Advertisement

நேச நதி -5

அத்தியாயம் -5(1)

பாவனா நல்ல மனநிலையில் இல்லை. அதை விட அத்தனை துன்பங்களும் பாரமாக அவளை அழுத்திக் கொண்டிருந்தன. அம்மாவை அப்பா மணக்க வேண்டும், அம்மா தன் அப்பா அல்லாதவரை மணக்க கூடாது, விஜய் தனக்கு கிடைக்க வேண்டும் என்பன போன்ற பெரிதான வேண்டுதல்கள் இல்லை அவளிடம். நிம்மதி வேண்டும் என மட்டும்தான் நினைத்தாள்.

விஜய் விளையாட்டாக சொன்னாலும் புலியை கண்டு விட்டால் இனியாவது ஏதாவது நன்மை நடக்காதா என்ற நப்பாசை. இனி வரும் நாட்களை கடக்க ஒரு நம்பிக்கை அவளுக்கு தேவையாக இருந்தது. அந்த நம்பிக்கையை புலி ரூபத்தில் தேடி இறங்கி விட்டாள். எங்கு இருக்கிறோம், ஆபத்து இருக்கிறது என்ற சிந்தனை எல்லாம் துளியும் எழவே இல்லை.

சற்று தூரம் நடந்தவள் காட்டுக்குள் செல்ல தொடங்கி விட்டாள். சில்லிப்பான மழைத் தூறல்கள் அவள் மீது விழவும்தான் அவளது நடை நின்றது. சுற்றிலும் பார்க்க எந்த வழி என்று எதுவும் புரியவில்லை. நெஞ்சை பயம் கவ்வ அதற்கு மேல் முன்னேறவும் முடியாமல் திரும்பி செல்லும் வழியும் சரி வர புரியாமல் அங்கேயே நின்று விட்டாள்.

அந்த அடர்ந்த காட்டில் அனாதரவாக நிற்பது போல தோன்ற தன்னிரக்கமும் சூழ்ந்து கொண்டது. நிமிடங்கள் கரைய அனைத்திலிருந்தும் மனம் விட்டுப் போன நிலை. யாருக்கும் நான் அவசியமில்லை, இங்கேயே ஏதாவது மிருகத்துக்கு இரையாகி போகிறேன். அதற்குத்தான் என் பிறப்பு, ஆமாம் ஒரு உயிருக்கு உணவாகி என் பிறப்பின் பயனை அடைந்து விடுகிறேன். சித்தம் கலங்கியவள் போல ஏதேதோ சிந்தித்தாள்.

தூறல் நின்று போனது. ஏதோ ஓர் உயிரினம் காட்டு செடிகளுக்கு இடையில் ஓடியதன் விளைவாக சத்தம் ஏற்பட பாவனாவின் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. மூச்சு விட்டால் கூட அந்த சத்தம் கேட்டு என்னை அது ஏதாவது செய்து விடுமோ என பயந்தவள் வாயை பொத்திக் கொண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டாள்.

சற்று முன் உயிர் துறக்க எண்ணியவள் இப்போது உயிர் பயத்தில் உறைந்து நின்றாள்.

“பாவனா பாவனா…” என விஜய் அழைக்கவும், ஸ்மரணை வந்து இயல்பாக மூச்சு விட்டவள் அவன் பெயரை சொல்லி சத்தமிட சில நிமிடங்களில் விஜய் வந்து சேர்ந்தான் அவளிடம்.

 உச்ச பட்ச கோவத்தில் இருந்தவன் என்ன திட்டியிருப்பானோ என்ன செய்திருப்பானோ ஆனால் அவனை கண்ட நொடியே அழ ஆரம்பித்திருந்தாள் பாவனா.

கோவத்தை கட்டு படுத்தியவன் அவளருகில் சென்று ஆதரவாக அவள் கையை பிடித்துக் கொண்டான்.

ஏன் வந்தேன் என அழுது கொண்டே பாவனா கூற விஜய்யின் கோவம் தூர சென்றது.

“விளையாட்டா சொன்னதை போய் சீரியஸா எடுப்பியா? நான் சொல்றேன், உனக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். நம்மள தேடி பயந்திட்டு இருக்க போறாங்க. வா” என்றான்.

அவளும் கண்களை துடைத்துக் கொண்டு அவனோடு புறப்பட தயாராக விஜய் வந்த வழியில் சற்று தூரமாக ஒரு கரடி தெரிந்தது. அதை காட்டியவன், “நாம வேற பக்கமாதான் போகணும்” என்றான்.

“கரடி என்ன செய்யும்? எனக்கு சுத்தமா வழி தெரியலை, இப்போ உங்களுக்கு தெரிஞ்ச வழிய விட்டு போறதுன்னா ரிஸ்க்தானே?”

“நீ ஜீப் விட்டு இறங்கினதே பெரிய ரிஸ்க்தான்” சிடு சிடுப்பாக சொன்னான்.

“அதுக்குத்தான் சாரி கேட்டேனே. இப்போ வெயிட் பண்ணி கரடி போனதும் இப்படியே போலாம்” என்றாள்.

“ம்ஹூம்” மறுத்தவன், “கரடி பிஹேவியர் நம்மளால அனுமானிக்க முடியாது. திடீர்னு அட்டாக் பண்ணினா தொலைஞ்சோம். பார்வை திறன் கம்மின்னாலும் கேட்குறதும் மோப்பம் பிடிக்கிறதும் செமயா இருக்கும். அதோட நெயில்ஸ் எல்லாம் செம ஷார்ப்பா இருக்கும், சகதியும் அழுக்கும் நகத்துல சேர்ந்து போய் பாக்டீரியாஸ் நிறைஞ்சு இருக்கும். அதனால கரடி அட்டாக் பண்ணி உயிர் பொழச்சா கூட அந்த காயம் எல்லாம் லேசுல ஆறாது” என ஆபத்தை விளக்கினான்.

எச்சில் கூட்டி விழுங்கியவள் “உங்களுக்கு எப்படி தெரியும் இதெல்லாம்?” எனக் கேட்டாள்.

“ரொம்ப முக்கியம், கொஞ்ச நேரம் முன்னாடி கரடி பார்த்தப்ப மருது சொன்னது இதெல்லாம். நீதான் ஒண்டர்லேண்ட்ல இருந்தியே” நக்கலாக கூறிய விஜய் சுற்றிலும் பார்த்து விட்டு “அங்க வழி இருக்க மாதிரி இருக்கு. அப்படியே நடந்து போனா ரோட்டை பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன்” என சொல்லி இடது பக்கமாக நடக்க அவளும் அவனுடன் நடந்தாள்.

மழை மீண்டும் தூறல் போட சமதளமாக இல்லாத அந்த இடத்தில் இருவராலும் இலகுவாக நடக்க முடியவில்லை. ஆங்காங்கே சேற்றினால் கால் வேறு உள் வாங்கியது. எப்படியோ சிரமப்பட்டு மெதுவாக நடந்து கொண்டிருக்க திடீரென கால் இடறி விழுந்த பாவனா கண்ணிமைக்கும் நேரத்தில் உருள ஆரம்பித்தாள். அதிர்ந்த விஜய் அவளை நோக்கி கவனமாக நடந்து சென்றான்.

பாவனா ஏதோ ஒரு செடியை பற்றிக் கொண்டு சமாளித்து அதற்கு மேல் உருளாமல் நிலத்தில் கிடக்க அவளிடம் வந்தவன் மண்டியிட்டு அமர்ந்து அவளையும் தூக்கி அமர செய்தான்.

நல்ல வேளையாக அவள் கைகளில் மட்டுமே சிராய்ப்பு இருந்தது. பெரிதான அடிகள் இல்லை. ஆனால் அதுவே அவளுக்கு வலியை கொடுக்க மௌனமாக கண்ணீர் விட்டாள்.

அவள் கை பற்றி ஆராய்ந்தவன், “ஈஸி ஈஸி, ஒண்ணுமில்ல பாவனா, வேற எங்கேயும் அடி இல்லியே” எனக் கேட்டு இல்லை என உறுதி செய்து கொண்டு அவளை எழ செய்தான்.

மீண்டும் அங்கிருந்து மேலேறுவது சிரமம், ஏறினால் கூட மீண்டும் இதே போல வழுக்கி விழும் ஆபத்து இருக்கிறது என்பதால் இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி பின்னர் வழி கண்டறிந்து செல்லலாம் என முடிவு செய்த விஜய் கீழ் நோக்கி நடக்க அவனுக்கும் பின்னால் அவன் கையை பிடித்துக் கொண்டே வெகு கவனமாக நடந்தாள் பாவனா.

இப்போது நடக்க சிரமம் இல்லாத பகுதிக்கு வந்து விட்டனர். ஆனால் எப்படி செல்வது என சுத்தமாக புரிபடவில்லை. விஜய்யின் கைபேசி அவனிடம் இல்லை. பாவனாவிடம் கேட்க அவள் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தாள். அதில் அறவே டவர் இல்லை.

“நான் ஏன் இப்படி பண்ணினேன்னு தெரியலை. யோசிக்காம இறங்கிட்டேன், நீங்களும் சேர்ந்து மாட்டிகிட்டீங்க. சாரி… நாம… நாம இங்கேர்ந்து போய்டலாம்தானே?” பயத்தோடு கேட்டாள்.

“நான்தான் கூட இருக்கேனே, கவலை படாத. பசங்க ஏதாவது பண்ணி நம்மள அழைச்சிட்டு போக வருவாங்க” என சமாதானம் செய்தான்.

அவளுக்கு சமாதானம் சொன்னாலும் சற்று பதற்றமாகத்தான் இருந்தான் விஜய். இவனே பாவனாவை கண்டு பிடிக்க நேரம் எடுத்திருக்க சாலையிலிருந்து வெகு தூரம் வந்து விட்டவர்களை அவர்களால் அத்தனை எளிதில் கண்டு பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை அவனுக்கு.

வானிலை வேறு திடீர் திடீரென இருட்டி பின் வெளிச்சம் கொடுத்து மழை தூறி, நின்று என பயமுறுத்திக் கொண்டிருந்தது. மதியம் மூன்று மணியே ஆகியிருக்க ஆறு மணி போல காட்சியளித்தது வனம்.

பாவனாவை பயப்படுத்த விரும்பாமல் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டே பாதுகாப்பான இடம் ஏதும் கிடைக்காதா என அதிக கரடு முரடுகள் இல்லாத இடமாக பார்த்து நடந்தான். ஐம்பதடி தூரத்தில் இவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது.

ஏழு எட்டு செந்நாய்கள் கூட்டமாக ஒரு மானை இரையாக்கிக் கொண்டிருந்தன. பார்த்த பாவனாவின் கண்கள் கலங்கி விட அதற்கு மேல் பார்க்கும் சக்தி இல்லாமல் விஜய்யின் ஜெர்கினை பற்றி அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

ஆதரவாக அவளை பிடித்துக் கொண்டவன், “ஃபாரெஸ்ட்ல இதெல்லாம் நார்மல். ஃபீல் பண்ணாத பாவனா. நாம இங்கேர்ந்து உடனே போகணும்” என்றான்.

அவள் நிமிர்ந்து அவனை பார்க்க, “ஆப்போசிட் சைட் நட” என சொல்லி அவள் கை பிடித்துக்கொண்டு அந்த செந்நாய் கூட்டத்திற்கு எதிர் திசையில் வேகமாக நடக்க பதை பதைக்கும் நெஞ்சத்தோடு இவளும் நடை போட்டாள்.

சிற்றாறு ஒன்று இடையில் வர தாகம் தணித்துக் கொண்டார்கள். பாவனா தன் ஆடையில் ஆங்காங்கே இருந்த சேறு சகதிகளை சுத்தம் செய்து கொண்டாள். கையில் இருந்த சிராய்ப்புகளை கழுவிக் கொள்ளும் படி விஜய் கூற அவளும் கையை நீரில் வைத்தாள். காயங்களின் எரிச்சல் அதிகமாக சுத்தம் செய்வதை விட்டு விட்டாள்.

“வாஷ் பண்ணு” அதட்டியவன் அவனே அவள் கையை இழுத்து தண்ணீரில் முக்கி லேசாக தொட்டு துடைத்து கழுவ அவனிடமிருந்து கையை வெடுக் என பிடுங்கிக் கொண்டவள் அவளாகவே மெதுவாக வலியை பொறுத்து சுத்தம் செய்து கொண்டாள்.

“இதைதான் நானும் செஞ்சேன்” என்றான் விஜய்.

“எனக்கு நானே பண்ணிக்கிறேன், நீங்க வேணாம்” என்றாள்.

“ஹெல்ப்பா நினைச்சுதான் செயதேன்”

“நானும் தப்பா சொல்லலை, உங்க ஹெல்ப்தான் வேணாம் சொல்றேன்”

“ம்ம்ம்… காட்டுக்குள்ள வந்த உன்னை நான்தான் தேடிட்டு வந்தேன், இப்போ உன்னாலதான் நானும் இங்க மாட்டியிருக்கேன். அங்க என் ஃப்ரெண்ட்ஸ் கதி என்னன்னு தெரியலை”

“ஏன் கோவ படுறீங்க? நான் எதையும் இல்லைனு சொல்லலை. ஆனா இப்படி டச் பண்ணி ஹெல்ப் வேணாம்” தணிந்த குரலில் சொன்னாள்.

“கொஞ்ச நேரம் முன்னாடி என் மேல நீதான் சாஞ்சுகிட்ட, தனியா இருக்கிறது யூஸ் பண்ணிக்கிற சீப் ஃபெலோன்னு நினைச்சியா என்னை? இல்ல சான்ஸ் கிடைச்சா என்ன வேணா செய்ற பொறுக்கினு நினைச்சியா?”

“ப்ளீஸ் கத்தாதீங்க. உங்களை தப்பாவே சொல்லலை” கெஞ்சுதலாக சொன்னாள்.

“அப்போ கையை அப்படி உதறின… என்ன மீனிங் அதுக்கு? உண்மையை சொல்லு, என்னை பத்தி என்ன நினைச்ச நீ?”

“உங்களை பத்தி எதுவும் நினைக்கல. நான்தான் பயந்திட்டேன், எங்க என்னை பிடிச்ச உங்க கையை விடாம நான் பிடிச்சுக்குவேனோன்னு எம்மேலதான் எனக்கு பயம். உங்களுக்கு புரியாது, என்னை வேணாம்னு சொல்ற ஒருத்தர் டச் ஹக் எல்லாம் வேணும் வேணும்னு தோணுது. இன்னும் இன்னும் என்னை லோ வா நினைக்கிறேன்” கண்களில் கோர்த்து விட்ட நீரோடு பாவனா சொல்ல ஹையோ என்றானது விஜய்க்கு.

அடுத்து என்ன பேசுவதென தெரியாமல் தன்னை குற்றவாளி போல உணர்ந்தவன், “கிளம்பலாம்” என சமாதானக் குரலில் சொன்னான்.

“என்னால முடியலை, கால் வலிக்குது” என்ற பாவனா அங்கேயே அமர்ந்து விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement