Advertisement

அத்தியாயம் -21(2)

பயமும் தவிப்புமாக வந்த வைஷு பிரசன்னாவை எதிர்கொள்ள முடியாமல் விஜய் கையை பற்றிக் கொண்டாள்.

“சும்மா இந்த உதார் விடுறவனுக்கு எல்லாம் பயப்படக் கூடாது. சொல்லு அவன்கிட்ட” தங்கையை அதட்டினாலும் ஆதரவாக அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான் விஜய்.

பெரியண்ணன் இருக்கும் தைரியத்தில், “தேவாவை எனக்கு பிடிச்சிருக்கு” என தலை நிமிராமல் சொன்னாள் வைஷு.

பிரசன்னா கோவத்தை அடக்கிக் கொண்டு நிற்க, “கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னதையும் சொல்லு அவன்கிட்ட” என விஜய் சொல்ல அப்பாவுக்காக இதை பற்றி பேச வேண்டாம் என்றதையும் திருமணமே வேண்டாம் என்றதையும் கூறினாள் வைஷு.

அப்போதும் மனமிளகாத பிரசன்னா தங்கையை திட்ட விஜய்க்கும் அவனுக்கும் வாக்குவாதம் ஆனது.

“இந்த லவ் கருமாந்திரம் பண்றதுக்கு ஊர் உலகத்துல உங்களுக்கெல்லாம் வேற யாருமே கிடைக்கலியா? கேவலம்…”

“வாய மூடுடா ராஸ்கல்!” என விஜய் கத்த பிரசன்னாவும் பேசாமல் முறைப்பாக நின்றிருந்தான்.

“வைஷுவுக்கும் தேவாவுக்கும் கல்யாணம் நான் நடத்திக் காட்டுறேன், உன்னால முடிஞ்சத பாரு. அப்பாகிட்ட சொல்லணுமா சொல்லிக்க, ஆனா இவளை ஏதாவது திட்டுற வேலை வச்சுக்கிட்ட… உடம்புல இருக்க சிக்ஸ் பேக் கூடிப் போய் சிக்ஸ் ஹன்ரட் பேக் ஆகிப் போகும் பார்த்துக்க” தாடை இறுக சொன்னவன் தங்கையை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.

காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் பணிகளுக்கு புறப்பட விஜய் அவன் மனைவி மகள் அம்மா எல்லாரும் வீட்டில்தான் இருந்தனர். ஸ்ரீஜா அவளது இரட்டைக் குழந்தைகளோடு வந்திருந்தாள். அவளுக்கும் ஆழினி பற்றி தெரியாது. முதலில் அதிர்ந்து பின் தெளிந்து கிண்டல் செய்தாள்.

ஆழினியை விட எட்டு மாதங்கள் இளையவர்கள் ஸ்ரீயின் இரட்டை புதல்வர்கள். வீடு கொஞ்சமாக ரண களப் பட்டது. விஷால் கைபேசியில் அழைத்து பேசினான். விஜய் குடும்பத்தை புகைப்படம் எடுத்து குரூப்பில் ஸ்ரீ ஷேர் செய்ய பிரணவ், ஷீபா இருவரும் கான்ஃப்ரன்ஸ் அழைப்பில் வந்தனர். ஷாம் இன்னும் இந்த படத்தை பார்த்திருக்கவில்லை.

யாருக்கும் ஷாம் செய்த வேலை இன்னும் தெரியவில்லை. பாவனாவை தேடி கண்டுபிடித்து சமாதானம் செய்து அழைத்து வந்து விட்டான் விஜய் என்றே நினைத்தனர். பாவனா கழுத்தில் தாலி சரடு இருப்பதை பார்த்திருந்த ஸ்ரீயும் மீண்டும் அணிவித்திருக்கிறான் என எண்ணிக் கொண்டாள்.

நண்பர்கள் மூவருமாக விஜய்யை ஓட்டி தள்ளி விட்டனர். ஓரளவு மனமிறங்கிய ஸ்ரீதான் “பாவம் விடுங்கப்பா” என மற்ற இருவரையும் அடக்கினாள். பாவனாவிடமும் நலம் விசாரித்தனர். பிரணவிடமிருந்து கைபேசி வாங்கிய ரதி பாவனாவிடம் ஆர்வமாக பேசினாள்.

தங்கள் குழந்தைகளை காட்டி பேசினார்கள். சிறிது நேரத்தில் கைபேசி உரையாடலால் வீடு கல கலத்து போனது.

வேக வேகமாக அந்த வார இறுதியில் தன் வீட்டில் ஒரு கெட் டு கேதருக்கு திட்டமிட்டாள் ஸ்ரீ. பிரணவும் ஷீபாவும் வர உடனே ஒத்துக் கொண்டனர்.

“இந்த ஷாம் என்னடா வர வர நம்மகிட்டர்ந்து ஒதுங்கி போறான்? நீ போய் பார்க்கிறியா இல்லையா அவனை?” பிரணவிடம் ஷீபா கேட்க விஜய்யின் முகம் இறுகியது.

“லவ்ல பிரச்சனை போல. சிந்தியாகிட்ட கூட பேசுறது இல்லை. அந்த பொண்ணும் இவனுக்காக வெயிட் பண்ணுது, ஆனா கோவமா இருக்கு இவன் மேல. எதுவும் கேட்டா ஒழுங்கா பதில் சொன்னாதானே? ட்ரிங்க்ஸ் பண்றான்ப்பா. உங்களுக்குத்தான் ரதிய தெரியுமே, சேர விட மாட்டேங்குறா அவன் கூட, நானும் கெட்டு போய்டுவேனாம்” பிரணவ் பெரிய கதையாக சொல்லிக் கொண்டிருந்தான்.

ரதி கணவனின் மண்டையில் தட்டி செல்வது காணொளியில் தெரிய, “ஏய் கேட்க யாருமில்லனு அவனை மண்டையில அடிக்கிறியா… விஜய் வந்திட்டான், எங்க ஸ்ட்ரென்த் கூடிப் போச்சு. உன் மண்டை பத்திரம்!” எச்சரித்தாள் ஸ்ரீ.

“ஹ்ம்ம்… உங்காளு குடுமி என் ஃப்ரெண்ட் கையில. அவளை விட்டு உங்காளுக்கே நாலு போட சொல்வேன்” ரதியும் வம்பு பேச இப்படியாக பெண்களுக்குள் பேச்சு அமர்க்கள பட விஜய் அமைதியாகி விட்டான். பாவனா குழந்தைகளை கவனிப்பது போல எப்பொழுதோ அகன்று சென்றிருந்தாள்.

இறுதியாக ஷாமை நேரில் சந்தித்து அழைத்து வருவது தனது பொறுப்பு என பிரணவ் சொல்ல அவர்கள் உரையாடல் நிறைவுக்கு வந்தது. இப்போதும் ஸ்ரீயிடம் கூட விஜய் எதுவும் சொல்லவில்லை. வார இறுதிக்கு வரும் ஷாமை நேரில் கவனிக்கிறேன் என பற்களை கடித்து தனது கோவத்தை அடக்கிக் கொண்டான்.

மதிய சாப்பாட்டுக்கு அரங்கநாதன் வருவதற்கு முன்னரே ஸ்ரீ கிளம்பி விட்டாள். விஜய் திருமணம் முடிந்ததிலிருந்து அவரை நேரில் சந்திப்பதையே தவிர்த்து வருகிறாள் ஸ்ரீ.

பிரசன்னாவுக்கு காலையிலிருந்து உள்ளுக்குள் புகைச்சல். தங்கையின் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவளது கலங்கிய தோற்றம் உள்ளுக்குள் போட்டு படுத்துகிறது. அண்ணன் திருமணத்தை நடத்துவேன் என கண்டிப்பாக சொல்லியிருக்க அப்பாவிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசனை செய்து செய்து ஓய்ந்து போய் விட்டான்.

வீடு செல்ல பிடிக்காமல் மதிய உணவை தான் இருந்த பொறியியல் கல்லூரிக்கே அனுப்பி வைக்க சொல்லி விட்டான். மதிய உணவுக்கு பின் பிருந்தா வந்திருப்பதாக தகவல் வர கொஞ்சம் இலகு மனப் பான்மைக்கு வந்தவன் அறைக்கு வர சொன்னான்.

திருமணம் நின்று போனதிலிருந்து என்னவோ பிரசன்னாவுக்கு பிருந்தா மீது ஒரு ஈடுபாடு. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கித்தான் நிற்கிறான். வேண்டாம் என்றவளை வலிய போய் நான் பேசுவதா கேட்பதா என்ற ஈகோ. ஆனாலும் அவளை எப்போதாவது பார்க்க நேர்ந்தால் யார் கவனத்தையும் கவராமல் ரசிப்பான்.

காட்டன் புடவையில் முன்பை விட பொலிவாக நிமிர்வாக உள்ளே வந்த பிருந்தாவை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டான் பிரசன்னா.

பிருந்தாவின் தொழிற்சாலை ஊழியரின் மகளுக்கு அவள் விருப்பப்பட்ட பிரிவில் இடம் கிடைக்கவில்லை. அது சம்மந்தமாக பேச வந்திருந்தாள்.

பிருந்தாவின் கோரிக்கையை கேட்டவன், “கவர்மெண்ட் அலாட்டட் சீட்ஸ் அந்த பிரான்ஞ்க்கு முடிஞ்சு போச்சே. மேனேஜ்மெண்ட் கேட்குற ஃபீஸ் கட்டினா சீட் உடனே கிடைக்கும். நீ நேர்ல வந்தாலும் இதுதான் ப்ரொஸீஜர்” என சற்று அலட்சிய தொனியில் கூறினான்.

“உங்க ப்ரொஸீஜர் எல்லாம் நல்லா தெரிஞ்சதாலதான் நான் நேர்ல வந்திருக்கேன். கோடி கோடியா வாங்கி குவிக்குறீங்க, நல்ல மார்க்ஸ் வாங்கின ஏழை பொண்ணுக்கு விருப்ப பட்ட சீட் தர மாட்டீங்களா?” கோவமாக கேட்டாள்.

“ஏன் நீ மட்டும் ஆயிரம் ரெண்டாயிரம்னு பஞ்சு விக்குறியா? எக்ஸ்போர்ட்ல மட்டும் எவ்ளோ டர்ன் ஓவர் ஆகுதுன்னு எனக்கு தெரியாது நினைச்சியா?”

“உங்களை மாதிரி இல்ல நாங்க. எங்க எம்ப்லாயீஸ் பசங்களுக்கு படிக்க ட்ரஸ்ட் வச்சு ஹெல்ப் பண்றோம்”

“நல்லதா போச்சு, நீயே பணம் கட்டிடு. சீட் கிடைச்சிடும்”

“ம்ம்… எல்லாத்தையும் உங்ககிட்ட கொண்டாந்து கொட்டினா வேற பசங்க யாரையும் படிக்க வைக்க வேணாமா?” சீறினாள் பிருந்தா.

லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க, “ம்ம்… சரி, உன் ட்ரஸ்ட்லேர்ந்து வருஷத்துக்கு அஞ்சு பேர் இந்த காலேஜ்ல பிரீ அட்மிஷன் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஓவரா சீறிப் பேசுற நீ?” கேட்டுக் கொண்டே தண்ணீர் எடுத்து பருகினான்.

கொஞ்சம் சுதாரித்த பிருந்தா, “நிஜமாவா? முன்னாடியே சொல்லலை?” என சந்தேகமாக கேட்டாள்.

“இப்பதான் தோணிச்சு. அத்தை மக வந்து கால் கால்னு கத்துறா. சரி போனா போகுதுன்னு இப்பதான் இந்த ஐடியா தோணிச்சு எனக்கு” என்றான்.

“விளையாடுறீங்களா?”

“சீரியஸா” என்றவன் பொய் சொல்லவில்லை என்பது புரியவும் முகம் மலர்ந்த பிருந்தா, “தேங்க்ஸ்” என்றாள்.

“தேங்க்ஸ் வேணாம். பிராப்பரா அனவுன்ஸ்மெண்ட் கொடு பேப்பர்ல, உங்க ட்ரஸ்ட் சார்புல”

முகம் மாறிய பிருந்தா, “அதானே பார்த்தேன். விளம்பரம்!” என கேலியாக கேட்டாள்.

“எப்படி இருந்தா என்ன? உனக்கு காரியம் ஆகுதுதானே” என பிரசன்னா சொல்லவும் சரி என ஒத்துக் கொண்டவள் கிளம்ப போக இருக்க சொன்னவன் பழச்சாறு கொடுத்து உபசரித்தான்.

“விஜய் மாமா வந்திட்டாங்க போல. ஈவ்னிங் வர்றோம் பார்க்க” என்றாள் பிருந்தா.

கடு கடுவென முகத்தை வைத்துக் கொண்டவன், “சரியான இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்ஸ். உன் பெரியப்பா பொண்ணுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? பொறப்பே தப்பா இருக்கும் போது என்ன செய்யணும்? படிச்சு பெரியாள் ஆகணும்னு நினைக்காம லவ்வு! இதுல மேரேஜ் முன்னாடியே…” முடிக்காமல் முகத்தை சுளித்தான்.

பழச்சாறு குடித்து முடித்து காலி கிளாசை மேசையில் வைத்த பிருந்தா, “எக்ஸசைஸ் செஞ்சு உடம்ப விசாலம் ஆக்கின மாதிரி மைண்ட் கூட விசால படுத்தலாம் நீங்க” என்றாள்.

“பொண்ணுன்னு பார்க்க மாட்டேன், முன் பல்லு பேந்திடும் உனக்கு” என்றான் பிரசன்னா.

அஞ்சாமல் அவனை பார்த்தவள், “நல்லா படிச்சு பெரிய லெவலுக்கு போறதுங்கிறது ஆண் பெண் பேதமில்லாம எல்லா மனுஷனுக்கும் பொருந்தும். பாவனாவுக்கு மட்டும் அந்த பிரஷர் நீங்க கொடுக்க கூடாது. அதே மாதிரிதான் மேரேஜ் முன்னாடி பாவனா செஞ்சது தப்புன்னா அப்போ நானோ வைஷுவோ அப்படி நடந்தா சரியா…” என பிருந்தா கேட்டுக் கொண்டிருக்க அவள் மோவாயை இறுக பிடித்து அதற்கு மேல் அவள் பேச முடியாதவாறு செய்திருந்தான் பிரசன்னா.

பலம் திரட்டி அவன் கையை விலக்கி விட்டவள், “பேசிட்டிருக்கும் போது பலத்தை காட்டி என்னை அடக்க பார்க்காத. உன்னை மாதிரி ரூம்ல வச்செல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், உன் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில வச்சு மூக்கு உடைச்சு விட்ருவேன் ஜாக்கிரதை!” ஆங்காரமாக சொன்னாள் பிருந்தா.

அவளின் அந்த கோவத்திலும் கோவத்தில் பெரிதான விழிகளிலும் லேசாக மிரண்டு போய் பிரசன்னா பார்த்திருக்க, “தப்பு சரி எல்லாம் எல்லாருக்கும்தான். எனக்கு உன் தங்கச்சிக்கு என்ன எல்லாம் உரிமை இருக்கோ அது பாவனாவுக்கும் இருக்கு. பாவனா செய்த ஏதோ ஒண்ணு தப்புன்னா அதை நான் உன் தங்கச்சி யார் செய்தாலும் தப்புதான். பெரிய இவன் மாதிரி பேசாத. ஏன் விஜய் மாமா பொறப்பு சரியாதானே இருந்தது, அவருக்கு இல்லையா அதுல பங்கு? பாவனா பொறப்பு தப்பு… ஹ்ம்ம்… அப்போ ஆழினி பொறப்பு?” என ஏளனமாக கேட்டாள் பிருந்தா.

“ச்சீ இவ்ளோ மோசமானவளா நீ? பச்ச குழந்தையை போய்… எங்க பாப்பா முகத்தை பார்த்திருப்பியா நீ? எப்படி இப்படி பேசுற நீ?”

“ஆஹஹஹா… அவ்ளோ நல்லவன் இல்லை நீ! உன் வீட்டு குழந்தையை சொன்னா வலிக்குது, அடுத்த வீட்டு பொண்ணுன்னா என்ன வேணா பேசுவியா நீ? வைஷு சொன்னா எல்லாத்தையும்”

“பெரிய…” மூச்சை இழுத்துப் பிடித்து தன்னை அடக்கிக் கொண்டவன், “அவங்க செஞ்சது சரின்னு பேசுறியா நீ?” கடுப்பாக கேட்டான்.

“அவங்க லவ்வர்ஸ். நாலு வருஷம் லவ் பண்ணியிருக்காங்க. அவங்கதான் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு அவங்க நம்பிக்கையோட இருந்திருப்பாங்க. ஆஃப்டர் ஆல் வீ ஆர் ஹியூமன்ஸ். எமோஷன்ஸ் நம்மை கட்டி ஆளும் போது நம்ம கைல எதுவும் இல்ல. என்ன நடந்ததோ அவங்களுக்குள்ள… அவங்க அந்தரங்கத்தை நாம கிண்டி கிளற கூடாது. உடனே கல்யாணம் பண்ணிட்டாங்கதானே? பழசை பிடிச்சு தொங்காம இப்ப நடக்கிறது பார்க்கணும்” என்றாள்.

“இப்ப நடக்கிறதுதானே? உன் அண்ணனுக்கு என் தங்கச்சி வேணுமாம். ஈன்னு இளிச்சிட்டே கட்டி வைக்க சொல்றியா?”

“என் அண்ணன் விட நல்லா மாப்ள பார்த்திடுவியா நீ? உன்னை…” கோவமாக சுற்றிலும் பார்த்தவள், கைக்கு ஏதுவாக எதுவும் அகப் படாமல் போக “சைட் அடிக்கிறதான என்னை? நான் இல்ல ஒரு பொண்ணும் உன்னை கட்டிக்க ஓகே சொல்ல மாட்டா” பொரிந்து தள்ளி விட்டு கோவமாக எழுந்தாள்.

“போடி உன் வாயாலேயே என்னைத்தான் கட்டிப்பேன்னு சொல்ல வைக்கிறேன்” சவால் போல சொன்னான் பிரசன்னா.

நின்று திரும்பியவள், “வெரி குட்! எப்படி கட்டிக்கிறேன் பாருன்னு சொல்லாம என் வாயாலேயே சொல்ல வைப்பேன்னு சொன்ன பாரு… க்ரேட். தோத்து போவன்னு தெரிஞ்சாலும் மரியாதைக்காக சொல்லணும்ல… ஆல் த பெஸ்ட் பரங்கிமலை” நக்கல் வழிய சொன்னவள் வெளியேறியிருக்க மூளையின் சூட்டை குறைக்க குளிர்ந்த நீரை பருகினான் பிரசன்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement