Advertisement

அத்தியாயம் -5(2)

“வேறு ஏதாவது அனிமல்ஸ் தண்ணி குடிக்க இங்க வரலாம் பாவனா” என விஜய் சொல்லும் போதே மழை தூறல் போட ஆரம்பித்தது. அவளை கட்டாயப் படுத்தி அங்கிருந்து எழுப்பிக் கொண்டு சற்று தள்ளியிருந்த அடர்ந்த தோதகத்தி (ரோஸ்வுட்) மரத்தின் அடியில் நின்றான்.

“லேசான மழைல நனையாம இந்த மரம் காப்பாத்திடுச்சு, ஹெவி ரெயின் வந்தா சமாளிக்க முடியாது” என்றான்.

“அந்த மான் பாவம்” என வருத்தமாக சொன்னாள்.

“நம்மளால என்ன செய்ய முடியும்? உணவு சங்கிலி”

“ம்ம்…” என்றவள் முகம் சோகமாக இருந்தது.

“ஏய் அதையே நினைக்காத” என்றான்.

“என்னால முடிஞ்சிருந்தா அந்த மானுக்கு பதிலா நான் இரையாகி இருந்திருப்பேன். பாவம் அந்த மானுக்கு ஒரு ஃபேமிலி இருந்திருக்கும்”

“முட்டாள்தனமா இருக்கு உன் பேச்சு, செந்நாய் கூட்டம் புலிகிட்டவே சண்டை போடும், அதுங்க கிட்ட மாட்டியிருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி”

“என்ன அஞ்சு நிமிஷம் வலிக்குமா இல்லைனா ஒரு பத்து நிமிஷம்…? ஆனா முடிவுல என் கஷ்டத்துக்கு எல்லாம் நிரந்தர தீர்வு கிடைச்சிருக்கும்”

அவள் கையை பற்றியவன் உருண்டு விழுந்த போது ஏற்பட்ட சிராய்ப்பு ஒன்றில் ஒரு விரல் கொண்டு அழுத்த ஆ என அலறினாள்.

“இதை விட ஆயிரம் மடங்கு இருக்கும் வலி”

கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டு உதறியவள், “பரவாயில்ல” என்றாள்.

விஜய் முறைக்க, “நான் நிறைய செர்ச் பண்ணி பார்த்திட்டேன். வலியில்லாம சாக வழியே இல்லை. என்னால சாக ட்ரை பண்ண முடியாது, இப்படி செந்நாய் கடிச்சு செத்திட்டா அமைதியாகிடும் என் மனசு” என்றாள்.

அவள் பேச்சில் அதிர்ந்தவன் நொடிகள் சென்று, “சாகுறதுக்கு இவ்ளோ யோசிக்கிற உனக்கு வாழ ஒரு காரணமும் கிடைக்கலியா?” எனக் கேட்டான்.

“இன்னிக்கு புலிய பார்த்திட்டா சாகறது பத்தி யோசிக்கவே மாட்டேன்” என்றாள்.

“சென்னை போனதும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பாரு பாவனா” கடுப்பாக சொன்னான்.

“ஆன்டி ஆங்சைட்டி டிரக்ஸ் கொடுத்திருக்கார், கூடவே இன்னும் பேர் நினைவுல இல்லாத ஏதேதோ மெடிசின்ஸும் கொடுத்திருக்கிறார்”

“யாரு?”

“சைக்கியாட்ரிஸ்ட் வைத்தியநாதன். இப்போல்லாம் கவுன்சிலிங் எல்லாம் கொடுக்கிறது இல்ல, சர் புர்னு டேப்லெட்ஸ் எழுதி கொடுத்திடுறாங்க. அவர் எழுதி கொடுத்தது எல்லாம் வாங்கி வச்சிருக்கேன், ஆனா நான் எதையும் போடுறது இல்ல” என பாவனா சொல்ல கலவரமாக பார்த்தான் விஜய்.

“தூக்கம் வரலைதான், அதுக்குன்னு அவர் சொல்ற டேப்லெட் போட்டா எதிர்த்தாப்ல உள்ளவங்க சொல்ற சேதி கூட மண்டைக்கு ஏற மாட்டேங்குது. சொய்ங்னு ஒரு மாதிரி… அந்த டாக்டர் என்னை நிஜமான மனநோயாளி ஆக்க பார்க்கிறார்” என்றாள்.

“ஏன் இப்படி இருக்க? உன் அப்பா அம்மாக்கு தெரியுமா இதெல்லாம்?”

“நான் சொல்லலை. தெரிஞ்சா மட்டும் என்ன செய்வாங்க? நீதான் காரணம்னு அப்பா அம்மா கூட சண்டை போடுவார், உன்கிட்டேர்ந்து விலகி போய்ட்டா என் பொண்ணு நல்லாகிடுவான்னு அதையே எங்கம்மா ஒரு சாக்கா வச்சு கல்யாணத்தை சீக்கிரம் பண்ணிப்பாங்க” சிரித்துக் கொண்டே அவள் சொல்ல விஜய் மனநிலை மோசமாகிக் கொண்டிருந்தது.

இப்படியே விட்டால் விரைவில் இவள் மன நலம் பாதிக்கப் பட்டு விடுவாள் என பயந்து கூட போனான். ஆனால் அவன் கையில் எந்த தீர்வுகளும் இல்லை.

மழை விட்டிருந்தாலும் மீண்டும் வரும் என்பது புரிந்த விஜய், “நம்மள ரெஸ்க்யூ பண்ண யாரும் வர்ற வரை மழைல நனையாம எங்கேயாது இருக்கணும் பாவனா. மழைய விட ஏதாவது வைல்ட் அனிமல் வந்தா டேஞ்சர். வா, இப்படியே நடப்போம்” என சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு மீண்டும் நடந்தான்.

சட்டென விஜய் நிற்க பாவனா பேசுவதற்குள் அவளை பேசாதே என சாடை காட்டியவன் வலது பக்கமாக ஓர் இடத்தை சுட்டிக் காண்பித்தான்.

அங்கே சிறு குட்டையில் தண்ணீர் இருக்க இன்னும் உற்று பார்த்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய வாயும் பிளந்து கொண்டது. சில நொடிகள்தான், இப்போது பயம் வந்து கவ்விக் கொள்ள விஜய்யை நெருங்கி அவன் தோளை பற்றிக் கொண்டாள்.

இரை தின்ற புலி ஒன்று அந்த குட்டையில் நீர் அருந்தி விட்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது.

“இவ்ளோ சீக்கிரம் புலிய காட்டிடுச்சு இந்த காடு உனக்கு” மெல்லிய குரலில் கேட்டான் விஜய். பயத்தில் பாவனாவுக்கு பேச்சே வரவில்லை. இப்போது புலி எழுந்து வந்தால் என்னவாகும் என நினைத்துக் கொண்டிருந்தவள் மிரட்சியோடு பார்த்தாள்.

விஜய்க்கும் உள்ளுக்குள் பயம்தான். ஆனாலும் அவளிடம் காண்பிக்காமல், “நம்ம நல்ல நேரம் இப்போ மழை இல்ல, திடீர்னு மழை வந்தா புலி முழிச்சாலும் முழிச்சிக்கும். போய்டலாம் இங்கேர்ந்து” என மிக ரகசியமாக சொல்ல தலையாட்டிக் கொண்ட பாவனாவின் பார்வை அந்த உச்சநிலை கொன்று தின்னியினிடத்தில்தான் இருந்தது.

வனத்துறை அலுவலகத்தில் இருந்தனர் விஜய்யின் நண்பர்கள். மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஸ்ரீஜா அழுது கொண்டிருக்க ஷீபா அவளை ஆறுதல் படுத்தும் விதமாக தன் தோளில் சாய்த்திருந்தாள்.

“பெர்மிசன் இல்லாத ஏரியாவுக்கு உங்களை யாரு போக சொன்னது?” திட்டிக் கொண்டிருந்தார் அதிகாரி.

“பெர்மிட் இல்லாத இடம்னு எங்களுக்கு தெரியவே இல்ல சார்” என பிரணவ் கூற அவர் மருதுவை முறைத்தார்.

பிரணவ் கையை பிடித்து பேசாதே என்றான் ஷாம்.

“அவ்ளோ பெரிய போர்ட் இருந்தது உங்க யார் கண்ணுக்கும் தெரியலை. கூடவே வந்த இந்த மருதுக்கும் தெரியாதா அது டைகர்ஸ் இருக்க ஏரியான்னு? வண்டியிலேர்ந்து இறங்கி ஹீரோயிசம் காட்டுனீங்களா?” கோவமாக பொரிந்தார் அதிகாரி.

பிரணவ் ஷாமை முறைக்க அவன் கண்களால் மன்னிப்பு வேண்ட, “ரொம்ப உள்ள போகல சார், உடனே திரும்பிடலாம்னு நினைச்சு…” அதிகாரியிடம் தடுமாறி திணறி சொல்லிக் கொண்டிருந்தான் மருது.

“இங்க வர்றவங்களுக்கு எத்தனை சொன்னாலும் பயமே கிடையாது சார். இப்படித்தான் மூணு மாசம் முன்னாடி ஒரு க்ரூப் உள்ள போய் மாட்டிச்சு, அப்போ மழை இல்லாததால நம்மளால மீட்க முடிஞ்சது” இன்னொரு வனத்துறை அலுவலர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“தப்புதான் சார், என்ன ஃபைன் கட்டணுமோ கட்டிடுறோம், வேற பனிஷ்மென்ட் கொடுத்தாலும் ஏத்துக்கிறோம். டைக்கர்ஸ் இருக்க இடம்னு சொல்றீங்க, ப்ளீஸ் எப்படியாவது அவங்கள சேவ் பண்ணுங்க சார்” கெஞ்சினான் பிரணவ்.

“நீங்க கிளம்புங்க, இந்த மழைல கொஞ்சம் ரிஸ்க்தான். லோகல் ஆளுங்களையும் வச்சுக்கிட்டு பார்க்கலாம்னா கூட வெளிச்சம் வேணுமே. கவலை படாதீங்க, மனுஷங்கள அடிச்சு திங்குற புலிகள் ஏதும் தற்சமயம் அங்க இல்ல. ஹ்ம்ம்.. பயப்படாம போங்க” என்ற அதிகாரி எழுந்து கொண்டார்.

“புலினாலே மாமிசம் எது கிடைச்சாலும் அடிச்சு சாப்பிடும்தானே?” விடாமல் கேட்டான் ஷாம்.

“இல்ல, வயசான பலமிழந்த புலிங்க, வேட்டையாட முடியாத படி பல் இழந்த புலிங்கதான் மேன் ஈட்டர்ஸா மாறும். அப்படி ஒரு புலி போன வருஷம் நடமாடிச்சு, அதை புடிச்சாச்சு. இப்போ அப்படி புலிங்க இங்க இல்ல” என்றார் அதிகாரி.

“புலி மனுஷங்கள அடிச்சி கொன்னதா மருது சொன்னானே சார்” எனக் கேட்டான் பிரணவ்.

“ஆமாம் மருது பெரியாள்தான், அவன்கிட்டவே எல்லாத்தையும் கேட்டுக்கோங்க” எரிச்சலாக அந்த அதிகாரி கூற,

“இப்ப அப்படி ஏதாவது டைகர் பலமிழந்து மேன் ஈட்டரா மாறலாம்தானே?” பயத்தோடு கேட்டாள் ஸ்ரீஜா.

“பாசிட்டிவ்வா நினைங்க” என அதிகாரி சொல்ல அலுவலர் ஒருவர் வந்து, “சி சி டி வி ஃபுட்டேஜ்ல அவங்க கிடைக்கல சார்” என்றார்.

விஜய்யின் நண்பர்களை கிளம்ப சொல்லி விட்டு வாகனத்தை எடுக்க சொன்னார் அதிகாரி.

ஷாம்க்கும் பிரணவ்க்கும் அங்கிருந்து கிளம்ப மனம் இல்லை. தாங்களும் உடன் வருவதாக சொன்னார்கள்.

“அந்த பொண்ணுங்கள விட்டுட்டு வாங்க” என அவர் சொல்ல பெண்களும் உடன் வருவதாக சொல்ல அந்த அதிகாரி ஒத்துக் கொள்ளவில்லை.

இப்படியாக ஷீபா, ஸ்ரீஜா இருவரும் ரெசார்ட் வந்து விட வனத்துறை அதிகாரிகளோடு ஷாமும் பிரணவ்வும் புறப்பட்டிருந்தனர்.

அடர் வனம் அடர் மழையை தனக்குள் உள் வாங்கிக் கொண்டிருக்க பிரணவ் கண்களில் அச்சம் அப்பட்டமாக தெரிந்தது. இருவருக்கும் ஏதும் ஆகாது என உள் மனதில் திண்ணமாக உணர்ந்த ஷாம், தனியாக பாவனாவுடன் விஜய் இருப்பது குறித்து தீவிர சிந்தனையில் இருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement