Advertisement

நேச நதி -6

அத்தியாயம் -6 (1)

சிறிய குகை ஒன்றில் இருந்தனர் விஜய் பாவனா இருவரும். பல முறை சொல்லி விட்ட சாரியை மீண்டும் ஒரு முறை சொன்னாள் பாவனா.

“ஒரு புலி பார்க்கிறேன்னு இவ்ளோ தூரம் வந்து வழி தெரியாம நின்னாச்சு. ஒதுங்க இந்த குகை மட்டும் இல்லைனா நாம ரெண்டு பேரும் மழைல சமாதி ஆகியிருக்க வேண்டியதுதான். இல்லைனாலும் அந்த புலியே நம்மள கொன்னு தின்னிருக்கும்” என்றான் விஜய்.

“சாரி”

“உன் சாரி ஓவர்லோட் ஆகிடுச்சு, இனிமே சொல்லாத” என கோவமாக சொன்னவன் தன்னை நிதான படுத்திக் கொண்டு, “நைட் இங்கதான் இருக்கணும் போல. இந்த மழைல யார் வரப் போறா நம்மள தேடி? அதனால இனிமே இங்க இப்படி சிக்கினது பத்தி விவாதம் பண்ணாம எப்படி ஸேஃபா இந்த நைட்ட தாண்டலாம்னு யோசிப்போம்” என்றான் விஜய்.

“அந்த புலி இங்கேயும் வந்தா?” சந்தேகம் கேட்டாள்.

“நீ நினைச்சது நடக்கணும்னுதானே புலிய பார்க்க இறங்கின. அதனால நல்லதாவே நினை, ஏன்னா நீ நினைக்கிறதெல்லாம் நடக்குது” கேலியாக சொன்னான் விஜய்.

“அப்படி மட்டும் நடந்தா உங்களுக்குத்தான் சிக்கல், நான் எதுவும் நினைக்கல போங்க” என சொல்லிக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள் பாவனா.

கிட்டத்தட்ட இருட்டறை போலத்தான் இருந்தது. அவ்வப்போது போனின் டார்ச்சை உபயோகித்துக் கொண்டார்கள்.

நேரம் இப்போது ஆறு என அவளது கைக்கடிகாரம் காட்ட, “போக போக கண்ணு தெரியாத மாதிரி ஆகிடும் போல, போன்ல டார்ச் ஆன்லேயே வச்சிருந்தா சீக்கிரமா பேட்டரி முடிஞ்சிடும், வெளிச்சத்துக்கு ஏதாவது செய்ங்க” என்றாள்.

“ம்ம்… நீ எரியுற மாதிரி ஏதாவது கிடைக்குதா பாரு, நானும் பார்க்கிறேன்” என்றவன் அவளிடமிருந்து போனை வாங்கி டார்ச்சை உயிர்ப்பித்தான்.

“நெருப்புக்கு என்ன செய்றது?” என பாவனா கேட்க ஜெர்கினின் பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்து காண்பித்தான்.

“இது எப்படி உங்ககிட்ட?”

“நான் ஸ்மோக் பண்றதில்லனு உனக்கு தெரியாதா?”

“தெரியும், ஏதும் புதுப்பழக்கமோ நினைச்சேன்”

“நினைப்ப… மருதுகிட்டேர்ந்து சும்மா வாங்கினேன். எப்படியோ மறந்து நானே வச்சுக்கிட்டேன் போல” என்றான்.

குகைக்குள் ஆங்காங்கே காய்ந்த இலைகள் குச்சிகள் என கிடக்க அதை சேர்த்து வைத்தனர்.

“இங்க இருக்கிறது எவ்ளோ நேரம் எரியும் தெரியாது. வெளில காஞ்ச எதுவும் கிடைக்காது நமக்கு, இது மட்டும்தான். ஏதாவது அனிமல் வந்தா கூட நெருப்பு இல்லாம விரட்ட முடியாது. அதனால இப்போவே தீ மூட்ட வேண்டாம். இப்போதைக்கு போன் டார்ச் வச்சு சமாளிக்களாம்” என விஜய் சொல்ல சரியென்றவள் ஓரமாக பாறையில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து கொண்டாள்.

“டிவில மேன் வெர்ஸஸ் வைல்ட் ஷோ பார்க்க என் தம்பி என்கிட்ட சண்டை போடுவான். நான் குத்து சண்டையும் குத்து பாட்டும் பார்த்திட்டு அவனை பார்க்க விட மாட்டேன், அவனும் என்னோட சேர்ந்து வேற வழியில்லாம நான் பார்க்கிறதையே பார்ப்பான். அதை பார்த்திருந்தா இப்படி மாட்டினா எப்படி தப்பிக்கிறது எப்படி சர்வைவ் ஆகுறது எல்லாம் தெரிஞ்சிருக்கும். என் தம்பி விட்ட சாபம் இப்படி மாட்டிகிட்டேன். நீ பார்த்திருக்கியா ஷோ?”

“ப்ச், இல்ல, ஏன் உங்க ரூம்ல தனி டிவி இல்லையா?”

“அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், யார் பெட் ரூம்லேயும் டிவி கிடையாது, படிக்காம விளையாடினா ஏன் தூங்கினா கூட ஒண்ணும் சொல்ல மாட்டார். டிவி பார்த்தா கோவப்படுவார். வேணும்னா நியூஸ் பார்க்கலாம். இல்லைனா இன்ஃபர்மேட்டிவ்வா ஏதும் பார்க்கலாம். டிவி என்டேர்டைன்மெண்ட்க்கு அவருக்கு சொல்லி புரிய வைக்க முடியலை என்னால. ஒரு நாள் டிவியில பாட்டு பார்த்திட்டு இருந்தப்போ அப்பா வந்திட்டார். அந்த நேரம் பார்த்து அர்ஜுனா அர்ஜுனா சாங் ஓட ஆரம்பிச்சிடுச்சு. வெளுத்து வாங்கிட்டார் என்னை” கதை சொல்லிக் கொண்டிருந்தான் விஜய்.

“ஓ சாங் கூட பார்க்காத அளவுக்கு ரொம்ப கட்டுக்கோப்பா வளர்ந்திருக்கீங்க?” கிண்டலாக கேட்டாள்.

“சேச்ச, அவர் அப்படித்தான் கண்ட்ரோலா கட்டுக்கோப்பா என்னை வளர்த்ததா நினைச்சிட்டு இருக்கார். அதுக்குத்தான் அங்கேர்ந்து தப்பிச்சு காலேஜ் படிக்க சென்னைக்கு போய்ட்டேன். அங்க யார் இருந்தா என்னை கண்ட்ரோல் பண்ண?”

பாவனா அவனை சந்தேகமாக பார்க்க டார்ச்சின் ஒளியில் அவளை பார்த்திருந்தவன், “ரொம்ப இமேஜின் பண்ணாத. எனக்கு நானே சில கட்டுப்பாடுகள் வச்சுக்கிட்டேன், நானே என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். எப்பவும் என் லிமிட்ஸ் நான் தாண்டினது இல்லை” என்றான்.

ஈரத்தால் உடலில் ஒட்டிக் கொண்டிருந்த டாப்பை இயல்பாக எடுத்து விட்டுக் கொண்டே, “அதான் எனக்கே தெரியுமே” என்றாள்.

“என்ன தெரியும்?”

“உங்க லிமிட்குள்ள நான் இல்லைனு”

“வர ஆசை படுறியா?”

“இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா அதோட விளைவுகள் நீங்களும் சேர்ந்து ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும். அதுக்கு நீங்க தயாரா இல்லாதப்போ ரெண்டு பேரும் அவங்க அவங்க லிமிட்குள்ள இருக்கிறதுதான் கரெக்ட்”

ஒரு பெருமூச்சு விட்டவன், “உன் ட்ரெஸ் ஈரமா இருக்கா?” எனக் கேட்டான்.

“லைட்டா, மேனேஜ் பண்ணிக்கிற அளவுக்குத்தான் இருக்கு. காஞ்சு போய்டும்” என்றாள்.

விஜய் ஈரம் உட்புகாத ஜெர்கின் அணிந்திருந்ததால் அவன் ஈரமாகாமல் தப்பித்திருந்தான்.

“நீ இங்க வந்திருக்கிறது தெரியுமா உன் வீட்டுல?” கேட்டுக் கொண்டே விஜய்யும் அவள் பக்கத்தில் வந்தமர்ந்தான்.

“ப்ச்…” மறுப்பாக தலை அசைத்தாள்.

“உனக்கு பொறுப்பில்லையா இல்ல அவங்களுக்கு கவலை இல்லியான்னு தெரியலை எனக்கு”

“நீங்க சொல்ற பொறுப்பு கடமை அக்கறை எல்லாத்துக்கும் அப்பாற்பட்டவங்களாகிட்டோம் நாங்க”

“உன் அம்மாவுக்காக இன்னும் உன் அமைதிக்காக உன் அப்பாகிட்ட இன்னொரு முறை பேசித்தான் பாரேன்”

“இருபத்தோரு வருஷம் ஒண்ணா இருந்திருக்காங்க. இப்போ நாலைஞ்சு மாசமாதான் அப்பா அங்க வர்றது இல்ல. இன்னும் அவர் கொடுத்த வீட்லதான் அம்மா இருக்காங்க. நான் சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு எதுவும் தெரியாம புரியாம இல்லை என் அப்பா”

“அவங்களுக்குள்ள கல்யாணம் ஆகலைன்னாலும்… எப்படி சொல்ல… உன் அம்மா வேற ஒருத்தரை மேரேஜ் செய்தா இன்னும் சிக்கல்தானே?”

“விஜய் ப்ளீஸ், நான் சந்திக்க பயப்படற விஷயங்களை நினைவு படுத்தாதீங்க. வேற பேசுங்க” என அவள் சொல்ல சில நிமிடங்கள் அமைதியாக சென்றன.

திடீரென “சொல்லு ஏன் என்னை தெரியாது சொன்ன என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட?” எனக் கேட்டான் விஜய்.

“இந்த டாபிக்கும் வேணாம்”

“ஏன் எரிச்சல் ஆகுற?”

“இன்னிக்குத்தான் நாம கடைசியா மீட் பண்ணினதா இருக்கட்டும். தேவையில்லாத விஷயங்கள் அவாய்ட் பண்ணிட்டு ஜாலியா ஏதாவது பேசுங்க” என்றாள்.

“நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியணும்”

“என்ன தெரியணும் உங்களுக்கு? என்னை பத்தி யாரும் தப்பா நினைக்கிறது எனக்கு பிடிக்கல. உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் இவங்க எல்லாம். நான் வந்து உங்களை ப்ரொபோஸ் செஞ்சேன் உங்களுக்கு விருப்பம் இருந்தும் மறுத்தேன்னு நீங்க சொல்லி ஏன் னு காரணம் வேற சொல்லி…” மேலே சொல்ல முடியாமல் கண்கள் கலங்க முகம் திரும்பிக் கொண்டாள்.

“நான் எப்போ சொன்னேன் உன்கிட்ட எனக்கு விருப்பம்னு?” கடினக் குரலில் கேட்டான்.

“சொன்னீங்கன்னு நானும் எங்க சொன்னேன்?”

“அப்புறம்?”

“எனக்கு தெரியும்”

“என்னை பார்த்து பேசு பாவனா” அதட்டலாக விஜய் சொல்ல கண்ணீர் வராமல் தன் மனதை தயார் செய்து கொண்டவள் நெஞ்சுரத்தோடு அவனை பார்த்தாள்.

“என்ன தெரியும் உனக்கு?” அவள் விழிகளை பார்த்து கேட்டான்.

“தெரியும். யாரும் ஏதும் சொல்லாமலே பார்வையாலேயே தள்ளி நிறுத்தறதை பார்த்து பார்த்து பழக்க பட்டவ நான். என்னால யார் பார்வை எப்படினு கண்டு பிடிக்க முடியும்” என அவளும் அவன் கண்களை பார்த்து பதில் சொல்ல அவன்தான் முகத்தை திருப்ப வேண்டியதாக இருந்தது.

சில நிமிடங்கள் மௌனமாக கரைய, “பிராக்டிகலா சரியா வராதுன்னு தெரிஞ்சுகிட்டே பெரிய வலிய உனக்கு கொடுக்க விரும்பல பாவனா நான். கமிட் பண்ணிட்டா கண்டிப்பா கல்யாணம்…” என விஜய் பேசிக் கொண்டிருக்க அவனது கல்யாணம் என்ற வார்த்தையில் சோகமான சிரிப்போடு அவனை பார்த்தாள் பாவனா.

விஜய்யின் பேச்சு நின்று விட்டது. அடுத்து ஏதும் பேச முடியாமல் தன் நெஞ்சை நீவிக் கொண்டவன், பின் நிலைப்படுத்திக் கொண்டு “சாரி, விடியும் போது எல்லாத்தையும் மறந்திட்டு நல்ல ஃப்ரெண்ட்ஸா போலாம் இங்கேர்ந்து ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.

பாவனாவின் விழிகளில் இருந்து கண்ணீர் வந்தே விட்டது. உதடுகள் துடிக்க சரி என தலையாட்டிக் கொண்டிருந்தவள் வேகமாக அங்கிருந்து எழுந்து குகையின் வாசலுக்கு சென்று நின்று கொண்டாள். முகத்தை மூடிக் கொண்டு அப்படியொரு அழுகை அழுதாள்.

இரு கைகளின் முஷ்டியை இறுக்கி கண்களையும் இறுக மூடிக் கொண்டான் விஜய். விடியாமல் இந்த இரவிலேயே அப்படியே தேங்கி நின்று விடக்கூடாதா காலம்? யாரையும் எதிர் கொள்ள வேண்டாம். இப்படியே இவளுடனே இந்த காட்டில் வாழ்ந்து விடலாம் என மனம் நினைக்க அப்படி ஏதும் சாத்தியம் இல்லை என்பதால் அவனும் எழுந்து அவள் அருகில் நின்றான்.

“உன் அழுகைக்கு நான் காரணம்னு நினைக்கும் போது ரொம்ப அவமானமா இருக்கு பாவனா. நான் என்ன செய்யட்டும். சொல்லு, செய்றேன்” என்றான் விஜய்.

அழுகையை நிறுத்தியவள் இன்னும் கொஞ்சம் வெளியில் செல்ல அவன் அங்கேயே நின்றான். மழை நீரை கையில் ஏந்தி முகம் கழுவிக் கொண்டவள், “நான் சொல்லி நீங்க எதையும் செய்ய வேணாம். நீங்க இப்படியே இருங்க. இந்த நைட் ஸேஃபா கடக்கலாம். அதுக்கப்புறம் எப்பவும் நாம மீட் பண்ணிக்க வேணாம்” என்றாள்.

விஜய் அமைதியாக அவளை பார்த்திருக்க, “தாகமா இருக்கு” என்றவள் மீண்டும் மழை நீரை கையில் பிடித்து குடிக்க அவன் பார்த்தே நின்றான்.

அரை மணி நேரம் அமைதியாக கழிய நன்றாக இருட்டி விட்டது. விஜய் போனின் டார்ச்சை அணைத்து, “தேவை படும் போது யூஸ் பண்ணிக்கலாம்” என்றான்.

முதலில் இருட்டாக இருந்தாலும் நிலவின் ஒளியால் ஓரளவு காட்சிகள் தெரிந்தன.

“பசிக்கலையா உனக்கு?” எனக் கேட்டான்.

“ம்ம்… இந்த இருட்டுலேயும் மழையிலேயும் ஒதுங்க இடம் கிடைச்சதே பெருசு” என்றாள்.

“உனக்கு குளிரலையா, என் ஜெர்கின் போட்டுக்கோ” என்றவன் கழட்ட போக, “வேணாம். உங்களாலதான் குளிர் தாங்க முடியாது நினைக்கிறேன், எனக்கு வேணாம்” என்றாள்.

விஜய் ஜெர்கின் கழட்டி அவளிடம் நீட்ட, “எனக்கு வேணாம்” பிடிவாதமாக மறுத்தாள்.

“பாவனா” அதட்டலாக அவன் அழைக்க, “வேணாம் ங்க, அது இவ்ளோ நேரம் நீங்க போட்ருந்தீங்க தானே? இப்போ நான் யூஸ் பண்ணினா என் மூளை கண்டபடி யோசிக்கும். இன்னும் என்னை நானே கேவலமா நினைச்சுப்பேன். இப்ப வரைக்கும் எனக்கு இருக்கிற ஸ்ட்ரெஸ் போதுமே” என்றாள்.

“என்னை ஏன் பாவனா இன்னும் இன்னும் மோசமா உணர வைக்கிற நீ?” ஆதங்கமாக கேட்டான்.

“ஒரு நாள் நைட் மட்டும்தானே, சகிச்சுக்கோங்க” கண்களை சிமிட்டி சிரித்தாள்.

ஜெர்கினை அவனும் அணியாமல் ஓரமாக வைத்தவன், “நல்லா டான்ஸ் ஆடுவியே நீ, இப்போவும் காலேஜ்ல ஏதும் அப்படி பார்ட்டிஸிபேட் பண்றியா?” இயல்பாக பேச முயன்றான்.

அவளும் பதில் சொல்ல இப்படியாக ஏதோ பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான். அவளும் நல்ல விதமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், “இன்னும் மழை விடல, எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்” என்றவள் வெளியே எட்டிப் பார்க்க மின்னல் வெட்டியது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement