Advertisement

நேச நதி -24(final)

அத்தியாயம் -24(1)

தேவா, வைஷ்ணவி இருவரது திருமணத்தை வெகு பிரமாதமாக நடத்தி வைத்திருந்தான் விஜய். இருவரும் தேனிலவுக்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தனர். விஜய் முறையாக தனது பணியிலிருந்து விடு பட சுவிஸ் செல்ல வேண்டியிருந்தது.

“நான் இல்லாம இருந்துப்பதானே?” என விஜய் கேட்க,

“ஒரு வாரம்தானே? உங்களை மிஸ் பண்ணுவேன், ஆனா இருந்துப்பேன்” என்றாள் பாவனா.

அவள் கன்னம் கிள்ளி விட்டவன், “இருக்கணும்!” என செல்ல மிரட்டலோடு கூறினான்.

அரங்கநாதன் தன் கல்வி நிறுவனங்களை மகன்களுக்கும் மகளுக்கும் என பொறுப்பு கொடுக்க போவதாக தெளிவாக சொல்லியிருக்க விஜய் முதலில் தயங்கினாலும் அரங்கநாதன் அதீதமாக வற்புறுத்தவும் சரி என சொல்லிவிட்டான்.

“உங்க சின்ன பையன் பாவனாவை முறைச்சுகிட்டே திரியுறான். அவனே விஜய்யை வெளில போக வச்சிடுவான். நான் என்ன சொன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குறான்” என கணவரிடம் எச்சரிக்கை போல சொன்னார் கங்கா.

பிரசன்னாவை தனியாக அழைத்த அரங்கநாதன், “பிடிக்கலைன்னா என்னை மாதிரி ஒதுங்கி போ. ஆழினி வளர்ந்து நின்னா உன்னை கேள்வி கேட்பா. ஒழுங்கா இரு” என கண்டிப்போடு சொல்ல, அவனும் பாவனாவிடம் துவேஷம் பாராட்டுவதில்லை.

நாட்கள் செல்ல செல்ல கண்டிப்பாக மனம் மாறுவார்கள், என்னை முழு மனதோடு ஏற்றுக் கொள்வார்கள் என நம்பிக்கை கொண்டிருந்தாள் பாவனா.

விஜய்யின் ஒரு வார வெளிநாட்டு பயணம் இரு வாரங்களாக நீண்டு போனது. ஆழினியும் தாத்தா பாட்டியோடு உறங்க பாவனாவுக்கு விஜய் இல்லாமல் நாட்களை கடக்க சற்று சிரமமாக இருந்தது.

சென்னை விமான நிலையம் வந்து பின்னர்தான் கோவை வந்தான். விஜய் செக் அவுட் செய்து விட்டு வர ஆழினியோடு பாவனா விமான நிலையத்தில் காத்திருக்க அவன் எதிர்பார்க்கவே இல்லை.

மகளை கையில் வாங்கி கொஞ்சி விட்டு மனைவியை தோளோடு அணைத்து அழுத்தம் கொடுத்து, “வர்றேன்னு சொல்லவே இல்லை, ஹ்ம்ம்?” எனக் கேட்டான்.

“ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். சென்னை வரை ஆழியோட வர சிரமம்னுதான் இங்க வந்தேன். ரெண்டைரை மணி நேரம் உங்களை மிஸ் பண்ண வேணாமே” சிரித்துக் கொண்டே சொன்னாலும் பாவனாவின் கண்கள் பனித்திருந்தன.

பாவனாவின் நெற்றியில் முட்டியவன், “அவ்ளோதான்… அங்கேர்ந்து ரிலீவ் ஆகிட்டேன். இனிமே விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்றான்.

பாவனா அழகாக புன்னகை செய்ய மகள் கையில் இருந்தும் விஜய் தன் மனைவியை ரசித்து பார்க்க அப்பாவின் தலையில் ஆழினியும் முட்டி விட்டு சிரிக்க, மனைவியை பார்த்து கண்கள் சிமிட்டி விட்டு அவனும் மகள் நெற்றியில் முட்டி விளையாடினான்.

அங்கிருந்து மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று விட்டு பின் ஈரோடு புறப்பட்டனர். அரங்கநாதன் விஜய்க்கு மேலும் நேரம் தரவில்லை. உடனடியாக கலைக் கல்லூரியின் பொறுப்பை அவன் வசம் ஒப்படைத்து விட்டார்.

பள்ளிகளின் பொறுப்பை எப்போதும் போல வைஷ்ணவியே பார்க்கட்டும் என சொல்லி விட்டார்.

“நான் சும்மாதான் இருக்கேன் வீட்ல, அடுத்த அகாடமிக் இயர் வந்ததும் ஆழியும் ஸ்கூல் போக ஆரம்பிச்சிடுவா. நான் என் டீச்சர் வேலைய கண்டினியூ பண்ணவா?” என கணவனிடம் கேட்டாள் பாவனா.

அவன் யோசனையாக பார்க்க, “ஜஸ்ட் எம்ப்ளாயீ அவ்ளோதான். என் சேடிஸ்ஃபேக்ஷனுக்கு” என கண்களை சுருக்கிக் கொண்டு சொன்னாள்.

“நான் சொல்றேன்” என மட்டும் விஜய் சொல்ல, “வைஷுவோட ஸ்கூல்ல பார்க்க வேணாம்னு நினைக்குறீங்களா? வேற ஸ்கூல் போறேனே” என்றாள்.

“நமக்கே இவ்ளோ இன்ஸ்டிடியூஷன்ஸ் இருக்கும் போது வெளில வேலைக்கு போவியா? நான்தான் சொல்றேன்னு சொல்றேனே. இப்போ நாம கொஞ்சம் சமாதானம் ஆகிக்கலாம்” என சொல்லி அவளது இடையை வளைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“சமாதானம் ஆக நமக்குள்ள ஒரு சண்டையும் நடக்கல. போங்க” செல்லமாக சிணுங்கினாள்.

“சரி அப்போ சண்டை போடலாம்” படுக்கையை கண்களால் காட்டி விஜய் சொல்ல, “நான் வின் பண்ணினா வேலைக்கு போக ஒத்துக்கணும்” என்றாள்.

“வின் பண்றதா? வின் பண்றதுக்கு என்ன கிரைடீரியா?” கைகளால் அவளை இம்சித்துக் கொண்டே மெல்லிய குரலில் கேட்டான்.

“தெரியலையே… நீங்களே சொல்லுங்க” அவளும் முணு முணுத்தாள்.

பாவனா காதில் விஜய் ரகசியம் பேச, அவனை பாவமாக பார்த்தவள், “சரி” என ஒப்புக் கொண்டாள்.

என்ன நடந்தது என்பது அவர்களின் பரம ரகசியம்.

நிர்வாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஒரு மாதத்தில் பாவனவை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்றான் விஜய். அவள் கேள்வியாக அவனை பார்க்க, “இங்க ஒரு நர்சரி ஸ்கூல் வரப் போகுது. நீதான் பார்க்க போற. இடத்திலேர்ந்து எல்லாமே உன் புருஷன் சேவிங்ஸ். சின்னதா ஆரம்பி, இதுலேர்ந்து என்ன செய்ய ஆசை படுறியோ செய்” என்றான்.

சற்றும் எதிர்பார்க்காத பாவனா வியப்பாக விஜய்யை பார்க்க, “உன்னை அப்பா ஏத்துக்காதப்ப அங்க வேலை செய்றது நல்லா இருக்காது. இப்படி செஞ்சா ஒரு வகையில யாருக்கும் எந்த சங்கடமும் இல்ல. சரிதானே?” எனக் கேட்டான்.

அவன் கையை அணைவாக தன்னோடு பிடித்துக்கொண்டவள், அந்த இடத்தை ஆசையும் ஆர்வமுமாக பார்க்க, “ஏதாவது டவுட்ஸ் கேட்டா நான் ஹெல்ப் பண்ணுவேன் அவ்ளோதான். மத்தபடி என் தலையீடு இதுல எதுவும் இருக்காது. எல்லாமே நீதான் செஞ்சுக்கணும்” என சொல்லி விட்டான்.

பாவனாவுக்கு அந்த வாரமே வேலைகள் தொடங்கி விட்டன. அவளுக்கான கனவாக அந்த பள்ளியை வரித்துக் கொண்டாள்.

முறையாக அரங்கநாதனிடம் விஷயத்தை சொன்னான் விஜய்.

“உன் கூடவே இருந்து பார்க்கட்டுமே, இல்லைனா பெருசா ஆரம்பிச்சு கொடு. நமக்குன்னு ஒரு பேர் இருக்கு, இப்படி சின்னதா ஆரம்பிச்சா வெளில எல்லாரும் என்ன சொல்வாங்க?” என குறை பட்டார்.

“இல்லப்பா, இதுல நம்ம பேர் எங்கேயும் வரப் போறது இல்ல. பாவனா மட்டும்தான் அதோட நிர்வாகி. இருக்கட்டும்… தாத்தா கூட சின்னதா ஆரம்பிச்சுதானே இவ்ளோ பெரிய ஸ்தாபனம் ஆக்கினார். யாரும் கேட்டா அவளே தனியா நின்னு ஜெயிக்கணுன்னு சொன்னதால விட்டுட்டோம். தானா திறமையை வளர்த்துக்கட்டும்னு சொல்லிடுங்க” என்றான்.

“நான் எதுவும் சொல்வேன்னு நினைச்சு இப்படி செய்றியா?”

“நிறைய யோசிக்காதீங்க. இப்படி செய்றது தப்பு இல்லை. மேல மேல பேச வேணாம் ப்பா இதை பத்தி” என விஜய் சொல்ல அரங்கநாதனும் விட்டு விட்டார்.

ஸ்ரீயோடு பேசிக் கொண்டிருக்கையில் ஷாம் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என சொல்லி வருத்தப் பட்டாள். விஜய் நேரடியாக ஷாமிடம் பேசவில்லை. ஆனால் பிரணவ் ரதி இருவரையும் சிந்தியாவை சென்று சந்திக்க சொல்லி இவனும் கைபேசியில் பேசினான்.

சிந்தியாவுக்கு கோவத்தை தாண்டி நிறைய வருத்தம். “என்ன வேணா நடந்திருக்கட்டும். நடந்ததை சொல்லி நாம வெயிட் பண்ணலாம்னு சொல்லியிருக்கலாம், அதை விட்டுட்டு காரணமே சொல்லாம கல்யாணம் பண்ணாம என் கூட பேசாமலும் அவாய்ட் பண்ணினா என்ன அர்த்தம்? அவரை மறக்க முடியாட்டாலும் கல்யாணமும் செய்துக்க மாட்டேன்” என பிடிவாதம் செய்தாள்.

“அவனை சரின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா இப்படி நீங்க பிரிஞ்சிருக்கிறது சரியான முடிவு இல்ல. நான், நீ உட்பட எல்லாருமே ஏதோ ஒரு சூழ்நிலைல தப்பு செய்தவங்கதானே? நிறைய மனுஷங்க என்ன நடந்தாலும் ரெஸ்பாண்ட் பண்றதை விட ரியாக்ட் பண்ணிடுவாங்க. அறிவை விட எமோஷன்ஸ்தான் அதிகமா நம்மள வழி நடத்தி பின்னால என்னடா இப்படி செய்திட்டோம்னு கவலை பட வைக்குது. மனுஷங்க எமோஷனல் இடியட்ஸ். அதுக்காக இடியட்ஸ் என்ன ஆகணும், அவங்க வாழக் கூடாதா? நாம செய்றதுக்கான பலனை நல்ல விதமாவோ கெட்ட விதமாவோ அடைஞ்சிடுறோம். தானா கிடைச்சிடுது நம்ம செயல்களுக்கான பிரதிபலன். அதுக்காக பெரிய பெரிய முடிவுகள் எடுக்க வேணாம். கல்யாணம் பண்ணிட்டு சண்டை போடு அவன் கூட” என்றான் விஜய்.

சிந்தியா பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, “இந்தாம்மா சிந்தியா? உன் ஆளு மதம் கொண்ட யானைன்னா நீதான் அங்குசம். அவர் அட்டகாசம் தாங்க முடியலை ம்மா. குடிச்சு குடிச்சு லிவர் ஃபெயிலியர் ஆகிப் போய்டும் போல. லிவர் நல்லா இருக்கும் போதே கட்டிக்க” என்றாள் ரதி.

சிந்தியா முறைக்க, “இப்படி திக் பிரெண்ட்ஸ் இருக்கிறவனுங்கள மட்டும் கட்டி தொலைக்க கூடாது. சினிமா, ரொமான்டிக் டின்னர்னு பிளான் செஞ்ச என் புருஷன் ஈரோட்டிலேர்ந்து கால் வந்ததும் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கார். சட்டுனு ஒரு முடிவுக்கு வாம்மா” என ரதி சொல்ல அழைப்பில் இருந்த விஜய் காதில் வாங்கி விட்டு சிரித்தான்.

“சிரிக்காதீங்க ண்ணா. இவங்க கல்யாணம் நல்ல படியா முடிஞ்சா எங்களை எங்கேயாது ரெண்டாவது ஹனிமூனுக்கு அனுப்பி வைங்க, உங்க ஃப்ரெண்ட்க்கு லீவே இல்லையாம். இல்லாத லீவை வாங்க சொல்லி அட்வைஸ் பண்ணுங்க” என்றாள்.

“நீ மட்டும் சிந்தியாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கு, ஷாம் கல்யாணம் முடிஞ்ச கையோட ஹனிமூன் பேக்கேஜ் உன் கைல நான் கொடுக்கிறேன்” என சிரித்து கொண்டே விளையாட்டாகத்தான் சொன்னான் விஜய்.

சீரியஸாக எடுத்துக் கொண்ட ரதி, குழந்தையை பிரணவ் கையில் கொடுத்து அவனை வெளியே போக சொல்லி விட்டு, சிந்தியா பக்கத்தில் அமர்ந்து கதற கதற பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டாள்.

சென்னையிலிருந்த ஷாம் வீட்டில் பேச விஜய் தன் மனைவி மகளோடு புறப்பட்டான். ஷைலஜா சென்னையில் இருக்க, அம்மாவை சந்திக்க பாவனா மகளோடு செல்ல விஜய் ஷாம் வீடு சென்றான். ஷாமின் அண்ணனிடமும் பெற்றோரிடமும் பேசி, “கல்யாண ஏற்பாடு பண்ணுங்க, அந்த தடியன் வந்து சேர்வான்” என நம்பிக்கையாக சொன்னான்.

ஷாமிடம் பிரணவ் சென்று பேசி சம்மதம் கூற வைத்தான். விஜய் இன்னும் பேசவில்லை என்ற போதும் தனக்காக அவன் செய்கிறான் என்றதும் அதிகம் மறுக்காமல் ஒத்துக் கொண்டான். சிந்தியா வீட்டு சார்பில் பெங்களூருவிலேயே திருமணம் என முடிவு செய்யப் பட்டது.

சிந்தியாவுக்கு இன்னும் ஷாம் மீது பெரும் கோவம்தான், ‘கல்யாணம் செய்துகிட்டு உன்னை பார்த்துக்கிறேன்’ எனும் மனநிலையில் இருந்தாள் அவள்.

யாரும் தன்னிடம் பேசுகிறார்களா இல்லையா என்பதை பற்றி அதிகம் வருந்தாமல் ரமணனனை பாவனா மட்டும் சென்று பார்த்து வந்தாள். வைஷு வீட்டில் இருக்க நேர்ந்தால் அவள் அண்ணியை உபசரித்து கவனிப்பாள். “வாம்மா” என அழைக்க ஆரம்பித்திருந்தான் தேவா.

சௌந்தரி வா என்பது போல தலையாட்டுவார். ஆனால் யாரும் அவளை வரக்கூடாது என சொல்லவில்லை.

அரங்கநாதன் முன்பு போல தன்னை பிஸியாக வைத்துக்கொள்ளாமல் சற்று நிதானமாக வாழ்ந்தார். மனைவியுடன் அதிகம் வெளியில் சென்றார். ஒரு நாளில் திரும்பி விடும் பயணம் என்றால் மறக்காமல் ஆழினியை உடன் அழைத்துக் கொண்டார்.

என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என உன் வாயாலேயே சொல்ல வைக்கிறேன் என பிரசன்னா பிருந்தாவிடம் சவால் விட்டதோடு சரி. பார்க்கும் போது வம்பாக பேசுகிறான், வஞ்சனை இல்லாமல் அவளை பார்த்து அவளிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டு தூசு துடைப்பது போல அந்த திட்டுக்களை துடைத்து விட்டு செல்கிறான்.

கேசவன் அவர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். விஷயம் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறான் பிரசன்னா. ‘சும்மா ஏதோ சொல்லிட்டான், எதுவும் கேட்டு அவனை சீண்டி விடக்கூடாது. நல்லவனா பார்த்து கல்யாணம் செய்து செட்டில் ஆகிட்டு அப்புறம் பேசிக்கலாம் இவனை’ என எண்ணியிருந்தாள் பிருந்தா. அவர்களுக்குள் என்ன நடக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement