Advertisement

நேச நதி -21

அத்தியாயம் -21(1)

இரவு உணவு அரங்கநாதனும் பிரசன்னாவும் முடித்து சென்று விட மற்றவர்கள் பாவனா ஆழினிக்கு உணவு கொடுத்து முடிக்கும் வரை காத்திருந்தனர். பாவனாவும் சாப்பிட வர அவள் தோளில் இருந்த ஆழினி தூங்கியே போயிருந்தாள். அறையில் விட்டு வருவதாக விஜய் சொல்ல மறுத்த கங்கா பேத்தியை தாத்தாவிடம் விட்டு வந்தார்.

பாவனா ஒன்றும் சொல்ல இயலாமல் விஜய்யின் முகத்தை பார்க்க, அவன் பேசுவதற்குள் “அப்பா நல்லா பார்த்துக்குவார் அண்ணி. என்னை எப்படி பார்த்துப்பாங்க தெரியுமா?” என்றாள் வைஷு.

“ஆமாம் ஆம்பள பசங்ககிட்டதான் அதட்டல் மிரட்டல் எல்லாம், பொண்ணுன்னா அவருக்கு வேறதான். அதான் அப்பா சம்மதம் இல்லாம எதுவும் செய்ய மாட்டாங்க என் தங்கச்சி மேடம்!” கிண்டலாக சொன்னான் விஜய்.

வைஷு அமைதியாக தலையை குனிந்து கொள்ள விஜய்யிடம் ‘என்ன?’ எனக் கேட்டாள் பாவனா. கண்கள் சிமிட்டி தோள்கள் குலுக்கி ஒன்றுமில்லை என்றவன் சாப்பிட அமர கங்காவும் வந்து விட்டார்.

இரவு உணவை முடித்துக் கொண்டு குழந்தையை தூக்க தந்தையின் அறைக்கு சென்றான் விஜய். உறங்கும் பேத்திக்கு அருகில் விழித்துக் கொண்டு அரங்கநாதன் படுத்திருக்க மகன் வந்ததும் அவனை பார்த்தார்.

தந்தையை நேருக்கு நேர் பார்வையால் சந்தித்தவன் தடுமாறாமல் மகளை தூக்க போக அவள் சிணுங்க ஆரம்பித்து விட்டாள். படுக்கையிலேயே அமர்ந்து தட்டிக் கொடுத்து பின் தூக்க போக, “விடேன் டா, இங்கேயே தூங்கட்டும்” என்றார் அரங்கநாதன்.

“ஒரு வாரத்துல நாங்க போயிடுவோம், பாவம் பழகிட்டு நீங்க கஷ்ட பட வேணாம்” என்ற விஜய் மகளோடு சென்று விட அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தார் அரங்கநாதன்.

மகளை பாவனாவிடம் கொடுத்து விட்டு தங்கையின் அறைக்கு சென்ற விஜய்யை அவனது தாயும் தாரமும் ஏன் என பார்த்தாலும் ஒன்றும் கேளாமல் சென்று விட்டனர்.

கங்கா வந்ததும் மகன் சொன்னதை சொன்ன அரங்கநாதன், “பண்றதெல்லாம் பண்ணிட்டு அவனுக்கு எவ்ளோ எகத்தாளம்? ஒரு பணிவு இருக்கா என்கிட்ட? உன்னை சொல்லணும்” என மனைவியை பிடித்துக்கொண்டார்.

“ஏன் போகாத இருன்னு நீங்களா சொன்னா குறைஞ்சு போவீங்களா?” என கேட்ட கங்கா அதற்கும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

“நான் சொல்றது எல்லாத்தையும் அப்படியே கேட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பானா அவன்? போறதுதான் போறான் இன்னிக்கே கிளம்ப வேண்டியதுதானே… அதென்ன ஒரு வாரக் கணக்கு? என்னடி இன்னும் உன் மகன் என்ன திட்டம் வச்சிருக்கான் என் தலையை குனிய வைக்க” விடாமல் அரங்கநாதன் பேசிக் கொண்டிருக்க உறங்குவது போல பாவனை செய்து கணவரின் பேச்சுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் கங்கா.

தங்கள் அறையில் மனைவி அருகில் மகள் உறங்குவதை கண்டவன் குழந்தையிடமிருந்து நகர்ந்து சென்றிருந்த கரடி பொம்மையை அவளை ஒட்டியவாறு வைத்து விட்டு, “எனக்கு அரை மணி நேர வேலை இருக்கு. தூங்கு” என பாவனாவிடம் சொல்லி லேப்டாப் எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

இந்த வீட்டில் இருக்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு இன்னும் வரா விட்டாலும் இனியும் வெளிநாடு செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் விஜய்.

என்னவோ தங்கை விஷயம் உடனே முடியும் என தோன்றவில்லை. அவள் விரும்பியவனுடன் திருமணம் முடிக்காமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை என முடிவு செய்து விட்டவன் வேலையை விடும் அறிவிப்பை மெயில் செய்து விட்டு, தான் இங்கு வந்திருக்கும் செய்தியை நண்பர்களின் வாட்ஸ் ஆப் க்ரூப்பிற்கு அனுப்பி விட்டு உறங்க வந்தான்.

பாவனா மீது ஒரு கால் போட்டுக் கொண்டு சிறிதாக வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஆழினி. பாவனா இன்னும் விழித்திருக்க இருவருக்கும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு மனைவி பக்கத்தில் படுத்து அவளை அணைத்துக் கொண்டே உறங்க முற்பட்டான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் குரலை செருமி, “தூங்கிட்டீங்க?” கேள்வியாக நிறுத்தினாள்.

“மனசு சரியில்லை” என முணு முணுத்தான்.

“பிரச்சனை பாட்டுக்கு பிரச்சனை இது பாட்டுக்கு இதுன்னு சொன்னவர் நீங்கதானா?” கிண்டலாக கேட்டாள்.

“ஏன் உனக்கு ஆசையா இருக்கா?” எனக் குறும்பாக கேட்ட விஜய்யை முழங்கையால் இடித்தவள், “எனக்கு பேசணும் உங்ககிட்ட, இங்க பேசினா பாப்பா முழிச்சிப்பா. பால்கனி போலாமா?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

வைஷு பற்றி ஏதோ சந்தேகம் வந்திருக்க அதை பற்றித்தான் கேட்க போகிறாள் என்பதை புரிந்து கொண்ட விஜய், “நாளைக்கு பேசலாம்” என அவள் மறுக்க முடியாத படி சொல்லி விட பாவனாவும் விட்டு விட்டாள்.

“என்ன சவுண்ட் கேட்டாலும் என் பொண்ணு எழாம இருக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். அது வந்ததும் நம்ம ஃபர்ஸ்ட் நைட்” என கிசு கிசுத்தான் விஜய்.

“அச்சோ! பொண்ணே பொறந்திட்டா”

“சரி வுடு, செகண்ட் நைட்… இல்ல பாவனா சரியாத்தான் சொல்றேன். ஃபர்ஸ்ட் நைட் சீக்கிரம்” என கிறக்கமாக சொல்லி தனது அணைப்பை இறுக்கிக் கொண்டான்.

பாவனா மெல்ல அவனை பார்க்க திரும்பி படுக்க, “இந்த சோதனை எல்லாம் எனக்கு வைக்காத, அப்படிக்காவே திரும்பி படு” என்றான்.

“ஏன் இப்படி படுத்தா என்ன? எனக்கு உங்க முகம் பார்த்திட்டே தூங்கணும்” என்றாள்.

“கண்ண மூடிட்டு தூங்கும் போது என்ன என் முகம் பார்க்க போற நீ? அச்சோ… கொல்லாத பாவனா. திரும்பு டி”

“அப்பப்ப கண்ண தொறந்து பார்த்துப்பேன். இப்படித்தான் படுப்பேன்” இன்னும் அவள் அவனை நெருங்கிக் கொள்ள அவள் காதில் பேசினான் விஜய்.

அலறியடித்து விஜய்யை தள்ளி விட்டு அவனுக்கு முதுகு காண்பித்து படுத்துக் கொண்ட பாவனாவுக்கு மொத்த இரத்தமும் முகத்தில் பாய்ந்திருந்தது.

அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டவன், “ஆல்ரெடி நீ சோதிக்க ஆரம்பிச்சிட்டதால இப்போ பின்வாங்க முடியாதுன்னு நினைக்கிறேன். சோஃபா வசதி படுமா?” என மிக மெதுவாகத்தான் கேட்டான்.

புரண்டு அம்மா மேல் ஏறி படுத்துக் கொண்டாள் ஆழினி. விஜய் பாவமாக பார்க்க இன்னொரு முறை புரண்டு இருவருக்கும் இடையில் வந்திருந்தாள்.

மகளை செல்லமாக முறைத்தவன், “குழந்தைங்க உயிருள்ள ஃபேமிலி பிளானிங் மெத்தட்னு பொன்னெழுத்துல பொறிக்கணும். மிஷன் அபார்ட்டட். நல்லா என் மூஞ்சு பார்த்துகிட்டே தூங்கு” என்றான்.

பாவனா சிரித்துக்கொண்டே அவனை பார்க்க படுத்துக் கொண்டே மகளை அணைத்துக் கொள்ள அவள் கை மீது கை வைத்துக் கொண்டு கண்கள் மூடினான் விஜய்.

காலையில் பாவனா எழும் போது அறையில் விஜய்யும் இல்லை, ஆழினியும் இல்லை. நேரம் ஆறு பதினைந்து ஆகியிருக்க பாவனா அவசரம் இல்லாமல் நிதானமாக எழுந்து ஓய்வறை சென்றாள்.

ஏழு மணியாகியும் இன்னும் விஜய் அறைக்கு வராததால் பால்கனி சென்று இவள் நிற்க தோட்டத்தில் வைஷுவோடு விஜய் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க ஆழினி விளையாடிக் கொண்டிருந்தாள். பாவனாவுக்கு ஏதோ பிரச்சனைதான் என உறுதியாக தோன்ற இனம் புரியாத பயம் சூழந்தது.

இரவு உடை கலைந்து விட்டு சுடிதாருக்கு மாறி இவளும் தோட்டம் செல்ல இவளை கண்டதுமே அண்ணனும் தங்கையும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர். வைஷுவின் கண்கள் கலங்கி போயிருப்பதை கவனித்த பாவனா இருவரையும் குழப்பமாக பார்த்தாள்.

பாவனாவுக்கு குடிக்க காபி அனுப்பி வைக்குமாறு சொல்லி தங்கையை அங்கிருந்து அனுப்பி வைத்த விஜய், “நல்லா தூங்குனியா?” என விசாரித்தான்.

“என்னன்னு என்கிட்ட சொல்ல மாட்டீங்களா விஜய்?” என நேரடியாகவே கேட்டு விட்டாள் பாவனா.

“காபி குடி சொல்றேன்” என்றவன் மகளோடு ஐக்கியமாக காபி வந்தவுடன் பருகி விட்டு அவன் முன் வந்து நின்று விட்டாள் இப்போதே தெரிந்தாக வேண்டும் என்ற தோரணையுடன்.

இதற்கு மேலும் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் தங்கையின் காதல் பற்றி தெரிவித்து விட்டான். பாவனா பேச்சு வராமல் பார்த்திருக்க, “இன்னைக்கு வீட்ல பேசப் போறேன்னு நைட்டே சொல்லிட்டேன். இப்போ வந்து வீட்ல எதுவும் சொல்லாத, நான் கல்யாணம் பண்ணாம இப்படியே இருந்திடுறேன். அப்பா ஏற்கனவே வருத்தத்துல இருக்கும் போது என் விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான்னு பேக் அடிக்கிறா” என்றான்.

சற்று நேரம் அனைத்தையும் மனதில் ஓட்டி பார்த்து நிதானத்திற்கு வந்தவள், “நீங்க என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“திட்டினேன், ஒருத்தன் உன்னை நம்பிட்டு இருக்கானே அவன் ஏமாந்த சோனகிரியான்னு கேட்டேன். அழறா”

“வைஷு நிலைய யோசிச்சு பாருங்க. எதுக்கு திட்டுறீங்க?”

“காதலை சொல்லாம இருக்கிற வரை ஓகே, கமிட் ஆன பின்னாடி பின்வாங்கினா கோவம் வராதா எனக்கு? இவகிட்ட கேட்டுட்டுத்தான் தேவாகிட்ட போய் பேசியிருக்கேன் நான். நம்பிக்கையா இருக்க மாட்டாரா? இப்போ என்ன பதில் சொல்வேன்?” என விஜய் கேட்க பாவனா அமைதியாக நின்றாள்.

“வேணாம்னா உறுதியா இருக்கணும், எதுக்கு அழறா? அவ ஆசை பட்டதை நிறைவேத்தி வைக்காம அவளை அழ விட்டுட்டு அண்ணன்னு நான் எதுக்கு இருக்கணும்? ப்ச்… நீ இரு, நான் போய் பார்த்திட்டு வரேன்” என சொல்லி நகரப் போனவன் கையை பிடித்துக் கொண்டாள்.

“அவ சொல்றதும் சரிதானே? உங்கப்பா இன்னும் நொந்து போவார்தானே? வேற வழி இருக்கான்னு பார்க்கலாம்” என்றாள்.

“வேற வழியா? அப்ப நீயே யோசிச்சு சொல்லு” என்றவன் ஆழினியோடு விளையாட ஆரம்பிக்க அங்கேயே நடை போட்ட பாவனா மீண்டும் அவன் முன் வந்து நின்றாள்.

“புனேல ஸ்பெஷலா என்ன சாப்பிட்ட? இவ்ளோ சீக்கிரம் வழி கண்டுபிடிச்சிட்டு வந்து நிக்குற? என்ன வைஷுவ கடத்திட்டு போய் உங்கண்ணனுக்கு கட்டி வைக்கலாம்னு சொல்ல போறியா?” கிண்டலாக கேட்டான்.

“ப்ச்… அரேஞ் மேரேஜ் மாதிரி பண்ணி வைக்கலாம்ல?”

“ரெண்டுக்கும் லவ்ன்னு சொன்னாலே எங்கப்பா ஒத்துக்க மாட்டார். அவரா போய் தேவாவை வைஷுக்கு பார்ப்பாரா? இல்ல தேவா வந்து கேட்டா உடனே மண்டைய ஆட்டிடுவாரா? நான் வைஷுகிட்ட பேசுறேன். நானே பார்த்துக்கிறேன் இதை”

“வைஷு ஒத்துகிட்டு நீங்க பேசினாலும் பிரச்சனைதான் வரும். தாத்தா பாட்டி வச்சு பொண்ணு கேட்க சொல்லுங்க. தேவாண்ணா அம்மாவை பிருந்தா அப்பாம்மாகிட்ட போய் பேச சொல்லுங்க. அண்ணனுக்கு பிடிச்சிருக்குனு சொல்ல சொல்லுங்க”

“ஹ்ம்ம்… ஏதோ சொல்ற, ஆனா அப்படி எல்லாரும் பேசினா கூட அப்பா…”

“ஒத்துக்கிறது கஷ்டம்தான். ட்ரை பண்ணி பார்க்கலாம். இப்படி செஞ்சா வைஷுவும் லவ் பண்ணினான்னு சொல்ல வேணாம்” என பாவனா சொல்ல பார்க்கிறேன் என்றானே ஒழிய அழுத்தமாக எதுவும் சொல்லவில்லை.

வீட்டுக்குள் செல்ல திரும்பிய பாவனா திகைத்து போய், “என்னங்க…” என அழைக்க விஜய்யும் திரும்ப ஐய்யனார் சிலை போல நின்றிருந்தான் பிரசன்னா.

பாவனா போல விஜய் ஒன்றும் அதிரவில்லை. அசராமல் தம்பியை பார்த்தவன், “எல்லாத்தையும் கேட்டுட்டீனா போ போய் வத்தி வை உங்கப்பாகிட்ட” என்றான்.

அண்ணனை முறைத்த பிரசன்னா, “நீ கெட்டதும் இல்லாம என் தங்கச்சி லைஃபையும் ஸ்பாயில் பண்ண பார்க்கிறியா?” எனக் கோவப்பட்டான்.

தம்பியிடம் எதுவும் சொல்லாமல் பாவனாவிடம் “பாப்பாவை அழைச்சிட்டு நீ உள்ள போ, வைஷுவ வர சொல்லு இங்க” என்றான்.

கண்களால் பொறுமையாக இருக்கும் படி கேட்டுக் கொண்ட பாவனா மகளோடு சென்று விட்டாள். பிரசன்னா கோவமாக பேசுவதற்கு முன், “வைஷு வரட்டும், அதுவரை வாய தொறக்காத” என அதட்டினான் விஜய்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement