Advertisement

நேச நதி -22

அத்தியாயம் -22(1)

பாவனாவையும் ஆழினியையும் அழைத்துக் கொண்டு தேவாவின் வீடு வந்திருந்தான் விஜய். இங்கு வர பாவனா மிகவும் தயங்கினாலும் தன் அப்பாவை பார்க்க வேண்டும் எனவும் தோன்ற அதிகம் மறுக்காமல் கணவனுடன் கிளம்பி விட்டாள்.

வரப் போவதாக தேவாவிடம் முன்னரே விஜய் அறிவித்திருக்க, அம்மா சௌந்தரியிடம் தன் காதல் விஷயத்தை சொல்லி அவனது தாத்தா பாட்டியையும் வீட்டுக்கு அழைத்து அவர்களிடமும் தன் விருப்பத்தை கூறியிருந்தான் தேவா.

பொறுப்பான பிள்ளை, தாய் மனம் புரிந்து நடந்து கொள்பவன், அவனுக்கு விருப்பம் எனவும் சௌந்தரி அதிகம் அவனிடம் கேள்விகள் கேட்கவில்லை.

 பெரியவர்களுக்கும் மறுத்து சொல்ல காரணம் இல்லை, சொல்லப் போனால் இப்படி நடந்தால் அவர்களுக்கு சந்தோஷமும் கூட. தாத்தா இரண்டு மூன்று முறை வைஷ்ணவிக்கும் விருப்பம்தானே என கேட்டு தெளிவு படுத்திக் கொண்டார்.

பாவனாவும் விஜய்யும் வரவும் விஜய்யை இயல்பாக வரவேற்ற சௌந்தரி பாவனாவை சம்பிராதயமாக வா என மட்டும் அழைத்து ஒதுங்கி விட்டார்.

 தேவாவுக்கு முன்பு போல அவளிடம் வெறுப்பு இல்லை என்றாலும் ஒரேயடியாக பிரியமும் கிடையாது. இப்போது இன்னும் நெருங்கிய சொந்தங்கள் ஆகப் போகும் நிலை என்றாலும் சிறு வயதிலிருந்தே அவளிடமிருந்து ஒதுங்கி இருந்தே பழக்கப் பட்டவன் இன்றும் அப்படியே இருந்து கொண்டான்.

ஆனால் பாவனாவிடம் தாத்தா பாட்டி நன்றாக பேசினார்கள். கொள்ளு பேத்தியை கொஞ்சினார்கள். பாவனாவும் சௌந்தரி தேவாவின் ஒதுக்கத்தை எல்லாம் பெரிது படுத்திக் கொள்ளவில்லை.

அப்பாவை பார்க்க வேண்டும் என பாவனா சொல்ல தேவாவிடம் கேட்டு ரமணன் இருந்த அறைக்கு மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு சென்றான் விஜய்.

அறைக்குள் நுழையவுமே மருந்துகளின் நெடியும் கிருமி நாசினிகளின் வாடையுமாக அங்கே இருப்பவர் ஒரு நோயாளி என அடையாளம் கூற, ரமணனோ சில வருடங்கள் முன்பு இருந்த தோற்றத்திலிருந்து வெகுவாக அடையாளம் மாறிப் போய் உறங்கிக் கொண்டிருந்தார்.

மெலிந்து போய் பார்க்க பரிதாபமாக படுக்கையில் கிடந்த அப்பாவை பார்த்த பாவனாவுக்கு அழுகை வருவது போலிருக்க விஜய்யின் கையை பிடித்துக்கொண்டாள். விஜய்க்கும் பாவமாக இருந்தாலும் மனதின் ஒரு பக்கம் அவர் செய்த வினை என நினைக்காமலும் இல்லை.

“கொஞ்ச நேரம் இவர் கூட இருந்து பார்த்திட்டு வா. நான் வந்த விஷயத்தை பார்க்கிறேன்” என்ற விஜய் குழந்தையோடு வெளியேற தேவாவும் அவனுடனே வந்து விட்டான்.

தந்தையின் அருகில் அமைதியாக அமர்ந்து கொண்ட பாவனா அவரின் கையை வருடி விட ஆரம்பித்தாள். அம்மாவுக்கு அவர் செய்தது நினைத்து கோவம்தான், தனக்காக கூட மணக்க முன்வரவில்லையே. ஆனால் இந்த நிலையில் இவரை பார்க்கவும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டாள். அவராக கண் விழிக்கும் நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

வைஷ்ணவி விரும்புவதை சொல்ல வேண்டாம், பெண் கேட்டு வாருங்கள், கேசவன் மாமாவிடம் பேசி அவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் என விஜய் சொல்ல, “நடக்குமா ப்பா? வந்து அசிங்க பட முடியாது பாருங்க…” என்றார் சௌந்தரி.

“தேவாவுக்கு பிடிச்சிருக்குனு சொல்லும் போது வேற எதுவும் பேசாத. கேசவன் கூட வரும் போது என்ன அசிங்க படுத்துவாங்க? அந்த காலத்துல கேசவனுக்கு அவங்க வீட்டு பொண்ணை கொடுக்க அரங்கன்தான் என்கிட்ட வந்து பேசினது, என் வார்த்தைக்கு மரியாதை இல்லாத போய்டுமா?” என தாத்தா நம்பிக்கை ஊட்டினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க பாவனா வந்தாள். அப்பா விழித்து விட்டதாக சொன்னவள், “பாப்பாவை பார்க்க கேட்கிறார்” என்றாள்.

மகள் எதுவும் அவர் பேசுவது கண்டு பயம் கொள்வாளோ என நினைத்த விஜய் அவனே மகளை தூக்கிக் கொண்டு அவரது அறைக்கு சென்றான். அப்பாவை தூக்கி அமர வைக்க முயன்ற பாவனாவின் கண்ணீர் அவர் மீது விழ சரியாக வந்த ஒரு கையால் துடைத்து விட்டு பரிதவிப்பாக பார்த்தார்.

தேவா வந்து பாவனாவை விலக சொல்லி அவனே அப்பாவை சாய்வாக அமர வைத்தவன் உடனே சென்றும் விட்டான்.

சரியாக பேச வரவில்லை ரமணனுக்கு, கண்கள் கலங்கினார். நன்றாக வந்த கையால் பேத்தியின் கையை பிடித்தார். ஆழினி மிரண்டு போய் பார்த்திருக்க விஜய் இன்னும் கொஞ்சம் கெட்டியாக மகளை பிடித்துக்கொண்டு, “உன் தாத்தா இவங்க, தாத்தாக்கு இப்போ உடம்பு முடியலை” என்றான்.

குழந்தை அப்பாவின் தோளில் சாய்ந்து முகம் மூடிக் கொள்ள, “நீங்க பேசிட்டு இருங்க” என்ற விஜய் பாவனாவிடம் கண்களால் சொல்லிக் கொண்டு வெளியேற போனான்.

சரியாக வராத கையோடு இன்னொரு கை கொண்டு அவனை கும்பிடுவது போல அவர் செய்ய அவரின் கைகளை தளர்த்தி விட்டவன், “தைரியமா இருங்க” என சொல்லி வெளியேறி விட்டான்.

“எப்படி எல்லாம் வாழ வேண்டிய என் பொண்ணு சரியான சம்பந்தம் அமையாம வசதி குறைவான இடத்துல கட்டி வச்சோம். இப்ப இவ இருக்கிற இடத்துலேயே புள்ளைக்கும் முடிக்கணும்னு சொல்றப்போ மனசு கேட்க மாட்டேங்குது” மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சௌந்தரி.

அந்த சமயம் பார்த்து விஜய் வந்து விட பெரியவர்களை கோவமாக பார்த்தவன், “எல்லாத்துக்கும் காரணம் உள்ள படுத்து கிடக்குற உங்க பையன்தான். பாவனா இப்போ என் மனைவி, அவ்ளோதான். வேற எதுவும் பேசிடாதீங்க” என சின்ன குரலில் சொன்னாலும் அழுத்தமாக சொல்லி இருக்கையில் அமர்ந்தான்.

சௌந்தரி சங்கடமாக பார்க்க, “இவ மன வேதனையும் நீ புரிஞ்சுக்கணும் விஜய்” என்றார் பாட்டி.

“பாவனா எந்த வகையில இதுக்கு காரணம்னு நீங்க சொல்லுங்க பாட்டி” என விஜய் சொல்ல அங்கே ஓர் சங்கட நிலை பரவியது.

கைபேசி அழைப்பில் பேசிக் கொண்டிருந்த தேவா அங்கு வர சகஜமாக தங்களை காட்டிக் கொண்டனர். ஆழினியை தேவா தூக்க முயல அவள் செல்லவில்லை.

எப்போது வருகிறோம் என தாத்தா சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டான் விஜய். பாவனா வெளியில் வரவும் உடனே கிளம்புகிறோம் என எழுந்து கொண்டான். உணவருந்த சொல்லி அத்தனை வற்புறுத்தியும் நாசூக்காக மறுத்து விட்டு அங்கிருந்து குடும்பத்தோடு புறப்பட்டும் விட்டான்.

வழியில் பாவனா அமைதியாக வர, “அவருக்கு உடம்பு முடியலைன்னு முன்னாடியே தெரியும்தானே? இப்ப ஏன் டல் அடிக்கிற? அங்க நல்லாத்தான் பார்த்துக்கிறாங்க” என்றான் விஜய்.

“அப்பாவை பார்த்ததும் அம்மாவை கூட பார்க்கணும் போல இருக்கு. மூணு மாசம் முன்னாடி வந்திட்டு போனாங்க” என்றவள் ஆழ்ந்த மூச்சு விட்டு பின் புன்னகை செய்தாள்.

“என்ன இப்போ? கொஞ்ச நாள் கழிச்சு நீ போய் பார்த்திட்டு வா. தங்குறதுன்னா கூட தங்கிட்டு வா”

“இல்ல இன்னும் அங்க தங்குற அளவுக்கு கம்ஃபர்ட் வரலை எனக்கு. சென்னை வரும் போது பார்த்திட்டு வரேன்”

“அப்புறம் என்ன?”

“ஒண்ணுமில்ல. அப்பாவை அப்படி பார்க்க கஷ்டமா இருக்கு, அவங்க… தேவா அம்மாவை பார்த்ததும் ஏதோ போல ஆகிடுச்சு. தாத்தா கூட… பெத்த புள்ளைய படுக்கையில கிடக்க பார்க்கிறது எல்லாம் கொடுமைதானே? ப்ச்… என்னவோ போங்க” என்றாள்.

“உதை வாங்க போற, என் பொண்ணையும் என்னையும் பாரு. உன் அப்பாவை அதட்டி கண்டிச்சு சரி பண்ண ஒருத்தராலும் முடியலை. இப்ப அனுபவிக்கிறாங்க. தேவா அம்மா கூட விட்டுட்டு போயிருந்திருக்கணும், அப்ப தெரிஞ்சிருக்கும் உன் அப்பாக்கு. ஒரு விஷயம் பாவனா, வைஷு அந்த வீட்டு மருமகள் ஆகிட்டா அடிக்கடி அவங்கள நாம சந்திச்சுக்குற மாதிரி வரும். அங்க யாரும் ஏதும் பேசினா பொறுத்து போகணும்னு இல்லை உனக்கு, புரிஞ்சுதா?” என விஜய் கேட்க தலையாட்டிக் கொண்டாள்.

தங்கள் வீடு செல்ல ஆழினிக்கான பார்க் தயாராகிக் கொண்டிருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றவன் அம்மாவிடம் கேட்க, “அப்பா செய்றார்னு முன்னாடியே சொன்னதுதானே? என்ன இப்போ? எங்க போயிட்டு வர்றீங்க?” என எதிர் கேள்வி கேட்டார் கங்கா.

பாவனாவின் அப்பாவை பார்த்து விட்டு வருவதாக சொன்னான். சௌந்தரி பற்றி விசாரித்தவர், “ரொம்ப நல்ல டைப் டா. பாவம் பொண்ணுக்கு நல்ல இடமா அமையலைன்னு ரொம்ப வருத்தம். நல்ல பையன்தான் ஆனா வசதி இல்லை, அவங்கதான் ஏதோ எல்லாம் அமைச்சு கொடுத்தாங்க. இப்ப அவங்க பையனுக்கு கூட நல்ல இடம் அமையறது கஷ்டம்தான்” என அவர் பாட்டுக்கும் சொல்லி செல்ல நொந்து போனவனாக விஜய் பாவனாவை பார்க்க, “நல்லதே நடக்கும்னு நம்புங்க” என்றாள்.

“அதுவா நடக்காட்டாலும் தலைகீழா நின்னாவது நடத்தி வச்சே தீருவேன்” என சொல்லி சென்றான் விஜய்.

வார இறுதி வர ஸ்ரீ வீடு சென்றனர். அடிதடி சண்டை கூடாது என கண்டித்துதான் அவனுடன் கிளம்பி சென்றாள் பாவனா.

இவர்களுக்கு முன் அனைவரும் வந்திருந்தனர். விஷால் மதியம் போல வருகிறேன் என சொல்லி அவனது தொழிற்சாலை சென்று விட்டான். ஷாம் உள்ளே இருப்பான் போல, ஆழியுடனும் பாவனாவுடனும் அனைவரும் ஒன்றி இருக்க மெல்ல நழுவி உள்ளே சென்றிருந்தான் விஜய். யாரும் அவனை கவனிக்கவில்லை.

ஷாம் இப்படி ஒன்றை எதிர்பார்த்திருக்கவில்லையே. தலை குனிந்தவாறு உள்ளுக்குள் மருகிக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.

ஷீபா ரதி ஸ்ரீ மூவரிடம் பேசிக் கொண்டிருந்தாள் பாவனா. ஆழினி மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்க ஜெரினோடு பேசிக் கொண்டிருந்தான் பிரணவ்.

திடீரென “விஜய் எங்க?” எனக் கேட்ட பிரணவ் உள்ளே செல்ல ஜெரினும் உள்ளே சென்றான்.

வெளியில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சில நிமிடங்களில் உதடுகளில் இரத்தம் வழிய இன்னும் அடி வாங்கியதற்கான தடங்களோடு ஷாமை அழைத்துக் கொண்டு வந்தான் பிரணவ்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க விஜய் கோவமாக வெளியே வந்து கொண்டிருக்க அவனை நிறுத்தும் விதம் தெரியாமல் பின்னால் வந்து கொண்டிருந்தான் ஜெரின்.

பாவனா ஓடி சென்று விஜய்யை பிடித்துக் கொள்ள பிரணவிடமிருந்து விடுபட்ட ஷாம் விஜய்யிடமே வந்து நின்றான். இன்னும் கொஞ்சம் அமளி துமளி ஆனது. குழந்தைகள் இருப்பது பார்த்துதான் விஜய் சாந்தமாகி விலகி சென்றான்.

பாவனா குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க அனைத்தையும் சொன்னான் விஜய். இப்போது எல்லோரும் ஷாமை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க அவன் அமைதியாக இருந்தான்.

“என் பொண்ணு எனக்கு பதிலா கரடி பொம்மை கட்டி பிடிச்சு தூங்குறாடா. ரெண்டைரை வருஷம் எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு கூட தெரியாது, எங்கப்பா சொன்னா என்ன வேணா செய்வானா? போக சொல்லுடா அவனை, இல்லைனா நான் போறேன்” கோவமும் வருத்தமுமாக சொன்னான் விஜய்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement