Advertisement

நேச நதி -4

அத்தியாயம் -4(1)

தயாரான விஜய் ஜெர்கின் அணியாமல் கையில் எடுத்துக் கொண்டு கதவை திறக்க கோவமாக உள்ளே வந்த ஷாம் வேகமாக கதவை அடைத்தான்.

“என்னடா நான்தான் கரெக்ட் டைம் கிளம்பிட்டேனே?” என்றான் விஜய்.

விஜய்யை கோவமாக பார்த்து நின்ற ஷாம், “நீ சரியில்லை விஜய்” என குற்றம் சாட்டினான்.

“எதையும் ஒழுங்கா சொல்லாம என்னடா உளறிட்டு இருக்க?” என விஜய் எரிச்சல் பட்டான்.

“காலைல பாவனா கூட என்ன பண்ணிட்டு இருந்த?” என தீர்க்கமாக அவனை பார்த்துக் கொண்டே கேட்டான் ஷாம்.

விஜய் உள்ளுக்குள் திகைத்தாலும் வெளியில் இயல்பாக காட்டிக் கொண்டு, “சும்மா வாக் போலாம்னு போனேன், பாவனா சோகமா இருக்கவும் சும்மா பேசினேன்” என்றான்.

“ஓ அப்படியா? உன் ரூம் பாத்ரூம்ல தண்ணி வரலைன்னு அவ முன்னாடியே குளிச்சியா?” நக்கலும் கோவமுமாக கேட்டான்.

தாடை இறுக நண்பனை பார்த்த விஜய், “நேரம் ஆகுது, எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க. கிளம்பலாம் வா. நாம நைட் பேசலாம்” என்றான்.

“நீ பேசித்தான் உன்னை புரியணும்னு எனக்கு இல்லை விஜய். எந்த பொண்ணு மேலேயும் நீ இப்படி அக்கறை காட்டி நாங்க யாரும் பார்த்தது இல்ல, அந்த பொண்ணுகிட்ட கிட்டத்தட்ட வழியுறடா நீ”

“என்னடா இப்போ உனக்கு?” இரைந்தான் விஜய்.

“பாவனா அம்மா அவ அப்பாக்கு செகண்ட் வைஃப், அங்கேயே நீ நினைக்கிறது நடக்க வாய்ப்பு இல்லைனு முடிவாகிடுச்சு. இப்போ அவ அம்மா இன்னொரு கல்யாணம் செய்ய போறாங்கனு ஷீபா சொல்றா. நீ செய்ற எல்லாத்துக்கும் ஒத்து ஊத முடியாது. உன் பேரெண்ட்ஸ் சம்மதிக்கிறதை விடு, நாளைக்கு உனக்கே தப்பா தெரியும், வேணாம் விஜய்” மிரட்டலாகவே எச்சரிக்கை செய்தான்.

விஜய்யின் கண்களின் ஓரம் சிவப்பாக ஷாமை பாராமல் வேறெங்கோ பார்த்திருந்தான்.

“அழகு என்னிக்கும் ஆபத்தானது. பாவனா அம்மா எப்படியோ அப்படித்தான் இவளும்…” அடுத்த வார்த்தை ஷாம் பேச முடியாத படி அவனை அறைந்திருந்தான் விஜய்.

ஷாமும் கோவமாக விஜய்யை அடிக்க லேசான கைகலப்பானது இருவருக்கும். இன்னும் இவர்களை காணவில்லையே என பார்க்க வந்த பிரணவ் அதிர்ந்து பின் சுதாரித்து இருவரையும் விலக்கி விட்டான்.

ஷாம் ஓரளவு அமைதியாக இருக்க சீற்றம் தணியாத விஜய் ஷாமின் தோளில் வலிக்க அடித்தான். இப்போது ஷாமும் கோவம் கொள்ள, “டேய் என்னங்கடா பண்ணிக்கிறீங்க? நிறுத்தி தொலைங்கடா” என கத்திய பிரணவ், விஜய்யை இழுத்து படுக்கையில் அமர வைத்தான்.

“அந்த ராஸ்கல் என் கண்ணு முன்னாடி நிக்க கூடாது, போக சொல்டா அவனை” என கத்தினான் விஜய். அவனை ஒரு கையால் பிடித்துக்கொண்டே ஷாமிடம் என்னடா என கண்களால் கேட்டான் பிரணவ்.

நிதானத்திற்கு வந்திருந்த ஷாம், “நீ போ, நான் அழைச்சிட்டு வர்றேன் இவனை” என்றான்.

“எதுக்கு மண்டைய உடைச்சிக்கவா?” எனக் கேட்டு விஜய் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான் பிரணவ்.

“ஏய் போடா, நான் சண்டை போட மாட்டேன், அவன் கை நீட்டினா கூட வாங்கிக்கிறேன். போ டென் மினிட்ஸ்ல வந்திடுவோம் நாங்க” என ஷாம் சொல்ல, விஜய்யும் அமைதியாக இருக்க, “கேங் உள்ளேயே இன்னொரு கேங் ஃபார்ம் பண்றீங்கடா, டென் மினிட்ஸ்குள்ள வரலை, நாங்க எல்லோருமே இங்க வந்திடுவோம்” என சொல்லி அறையை விட்டு வெளியேறினான் பிரணவ்.

விஜய் அருகில் அமர்ந்த ஷாம் அவன் தோளில் கை போட்டுக் கொள்ள அவன் கையை தள்ளி விட்டான் விஜய்.

“மச்சான், ஒரு வார்த்தை அந்த பொண்ணு பத்தி பேசினா தாங்க முடிய மாட்டேங்குது உனக்கு. என்னடா இதெல்லாம்?” எனக் கேட்டான் ஷாம்.

“எப்படி நீ அவளை தப்பா சொல்லலாம்? போடா இங்கேர்ந்து”

“நான் தப்பா சொல்ல வரலை அந்த பொண்ண, மத்தவங்க என்ன பேசுவாங்கன்னுதான் உனக்கு சொல்ல வந்தேன். நாளைக்கு உன் மனைவியா வந்த பிறகு எத்தனை பேரை அவளை தப்பா பேசாதீங்கனு சொல்லி புரிய வைப்ப? உன் அப்பாம்மா புரிஞ்சுப்பாங்களா முதல்ல? உன் பேரெண்ட்ஸ்… இல்லைனா இந்த பொண்ணு ஏதாவது ஒண்ணைத்தான் உன்னால சூஸ் பண்ண முடியும்”

“அது என் கவலை”

“விட்டேன்னா பாரு!”

“நீதான் இப்போ சாவடி வாங்க போற என்கிட்டேர்ந்து” கத்தினான் விஜய்.

“மச்சான்… உனக்கு உன் குடும்பம்தான் முக்கியம்னு எனக்கு தெரியும். உன் அம்மா லைட்டா அழுதாலே நீ ஆள் கொலாப்ஸ் ஆகிடுவ. உன்னால ஹாண்டில் பண்ண முடியாது. இப்போ கண்ட்ரோல் இல்லாம சிக்குனன்னு வை…”

“வாய மூடிட்டு போடா!” ஷாம் தோளில் கை வைத்து தள்ளி கோவமாக சொன்னான்.

“நல்லா பழகின பிறகு லவ் ஃபெயிலியர் எல்லாம் உன்னால தாங்க முடியாது. அந்த பொண்ணும் கஷ்ட படும், விட்ரு மச்சான்” பொறுமையாகவே சொன்னான் ஷாம்.

ஒரு கையால் நெற்றியை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான் விஜய்.

“உனக்கு ஒரு தம்பி இருக்கான், அவனை விடு, உன் தங்கச்சி லைஃப் நினைச்சி பார்த்தியா? உன் செயல் எல்லார் லைஃபையும் அஃபெக்ட் பண்ணும்னு உனக்கு புரியலையா? கேரக்டர்க்கு எவ்ளோ இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறவர் உன் அப்பா… அவர் எப்படிடா ஒத்துக்குவார்? உன் இஷ்டம்தான்னு நீ முடிவு செஞ்சாலும் உன் அம்மாவை விட்டு இருந்திடுவியா நீ?” ஷாமின் கேள்விகளுக்கு பதில் இல்லை விஜய்யிடம்.

“எல்லாம் உனக்கு தெரியுதுதான், ஆனாலும் மெல்ட் ஆகுற அந்த பொண்ணுகிட்ட. கண்ட்ரோல் டா” என ஷாம் சொல்ல நிமிர்ந்து அவனை பாவமாக பார்த்தான் விஜய்.

“எதுவும் பிரச்சனை இல்லடா, இந்த ட்ரிப் முடியுற வரை அந்த பொண்ண தனியா மட்டும் மீட் பண்ணாத. நான் இருக்கேன் உன் கூட, மூணு நாள்ல இங்கேர்ந்து கிளம்பிடலாம், ஊருக்கு போய் ஒன் வீக் உன் அம்மா கூட இருந்திட்டு வா, சரியாகிடுவ” என ஷாம் பேசிக் கொண்டிருக்க கலைந்திருந்த தன் கேசத்தை கை கொண்டு கோதி சரி செய்து கொண்டே, “செத்து செத்து பொழைக்கிறேன் டா. நீயும் சேர்ந்து கொல்ற” என்றான்.

விஜய் சட்டையை நீவி விட்ட ஷாம், “ஸ்டே ஸ்ட்ராங் மேன், ஆஃப்டர் ஆல் லவ் டா” என்றான்.

ஷாம் பார்த்து இயலாமையோடு சிரித்த விஜய், “ஆஃப்டர் ஆல் லவ்? கண்ணுக்கு தெரியாத ஆயுதம்னு சொல்லு” என்றான்.

“ம்ம்… இங்கேர்ந்து கிளம்பிட்டா நீ ஸேஃப் ஃஸோன் போய்டுவ. அதுவரைக்கும் நான்தான் உனக்கு கவசம்” எனக் கூறி சிரித்தான்.

“புண்ணாக்கு!” என திட்டிய விஜய், “வா, போலாம்” என்க ஷாமும் எழுந்து கொண்டான்.

அங்கேயே இருந்த உணவகத்தில் மற்றவர்கள் ஏற்கனவே குழுமியிருக்க விஜய்யும் ஷாமும் வந்து சேர்ந்தார்கள். எல்லாம் ஓகேவா என கண்களால் விசாரித்து தெரிந்து கொண்டான் பிரணவ்.

பாவனாவின் பக்கம் தன் பார்வை செல்லாமல் அரும் பாடு பட்டு தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான் விஜய்.

உணவு முடிய அனைவரும் கிளம்பினர். குளிருக்கு ஏற்றவாறு அனைவரும் தயாராகியிருக்க பாவனா மட்டும் ஜீன்ஸ், ஒரு டாப் என இருந்தாள்.

“ஸ்வெட்டர் ஜாக்கெட் ஏதாவது கைலயாவது வச்சுக்க பாவனா” என்றாள் ஸ்ரீஜா.

“ப்ச்…” மறுத்து சொல்லி விட்டு நடந்தவளை பார்த்து, “இன்னிக்கு நைட் இவளுக்கு ஜன்னி வரப் போகுது” என்றாள் ஷீபா. இப்படியே பேசிக் கொண்டு ஜீப்பில் ஏறிக் கொண்டனர்.

அந்த பகுதி ஆள் மருது என்பவனை கைட் ஆக ஏற்பாடு செய்திருந்தான் ஷாம். ஏற்கனவே ஆண் நண்பர்கள் மூவருமாக சில வருடங்களுக்கு முன் இங்கு வந்த அனுபவம் உண்டுதான் என்றாலும் இங்குள்ள ஆள் ஒருவர் உடன் வருவது நல்லது என நினைத்தே மருதுவையும் வர சொல்லியிருந்தான்.

இப்போது ஷாம் வண்டி ஓட்ட அருகில் மருது அமர்ந்திருக்க கடைசி இருக்கையில் ஸ்ரீஜாவும் பிரணவ்வும் இருக்க நடு இருக்கையில் ஷீபாவை தங்களுக்கு இடையில் அமர்த்தி ஆளுக்கு ஒரு பக்கமாக விஜய்யும் பாவனாவும் இருந்தனர்.

பசுமையும் இதமான தட்ப வெப்பமும் விஜய், பாவனா இருவரை தவிர மற்றவர்களின் மனதை இதப் படுத்தியது.

ஷாம் பேசியதும் பாவனா வேண்டாம் என உறுதியாக நினைத்த விஜய் அவளை நேரில் கண்ட நொடியிலிருந்து அவள் வேண்டும் என நினைக்க தொடங்கி விட்டான்.

“வண்டியிலேர்ந்து இறங்கிடாதீங்க, சத்தம் போடாதீங்க, ஹாரன் அடிக்காதீங்க, காட்டு இலாகா ஆளுங்க கிட்ட குரல் உசத்தாதீங்க” என பல கட்டளைகள் போட்டான் மருது.

“ஏற்கனவே வந்த நாங்கதான் மருது” என்றான் ஷாம்.

“இப்ப எல்லாம் ரொம்ப கெடுபிடி பண்ணிட்டாங்க. அனுமதி இல்லாத இடத்துக்குள்ள தெரியாம நுழைஞ்சா கூட பத்தாயிரம் வரை ஒரு ஆளுக்கு ஃபைன் போடுறாங்க” என்றான் மருது.

“அவ்ளோவா?” எனக் கேட்டாள் ஷீபா.

“ஆமாங்க, நாலு மாசம் முன்னாடி யானை மிதிச்சு ரெண்டு பேர் செத்துட்டாங்க. ஆறு மாசம் முன்னாடி ஏழு பேர் ஒரு பெரிய கார்ல வந்தவங்கள காணோம். தேடி பார்த்தா ஒரு வளைவுல கார் பிரேக் பிடிக்காம பள்ளத்துல விழுந்திருக்கு. ஒரு ஆள் கூட உசுர் தப்பலங்க. புலி சிறுத்தை நடமாட்டம் வேற இருக்குங்க” என மருது சொல்ல ஷீபா கலவரமாக பாவனாவை பார்க்க அவளோ சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆமாம்டா, ரதி கூட ஒரு வீடியோ அனுப்பியிருந்தா நைட். வால்பாறைல ஒரு யானை காரை துரத்திட்டே போகுது” என கைபேசி எடுத்து வீடியோவை காண்பித்தான் பிரணவ்.

“இது சதி வேலைடா மச்சி. நைட் உன் தூக்கம் போச்சா, நல்லா செய்யுது டா ரதி” கடுப்பாக சொன்னான் விஜய்.

“இந்த சிங்கிலா சுத்தறவங்க எல்லாம் லவ்வர்ஸ் கண்டா ஏன் டா பைல்ஸ் வந்தவன் மாதிரியே இரிடேட் ஆகுறீங்க?” பிரணவ்வும் கடுப்பானான்.

“பைல்ஸ் பரவாயில்ல, லவ் பண்றவனுக்கு எல்லாம் டென்ஷன் கூடிப் போய் பைபாஸ் பண்ற அளவுக்கு ஆகிப் போகுது” என்றான் ஷாம்.

“அப்போ பைபாஸ் பண்ணிக்க டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டேன்னு சொல்லு” கிண்டலாக சொன்னான் பிரணவ்.

“உனக்கும் சேர்த்துதான் வாங்கி வைக்கப் போறேன்” என்றான் ஷாம்.

“ஓவரா பொண்ணுங்களையே சொல்லாதீங்க, இவனை விட்டுட்டு ரதி இதே போல ட்ரிப் போனா இவனும் இப்படித்தான் நொச்சு பண்ணுவான்” என்றாள் ஸ்ரீ.

“உன் ஹப்பி உன்னை ஃப்ரீயா விடல?” விஜய் கேட்டான்.

“ஆமாம் காலைல எழுந்ததிலேர்ந்து இப்போ போற வரைக்கும் எல்லாத்தையும் அப்டேட் பண்ண வேண்டியதா இருக்கு. எங்களுக்கு சுதந்திரமே இல்லடா” புலம்பினாள் ஸ்ரீ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement