Advertisement

அத்தியாயம் -23(pre final -3)

திருமண வேலைகள் மட்டுமல்ல செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டான் விஜய். அம்மாவிடம் கேட்டு கேட்டு ஒரு குறை வைக்காமல் மிகவும் விமரிசையாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.

இப்போது விஜய்க்கு மனைவியும் மகளும் இருப்பது சொந்தங்கள் மற்றும் ஊரார் மத்தியில் தெரிய வந்திருந்தது. திருமண பத்திரிகைகள் அவனும் பாவனாவும் ஜோடியாக சேர்ந்தே அனைவருக்கும் கொடுத்தனர். திருமண வேலைகளில் இருந்து தந்தை ஒதுங்கியதால் மட்டுமல்ல அனைவருக்கும் பாவனாவை யார் என அடையாளப் படுத்தும் நோக்கத்துடனே இவ்வாறு செய்தான்.

கேட்டவர்களுக்கு எல்லாம் காதல் திருமணம் செய்து வெளிநாட்டில் இருந்தேன், இப்போதுதான் வந்தேன் என்றே சொன்னான் விஜய்.

ரமணன் மகள்தான் பாவனா என தெரிந்தவர்கள் பின்னாலிருந்து ‘அரங்கன் சார் மகனா இப்படி?’ என பேசத்தான் செய்தனர். அதையெல்லாம் துளியும் பொருள் செய்யவில்லை விஜய். ஆனால் அரங்கநாதன் உள்ளுக்குள் குமைந்து போனார். பிரசன்னா அண்ணனிடம் அவ்வப்போது குத்திக் காட்டி பேசினான். பாவனாவை அண்ணி என மதிக்காமல் துச்சமாக பார்த்தான்.

தங்கை கல்யாணம் வரை அமைதியாகவே இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்த விஜய்யும் தம்பியிடம் பொறுமையாகவே போனான்.

இப்பொழுதெல்லாம் மாலையில் அரங்கநாதனின் நேரம் ஆழினியுடன்தான் செல்கிறது. பல சமயங்களில் அவர் அறையிலேயே இரவிலும் உறங்க தொடங்கி விட்டாள். ஆனாலும் பாவனாவிடம் எந்த பேச்சுக்களும் வைத்துக் கொள்வதில்லை. அவளும் இவரையும் பிரசன்னாவையும் கண்டால் தூர சென்று விடுகிறாள்.

“பாவனா உன் அண்ணன் மனைவி, நீ அவகிட்ட பேச வேணாம். ஆனா துச்சமா பார்க்காத. தப்புடா” என கங்கா சின்ன மகனுக்கு அறிவுரை சொல்ல காதில் விழாதது போல செல்வான் பிரசன்னா.

விஜய்க்கு பகல் பொழுதில் திருமண வேலைகள், மாலையானால் வெளிநாட்டு நிறுவனத்தில் முடித்து தர வேண்டிய அலுவலக பணிகள். கொஞ்சம் அல்ல அதிகமாகவே சிரம பட்டான். பாவனா பகலில் அவனோடு அலைந்தாள். இரவிலும் அவனை கவனித்துக் கொண்டாள்.

திருமணம் மிக சமீபத்தில் இருக்க ஒரு ஞாயிற்றுக் கிழமையில் வைஷுவுக்கு அத்தையாக புடவைகள் நகைகள் என வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் வந்திருந்தார் நிர்மலா. வைஷுவுக்கு அனைத்தையும் முறையாக கொடுத்த பின் கேசவன் மட்டும் புறப்பட்டிருக்க நிர்மலாவும் பிருந்தாவும் அங்குதான் இருந்தனர்.

 மதிய சாப்பாடு முடியவும், “வைஷு கல்யாணம் முடிஞ்சதும் நான் சென்னை போறேன்” என அறிவித்தான் விஜய்.

“ஏன் அங்க என்ன வேலை உனக்கு? எத்தனை நாள்ல வருவ?” என விசாரித்தார் கங்கா.

“இல்ல ம்மா, அங்கதான் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். கல்யாணம் வரை அங்க இருப்பேன், அப்புறம் சென்னைலதான் நான்… நாங்க இருக்க போறோம். யாரும் முழுசா பாவனாவை ஏத்துக்காம அவளுக்கு இங்க இருக்க கஷ்டம். இந்த இடியட் வேற கொடுக்கு கொட்டுறது தேவலாம் போல பேசுறான். நாங்க சென்னை போறோம்” என்றான் விஜய்.

“நான் ரொம்ப சோர்ந்து போய்ட்டேன் அண்ணி. யார்கிட்டேயும் என்னால கெஞ்ச முடியாது, என்ன இஷ்டமோ செய்துக்கட்டும்” என நிர்மலாவிடம் ஆற்றாமையாக சொன்னார் கங்கா.

“ஏன் விஜய் இப்படி பேசுற? அண்ணன் வாய தொறக்காட்டாலும் பாரு எப்படி உடைஞ்சு போய் உட்கார்ந்திருக்கார்னு” என்றார் நிர்மலா.

“வெளியூர்ல வேலை பார்க்கிறவங்க போறதில்லையா? நானும் அப்படித்தான். அப்பப்ப வந்து போய் இருக்கோம்” என விஜய் சொல்ல, அமைதியாக இருந்த பாவனா, “இன்னொரு முறை யோசிக்கலாம். முதல்ல வைஷு கல்யாணம் முடியட்டும். பொறுமையா இருங்க” என்றாள்.

“நல்லா யோசிச்சு எடுத்த முடிவுதான் இது. சேர்ந்து இருந்தா இன்னும் இன்னும் வெறுப்புதான் வளரும். அட்லீஸ்ட் ரெண்டு மூணு வருஷத்துக்காவது நாம தள்ளி இருக்கிறது நல்லது” என விஜய் சொல்ல கண்களால் கெஞ்சுதலாக பார்த்தாள் பாவனா. ஆனால் முடிவை மாற்றும் எண்ணத்தில் இல்லை விஜய்.

“என்னடா சீன் போடுற? என்ன நான் மன்னிப்பு கேட்கணுமா?” சீறினான் பிரசன்னா.

“மன்னிப்பு வாயால கேட்டா ஆச்சா டா? மனசால உணரணும் இவ உன் அண்ணின்னு. உன்கிட்ட பேசினா சண்டைதான் வரும். நான் கோவத்துல முடிவெடுக்கல. எல்லாத்தையும் யோசிச்சு பார்த்து எடுத்த முடிவு” என பொறுமையாக சொன்னான் விஜய்.

அரங்கநாதன் எழுந்து நின்றவர், “நான் சொன்னதை எப்பவும் கேட்டது இல்லை நீ. இந்த ஒரு முறையாவது கேட்பேங்கிற நம்பிக்கையில சொல்றேன். ஒழுங்கு மரியாதையா வீட்டோட இரு” என அதட்டலாக சொல்லி விட்டு வெளியில் கிளம்பி விட்டார்.

கங்கா மகனிடம் கோவம் கொண்டு அவரது அறைக்கு சென்று முடங்கி விட இனியும் பெற்றவர்களை கஷ்ட படுத்தாதே என அறிவுரை சொல்லி விட்டு நிர்மலாவும் மகளோடு புறப்பட்டு விட்டார்.

அறைக்கு வந்த விஜய் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் படுக்க பாவனா பேசத் தயாரானாள். அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன், “எதுவும் பேசாத, முடிஞ்சா என்னை கூல் பண்ணு” என சொல்லி கண்கள் மூடிக் கொண்டான்.

அவனிடமிருந்து இறங்கி அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டவள் அவன் தலையை தன் நெஞ்சில் கிடத்தி முதுகை தட்டிக் கொடுத்தாள்.

“என்ன நீ கூல் பண்ண சொன்னா சூடாக்கி விடுற?” அவன் கேள்வி கேட்க, “நைட்டும் லேப்டாப் கட்டிட்டு அழுதீங்க, ஒழுங்கா தூங்குங்க” என அதட்டினாள்.

“ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்கு பாவனா, ஏதாவது செய்யேன்” என விஜய் கேட்க அவனிடமிருந்து விலகி எழுந்தவள் கப்போர்டில் இருந்த இயர் மஃப்ஸ் எடுத்து ஆழினியின் காதில் பொருத்தி இரு பக்கமும் தலையணையை வைத்து விட்டாள்.

விஜய் அவள் செயல்களையே பார்த்திருக்க அவன் முகம் நோக்கி குனிந்தவள் அவனது முகத்தை திருப்பி காதில், “சோஃபா ஓகே தானே?” எனக் கேட்க விஜய்யிடம் குறும்பு சிரிப்பு.

முத்தத்திலிருந்து ஆரம்பித்தாள் பாவனா. அவளிடம் தன்னை ஒப்புவித்து விட்டு அவளுக்கு கீழ் படிந்தான். கணவன் மனதை குளிர வைத்து லேசாக்கி முத்தத்தில் முடித்து வைத்தாள்.

விஜய் உறங்க ஆரம்பிக்க பாவனா குளித்து வந்து மகளோடு படுத்துக் கொண்டாள். மாலையில் எழுந்தவன் குளித்து வந்து மனைவி பக்கம் படுக்க உடனே விழித்துக் கொண்டவள் அவனை கெஞ்சலாக பார்க்க அவனும் ஆழ்ந்து பார்த்தான்.

எதுவும் பேசாமல் அவன் கையை எடுத்து அழுத்திக் கொண்டாள். அவள் மனம் புரிந்தவனாக, “உனக்காக மட்டுமில்லை பாவனா இந்த முடிவு. எனக்காகவும்தான். அப்பாவும் நார்மலா இல்லை, நீயும் அவர் வந்தாலே ஓடி ஒளியுற. அவருக்கு அவகாசம் தேவைப்படுது, எனக்கும் நிம்மதி வேணும். அதுவரை யாருக்கும் சங்கடம் வேணாமே” என்றான்.

“நீங்க உட்பட எல்லாருக்கும் இது வருத்தம் தானே? அதை விட நம்ம ஆழி உறவுகளோட சேர்ந்து வளர்வா. நீங்க என் கூட இருக்கிறது போதும், அத்தை என்கிட்ட நல்லாத்தான் நடந்துக்கிறாங்க. நாம எங்கேயும் போக வேணாம்” என்றாள்.

 கோவமாக அறைக்குள் சென்ற அம்மாவின் முகம் விஜய்யின் கண் முன் வந்து நின்றது. நேராக படுத்துக் கொண்டவன், “வைஷு கல்யாணம் முடியட்டும் பாவனா. நான் இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்” என சொல்ல இந்த வரை இவன் இறங்கி வந்ததே போதும் என நிம்மதி அடைந்தாள்.

இரவு நெருங்கும் வேளையில் அம்மாவை பார்க்க மகளோடு சென்றான் விஜய். அரங்கநாதனும் உடன் இருக்க ஆழினி இறங்கி தாத்தா மடியில் உரிமையாக அமர்ந்து கொண்டாள். அவரை கண்டு கொள்ளாத விஜய் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்துக்கொள்ள அவரோ கோவமாக உதறி விட்டார்.

“எனக்கு மட்டும் உன்னை விட்டு போக ஆசையா? இபோதைக்கு எந்த முடிவும் இல்ல, வைஷு கல்யாண வேலை மட்டும் பார்ப்போம். நீ சிரிம்மா” என்றான்.

“ஆமான்டா இங்க என் பொழப்பே சிரிப்பா சிரிக்குது. நானும் வேற சிரிக்கிறேன். போ. உங்க எல்லாருக்காகவும்தானே வாழ்ந்தேன், என்ன பெருசா கேட்கிறேன்… ஆளாளுக்கு வீம்பு பண்ணிகிட்டு. குத்து விளக்காட்டாம் என் பேத்திய கொண்டாந்து கண்ல காட்டிட்டு இப்போ போறேன்னு சொல்ற? யார் மேலேயும் பாசமே வைக்க கூடாதுடா ப்பா” என புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அம்மா மடியில் படுத்துக் கொண்டவன் அவர் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு, “சும்மா சத்தம் போடாத ம்மா. அதென்ன ஆழினிய பிரிய போறோம்னு கவலை படுற, அப்போ நான் போனா பரவாயில்லையா?” எனக் கேட்டான்.

அவனை மடியிலிருந்து விலக்க பார்க்க அவன் அழுத்தி பிடித்து மடியை விட்டு நகர மாட்டேன் என்பதாக படுத்துக் கொண்டான்.

“மூணு பெத்தும் ஒண்ணும் என் பேச்சை கேட்குறது இல்லை. என் பேத்திதான் கேட்குறா. அதனால அவளை பிரியறது நினைச்சுதான் எனக்கு வருத்தம், நீ எங்கேயாவது போ உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு. அவளை மட்டும் எங்கேயும் விட மாட்டேன்” என்றார்.

அதுவரை மனைவி மகனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரங்கநாதன், “இத்தனை வருஷத்துல இப்பதான் சரியா பேசியிருக்க. இன்னும் என்ன செய்யணுமாம் உன் பிள்ளைக்கு? என் பொண்ணு கல்யாணம் வரை அவன் இஷ்ட படி நடக்குது. அவன் பொண்டாட்டிகிட்ட சாதாரணமா இருக்கிறது போல நடிக்க முடியாது என்னால. வேணும்னா நாம வேற வீடு போயிடுவோம்” என்றார்.

அம்மா மடியிலிருந்தவாறே அவர் பக்கமாக திரும்பிய விஜய், “ரெண்டு வருஷம் தனியா இருக்கோம் ப்பா. அப்புறம் வந்திடுறோம்” என சமாதானமாக சொன்னான்.

“இப்பதானடா வைஷு கல்யாணம் வரை எந்த முடிவும் எடுக்கலைன்னு சொன்ன? திரும்ப ஆரம்பிக்கிறியா நீ” கோவப்பட்டார் கங்கா.

“கேட்கத்தானே ம்மா செய்றேன். இப்பவே விட்டுட்டு போயிட்டேனா என்ன? இதோ உன் மடியிலதான் படுத்திருக்கேன். பேசவே கூடாதுன்னா எப்படி?” என்றவன் அப்பாவை அவரின் பதிலுக்காக பார்த்தான்.

“உன் தங்கச்சி கல்யாணத்தை என்னை கேட்டா நடத்துற?”

“உங்க சம்மதம் வாங்கிட்டுதான் நடத்துறேன்” என்றான் விஜய்.

“எனக்கு எல்லாம் அலுத்து போச்சு டா. நீயும் உன் தம்பியுமா எல்லாத்தையும் பார்த்துக்கோங்க. நீ என்ன நினைக்கிறியோ செய். என்னை எதுக்காகவும் கட்டாயம் செய்யாத. ஆனா வீட்டை விட்டு போக கூடாது நீ” என்றார் அரங்கநாதன்.

அம்மாவின் மடியில் நேராக படுத்துக் கொண்டவன் அவர் கையை எடுத்து தன் தலையை கோத செய்ய, கங்காவும் இதமாக மகனின் தலை வருடி விட ஆரம்பித்தார்.

ஆழினி கதை வேண்டும் என தாத்தாவிடம் கேட்க பார்வையிழந்த தன் வயதான பெற்றோரை கண்ணும் கருத்துமாக கவனித்து, தசரதனால் இறந்து போன ஷ்ரவனின் கதை கூற ஆரம்பித்தார் அரங்கநாதன்.

 கண்கள் மூடியிருந்தாலும் காதில் வாங்கிக் கொண்டிருந்த விஜய் தன்னை குத்திக் காட்டவே இந்த கதை சொல்கிறார் என புரிந்து புன்னகை செய்ய, “உனக்குத்தான் சொல்றார் உன் அப்பா” மகன் காதில் கிசு கிசுத்தார் கங்கா.

கண்கள் திறந்து அம்மாவின் கன்னத்தை கிள்ளியவன், “என் பொண்ணு இருக்கான்னு பார்க்கிறேன், இல்லைனா நானும் கூட ரொமான்ஸ் ஸ்டோரி சொல்வேன் அப்பாக்கு. அடேய் ஏன் டா ஜோடிய பிரிச்சன்னு கேட்டு அழுதிடுவார் அப்பா” வேடிக்கையாக சொன்னான்.

“யாரையும் இப்போ நான் பிரிக்க நினைக்கல. பிரிவு எந்த வகைன்னாலும் கொடுமைதான். அதிகமா பேசாம வீட்ல இருக்க சொல்லு உன் புள்ளைய” என கடுப்பாக சொன்ன அரங்கநாதன் பேத்தியை பார்த்து, “இங்க உங்கப்பன் டிஸ்டர்ப் செய்திட்டே இருப்பான், நாம பார்க் போவோம். வா” என சொல்லி மடியிலிருந்து இறக்கி விட்டார்.

தாத்தாவின் கை பிடித்து ஆழினி நடந்து செல்ல அம்மாவும் பிள்ளையும் ரசனையாக பார்த்திருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement