Advertisement

பந்தம் – 10 

குளிர் காற்று அவ்விடத்தை நிரப்பியிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை காதை சுற்றி அணிந்து கொண்ட மல்லி, மதி வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள். அவள் அருகே நின்று கொண்டிருந்த, ரேணுவும், சங்கரியும் பயணப் பொதிகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். 

மல்லிக்கு உள்ளே அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம், எந்த கணத்திலும் வெளியே வெடித்து விடுமோ என்ற நிலையில் இருந்தது. அந்த அழுத்தத்தை தன் மேல் முழுதாய் தாங்கியிருந்த மகிழோ அதை எள் அளவும் முகத்தில் காண்பிக்காமல் ஒரு உற்சாக புன்னகையை முகத்தில் ஏந்தியிருந்தாள். 

‘இவளால் எப்படி சதா சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது. இவள் வாழ்வில் நடந்த சம்பவத்தில் ஒற்றை சம்பவம் தன் வாழ்வில் நடந்திருந்தாலே உடைந்து போய் மூலையில் உட்கார்ந்திருப்போம்.’ என்ற எண்ணங்கள் மல்லியின் மனதில் வலம் வர, அவள் புன்னகைத்து கொண்டிருந்த மகிழை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்தாள். 

அதே நேரம் பின்னால் உருது மொழி கேட்க, மல்லி அனிச்சை செயலாய் தலையை திருப்பிப் பார்த்தாள். அங்கே மதியும் அவள் கணவரும் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் நால்வரும், அவரை கண்டதும் வரவேற்பாய் எழுந்து நிற்க, ஒற்றை தலைஅசைப்பில் அதை ஏற்று கொண்டவர், தொடர்ந்து உருதில் மதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 

கிளம்பும் முன் நால்வரிடமும் விடை பெறுவதாய் தலை அசைத்தவர், மதியிடம் உருதில் எதையோ சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அவர் அப்பால் செல்லவும், மதி, “ஷப்பா…’’ என்றவாறு அங்கிருந்த இருக்கையில் சாய்ந்தாள். 

“என்னடி பாசை இது. பிஷ் புஷ் தஸ் புஷ்னு சத்தம் மட்டும் தான் கேட்குது. நானும் நீங்க பேசுறதுல ஒரு வரியாச்சும் கேட்ச் பண்ணிடலாம்னு பார்த்தேன். ஒண்ணும் புரியல.’’ என்று விட்டு சங்கரி அவள் அருகில் அமர்ந்தாள். 

“ஆனா இதுவும் ஜாலி தான் இல்ல. பாசை தெரியாதவங்க சுத்தி இருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் ஜாலியா ரொமான்டிக்கா பேசிக்கலாம்.’’ என்றுவிட்டு ரேணு கண் அடிக்க, மற்ற நால்வரும் தலையில் அடித்து கொண்டனர். 

மகிழ் மட்டும் வாய் விட்டு சிரித்தவள், “உனக்கு குப்பிட்னு பேர் வச்சது சரியா தான் போச்சு போ. எப்ப பாரு ஹார்டீனை பறக்க விடுறதுலையே குறியா இருக்க பாத்தீயா. அங்க நிக்குற நீ.’’ என்றாள். 

“உண்மைய தானே சொன்னேன்.’’ என்று உதட்டை சுருக்கி கொண்டவள், தன் அலைபேசியை நோண்ட துவங்க, “ஆமா பொல்லாத உண்மை.’’ என்று அவளுக்கு பதில் கொடுத்த சங்கரி, “ஆமா வீட்ல என்ன கதை சொல்லிட்டு வந்த..?’’ என  மதியிடம் கேட்டாள். 

“எங்க வீட்ல பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டூர் போறேன்னு சொன்னா… போயிட்டு வா பேட்டின்னு கை காட்டி அனுப்பி வைப்பாங்கன்னு நினைச்சியா…? டூருக்கு போறியான்னு கேட்டு என் போட்டிய எடுத்துருவாங்க. அதுவும் என் சின்ன மக… நான் இல்லமா எங்க போற நீன்னு என்னை துவச்சி காய வச்சி இஸ்திரி போட்ருவா. இவங்களை எல்லாம் விட என் அப்பா…நானும் துணைக்கு வறேன்.  நம்ம கார்லயே போயிடலாம். நானே ட்ரைவ் செய்றேன்னு சொல்லி உலகம் சுற்றும் வாலிபர் மாதிரி கிளம்பி நின்னுடுவார். இதெல்லாம் தேவையா எனக்கு.’’ என்றாள் ஆயாசமாய். 

“அப்புறம் வீட்ல என்னதான்டி சொல்லிட்டு வந்த…?’’ என்றாள் மகிழ் ஆர்வமாய். அதுவரை ஓரமாய் நின்று அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த ரேணு கூட மதியின் அருகில் வந்துவிட்டிருந்தாள். 

“வேற என்ன சொல்ல முடியும். பொய் தான் சொல்லிட்டு வந்தேன். நம்ம காலேஜ்ல நம்மளை கோயம்பத்தூர்ல இருக்க அசைலம் விசிட் கூட்டிட்டு போறதாகவும், அங்க விசிட் போயிட்டு வந்தா தான் இன்டர்னல்ல ஐஞ்சி மார்க் ஆட் ஆகும்னு கதை விட்டுட்டு கிளம்பி வந்து இருக்கேன்.’’ என்றாள் தலையில் இருந்த முக்காட்டை சரி செய்தபடி. 

அதுவரை ஏதோ அழுத்தத்தில் அமிழ்ந்திருந்த மல்லி கூட, “அடிப்பாவி…! அஞ்சி மார்க் அசைலம்னு கப்சா விட்டுட்டு வந்துட்டியா. ஆனாலும் உன் மூளை வேற லெவல். ஹா… ஹா… இனி உனக்கு புது பட்ட பேர் ரெடி. அஞ்சி மார்க் அசைலம்… ஹா ஹா.’’ என்றுவிட்டு மல்லி பெரிதாய் சிரிக்க துவங்க, மற்றவர்களும் அவளோடு சேர்ந்து நகைத்தனர். 

“உங்களுக்காக பொய் சொல்லிட்டு கிளம்பி வந்தேன் பாருங்க என்னை சொல்லணும். போங்கடி ப்ரோகிராம் கேன்சல்னு வீட்ல சொல்லிடுறேன். நான் இப்பவே வீட்டுக்கு கிளம்புறேன்.’’ என்று மதி பொருமினாள். 

அவளின் கோபத்தை கண்டதும் தன் சிரிப்பை நிறுத்திய மகிழ், “டேய் டார்லிங். நீ இல்லைனா அது எப்படி டூரா இருக்கும். எங்களுக்கு எல்லாம் ரொம்ப போரா மட்டும் தான் இருக்கும். சும்மா ஜாலிக்கு தானே மல்லி கலாய்ச்சா. இதுக்கெல்லாம் ஏன் டென்சன் ஆகுற.’’ என்று அவளை கொதி நிலையிலிருந்து உறை நிலைக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தாள் மகிழ். 

இவளின் முயற்சியை கொஞ்சமும் மதிக்காமல் மல்லி, “சரி இங்க வரும் போது நீயும் உன் வீட்டுக்காரரும் உருதுல ஆத்து ஆத்துன்னு சொற்பொழிவு ஆத்துனீங்களே அப்படி என்ன பேசிக்கிட்டீங்க ரெண்டு பேரும்.’’ என்றாள் புருவத்தை உயர்த்தி சந்தேகமாய் அவளை பார்த்தபடி. 

‘இவளுக மறுபடி ஆரம்பிச்சிட்டாளுகளா’ என்று மகிழ் மானசீகமாய் தலையில் கை வைக்க, ‘ஐ…மதிக்கும் மல்லிக்கும் சண்ட… இனி ஊரே வேடிக்கை பார்க்க  போகுது.’ என்ற மன நிலையில் சங்கரி இருவரின் வாயையும் ஆர்வமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

மல்லியை மிதப்பாக பார்த்த மதி, “எங்க உங்க நாலு பேத்தை தவிர மத்த ஸ்டூடஸ்சை காணோம்னு கேட்டுட்டு இருந்தார். அவங்க எல்லாரும் காலேஜ் பஸ்ல வந்துட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன். சரி என்ன இத்தனை கேள்வி கேக்குறியே. உங்க வீட்டுக்காரர்கிட்ட மேடம் என்ன கதை சொல்லிட்டு வந்தீங்க…?’’ என்று தன் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தாள். 

“அது… அது… நான்…’’ மல்லி திணறிக் கொண்டிருக்கும் போதே, தூரத்தில், ‘கூ…’ என கூவி வந்த புகை வண்டி அவளை காப்பாற்றியது. “ரயில் வந்தாச்சு. எல்லாரும் பேக் எடுத்துக்கோங்க.’’ என்றவள் மற்றவர்களுக்கு முன் பெண்கள் பெட்டியை நோக்கி நடந்தாள். 

“ரயிலு வந்தா நிக்கும்டி மயிலு. நீ நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிட்டு போ.’’ என்று அவளை விடாமல் வாரியபடி அவளை பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் மதி. 

“அதானே மதியை வாய் பேச்சுல ஜெயிக்க முடியுமா. ஏன்டி ரேணு…! இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் இந்தியா பாகிஸ்தான் ட்வன்ட்டி  ட்வன்ட்டி மேட்ச் பாக்குற மாதிரியே இருக்கு இல்ல.’’ என்று ரேணுவிடம் ரகசியம் பேசியபடி நகர்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. 

நால்வருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்த மகிழோ மனதிற்குள், ‘ஆத்தாடி…! இந்த கிரிக்கெட் பேச்சு போட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல ரிஸ்லிங்கா மாறி ரெண்டு பேருக்கும் மத்தியில நான் ரெப்ரி வேலை பார்க்க வேண்டி வரும் போல இருக்கு.’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டிருந்தாள். 

ஆனால் ஐவரும் இரயிலில் இடம் பிடித்து அமர்ந்ததும், மதியை பார்த்து சமாதானப் புன்னகையை சிந்திய மல்லி, “உனக்கு பிடிக்குமேன்னு விடிய காத்தால நாலு மணிக்கு எல்லாம் எழுந்து, மிளகா சட்னி அரச்சி மல்லிப்பூ மாதிரி இட்லி சுட்டு கொண்டு வந்துருக்கேன். ஒன்னு சாம்பிள் பாக்குறியா…?’’ என்று டிபன் பாக்சை திறக்க, அதுவரை, சுருங்கியிருந்த முகம், ‘அடடே மிளகா சட்னியா பேஷ் பேஷ்…’ என்று விரிந்ததில், ‘வம்பு போச்சா…!’ என்று ரேணுவும் சங்கரியும் ஒருவரை ஒருவர் சோகமாய் பார்த்து கொண்டனர். 

முதல் நாள் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மல்லி, ரேணு, சங்கரி மூவரும் கும்பகர்ணிகள் போல உறங்கியிருக்க, மகிழ் மட்டும் தான் எழுந்து காலை சிற்றுண்டியை தயார் செய்திருந்தாள். மற்ற மூவரும் சரியான நேரத்திற்கு எழுந்து குளித்து கிளம்பியிருந்தனர் அவ்வளவே. 

‘பால் வடியிற பாப்பா மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு எப்படியெல்லாம் அடிச்சி விடுறா…’ என்று கடுப்பாக மகிழ் மல்லியை பார்க்க, பார்வையாலேயே அவளிடம் மன்னிப்பை யாசித்தவள், மதி ஒரு இட்லியை சப்புகொட்டி சாப்பிட்டு விட்டு… இரண்டாவதில் கை வைக்கவும், “எனக்கு அசிஸ்டன்ட் வேலை எல்லாம் மகிழ் தான் பார்த்தா.’’ என்று சொன்னாள். 

அதுவரை முறுக்கை வாயில் போட்டு நொறுக்கி கொண்டு வந்த ரேணுவும், சங்கரியும் கூட இப்போது, ‘அடிப் பாதகத்தி’ என்பதை போல அவளை நிமிர்ந்து பார்த்தனர். என்ன தான் அவர்கள் தாமதமாக எழும்பி இருந்தாலும், பாத்திரம் துலக்குதல், சமைத்த பத்தார்த்தங்களை பாத்திரத்தில் அடைத்தல், குடிநீரை கலனில் அடைத்தல் என்ற சிறு சிறு வேலைகளையாவது செய்தனர். 

கடைசி நிமிடம் வரை குப்புற படுத்து உறங்கிவிட்டு, காக்காய் குளியல் போட்டு கிளம்பி வந்தவள் சரடு விட்டுக் கொண்டிருக்க, அதை சங்கரியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ‘சொல்லிடவா…’ என்று அவள் மகிழை பார்க்க, ‘வேண்டாம் தெய்வமே.’ என்று மறுபார்வை பார்த்தவள், மல்லியை, ‘உனக்கு அப்புறம் இருக்கு கச்சேரி.’ என்ற மறைமுக செய்தியை பார்வையில் கொடுத்துவிட்டு தானும் இரண்டு முறுக்குகளை எடுத்து வாயில் திணித்தாள்.

Advertisement