Advertisement

நேச நதி -9

அத்தியாயம் -9

அன்று இரவு கொண்டாட்டங்கள் முடிந்த பின் விஷாலுக்கு தன் அறையை கொடுத்த பிரணவ் விஜய்யுடன் தங்கிக் கொண்டான். அடுத்த நாள் அருகிலேயே சுற்றி பார்த்தவர்கள் மதியம் போல கோவைக்கு கிளம்பி விட்டனர். விஷாலுடன் அவனது காரில் ஸ்ரீ புறப்பட மற்றவர்கள் ஷாமின் ஜீப்பில் கிளம்பினார்கள்.

கோவையில் ஸ்ரீஜாவை அவள் வீட்டில் விட்ட விஷால் ஈரோடு சென்று விட்டான்.

  பிரணவ்வை அவன் வீட்டில் விட்டனர். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் அவன் பெங்களூரு செல்கிறான். விஜய், பாவனா, ஷாம், ஷீபா நால்வரும் அடுத்த நாள் அதிகாலையில் சென்னை வந்து விட்டனர். ஒரு நாள் ஓய்வுக்கு பின் ஷாமோடு ஷீபாவும் பெங்களூரு சென்று விடுவாள்.

 ஷீபாவை அவள் வீட்டிலும் பாவனாவை அவளது விடுதியிலும் விஜய்யை அவனது அடுக்குமாடி குடியிருப்பிலும் விட்டு தன் வீடு சென்றான் ஷாம்.

தன் தாய்க்கு அவளாகவே அழைத்து பேசிய பாவனா பொறுமையாக படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்கிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன் உன்னை, வேறொரு நபரை தந்தையாக ஏற்க முடியாது என சொல்லிக் கொண்டிருக்க அவர் தன் பிடியில் உறுதியாக நிற்க மீண்டும் சண்டையானது இருவருக்கும்.

ரமணன் அழைக்க ஏற்றவள் கோவமாக பேச, “உனக்கு அம்மாவே இல்லைனு நினைச்சுக்க. படிக்கிறதை மட்டும் பார்” என சொல்ல அழைப்பை துண்டித்து விட்டு படுத்துக் கொண்டாள். பயணக் களைப்பில் உறங்கியும் விட்டாள்.

சிறிது நேரம் உறங்கி எழுந்த விஜய் அம்மாவுக்கு அழைத்து பேசினான். தங்கைக்கு தேவைப்பட்ட புத்தகம் பற்றி அவள் விவரம் சொல்லவில்லை என கூறி வைஷ்ணவியிடம் பேசினான். பிரசன்னா அருகில் இருக்க அவனே கேட்டு வாங்கி அண்ணனிடம் பேசினான்.

பார்த்திருந்த அரங்கநாதன் என்ன நினைத்தாரோ அவரும் வாங்கி பேச விஜய் என்னவோ அவரிடம் ஒழுங்காக பேசினான்.

“இங்க உன் தம்பியால மட்டும் எப்படி பார்க்க முடியும்? நீ வாடா இங்க” கொஞ்சம் தன்மையாக மகனை அழைத்தார்.

“ரெண்டு வருஷம் போகட்டும் ப்பா. வர்றேன். அப்போவும் உங்களுக்கு விருப்பம்னா பார்க்கலாம்” என்றான்.

“டேய், விருப்பமா என்ன சொல்ற? நீதானடா பார்க்கணும் எல்லாம்?”

 “ரெண்டு வருஷம் அப்புறம் நீங்க சொன்னா பார்க்கிறேன் ப்பா” என விஜய் சொல்ல கைபேசியை காதிலிருந்து எடுத்து மகன் எண்தானே என ஒரு முறை சரி பார்த்துக் கொண்டவர், “அதென்ன ரெண்டு வருஷ கணக்கு?” எனக் கேட்டார்.

“அங்க வந்திட்டா அங்கதானேப்பா இருந்தாகனும்? கொஞ்ச நாள் இப்படி இங்க இருக்கேனே” என விஜய்யும் சாந்தமான குரலில் சொல்ல தட்டி பேசாமல் சரி என சொல்லி மனைவியிடம் கொடுத்து விட்டார்.

கங்காவுக்கு ஆனந்தம். “அப்பா முகம் எப்படி இருந்தது தெரியுமா? என்னடா பேசிகிட்டீங்க?” உற்சாகமாக கேட்டார்.

“நீ ஏதோ நல்ல மூட்ல இருந்திட்டே அப்பாவை பார்த்திருப்ப. அதான் உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சிருப்பார். ஆனா உன் பக்கத்துல அப்பா கொஞ்சம் டல்தான் மா”

“போடா, என்னமோ இப்படியே நல்ல விதமா இருங்க டா” உடைந்த குரலில் சொல்லி இன்னும் சற்று நேரம் பேசி விட்டு வைத்தார்.

பாவனாவை இவர்கள் எல்லாரையும் எப்படி ஏற்றுக்கொள்ள செய்வேன் என நினைத்துக்கொண்டே படுக்கையில் விழுந்தான் விஜய். சில நிமிடங்களில் பாவனாவிடமிருந்து அழைப்பு வர எல்லாம் மறந்து தன்னைப் போல ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“கொஞ்ச நேரம் முன்னாடிதான் விட்டுட்டு வந்தேன், இப்பவே உன்னை பார்க்கணும் போல இருக்கு” குழைந்தான் விஜய்.

“ஓ பார்க்கலாமே, வர்றீங்களா” ஆசையாக பாவனா கேட்க உடனே சரி என்றவன், “மதியமா வர்றேன். லஞ்ச் சேர்ந்து சாப்பிடலாம். வைஷுக்கு ஒரு புக் வாங்கணும், ரெடியா இரு” என சொல்லி வைத்தான்.

பேகை பிரித்து அழுக்கு உடைகளை மெஷினில் போட்டு பர பரப்பாக வீட்டை சுத்தம் செய்து வைத்தவன் ஒரு மணிக்கெல்லாம் தயாராகி தன் பைக் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

விடுதியில் தன்னை அழைக்க வந்தவனை கண்டு பாவனாவுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவனை நோக்கி வரும் போதே விழிகளை அங்கே இங்கே அசைக்காமல் அவனையே பார்வையால் விழுங்கிக் கொண்டு வந்தாள்.

“நீ இப்படி பார்த்தா நான் மொத்தமா காலி” என விஜய் சொல்ல லேசாக அவள் வெட்கப்பட, “ஏய் எத்தனை நாளா இப்படி என்னை உன்கிட்ட விழ வச்சிட்டே இருக்கணும்னு நினைச்ச?” என அவன் கேட்க அவள் அதிர்ந்து விழித்தாள்.

“எப்படி பார்த்தாலும் அழகா இருக்க பாவனா” என மென்மையான குரலில் விஜய் சொல்ல, “டைம் ஆகுதுங்க” என அவள் சிணுங்க, அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

வைஷ்ணவிக்கு தேவையானதை வாங்கிக் கொண்ட பின் பாவனாவும் அவளுக்கு தேவையான புத்தகங்கள் சில வாங்கிக் கொண்டாள். மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டார்கள்.

அடுத்து பீச் செல்ல ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை, நான்கு மணியாகியிருக்க  இன்னும் வெயில் இருந்தது. அதெல்லாம் உரைக்கவில்லை. ஏதேதோ பேசினார்கள். கைகள் கோர்த்தே வைத்திருந்தார்கள்.

கடலில் கால் நனைத்து பேசி சிரித்து பொழுதை போக்கி மணலில் அமர்ந்த பின் தன் அம்மாவின் முடிவை பற்றி கவலையாக பகிர்ந்தாள்.

“உன் அப்பாகிட்ட பேசி அவரைதான் சரி செய்யணும் நீ. ஃபோன்ல இல்லாம நேர்ல பேசு” என்றான்.

“அப்படியெல்லாம் அவரை நினைச்ச நேரம் நான் பார்க்க முடியாது. அவரா என்னை பார்க்க வந்தாதான் நேர்ல பார்க்கலாம்” என்றாள்.

ரமணன் மீது கோவமாக வந்தது. இத்தனை வருடம் மணம் ஆகவில்லை என்றாலும் பாவனாவின் தாய் அவரை நம்பித்தானே ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெற்ற மகள் நினைத்த நேரம் தந்தையை பார்க்க முடியாது என்றால் என்ன நிலையில் வைத்திருக்கிறார் இருவரையும்?

“சரி அவரை பார்க்கணும்னு சொல்லி இங்க வர சொல்லு. டிலே பண்ணாம பேசு. உனக்காகவாவது உன் அம்மாவை ஏத்துக்க சொல்லு” என்றான்.

பாவனா அவனை அமைதியாக பார்த்திருக்க, “உனக்காகன்னா உன் அம்மாவுக்கு நியாயம் இல்லைதான்னாலும் ஏதோ ஒரு வகையில இது பெட்டர்தானே? சொல்லிப் பாரு. உன் அப்பா புரிஞ்சுப்பார்” என்றான்.

பாவனா தலையாட்டிக் கொள்ள சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார்கள். இரவு உணவுக்கு பின் அவளை விடுதிக்கு அழைத்து சென்றான் விஜய்.

“வீக் எண்ட் பார்க்கலாம்” என சொல்லி மனமே இல்லாமல் விஜய் செல்ல அவன் மறையும் வரை அங்கேயே நின்றவள் பின் உள்ளே சென்றாள்.

ஷைலஜா மகளுக்கு அழைக்க அழைப்பை ஏற்றவள் அம்மாவிடம் சமாதானமாக கெஞ்சுதலாக நம்பிக்கையாக என பல பாவங்களில் அப்பாவிடம் நான் பேசுகிறேன், பொறுமையாக இரு என சொல்ல அவரும் ம் என கொஞ்சம் தைரியமாக சொல்ல “தேங்க்ஸ் மா” என சொல்லி கைபேசியை வைத்தாள்.

விஜய்யிடம் பேசியதிலிருந்து அப்பா ஒத்துக் கொள்வார் என அவளுக்கு நம்பிக்கையாக இருந்தது. காலையில் அப்பாவை இங்கு வர சொல்லி அழைக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு படுத்தாள்.

பல வருடங்களுக்கு பின் கண்களுக்கு பாரமில்லாமல் போனது அவளது இமைகள்.

அடை பட்டிருந்த அவளது இமைகளுக்குள் உலா வர ஆரம்பித்தான் விஜயசாகரன்.

கல்லூரி செல்வதற்கு முன் அப்பாவுக்கு செய்தி அனுப்ப அவர் அழைத்தார். வேறு எதுவும் கூறாமல், “நேர்ல பார்க்கணும் உங்களை. வாங்கப்பா” என அழைத்தாள். அவரும் விரைவில் வருவதாக சொல்லி வைத்தார்.

படிப்பில் கவனம் வைத்தாள். காலை மாலை இரு வேளையும் விஜய்யுடன் போன் பேசினாள். தோழிகளோடு சிரித்து பேசினாள். இரவில் சிரமப்படாமல் உறங்கினாள்.

ஞாயிறு காலையே இவளை அழைக்க வந்து விட்டான் விஜய். அடுத்த வாரம் ஊருக்கு செல்லப் போவதால் தங்கைக்கு அம்மாவுக்கு ஆடைகள் எடுக்க வேண்டும் எனக் கூறினான்.

“இதுவரைக்கும் பொண்ணுங்களுக்கு ட்ரஸ் எடுத்து பழக்கம் இல்ல” என விஜய் கூற, “நான் எடுக்கிறேன்” என உற்சாகமாக சொன்னாள் பாவனா.

விஜய்யின் அம்மா, தங்கை இருவருக்கும் ஷாப்பிங் முடிக்க, “உனக்கும் வாங்கிக்க” என்றான்.

“இப்போவே உங்க முகம் எரிச்சல் ஆனது போல ஆகிடுச்சு. இன்னொரு நாள் பார்க்கலாம்” என பாவனா கூற சிரித்து விட்டான்.

“நிஜமா இந்த ஷாப்பிங்னாலே எனக்கு அலர்ஜி பாவனா.  முதல் தடவைங்கிறதால உன்னை எதுவும் சொல்ல முடியலை. எவ்ளோ நேரம் பண்ணுவ?”

“யாரு நானா? இதுக்கு மேல சீக்கிரமா எல்லாம் யாராலும் வாங்க முடியாது”

“என்னது? சர்தான்! இனிமே ஆன்லைன் ஷாப்பிங்தான். இப்போ நீயும் வாங்கிக்க ஏதாவது”

“ம்… ஆன்லைன்ல வாங்கிக்கிறேன்”

“கோவமா? அம்மாக்கும் தங்கச்சிக்கும் எடுத்த, எனக்கு எடுக்கலைன்னு சொல்லிக் காட்ட கூடாது”

“நானே நினைக்கலைனாலும் எடுத்து கொடுக்குறீங்க”

“அப்பறம் கமிட் ஆகிட்டா இதுல எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும். லேட் பண்ணாம வாங்கு” என விஜய் சொல்ல தனக்கு எடுத்தவள் அவனுக்கும் வாங்கினாள்.

 விஜய்க்கு அலுவல் சம்பந்தமாக அழைப்பு வர அவனால் தவிர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கைபேசியிலேயே இருந்தான். ஓரமாக அமர்ந்திருந்தவள் விஜய்யிடமே பார்வை வைத்திருந்தாள்.

Advertisement