Advertisement

அத்தியாயம் -24(2)

கங்கா சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்தார். வைஷு திருமணம் போதே பாவனாதான் இந்த வீட்டு மருமகள் என தெரிந்தாலும் ஆளாளுக்கு ஏதேதோ பேச செய்தனர். அதனை கொண்டு பாவனாவையே முன் நின்று அனைத்தையும் செய்ய வைத்தார்.

எப்பொழுதும் போல விமரிசையாக எல்லாம் ஏற்பாடாகியிருந்தது. உறவினர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் வந்திருந்தனர். சௌந்தரி, வைஷு, மிருதுளா, ஸ்ரீ என வீடு நிறைந்து போயிருந்தது. வீட்டு ஆண்களும் அன்று வீட்டில்தான் இருந்தனர்.

பாட்டி வாங்கி கொடுத்த பட்டு பாவாடை சட்டையில் வளர ஆரம்பித்திருந்த முடியில் ஒற்றை குடுமி போட்டிருந்தாள் ஆழினி. தாத்தா மடியில் அமர்ந்து தன் மருதாணி இட்ட கை காட்டி அழகாக பேத்தி பேசிக் கொண்டிருக்க அவள் குடுமியை சுற்றிலும் மல்லிகை பூவை அழகாக சூடி விட்டு திருஷ்டி எடுத்தார் கங்கா.

“ரோஸ் வேணும். ரெட் ரோஸ்” விழிகளை விரித்து உரிமையாக பாட்டியிடம் கேட்டாள்.

“முடி இன்னும் கொஞ்சம் வளரட்டும்டி கண்ணு. இந்த பூவையே அரும்பாடு பட்டு வச்சு விட்ருக்கேன்” என கங்கா சொல்லிக் கொண்டிருக்க உள்ளே சென்று சிகப்பு ரோஜா ஒன்றை எடுத்து வந்த பிரசன்னா, “வச்சு விடும்மா. விழுந்தா விழுது. ஆசையா கேட்கும் போது எப்படித்தான் உன்னால நோ சொல்ல முடியுதோ” என்றான்.

சின்ன மகனை முறைத்து விட்டு பூவுக்காக கங்கா கை நீட்ட காம்பில் முள் எதுவும் இருக்கிறதா என நன்றாக பார்த்து விட்டு கொடுத்தான் பிரசன்னா.

கங்கா வைத்து விட, “ஆ வலிக்குது மெதுவா பாட்டி” என ஆழினி சிணுங்க, “பார்த்து செய்ய மாட்டியா நீ?” என கடிந்து கொண்டே பேத்தியின் தலையை தடவி விட்டார் அரங்கநாதன்.

கோவம் கொண்ட கங்கா, “அவளுக்கு முடி போதலைனு சொல்றேன். சும்மா என்னை பேசிக்கிட்டு, இந்தாங்க நீங்களே வச்சு விடுங்க. வைக்க முடியலைனா காதுல சொருகிங்க. உள்ள ஆயிரெத்தெட்டு வேலை கிடக்கு எனக்கு” என சொல்லி சென்று விட்டார்.

அரங்கநாதன் பாவமாக பேத்தியை பார்க்க, “ஹ்ஹா… பூ வைக்கிறது பெரிய வேலையா ப்பா? கொடுங்க இங்க” என்ற பிரசன்னா அவனே பூவை வாங்கி வைக்க முயல ஏற்கனவே வைத்திருந்த மல்லி பிரிந்து குடுமியும் கலைந்து போனது.

ஆழினி உதடு பிதுக்க ஆரம்பிக்க, முறைக்கும் அப்பாவை அசடு வழிய பார்த்த பிரசன்னா, “அழாத குட்டிமா. சாக்லேட் வாங்கி தர்றேன்” என்றான்.

ஆழினி தேம்பிக் கொண்டே தாத்தாவை பார்க்க தூரமாக நின்றிருந்த விஜய் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இவர்கள் அருகில் வந்தான்.

ஆழினி தந்தையிடம் குறை படிக்க, “பூ விழுந்தா ஏன் அழற? என்கிட்ட எடுத்திட்டு வந்தா வச்சி விட போறேன். ஆழிக் குட்டி எப்பவும் எதுக்காகவும் அழக் கூடாது” என சொல்லிக் கொண்டே மகளின் தலையை சீர் செய்ய ஆரம்பித்தான்.

“நாங்க ஏற்கனவே ட்ரை பண்ணிட்டோம், முடி கைக்குள்ள அடங்கினாதானே? ஆழி சமத்துதான் அவ முடிதான் அவ அப்பனை மாதிரி” என சொல்லிக் கொண்டே அண்ணனுக்கு உதவி செய்தான் பிரசன்னா.

“ஆமாம் என் பொண்ணோட சித்தப்பன் மட்டும் ரொம்ப அடக்கம்!” தம்பிக்கு பதில் கொடுத்துக் கொண்டே மகளின் முடியை குடுமிக்குள் அடக்கப் பார்த்தான் விஜய்.

“டேய் டேய் இங்க பாரு ஒரு முடி விலகி நிக்குது. ஒழுங்கா போடுடா” அரங்கநாதன் சொல்ல ஒரு வழியாக மகளுக்கு குடுமியை கட்டி முடித்தான் விஜய்.

பின் சகோதரர்கள் இருவரும் அந்த வீட்டின் குட்டி தேவதைக்கு அழகாக மல்லியை வைத்து விட ரோஜாவை வைக்க முடியவில்லை. விஜய்யும் பாவமாக மகளை பார்க்க உள்ளே சென்று செலோடேப் எடுத்து வந்த பிரசன்னா, “நீ வை, நான் ஃபிக்ஸ் பண்றேன்” என்றான்.

“டேய் இதுலயா?” அரங்கநாதன் அதட்டினார்.

“வேற என்ன செய்றது? கண்ணுக்கு தெரியாம டேப்பால ஃபிக்ஸ் பண்ணுவேன்” என்ற பிரசன்னா அப்படியே செய்ய ஆழினியில் தலையில் ரோஜா ஒட்டிக் கொண்டது.

“எடுக்கும் போது பார்த்து ரிமூவ் பண்ணு, முடியோட ஒட்டி அழப் போறா” என பிரசன்னா சொல்ல விஜய் “ம்ம்…” என்றான்.

“சரி என்கிட்ட வா, நாம செல்ஃபி எடுக்கலாம்” என பிரசன்னா ஆழியை அழைக், அவளோ செல்லாமல் தாத்தாவிடமே அமர்ந்து கொண்டாள்.

“பூவெல்லாம் வச்சு விட்டா உன் அப்பா என் அப்பா முன்னாடி எல்லாம் இன்சல்ட் செய்வியா நீ. வா” என மல்லுகட்டி தூக்கிய பிரசன்னா இரண்டு முறை தூக்கிப் போட்டு விளையாட சிரித்தாள் ஆழினி.

விஜய் அகன்று விட விழா முடியும் வரை பிரசன்னாவும் ஆழினியும் சேர்ந்தே இருந்தனர்.

வந்திருந்த சுமங்கலி பெண்கள் பாவனாவுக்கு மஞ்சள் கயிறு கட்டி வாழ்த்த சௌந்தரியும் மறுக்காமல் கட்டி ஆசீர்வாதம் செய்தார். மதிய விருந்தோடு விழா சிறப்பாக முடிந்திருந்தது. வைஷ்ணவியை அடுத்த நாள் அழைத்து செல்வதாக சொல்லி அங்கேயே விட்டு கிளம்பினான் தேவா.

மாலையில் ஆழினி அத்தையோடும் சித்தப்பாவோடும் விளையாடிக் கொண்டிருக்க அரங்கநாதனும் கங்காவும் அவர்களை பார்த்துக் கொண்டே தேநீர் பருகிக் கொண்டிருந்தனர்.

சோர்வில் கட்டியிருந்த பட்டுப் புடவையை கலையாமல் உறங்கியிருந்த பாவனா கண் விழிக்க அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த விஜய் கண்களை நிறைத்தான்.

“நீங்க ரெஸ்ட் எடுக்கலியா?” கேட்டுக் கொண்டே சோம்பல் முறித்தாள் பாவனா.

“தூங்கும் போதும் அழகா இருக்க, சோம்பல் முறிச்சா கூட என்னை சொக்க வைக்கிற, ரொம்ப படுத்துற டி நீ” சொல்லிக் கொண்டே அருகில் வந்து அவளை கட்டிக் கொண்டவன், “இன்னும் இருட்ட ஆரம்பிக்கல, என் கூட கொஞ்ச நேரம் படு” என சொல்லி அவனும் படுத்து அவளை தன்னருகில் படுக்க வைத்துக்கொண்டான்.

இருவருமே உறங்கவில்லை. பூஜை பற்றி ஆரம்பித்த பேச்சு எங்கெங்கோ சென்றது. வாய் வலிக்காமல் பேசிக் கொண்டே இருந்தனர். நேரம் சென்றதே தெரியவில்லை.

“போதும், நாம மட்டும் ரூம்லேயே இருக்கோம். எனக்கு ஸ்கூல் வேலை கொஞ்சம் இருக்கு” என சொல்லி எழுந்து கொண்டாள் பாவனா.

“இந்த வாரமே வேலை எல்லாம் முடிச்சிட்டு அடுத்த வாரம் ஃப்ரீ பண்ணிக்க. ஷாம் மேரேஜ் வருது” என்றான்.

ஒரு நொடி முகம் சுணங்கியவள் பின் அமைதியாக தலையாட்ட, “அவன் கூட நீ பேச வேணாம். சிந்தியாவை உனக்கு தெரியும்தானே? மேரேஜ் அட்டெண்ட் பண்றதுல என்ன பிரச்சனை?” எனக் கேட்டான் விஜய்.

“அதுக்கு எதுக்கு ஒன் வீக்?”

“எல்லாத்துக்கும் கேள்வி கேட்காத. நீ பாரு, நான் கீழ இருக்கேன்” என சென்று விட்டான் விஜய்.

அங்கு விளையாடும் போது வைஷுவுக்கும் பிரசன்னாவுக்கும் ஏதோ சண்டை. “இவன் ஏமாத்தி ஏமாத்தி விளையாடுறான் ண்ணா, கேட்டா கொட்டு வைக்கிறான்” என்றாள் வைஷு.

“எத்தனை கொட்டு வச்சான் உன்னை, வா வட்டியோட திருப்பிக் கொடு” என தங்கையை விஜய் அழைக்க பெரியண்ணன் துணையோடு சின்ன அண்ணனுக்கு கொட்டு வைத்தாள் வைஷு.

ஆழினியை தூக்கி விஜய்யை அடிக்க வைத்தான் பிரசன்னா. குழந்தை சித்தப்பாவிடமிருந்து நழுவி அப்பாவிடம் ஏறிக் கொண்டு அடித்த கன்னத்தை தடவிக் கொடுக்க, ரசனையாக பார்த்தான் பிரசன்னா.

“போடா போய் கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு பெத்துக்க. சொர்க்கத்தை அனுபவிடா” உணர்ந்து சொன்னான் விஜய்.

பிருந்தா சாயலில் ஒரு பெண் குழந்தையை மனதில் நினைத்துக் கொண்டே சின்ன சிரிப்போடு சென்றான் பிரசன்னா.

“ஏய் வைஷு இந்த தடியன் லவ் பன்றானா என்ன?” சந்தேகமாக கேட்டான் விஜய்.

“அச்சச்சோ அண்ணா! எதுக்கு ஒரு பொண்ணுக்கு ஆயுள் தண்டனை? அண்ணன் இப்படியே இருக்கட்டும்” விளையாட்டாக சொன்னாள் வைஷு.

“இல்லயில்லை உங்கண்ணன் யார்கிட்டயோ சிக்கிட்டான். சீக்கிரம் இந்த வீடு கச்சேரியில களை கட்ட போகுது” என விஜய் சொல்ல வைஷு சிரிக்க புரியா விட்டாலும் ஆழியும் சேர்ந்து சிரித்தாள்.

அடுத்த வாரம் ஷாம் திருமணத்திற்காக தங்கள் குழந்தைகளோடு பெங்களூரு சென்றனர் விஜய், பாவனா, ஸ்ரீ, விஷால் நால்வரும். ஷீபா, பிரணவ் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். நண்பனாக திருமண வேலைகளில் முன் நின்றாலும் ஷாமிடம் இன்னும் பேசியிருக்கவில்லை விஜய்.

திருமண பரிசாக சுவிஸ் செல்ல ஹனிமூன் பேக்கேஜ் பரிசாக தந்தான். விஜய் உடனே சரியாகா விட்டாலும் காலப்போக்கில் தன்னுடன் பேசுவான் என நம்பினான் ஷாம்.

“எங்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் கேட்டா அவங்களுக்கு கொடுக்குறீங்க?” வம்பு செய்தாள் ரதி.

“நாளைக்கு காலைல நாம எல்லாரும் மசினகுடி ட்ரிப் போறோம்” என விஜய் சொல்ல, “அடப்பாவி அண்ணா! எங்களை ஹனிமூன் அனுப்பி வைக்க சொன்னா பிரெண்ட்ஸ் கெட் டூ கேதர் ஏற்பாடு செய்றீங்களா?” சிணுங்கினாள் ரதி.

“திரும்ப ஒண்ணா மீட் செய்ய முடியாதுல்ல ரதி? ஷாம் சிந்தியா கூட குடுமி பிடி சண்டை போட்டு செட்டில் ஆகட்டும். நாம சும்மா ட்ரிப் போவோம். காட்டுக்குள்ள எல்லாம் போக போறதில்ல. ஜு போனா புள்ளைங்க என்ஜாய் பண்ணுவாங்க. ஒன் டே மசினகுடி ரெசார்ட்ல ஸ்டே பண்ணிட்டு ஊட்டி போலாம். பிரணவ் எப்போ ஃப்ரீனு சொல்லு, கண்டிப்பா உனக்கும் சுவிஸ் பேக்கேஜ் பிரசண்ட் பண்றேன்” என விஜய் சொல்லவும் ரதியும் சமாதானம் ஆனாள்.

அடுத்த நாள் காலையில் இனிமையான அவர்களது பயணம் ஆரம்பமானது.

அன்று முழுதும் சுற்றிக் களைத்து உறங்கி அடுத்த நாள் காலையில் ரெசார்ட் அருகில் இருந்த ஓடைக்கு அருகில் விஜயசாகரனும் அவன் தோளில் சாய்ந்த வண்ணம் பாவனாவும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த பூச்செடிகளில் பூக்களை கொய்த வண்ணம் நின்றிருந்தாள் ஆழினி.

“நிறைய நடந்திடுச்சு பாவனா. நிறைய இழப்பு, வருத்தம் எல்லாம் இருந்தாலும் இப்போ உன் கூட இப்படி உரிமையா உட்கார்ந்திருக்க இந்த செகண்ட்… எக்ஸ்பிளைன் பண்ண வார்த்தைகள் இல்லை” என உள்ளத்திருந்து சொன்னான் விஜய்.

“நான் எங்க போனாலும் லாஸ்ட்டா உங்க கூட சேருறதுதான் என் டெஸ்டினி. இதோ இந்த தோள்தான் நான் இருக்க ஆசை படற டெஸ்டினேஷன்” விஜய்யின் கண்களை சந்தித்து கூறினாள் பாவனா.

“ம்ம்… நல்லா பேச கத்துக்கிட்ட” என்ற விஜய் அவளின் கையை பிடித்து மென்மையாக புறங்கையில் முத்தமிட்டு பின் உள்ளங்கையிலும் இதழ் பதித்தான்.

லேசாக சிவந்த கன்னத்தோடு அவன் தோளோடு இன்னும் ஒன்றிக் கொண்டாள்.

நதியின் பிறப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதன் பயணம் வளைவுகளை கொண்டது, பாறையில் மோதி செல்லும், பள்ளங்களில் தேங்காமல் தொடரும் அதன் பயணம். திடீரென வெள்ளம் கரை புரளும். தடம் மாறி செல்லும். வழியில் குப்பை சேரும், மாசுபடும், எதிர்பாராமல் நீர் வற்றிப் போகும். மழைக்காக காத்திருந்து தன்னை நிறைத்துக் கொள்ளும். அதன் இலக்கு கடலை சேருவது மட்டுமே. கடலில் கலந்த பின் நதி நீர் தனித்து தெரிவதில்லை. பாவனாவின் பயணமும் விஜயசாகரனுடன் இணைந்து விட்டது.

சற்று நேரத்தில் ஸ்ரீ, பிரணவ், ஷீபா மூவரும் அவர்கள் குடும்பத்தோடு வந்து விட்டனர். இதமாக இருந்த காலைப் பொழுது அவர்களது ரகளையை காண ஆவலாக இருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement