Advertisement

பந்தம் – 2 

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் தலைநகரை அடைந்திருந்தார்கள். அங்கிருந்த பயணிகள் தங்கும் பெண்களுக்கான ஓய்வறையில் மூவரும் தங்கினர். நள்ளிரவிற்கு பின்பே சற்று உறங்க தொடங்கியிருந்தால் மல்லி தான் அரைகுறையாய் விட்ட தூக்கத்தை அந்த அறையிலும் தொடர்ந்தாள். 

அங்கிருந்த அழுக்கேறிய தலையணையோ, படுக்கை விரிப்போ, அவளின் உறக்கத்தை கொஞ்சமும் தடை செய்யவில்லை. மதி தன் அலைபேசியில் சீன நாடகம் ஒன்றை பார்த்திருக்க, மகிழ் செவிலிய உரிமத்தினை புதுப்பிப்பதற்கான தேர்வினை இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாள். 

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செவிலியர்கள் தங்கள் துறை சார்ந்த தேர்வினை எழுதி, தங்களின் பட்டய சான்றிதழின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பாவம் உறங்கிக் கொண்டிருந்த மல்லிக்கு அப்படி ஒரு விடயம் இருப்பதே மதியம் இரண்டு மணி வரை தெரியப்போவதில்லை. 

மதி ஏற்கனவே தன் ஓய்வு நேரத்தில் அந்த தேர்வினை முடித்து, தன் சான்றிதழை புதுப்பித்து வைத்திருந்தாள். ஆதவன் தன் கடமையாற்ற அதிகாலை அழகாக புலர்ந்தது. விடிய விடிய தேர்வினை எழுதி முடித்திருந்த மகிழ் அப்போது தான் சற்று கண்ணயர்ந்து இருந்தாள். 

குடும்ப உறுப்பினர்கள் யாருமின்றி தோழிகளுடன் முதன் முறையாக தலைநகரை சுற்றப் போகும் உத்வேகத்தில் மல்லி முதல் ஆளாக எழுந்தாள். அவள் காலைக் கடன் முடித்து, குளித்து வர, அவளை தொடர்ந்து மதி குளியலறை புகுந்தாள். 

மதி வந்து எழுப்ப, மகிழ் மனமின்றி எழுந்து குளித்து வந்தாள். உடலை தழுவிய குளிர்ந்த நீர், அவள் சோர்வை விரட்டியடிக்க, மகிழ் வெளியே வரும் போது, புத்துணர்ச்சியுடனே இருந்தாள். மூவரும் தயாராகி தங்கள் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வெளி வரும் போது, நேரம் காலை ஏழு மணியாகியிருந்தது. 

கைக் கடிகாரத்தில் நேரத்தை பார்த்து உதட்டை சுளித்த மல்லி, “நமக்கு மார்னிங் பத்து மணிக்கு தானே கவுன்சிலிங். பேசாம இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்.’’ என்று சலித்துக் கொண்டாள். 

அவள் தலையில் லேசாய் கொட்டிய மதி, “நாலு மணி நேரத்துக்கே ஆயிரத்து இருநூறு ரூவா பில்லை போட்டுட்டான். இன்னும் அரை மணி நேரம் அதிகமா இருந்து இருந்தா கூட இன்னும் ஒரு ஆயிரத்தி இருநூறு ரூபா தண்டம் அழுது இருக்கணும்.’’ என்றாள் கடுப்புடன். 

தலையை வலக் கரத்தால் நீவிக் கொண்ட மல்லி, “வாயில சொன்னா ஆகாதா. எதுக்கு கொட்டுற எரும. பீப்பா. தடிமாடு.’’ என்று மதியை வசை பாட துவங்கினாள். 

ரயில் நிலையத்தின் மத்தியில் நின்று கொண்டு அவர்கள் சிறுபிள்ளைகள் போல அடித்துக் கொள்வதை எண்ணி, மகிழ் மனதிற்குள்ளாக தலைக்கு மேல் கை வைத்து கொண்டாள். 

‘ஐயோ… இதுக ரெண்டையும் எப்படி நான் இன்னைக்கு முழுக்க சமாளிக்கப் போறேனோ தெரியலையே.’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டவள், “இது ரயில்வே ஸ்டேசன்.’’ என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள். 

“நாங்க மட்டும் என்ன ஹார்பர்னா சொன்னோம். எங்களுக்கு தெரியாதா. கூட்டமா ரயில் நின்னா அது ரயில்வே ஸ்டேசன்னு.’’  என்று மல்லி சொல்ல, “அதானே’’ என மதி சொல்ல இருவரும் ஹைபை கொடுத்துக் கொண்டார்கள். 

அதுவரை  பாலு கரடியும், புலு புலேசும் போல அடித்துக் கொண்டு இருந்தவர்கள், நொடிப் பொழுதில், நீமோவும், டோரியுமாக கட்டிக் கொள்ள மகிழ் தான் இடையில் நொந்து, இடியாப்பம் ஆனாள். 

‘இந்த சேலத்துகாரிங்க அட்டகாசம் தாங்க முடியலையே.’ என மீண்டும் மனதிற்குள் நொந்து கொண்டவள், “செம கலாய். சிரிச்சிட்டேன். ஹி…ஹி… போதுமா.  பொது இடத்துல இருக்கீங்கன்னு நியாபகப்படுத்த தான் அந்த வார்த்தையை சொன்னேன். தயவு செஞ்சி கொஞ்ச நேரம் அமைதியா வாங்க.’’ என்றவள் முன்னே நடக்க, ஒருவரை ஒருவர் பார்த்து உதட்டை சுளித்து கொண்ட மதியும் மல்லியும் அவளை பின் தொடர்ந்தனர். 

ரயில் நிலையத்தின் வெளியே, சென்னை மாநகர மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மகிழுந்து ஓட்டுனர்கள் இவர்களை நெருங்கி, “ஆட்டோ வேணுமா…?’’ என விசாரித்தனர். சாலையில் வாகனங்கள் விரையும் வேகத்தை வியந்து பார்த்தபடி, பின்னால் நடந்து கொண்டிருந்த மல்லி, கொஞ்சம் முன்னால் வந்து மகிழோடு கரம் கோர்த்து கொண்டாள். 

மூவரும் அந்த பரபரப்பான சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தனர். “இவ்ளோ சீக்கிரம் அங்க போய் என்ன செய்ய போறோம்…?’’ என  முகத்தை சுருக்கி கொண்டு மல்லி கேட்டாள். 

“நான் வேணா அங்க இருக்க கிரவுண்ட்ல நாலு கட்டம் போட்டு தறேன். நீ பாண்டி விளையாடு. நேரம் போயிரும். உடம்புல இருக்க கொழுப்பும் கொஞ்சம் குறையும்.’’ என்றாள் மதி. 

கண்களை உருட்டி, முகம் சிவக்க மல்லி அவளுக்கு பதில் கொடுக்க முனையும் போதே, ‘மறுபடியுமா…?’ என்று உள்ளுக்குள் அலறிய மகிழ், “பேசாம பீச் போலாமா. எப்படியும் இங்க இருந்து மெரீனா போக ஒரு பிப்டீன் மினிட்ஸ் தான ஆகும். கொஞ்ச நேரம் அங்க டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு கிளம்பினா சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…?’’ என இருவரிடமும் தன் யோசனையை முன் வைத்தாள். 

“ஐ….! பீச்சுக்கு போறோமா…? ப்ளீஸ் ப்ளீஸ்….! நாம போலாம். நான் மூணு முறை சென்னை வந்தும் நான் பீச் பார்த்ததே இல்ல. போலாம்பா…’’ என மல்லி உற்சாகத்தில் குதிக்கவே தொடங்கியிருந்தாள். 

அவள் கைப்பற்றி அழுத்தி அவளை தரையில் நிற்க வைத்த மதினா, “போறது சரி. நாம திரும்புற நேரம் பீக் அவர்சா இருக்கும். பஸ் கிடைக்கலைனா என்ன செய்றது…?’’ என்ற தன் கேள்வியை முன் வைத்தாள். 

நொடியில் வாடிய மல்லியின் முகத்தை கண்ட மகிழ், “பஸ் கிடைக்கலைனா ஆட்டோ பிடிச்சி வந்துடலாம். எப்படியும் நூத்தி ஐம்பதுக்கு மேல கேக்க மாட்டாங்க. மூணு பேர் ஷேர் செஞ்சா ஆளுக்கு அம்பது ரூபா தான் வரும். அங்க போய் வெட்ட வெளிய வெறிச்சி பாத்துட்டு உக்காந்து இருக்குறதுக்கு பேசாம பீச்சுக்கு போயிட்டு வரலாம் மதி.’’ என்றாள் அழுத்தமாய். 

இருவரும் உடன்பட்டு நிற்க, ‘சரி’ என்பதை மதி தானும் தலை அசைத்தாள். அரும்பாய் இருந்த மலரொன்று ஓர் நொடியில் மலராய் விரிந்ததை போல மல்லியின் முகம் பெரிதாய் மலர்ந்தது. 

“ஹே…! சூப்பர். நாம பீச்சுக்கு போறோம்.’’ என்று தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியவள், பேருந்தில் ஏறி கடற்கரையை அடையும் வரை அதே மலர்ந்த முகத்துடனிருந்தாள். மகிழும், மதியும் ஏற்கனவே கடற்கரைக்கு வந்திருகிறார்கள். 

இவள் அளவிற்கு அவர்களுக்கு பேரானந்தம் இல்லை என்றாலும், தோழிகளாய் சேர்ந்து கடல் ரசிக்க புறப்படுவது ஒரு மகிழ்வான மன நிலையையே கொடுத்திருந்தது. இவர்கள் கடற்கரை அடையும் போது நேரம் எட்டை நெருங்கியிருக்க, கடற்கரை அதிக கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது. 

மணலில் காலணி அணிந்து நடப்பது சிரமமாய் இருக்க, மூவரும் தங்கள் காலணிகளை கழற்றி கையில் வைத்து கொண்டு, லேசாய் சூடாயிருந்த மணலில் நடந்தார்கள். தொலைவில் கேட்ட, அலைகளின் ஆர்ப்பரிக்கும் ஓசையில் மூவரின் முகத்திலும் உற்சாகப் பேரலை பிறந்தது.  

கடலை நெருங்கியதும் மல்லி, அத்தனை பெரிய நீர் பரப்பை தன் இருவிழிகள் உள்வாங்குமா என்ற ஆச்சர்யத்துடன் அந்த கடல் பரப்பை பெரிதாய் விரிந்த விழிகளுடன் வியந்து ரசித்தாள். கடல் கடந்த குளிர் காற்று அவர்களின் கேசங்களோடு சடு குடு விளையாடியது. 

தன் தோள் பையை சற்றே ஓரமாய் இருந்த படகின் நிழலில் வைத்த மல்லி, அணிந்திருந்த சுரிதாரின் கால் உடையை சற்றே மேலே ஏற்றி விட்டு தன் பாத சுவட்டை முதன் முறையாக கடலில் பதித்தாள். 

தாயை பிரிந்த மழலை மீண்டும் ஆரவாரமாய் தாவி வந்து தன் அன்னையை அணைத்து கொள்வதை போல, அலைகள் அவள் காலை நனைப்பதும், சற்றே பின் வாங்குவதும், பின் மீண்டும் முன்பை விட வேகமாக முன்னோக்கி வந்து அவள் பாதங்களை நனைப்பதுமாய் அவளோடு விளையாட துவங்கின. 

மல்லியை முதலில் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த இருவரும், முகம் நிறைய புன்னகையோடு, “நீங்களும் வாங்க. கடல் தண்ணி சில்லுன்னு சூப்பரா இருக்கு. மண்ணு காலுக்கு கீழ கிச்சி கிச்சி மூட்டுது.’’ என்று அழைக்க, மற்ற இருவரும் மல்லி தன் தோள் பையை கழற்றி வைத்த அதே இடத்தில் தங்கள் பைகளை கழற்றி வைத்து விட்டு, அவளோடு இணைந்து கடலில் கால் நனைய நின்றனர். 

முதலில் கணுக்கால் நனையும் அளவிற்கு நின்றவர்கள், மல்லி மற்ற இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு, அலை பின்னோக்கி போகும் போதெல்லாம் அவள் அலையை துரத்தவும், அது முன்னோக்கி வரும் போது, இவள் பின்னோக்கி ஓடுவதும் என அலையோடு ஓட்டப் பந்தயம் நடந்த மற்ற இருவரும் கூட அவளோடு அந்த விளையாட்டில் கலந்து கொண்டனர். 

கடல் அலை என்ற கால வெளியில் அவர்கள் காலத்தை கடந்து தங்கள் பால்யத்தில் கால் பதித்து இருந்தார்கள். மூவரும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேரிளம் பெண்கள் என்ற எண்ணத்தை துறந்து பள்ளி சிறுமிகளாய் அந்த கடற்கரையில் குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

வாழ்க்கை என்ற நூல் அவர்களுக்கு ஆயிரம் சிக்கல் முடிச்சை போட்டு தான் வைத்திருந்தது. ஆனாலும் அந்த நொடியில் சிக்கல்கள் ஏதுமற்ற உயரப் பறக்கும் காற்றாடியின் நூலாய் அவர்களின் மனம் உற்சாக வானில் பறந்து கொண்டிருந்தது. 

தன்னிடம் விளையாடும் வளர்ந்த குழந்தைகளை கடல் அன்னை நுரைக் கண்கள் கொண்டு வாஞ்சையோடு பார்த்தாள். அவர்களின் மகிழ்வை நீடிக்க அலை கரம் கொண்டு அவர்களோடு தானும் குழந்தையாய் மாறி விளையாடினாள். 

பத்து நிமிடம் மட்டுமே என்ற நிமிடங்களின் ஒதுக்கீட்டில் ஆரம்பித்த விளையாட்டு அரை மணி நேரம் கடந்த பிறகே ஒரு முடிவிற்கு வந்தது. அதுவும் பெரிதாய் வந்த அலையொன்று மதினாவின் இடை தாண்டி மார்பு வரை வர, வேகமாய் பின் நகர்ந்தவள் காலின் கீழ் மண் சறுக்க, அவள் சற்றே தடுமாற,  தோழிகள் கரம் கொடுத்து சமநிலையை அடைய உதவினர். 

அப்போது தான் மூவரின் உடையும் இடைக்கு மேல் வரை நனைந்து இருப்பதை மதினா உணர்ந்தாள். “யா அல்லா…! டைம் ஆச்சு. கிளம்பலாம். ட்ரெஸ் எல்லாம் முக்காவாசி நனைஞ்சு போச்சு.’’ என்றவள் முதல் ஆளாக கரையை அடைந்தாள். 

மகிழும், மல்லியும் அவளை பின் தொடர்ந்தனர். மூவரும் உடைகளை நன்றாக பிழித்து விட்ட பின், ‘வெயில் பட்டா காஞ்சிரும்.’ என்று தங்களுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தனர். 

உலர்வாக இருக்கும் போது மணலில் நடப்பதற்கு இலகுவாக இருந்ததற்கும், தற்சமயம் சொட்ட சொட்ட நனைந்த உடையுடன் மணலில் கால் புதைய புதைய நடப்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உண்டான அளவிற்கு வேற்றுமை இருந்தது. 

அதோடு சிங்கார சென்னையின் சூரியன் தன் வேலையை காட்ட, வேர்த்து விறுவிறுத்தபடி மூவரும் தங்கள் தோள் பையை சுமந்தபடி நடந்தனர். ஈர உடையில் மண் துகள்கள் ஒட்டிக் கொள்ள, காற்றில் ஆடியதில் கூந்தல் கலைந்து நெகிழ்ந்திருக்க, உடல் முழுக்க வியர்வையில் குளிக்க ஆரம்பித்திருந்தது. 

மூவரும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவுடன், தன்னை குனிந்து முழுமையாய் ஒருமுறை பார்த்துக் கொண்ட மதினா, “எரும எரும….! நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல. இப்ப பாரு. மூணு பேரும் குப்பை தொட்டியில விழுந்து வச்ச மாதிரி இருக்கோம். கவுன்சிலிங் முடிச்சிட்டு அப்புறம் கூட இங்க வந்து இருந்து இருக்கலாம்.’’ என்று மூச்சு வாங்க பேசினாள். 

Advertisement