Advertisement

நேச நதி -23

அத்தியாயம் -23 (prefinal – 1)

அன்றைய முகூர்த்த தினத்தில் தேவா அவன் தாத்தா, பாட்டி, அம்மா, தங்கை, தங்கையின் கணவர் என அரங்கநாதனின் வீடு வர அதற்கு முன்னரே பிருந்தா அவளது பெற்றோரோடு வந்திருந்தாள்.

முக்கியமான விஷயம் பேச வேண்டும் என முன்னரே தாத்தா சொல்லியிருக்க கேசவனும் வருவதாக சொல்லியிருக்க பிருந்தாவின் திருமண விஷயம் என நினைத்திருந்தார் அரங்கநாதன்.

வைஷ்ணவியை வீட்டிலேயே இருக்க சொல்லியிருந்தான் விஜய். எதற்கு என கணிப்பு இருந்த போதும் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் வீட்டில்தான் இருந்தாள்.

முதல் நாளே “பிருந்தாவுக்கு வரன் ஏதும் வந்திருக்கும் போல” என சந்தேகமாக பிரசன்னாவிடம் கூறியிருந்தார் அரங்கநாதன்.

பிருந்தா விஷயம் எனவும் அதற்காகவும் தனது அண்ணன் தேவாவை வீட்டு மாப்பிள்ளை ஆக்க எதுவும் முயற்சி எடுக்கிறானோ என சந்தேகம் வந்ததாலும் பிரசன்னா கூட வீட்டில் இருந்து கொண்டான்.

“வைஷுகிட்ட கேட்டா என்னவோ போல இருக்கு வீட்ல இருக்கேன்னு சொல்றா, நீயும் காலேஜ் போகாம என்ன செய்ற?” கேள்வி கேட்டார் அரங்கநாதன்.

“போகணும் ப்பா. பிருந்தாக்கு கல்யாணம்னா நான் இல்லாமலா? அதாவது அவ விஷயம் எனக்கும் தெரியனும்ல… கொஞ்சம் லேட்டா போறேன்” என பிரசன்னா சொல்ல எப்போதிலிருந்து இவனுக்கு இவ்வளவு அக்கறை என நினைத்தவாறே வேறு கேட்காமல் விட்டார் அரங்கநாதன்.

விஜய்க்கு என்னாகுமோ என நினைத்து இரவெல்லாம் பதற்றம்தான். “ஏதாவது முடிவு தெரிஞ்சாதான் அடுத்து என்ன செய்றதுன்னு தெரிய வரும். டென்ஷன் ஆகாதீங்க” என சமாதானம் செய்தாள் பாவனா.

“ம்ம்… சாதகமா நடக்கலைனா என்ன செய்றது?”

“நம்ம கல்யாணம் ஆனது மாதிரி பெரியவங்க யாரும் இல்லாம நடக்க கூடாது வைஷு கல்யாணம். அவங்க ரெண்டு பேர் ஆசையும் கூட நிறைவேறணும், அதுக்கு என்ன செய்யணுமோ செய்ங்க” என்றவளை அணைத்துக் கொண்டான்.

“என்னவோ நான் ஐடியா கண்டுபிடிச்சு சொன்னது போல ஹாப்பி ஆகுறீங்க. அது நீங்கதான் கண்டுபிடிக்கணும்” அவன் அணைப்புக்குள் இருந்தவாறு சொன்னாள்.

“நான் ஒரு முடிவு எடுத்திடுவேன். அதை செய்தா சரியா இருக்கும்னும் தோணும். ஆனாலும் அந்த முடிவு நோக்கி போகும் போது ரொம்ப குட்டியா எனக்குள்ள ஸ்ட்ரகில் ஆவேன். அப்போ இப்படி யாராவது எங்கரேஜ் செய்யணும் என்னை” என்றான்.

“ஹான் அதெப்படி நீங்க என்ன செய்ய போறீங்கன்னுதான் எனக்கு தெரியாதே”

“தெரிஞ்சா கூடாதுன்னு சொல்லுவியே!”

அவனை நிமிர்ந்து பார்த்து பாவனா முறைக்க, குறும்பாக சிரித்தவன், “நீ கூடாதுன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன். பீஸ்ஃபுல்லா செய்திட்டு போறேன்” என்றான்.

“நல்ல டெக்னிக்தான். எது செய்தாலும் யாருக்கும் சேதாரம் இல்லாம செய்ங்க. ஏற்கனவே உங்க மேலே வருத்தத்துல இருக்கும் போது இன்னும் கெட்ட பேர் வாங்காதீங்க” என அறிவுறுத்தினாள்.

“இதுக்கு மேலயா என்னை நல்லவன்னு நினைக்க போறாங்க? என்ன வேணா நினைக்கட்டும், வைஷு ஆசை பட்டவனோட அவ கல்யாணம் நடக்கணும், அவளே பின்வாங்கினாலும் நடக்கும்” என தீவிர தொனியில் கூறினான்.

பாவனா கலவரமாக பார்க்க, “நான் டென்ஷனா இருக்கேன்னு தெரிஞ்சா என் டென்ஷன் எப்படி போக்குறதுன்னு மட்டும் யோசி” என்றான்.

“உங்க பொண்ணு அடிக்கடி இங்க தூங்காம அங்க தூங்குறது நல்லா வசதியா போச்சுல்ல உங்களுக்கு?”

வாய் விட்டு நகைத்தவன், “ஏதோ கொஞ்சம் என் மேலேயும் இயற்கைக்கு கருணை இருக்கு. அதான் என் பொண்ணு அவ தாத்தா கூட ஒட்டிக்கிட்டா” என்றவன் அதற்கு மேல் வார்த்தைகள் கொண்டு பேசவில்லை.

காலையில் தெளிவாக உறுதியாக இருந்த விஜய், வந்தவர்களை வரவேற்று அம்மாவிடம் எதற்கு வந்திருக்கிறார்கள் என குறிப்பு காட்டினான்.

 அவர் திகைக்க, “வைஷுவோட விருப்பம் இது, அதனாலதான் நீங்க சொல்ற மாப்பிள்ளை எல்லாம் பார்க்காமலே வேணாம் சொன்னா. அப்பாகிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, ஆனா உன் அபிப்ராயம் கேட்டா பதில் சம்மதம்னு இருக்கணும்” என்றான்.

கங்கா கோவமாக பார்க்க, “காதல் எல்லாம் நம்மள மீறி வர்ற உணர்வு மா. எல்லாம் பார்த்து பார்த்து பண்ணி கொடுத்திட்டு லைஃப் பார்ட்னர் மட்டும் உன் இஷ்ட படி இருக்க கூடாதுன்னா என்ன அர்த்தம்? தேவா இல்லைனா வைஷு யாரையும் கல்யாணம் செய்ய மாட்டா, அது ஓகேவா உனக்கு, இல்லைதானே? அப்ப சரின்னு சொல்லிடு” என சொல்லி சென்ற மகனை தளர்ந்து போய் பார்த்தாலும் அவன் சொல் படி செய்வது என முடிவெடுத்துக் கொண்டார்.

ஹால் நிறைந்து போயிருந்தது. தேவா அவனது தங்கை மிருதுளா எல்லாம் வருவார்கள் என எதிர் பார்க்காத அரங்கநாதனுக்கு விஷயம் வேறு ஏதோ என பொறி தட்டியது.

“என்ன உனக்கு கல்யாணம்னு பேச்சு அடிபடுது. இப்பவே எல்லார் முன்னாடியும் என்னை கட்டிக்க போறேன்னு சொல்லப் போறியா என்ன?” பிருந்தாவிடம் ரகசியமாக வம்பு செய்தான் பிரசன்னா.

“வெயிட் உள்ள ஆளு எனக்கு வேணாம்” என்றாள் பிருந்தா.

“ஜஸ்ட் எய்ட்டி கே ஜி ஸ் ஒன்லி. வேணும்னா நீயும் வெயிட் போடு, எனக்கு மேட்ச் ஆகிடுவ” என்றவனை இகழ்ச்சியாக பார்த்தவள், “ஹெட் வெயிட்ட சொன்னேன். நான் சாதுவான ஒருத்தனை கட்டிக்குவேன். அதை பத்தி பேசத்தான் வந்திருக்கோம்” என பதிலுக்கு வம்பு செய்தாள்.

“நான் கூட சாதுதான், பரம சாது!” கேலியாக சொன்னான்.

“சுடு தண்ணி எடுத்திட்டு வந்து காதுல ஊத்தி விட்ருவேன். ஓடிப் போங்க” என பிருந்தா சொல்ல ஒரு நக்கலான சிரிப்புடன் அவளிடமிருந்து விலகி வந்தான்.

திடீரென வீட்டில் கூட்டத்தை பார்த்து விட்டு அம்மாவை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆழினி. மிருதுளாவின் இரண்டு வயது பெண் ஆழினியை பார்த்து சிரிக்க பின் இரு குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விட்டனர். பிருந்தா குழந்தைகளை கவனித்துக் கொண்டே பெரியவர்கள் பேசுவதையும் கவனித்திருந்தாள்.

தாத்தாதான் வைஷ்ணவியை தேவாவுக்கு பெண் கொடு என பேச்சை ஆரம்பித்து வைத்தார். கேசவனும் தேவா பற்றி நல்ல விதமாக சொல்லி சிபாரிசு செய்ய கங்காவிடம் சிபாரிசு செய்தார் நிர்மலா.

பிருந்தாவை ஏளனமாக பார்த்த பிரசன்னா அப்பா என்ன சொல்ல போகிறார் என அவரை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

அரங்கநாதன் விஜய்யின் முகத்தை பார்க்க, “தேவாவை நமக்கெல்லாம் தெரியும் தானேப்பா? யாரும் சொல்லி தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல. வைஷுவுக்கு ரொம்ப பொருத்தம்” என தனது சம்மதத்தை கொடுத்தான்.

உடனே பிரசன்னா, “தேவாவை மாப்பிள்ளை ஆக்கிட்டா அவன் வைஃபோட மரியாதை குறையாதுன்னு நினைக்கிறான் போல அண்ணன். வைஷு கல்யாணம் நம்ம குடும்ப கவுரவம். அதை மனசுல வச்சு முடிவு எடுங்கப்பா” என்றான்.

“பெரியவங்க பேசும் போது நீ என்னடா இடையில, அதிகமா பேசின…” அடுத்த வார்த்தை பேசாமல் தம்பியை முறைத்தான் விஜய்.

கோவம் கொண்ட தேவா, “அப்படி என்ன நான் கவுரவம் இல்லாதவனா போய்ட்டேன்னு தெரிஞ்சுக்கலாமா பிரசன்னா?” என கேள்வி கேட்டான்.

தாத்தாவும் அதிருப்தியாக அரங்கநாதனை பார்க்க சின்ன மகனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் செய்த அரங்கநாதன் பெரியவரை நேராக பார்த்தார்.

“நீங்க விருப்பத்தை ஃபோன்லேயே கேட்ருக்கலாம். நேர்ல வந்து எல்லாருக்கும் சங்கடம். இது சரியா வராது. மன்னிச்சுடுங்க மாமா” என்றார் அரங்கநாதன்.

தாத்தா, கேசவன் இருவரும் அசராமல் எடுத்து சொல்லியும் அரங்கநாதன் அசைவதாக இல்லை.

இப்படியே போனால் சரி வராது என நினைத்த விஜய், “வைஷுகிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம் ப்பா” என்றான்.

“அவளை ஏன் இழுக்குற? நம்ம முடிவுதான் எல்லாம்” என மறுத்தார் அரங்கநாதன்.

“நம்ம முடிவுன்னா என்னையும் சேர்த்துதானே ப்பா?” என விஜய் கேட்க அரங்கநாதன் அமைதியாக இருந்தார்.

 “என் தங்கைக்கு நான் பார்த்த மாப்பிள்ளை தேவான்னு வச்சுக்கோங்க. அவ விருப்பம் தெரிஞ்சுக்கலாம்” என்றான் விஜய்.

“அதை நாம அப்புறம் கேட்டுக்கலாம். இப்படி எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு கேட்க அவசியம் இல்லை” என அழுத்தமாக தெரிவித்தார் அரங்கநாதன்.

பிரசன்னா மிதப்பாக அண்ணனை பார்த்து சிரிக்க, “யாரும் வெளியாளுங்க இல்லை. எல்லார் முன்னாடியும் கேட்டுட்டா யாருக்கும் சங்கடமும் இல்லை” என சொல்லி விடு விடுவென தங்கை அறைக்குள் நுழைந்தான்.

வைஷு தயக்கமாக அண்ணனை பார்க்க, “சும்மா பூச்சி புடிக்கிற மாதிரி இருக்காத. நான் கேட்கறதுக்கு உண்மையான பதில் மட்டும் அங்க வந்து சொல்லு போதும்” என சிறு கண்டிப்போடு சொல்லி அவள் கை பிடித்து அழைத்து வந்து அனைவர் முன்பும் நிறுத்தினான்.

வைஷுவுக்கு நெஞ்சுக்குள் அடித்துக் கொள்ள தன் தோளோடு ஆதரவாக பிடித்துக்கொண்ட விஜய் கண்களால் தைரியம் சொன்னான்.

அரங்கநாதன் கோவமாக பார்த்திருக்க, “வைஷு உள்ள போ” என அதட்டிக் கொண்டே எழுந்து நின்றான் பிரசன்னா.

“உட்கார் டா!” என தம்பியை அதட்டிய விஜய், “தேவாவை முன்னாடியிலேர்ந்து உனக்கு தெரியும்தானே? இவருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை, நானும் அதைத்தான் ஆசை படுறேன். உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு” எனக் கேட்டான்.

மகளின் முகத்தை அத்தனை நம்பிக்கையாக அரங்கநாதன் பார்த்திருக்க அப்பாவை நிமிர்ந்து பார்த்த வைஷு, “அப்பா என்ன சொல்றாங்களோ அப்படித்தான் அண்ணா” என்றாள்.

வந்த கோவத்தை கட்டுப் படுத்தி, “உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு, அப்பா சொல்றது அப்புறம்” என்றான் விஜய்.

பதில் சொல்ல முடியாமல் வைஷு தவிப்பாக நிற்க, அடி பட்ட உணர்வோடு தேவா பார்த்திருக்க, “வைஷு!” அதட்டிய விஜய், “உன் கூட நான் இருக்கேன். மனசுல உள்ளதை சொல்லு” என மெல்லிய குரலில் தங்கையிடம் கெஞ்சலாக கேட்டான்.

கண்களில் நீர் வழிய உள்ளே ஓடி சென்று விட்டாள் வைஷு. வேறு யாரும் எதுவும் பேசுவதற்கு முன் எழுந்து கொண்டான் தேவா.

“பிடிக்கலைன்னு சொல்லலையே தேவா. அழுதிட்டு ஓடுறா. செகண்ட்ஸ்ல வர்ற கோவத்துக்கு பணிஞ்சு லைஃப் லாங் கஷ்ட படாதீங்க. ப்ளீஸ் உட்காருங்க” என விஜய் சொல்ல தாத்தாவும் “உட்கார்டா” என்க அமர்ந்தான் தேவா.

சௌந்தரி சங்கடமும் அழுகை வந்து விடக்கூடாது என்ற முயற்சியுமாக இருக்க தன் அம்மாவிடம் கண்களால் குறிப்பு காட்டினான் விஜய்.

உடனே கங்கா தன் கணவர் மீதிருந்த பயத்தை உதறி, “தவறா எடுக்காதீங்க. வைஷு கொஞ்சம் பூஞ்சை மனசு உள்ளவ. முகத்துக்கு நேரா பேசி பழக்க படாதவ. இப்போ வருவா” என சௌந்தரியிடம் சொல்லி பாவனவை பார்க்க, உடனே அவள் வைஷுவிடம் விரைந்தாள்.

வைஷுவின் அறைக்கு பாவனா வந்த போது அவள் அழுது கொண்டிருந்தாள். திட்டுவதற்காக வந்த பிருந்தாவும் என்ன சொல்வது என தெரியாமல் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“அவங்க கோவமா போறதுக்குள்ள வந்து ஒரு வார்த்தை சொல்லு வைஷு. தேவா அண்ணா ஹர்ட் ஆகிட்டாங்க. அழுகையை நிறுத்திட்டு ப்ளீஸ் வா” என்றாள் பாவனா.

“இல்ல அண்ணி, இந்த கல்யாணம் நடந்தா அப்பாக்கு ஏதும் ஆகிடும்னு எல்லாம் பிரசன்னா அண்ணா சொல்றான். எனக்கு கல்யாணமே வேணாம்” என்றாள் வைஷு.

“ஓ அந்த பரங்கிமலை வேலையா இது? இனிமே மாமா சும்மா இருப்பாங்கனு நினைச்சியா? ஜெட் வேகத்துல உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவார். தைரியம் இல்லாதவ ஏன் டி லவ் பண்ணி தொலையுற?” என திட்டினாள் பிருந்தா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement