Advertisement

நேச நதி -20

அத்தியாயம் -20(1)

கணவரும் மகனும் எதுவும் சண்டை போட்டுக் கொள்வார்களோ என்ற பதட்டத்தில் இருந்த கங்கா பேத்தியை அழைத்துக் கொண்டு அவர்களிடம் வர அரங்கநாதன் மகனை வெளிநாட்டுக்கு எப்போது போகிறாய் என கேட்டது இவர் காதிலும் விழ அதிர்ந்து விட்டார்.

விஜய் திகைப்பு நீங்கி, “எப்ப வேணா போவேன், ஆனா ஒரு நிமிஷம் இங்க இருக்க மாட்டேன்” என்றான்.

அரங்கநாதன் அசராமல் அமர்ந்திருக்க உள்ளே வந்த கங்கா, “இதுக்குத்தான் அவ்ளோ சொல்லி கூட்டி வந்தேனா உங்களை? அவன் இல்லாத மூணு வருஷம் நீங்க தவிச்ச தவிப்பென்ன? இப்போ சுலபமா போக சொல்றீங்களே” என அழுகையும் ஆத்திரமுமாக கேட்டார்.

“என்ன செய்ய புத்திர சோகம் பெருசுன்னு காட்டின இவன்தான் இப்போ அதை விட கவுரவத்தை நினைச்சு பயப்படவும் வைக்கிறான். நாலு பேர்கிட்ட இன்னாருன்னு சொல்லி பெருமை பட்டுக்கிற பொண்ணையா கட்டியிருக்கான்? அவன் நல்லா இருந்தா சரி, சாகுற வரை அரங்கநாதன் தலை நிமிந்துதான் வாழ்வான்” என்றார்.

இவர்கள் பேசிக் கொள்வது எதுவும் புரியாத ஆழினி, அரங்கநாதனின் முன்னால் இருந்த மேசையில் வைக்கப் பட்டிருந்த ஸ்டாண்டில் பொருத்தப் பட்ட உலக உருண்டையை வியப்பும் ஆசையுமாக பார்த்தாள்.

பெரியவர்கள் அவர்களுக்குள் தர்க்கம் செய்து கொண்டிருக்க அரங்கநாதன் முன் இருந்த இருக்கையில் ஏறி நின்று உலக உருண்டையை கையால் தொட்டுப் பார்த்து விழிகள் விரித்தாள் ஆழினி. இப்போது மூவரும் அமைதியாகி குழந்தையையே பார்த்திருந்தனர்.

முதலில் குழந்தையை தூக்க நினைத்த விஜய் பின் ‘என்ன செய்வார் என் மகளை? பார்க்கிறேன் நான்’ என அப்படியே நின்று கொண்டான்.

ஆழினி தொட்டதும் உலக உருண்டை சுழல அதில் ஈர்க்கப் பட்ட குழந்தை வசதியாக மேசை மீது சம்மணமிட்டு அமர்ந்து அதை இன்னும் வேகமாக சுழற்றினாள்.

அரங்கநாதன் என்னதான் தவிர்க்க முயன்றும் அவர் பார்வை குழந்தையிடத்தில்தான். மின்னும் கண்களும் பள பளக்கும் செப்பு இதழ்களும் சிரிக்கும் போது தெரியும் பச்சரிசி பற்களும் அழகாக கிராப் செய்யப் பட்டிருந்த கரு நிற முடியும் பிஞ்சு விரல்களும் என அவர் மகளின் சிறு பிராயத்தை கண் முன் கொண்டு வந்திருந்தாள் ஆழினி.

தன் வீட்டு குழந்தை என்ற எண்ணம் எழ பிறந்தது முதல் எங்கு எப்படி வளர்ந்ததோ என்ற நினைவும் சேர்ந்து எழ, பற்களை கடித்து கண்கள் கலங்காமல் பாதுகாத்தவர் குழந்தை விளையாட ஏதுவாக அந்த உலக உருண்டையை அவள் பக்கமாக தள்ளி வைத்தார்.

 நன்றாக சுற்றி விட்டவள் கைத்தட்டி ஆர்ப்பரிப்பாக சிரிக்க அரங்கநாதன் மனம் அந்த பிஞ்சின் சிரிப்பில் கொள்ளை போனது.

இன்னொரு முறை வேகமாக ஆழினி சுற்றி விடும் போது தவறி அது தரையில் விழுந்தது. ஸ்டாண்டில் இருந்து பிரிந்த உலக உருண்டை நழுவி எங்கோ ஓடியது.

பயந்து போன ஆழினி வாய் பிளந்து கண்களில் அச்சத்துடன் தன் தாத்தாவை பார்த்தவள் அழத் தயாராக அரங்கநாதனிடம் வேறெந்த யோசனையும் இல்லை. தன்னை மறந்தார், அனைத்தும் மறந்தார்.

தன் குலத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு தன் கண் முன்னே அழப் போவதை தாங்க முடியாமல் “அச்சோ சாமி! ஒண்ணுமில்லடா தங்கம், தாத்தா வேற வாங்கி தர்றேன்” என சொல்லிக் கொண்டே எழுந்து குழந்தையை வாரி அள்ளியிருந்தார்.

விஜய் தன் மகளை தூக்கப் போக அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார் கங்கா.

“விடும்மா, போக சொல்லிட்டார்தானே அப்பா. எனக்கும் ரோஷம் இருக்கு” என சிலிர்த்து நின்றான் விஜய்.

“ஏன் டா கொல்ற என்னை?” என கங்கா சத்தமிடவும் அமைதியானான் விஜய்.

“நாப்பது வருஷமா உன் அப்பா பேர் இங்க பிரபலம். அவருக்குன்னு சில கொள்கையோட வாழ்ந்திட்டு இருக்கிறவர். உடனே உன் இஷ்டப்படி மாறனும்னா எப்படி மாறுவார்? நீ வயித்துல உதிச்ச நாள் முதலா உன்னை பத்தி எத்தனை கனவு இருக்கும்டா எங்களுக்கு? நீ செஞ்சது சரியா? போன்னு ஒரு வார்த்தை உன்னை பெத்தவர் சொல்லிட்டார்னா அவ்ளோ ரோஷம் வருமா உனக்கு? சும்மா குதிக்காம போடா ரூம்க்கு!” அதட்டினார் கங்கா.

கழுத்து நெற்றி என தேய்த்துக் கொண்டவன், “ஆழிய தூக்கிட்டு வா” என்றான் தணிந்த குரலில்.

“கண்ணால பார்த்ததானே எப்படி போய் தூக்கினார்னு? கல் நெஞ்சாடா உனக்கு? அழற சத்தம் ஏதும் கேட்குதா? நான் பார்த்துக்கிறேன். நான் சொல்ற வரை ரூம் விட்டு வரக்கூடாது சொல்லிட்டேன். போடா!” என அம்மா சொல்லவும் அறையை எட்டிப் பார்த்த விஜய் தன் அப்பாவின் கையில் அழாமல் இருக்கும் ஆழினியை வியந்து பார்த்து விட்டு அம்மாவிடம், “பார்த்துக்க” என சொல்லி அவன் அறைக்கு சென்றான்.

பாவனா உறங்கிப் போயிருக்க விஜய்யும் உடல் சோர்வு மன சோர்வு என அயர்ந்து போயிருக்க அவள் பக்கத்திலேயே படுத்து விட்டான்.

பேப்பர் வெயிட் ஆழினியின் கையில் இருக்க பாந்தமாக தூக்கி வைத்திருந்தார் அரங்கநாதன். கங்கா அறைக்கு வரவும் மனைவியை ஏறெடுத்து பார்த்தவர், “அந்த க்ளோப், ஸ்டாண்ட் எல்லாம் எடு, சரி செய்ய முடியுமா பார்க்கலாம். இல்லைனா பிரசன்னாகிட்ட சொல்லி உடனே புதுசு வாங்கிட்டு வர சொல்லு” என்றார்.

கணவரிடம் எதுவும் கேட்க பயமாக இருந்ததால் சத்தமில்லாமல் உலக உருண்டையை ஸ்டாண்ட்டில் பொருத்திய கங்கா பேத்தியிடம் கொடுக்க ஆழினி கையிலிருந்த பேப்பர் வெயிட்டை தவற விட்டாள்.

“அடி போக்கிரி! எல்லாத்தையும் இப்படித்தான் போட்டு உடைப்பியா நீ?” செல்லமாக கடிந்து கொண்டே கங்கா பேப்பர் வெயிட் எடுக்க, “குழந்தைனா அப்படித்தான் இருக்கும். நீ எதையும் தவறி கீழ போட்டதே இல்லையா?” என கடிந்தார் அரங்கநாதன்.

“அது சரி!” என முணு முணுத்த கங்கா அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

இப்போது ஆழினி அரங்கநாதனின் மூக்கு கண்ணாடியை பற்றி இழுக்க, “இரு இரு, வேற தர்றேன் உனக்கு” என்ற கங்கா அவசரமாக ஷோ கேஸில் இருந்த கிரிஸ்டல் பொம்மை ஒன்றை எடுத்துக் கொடுத்தவர், “கீழ போடாம விளையாடணும்” என குழந்தையிடம் சொல்லி, “இறக்கி விடுங்க அவளை” என கணவரை பணித்தார்.

அரங்கநாதன் குழந்தையை இறக்கி விட பொம்மையை வைத்து விட்டு மீண்டும் உலக உருண்டையை பார்த்தாள். சிரிப்புடன் அதை எடுத்து பேத்தியிடம் கொடுத்த அரங்கநாதன் தலையின் காயத்தை பற்றி விசாரித்தார்.

விவரம் சொன்ன கங்கா, “நான் உங்களுக்கும் இவளுக்கும் சாப்பிட கொண்டு வர்றேன்” என சொல்லி வெளியே செல்ல குழந்தையை பார்த்துக் கொண்டு அந்த அறையிலேயே அமர்ந்து விட்டார்.

பழத் துண்டுகள் எடுத்து வந்த கங்கா கணவருக்கு ஒரு கிண்ணம் கொடுத்து பேத்திக்கு ஊட்ட முயல அம்மா வேண்டும் என அழ ஆரம்பித்து விட்டாள்.

“அது பாட்டுக்கும் விளையாடிட்டு இருந்துச்சு, பசிச்சா அதுவே பசிக்குதுன்னு சொல்லாதா? பெரிய மேதாவின்னு நினைப்பு உனக்கு?” என்றவர் குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயல அவர் பேசிய கடுமையான தொனியின் காரணமாக அவரிடம் இருக்க மாட்டேன் என சத்தமெடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

அரங்கநாதன் பாவமாக தன் மனைவியை பார்க்க, “இப்படி மூஞ்சிய உர்ருன்னு வச்சிருந்தா பச்ச புள்ள பயந்துதான் போகும்” என கடிந்து கொண்டே அவர் வாங்க முயல ஆழினியின் அழுகை சத்தம் அதிகமாகிப் போனது.

“தெரிஞ்சு போச்சா உன் முகரை கட்ட லட்சணம்!” கிண்டல் செய்தார் அரங்கநாதன்.

கங்கா உடனே மகன் கைபேசிக்கு அழைக்க விஜய் உறங்கிக் கொண்டிருந்ததால் பாவனாதான் எடுத்தாள். “சீக்கிரம் கீழ வாடா” என கங்கா சொல்ல குழந்தையின் அழு குரலை பின்னணியில் கேட்டவள் கைபேசியை வைத்து விட்டு உடனே கீழே விரைந்து விட்டாள்.

ஆழினியை சமாதானம் செய்ய தாத்தாவும் பாட்டியும் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க பாவனா தயக்கத்தோடு அறையின் வாயிலில் வந்து நின்றாள். அரங்கநாதன் இறுகிப் போன முகத்தோடு ஆழினியை இறக்கி விட அவள் வேகமாக சென்று அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

பாவனா யாரையும் நிமிர்ந்து நோக்காமல் மகளை தூக்கிக் கொள்ள, “ம்மா அந்த பால் வேணும்” என உலக உருண்டையை கை காட்டி கேட்டாள்.

“அப்புறம் அப்பா எடுத்து தருவாங்க, வா” என சொல்லி பாவனா அங்கிருந்து சென்று விட்டாள்.

கங்கா கணவரது முகத்தை முகத்தை பார்க்க விறைப்பாக நின்று கொண்டிருந்தவர் வீட்டை விட்டு சென்று விட்டார்.

மகளோடு அறைக்கு வந்த பாவனா உறங்கும் விஜய்யை பார்த்து விட்டு அவனுக்கு தொல்லை இல்லாதவாறு பால்கனி சென்று விட்டாள். அங்கேயே அமர்ந்து குழந்தையை விளையாட விட்டுக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் பசிக்கிறது என்றாள் ஆழினி.

பாவனா எட்டிப் பார்க்க விஜய் இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் யோசனையாக இருந்தவள் விஜய்யை எழுப்பி விட கண்கள் திறக்காமலேயே என்ன எனக் கேட்டான்.

“ஆழி பசிக்குதுன்னு சொல்றா. எனக்கு கீழ போகவோ யார்கிட்டேயும் கேட்கவோ தயக்கமா இருக்கு” என்றாள்.

பட்டென விழிகள் திறந்தவன் வேகமாக எழுந்தமர்ந்து மகள் எங்கே என தேடினான்.

“பால்கனில இருக்கா” என்ற பாவனா அவளே சென்று அழைத்து வந்ததை கூறினாள்.

“அப்பா எதுவும் சொன்னாரா?” என விஜய் கேட்க இல்லை என்றவள், “கோவமா இருக்காங்க போல. உங்ககிட்ட என்ன சொன்னாங்க?” என விசாரித்தாள்.

“ஒண்ணுமில்ல, இப்போ ஆழிக்கு சாப்பிட என்ன கொடுக்கணும்?”

“இந்த நேரம் ஈஸ்வரிம்மா சுண்டல் கொழுக்கட்டை அப்படி ஏதாவது ஸ்நாக்ஸ் தருவாங்க. இங்க என்ன அவைலபில் இருக்கோ தர சொல்லுங்க” என்றாள்.

விஜய் கீழே வந்த போது பிரசன்னாவையும் வைஷுவையும் ஆளுக்கொரு பக்கமாக அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார் கங்கா. அண்ணனை பார்த்த தங்கையும் தம்பியும் என்ன பேச என தெரியாமல் விழிக்க அவனிடமும் லேசான தடுமாற்றம்.

அண்ணன் முகம் கன்றுவதை காண சகிக்காமல், “அண்ணி பாப்பா எல்லாம் எங்க ண்ணா? பாப்பா தூங்கிட்டாளா?” என இயல்பான தொனியில் விசாரித்தாள் வைஷு.

“ரூம்லதான் இருக்காங்க, டிராவல் செஞ்ச டயர்ட்” என்றவன் அம்மாவிடம், “ஆழிக்கு சாப்பிட ஏதாவது கொடு ம்மா” என்றான்.

என்ன வேண்டும் என கங்கா விசாரிக்க பாவனா சொன்னதை சொல்லி, “உனக்கு தெரியாதா என்ன கொடுக்கலாம்னு, இருக்கிறது கொடு” என்றான்.

கங்கா எழுந்து செல்ல உடன் பிறப்புகள் இருவருக்கும் இடையில் அமர்ந்தான் விஜய்.

“அப்பா கோவத்துல சொல்லியிருப்பார். நான் பேசுறேன், நீயும் கோவத்தை குறைச்சிட்டு நிதானமா இரு” என்றான் பிரசன்னா.

“கோயில்ல கல்யாணம் நடந்த ரெகார்ட்ஸ் எல்லாத்தையும் டிஸ்போஸ் செஞ்சது நீதான?” என குரல் உயர்த்தாமல் அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்டான் விஜய்.

“இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சியா நீ? முன்னாடியே தெரியாதா உனக்கு?” அலட்சியமாக கேட்டான் பிரசன்னா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement