Advertisement

நேச நதி -2

அத்தியாயம் -2(1)

ஈரோட்டின் மிகவும் பிரபலமான கல்விக் குழுமத்தின் நிறுவனர் அரங்கநாதன். அவர் நினைக்கும் கட்சிதான் அந்த தொகுதியில் வெற்றி பெற முடியும் என்ற அளவிற்கு அந்த பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். அவரது மனைவி கங்கா, குடும்பமே உலகம் என வாழும் இல்லத்தரசி. இவர்களின் மூத்த மகன்தான் விஜயசாகரன்.

அரங்கநாதன் தன் பிள்ளைகளிடம் நீ படிக்கிறாயோ இல்லையோ ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனதான் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர்களுக்கு சொந்தமான பள்ளியில்தான் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவர் பிள்ளை என்பதற்காக சிறப்பு சலுகை எதுவும் கிடையாது, மாறாக அதிக கண்டிப்பு இருந்தது.

அந்த கண்டிப்பே விஜய்யை அவரிடமிருந்து விலக்கி வைத்து விட்டது. அப்பா தன் வாழ்க்கையை கையில் எடுத்துக் கொள்வது போல அவனுக்கு ஒரு தோற்றம், என்னவோ வீம்பு அவர் சொல்வதை ஏற்க கூடாதென. படிக்க தங்கள் கல்லூரி விடுத்து சென்னை சென்றான். இங்கே கல்லூரி நிர்வாகம் பார் என சொன்னதை ஏற்காமல் சென்னையிலேயே வேலை செய்கிறான். அவன் தந்தையும் விட்டுப் பிடிப்போம் என இருந்து விட்டார்.

அவனை விட இரு வயது சிறியவன் பிரசன்னா, இதோ இந்த வருடத்திலிருந்து அப்பாவோடு சேர்ந்து கல்விக் குழுமங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டான். கடந்த ஆறு மாதங்களாக ஈரோடு வர சொல்லிக் கொண்டிருக்கிறார், அவனும் விருப்பமில்லை என கூறி மறுத்து வருகிறான். தன் பேச்சை மதிக்கவில்லை என விஜய் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அரங்கநாதன்.

“அங்க இருக்க பிடிக்காம அவனே வருவான் பாருங்க, கல்யாணம் ஆனா சரியாகிடுவான்” என கங்காதான் தேற்றுவார்.

நண்பர்களோடு ரெசார்ட் வந்த பின் அம்மாவுக்கு அழைத்து விஷயத்தை சொன்னான் விஜய்.

“என்னடா திடீர்னு? யார் யார் வந்திருக்கா உன் கூட? திரும்பும் போது வீட்டுக்கு வருவதானே? பார்த்து நாளாச்சுடா”

பொறுமையாக அம்மாவுக்கு பதில் சொன்னான் விஜய். ஆமாம் அம்மா என வரும் போது விஜய் மிக பொறுமை, அவரிடத்தில் எப்போதும் பணிந்துதான் போவான்.

“இப்போ வர முடியுமா தெரியலை, நீ வாம்மா அங்க என் கூட கொஞ்ச நாள் இரு”

“சரிதான் உன் அப்பா தம்பி தங்கச்சிய எல்லாம் என்ன செய்றது?”

“வைஷுவை கூட அழைச்சிட்டு வா, அவனுக்கும் அவருக்கும் நீ இல்லாம கூட பொழுது நல்லா போகும்”

“நீ வந்திட்டு போடா”

“வைஷு என்ன பண்றா, மார்னிங் கால் பண்ணியிருந்தா என்னால பேச முடியலை” என தங்கை பற்றி விசாரித்தான்.

“அவளுக்கு ஏதோ புக் வேணும்னு சொன்னா, அதுக்காக கால் பண்ணியிருப்பா”

“ம்ம்… அவளை வாட்ஸ் ஆப் பண்ண சொல்லு, நான் சென்னை போயிட்டு வாங்கி அனுப்புறேன்” இப்படியாக அக்கறையாக அம்மாவோடு பேசி விட்டு வைத்தான்.

இப்போது உறக்கம் வராமல் விஜய் வெளியே வர பாவனாவும் அவள் அறைக்கு வெளியில் நின்றிருந்தாள்.

விஜய் யோசிக்கவெல்லாம் இல்லை, நேராக அவளிடம் போய் நின்றான்.

அவனாக எதுவும் கேட்பதற்கு முன், “தேங்க்ஸ்” என்றாள் பாவனா.

“எதுக்கு உன்னை ட்ரிப்ல இருக்க வச்சதுக்கா?”

“அதுக்கும்தான்”

“ஓ அப்போ உன்னை யாருன்னு தெரியாம காட்டிகிட்டதுக்கும் சேர்த்தா அந்த தேங்க்ஸ்?” எனக் கேட்டான்.

“ம்ம்…”

“ஆனா ஏன் பாவனா?” என அவன் கேட்க பதில் சொல்லத் தெரியாமல் நின்றாள் பாவனா.

“நான் அந்த விஷயத்தை சொல்லிடுவேன் நினைச்சியா?” என விஜய் கேட்க அப்படித்தான் என்பது போல பார்த்தாள்.

“என்ன… அது நடந்து ரெண்டு வருஷம் இருக்குமா?” எனக் கேட்டுக் கொண்டே அவள் கண்களை ஊடுருவி பார்த்தான்.

“எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு, போகவா ரூம்க்கு?” அனுமதி கேட்டாள்.

“ஜஸ்ட் டென் மினிட்ஸ், நாம க்ளியர் பண்ணிக்கலாம். உன்னோட… என்ன சொல்ல… நீ டிஸ்டர்ப்டா தெரியுற, அது என்னாலதான்னு எனக்கு தோணுது” என விஜய் சொல்லிக் கொண்டிருக்க தன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பாவனா.

“ஸ்டே ஹியர்” என அழுத்தமான குரலில் விஜய் சொல்ல அப்படியே நின்றாள்.

அவள் திரும்புவாள் என எதிர்பார்த்திருந்தவன் அவள் திரும்பாமல் போக நிதானமாக நடந்து அவளுக்கும் முன்னால் போய் நின்றான்.

பாவனா அவனை நிமிர்ந்து நோக்க, “இன்னும் நீ என்னை லவ் பண்றியா?” என அவன் கேட்க அவள் திகைத்தாள்.

“ஐ மீன் இன்னும் நான் உன்னை டிஸ்டர்ப் செய்றேனா? உன் நினைவுல இருக்கேனா?” என விஜய் கேட்க இல்லை என்பதாக தலையாட்டினாள்.

அவள் கண்கள் அப்பட்டமாக உண்மையை சொல்லிக் கொண்டிருக்க, உணர்ந்து கொண்டவன் லேசாக சிரித்து, “குட், நீ வளர்ந்திட்ட, நான் எதுவும் சொல்ல மாட்டேன். அந்த அளவுக்கு சீப் இல்லை நான். நீ நார்மலா இரு” என சொல்ல அவள் சரியென தலையாட்டினாள்.

“ஏதாவது பேசு, இப்படி கண்ணாலேயும் தலையாலேயும் பேசாத. வாயால பேசு” என்றான்.

“அது… நான் இந்த ட்ரிப் வந்திருக்க கூடாது, உங்க ஃபிரெண்ட்ஸ் கம்ஃபர்டபிளா இல்லை போல” என்றாள்.

 “இனிமே அது பத்தி யோசிக்காத. நீ ஏன் வீட்டுக்கு போகல? என்ன பிரச்சனை?” என விசாரித்தான்.

எப்படி சொல்வது என்பதை விட சொல்ல விருப்பமின்றி நின்றாள் பாவனா. அவளுக்கு நன்றாகவே தெரியும் இவனுக்கும் தன் மீது விருப்பம் என்று. ஆனால் அவன் ஒத்துக் கொள்ள மாட்டான், என்ன தடை என தெரிந்த பின் இவளும் முயலவில்லை. ஆனால் இப்போதும் எப்போதும் இவன்தான் மனதில் நிறைந்து நிற்கிறான்.

“ஓகே நீ எதுவும் சொல்ல வேணாம், ரிலாக்ஸா இரு. உன் நம்பர் சொல்லு” என்றவன் அவன் கைபேசியை கையில் எடுக்க, மறுக்க முடியாமல் தனது எண்ணை சொன்னாள்.

“ஃபீல் பண்ணிட்டே இருந்தா எதுக்கும் சொலூஷன் கிடைக்காது. ஏதாவது செய்ய முடியுமா பாரு, உன் கை மீறி போகுதுன்னா ஸ்டே காம் அண்ட் வாட்ச்”

“பார்த்திட்டே இருந்தா சரியாகிடுமா எல்லாம்?”

“அது அடுத்தது, அதுக்குள்ள அந்த பிரச்சனைக்கெல்லாம் நாம பழகிடுவோம்” என விஜய் சொல்ல மெல்ல சிரித்தாள்.

“ம்ம்… இப்போ போ, இதே ஸ்மைலோட போய் தூங்கு, குட் நைட்”

“குட்டோ பேடோ இன்னிக்காவது தூக்கம் வரட்டும் எனக்கு” என்றவள் அறைக்கு செல்ல என்னவோ அவளது சோகம் இவனை தாக்கியது.

மாலையே பாவனாவுக்கு பிரச்சனை என பிரணவ் சொன்னது நினைவு வர நேராக அவனது அறைக்கு சென்றான்.

பிரணவ் அவனது காதலியோடு மல்லு கட்டிக் கொண்டிருக்க இரண்டு நிமிடங்கள் பொறுத்து பார்த்த விஜய் கைபேசியை பிடுங்கி அணைத்து படுக்கையில் போட்டான்.

“அடேய் கிராதகா!” அலறினான் பிரணவ்.

“இப்படியே உன் லைஃப் போனா கண்டிப்பா உன் நிம்மதி போய்டும். டாக்ஸிக் டா”

“ரதிக்கு என் மேல பொஸஸிவ் டா”

“ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன். அந்த கதைய விடு. பாவனாக்கு என்ன பிராப்லம்?”

“நீ ஏன் கேட்குற?”

“அவ சோக மூஞ்சு என்னை டிஸ்டர்ப் பண்ணுது”

“அப்படின்னா?”

பதில் சொல்லாமல் விஜய் கோவமாக பார்க்க, “அவ அம்மா அவங்க அப்பாவுக்கு ரெண்டாவது வைஃபாம்” என்றான் பிரணவ்.

இது ஏற்கனவே விஜய் அறிந்த விஷயம், சொல்லப் போனால் பாவனாவின் அம்மாவை அவர் இன்னும் முறையாக திருமணம் செய்யவே இல்லை. அதை பிரணவ்விடம் காண்பித்துக் கொள்ளாமல் சாதாரணமாக கேட்டுக் கொண்டே மேலே சொல் என பார்த்தான்.

“பாவனா அம்மாவை அவ அப்பா ஊர் அறிய யாருன்னு காட்டிக்காம இருக்கார். அதனால விரக்தியில இருந்த அவங்க அம்மா இப்போ வேற ஒருத்தர மேரேஜ் செய்றதுன்னு அதிரடி முடிவுல இருக்காங்களாம்” என பிரணவ் கூற இப்போது விஜய் முகத்தில் அதிர்ச்சி.

“பாவனா சம்மதத்துக்காக அவ அம்மா வெயிட்டிங், பாவம்ல இந்த பொண்ணு?” பிரணவ் கேட்க பதில் சொல்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் விஜய்.

பாவனாவை நன்றாக தெரியும் விஜய்க்கு. அவளின் அப்பா ரமணன் ஈரோட்டில் பிரபலமான பைனான்ஸியர். அவர் தொழிலை வைத்து அல்ல, உறவுமுறை வைத்து அவரை இவனுக்கு தெரியும்.

அரங்கநாதனின் தங்கை நிர்மலாவின் கணவர் கேசவன் இந்த ரமணனின் தம்பி. கேசவன் தனியாக பஞ்சு ஆலை வைத்திருக்கிறார். இவன் படித்த பள்ளியில்தான் பாவனாவும் படித்தாள். எந்த நிகழ்ச்சி என்றாலும் இவள் நடனம் இல்லாமல் இருக்காது. பள்ளியில் மிகவும் பிரபலம் இவள்.

ரமணனின் முதல் மனைவியின் பிள்ளைகளும் இதே பள்ளிதான். கேசவன் மக்களும் இங்குதான் படித்தனர். அதிலும் கேசவனின் மகள் பிருந்தாவும் இவளும் ஒரே வகுப்பு. அனைவருக்கும் பாவனா என்றால் ஆகாது. ஆகாது என்றால் சண்டை வம்பு என இல்லை, ஒதுங்கிக் கொள்வார்கள்.

சிறு வயதில் அவளுக்கு அது பெரிதாக பாதிக்கவில்லை, போக போக அவளுக்கு புரிய அந்த பள்ளியில் படிக்க மாட்டேன் என நின்றாள். அப்படித்தான் ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது கொடைக்கானலில் சேர்க்கப் பட்டாள்.

நெருங்கியவர்கள் தவிர வேறு வெளியாட்களுக்கு ரமணனின் இன்னொரு குடும்பம் பற்றி அறவே தெரியாது. ஆனால் வெளியூருக்கு சுற்றுலா போல பாவனாவையும் அவள் அம்மாவையும் அழைத்து செல்வார். அவள் கேட்டது உடனே கிடைக்கும் படி பார்த்துக் கொள்வார். போக போகத்தான் எந்த நிலையில் தந்தை தங்களை வைத்திருக்கிறார் என்பது அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

ஈரோட்டில் சில சமயங்களில் இவளை பார்த்திருக்கிறான் விஜய். மற்றவர்களை போல அல்லாமல் பார்க்கும் போதெல்லாம் சிறு புன்னகை செய்வான். அவனுக்கு தெரியும் ஏன் பள்ளி மாறினாள் என, எனவே எப்படி இருக்கிறது புதிய பள்ளி என விசாரிப்பான். ஆனால் பாவனாவின் அம்மாவை இவன் நேரில் கண்டது இல்லை.

விஜய்யின் அத்தை நிர்மலா அவன் அம்மா கங்காவிடம் சில விஷயங்கள் பேசும் போது கேட்டிருக்கிறான். பாவனாவின் அம்மா ஷைலஜா தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம். ரமணன் ஏதோ படத்திற்கு பைனான்ஸ் செய்யும் போது பழக்கம் ஏற்பட்டு ஷைலஜாவை தன்னுடனே அழைத்து வந்து விட்டார். மனைவி, மகள், மகன் யாரை பற்றிய சிந்தனையும் இல்லாமல் மணம் செய்து கொள்ளாமல் ஷைலஜாவை அவருடனே வைத்துக்கொண்டார். அவர்களின் பெண்தான் பாவனா.

விஜய் பொறுத்தவரை பாவனாவின் பிறப்பு அவள் தவறு அல்ல என்பதுதான். ஒரு முறை அவன் அம்மாவுடன் வெளியில் சென்றிருக்கும் போது பாவனாவை கண்டவன் எப்போதும் போல பேசி விட்டு வர கங்கா கண்டனமாக பார்த்தார்.

வீடு வந்ததுமே கண்டிப்போடு “அந்த பொண்ணு கூட பேச்சே வேணாம் விஜய். அப்பாக்கு தெரிஞ்சா கோவப்படுவார்” என்றார்.

விஜய் முறைக்க, “நான் ஏதாவது உன்கிட்ட கேட்ருக்கேனா? வேணாமே டா” உடனே தொனியை மாற்றி தன்மையாக சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement