Advertisement

நேச நதி -7

அத்தியாயம் -7(1)

மருத்துவ மனையில் இருந்தாள் பாவனா. இரவில் மழை மற்றும் வெளிச்சம் போதாத காரணத்தால் தேடும் பணி தடை பட்டிருக்க பிரணவ்வும் ஷாமும் அறைக்கு திரும்பி விட்டனர். அதி காலையிலேயே விஜய் பாவனா இருவரையும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டு ஷாமுக்கும் தகவல் சொல்லியிருக்க அனைவரும் நேரே மருத்துவமனைக்கே வந்து விட்டனர்.

“ரூம் போய் ஃபிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிடுடா” என பிரணவ் கூற அசையாமல் அமர்ந்திருந்தான் விஜய்.

“என்னடா நைட் காட்டுல மாட்டினதுல பயந்திட்டியா? ஏதாவது பேசுடா” ஷாம் கூற, “பாவனா நினைச்சு கவலை படுறியா? பயப்பட ஒண்ணுமில்லைனு சொல்லிட்டாங்கதானே, இன்னும் என்ன?” எனக் கேட்டாள் ஸ்ரீஜா.

விஜய் எழுந்து கொள்ள, “நாங்க இங்க இருக்கோம் ஷாம், அவனை ரூம் அழைச்சிட்டு போ” என்றாள் ஷீபா.

“பார்த்துக்க” என ஒரு வார்த்தை மட்டும் உதிர்த்து விட்டு ஷாமோடு அறைக்கு திரும்பினான் விஜய். வழியில் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

அரை மணி நேரத்தில் குளித்து தயாரானவன் ஷாமை மருத்துவமனைக்கு அழைக்க, “முதல்ல வயித்த கவனி” என்ற ஷாம் ஆர்டர் செய்து அறைக்கு வரவழைத்திருந்த உணவை அவனை சாப்பிட வைத்தான்.

சாப்பிடாமல் விட மாட்டான் என புரிந்து வேகமாக நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்த விஜய், “போலாம் வா” என்றான்.

“நீ ரெஸ்ட் எடு, பிரணவ் இருக்கான் அங்க, பார்த்துப்பான்” என்றான் ஷாம்.

“வேணும்னா நீ ரெஸ்ட் எடு, எனக்கு அவளை பார்க்கணும்” என உறுதியாக விஜய் சொல்ல, அவனை ஊன்றி பார்த்த ஷாம், “என்னாச்சு டா, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடா” என பொறுமையாக கேட்டான்.

“ஒண்ணுமில்ல, நீ வர்றியா இல்லை நான் மட்டும் போகட்டுமா?” என விஜய் கேட்க,

“ஏன் தப்பு பண்ணின எஃபக்ட்ல இருக்க நீ?” விஜய்யை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான் ஷாம்.

“தப்புதான் பண்ணிட்டேன்” என விஜய் சொல்ல, “டேய்!” என அதிர்ந்தான் ஷாம்.

ஷாமை குழப்பமாக பார்த்த விஜய் அவன் எண்ண ஓட்டத்தை கணித்து, “டேய்! ஏன் டா உன் புத்தி இப்படி யோசிக்குது? போடா…” என பற்களை கடித்தான்.

நெஞ்சில் கை வைத்து ஆசுவாச மூச்சு விட்ட ஷாம், “பாவனா பார்த்தாலே நீ வேற விஜயா இல்ல அவதாரம் எடுக்கிற. நீ வேற எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி வழிஞ்சு பேசி பார்த்தது இல்லை. அப்படி இருக்கிறவனுங்களுக்குதான் செல்ஃப் கண்ட்ரோல் சுத்தமா இருக்காது. காட்டிலேர்ந்து வந்ததிலேர்ந்து மூஞ்ச தொங்க போட்டுட்டு சுத்தினா இப்படித்தான் நினைக்க தோணும்” என்றான்.

“இது வேற. நான் என் லவ்ல ஸ்ட்ராங்கா இல்லைனு கில்டி ஆகுது”

“ஆனா ஆகுது. எல்லாம் மானங்கெட்ட லவ்” என்றான் ஷாம்.

“ஏன் நீ லவ் பண்ணல?”

“நாலு நாளா போன் கூட பேசாம சுதந்திரமா சுத்துறேனே உனக்கு தெரியல. பெங்களூரு போனதும் முத வேலை பிரேக் அப்தான்” ஷாம் சொல்ல விஜய் அசுவாரஷ்யமாக பார்த்தான்.

“என்னடா?”

“இதோட பல முறை உன் லவ்வரோட பிரேக் அப் ஆகிப் போச்சு உனக்கு. அப்புறம் திடீர்னு பிரேக் அப்பா இல்லியே… அப்படினு சொல்வ பல்ல காட்டுவ. புதுசா வேற ஏதாவது கதை சொல்லு” என்றான் விஜய்.

“புதுசாதானே? நாம நைட்டே கிளம்பிடலாம் இங்கேர்ந்து” என்றான் ஷாம்.

“ஸ்ரீக்காக போட்ட பிளான் டா. அவ ஃபீல் பண்ணுவா”

“அவ ஃபீல் பண்றதை விட உன் லைஃப் முக்கியமா படுது எனக்கு”

விஜய் முறைக்க, “ஊருக்கு போய் உன் வேலைய விட்டுட்டு உங்கப்பா கூட போய் காலேஜ் ஸ்கூல் எல்லாம் கட்டி மேய்” என்றான் ஷாம்.

“நான் ஒண்ணு நினைச்சு உறுதி ஆகிட்டேனா உன் பேச்சை கேட்பேன்னு நினைச்சியா?”

“என் பேச்சை கேட்க வேணாம், இந்தா உன் ஃபோன். அம்மாகிட்டேர்ந்து நாலு மிஸ்டு கால்ஸ். இவங்க பேச்சையும் கேட்க மாட்டியா?” என சொல்லி விஜய்யின் கைபேசியை அவனிடம் கொடுத்தான்.

விஜய் அவன் அம்மாவுக்கு அழைக்க உடனே எடுத்தவர் ஏன் நேற்று இரவே பேசவில்லை, தான் அழைத்தும் எடுக்கவில்லையே எனக் கேட்டார். குரலே பயந்து போயிருக்கிறார் என உணர்த்த, “சைலன்ட்ல இருந்தது மா ஃபோன்” என்றான்.

“எல்லாரும் தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சுதான் உன் ஃப்ரெண்ட்ஸ்க்கும் கால் பண்ணல. காலையிலேர்ந்து உன் காலுக்குதான் வெயிட் பண்ணினேன். உன்கிட்ட பேசாததை நினைச்சிட்டே தூங்கி நைட் எல்லாம் கெட்ட கனவு வேற. சாப்பிட்டியா இப்போ” அக்கறையாக கேட்டார் கங்கா.

“சாப்பிட்டேன்”

“ஊருக்கு எப்ப வர்ற நீ?”

“டூ வீக்ஸ் கழிச்சு வர்றேன் ம்மா” என விஜய் சொல்ல இன்னும் கொஞ்சம் பேசி விட்டு வைத்தார் கங்கா.

விஜய் கைபேசியை தன் பாக்கெட்டில் வைக்க அவனையே உற்று பார்த்த வண்ணம் ஷாம்.

“என்னடா இப்போ? அம்மா மேல பாசம் இருந்தா லவ் வரக்கூடாதா? பாவனாவை பாவனாவா மட்டும் பார்க்க சொல்வேன் என் அம்மாவை. அவங்களுக்கு என் விருப்பம் முக்கியமா படாதா?”

“இந்த கேள்வி என்னை கேட்குறியா? உன்னை நீயே கேட்டுக்குறியா?”

விஜய் பதில் சொல்லாமல் இருக்க, “அவங்க உன்னோட அம்மா மட்டுமில்லை. உன் தம்பி தங்கைக்கும் அம்மா. உன்னை மட்டும் யோசிச்சு அவங்கள முடிவு எடுக்க சொல்லக்கூடாது” என்றான் ஷாம்.

“உன் பார்வையில நான் செய்றது தப்பாவே இருக்கட்டும். இப்போ ஹாஸ்பிடல் போலாம் வா” என்றான் விஜய்.

“நான் யோசிக்கலாம் மாட்டேன், நேரா உன் அப்பாகிட்ட போய் நிப்பேன்” மிரட்டல் விடுத்தான் ஷாம்.

“போய் நில்லு. எனக்கு சொல்ற வேலை மிச்சம். இப்போ வரப் போறியா இல்லையா?” விஜய் அதட்ட, ஷாமும் கிளம்பி விட்டான்.

பாவனா இருந்த அறையின் வெளியில் கைபேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீஜா. பாவனா உறங்குவதாகவும் பிரணவ் ஷீபா இருவரும் தேநீர் பருக சென்றிருப்பதாகவும் விவரம் சொன்னாள்.

“பாவனா எதுவும் சாப்பிட்டாளா?” என விசாரித்தான்.

“பால் சாப்பிட்டா, அப்புறம் சாப்பிடுறேன்னு சொன்னவ சாப்பிடாமலே தூங்கிட்டா. ஹாஸ்பிடல்ல கொடுத்த பிரேக்ஃபாஸ்ட் உள்ள இருக்குடா” என ஸ்ரீஜா சொல்ல அறைக்குள் நுழைந்தான் விஜய்.

தன்னுடன் அமர்ந்திருந்த ஷாமிடம், “விஜய் சரியில்லை ஷாம், நம்மகிட்டேர்ந்து மறைக்கிறான். அந்த பொண்ணு மேல இவனுக்கு இன்ட்ரெஸ்ட்… இல்ல அப்படி கூட சொல்ல முடியாது, ப்ச், அவனை விசாரிக்கணும் டா” என சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்ரீஜா.

பாவனா படுத்திருந்த படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தான் விஜய். அவளுக்கு இன்னும் லேசான காய்ச்சல் இருந்தது. இடது கையில் நரம்பு ஊசி போடப்பட்டிருக்க அவளது வலது கையை மென்மையாக வருடி விட்டுக் கொண்டிருந்தான் விஜய்.

பிரணவ் ஷீபா இருவரும் வந்து விட்டார்கள் போல, பேச்சுக் குரல்கள் கேட்டன. ஆனாலும் அசையாமல் பாவனா அருகில்தான் அமர்ந்திருந்தான். ஷீபா உள்ளே செல்ல பார்க்க ஸ்ரீ தடுத்து விட்டாள்.

“ஏன் டி?” எனக் கேட்டாள் ஷீபா.

“ம்ம்… நம்ம கேங்ல ஒத்தையா சுத்திட்டு இருந்தவன் இனிமே ஜோடியா சுத்தலாம்னு முடிவு பண்ணிட்டான்” என ஷாம் சொல்ல ஸ்ரீஜா முகத்தை பார்த்தனர் பிரணவ் ஷீபா இருவரும்.

“எனக்கும் டவுட்தான். இவன் ஏதோ அப்படித்தான்னு அடிச்சு சொல்றான், நீ இங்கேயே இரு, அவன்கிட்ட அப்புறமா பேசலாம்” என ஸ்ரீஜா சொல்ல யாரும் உள்ளே செல்லாமல் அங்கேயே இருந்தனர்.

பாவனா கண்கள் திறக்க அவள் முன் விஜய். லேசாக புன்னகைத்தாள்.

“பயமுறுத்திட்ட” என்றான்.

நேராக படுத்திருந்தவள் அவன் பக்கமாக ஒருக்களித்து படுக்க முயல சோர்வின் காரணமாக முடியாமல் முகம் சுருக்கினாள்.

“ஈஸி ஈஸி பாவனா” என்றவன் எழுந்து அவளுக்கு உதவினான்.

“அம்மாக்கு எல்லாம் சொல்ல வேணாம்னு ஷீபாக்கா கிட்ட சொல்லியிருந்தேன், நீங்களும் ஒரு தடவ சொல்லிடுங்க. யாருக்கும் தெரிய வேணாம். நான் ஓகேதான், என்னால எதுவும் ஸ்பாயில் ஆக வேணாம், நீங்க எல்லாரும் உங்க பிளான் படி பாருங்க. நான் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறேன்” மெல்லிய குரலில் சொன்னாள்.

“இன்னும் சாப்பிடல நீ, ஃபர்ஸ்ட் சாப்பிடு. அப்புறம் பேசலாம்” என விஜய் சொல்ல அவளே மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

விஜய் சாப்பாடு எடுக்க மெதுவாக நடந்து ஓய்வறை சென்று வந்தவள், “கொஞ்ச நேரம் ஆகட்டும், பசியில்லை” என சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்க போனாள்.

“உட்கார்” என அதட்டலாக விஜய் சொல்ல அவனை கோவமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

விஜய் எதுவும் சொல்லாமல் இட்லி ஒரு துண்டு எடுத்து ஊட்ட அவள் வாய் திறக்காமல் அதிர்ச்சியோடு அவனை பார்த்திருந்தாள்.

“சாப்பிடு” என விஜய் கூற, தட்டை வாங்க கை நீட்டினாள்.

கொடுக்க மறுத்தவன், “ஏன் நான் தரக் கூடாதா?” எனக் கேட்க, “அந்த உரிமை உங்களுக்கு இருக்குன்னு நினைக்குறீங்களா?” என அவள் அடுத்த கேள்வி கேட்டாள்.

விஜய் அவளை புன்னகையோடு பார்க்க, அவளோ சட்டென சாப்பாட்டு தட்டை பறித்துக் கொள்ள, பார்வையை கோவமாக மாற்றியவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.

ஷீபாவும் ஸ்ரீஜாவும் அறைக்கு சென்று பாவனாவை சாப்பிட செய்து அவளுடன் பேசிக் கொண்டிருக்க விஜய்யிடம் சொன்னதையே அவர்களிடமும் சொன்னாள் பாவனா.

எங்கேயும் வெளியில் செல்ல அவர்கள் மறுக்க, “அப்போ இப்போவே நான் ஊருக்கு கிளம்பறேன். எனக்கு கில்ட்டியா இருக்கு” என்றாள்.

அனுமதி இல்லாத பகுதியில் நுழைந்ததற்காக அபராதம் செலுத்தியது, இரவில் பயந்து கொண்டிருந்தது என ஷாமும் பிரணவ்வும் விஜய்யிடம் சொல்லிக் கொண்டிருக்க ஸ்ரீஜா வந்து பாவனா சொல்வதை கூறினாள்.

“ஆக மொத்தம் இந்த வைல்ட் ட்ரிப் சூப்பரா சொதப்பிடுச்சு, பேசாம நைட்டே நாம ஊருக்கு கிளம்பலாம், எல்லாம் இவன் ஆளு ரதியோட சாபம்” என எப்படியாவது அங்கிருந்து அனைவரையும் கிளப்ப பார்த்தான் ஷாம்.

“அப்படியெல்லாம் பிளானை மாத்தி கிளம்ப முடியாது. என்ன இப்போ… இன்னிக்கு மட்டும் பாவனா ரெஸ்ட் எடுக்கட்டும். மதியம் மேல நாம மட்டும் இங்க பக்கமாவே எங்கேயாவது போயிட்டு வரலாம், நாளைக்கு அவளும் நம்ம கூட ஜாயின் பண்ணிக்குவா” என அனைவருக்கும் அறிவித்தான் விஜய்.

“அவளுக்கு சரியாக வேணாமா? திரும்ப முடியாம போய்டுச்சுனா என்ன செய்றது? ஷாம் சொல்ற படி நைட்டே ஊருக்கு கிளம்பலாம்” என்றாள் ஸ்ரீஜா.

Advertisement