Advertisement

 

அத்தியாயம் -19(2)

 கணவர் வீடு வந்த பின் ஏதாவது வார்த்தைகள் பிசகி யாருக்கும் மன சங்கடம் வந்து விடுமோ என பயந்த கங்கா, “நான் அப்பாவை பார்த்திட்டு வர்றேன். குடிக்க ரூம்க்கு அனுப்புறேன், ஏதும் வேணும்னா கூட இருந்து நீ பாரு” என்றவர், “இல்ல இல்ல நான் வர்றேன், உன் பொண்டாட்டிகிட்ட நேர்ல வந்து நானே சொல்லிட்டு போறேன்” என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

அம்மாவை நிறுத்தியவன், “நீ இரும்மா, நான் அவளை இங்க அழைச்சிட்டு வர்றேன்” என்றான்.

“இருக்கட்டும், இங்க ஒண்ணும் பழகாம என்னவோ போலத்தான் இருக்கும். எல்லாரும் வந்ததும் அழைச்சிட்டு வா, நானே வர்றேன்” என்றவர் வேகமாக மாடிப் படிகளில் ஏறினார்.

“மெதுவா ம்மா” என சொல்லிக் கொண்டே அம்மாவுடன் இணைந்து கொண்ட விஜய், “அப்பாவை பார்க்க நானும் வர்றேன்” என்றான்.

அப்படியே நின்று விட்டவர் பாவமாக மகனை பார்த்தார்.

“வரக்கூடாதுனு சொல்லாத, நான் வருவேன்” என்றான்.

“ஏன் அப்படி செய்தார்னு சண்டை போடுவ நீ”

“அப்ப அது பத்தி கேட்கவே கூடாதுங்கிறியா?”

“பார்த்தியா இப்போவே கோவம் வருது உனக்கு. இவ்ளோ கோவத்தோட நீ இதை பத்தி அவர்கிட்ட பேசாத. நாளைக்கு பேசு” கெஞ்சுதலாக சொன்னார்.

“நீ ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? இதுக்கே இப்படின்னா இன்னும் நாம சேர்ந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கு. பீ போல்ட் மா” என விஜய் சொன்ன தொனியில் கலவரமாக பார்த்தவர், “இன்னும் என்னடா?” எனக் கேட்டார்.

கண்கள் சிமிட்டியவன், “உன் மருமகளை பார்த்து பேசிட்டு நீ கிளம்பு. நாங்க இங்க இருக்க கூடாதுன்னா சொல்லிட சொல்லு, ஆனா ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது அப்பா” என தீவிரமான பாவத்தில் சொன்னான்.

“யார் வாய்லேர்ந்தும் வீட்டை விட்டு போறது பத்தி வரக்கூடாது சொல்லிட்டேன்” கங்காவும் கண்டிப்போடு சொல்லி விட்டு முன்னேறினார்.

பாவனாவுக்கு எதுவுமே ஓடவில்லை. எதையும் யோசிக்கவும் முடியவில்லை. அறைக்குள் நடந்தவள் படுக்க பிடிக்காமல் படுக்கை, சோபா என இடம் மாற்றி மாற்றி அமர்ந்து வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

லேசாக கதவை தட்டி விட்டு கங்கா உள்ளே நுழைய, பாவனா வேகமாக எழுந்து நின்றாள். பின்னால் மகளோடு விஜய் வர அம்மாவை கண்டதும் ஆழினி இறங்கி பாவனாவிடம் வந்து நின்றாள். மகளை தூக்காமல் கங்கா முகத்தையே பரிதவிப்பாக பார்த்திருந்தாள் பாவனா.

கங்காவுக்கு இப்போதும் மணக் கோலத்தில் இவர்களை கண்ட காட்சி நினைவு வந்தது. தன் மகனின் மனைவி என்ற உறவு முறை தாண்டி ஒரு பெண்ணாக தன்னத் தனியே குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க எத்தனை சிரம பட்டிருப்பாள் என அவளை பற்றி நினைக்க வருத்தம் கொண்டவர், “வாம்மா” என மெல்ல அழைத்தார்.

பாவனா தயக்கம் உடைத்து புன்னகை செய்ய முயன்றாள். அடுத்து என்ன பேசுவதென இருவருக்கும் தடுமாற்றம். விஜய் ஓரமாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்தான்.

சொல்லாமல் திருமணம் முடித்ததும் இப்போது ஆழினியோடு வந்து நிற்பதும் பாவனாவை தடுமாற செய்ய, மகன் விரும்பி திருமணம் செய்து வந்த பெண்ணை நான் ஆதரிக்காமல் விட்டேனே என்ற குற்ற உணர்வு கங்காவை தடுமாற செய்தது.

பாவனா சின்ன குரலில், “எப்படி இருக்கீங்க ஆன்ட்டி?” எனக் கேட்டாள்.

மகனை பார்த்து குறிப்பாக ஏதோ கண்களால் சொன்னவர், “நல்லா இருக்கேன் மா. ரெஸ்ட் எடு, நான் இதோ வந்திடுறேன். என் பேத்திக்கு உன் வீட்டுக்காரனுக்கு எல்லாம் என்ன வேணும்னு கவனி” என இரண்டு வரிகளில் நான் அங்கீகரித்து விட்டேன் உங்களை என மறைமுகமாக சொல்லி விட்டு அறையை விட்டு சென்று விட்டார்.

கங்கா வெளியேறியதும் ஆசுவாசமாக மூச்சு விட்டவள் விஜய்யை பார்த்து, “என்ன சொன்னாங்க ஆன்ட்டி?” எனக் கேட்டாள்.

“அத்தைனு கூப்பிடுவியாம் உன் மாமியாரை” என விஜய் சொல்ல லேசாக கண்கள் கலங்க சிரித்தாள் பாவனா.

அவள் கன்னம் தட்டியவன், “அம்மா இப்படிதான்னு எனக்கு தெரியும். அன்னிக்கு அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகலைனா நான் அவங்க கூட பேச சந்தர்ப்பம் கிடைச்சிருந்தா இன்னிக்கு நம்ம நிலைமை வேற பாவனா” என்றான்.

இவரும் அன்று என்னை விட்டு விட்டு வர சொன்னார்தானே என மனதில் நினைத்தவள் அமைதியாக நிற்க, “திடீர்னு ஷாக்ல சொல்லிட்டாங்க உன்னை விட்டு வர சொல்லி. நீ இல்லாம நான் ஒண்ணுமில்லனு ஒரு வார்த்தை அவங்ககிட்ட அழுத்தி சொல்லியிருந்தா கண்டிப்பா விட சொல்லியிருக்க மாட்டாங்க. அவங்க சொன்னதை மறந்திடு பாவனா” கொஞ்சம் கெஞ்சல் தொனி விஜய்யிடம்.

விஜய்க்கு அவன் அம்மா என்றால் அலாதி அன்பு என்பது அறியாதவளா, உடனே முக இறுக்கத்தை தளர்த்தியவள், சரி என்பது போல தலையசைத்து “நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா, தூக்கம் வருமா தெரியலை, ஆனா கண்ண மூடி படுத்துக்கிறேன்” என்றாள்.

மனதின் ஓய்வற்ற நிலை அவளை சோர்வாக உணர வைக்க புரிந்து கொண்டவன், “ஏதாவது குடிச்சிட்டு படு” என்றான்.

வேலையாள் மூலமாக கங்கா இவர்களுக்கு எல்லாம் பருக அனுப்பி விட்டே சென்றிருக்க பழச்சாறு பருகி விட்டு படுத்து விட்டாள் பாவனா.

புதிய இடத்தை கண்டு மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த ஆழினி அம்மா படுக்கவும் அவளும் அமைதியாக அம்மா பக்கத்தில் அமர்ந்து கொள்ள தன்னிடம் வருமாறு அழைத்தான் விஜய்.

பாவனாவின் சுடிதார் பிடித்துக் கொண்டவள் அமைதியாக பார்க்க மகள் அருகில் சென்று அமர்ந்தவன், “இங்க பிடிக்கலையா என் பட்டுக்கு? பெரிய ஸ்விங் வாங்கி மாட்டலாம் நினைச்சேனே” என ஆசை காட்டி பார்த்தும் அம்மாவை விட்டு அசைய மறுத்தாள்.

உறங்காமல் கண்களை மட்டும் மூடியிருந்த பாவனா திரும்பிப் படுத்து, “இங்க புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க பாப்பாக்கு, நிறைய டாய்ஸ் வாங்கலாம்” என்றாள்.

அம்மா அப்பா இருவரது முகங்களை பார்த்து விட்டு ஆழினி சிரிக்க விஜய் கை நீட்ட அவனிடம் சென்றாள்.

“நீ தூங்கு நான் பார்த்துக்கிறேன்” என்ற விஜய் அறையை விட்டு வெளியேறி விட்டான்.

எத்தனை புரியும் விதமாக சொல்ல முடியுமோ அப்படி கணவரிடம் சொல்லி விட்டார் கங்கா. அமைதியாக தன்னருகில் காரில் அமர்ந்திருந்த கணவரின் எண்ண ஓட்டம் என்ன என்பதை கங்காவால் கணிக்க முடியவில்லை. எதுவும் பிரச்சனை ஆகி விடக்கூடாது என மனதில் மட்டும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்.

மகன் விட்டு சென்றதில் பாதி தளர்ந்த அரங்கநாதன் இப்போது மனைவி சொன்ன செய்திகளால் முக்கால்வாசி தளர்ந்து போய் விட்டார். என் மகனா இப்படி என்ற வேதனையும் இனி என்ன செய்ய முடியும் என்ற இயலாமையும் அவரை வார்த்தைகள் அற்றவராக மாற்றி இருந்தது.

காரை விட்டு இறங்கும் போதே ஆழினியுடன் விஜய் பந்து விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டேதான் இறங்கினார். சிறு குழந்தையை பார்த்ததும் அவரை அறியாமல் பாசம் சுரக்க தன் மகன் மீது கட்டுக்கடங்காத கோவமும் கிளர்ந்து எழுந்தது.

எதுவும் சொல்லாமல் விறு விறு என வீட்டுக்குள் சென்றவரை திகைப்பாக விஜய் பார்த்திருக்க கங்காவும் கலக்கமாக பார்த்தார்.

இப்போது ஆழினி பந்தை விட்டு விட்டு பூச்செடிகளோடு ஒன்றியிருக்க, “ஆழிய பார்த்துக்கம்மா” என சொல்லி கங்கா பதில் சொல்லும் முன் விஜய்யும் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டான்.

அரங்கநாதன் அவரது அலுவல் அறையில் தலையை கைகளால் தாங்கிய வண்ணம் அமர்ந்திருக்க கொஞ்சம் கோவமாக உள்ளே வந்த விஜய் அப்பாவை அப்படி பார்த்து விட்டு சற்று நிதானப் பட்டான்.

அவன் வந்ததை உணர்ந்து நிமிர்ந்தவர் ஏளனமாக புன்னகைத்து, “ரொம்ப நல்லா வளர்திருக்கேன் டா உன்னை!” என்றார்.

முகம் கன்றிப் போன விஜய் அவர் கண்களை சந்திக்க முடியாமல் திணறினான்.

“ஊர் உலகத்துக்கு என்னன்னு சொல்லுவ அந்த குழந்தையை? குழந்தை பொறக்கிறதுக்கு முன்னாடியே அதோட முழு பொறுப்பும் தாய் தகப்பனுக்கு இல்லையாடா? அந்த பொண்ணுதான் வேணும்னு போனியே… மூணு வருஷம் என்ன பண்ணின? சரி அந்த பொண்ணுக்கும் அறிவு எங்க போச்சு?” இரைந்தார் அரங்கநாதன்.

“நீங்க நியாயம் பேசுறீங்களா ப்பா? அவ கழட்டாத தாலிய என்கிட்ட கொடுக்க சொன்னது நீங்கதானே? ஷாம் வச்சு நான் பேசின மாதிரி அவளுக்கு ஆடியோ அனுப்பினது உங்களுக்கு தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. முறையா கல்யாணம் பண்ணியும் ஒரு ரெகார்டும் இல்லை, அதுக்கு யார் காரணம்னு உங்களுக்கு தெரியுமா ப்பா?” விஜய்யும் காரமாகவே பேசினான்.

“ஆமாம் டா, நான்தான் காரணம் எல்லாத்துக்கும். எப்படி சரியா வரும் எல்லாம்? ஊர் உலகத்துக்கு தெரியாத கல்யாணம்தானே, என் மகன் அந்தஸ்த்தா இருக்கணும்னு என் புள்ள நல்லதை மட்டும் நினைச்சு செஞ்சேன். அந்த பொண்ணும் பிரிஞ்சு போய் அது வாழ்க்கைய பார்த்துக்கும்னு நினைச்சேன். இப்படி மூணு வருஷம் கழிச்சு ஒரு குழந்தையோட வந்து நிப்பீங்கன்னு கனவுல கூட நினைக்கல நான்” என்றவர் குரலில் வேதனை வழிந்தது.

“ஓ அப்ப என் பொண்ணோட வந்து நிக்கலைன்னா இப்பவும் பாவனாவை ஏத்துக்குற எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது?”

“இப்ப மட்டும் அந்த பொண்ணை ஏத்துக்கிட்டேன்னு உன்கிட்ட சொன்னேனா நான்?” கொஞ்சம் உறுமலாக கேட்டார்.

விஜய் அப்பாவையே பார்த்திருக்க, “இப்ப நீ தனியா இல்ல, உன் பொண்டாட்டி புள்ளைன்னு இருக்க. ரொம்ப சந்தோஷம் டா. எப்ப கிளம்புற வெளிநாட்டுக்கு?” என அரங்கநாதன் கேட்க திடுக்கிட்டுப் போய் நின்றான் விஜய்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement