Advertisement

அத்தியாயம் -20(2)

தம்பியை விஜய் முறைக்க, “நான் உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் பார்க்கிறேன், என்னை முறைச்சு பிரயோஜனம் இல்லை. உன் முறைப்புக்கு பயப்படவும் மாட்டேன்” என்றான்.

“பாடி பில்டர் என்ன செய்வீங்க நான் முறைச்சா? அடிப்பியா டா என்னை?” சீண்டி விடும் நக்கலோடு விஜய் கேட்க பிரசன்னா முகம் இறுகிப் போய் பார்க்க, பயந்து போன வைஷு, “ரெண்டு பேரும் அமைதியா இருங்க ப்ளீஸ்” என்றாள்.

“சொல்லி வை உன் அண்ணன்கிட்ட? ஆகாத வேலை எல்லாத்தையும் செஞ்சிட்டு என்கிட்ட வந்து சவுண்ட் கொடுக்கிறான்” என பிரசன்னா சொல்ல கடுப்பில் தம்பியின் மோவாயில் அடி வைத்து விட்டான் விஜய்.

கோவமாக பிரசன்னா பார்க்க கங்கா வந்து விட்டார்.

“அம்மா அண்ணனுங்க சண்டை போட்டுக்கிறாங்க” கலவரத்தோடு சொன்னாள் வைஷு.

“மூணு வருஷம் கழிச்சு வந்தவன் கூட என்னடா வம்பு பண்ற நீ? எழுந்து போடா இங்கேர்ந்து” எதுவும் விசாரிக்காமல் சின்ன மகனிடம் பாய்ந்தார் கங்கா.

“நானும் போறேன், ஆறு வருஷம் வீட்டு பக்கம் எட்டி பார்க்காம எங்கேயாவது போறேன்” என கோவமாக சொல்லி சென்ற பிரசன்னா நான்கு அடிகள் சென்று திரும்பி பார்த்து, “வர்றப்ப நான் மட்டும் தனியாதான் வருவேன், இவனை மாதிரி அஞ்சு வயசுல குழந்தையும் தரமில்லாத பொண்ணையும் கூட்டிட்டு வந்து நிக்க மாட்டேன்” என குதர்க்கமாக கூறினான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தம்பியை நெருங்கியிருந்த விஜய் அவன் கன்னத்தில் அறை விட சரியாக அதே நேரம் உள்ளே வந்தார் அரங்கநாதன்.

மகளின் கையில் உணவு இருந்த கிண்ணத்தை கொடுத்து, “அண்ணனை அவன் ரூம் அழைச்சிட்டு போ” என்ற கங்கா சின்ன மகனை இழுத்துக் கொண்டு போய் அவனது அறையில் விட்டு வந்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த அரங்கநாதன், “என்னடி செய்றான் உன் மகன், எதுக்கு அவனை அப்படி அடிச்சான்?” என கோவமாக கேட்டார்.

“அவனுங்க ஏதோ விளையாட்டுக்கு சண்டை போட்டுக்கிட்டா அதை போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுகிட்டு. நீங்க ரூம் போங்களேன், டீ எடுத்திட்டு வர்றேன்” என்றவர் நிற்காமல் சமையலறை சென்று விட்டார்.

வைஷுக்கும் பாவனாவுக்கும் என்ன பேசிக் கொள்வதென தெரியவில்லை. நலன் விசாரித்துக் கொண்டனர். ஆழினிக்கு சர்க்கரை கலந்த ராகி சேமியாவை பாவனா ஊட்டி விட அண்ணன் மகள் அருகில் உட்கார்ந்து கொண்டாள் வைஷு.

கோவமாக இருந்த விஜய் படுக்கையில் கண்கள் மூடி படுத்திருந்தான். விஜய்யை பார்த்த பாவனா வைஷுவிடம் எதுவும் கேட்க தயக்கப் பட்டு அமைதியாக குழந்தைக்கு ஊட்டி விட மட்டும் செய்தாள்.

வைஷுவும் தயக்கத்தோடே, “ஆரம்பத்துல கொஞ்சம் இங்க கஷ்டமா இருந்தாலும்… இங்கேர்ந்து போய்டாதீங்க அண்ணி. அண்ணா இல்லாம எங்களுக்கெல்லாம்… நான் அம்மா எல்லாம் ரொம்ப கஷ்ட பட்டோம். இங்கேயே இருந்திடுங்க, நீங்க சொன்னா அண்ணா கேட்பாங்க” என்றாள்.

பாவனா பதில் சொல்லும் முன், தங்கை கீழே நடந்ததை ஏதும் சொல்லி விடுவாளோ என பயந்த விஜய், “வைஷு நீ உன் ரூம் போ, அப்புறமா வரலாம்” என்றான்.

வைஷு சென்ற பின் ஆழிக்கு ஊட்டி முடித்திருந்த பாவனா, “என்னாச்சுங்க?” எனக் கேட்டாள்.

“அரை மணி நேரம் டிஸ்டர்ப் பண்ணாத, தூங்கணும் எனக்கு” என சொல்லி வெறுமனே கண்களை மூடியே படுத்திருந்தான் விஜய்.

இருவருக்கும் அறைக்கே தேநீர் வர, “டீ குடிச்சிட்டு கண்ண மூடிக்கோங்க” என்றாள் பாவனா.

அவளை முறைத்துக் கொண்டே எழுந்து தேநீர் எடுத்துக் கொண்டவன், “நக்கலா உனக்கு?” எனக் கேட்டான்.

“கோவ படாம கொஞ்சம் பொறுமையா இருங்க” என பாவனா சொல்ல, “நண்டு சிண்டு எல்லாம் அட்வைஸ் பண்ணுது ஹ்ம்ம்?” கிண்டலாக கேட்டான்.

“வைஷு ஏதோ ரெண்டு வார்த்தை பேசினா. அண்ணின்னு கூட கூப்பிட்டா. ஏன் போக சொல்லிட்டீங்க? கீழ ஏதோ நடந்திருக்குதானே?”

“அச்சச்சோ இவ்ளோ அறிவா யோசிக்காத நீ, அவ அண்ணின்னு அவ்ளோ அழுத்தம் திருத்தமா சும்மா ஒண்ணும் கூப்பிடல”

பாவனா குழப்பமாக பார்க்க, “நீ ஏற்கனவே டென்ஷன்ல இருக்க. அப்புறமா சொல்றேன்” என்றான்.

“இப்படி புதிரா பேசுறதுக்கு எதுவுமே சொல்லாம இருந்திருக்கலாம் நீங்க”

 “அதை விடு, ஆழி சாப்பிட்டாளா? எங்கேயாவது வெளில போலாமா?” எனக் கேட்டான்.

“கொஞ்ச நேரத்துல இருட்டிடுமே, இப்போ போய் எங்க போறது?”

“கிளம்பு, எங்கேயாவது போலாம்” என விஜய் சொல்ல பத்து நிமிடங்களில் குழந்தையை தயார் செய்து தானும் தயாரானாள்.

வெளியில் வரும் நேரத்தில் விஜய்க்கு அழைப்பு ஒன்று வர அவன் பேசிக் கொண்டிருக்க அவனோட சேர்ந்து செல்லலாம் என நினைத்த பாவனாவும் அறையில் நின்று விட்டாள். விஜய் இன்னுமே பேசிக் கொண்டிருக்க பாவனா ஓய்வறை உபயோகிக்க செல்ல ஆழினி அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

பிரசன்னாவும் அரங்கநாதனும் ஹாலில் இருக்க குடு குடு என ஓடி வந்த ஆழினி அங்கிருந்த மீன் தொட்டியிடம் வந்து நின்றாள். கனிந்த முகமாக அரங்கநாதன் பேத்தியை பார்த்திருக்க முதன் முதலில் பார்த்த தன் அண்ணன் மகளிடம் பிரசன்னாவும் மனதை தொலைக்க ஆரம்பித்திருந்தான்.

ஆழினியை விட உயரமாக மீன் தொட்டி இருக்க குழந்தையை தூக்கிக் கொள்ள பிரசன்னாவுக்கு ஆசை இருந்தும் அப்பாவின் முகத்தை பார்த்தான். அவர் முக பாவனையில் எதுவும் சொல்ல மாட்டார் என உணர்ந்தவன் மெல்ல சென்று ஆழினி நன்றாக மீன்களை பார்க்கும் படி தூக்கி வைத்துக் கொண்டான்.

பயில்வான் போலிருந்த புதியவனை மிரட்சியாக பார்த்த குழந்தை இறங்க முற்பட பிரசன்னா இறுக்கி பிடிக்க, குழந்தை போராட ஆரம்பித்தாள்.

“என்ன செய்றேன் உன்னை? அங்க பாரு… மீன் பாரு” என பிரசன்னா சொன்னது கூட மிரட்டல் போலவே இருக்க ஆழினி அழத் தொடங்கி விட்டாள்.

“அடேய் உன் முரட்டு தனத்தை காட்டுவியா புள்ளகிட்ட? விட்ரா புள்ளைய!” அதட்டிய அரங்கநாதன் குழந்தையை அவரே தூக்கிக் கொண்டார்.

பிரசன்னாவிடம் பயந்து போயிருந்த ஆழினி தாத்தாவிடமிருந்தும் திமிற அவர் கீழே விட்டு விட்டார். அங்கிருந்து குழந்தை வேகமாக ஓட கார்பெட் தடுக்கி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் பல் உதட்டில் அழுந்த குத்தி காயமானது.

மீண்டும் அரங்கநாதன் பேத்தியை தூக்கவும் அவள் வாயிலிருந்து இரத்தம் வரவும் பதறி விட்டார். பார்த்த பிரசன்னாவும் பயந்து போய் அருகில் வர கங்கா, வைஷு இருவரும் கூட வந்து விட்டனர். விஜய் இன்னும் அறையில் போன் பேசிக் கொண்டிருக்க, ஓய்வறையிலிருந்து வெளிவந்த பாவனா குழந்தையை காணாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்.

ஆழினியின் அழ குரல் சத்தம் கேட்கவும் அதற்கு மேல் தாமதிக்காமல் பாவனாவும் கீழே வந்து விட்டாள்.

அழும் குழந்தையும் சுற்றிலும் ஆட்களுமாக இருக்க, எதுவும் புரியாமல் என்னவோ ஆகி விட்டது என் மகளுக்கு என்ற பயம் ஏற்பட ஓடி வந்து மகளை அரங்கநாதனிடம் இருந்து வேகமாக பறித்துக் கொண்ட பாவனா என்னவானது என ஆராய, “என்னவொரு அரகன்ஸி!” என பற்களை கடித்தான் பிரசன்னா.

“அண்ணா!”, “அடேய்!” என வைஷுவும் கங்காவும் ஒரே நேரத்தில் பிரசன்னாவை கடிந்து கொள்ள அவன் பேசியதில் கண்களில் நீர் திரண்டாலும் நிமிராமல் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தாள் பாவனா.

“பல் குத்திடுச்சு போல, வா அவ வாய் வாஷ் பண்ணி விடு, வா” என்ற கங்கா மருமகள் பேத்தி இருவரையும் அவரது அறைக்கு அழைத்து செல்ல, வைஷு பெரிய அண்ணனை அழைக்க ஓடி சென்றிருந்தாள்.

“இங்க இந்த கார்பெட் எடுக்க சொல்லு, இன்னொரு முறை என் பேத்தி இப்படி தரையில விழக் கூடாது, கூப்பிடு யாரையாவது” சின்ன மகனை அரங்கநாதன் ஏவ, அவரை விசித்திரமாக பார்த்துக் கொண்டே வேலையாளை அழைத்தான் பிரசன்னா.

அதற்குள் விஜய் கீழே வந்தவன் மகளை அங்கே தேட, “அம்மா ரூம்ல” என்றான் பிரசன்னா.

பிரசன்னா சொன்னதை விஜய்யிடம் சொல்லி விட வேண்டாம் என கங்கா மருமகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அறைக்குள் பிரவேசித்தான் விஜய்.

 சமாதானம் ஆகி பாவனாவின் மடியில் அமர்ந்திருந்திருக்கும் ஆழினியை பார்த்தவன், “கவனமா பார்க்காம என்ன செய்திட்டு இருந்த நீ?” என பாவனாவிடம் காய்ந்தான்.

“பெரிய அடி இல்லடா, நெய் தடவி விட்ருக்கேன். விழுந்து எந்திரிக்காத புள்ளைங்க யாரும் இல்லை. எதுக்கு அந்த பொண்ணுகிட்ட மூஞ்சு காட்டுற” அதட்டினார் கங்கா.

“மூணு நாள் முன்னாடிதான் தலையில அடி பட்டுச்சு. குழந்தையை கவனமா பார்க்க வேணாமா?” என்றவன் ஆழினியின் உதட்டை பார்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்த வைஷு, “கார்பெட் எல்லாத்தையும் ரிமூவ் பண்ண சொல்லிட்டாங்க அப்பா. நம்ம ஸ்கூல்ல உள்ளது மாதிரி சின்னதா பார்க் வரப் போகுது கார்டன்ல” என அறிவித்தாள்.

விஜய் அம்மாவின் முகத்தை பார்க்க, “நீங்க எங்க வெளில போற மாதிரி வந்திருக்கீங்க? இந்நேரம் எங்க போக போறீங்க? குழந்தைக்கு வேற அடி பட்ருக்கு. வீட்லேயே இருங்க” என சொல்லி, பாவனாவிடம், “புள்ளைய இவன்கிட்ட விட்டுட்டு நீ வாம்மா. சமைக்க ஆள் இருக்காங்க, என்ன வேணும் நைட்டுக்குன்னு பாரு” என்றார்.

இதற்கும் விஜய் அம்மா முகத்தை பார்க்க, “சும்மா சும்மா என்னடா பார்வை? பேத்திக்கு பார்க் கட்டி தரப் போறார் உங்கப்பா. அங்க போய் அப்பா பொண்ணு தாத்தா எல்லாரும் விளையாடுங்க. எதுக்கெடுத்தாலும் என் உசுர வாங்கிக்கிட்டு… உங்ககிட்ட பேசி பேசியே எனக்கு நாக்கு வறண்டு போகுது” என சொல்லி கங்கா செல்ல வைஷுவும் அவரோடு சென்று விட்டாள்.

மகளை விஜய் கையில் கொடுத்த பாவனா, “நான் கிட்சன் போய் பார்க்கிறேன்” என்றாள்.

அவளை அழுத்தமாக பார்த்த விஜய், “யார் என்ன சொன்னா ஏன் உன் முகம் இப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

“ஆழிக்கு திரும்பவும் அடி பட்டதால பயந்திட்டேன், வேற ஒண்ணுமில்ல” என்ற பாவனா நிற்காமல் சென்று விட்டாள்.

விஜய் மகளோடு ஹால் வர அவள் மீன் தொட்டிக்கு அருகில் அழைத்து போக சொல்ல அவனும் அங்கு சென்று நின்றான்.

ஆழினி விஜய்யிடம் இருந்து கொண்டே ஆசையாக மீன்களை பார்க்க அருகில் வந்து நின்ற பிரசன்னா மீன் தொட்டியின் மேல் மூடியை திறந்து குழந்தையின் கையை மெல்ல பிடித்து தொட்டிக்குள் விட்டான். குட்டி குட்டி மீன்கள்தான் தொட்டியில் இருந்தன. முதலில் பயந்த ஆழினி பின்பு உற்சாகமாக சித்தப்பனின் விளையாட்டுக்கு உடன் பட மெல்ல தானே ஆழினியை விஜய்யிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டான்.

விஜய் தம்பியை முறைத்த வண்ணம் இருக்க கடுப்பான பிரசன்னா குழந்தையின் கை கொண்டு விஜய்யின் கன்னத்தில் அடிக்க வைத்தான். குழந்தை விழித்துக் கொண்டு சித்தப்பனை பார்த்திருக்க நமட்டு சிரிப்போடு இன்னொரு முறை குழந்தையின் கையால் அண்ணனை அடித்தான் பிரசன்னா.

அப்படி அப்பாவை அடிக்க வைப்பது பிடிக்காத ஆழினி சித்தப்பாவிடமிருந்து தாவி விஜய்யை தூக்க சொல்ல மகளை வாங்கிக் கொண்டான் விஜய். தான் அடித்த கன்னத்தை ஆழினி தடவிக் கொடுக்க விஜய் ஒன்றுமில்லை என சொல்லி சிரிக்க அப்பாவின் கன்னத்தில் இதழ் குவித்து முத்தமிட்டாள் ஆழினி.

விஜய்யும் மகளுக்கு முத்தமிட்டு சிரிக்க குழந்தையிடம் தன் கன்னத்தை காட்டினான் பிரசன்னா.

ஆழினி முகம் திருப்பி தந்தை தோளில் முகத்தை மறைத்துக் கொள்ள குழந்தையின் தலையை ஆசையாக வருடிக் கொடுத்தான் பிரசன்னா. அவன் கையை விஜய் தட்டி விட முறைத்த பிரசன்னா குழந்தை முகம் இருந்த பக்கம் சென்று மீண்டும் குழந்தையை வருடி அவள் உச்சியில் முத்தமிட்டு விலகி நடந்தான்.

அப்பாவும் மகளும் மீண்டும் மீன் தொட்டியை பார்வையிட்டு தொட்டிக்குள் கை விட்டு விளையாட ஆரம்பிக்க இமைக்க மறந்து பார்த்திருந்தார் அரங்கநாதன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement