Advertisement

ஈர மணலில் கால்களை இழுத்து கொண்டு நடந்து வந்தது, மூவரின் ஆற்றலையும் உறிஞ்சி இருந்தது. ஏதேனும் பேசினால் இன்னும் கொஞ்சம் பெரிதாய் கிடைக்கும் என்ற பயத்தில் மல்லி தன் உடையில் உள்ள மண் துகள்களை தட்டி விடுபவள் போல குனிந்து கொண்டாள். 

‘ஆத்தி இதுக்கு பேர் தான் நாசூக்கா நழுவுறதா…! ஐயோ அடுத்து அவ நேரா என் பக்கம் தானே பார்ப்பா. எதுக்கும் நாமளும் ட்ரஸ்ல இருக்க மண்ணை தட்டற மாதிரியே ஆக்ட் கொடுப்போம்.’ என எண்ணிக் கொண்ட மகிழ், தானும் மல்லியைப் போல தன் உடையில் ஒட்டியிருந்த மண் துகள்களை தட்ட துவங்கினாள். 

அதற்கும் மதி ஏதோ சொல்ல வரும் முன் அவள் அலைபேசி ராகம் இசைத்து அவளை அழைத்தது. ‘யப்பா… தப்பிச்சோம்.’ என்று மற்ற இருவரும் மனதிற்குள் விடுபட்ட பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டனர்.  

அழைப்பை ஏற்று பேசிய மதி, “வந்தாச்சா…? நாங்க இன்னும் ஒரு இருபது நிமிசத்துல அங்க இருப்போம். நீ கேன்டீன் கிட்டவே இரு. நாங்க வந்துடுறோம்.’’ என்றவள் அலைபேசியை அணைத்ததும், முன்பை விட இருமடங்கு உஷ்ணத்துடன் இருவரையும் முறைத்தாள். 

“பக்கிங்களா…. பக்கிங்களா…! நமக்கு பின்னாடி கிளம்பின ரெண்டும் ஓமந்தூரார் வந்து உக்காந்து இருக்கு. உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு.’’ என ஆரம்பித்தவள் அதற்கு பின் கூட்டமான பேருந்தில் நசுங்கிக் கொண்டே ஓமந்தூரார் மருத்துவமனை வந்து சேரும் வரை இருவரின் காதுகளையும் தீய்த்து எடுத்துவிட்டாள். 

“ஓமந்தூரார் இறங்குங்க.’’ என நடத்துனர் குரல் கொடுக்க, ‘அப்பாடி வந்தாச்சா…!’ என இருவரும் துள்ளி குதித்து இறங்கினர். மூவரும் ரேணு மற்றும் சங்கரி இருவரும் காத்திருந்த உணவகத்தை தேடி நடந்தனர். 

மல்லிக்கு அந்த இருவர் குறித்தும் எந்த அறிமுகமும் கிடையாது. தற்சமயம் பசித்த வயிறுக்கு நான்கு இட்லி கிடைத்தால் போதும், என்று சாம்பார் வாசத்தை மூக்கால் தேடியபடி முன் நடந்து கொண்டிருந்தாள் அவள். 

உணவ வாயிலில் காத்திருந்த ரேணு மூவரை கண்டதும் வரவேற்கும் விதமாய் புன்னகைத்தாள். அவளின் அருகில் இது தான் இவளின் வயது என கணிக்க முடியாத முக வனப்புடனும், விளம்பர நடிகை போன்ற ஒல்லி உடல் வாகுடனும் மற்றொருத்தி நின்றிருந்தாள். 

மதி, மற்றும் மகிழின் கரத்தை பற்றிக் கொண்ட ரேணு, “என்னடி குப்பைத் தொட்டியில விழுந்து வந்த மாதிரி இருக்கீங்க. ட்ரைன்ல தான வந்தீங்க. அப்புறம் ஏன் இப்படி சேலத்துல இருந்து நடந்து வந்த மாதிரி இருக்கீங்க…?’’ என்று கேட்டாள். 

அப்போது தான் செவியை தீய்க்கும் தன் பணியை தற்காலிகமாக நிறுத்தி இருந்த மதி, மீண்டும் மகிழ் மற்றும் மல்லியை நோக்கி தன் நெற்றிக் கண்ணை திறக்க முனைய, “எனக்கு பசிக்குது.’’ என்று சற்றே உரக்க சொல்லிவிட்டு, உணவதிற்குள் வேகமாய் நுழைந்தாள் மல்லி. 

“ஆமா எனக்கும் தான்.’’ என்று மகிழ் பின் தொடர, அந்த ஒல்லி பெல்லி, ‘ரெண்டும் எதுக்கு இப்படி பறக்குதுக.’ என இருவரையும் புரியாது பார்த்திருந்தாள். பின் வரும் காலத்தில் மதி என்ற திருநாமமும், காத்தடிக்கும் காதர்பாய் என்கின்ற காரணப் பெயரை கொண்டவளிடம் செக்கில் அகப்பட்ட எள்ளாய் சிக்கி சின்னா பின்னமாகப் போகிறோம் என்பதை அறியாமல். 

 

ஐவரும் உட்புறம் காலியாயிருந்த உணவு மேஜையை தேடி அமர்ந்தனர். மல்லி உள்ளே வரும் போது, இட்லியின் நினைவோடு தான் வந்தாள். ஆனால் அக்கம் பக்கத்திலிருந்து வந்து பூரி, உருளையின் மணம் அவள் முடிவை மாற்ற வைத்தது. 

சிப்பந்தி வந்து என்ன வேண்டும் என கேட்டதும், மல்லி முதல் ஆளாக, “ஒரு செட் பூரி…” என்றாள் வேகமாய். மதி தனக்கு மசால் தோசை வேண்டும் என சொல்ல, மற்ற மூவரும் இட்லியோடு தங்கள் விருப்பதை முடித்துக் கொண்டனர். 

தனக்கு வந்த இட்லியை சாம்பாரில் குளிப்பாட்டியபடி, “இவ தான் சங்கரி. என்னோட டிப்ளோமோ மெட். அண்ட் ரிலேடிவ்.’’ என்று ரேணு மற்ற மூவரிடமும் சங்கரியை அறிமுகப்படுத்தி வைத்தாள். 

“ஹாய்…!’’ மூவரும் உணவை வாய்க்குள் தள்ளியபடியே அவளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். மல்லியின் அருகில் தான் சங்கரி அமர்ந்திருந்தாள். மல்லி தனக்கு வந்த உப்பலாய் இருந்த பெரிய பூரியில் தன் ஆள்காட்டி விரலால் ஒரு ஓட்டை போட்டு அதில் பறந்த ஆவியை குழந்தைதனத்துடன் இரசித்துக் கொண்டிருந்தாள். 

அதே நேரம் தன்னுடைய இட்லியை பிட்டு நாசூக்காய் உண்டு கொண்டிருந்த சங்கரி, “ஹோட்டல் வந்தா பூரியெல்லாம் ஆர்டர் செய்ய கூடாது தெரியுமா…? இங்க கண்ட கண்ட எண்ணெய் யூஸ் பண்ணுவாங்க. அதோட ட்ராவல்ல இருக்கும் போது ஆயில் அயிட்டம் சாப்பிட்டா அது உடம்புக்கும் ஒத்துக்காது.’’ என்று தன் கலா காலட்சேபத்தை துவங்கினாள். 

‘ஐயோ… இப்ப தான் நான் என் பூரியில ஓட்டை போட்டேன். இவன் என் ஹார்ட்ல ஓட்டை போடுற மாதிரி அபசகுனமா பேசுறாளே.’ என்று வடிவேல் குரலில் மனதிற்குள் நொந்து கொண்டவள் சோகமாய் மதியின் பக்கம் பார்வையை திருப்பினாள். 

சங்கரி என்ன தான் மெல்லிய குரலில் பேசியிருந்தாலும் எதிர் இருக்கையில் இருந்த மதியின் செவிகளில் அது துல்லியமாக விழுந்திருந்தது. “எந்த எண்ணெய்ல சுட்டா என்ன. எல்லாம் நம்ம வயித்துக்குள்ள இருக்க என்சைம் பார்த்துக்கும். நீ சாப்புடுடா என் செல்ல குட்டி.’’ என்றவள் அவள் தட்டில் இருந்து பாதி பூரியை எடுத்துக் கொண்டு, தன் பங்காக கொஞ்சம் மசால் தோசையை வைத்தாள். 

‘அப்படி சொல்றி என் ராஜாச்தி…’ என்று மனதிற்குள் நன்றி ததும்ப மதியை பார்த்தவள், சங்கரியிடம் ஒரு கெத்தான ஓரப் பார்வையை செலுத்திவிட்டு ஆவலாய் பூரியை காலி செய்ய துவங்கினாள். 

மகிழும் தன் பங்கிற்கு, பாதி இட்டிலியை வைத்து விட்டு கொஞ்சம் பூரியை எடுத்துக் கொண்டாள். ரேணு கூட, தன் இட்லியை மதியிடம் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் மசால் தோசையை ருசித்தாள். ‘கொஞ்சம் அவசரப்பட்டு வாயை விட்டோமோ’ என சங்கரி நால்வரையும் பார்த்திருந்தாள்.

ஐவரும் உண்டு முடிந்ததும், கலந்தாய்வு நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தனர். “எனக்கு வேற சேலம் கிடைக்குமான்னு ஒரே கவலையா இருக்கு…?’’ என்று புலம்பியபடியே மல்லி நடந்து கொண்டிருந்தாள். 

“சும்மா நெகடிவா பேசாத. அதெல்லாம் கிடைக்கும். கிடைக்கும்னு பாசிடிவா முதல்ல நினை.’’ என்றாள் சங்கரி. என்னதான் பூரி விசயத்தில் இதயத்தில் ஓட்டை போட்டாலும், கல்லூரி இட விசயத்தில் நெஞ்சில் நீர் வார்த்ததை போல பேசிய அவளை கொஞ்சமே கொஞ்சம் மல்லிக்கு பிடிக்க தொடங்கியது. 

“ஆமா உங்க ரேங்க் என்ன…?’’ என்றாள் மல்லி கேள்வியாய். “38…’’ என்று பதில் கொடுத்தாள் சங்கரி. ‘என்ன விட ஆறு ரேங் பின்னாடி இருக்கா…. இவளே இவ்ளோ கெத்தா இருக்கும் போது மல்லி இனி நீ புலம்பக் கூடாதுடி.’ என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டவள், முகத்தில் புன்னகையை முழுமையாய் படரவிட்டபடி, “ரொம்ப தாங்க்ஸ்.’’ என்றாள். 

இப்போது அப்போது என அனைவரையும் காக்க வைத்த கலந்தாய்வு சரியாய் பதினோரு மணியளவில் துவங்கி, இரண்டு மணிக்கு முடிவடைந்தது. தோழிகள் ஐவருக்கும் அவர்கள் விரும்பியபடியே சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்திருந்தது. 

“ஹே… கலக்கிட்டோம். இனி நம்ம டீம் பேரு பைவ் ஸ்டார்ஸ். ஸ்வீட் எடு கொண்டாடு மூட் தான் இனி ரெண்டு வருசத்துக்கு.’’ என்று உற்சாகமாக தன் மனம் திறந்து கொண்டிருந்தாள் மகிழ். 

மற்ற தோழிகளும் மகிழ்வுடன் அவள் கூற்றை ஆமோதிக்க, “சிஸ்டர்…! எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி போய் எலிஜிபிள் சர்டிபிகேட் வாங்கிட்டு போகணுமாம். அப்ப தான் காலேஜ்ல அட்மிசனே போடுவாங்களாம்.’’ என்றார் அருகிருந்த பெண்ணொருத்தி. 

‘இது வேறயா…’ என்று ஐவருக்கும் சலிப்பாக இருந்தாலும், அந்த இடத்தை நோக்கி நடந்தனர். அங்கு அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதல்களையும் மற்ற நால்வரும் சமர்பிக்க, மல்லியிடம் மட்டும் அவர்கள் கேட்ட புதுப்பிக்கப்பட்ட பட்டய சான்றிதல் இல்லாதிருந்தது. 

“இது என்ன புது சர்டிபிகேட்.’’ என மல்லி குழப்பமாய் தோழிகளிடம் கேட்க, அவளின் அறியாமையை எண்ணி மற்ற நால்வரும் தலையில் கைவைத்துக் கொண்டனர். ஆக மற்ற நால்வருக்கும் அவர்கள் விண்ணப்பித்த தகுதிச் சான்றிதல் கிடைத்து விட, மல்லி மட்டும் தேங்கி நின்றாள். 

“எங்க போனாலும் எனக்கு மட்டும் புது புதுசா பிரச்சனை வந்து சேருது.’’ என்று சற்றே கலங்கிய குரலோடு அவள் சொல்ல மற்ற நால்வருக்கும் அவளின் வாட்டம் வருத்தத்தை அளித்தது. 

மகிழ் உடனே, “ஹே…! மல்ஸ்… பே செஞ்சா ரெண்டு மணி நேரத்துல எக்ஸாம் முடிச்சி தர எல்லாம் நம்மகிட்ட ஆளுங்க இருக்கு. நீ ஓகேன்னு சொன்னா நான் உடனே ஆளுங்களை உனக்கு ரெடி செஞ்சி தறேன்.’’ என்றாள் ஆறுதலாய். 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஆன்லைன்ல எப்படி எக்ஸாம் எழுதனும்னு மட்டும் சொல்லு…” என்றாள் வீராப்பாய் மல்லி. உடனே மகிழ் வழிமுறைகளை விளக்க, மல்லி அப்போதே தன் தேர்வுகளை எழுத துவங்கினாள். 

தகுதி சான்றிதழை பெற தான் மட்டும் மீண்டும் ஒரு முறை சென்னைக்கு பயணிக்க வேண்டும் என்ற எண்ணமே மல்லிக்கு பெரிய சோர்வை கொடுத்தது. வரும் போது குதூகலமாய் வந்தவள் சோர்ந்து திரும்புவதை கண்ட மகிழும், மதியும் வருத்தம் கொண்டனர். 

ஒருவழியாய் மற்ற நால்வரும் தங்கள் தகுதி சான்றிதழை பெற்றுக் கொள்ள, ஐவரும் சொந்த ஊர் நோக்கிய தங்கள் பயணத்தை தொடங்கினர். இரவில் சிறந்த உணவகம் ஒன்றில் உணவினை முடித்துக் கொண்டதும், சங்கரியும் ரேணுவும், பேருந்து நிலையம் நோக்கி கிளம்பினர். 

சங்கரி கிளம்பும் முன், “எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ. பீல் பண்ணாம ஊருக்கு போ. கடவுளுக்கு யாருக்கு எதை எப்ப கொடுக்கணும்னு தெரியும்.’’ என்றவள் மல்லியின் கரங்களை அழுத்தி விடை கொடுத்தாள். 

மேலும் ஒரு தண்ட செலவு என்று தன் அத்தையிடமும், கணவனிடமும் வசவு வாங்க வேண்டி வரும் என்றாலும், தன் வாட்டம் மற்ற தோழிகளை பாதிப்பதை உணர்ந்த மல்லி, தன் முகத்தை இயல்பாக வைக்க முனைந்தாள். 

மற்ற மூவரும் சொந்த ஊருக்கு செல்ல மத்திய ரயில் நிலையத்தை அடைந்தனர். காலையில் இருந்த உற்சாகம் மூவரிடமும் சற்றே வடிந்து, அயற்சி ஆட்கொண்டிருந்தது. சோகமான மல்லியின் முகத்தை கண்ட மதி, “மல்லி குட்டி…! நாம குல்பி சாப்பிடலாமா…?’’ என்று ரயில் நிலையத்தில் அமைந்திருந்த பனிக் கூழ் கடையை நோக்கி நடந்தாள்.

“ஐ…! எனக்கு பாதாம் குல்பி தான் வேணும்.’’ என்று சொல்லியபடி மல்லி வேகமாக அவள் பின்னால் நடந்தாள். அத்தனை நேரம் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த மல்லி, ‘குல்பி’ என்ற ஒற்றை வார்த்தையில் மேகம் கண்ட பயிராய் மகிழ்ச்சி கொண்டதை எண்ணி மகிழ் வியந்து போனாள். 

‘குழந்தை மனம் கொண்ட குமரி. கடவுளே எப்போதும் புண்படாத நாட்களை மட்டும் வாழ்கையில் இவளுக்கு கொடு.’ என்று உருகிப் போய் சந்தித்து ஓர் நாளே ஆன ஒருத்திக்காய் மகிழின் மனம் அவசர அவசரமாய் வேண்டுதலை வைத்தது. 

‘உன்னை விடவா அவள் ரணப்பட்டு விடப் போகிறாள்…?’ என்று அவள் அணிந்திருந்த கழுத்தணியின் மத்தியில் ஆலிலையில் குடி கொண்டிருந்த மாயக் கண்ணன் அவளிடம் கேள்வி எழுப்புவதை போல வேகமாய் ஊஞ்சல் ஆடி அவள் கவனம் கவர முயன்றார். 

கால வெளியின் மௌன குரல்கள் புரியாதவளோ,  “ஏய்…! எனக்கு பட்டர் ஸ்காட்ச் க்ரன்ச் கோன்.’’ என்றபடி தோழிகளை பின் தொடர்ந்து நடந்திருந்தாள். 

அதே நேரம் காலையில் மகிழ் உற்சாகமாய் கால் பதித்து விடை பெற்றிருந்த அதே கடற்கரையில் மனம் முழுக்க ரணம் தாங்கி நின்றிருந்தான் அவன். உனக்கான ஆறுதலை நான் அறிவேன் என்பதை போல, அவள் பாதம் நனைத்த நீர் துளிகள் கொண்டு அவனை ஆற்றுப்படுத்த முயன்று கொண்டிருந்தாள் கடல் அன்னை. 

பந்தமாகும்.    

Advertisement