்படி வாழ்வு வழமையாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ஓர் நாள் சுப்பிரமணி பணி செய்த இடத்தில் அதிக உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தார். அண்ணன் உயிரோடு இருந்தவரை அவரை அண்டிப் பிழைத்த உடன் பிறப்புகள், காரியத்தோடு தங்கள் கடமையை கை கழுவி நழுவிக் கொண்டனர்.

அப்போது சுந்தர் எட்டாம் வகுப்பில் இருந்தான். அழவும் திராணியற்று பாரிஜாதம் நிலை குலைந்து இருக்க, கோதண்டம் தன் நண்பனின் குடும்பத்தை காக்க முன் வந்தார். தான் வைத்திருந்த நான்கு பால் மாடுகளில் இரண்டை பாரிஜாதத்திடம் கொடுத்தவர், ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் முன் பணம் ஏதுமின்றி குத்தகைக்கு கொடுத்தார்.

அது வரை தாய் தந்தைக்கு இளவரசனாய் இருந்த மகன், சூழலின் நிதர்சனம் புரிந்து வேலையையும் படிப்பையும் தன் வாழ்வில் நிலை நிறுத்த கற்றுக் கொண்டான். பாரிஜாதம் காலை மாலை பால் கறந்து விற்க, சுந்தர் மாலை பள்ளி முடிந்து வந்து, தாயுடன் சேர்ந்து விவசாய வேலைகள் பார்த்தான்.

முதல் ஆண்டு மறுத்தாலும், அடுத்த ஆண்டு முதல் கோதண்டனிடம் குத்தகை பணத்தை தவறாமல் ஒப்படைப்பார் பாரிஜாதம். அப்போது மல்லிக்கு ஐந்து வயது தானிருக்கும். சீதை அப்போது இரண்டாம் குழந்தையை கருவில் தாங்கியிருக்க, பாரிஜாதம் மல்லியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று வைத்து கொள்வார்.

மல்லி வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் பாரிஜாததின் வீட்டில் தான் தூங்குவாள். அத்தையின் கை பக்குவமும் அதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. பெண் குழந்தை ஏக்கத்திலிருந்த பாரி மல்லியை கொண்டாடி வைத்து கொண்டாள்.

அவளுக்கென தோட்டத்தில் மல்லிச்செடி முதல் கனகாம்பரம், பன்னீர் ரோஜா என்று வித விதமான பூச்செடிகளை வளர்த்தாள். மல்லி பள்ளி சென்று திரும்பும் போதே, அவளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து வாசலில் அவளுக்காய் ஆவலோடு காத்திருப்பாள்.

பாரி மல்லியை கவனித்து கொள்ள, கோதண்டன் நண்பனின் மகன் தந்தையிலாத ஏக்கத்திற்கு ஆட்பட்டு விடக் கூடாது என்று, அவன் உபயோகிக்கும் உடை முதல், படிக்க தேவைப்படும் புத்தகங்கள், பேனா, அதோடு காலணி மிதிவண்டி என்று அனைத்திலும் உயர்தரமானவற்றை தேடிப் பிடித்து வாங்கி வந்து தருவார்.

பாரிஜாதம் எத்தனை மறுத்தாலும், “என் சுப்பு பையனுக்கு நான் செய்றேன். நீ சும்மா இரு. அவன் எனக்கு கட்டிக் கொடுத்த வீட்டுக்கு ஆயுசு முழுக்க நான் அவனுக்கு வட்டி கூட கட்டியிருக்க முடியாது தெரியுமா உனக்கு…?’’ என்று கேட்டு அவர் வாயை அடைத்து விடுவார்.

ஒரே வீட்டில் தங்கினாலும் சிறு வயதிலிருந்தே மல்லிக்கும், சுந்தருக்கும் பெரிதாக பேச்சு வார்த்தை இருந்தது இல்லை. அதோடு சுந்தர் தலைக்கனம் பிடித்தவன் என்ற எண்ணம் மல்லிக்குள் வேரூன்றி போயிருந்தது.

அவன் எப்போதும் மல்லியை கண் கொண்டு பார்த்து பேசியது கிடையாது. பாடத்தில் ஏதேனும் சந்தேகம் என்று கேட்டு போய் நின்றால் கூட, “கிளாஸ்ல பாடம் சொல்லிக் கொடுக்கும் போது எங்க பராக்கு பார்த்துட்டு இருந்த…?’’ என்று அதட்டுவான்.

ஆக அடுத்த முறை மல்லி அவனை தேடி போகவே மாட்டாள். மல்லி வளர்ந்து பருவம் எய்திய பிறகு, பாரிஜாததின் வீட்டில் மல்லி தங்க தடை விதிக்கப்பட்டது. அந்த கோபத்தில் பல நாட்கள் மல்லி இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு உறங்க மட்டுமே வருவாள்.

இப்படி இவர்களின் உறவு நிலை இருக்க, கோதண்டம் மகளின் திருமணத்திற்கு வரன் தேடும் போது, இவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து வரன் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த பாரிஜாதம், “எம் புருசனும் நாலு காடு கரையின்னு சேர்த்து வச்சிட்டு போயிருந்தா மல்லியை நானே என் மகனுக்கு கேட்டு முடிச்சிருப்பேன். ஹும்… அந்த கூறு கெட்ட மனுஷன் எல்லாத்தையும் வாரிக் கொடுத்துட்டு வெறுங்கையா இல்ல போனாரு.’’ என்று அங்கலாய்த்து கொண்டிருந்தார்.

பல பெரிய இடங்களில், அவர்கள் கேட்கும் சீர் வரிசைக்கு பதில் சொல்ல முடியாமல் தந்தை தடுமாறுவதை கண்டிருந்த மல்லி, அன்றைக்கு இரவு தந்தையிடம், “என்னை பாரி அத்தை மகனுக்கே கட்டி வச்சிருங்க அப்பா. அத்தை என்னை தவிர எதையும் சீரா கேக்காது.’’ என்று தயக்கத்தோடு சொல்லிவிட்டாள்.

கட்டு கட்டாக செலவழிக்க கையில் பணம் தான் இல்லையே ஒழிய, கோதண்டனுக்கு ஏக்கர் கணக்கில் நிலபுலன்கள் உண்டு. தற்சமயம் முப்பது கறவை மாடுகள் கொண்ட பண்ணையை கூட வைத்திருந்தார்.

மகளின் எண்ணத்தை அவர் தன் மனையாளிடம் பகிர, “ரெண்டு ஏக்கர் நிலத்தை வித்தாச்சும் என் மகளுக்கு நல்ல இடத்துல சம்மந்தம் பாருங்க. நமக்கு வீடு கட்டிக் கொடுத்த கடனுக்கு இத்தனை நாள் நிலத்தை ஒத்தி கொடுத்து கடனை கழிச்சாச்சு. அதுவும் உங்க மனசுக்கு திருப்தியா இல்லைனா அந்த நிலத்தை அந்த பயலுக்கு கூட எழுதிக் கொடுத்துடுங்க. ஆனா என் மகளை எல்லாம் கட்டிக் கொடுக்க முடியாது. அவங்ககிட்ட என்ன சொத்து இருக்கு. எழுநூறு சதுரடியில ஒரு மச்சு வீடு. நம்ம ஊர்ல சின்ன குடியானவன் கூட நாலு ஏக்கர் நிலம் வச்சி இருக்கான். அந்த பய கொஞ்சம் மண்டை கனம் பிடிச்சவன் வேற. ஒன்பது வயசு வித்யாசம் வேற வருது. பாரியோட புளிச்ச கீரை மசியலுக்கும், கத்திரிக்கா வறுவலுக்கும் உங்க மக வாழ்கையை அடமானம் வைக்கப் பாக்குறா… இதுக்கெல்லாம் நான் ஒருநாளும் ஒத்துக்க மாட்டேன்.’’ என்று ஆடி தீர்த்துவிட்டார்.

அப்போதைக்கு மகளிடம் வாயை விடாதவர், மீண்டும் மணமகன் வேட்டையை தொடங்கினார். ஆனால் அடுத்த வாராதில் மல்லி டெங்கு ஜுரம் வந்து படுத்து விட, பாரி தன் கறவை மாடுகளை விட்டு விட்டு வந்து மருத்துவமனையில் உடனிருந்து பார்த்துக் கொண்டார்.

அந்த சமயம் அவளுக்கு இரத்த தட்டுகள் குறைந்து, இரத்த தட்டுகள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, ஒரே இரத்த பிரிவை கொண்டவர் குருதி தானம் செய்ய வேண்டும் என்று மருத்துவமனையில் கூறினர்.

Advertisement