Advertisement

அத்தியாயம் -23(pre final -2)

வைஷுவும் தேவாவை ஆழமாக விரும்புகிறாள் என அனைவர் முன்னிலையிலும் சொன்னான் விஜய்.

இல்லை இருக்காது என மறுத்தார் அரங்கநாதன். அப்படியே இருந்தாலும் அது திருமணத்தில் முடிய வேண்டும் என்றில்லை, நீங்கள் கிளம்பலாம் என முக தாட்சண்யம் இல்லாமல் பேசினான் பிரசன்னா.

மீண்டும் தேவா ஏன் இங்கு இருக்கிறோம் என நினைக்க மிருதுளாவின் கணவன் வாய் விட்டே கேட்க சௌந்தரி கைக்குட்டை எடுத்து கண்களை ஒற்றிக் கொள்ள அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அம்மாவை எழுப்பி தானும் எழுந்தான் தேவா.

அரங்கநாதன் தன் மனைவியை முறைத்துக் கொண்டிருக்க அவரால் ஒரு வார்த்தை கூட சமாதானமாக பேச முடியவில்லை. கேசவனும் இதற்கு மேல் அவ்வளவுதான் என்பதாக விஜய்யை பார்க்க தாத்தாவும் தளர்ந்து போனவராக எழப் போனார்.

“அஞ்சு நிமிஷம் எனக்காக வெயிட் பண்ணுங்க. என் தங்கை பிடிக்கலைன்னு சொன்னா உங்க விருப்பம். பிடிச்சிருக்குன்னு சொன்னா இந்த மேரேஜ் என் பொறுப்பு” என விஜய் சொல்ல திரும்பவும் அமர சங்கட பட்டு நின்றே இருந்தான் தேவா.

“இப்படி பிரச்சனை வரும்னு எல்லாம் நீங்க எக்ஸ்பெக்ட் செய்யலையா தேவா? நான் என் விஷயத்துல நிறைய எக்ஸ்பெக்ட் பண்ணினேன், எப்படி சமாளிக்கலாம்னு எல்லாம் நிறைய பிளான்ஸ் வச்சிருந்தேன். ஆனா அப்படி எதுவும் நடக்காம… ஹ்ம்ம்… எல்லாருக்கும்தான் தெரியுமே. உங்களுக்கு சரியா நடத்திக்க சான்ஸ் இருக்கு, நான் இருக்கேன் ஹெல்ப் பண்ண. எவ்ளோ உயரம் போனாலும் மனசுக்கு பிடிச்சவங்க துணையா கிடைக்கலைனா அது நரக வாழ்க்கை. உங்களுக்கும் என் தங்கைக்கும் அது வேணாம். இன்னிக்கு பிடிவாதம் செய்றவங்க வருஷங்கள் போன பின்னாடி ஐயோ என் பொண்ணு பையன் ஆசைய நிறைவேத்தி வைக்கலியேன்னு கண்டிப்பா வருத்த படுவாங்க. உங்க சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க” என்றவன் “ப்ளீஸ்…” என சொல்லி இருக்கையை காட்ட மகன் கையை பிடித்து அமர வைத்த சௌந்தரி தானும் அமர்ந்து கொண்டார்.

திடீரென அந்த ஹாலில் நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவர் மனதிலும் வித்தியாசமான சிந்தனைகள். ஆனால் முடிவாக அல்லாது அலசி ஆராய்வதாக மட்டுமே இருந்தது.

வைஷுவின் அறைக்கு வந்த விஜய் அழும் தங்கையை பார்த்து விட்டு கோவமாக முஷ்டியை இறுக்க, பிரசன்னா பயமுறுத்தி வைத்திருப்பதை சொன்னாள் பிருந்தா.

“அப்ப என்னை விட அவனை நம்புற நீ?” அதற்கும் கோவம் கொண்டான் விஜய்.

“நீங்க கோவத்தை குறைச்சிட்டு பொறுமையா என்ன செய்யலாம்னு யோசிங்க” என்றாள் பாவனா.

“கூப்பிட்டு வச்சு அவமான படுத்தின மாதிரி ஆகிப் போச்சு. இப்ப என்ன செய்றது? தேவாவுக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கணும். அவனுக்கு பொண்ணு பார்க்க போறேன், அதான் எனக்கு அடுத்த வேலை” விஜய் சொல்ல சட்டென நிமிர்ந்து அவனை பாவமாக பார்த்தாள் வைஷு.

“நீ தேவாவை நினைச்சுகிட்டு கல்யாணம் பண்ணாம வாழ நினைக்கலாம். அவனும் அப்படியே நினைக்கணும்னு அவசியம் என்ன? பிருந்தா… உன் ஃபோன் எடு, மேட்ரிமோனியல் சைட் போய் இப்பவே தேவா பேர் ரெஜிஸ்டர் பண்ணு. நம்பிக்கை கொடுத்து கழுத்தறுத்ததுக்கு நான்தான் அவனுக்கு பொண்ணு பார்த்து கட்டி வைக்கணும்” என விஜய் சொல்லிக் கொண்டிருக்க இன்னும் தேம்ப ஆரம்பித்தாள் வைஷு.

“ஷட் அப்!” விஜய் கத்த, வாயில் கை வைத்து மூடிக் கொண்டாள் வைஷு.

“என்னங்க இது? கோவ படுற நேரமா இது?” என கணவனை கண்டித்த பாவனா ஆதரவாக வைஷுவை பிடித்துக்கொண்டாள்.

நிதானித்த விஜய் தங்கையை தீர்க்கமாக பார்த்து, “ஒன் லாஸ்ட் சான்ஸ் உனக்கு, என்ன இப்போ அப்பா சம்மதத்தோட கல்யாணம் நடக்கனும் உனக்கு அவ்ளோதானே? நான் நடத்தி வைக்கிறேன். போறேன்னு நின்னவங்களை சமாதானம் செய்து உட்கார வச்சிட்டு வந்திருக்கேன். என்கிட்ட சொன்ன மாதிரியே தேவா இல்லைனா கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு அப்புறம் இங்க வந்து உட்கார்ந்து பொறுமையா அழுவலாம். உன் அண்ணியும் பிருந்தாவும் சமாதானம் செய்வாங்க உன்னை, இப்போ வா” என்றான்.

வைஷு கலக்கமாக விஜய்யை பார்க்க தங்கை அருகில் வந்தவன், “நீ ஆசை பட்டதை நடத்தி வைக்காம அண்ணனு நான் எதுக்கு இருக்கேன்? லவ் பண்றது ஒண்ணும் அவ்வளவு பெரிய தேசத் துரோகம் இல்லை. நீ வா, யாரையும் பார்க்காத, சொல்லிட்டு வந்திடு, நான் பார்த்துக்கிறேன்” என பொறுமையாக சொன்னான்.

கிளம்ப இருந்தவர்களை அமர்த்தி வைத்துவிட்டு இவன் உள்ளே என்ன செய்கிறான் என அரங்கநாதன் எரிச்சலோடு அமர்ந்திருக்க பிரசன்னாவை எழ விடாமல் பிடித்து வைத்துக்கொண்டார் கேசவன்.

அண்ணன் கை பிடித்துக்கொண்டு வந்து நின்றாள் வைஷு. வேறெங்கோ பார்த்துக் கொண்டு கைகளை பிரித்து சேர்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தேவா அவளது பார்வையில் விழ அவளது உள்ளம் உருகிப் போனது.

மூக்கை உறிந்து தொண்டையை சரி செய்து கொண்டவள், “தேவாவை பிடிச்சிருக்கு. அவங்கள தவிர யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்” என அறிவித்தாள்.

அரங்கநாதன் அதிர்ச்சியாகவும் கங்கா வேதனையாகவும் பார்க்க பிரசன்னா கோவமாக பார்த்தான். விஜய் கண் காட்ட வைஷுவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள் பாவனா.

அரங்கநாதன் மகளின் வார்த்தைகளை ஜீரணம் செய்ய முடியாமல் அமைதி காக்க, அப்பாவின் சார்பில் வாய் திறந்தான் பிரசன்னா.

“வைஷுக்கு நாங்க சொல்லி புரிய வச்சிக்கிறோம். இன்னும் எங்கண்ணன் விஷயம் முழுசா யாருக்கும் தெரியாது, அது தெரியும் போது எப்படி வெளில தலை காட்ட போறோம்னு தெரியலை. அதுக்குள்ள இன்னொரு முறை ரிஸ்க் எடுக்க முடியாது” என்றான்.

“இந்தாளு வாய்ல சுட சுட நீ செய்ற கோதுமை அல்வாவை திணிக்கணும். முழுங்கவும் முடியாம உன் முன்னாடி துப்பவும் முடியாம அவஸ்தை பட்டு எழுந்திரிக்கும் போது சூடான தோசைக் கல்லை கொண்டாந்து வச்சிடணும். அது மேலே அந்தாள் உட்காரவும் அடுத்து…” பிருந்தா தன் அம்மாவிடம் ரகசியமாக சொல்லிக் கொண்டிருக்க, “வாய மூடுடி” என அடக்கினார் நிர்மலா.

“அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்காதீங்கப்பா. ஏதாவது சொல்லுங்க” என்றான் விஜய்.

அத்தையின் அறையிலிருந்து வந்த ஆழினி தாத்தாவிடம் வந்து நின்று, “அத்தை அழறாங்க. நீங்கதான் திட்டிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

பேத்தியை மடியில் அமர்த்திக் கொண்ட அரங்கநாதன், அவள் தலையை வருடி விட்டுக் கொண்டே “நாள் பாருங்க” என்றார்.

அவருக்கு விருப்பம் இல்லை, ஆனால் விஜய்யின் இன்றைய வாழ்க்கை சற்று பயத்தை கொடுத்தது. விஜய் நிற்கும் தோரணையே நடத்தி முடிப்பான் என்பதை உணர்த்த மேலும் மேலும் அவனோடு மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க மனம் வரவில்லை. மகளும் தன்னை மீறி செய்து கொள்வதை காட்டிலும் தானே முன் வந்து செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

பிரசன்னா நம்பாமல் அப்பாவை பார்க்க அவனை யாரும் அங்கே கண்டுகொள்வதாக இல்லை. நாள் குறித்து விட்டுத்தான் அனைவரும் கிளம்பினார்கள்.

செல்லும் போது இளக்காரமாக பிரசன்னாவை பார்த்து சிரித்து விட்டு சென்றாள் பிருந்தா. கோவமாக வெளியில் கிளம்பி சென்று விட்டான் பிரசன்னா.

அன்றிலிருந்து அரங்கநாதன் களை இழந்து போனார். “தேவா நல்ல பையன், நம்ம பொண்ணு ஆசை பட்டுட்டா. மத்தவங்க விட நம்ம பொண்ணு விருப்பம் முக்கியம் இல்லையா?” என கங்கா சமாதானம் செய்ய, “அதான் ஒத்துக்கிட்டேனே அப்புறமும் தொண தொணக்காத” என சிடு சிடுத்தார்.

பிரசன்னா வந்து “ஒரு வார்த்தை சொல்லுங்க, பேசினதை நிறுத்திட்டு வைஷுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நான்” என சொல்ல, “போடா வேலைய பார்த்துகிட்டு” என எரிந்து விழுந்தார்.

தேவாவின் தாத்தா அழைத்து திருமணம் விஷயமாக பேச, “விஜய்கிட்ட பேசிக்கோங்க மாமா. அவன் நடத்தி வைப்பான் தங்கச்சி கல்யாணத்தை” எனக் கூறி விட்டார்.

தாத்தா விஜய்க்கு அழைத்து சொல்ல, ஒரு நொடி யோசித்தவன், “சரிதானே தாத்தா, வைஷு கல்யாணத்தை அவ அண்ணன் நான்தான் நடத்தி தரணும். எதுவா இருந்தாலும் என்கிட்டேயே பேசுங்க” என்றான்.

“அரங்கனை நேர்ல பார்த்து நான் ஒரு முறை பேசவா?” எனக் கேட்டார் தாத்தா.

“அப்படியெல்லாம் பக்கம் பக்கமா பேசி யார் மனசையும் மாத்த முடியாது தாத்தா. உங்களுக்குமே இப்போ இக்கட்டு, இல்லைனா நீங்களும் இப்படித்தானே நடப்பீங்க. அவர் சம்மதம் சொல்லிட்டார்தானே, அத்தோட விடுங்க. நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி விட்டான்.

தேவாவை மணக்க போகிறோம் என முழுதாக மகிழ முடியவில்லை வைஷுவால். அப்பாவின் ஒதுக்கமும் சின்ன அண்ணனின் கோவ முகமும் பாடாய் படுத்த அவளிடமும் திருமண களை இல்லை.

பாவனாவாகவே பார்த்து விட்டு திருமண ஷாப்பிங் செல்லலாம் என சொல்லி வைஷுவை வெளியில் அழைத்து சென்றாள்.

அப்போதும் உற்சாகம் இழந்து காணப் பட்டவளிடம், “கல்யாணம் ஒரு முறைதான் வரும். அவங்க கண்டிப்பா மாறுவாங்க, ஆனா இன்னொரு முறை கல்யாணம் செய்துப்பீங்களா ரெண்டு பேரும். அண்ணனும் பாவம் இல்லையா, நீ சந்தோஷமா இரு” என்றாள் பாவனா.

கொஞ்சம் தெளிந்த வைஷு, “தேவாகிட்ட பேசவா நான்?” எனக் கேட்டாள்.

“பேசிக்கிறது இல்லையா நீங்க? சண்டையா?” என பாவனா கேட்க, பின்னர்தான் தேவாவின் எண்ணே அவளிடம் இல்லை என்பது தெரிய வந்தது.

“கல்யாணம் கிட்டக்க வச்சிட்டு பேசாம கூட இருந்தா எப்படி வைஷு உங்களுக்குள்ள புரிஞ்சுக்க முடியும்?” என்ற பாவனா அன்றே விஜய்யிடம் தேவாவின் கைபேசி எண் வாங்கி வைஷுவுக்கு கொடுத்தாள்.

எண் கிடைத்தாலும் தானாக பேச அவளுக்கு தயக்கம். இரவு உறங்க போகும் முன், “பேசிட்டியா?” என பாவனா கேட்க விழித்தாள் வைஷு.

“சரியா போச்சு! உங்களோட…” அலுத்த பாவனா அவளே வைஷுவின் கைபேசி எடுத்து தேவாவின் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து விட்டு வைக்க உடனே தேவாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“ம்ம்… அப்ப அண்ணன்கிட்ட உன் நம்பர் இருந்திருக்கு, இல்லைனா இவ்ளோ ஃபாஸ்ட்டா கால் பேக் செய்வாரா? ஆனாலும் அவரா கால் பண்ணலை! நல்ல லவ்வர்ஸ்!” என கிண்டல் செய்தாள்.

 தேவாவின் அழைப்பை ஏற்று வைஷு பேச ஆரம்பிக்க பாவனா அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

தங்கள் அறைக்கு வரவும் விஜய்யிடம் சொன்னவள், “பாவம், நடக்குமோ நடக்காதோன்னு பயத்திலேயே ரெண்டு பேரும் பேசிக்காம கூட இருந்திருக்காங்க. எப்படியோ கல்யாணம் வரை கொண்டு வந்தாச்சு” என்றாள்.

“ம்ம்… அவ இன்னும் நல்ல மைண்ட் செட்க்கு வரலை. அவளை கவனிச்சுக்க பாவனா”

“ம்” என்றாள்.

“என்ன குரல் உள்ள போகுது?”

“நம்ம கல்யாணத்தப்போ நாம எவ்ளோ டென்ஷன்ல இருந்தோம்? நம்ம கல்யாணத்தை நல்லா நடத்திக்கிறது கூட மிஸ் பண்ணிட்டோம். கல்யாண போட்டோஸ் கூட இல்லைல” வருத்தமாக சொன்னாள்.

“ஸ்ரீகிட்ட இருக்கும். கேட்டு பார்க்கிறேன். இல்லைனாலும் கல்யாண கெட் அப் ல போட்டோ எடுத்துக்கலாம்”

“ப்ச்!”

அவளை மார்போடு அணைத்துக் கொண்டவன், “என்ன செய்ய முடியும் பாவனா? இப்படி ஒன்னொண்ணா தோணிகிட்டேதான் இருக்கும். கவலை படறதால எதுவும் ஆகாது. இனி வாழப் போறதை நல்லா வாழ்வோம்” என சொல்ல அவன் நெஞ்சில் முத்தம் வைத்து இன்னும் இறுக கட்டிக் கொண்டாள் பாவனா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement