Advertisement

“சாரி, இனிமே கால்ஸ் வராது. நான் ஆஃபிஸ் போக வேண்டி வருமோன்னு பயந்திட்டேன். நல்ல வேலையா பிராப்லம் ஷார்ட் அவுட் ஆகிடுச்சு” என்றான்.

“சண்டே கூட வேலை இருக்குமா?”

“ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடலுக்கு ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ற சாஃப்ட்வேர் நாங்கதான் பண்ணி கொடுத்தோம். அதுல சின்ன இஸ்ஸு. ஃபைவ் இயர்ஸ் ஃபிரீ சர்வீஸ் கான்ட்ராக்ட் இருக்கு. அந்த டைம் பீரியட்ல எப்போ என்ன பிராப்லம்னாலும் நாங்கதான் பார்த்தாகணும். சண்டே பிராப்லம் ஆனாலும் பார்க்கணும்” என லேசாக விளக்கினான்.

“நடு ராத்திரின்னா கூடவா?”

“ட்வெண்டி ஃபோர் அவர்ஸ். ஆனா இந்த பிராஜக்ட்ல நைட் டைம் பிராப்லம் சொல்ல மாட்டாங்க”

“நீங்க ஏன் ஈரோட்டுல உங்க ஸ்கூல்ஸ் காலேஜ் பார்க்கல?”

“அப்பா கொஞ்சம் கெடுபிடி. எனக்கு ஒத்து வராது. சென்னைல இருக்கிறது பிடிச்சது. கொஞ்ச நாள் போகட்டும், பார்க்கலாம்”

“எனக்கு ஈரோடுதான் பிடிக்கும். ஆனா ரொம்ப என்னால அங்க இருக்க முடியறது இல்லை. கல்யாணம் அப்புறம் ஈரோட்டிலேயே இருக்கலாமா?” ஆசையாக கேட்டாள்.

“நீ எதுவும் ஃபிக்ஸ் ஆகிக்காத. அது அப்பாவோட சாம்ராஜ்யம். அவர் விருப்பத்துக்கு எதிரா நான் நடக்கிறேன்னு அவர் நினைச்சா அதுல எந்த உரிமையும் நான் எடுத்துக்க மாட்டேன். அப்படி எடுத்துக்கிட்டா தப்புல்ல…” என விஜய் கேட்க சட்டென அமைதியாகி விட்டாள் பாவனா.

“என்ன சைலன்ட் ஆகிட்ட? என்ன?”

“நீங்க ஏன் ஒதுங்கி போனீங்கன்னு புரியும். ஆனா இவ்ளோ எதிர்பார்க்கல நான்” என்றாள்.

“இனிமே இதை பத்தி எப்பவும் லோ வா பேசக்கூடாது பாவனா. காஸ்ட் வச்சு பிரிவினை பார்க்கிறதுக்கும் உன்னை போல பிறந்தவங்கள தனியா பிரிச்சு பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இல்ல. எப்படி பார்த்தாலும் டிஸ்கிரிமினேஷன் தப்புதான். எல்லாரும் சமம். அது புரிஞ்சாலும் உடனே ஏத்துக்க மனசு வராது. ஒரு சமயம் இருக்க மைண்ட் செட் கொஞ்சம் கொஞ்சமா மாற வாய்ப்பிருக்கு”

“நான் கட்டாயம் அவங்கள சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணுவேன், சப்போஸ் ஒத்துக்லைன்னாலும் போக போக அவங்களும் புரிஞ்சு நம்மள ஏத்துப்பாங்கன்னு நம்புவோம். அப்படி இல்லைன்னா என்ன செய்றதுன்னும் பிளான்ஸ் யோசிச்சிருக்கேன். சும்மா மூஞ்ச தொங்க போடாத நீ”

“என்ன பிளான்?”

“அதை எல்லாம் நீ தெரிஞ்சுக்க காலம் இருக்கு. இப்போ வெளில வந்திருக்கோம். என்ஜாய் பண்ணலாம். சாப்பிட்டு சினிமா போலாமா?”

“எனக்கு உங்க கூட இருக்கணும் விஜய், வேற எந்த ஹீரோ ஹீரோயினும் பார்க்க வேணாம்” என பாவனா சொல்ல, “பசங்க பாதி பேர் சினிமா பார்க்கத்தான் சினிமா ஹால் போறாங்க நினைக்கிறியா?” என குறும்பு சிரிப்போடு கேட்டான் விஜய்.

அவனை செல்லமாக முறைத்தவள், “அவங்கள பத்தி எனக்கு தெரியாது. உங்க கூட ரிலாக்ஸா டைம் ஸ்பெண்ட் பண்ற மாதிரி எங்கேயாவது அழைச்சிட்டு போங்க” என்றாள்.

இயற்கை சூழலில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு அழைத்து சென்று மெதுவாக சாப்பிட்டு முடித்து அஷ்டலக்ஷ்மி கோயில் அழைத்து சென்றான். பின்னர் பீச்சில் மாலை வரை இருந்து விட்டு அவளது விடுதியில் விட்டான். பாவனா முகத்தில் லேசான சிரிப்பு ஒன்று ஒட்டிக் கொண்டது போல பார்ப்பவர்களுக்கு தோன்றியது.

வருவதாக சொன்ன ரமணன் வரவே இல்லை. இரண்டு முறை அழைத்து பேசிய பாவனா மூன்றாவது முறை, “நான் வரவா ப்பா அங்க ஈரோட்டுக்கு?” எனக் கேட்க மறுத்து விட்டார்.

“இனிமே உன் அம்மா இருக்க இடத்துக்கு நான் வர்றதா இல்லை. நீ என் ஆஃபிஸ் தேடி வர்றது சரியா இருக்காதுடா. அப்பாக்கு ரொம்ப வேலை, கண்டிப்பா அடுத்த வாரம் வர்றேன்” என சொல்ல வாக்குவாதம் செய்யாமல் சரி என சொல்லி வைத்தாள்.

தன்னிடம் பேசும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என அவளுக்கு தெரியவில்லை. அவரே புரிந்து கொண்டவராக, “உன் அப்பாக்கு டைம் இல்லையா உன்கிட்ட பேச? பரவாயில்லை அவர்கிட்ட பேசிட்டே நீ சொல்லு” என்றார்.

“ம்மா இன்டைரக்ட்டா எதுவும் சொல்றியா மா?”

“நீ பேசிட்டு வா, டைரக்ட்டாவே சொல்றேன்” என சொல்லி விட்டார்.

கடவுளே இந்த பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கொடு என வேண்டிக் கொண்டே அப்பாவை சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தாள்.

அதற்கடுத்த வாரம் விஜய் ஈரோடு சென்றான். கங்கா மகனை அப்படி கவனித்தார்.

 “இதுக்குத்தான் கூடவே இருக்க கூடாதுன்னு சொல்றது” பிரசன்னா சொல்ல, “அதான் அப்பா கவனிக்கிறாரேடா உன்னை. பெரியாள் ஆகிட்ட” என்றான் விஜய்.

“நீ கிண்டலா சொல்றியா?”

“அடேய் நிஜமாடா. பார்க்க முறைப்பா தோரணையா அப்பா சாயல்ல இருக்க”

“ம்மா இவன் கிண்டல்தானே செய்றான்?”

“இல்ல ண்ணா. நிஜமாதான் சொல்றாங்க அண்ணா” என்றாள் வைஷ்ணவி.

“கூடவே இருந்து எல்லாம் செய்றேன் நான். திடீர்னு ரெண்டு செட் ட்ரெஸ் ஒத்த புக் வாங்கி கொடுத்தா அவனுக்கு பேசுவியா நீ?” பிரசன்னா தங்கையிடம் வம்பு செய்தான்.

“நீ கொட்டி கொட்டி வச்சத எல்லாம் மறக்கல நான். இப்போவும் கொட்றான் ண்ணா இவன்” சின்ன அண்ணனுக்கு மரியாதை தராமல் பெரிய அண்ணனிடம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தாள் வைஷு.

“நம்ம காலேஜ்லேயே படிச்சிட்டு கிளாஸ் கட் அடிக்கிறா. அப்பாக்கு தெரிய வராம நான்தான் சமாளிச்சேன். அப்புறம் உன்னை கொட்டாம கொஞ்சணுமா?” பிரசன்னா நியாயம் கேட்க, “நான் என்ன ஊர் சுத்தவா போனேன். என் ஃப்ரெண்ட் அக்கா வளைகாப்புக்குதானே போனேன். அம்மாக்கு தெரியும்” என தன் பக்க நியாயம் சொன்னாள் வைஷு.

“அதை சொல்லி லீவ் வாங்கிட்டு போகணும்” என்றான் பிரசன்னா.

“காலேஜா நடத்துறீங்க நீங்க? ஸ்கூலுக்கும் காலேஜ்க்கும் ஒரு வித்தியாசம்தான். அங்க யூனிஃபார்ம்ல போகணும், இங்க அது இல்ல. மத்தபடி  ஸ்கூலே தேவலாம்” வைஷு குறைகளை அடுக்க அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பிரசன்னா.

எதுவும் பேசாமல் அமைதியாக அம்மா கைப்பக்குவ உணவை ரசித்து சாப்பிட்ட விஜய் கூடவே உடன்பிறப்புகளின் சண்டையையும் ரசித்தான்.

விஜய் முன்னிலையிலேயே பிரசன்னா தங்கைக்கு கொட்டு வைக்க போக சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் தம்பியை தடுத்தவன், “நான் இல்லாதப்பவும் இவளை கொட்டக் கூடாது. கையை உடைச்சிடுவேன் ராஸ்கல். அப்பா மாதிரி லுக்ல இருக்கன்னு சொன்னா பெரிய மனுஷன் ஆகிட்டியா நீ? போடா பொடிப் பயலே” என அவனை அடக்கினான்.

“ம்மா… இவனை ஊருக்கு கிளப்பி விடு” பிரசன்னா சத்தமிட, மசாலா தோசை கொண்டு வந்து பெரிய மகன் தட்டில் வைத்து இன்னும் சட்னி சாம்பார் எல்லாம் பரிமாறியவர், “நீ சாப்பிட்டீனா கிளம்புடா” என்றார் சின்ன மகனிடம்.

“இந்த அம்மாக்களுக்கு மட்டும் பெரிய மகன்தான் ஒஸ்தி. இவன் கிளம்பினதும் இருக்கு உனக்கு” என அம்மாவை மிரட்டியவன் விஜய் அசந்து விட்டான் என நினைத்து தங்கையை கொட்டப் பார்க்க மின்னல் வேகத்தில் தம்பி கையை பிடித்து முறுக்கினான் விஜய்.

“ஷ் ஆஹ்! அப்பா பாருங்கப்பா” என பிரசன்னா சொல்ல, விஜய் கையை விட்டு திரும்பிப் பார்க்க தங்கையை கொட்டி விட்டு ஓடி சென்று விட்டான் பிரசன்னா.

“அண்ணா…” என தலையை தடவிக் கொண்டே விஜய்யை பார்த்தாள் வைஷு.

“தடியன் ஈவ்னிங் வரட்டும். நாலு கொட்டு திருப்பி தா அவனுக்கு. மண்டை வீங்கணும்” என விஜய் சொல்ல, “இப்போ சமாதானம் செய்ய சொல்லக்கூடாது, இன்னிக்கு சனிக்கிழமை கரெக்ட்டா அஞ்சு மணிக்கு வந்திடுவான்.  அஞ்சு அஞ்சுக்கெல்லாம் மிஷன் கம்ப்லீட் பண்ணனும்” என தங்கை சொல்ல சிரிப்போடு தலையாட்டிக் கொண்டான்.

“வீடு நிறைஞ்சு போய் இருக்குடா. இங்க முதலாளியா இருக்கிறது விட்டு யார்கிட்டயோ வேலை செய்ற. இரேன் டா இங்கேயே” ஆசையாக கேட்டார் கங்கா.

“ஏன் ரெண்டு வாலுங்களும் இப்படி சண்டை போட்டுட்டே இருந்தா வீடு லக லகன்னுதானே இருக்கணும்?”

“உன் முன்னாடிதான் டா இந்த சேட்டை எல்லாம். நீ இல்லைனா உன் தம்பி பெரிய மனுஷன் ஆகிடுவான். உன் தங்கச்சியும் நீ இருக்க தைரியத்துல பேசுறா. இல்லைனா அவனை கண்டாலே அலறுவா. படவா காலேஜ்ல புள்ளைய போட்டு மிரட்டி வச்சிருக்கான். அவன் அப்படியே உன் அப்பா மாதிரியே இருக்கான் டா”

“அப்பா நிறைய அவனை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணி வச்சிருக்கார்” இப்படியாக அம்மாவுடன் பேசியிருந்தவன் தங்கையுடன் சிறிது நேரம் செஸ் விளையாடினான்.

அவள் தோழி பிறந்தநாளுக்கு பரிசு வாங்க வேண்டுமென கூறி விஜய்யோடு வெளியில் கிளம்பினாள். அரை மணி நேரத்துக்குள் வாங்கி விட வேண்டும் என சொல்லித்தான் அழைத்து சென்றான். அவள் ஒரு மணி நேரமாக்கி இவனை டென்ஷன் செய்து திட்டு வாங்கி பின் திட்டு வாங்கியதற்கு லஞ்சமாக ஐஸ் க்ரீம் பேக் வாங்கிக் கொண்டு என செல்லம் கொண்டாடினாள்.

மாலையில் மறக்காமல் பெரிய அண்ணன் உதவியோடு சின்ன அண்ணன் தலையில் கொட்டு வைக்க, பிரசன்னா துரத்த விஜய் காப்பாற்ற என ரகளை செய்தனர்.

கங்கா அனைத்தையும் ரசித்திருக்க அரங்கநாதனும் அவ்வப்போது கவனித்தவர், “என்ன உன் பையன் ரொம்ப தேஜஸா இருக்கான்? நல்ல கவனிப்போ உன்கிட்டேர்ந்து?” எனக் கேட்டார்.

இரவுதான் பாவனாவிடம் பேச நேரம் கிடைத்தது. அவன் அழைப்புக்காக காத்திருந்தவள் முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.

பேச்சு வாக்கில் காலையிலிருந்து நடந்ததை எல்லாம் அவன் கூற என்னவோ அவள் கண் முன் நிகழ்வது போல பிரம்மை அவளுக்கு.

“வைஷு சேட்டைனு தெரியும், ஆனா பிரசன்னா கூட இப்படி இருப்பாங்கன்னு நினைக்கவே இல்ல” என்றாள்.

“அவன் வெளில அப்படித்தான் ரஃப் ஆ இருப்பான். அப்பாவோட ஜெராக்ஸ் காபி அவன்” என்ற விஜய் இன்னும் அவன் குடும்பம் பற்றி பேச பேச அவர்களோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு மனம் ஏங்கியது பாவனாவுக்கு.

Advertisement